சனி, 9 பிப்ரவரி, 2019

மனுநீதி  ஒரு குலத்துக்கொரு நீதி - 2


தந்தைபெரியாரின் இறுதி உரையை சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
சென்னை, நவ.15- நான் சாகப் போகிறவன்தான், இன்னும் கொஞ்ச நாள்தான் இருப்பேன். எனக்கு ஒரே ஒரு கவலை தான், உங்களை சூத்திரனாக விட்டுவிட்டு சாகிறேனே என்பதுதான் என்னுடைய கவலை என்று கவலைப்பட்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

5.10.2018 அன்று சென்னை பெரியார் திடல் நடிக வேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற மனுதர்ம ஆராய்ச்சி தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் (3.10.2018 முதல் 5.10.2018)  இரண்டாம் நாளன்று மனுநீதி  ஒரு குலத்துக்கொரு நீதி என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பண்டிதர்கள் சிலர் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு திருக்குறளின் கருத்தையும் எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்து இதைப்பற்றி மனுதர்மத்தில் என்ன கூறப்பட்டி ருக்கிறது என்பதையும் கவனித்துப் பார்ப்பார்களேயானால் இந்தக் குறள் மனுதர்மத்தின் இந்தச் சூத்திரத்திற்கு நேர்மாறானதாக இருக்கிறது என்று புள்ளி போட முடியும். 100-க்கு 75 பாட்டுகள் இப்படியே அமைந்திருக்கும் என்று நான் துணிந்து கூறுவேன். ஒன்றிரண்டை எடுத்துக்காட்டாகக் கவனிப்போம்.

மனுதர்மத்தில் கூறப்படுகிறது: பார்ப்பான் பிரம்மா வின் தலையிலிருந்து உதித்தான் என்று; சூத்திரன் பிரம்மாவின் பாதத்திலிருந்து உதித்தான் என்று.

பிறவியில் பேதா பேதம் இல்லை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று திருவள்ளுவர் கூறுகிறார். இப்படி ஒவ்வொன்றும் மனுதர்மத்தின் கருத்துக்கு மாறுபாடாகத்தான் இருக்கும். அதே காரணத்தால் தான் அது மக்களிடையே பெறவேண்டிய பெருமதிப்பைப் பெற முடியாமல் போய்விட்டது.

ஆரியத்திற்கு விரோதமாக எழுதப்பட வேண்டும் என்பதற்காகவே திருக்குறள் எழுதப்படவில்லை என் றாலும் ஆரியதர்மம் நீதிக்குக் கேடானது, சமதர்மத் திற்குக் கேடானது, சத்தியத்திற்குக் கேடானது. முன்னேற் றத்திற்குக் கேடானது என்பதை நன்கு அறிந்துதான் ஒரு பெரியார் இயற்கையோடு இயைந்து நின்று தாம் கண்டுபிடித்த கருத்துகளை வைத்துத் திருக்குறளை இயற்றியிருக்க வேண்டும். இயற்கைக்கு இயைந்த கருத்து விஞ்ஞானத்திற்கும் இயைந்த கருத்தாக இருக் கும், இன்ன பொருள்களை இன்ன விதத்தில் சேர்த்தால் இன்னது உண்டாகும் என்பதுதான் விஞ்ஞானமாகும்.

இன்ன காரண காரியங்களாக இன்ன வஸ்துக்கு இன்ன குணம் ஏற்படும் என்று கூறுவதுதான் விஞ்ஞானம்; விஞ்ஞானத்திற்கு ஏற்ற கருத்துத்தான் பிரத் யட்ச அனுபவத்திற்கும் பின்விளைவுக்கும் ஏற்றதாக அமையக் கூடியது. தத்துவார்த்தம் கூறத் தேவையில்லாத கருத்துத்தான் விஞ்ஞானத்திற்கேற்ற கருத்தாகும். தத் துவார்த்தம் பேசுவதெல்லாம் பெரிதும் தம்முடைய சாமர்த்தியத்தைக் காட்டிக் கொள்ளச் சிலர் செய்யும் பித்தலாட்டம் என்றுதான் நான் கூறுவேன்.

திருக்குறளில் அத்தகைய தத்துவார்த்தப் பித்தலாட் டத்திற்கு இடமேயில்லை. திருக்குறளில் இப்படிக் கூறப்பட்டிருக்கிறது என்று கூறினால் போதும். அதுவே உண்மை என்று ஒப்புக் கொள்ளலாம். அதில் யாவருக்கும் எந்தக் காரியத்திற்கும் பொருந்தக்கூடிய கொள்கைகள் பல இருக்கின்றன. அதில் கூறப்பட்டுள்ள கொள்கைகளை நாம் பொது நெறியாகக் கொள்வது அவசியம். பொது நெறி என்று ஏன் கூறவேண்டும்? மதம் என்று ஏன் கூறக்கூடாது? என்று நீங்கள் கேட்கலாம். மதம் என்று கூறினால் மதத்திலுள்ள நெறியெல்லாம் மாய்ந்து அதிலுள்ள பூச்சாண்டிப் பழக்க வழக்கங்கள்தான் மிஞ்சுகின்றன.

உதாரணமாக சைவ மெய்யன்பர்கள் சிலரை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம் ஒரு சைவ மெய் யன்பர் கணக்காக விபூதி பட்டை அடித்துக் கொள்வார்; ருத்ராட்சமும் கணக்காக அணிந்திருப்பார். கணக்காகப் பஞ்சாட்சரம் கூட ஓதி வருவார், ஆனால் அவருடைய நாணயமோ நடத்தையோ சற்றேனும் சைவ நெறிக்கு ஏற்றதாக இராது; அதே போல்தான் மற்ற எல்லா மதவாதிகளும்.

திருவள்ளுவர் என்ற பெயரையே, சிறீவள்ளுவர் என்று எழுதுகிறார்கள்


இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை பேசுகிற அளவிற்கு பார்ப்பனர்கள் யாராவது திருக்குறளின் மேன்மையை பேசுகிறார்களா? என்றால், ஒன்றிரண்டு யாராவது விதிவிலக்காக இருக்கலாம். பரிமேலழகர் உரை நம்முடைய இன உணர்வுகளை பறிமுதல் செய்தது. அதுமட்டுமல்ல, திருவள்ளுவர் என்று பெயர் வைத்தவர்களே குறைவாகத்தானே இருக்கிறார்கள். திருவள்ளுவர் என்ற பெயரையே, சிறீவள்ளுவர் என்று எழுதுகிறார்கள். வடக்கே இருந்துதான் திருவள்ளுவர் வந்தார் என்கிறார்கள். திருவள்ளுவருக்கு சொந்த மூளையே கிடையாது என்று சங்கராச்சாரியாரே சொல்கிறார்.

சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது


திசை திருப்புகிறார்கள்!


வேறொரு பாடத்தில், வேறொரு பொருளில் வருவதை இங்கே சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது திசை திருப்புகிறார்கள். தீக்குறளை சென்றோதோம்.

அப்படி என்றால் என்ன? ஆண்டாள் பாட்டில் வருகின்ற வரி அது. அதற்கு அர்த்தம் திருக்குறள் இல்லை.

மனு நீதி எப்படி ஒரு குலத்துக்கொரு நீதி என்பதை எடுத்துப் பார்த்தால்,

அசல் மனுதர்மம் புத்தகத்தில்

2 ஆம் அத்தியாயம் -  பக்கம் 20

சுலோகம் 31

பிராமணனுக்கு மங்கலத்தையும், க்ஷத்திரியனுக்கு பலத்தையும், வைசியனுக்கு பொருளையும், சூத்திர னுக்குத் தாழ்வையும் காட்டுகிறதான பெயரை இட வேண்டியது.

இதனால்தான் நம்மாட்களுக்கு மண்ணாங்கட்டி என்றும், பாவாடைராயன் என்றும், கருப்பன் என்றும், ஊமையன் என்றும் பெயர் வைத்தார்கள்.

2 ஆம் அத்தியாயம் -  பக்கம் 20

சுலோகம் 32

பிராமணனுக்குச் சர்ம்மவென்பதையும் க்ஷத்திரிய னுக்கு வர்ம்ம என்பதையும், வைசியனுக்கு பூதியென் பதையும், சூத்திரனுக்குத் தாசனென்பதையும் தொடர்ப் பேராக இடவேண்டியது.

4 ஆம் அத்தியாயம் -  பக்கம் 93

சுலோகம் 61

சூத்திரன் ராசாவாயிருக்கும் இராச்சியத்திலும், தருமமறியாதவர்கள் பாஷண்டிகள் இவர்கள் வசிக் கும்படியான கிராமத்திலும் சமீபத்தில் சண்டாளர் வசிக்கின்ற கிராமத்திலும் வாசஞ்செய்யப்படாது.

இதை உடைத்ததுதான் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புத் திட்டம். அதை நடைமுறைபடுத்தியவர்தான் கலைஞர் - பெரியார் சமத்துவபுரம் என்று.

இந்த சொற்பொழிவை வெறும் மனுதர்மம் மோசம் என்று சொல்லவிட்டுப் போகவில்லை. ஒரு சிலர் ஆராய்ச்சியோடு அதை நிறுத்தியிருக்கிறார்கள். ஆனால், அதை நடைமுறைப்படுத்தி, மனுதர்மத்தை ஒழித்த அல்லது அதற்கு நேர் எதிரான ஜாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காக அன்று தொடங்கிய போராட்டம், அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகர் ஆகக்கூடிய வரையில் அது வெற்றி யைப் பெற்றிருக்கிறது. இன்னமும் தொடர்ந்து கொண் டிருக்கிறோம் அந்தப் போராட்டத்தினை!

எனவே, ஜாதி ஒழிப்பு என்பது மனு ஒழிப்பு - மனித தர்மக் காப்பு - அதுதான் பேத ஒழிப்பு.

வர்க்கம் - வருணம்  (Class and Caste) என்பதைப் பற்றி நேற்று லேசாகத் தொட்டுக் காட்டினேன்.

சிலர் என்ன சொல்வார்கள் தெரியுமா? பொருளா தாரம் இருந்தால், இதெல்லாம் சரியாகிவிடும் என்பார்கள்.

பெரியார்தான் கேட்டார், நம்மிடம் பொருளாதாரம் இருந்தாலும், அதை விட்டு வைக்கக்கூடாது என்கி றார்களே மனுதர்மத்தில்.

இதை தி எகனாமிக்ஸ் ஆஃப் மனு என்று ஒரு தனித் தலைப்பில் பேசச் சொன்னால், விரிவாகப் பேசலாம். ஆங்கிலத்திலும் சரி, தமிழிலும் சரி தெளிவாக அதைப்பற்றி சொல்லலாம். அவ்வளவு கொடுமைகள் நடைபெற்று இருக்கிறது.

8 ஆம் அத்தியாயம் -  பக்கம் 234

சுலோகம் 413 பிராமணன் சம்பளங்கொடுத்தேனும் கொடாம லேனும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம். ஏனெனில், அவன் பிராமணன் வேலைக்காகவே பிராமணனால் சிருஷ்டிக்கப்பட்டு இருக்கின்றானல்லவா!

அவாள் 3 பேர். நம்மாட்கள் 97 பேர். 97 பேரின் மனதில் விலங்கு போட்டுவிட்டதால், யானையை பாகன் கட்டுப்படுத்துவதுபோல, சிங்கத்தை ஒரு சாதாரண சர்க்கஸ் மாஸ்டர் பயிற்சியினால் கட்டுப்படுத்து வதுபோல, நம்மாட்களை வேலை வாங்கினார்கள்.

8 ஆம் அத்தியாயம் -  பக்கம் 234

சுலோகம் 414 - சூத்திரன் யஜமாநானால், வேலையினின்று நீங்கப் பட்டிருந்தாலும், அந்த வேலையானது அவனை விட்டு நீங்காது. இம்மைக்கும், மறுமைக்கும் உபயோகமாக அவனுடன் பிறந்த அந்த வேலையை எவன் தான் நீக்குவன். ஆதலால், அவன் மறுமைக்காகவும், பிராமண சிசுருஷை செய்யவேண்டியது.

கோல்வால்கரின் ஞானகங்கை


இந்த இடத்தில் ஒன்றை சொல்லவேண்டும். இது போன்ற பிரிவு வந்ததும், அதை திசை திருப்புவதற்கு, ஆர்.எஸ்.எஸினுடைய தலைவர் கோல்வால்கர் ஞான கங்கை - பஞ்ச் ஆப் தாட்ஸ் (Bunch of Thoughts) என்ற புத்தகத்தில் எழுதும்போது ஒரு கருத்தை சொல் கிறார்.

தலையில் பிறந்தவன் என்றால், அப்படியே அர்த்தம் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால், (அறிவு மேதாவிகள் ஆயிற்றே அவர்கள் - அவர்கள் என்ன சொல் கிறார்கள்), மூளை உழைப்பாளிகள்தான் அவர்கள் என்கிறார்கள்.

நம்மூரில் மூளை உழைப்பாளி இருக்கிறான்;

நம்மூரில் விவசாயம் செய்பவன் இருக்கிறான்

நம்மூரில் மூட்டை தூக்குகிறவன் இருக்கிறான்

அதேபோன்று கஜானாவை பார்க்கிறவன் இருக் கிறானே  - அந்தப் பிரிவுகளுக்குத்தான் அந்தக் காலத்தில் அப்படி பெயர் வைத்திருக்கிறான். அதை நீங்கள் தவறாக திசை திருப்புவதுபோன்று வியாக்கியானம் செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டு,

தலையில் உள்ள மூளை சிந்திக்கிறது - அது பிராமணாள்

அதேபோன்று தோள் என்பது புஜபலம் - அது ராஜ்ஜியத்தை ஆளுகிறது - க்ஷத்திரியர்.

தொடை என்று சொன்னால், வியாபாரம், விவசாயம் எல்லாம் நடத்தினால்தான், பொருள்கள் வரும். ஆகவே, அந்தப் பொருள்களுக்காக அதை செய்கிறார்கள்.

எல்லோரும் எல்லா வேலைகளையும்  செய்ய முடியுமா?


எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்ய முடியுமா? அவாளுக்கு உதவியாக இருக்கவேண்டுமா இல்லையா தொழிலாளி. அந்தத் தொழிலாளியைத்தான் சூத்திரன் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அதைப் போய் நீங்கள் கேவலம் என்று நினைக்கவேண்டாம் என்று கோல்வால்கர் சொல்லிவிட்டு,

பொருளாதாரத்தில் மக்களையே நீங்கள் பேதப் படுத்தி பிரித்துள்ளீர்கள் என்றார்.

டிவிஷன் ஆஃப் லேபர் (Division of Labour) என்று சொல்கிறார்களே, அதுபோன்று அந்தக் காலத்தில், மனு போட்ட ஸ்கீம் இருக்கிறதே, அது டிவிஷன் ஆஃப் லேபரர்ஸ் (Division of Labourers) என்றார்.

ஜாதியைப்பற்றி அண்ணல் அம்பேத்கர்!


அதற்குப் பதில் சொல்லும்பொழுது ஒரே வரியில் அண்ணல் அம்பேத்கர் சொன்னார்:

‘‘It is not a division of labour - it is division of labourers’’

என்று சொன்னார்.

தொழிலாளியை நீங்கள் பிரித்துப் போடுகிறீர்கள். தொழிலாளிகளை நீங்கள் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்தால்,

ஓதல், ஓதுவித்தல் தொழிலைத்தானே அவர்கள் செய்யவேண்டும்.

ஒரு கையில் எல்லா விரல்களும் ஒன்றாக இருக் கிறதா? என்றும்கூட கேட்பார்கள்.

ஒரு கைமீது இன்னொரு கை பட்டால்,  சோப்புப் போட்டுக் கழுவவேண்டும் என்று சொல்பவர்கள் நாம் இல்லையே! ஆனால், அது தீட்டு என்று அவாள் சொல்கிறார்களே! அது சரிதானா? பேதம் அல்லவா!

ஆகவே, அடிப்படையில் இன்றைக்கு அறிவு வளர்ந்த பிறகு, நவீன வியாக்கியானங்களை சொல்கி றார்கள். விஞ்ஞான ரீதியான விளக்கங்களை சொல் கிறார்கள்.

கீதையில் வரக்கூடிய

சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் என்ற வாசகங்களைச் சொல்லும்பொழுது, நம்மாள்கள் என்ன சொல்கிறார்கள்,

குணத்தை வைத்து பிரிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள் என்று.

நீங்கள் சொல்வதுபோன்று ஜாதியை வைத்து பிரிப்பது, பிறவியை வைத்துப் பிரிப்பது கிடையாது என்று அர்த்தமில்லை.

காஞ்சி சங்கராச்சாரியார் அது தவறு என்று ஒப்புக்கொண்டார்.

சென்னை தியாகராயர் நகரில்


தந்தை பெரியாரின் உரை


ஆகவே, சூத்திரன் என்பதற்கு என்ன பொருள்?

95 வயதில் தந்தை பெரியார் அவர்கள் கடைசியாக தியாகராயர் நகரில் டிசம்பர் 19 ஆம் தேதியன்று உரையாற்றினார்:

பெரியார் அவர்கள் உரையாற்றும்பொழுதே, அம்மா என்று அலறுகிறார்; உரையை நிறுத்துகிறார். இதைக் கேட்ட மக்கள் எல்லாம் துடித்துப் போகிறார்கள்.

45 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு இது.

வலியால் உரையை நிறுத்தி விடுவார் என்று நினைக்கின்றபொழுது, அய்யா அவர்கள் உரையைத் தொடருகிறார்.

உங்களை சூத்திரனாக விட்டுவிட்டு சாகிறேனே என்பதுதான் என்னுடைய கவலை!


நான் சாகப் போகிறவன்தான், இன்னும் கொஞ்ச நாள்தான் இருப்பேன். எனக்கு ஒரே ஒரு கவலை தான், உங்களை சூத்திரனாக விட்டுவிட்டு சாகிறேனே என்பதுதான் என்னுடைய கவலை என்று கவலைப்பட்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

மானமும், அறிவும் மனிதருக்கு அழகு என்றார்.

அந்த மானம் இல்லாமல், இவ்வளவு கொச்சைப்படுத்தி வைத்திருக்கிறார்களே என்றார். அந்த இடத்தில் அவர் மிகவும் உறுதியாக இருந்தார்.

ஒருமுறை தந்தை பெரியார் அவர்கள் உரை யாற்றும்பொழுது, தி.மு.க. அமைச்சர்கள் அருகில் அமர்ந்திருந்தார்கள்.

அப்பொழுது, நான் என்ன மந்திரி வேலைக்கா போகவேண்டும் என்று சொல்கிறேன். மந்திரி ஆகி விட்டால்  மட்டும் சூத்திரப் பட்டம் போய்விடுமா? என்றார்.

நான் சாதாரண சூத்திரன்; அவர் மாண்புமிகு சூத்திரர்


அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வோடும்கூட ஒரு கருத்தை சொன்னார்.

எனக்கும், இவருக்கும் (அமைச்சர் மன்னை  நாராயணசாமி அமர்ந்திருக்கிறார்) என்ன வித்தியாசம்? நான் சாதாரண சூத்திரன்; அவர் மாண்புமிகு சூத்திரர் அவ்வளவுதானே! என்றார்.

ஆக, அந்த அடிப்படையை நீங்கள் எல்லோரும் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

அவருக்கு இருந்த கவலை - மானம், தன்மானம், இனமானம் - அந்த மாதிரியான பணியை செய்ய வேண்டும். அதற்கு மானத்தைக்கூட, தன்மானத்தைக்கூட ஒதுக்கி வைத்துவிட்டு செய்யவேண்டும் என்று பெரியார் அவர்கள் சொன்னார்கள்.

அதற்குக் காரணம் என்ன?

சூத்திரன் என்ற சொல்லுக்கு,

பெரியாருக்கு முன், திராவிட இயக்கத்திற்கு முன், சுயமரியாதை இயக்கம் பிறப்பதற்கு முன் சூத்திரன் என்ற சொல்லுக்கு யாரும் பொருளையே தெரிந்து கொள்ளவில்லை.

மட்டத்தில் உயர்ந்தது என்று பிரித்து வைத்திருக்கிறான்!


சூத்திரன் என்ற சொல்லைவிட, மட்டத்தில் உயர்ந்தது என்று பிரித்து வைத்திருக்கிறான் பாருங்கள் ஜாதியை - அதில் கொஞ்சம் உயர்ந்த ஜாதி என்று சொல்லுகின்ற சைவர்கள் நாங்கள் கறி சாப்பிட மாட்டோம்; மீன் சாப்பிட மாட்டோம். நாங்கள் சமஸ்கிருதம் பேசுவோம்; எங்கள் வீட்டில் அவாள், இவாள் என்றுதான் பேசுவோம். நாங்கள் இதுபோன்ற தமிழ் பேசமாட்டோம் என்று சொல்லுகிறவர்கள் இருக்கிறார்களே,

அவர்கள் படிக்கட்டு ஜாதி முறையில் - கொஞ்சம் மேலே இருக்கிறவர்கள். அவர்களுக்கெல்லாம் என்ன சொன்னார்கள் என்றால், இவாள் எல்லாம் சூத்திராள் - நாங்கள் எல்லாம் யார் தெரியுமா? நாங்கள் எல்லாம் சூத்திராள் இல்லை - சர்சூத்திராள் என்று சொன்னார்கள்.

பெரியார் இதையும் பட்டென்று அடித்தார். சில நேரங்களில் கேட்பதற்கு அதிர்ச்சியாக இருக்கும் பெரியாருடைய சொற்கள். ஆனால், அதுதான் நம்மை சிந்திக்க வைக்கும்.

சூத்திரன் என்றால் என்ன பொருள் என்பதை படித்துக் காட்டினார்.

சூத்திரன் என்றால்,

8 ஆம் அத்தியாயம் - பக்கம் 234

சுலோகம் 414

யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன், என தொழிலாளிகள் எழு வகைப்படுவர்.

நம் தாய்மார்கள் எல்லாம் தாசிகளா?


நம் தாய்மார்கள் எல்லாம் தாசிகளா? இன்றைக்கு சட்டத்தில் இருக்கிறது இன்னமும். நாம் என்னதான் வெளியில் வந்துவிட்டோம் என்று நினைத்தாலும், என்ன தான் அமைச்சர் பதவிக்குச் சென்றாலும், என்னதான் அய்.ஏ.எஸ். அதிகாரியாக ஆனாலும், அய்க்கோர்ட் ஜட்ஜாகவோ, சுப்ரீம் கோர்ட் ஜட்ஜானாலும்கூட நம் மைப் பொறுத்தவரையில் பிறவியினால் கீழ்ஜாதி என்று அவர்கள் ஏற்பாடு செய்து வைத்திருக்கிற வர்ணாசிரம திட்டத்தில், நாமெல்லாம் கீழ்ஜாதிக்காரர்கள் - சூத்திரர்கள்.

நம்முடைய தாய் தேவடியாள் என்று மனு சொல் கிறான்.

உலகத்தில், நீக்ரோக்களை (கருப்பர்களை) வெள் ளைக்காரன் கருப்பன் என்றுதான் ஒதுக்கினான், அவர்களுடைய நிறத்தைக்காட்டி. அவர்களிடம் சென்று இந்த வார்த்தையை சொன்னால், இப்போது உயிரோடு விடுவானா? ஆனால், நமக்கு மறத்துப் போய்விட்டதே!

வர்க்கத்தை எது நிர்ணயிக்கிறது?


இங்கே வருணம் - வர்க்கம் என்று இருக்கிறதே - வர்க் கத்தை எது நிர்ணயிக்கிறது? வருணம் நிர்ணயிக்கிறது.

பணக்காரன், அவனிடம் இருக்கிற பணத்தை வரி போட்டால் எடுத்துக் கொள்ளலாம். அவன் ஒரு தொழிலை ஆரம்பித்து, அது நொடிந்து போனால், மஞ்சள் கடிதாசி கொடுத்துவிடுகிறான். இன்சால்வென்சி (Insolvency) அவன் ஏழைக்கும், ஏழையாகி விடுகிறான். கடனை அடைக்க முடியவில்லையே என்று, சிலர் இறந்து போய்விடுகிறார்கள். மானத்திற்காக அவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆகவே, அந்த உணர்வுகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆகவே, நம் நாட்டில் அடிமைத்தனத்தினுடைய புத்தி, எந்த அளவிற்கு மனுதர்மத்தினுடைய தாக்கம் இருந்தது என்று நினைத்துப் பார்க்கவேண்டுமானால்,

மனு முறை தவறாமல் ஆட்சி நடக்கிறதா? என்றார்கள் பழைய ராஜாக்கள்.

பள்ளிக்கூடங்கள் முழுவதையும் பார்ப்பனர்களுக்கே வைத்தார்கள். மற்றவர்களுக்கு பள்ளிக்கூடம் வைக்க வில்லை.

(தொடரும்)

-  விடுதலை நாளேடு, 15.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக