புதன், 6 பிப்ரவரி, 2019

தளபதியை நோக்கி தர்ப்பைகளின் பாய்ச்சல்கலி.பூங்குன்றன்


திமுக தலைவர் தளபதி மானமிகு மு.க.ஸ்டாலின் மீது தர்ப்பைகள் பாயத் தொடங்கி விட்டன.

ஒரு கட்டத்தில் வீரமணியிடமிருந்து விலகி நில்லுங்கள் என்று அறிவுரை - இதோபதேசம்! ‘துக்ளக்‘ குருமூர்த்தி அய்யர்வாள் தோல்வி கண்ட நிலையில் அம்புகளை அக்னி அஸ்திரங்களை தளபதி ஸ்டாலின் அவர்களை நோக்கி தொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

இவ்வார (13.2.2019) ‘துக்ளக்‘ ஏட்டைப் புரட்டினால் ஒவ்வொரு பக்கத்திலும் தளபதி மீது தணல் கக்கும் சேட்டைகள் - கேலிகள் - நக்கல்கள்; கேள்வி - பதில் பகுதியை எடுத்துக் கொண்டாலும் பெரும்பாலும் சுற்றிச்சுற்றி ‘சூரிய’னைப் பார்த்துக் குரைக்கின்றன.

அவாளுக்கே உரித்தான சாம, பேத, தான, தண்டம் என்ற உபாயத்தை உபயோகித்து பார்க்கின்றனர்.

ஒன்று மட்டும் அவர்களுக்கு உண்மையாகவே தெரிந்து விட்டது. தளபதி ஸ்டாலின்தான் அடுத்த முதல் அமைச்சர் என்பது அய்யந் திரிபற அவாளுக்குத் தெரிந்து விட்டது.

அதற்குள் - உரக்கத் கத்தி உபவாதங்களை வாரி இறைத்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.

1971இல் இப்படித்தான்  கூச்சலிட்டு, கடைசியில் ஒதுங்க இடமின்றி ஒப்பாரிகளை வைத்தனர்.

2019லும் 1971 திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு விட்டனர்.

‘எச்சரிக்கை’ என்ற தலைப்பில் குருமூர்த்தி அய்யர்வாள் இதோ எழுதுகிறார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தி.மு.க. நிர்வாகி ஒருவரின் குடும்பத் திருமண நிகழ்ச்சியில் பேசும்போது, புரோகிதரை அழைத்து நடத்தப்படும் திருமணங்களைப் பற்றி கிண்டலாகவும், அப்போது கூறப்படும் மந்திரங்கள் பற்றி (அது. பற்றி விவரமே தெரியாமல்) விமர்சித்தும் பேசியிருப்பது, ‘திராவிடர் கழக மடாதிபதி’ வீர மணியின் பழைய - எடுபடாத - புளித்துப் போன பேச்சின் காப்பி. ஹிந்து மதத்தினரின் நம்பிக்கைகளை (நெற்றியில் குங்குமம் இடுவது முதல் தீ மிதிப்பது வரை) தொடர்ந்து இழிவுபடுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள தி.மு.க.வுக்கு, தேர்தல் மூலம் பாடம் புகட்ட ஹிந்துக்களுக்கு வாய்ப்புள்ளது. அதைச் சரியாக அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.(துக்ளக் 13.2.2019)

புரோகிதக் கல்யாணத்தைப் பற்றி அதில் ஓதப்படும் மந்திரங்கள் குறித்து தளபதி மு.க.ஸ்டாலின் பேசி விட்டாராம். அடேயப்பா அய்யர்வாள் எப்படி எப்படி எல்லாம் எகிறிக் குதிக்கிறார்.

தளபதி கூறியதில் என்ன ‘குற்றம்‘ என்ன தவறு?

திராணி இருந்தாலும் - சரி. சாக்கு இருந்தாலும் அவிழ்த்து விட வேண்டியதுதானே! (குருமூர்த்தி அய்யர்வாளே, ஓடாதே, நில்’ என்று ‘விடுதலை’ எழுப்பிய வினாக்களுக்கு விடையளிக்க விவஸ்தை இல்லாத இந்தக்கூட்டம் எதற்குத்தான் பதில் சொல்லப்போகிறது?)

தமிழர் வீட்டுத் திருமணத்தில் தமிழில் அந்த மந்திரங்களை ஓதக் கூடாதா? தமிழில் ஓதினால் வண்டவாளம் தண்ட வாளத்தில் ஏறிடாதா? பாட்டிகள் கூட கையில் எடுத்துக் கொண்டு கிளம்ப மாட்டார்களா?

குருமூர்த்தி அய்யர்வாளோடு திருவாளர் இராம-கோபாலய்யரும் விட்டேனா பார் என்று சுவர் ஏறிக் குதிக்கிறார்.

தாரா முகூர்த்தம் என்றும், கன்னிகாதானம் என்றும், பெண்களை தாரை வார்ப்பதும், தானம் கொடுப்பதும் தான் கல்யாணம் என்று ஆக்கி வைத்த அக்ரகாரத்தின் அக்கிரமத்தை என்னவென்று சொல்ல!

பெண் என்றால் ஒரு ஜடப் பொருளா, தானமாகக் கொடுக்க? என்று கேட்டவர் தந்தை பெரியார்- வினா தொடுத்தது சுயமரியாதை இயக்கம் - திராவிட இயக்கம்.

சூத்திரனுக்குத் திருமண உரிமை கிடையாது என்பதுதானே அவர்களின் மனுதர்மம். அதே நேரத்தில் புரோகிதச் சுரண் டலுக்கு சந்து கிடைக்கிறது என்றால் விடுமோ வேதியக் கூட்டம்?

கல்யாணத்தின் போது தர்ப்பைப் புல்லால் ஒரு பூணூலை உண்டாக்கி, மணமகனுக்குப் போட்டு ஒரு முகூர்த்த நேரம் மட்டும் சூத்திர நிலையில் இருந்து பிரமோஷன் கொடுத்து மந்திரங்களை ஓதி தட்சிணைகளை சுரண்டிய பின் மறக்காமல் அந்தத் தர்ப்பைப் பூணூலை கழற்றி குப்பையில் வீசி எறிந்துதான் வெளியேறுவான் அந்த வேதியப் பார்ப்பான்.

எத்தகைய கேவலமான - அர்த்தமுடைய மந்திரங்கள் அவை? தளபதியிடம் முட்டிக் கொள்ளும் முப்புரிகளைக் கேட்கிறோம் - உங்கள் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் ஆப்த ஆலோசகரான காஞ்சிபுரம் மஹோ பாத்யாய அக்னி ஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் புரோகிதப் பார்ப்பனர்கள் கூறும் மந்திரங்களுக்கான அர்த்தத்தைக் கடைந்து கடைந்து கொடுத்திருக்கிறாரே! அவரிடம் முட்டிக்கொண்டதுண்டா?

“சோமஹ ப்ரதமோவிவேத கந்தர்வவிவிதே உத்ரஹத் ருதியோ அக்னிஸடேபதிஸ துரியஸதேமனுஷ்ய ஜா”

இந்த மந்திரம் மண மகளை நோக்கி சொல் லப்படுகிறது. நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொ ழுது நான்காவதாக ஒரு மானிடனை அடை கிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

அதாவது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.

ஸப்தர்ருஷ்ய: ப்ரதமாம் க்ருதிகாநா மருந்ததீம் / யத் த்ருவதாகும் ஹ நிந்யுஷ் ஷட்க்ருத்திகா முக்ய யோகம் வஹந்தீய மஸ்மாக மேத த்வஷ்டமீ //

ஸப்தரிஷிகள், கிருத்திகை எனப் பெயர் கொண்ட தங்கள் மனைவிகளுக்குள்ளே முதலான வளான அருந்ததியை எப்படி நிலைத்திருக்கச் செய்தார்களோ, அப்படி மற்ற ஆறு கிருத்திகைகள் அருந்ததியின் முக்கியமான சேர்க்கையைச் செய்கின்றனர். இந்த அருந்ததியைத் தரிசனம் செய்ததால் என் னுடைய இந்த மனைவி எட்டாமவளாக வளர்ச்சி பெறட்டும்.

தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வயஸ்யாம் பீஜம்/

மனுஷ்யா பவந்த்தீயான ஊரு உஷதி/

விஸ்ரயாதையஸ்யா முஷந்தஹா ப்ஷரே/

பஷேபம்.

இது வேதத்தில் சொல்லப்பட்ட மந்த்ரம் இதை கல்யாண மேடையிலே பெண்ணையும், மாப்பிள்ளையையும் உட் கார்த்தி வைத்து சத்தமாக சொல்கிறார் வாத்யார் (புரோகிதர்). இந்த மந்த்ரத்தின் அர்த்தம் புரிந்தால் அந்த வாத்யாரை நீங்கள் வாத்சாயணர் என்றுதான் அழைப்பீர்கள்.

அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்?

நான் அவளை கட்டிப்பிடிப்பேன். (அவளோடு உறவு கொள்ளும்பொழுது) அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாக பொருந்தச் செய்யுமாறு தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும். (தேவதைகளுக்கான வேலையைப் பார்த்தீர்களா?)

இந்த மந்த்ரத்தின் அர்த்தத்தை இதைவிட நாகரிகமாக சொல்ல முடியாது. விளக்கமாக நான் சொல்லியிருப்பேன் என்றால். என் மீது உங்களுக்கு இருக்கும் மரியாதை போய்விடும். அப்படிப்பட்ட மந்த்ரம் அது.

உதீர்ஷ்வாதோ விஸ்வாவஸோ நம ஸேடா மஹேத்வா / அந்யா மிச்ச ப்ரபர்வயகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்ருஜ//

விசுவாசு என்னும் கந்தர்வனே, இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.

உதிர்ஷ்வாத: பதிவதீ ஹ்யேஷா விஸ்வாஸுந் நமஸா கீர்ப்பிரீட்டே / அந்யாமிச்ச பித்ருபதம் வ்யக்தாகும் ஸ தே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி //

“இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறானல்லவா? விசுவாசுவான உன்னை வணங்கித் துதித்துக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்ப வளும் இதுவரை திரு மணம் ஆகாத வளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்ட தென்பதை நீ அறிவாயாக.”

இவை எல்லாம் எங்கள் கதையளப்போ. கற்பனைச் சித்திர மோ அல்ல. எல்லாம் உங்கள் அக்னிஹோத்திரம் கூறியதுதானே.

இதுமட்டுமல்ல!

“விவாஹ மந்தரார்த்த போதினி”  (கல்யாண் மந்த்ரங்கள்) என்னும் நூலை லிப்கோ பப்ளிகேஷன் வெளியிட் டுள்ளது.

கல்யாண மந்திரங்களை மொழிப் பெயர்த்த வரோ கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல். சிரோ மணி அண்ட் ஹிந்தி விசாரத்.

பார்ப்பனரால் மொழி பெயர்க்கப்பட்டு பார்ப்பன நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த நூலும் அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரி யர் முன் மொழிந்ததை அப்படியே வழி மொழி கிறதே. (பக்கம் 27-2016ஆம் ஆண்டு பதிப்பு)

குருமூர்த்தி அய்யர் கும்பல் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்து முகாரி பாடப் போகிறது?இவ்வளவு ஆபாசச் சாக்கடைகளை சாஸ்திர மாக வைத்துக் கொள்வார்களாம் - அது அசிங்கமில்லையாம் - அருவருப்பு இல்லையாம் - அதனைச் சுட்டிக் காட்டினால் அடேயப்பா ஆகாயத்திற்கும் பூமிக்கும் வானரங்களாக குதிப்பதை பாருங்கள்.

உண்மையிலே ரோஷம், வெட்கம் என்று இருந்தால் இந்த சாஸ்திரக் குப்பைகளை கொளுத்தி குப்பையில் ஒதுக்கிட நாள் ஒன்றை குறிப்பிட்டு ‘பிராயச்சித்தம்‘ தேட வேண்டியதுதானே.

விபரமே தெரியாமல் மந்திரங்களை கிண்டல் செய்கிறாராம் மு.க.ஸ்டாலின். சரி அவருக்குதான் விபரம் ‘தெரியாது’. விபரம் தெரிந்த சாஸ்திரம் சம்பிரதாயங்களை எல்லாம் கரைத்து குடித்த சங்கராச்சாரியாருக்கே சாஸ்திரங்களை சொல்லிக் கொடுத்த இராமானுஜ தாத்தாச்சாரியாருக்கும் கூட, ஒன்றும் தெரியாதா? அப்படி சொல்லும் துணிச்சல் உண்டா?

நாவலர் சோமசுந்தர பாரதியார் சென்றிருந்த ஒரு கல்யாணத்தில் பார்ப்பன புரோகிதன் ஒருவன் கருமாதி மந்திரங்களைக் கல்யாண வீட்டில் சொல்லிக் கொண்டிருக்க - சமஸ்கிருதம் தெரிந்த நாவலர் பாரதியார் எழுந்திருந்து குரல் கொடுக்க, அந்தக் கல்யாணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் புரோகிதப் பார்ப்பானின் சிண்டையும், பூணூலையும் அறுக்காத குறைதான்.  நெற்றியில் குங்குமம் இடுவது முதல் தீ மிதிப்பது வரை பேசி ஸ்டாலின் இழிவு படுத்தி விட்டாராம்.

இந்து மதத்தில் நெற்றிக் குறியீடுகளை இழிவுபடுத்தி விடவில்லை தளபதி;  இழிவுபடுத்தி எழவு எடுத்த கும்பல் இந்த பார்ப்பன கும்பல்தான். - (நாளை பார்க்கலாம்)

“கடவுளர்களை நிந்திக்கும் கயவர்கள் யார்?” என்ற நூலை சாத்தான்குளம் ராகவன் என்பார் புரட்டிப் புரட்டி வைத்து பார்ப்பனர்களை லாடம் கட்டிய செய்தி தெரியுமா?

முழுமுதற் கடவுளான சிவன்  தாருகா வனத்து ரிஷி பெண்களின் கற்ப்பை அழித்தான் என்று எழுதியது கருப்புச் சட்டைக்காரர்களா?

பார்வதி பரமசிவன் கல்யாணத்தை நடத்தி வைத்த புரோகிதனான பிர்மா- அந்தக் கல்யாணத்தின் போது எப்படி நடந்து கொண்டான்? (தனிப்பெட்டி செய்திக் காண்க)

“திமுக தலைவருக்கு எச்சரிக்கை என்ற தலைப்பில் எழுதிய திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் திராவிடர் கழகத் தலைவரையும் சீண்டியுள்ளார். “நண்டு கொழுத்தால் வலையில் தங்காது” அல்லவா?

திராவிடர் கழகம் மடாதிபதி வீரமணியின் பழைய  - எடுபடாத புளித்துபோன பேச்சின் காப்பி என்று ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேசியது பழைய - எடுபடாத புளித்துப்போன சமாச்சாரங்கள் என்று எழுதுகிறதே ‘துக்ளக்‘.

அப்படியானால் அதன் மூலம் என்ன? அந்த எடுபடாத புளித்துப் போனவை என்பதே பார்ப்பனர்களின் அந்த பழங்குப்பைகள்தானே. எடுபடாத ஆபாச புழுதிகளான சாஸ்திர சரக்குகள்தானே!

என்னதான் சாமர்த்தியம் செய்தாலும் உண்மை ஒளி தானே மிகும்! அதை திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் தன்னை அறியாமலேயே இந்த இடத்தில் ஒப்புக் கொண்டு விட்டாரே!

திராவிடர் கழக மடாதிபதியாம் வீரமணி. மடாபதி என்பதை என்ன அர்த்தத்தில்  சொல்லுகிறார்?.

அப்படியானால் அவர்களின் காஞ்சி மடாதிபதிகளை, சிருங்கேரி மடாபதிகளை, பூரி மடாதிபதிகளை, கோவர்த்தன மடாதிபதிகளை இப்படியா கேவலபடுத்துவது?

“பாவம்“ குருமூர்த்தி கூட்டம் என்னசெய்யும்? இந்தக் கும்பலுக்குச் சிம்மச் சொப்பனமாக இருப்பது மானமிகு வீரமணிதானே.

அரண்டுபோய் கிடப்பவர்களின் கண்களுக்கு காண்ப தெல்லாம் வீரமணியாகவே தெரிகிறது. வீரமணி “போஃபியா”என்று சொல்லி விடலாம்.

மதத்தைத் திணிக்கும்


மனுகுலத்தார்!


பார்ப்பனீயத்தின் நச்சுப் பல்லை - ஆரிய வேரை அக்கக்காக எடுத்து விளக்கி பார்ப்பனர் அல்லாத ‘சூத்திர’ ‘பஞ்சம’ மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது சுயமரியாதை இயக்கம் - திராவிட இயக்கமே! - தந்தை பெரியாரே!

“நாம் ஏன் இந்து என்பதை ஏற்பதில்லை” என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரக் குவியல்களை எடுத்துக் கொட்டியவர் அறிஞர் அண்ணா (“ஆரிய மாயை” என்னும் நூலைப் பார்க்க).

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் முழக்கமும் அசாதாரணமானது. இந்தக் கொள்கையை எடுத்துக்கூறும் கடமை திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினுக்கு முதன்மையானது தான். அந்தக் கடமையை அவர் செய்யத்தான் வேண்டும்.

அந்த கடமையை செய்கிறபோது அவரிடம் அக்னிக் குழம்பாக ஆரியம் கொதிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நிலையில் ஆரியப் பார்ப்பனர்கள் எந்தக்கொதி நிலையில் உள்ளனர் என்பதை துக்ளக்கைப் படிக்கும் எவரும் புரிந்து கொள்ளலாம்.

இவ்வளவுக்கும் அவர் இப்பொழுது பேசியதல்ல இரண்டாண்டு களுக்கு முன் பேசியதை இப்பொழுது முன்னிலைப்படுத்துவதன் சூட்சமம் புரிகிறதா?

இந்து மதத்தினரின் நம்பிக்கைகளை இழிவு படுத்திவிட்டாராம் ஸ்டாலின். அதனால் திமுகவுக்குத் தேர்தல் மூலம் இந்துக்கள் பாடம் கற்பிக்க வேண்டுமாம்.

பிரச்சினையை விட்டு எந்த தளத்திற்குச் செல்லுகிறார்கள் பார்த்தீர்களா? அவர்களின் மதவாத வடக்கு அரசியலை தமிழ்நாட்டிலும் அரங்கேற்றத் துடிப்பது புரிகிறதா?

இந்துக்களில் பார்ப்பனரல்லாதோர் நிலை என்ன? தாழ்த்தப்பட்டோர் நிலை என்ன? பெண்களின் நிலை என்ன? “உங்களை எந்த அளவுக்கும் இழிவு படுத்துவோம் - சூத்திரன் என்போம் - வேசி மக்கள் என்போம் - அவற்றையெல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்; ஏற்றுக்கொள்ளா விட்டால் இந்துக்களின் எதிரிகள் என்று பிரச்சாரம் செய்வோம்!” என்று இந்த 2019ஆம் ஆண்டிலும் எழுதும் இறுமாப்பு இந்த கூட்டத்திற்கு இருக்கிறது என்றால், தமிழர்கள், திராவிட உணர்வாளர்கள் - ஒடுக்கப்பட்ட மக்கள் - பெண்கள் இந்தக் கூட்டத்தின் இறுமாப்பு என்னும் இடுப்பு எலும்பை நொறுக்கிடத் தயாராக வேண்டாமா?

1971 தேர்தலில் சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டை மய்யப்படுத்தி இப்படித்தான் கச்சை கட்டி நின்றது இந்தக் கும்பல். தேர்தல் முடிவு அவர்களின் முகத்தையே - முகவரியையே காணாமல் ஆக்கிட வில்லையா? அவர்களின் அரசியல் - சமுதாய குருநாதர் ஆச்சாரியார் (இராஜாஜி) “இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது” என்று கையொப்பம் போட்டு “கல்கி”யிலும், “சுயராஜ்யா”விலும் ஒப்புக்கொள்ள வில்லையா?

2019 மே திங்களில் மறுபடியும் மொத்துபடத் திட்டமா? சந்திப்போம் - ஆரியமே - சிந்தித்துப்பார் திராவிடனே.

 

புரோகிதனான பிரம்மாவின் யோக்கியதை


1. பரமசிவன்- பார்வதி கல்யாணத்தில் பிரம்மா புரோகிதனாக இருந்து விவாக ஓமம் செய்தான். பார்வதி ஓமகுண்டத்தை பிரதட்சணம் வருகையில், இடது கையினால் முந்தானையை தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்தாள். அப்படி வருகையில் அவளுடைய இடையை ஒட்டிய தொடை பிரம்மா கண்களுக்குப் பட்டது. அதைப் பார்த்தவுடன் பிரம்மா மோகித்ததால் இந்திரியம் ஸ்கலிதமாயிற்று; அதை ஓமகுண்டத்தைச் சுற்றியிருக்கும் கலசத்தில் விட்டான். உடனே அதில் அகஸ்தியன் பிறந்தான்.

2. அதுபோலவே பிரம்மா மறுபடியும் தொடையைப் பார்க்க, மேலும் இந்திரியம் ஸ்கலிதமாயிற்று. அதை விருட்சபச்சை முதலிய அநேக செடிகளில் விட வால்கில்லியாதி முதலிய அநேக ரிஷிகள் பிறந்தார்கள்.

3. அவ்விடம் விட்டு போகும்போது ஒரு சுடலைச்சாம்பலில்  இந்திரியத்தை விட அதில் பூரிச்சிரவனென்கிற இராட்சசன் பிறந்தான்.

4. அவ்விடத்திலுள்ள எலும்புகளை பொறுக்கி ஒன்றாய்ச் சேர்த்து அதிலே இந்திரியத்தை விட சல்லியன் என்ற பராக்கிரமசாலி பிறந்தான்.

5. அவ்விடம் விட்டுப் போகையில், சிறிது இந்திரியம் ஸ்கலிதமாகி கீழே விழ அதை ஒரு பட்சி புசித்து அதன் வயிற்றில் சகுனி பிறந்தான்.

6. பிறகு தடாகத்தில் கொஞ்சம் இந்திரியம் விட அதை மண்டூகம் (தவளை) புசித்து அதன் வயிற்றில் மண்டோதரியென்கிற பெண் பிறந்தாள்.

7. மிகுந்த இந்திரியத்தைக் குளத்தில் தாமரைப் பூவில் விட அதில் பத்மை என்கிற புத்திரி பிறந்தாள்.

8. அந்த புத்திரியான பத்மையின் அழகைக்கண்டு மோகித்து சேர பிரம்மன் கேட்க, அவள் சம்மதிக்க மறுக்க அவளுக்குச் சமாதானமாக வேதவாக்கியத்தை சொல்லுகிறார். பிரம்மா:

“மாதரமுபைத்ய கஸாரமுபைதி புத்ரார்தீத

சகாமார்த்தி நாபத்திரலோகா நாஸ்தீக

ஸர்வம்பரவோ விந்துஹஃ, தஸ்மாத் புத்ரார்த்தம்

மாதரம் ஸுரஞ்சி ரோஹதி”

இதன் பொருள்:-  புத்திரார்த்த நிமித்தம் தாய், தமக்கை, பிள்ளை, யாரோடயினும் கூடலாம் என்பதாகும்.

9. சேர்ந்து கர்ப்பவதியாக்கி திரும்ப இந்திரியத்தை சித்தினலிங்கத்தினால் உறிஞ்சினான்.

10. பின் காம விகாரத்தினால் இந்திரன் உத்தரவுப்படி திலோத்தமை 4 திசையிலும் ஆடியதால் பிரம்மாவுக்கு 4 தலையும் உயரப்பறந்து ஆடி 5-ஆவது தலையும் ஆடி அவன்மீது மோகங்கொண்டு திலோத்தமையைத் தொடர்ந்து போகையில் ஈஸ்வரன் ஒரு தலையை அறுத்து எறிந்தான்.

11. பின் பிரம்மன் காடுகளில் அலைந்து திரிகையில் ஒரு புதரிலிருந்து பெண் கரடியைக் கண்டு அதைக்கூடி அதன் வயிற்றில் ஜம்புவந்தன் என்ற கரடி முகத்தோடு ஒரு புத்திரன் பிறந்தான்.

12. பின் ஊர்வசி என்ற வேசியிடத்தில் சில உடன்படிக்கை செய்து, முன் பத்மையிடத்தில் ஆக்குஷணஞ் செய்த அண்டத்திலுள்ள இந்திரியத்தை ஊர்வசி கர்ப்பத்தில் விட,  அதில் வசிஷ்டன்  பிறந்தான். அப்புத்திரனுக்கு தன் பதவியை கொடுத்து பிரம்மா தபோவனமடைந்தார்.

புரோகிதனான பிர்மாவின் யோக்கியதையே இப்படி என்றால் - இந்தக் காலத்துப் புரோகிதர்களைப் பற்றிப் பேசவும் வேண்டுமா!

-  விடுதலை நாளேடு, 6.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக