செவ்வாய், 6 ஜூலை, 2021

பார்ப்பானையே (கடவுளாக) வணங்க வேண்டும் என்று கூறும் மந்திரங்கள்

பார்ப்பான் தான் கடவுள்; பார்ப்பானையே (கடவுளாக) வணங்க வேண்டும் என்று கூறும் மந்திரங்கள்
‘’பூமியில் பிராமணனாக பிறந்துள்ளேன்(கிருஷ்ணன்).
(ஆஸ்வமேதிக பர்வம், பக்கம்-285)

தெய்வா தீனம் ஜெகத்சர்வம்
மந்த்ரா தீனம் துதெய்வதம்
தன் மந்திரம் பிரம்மாணா தீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபுஜெயத்
(ரிக் வேதம் சுலோகம் 62ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்)
பொருள்: உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது கடவுள்கள் மந்திரங் களுக்கு கட்டுப்பட்டவர்கள். மந்திரங் கள் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டவை. பிராமணர்களே நமது கடவுள் என்ப தாகும்.
இதை சொல்லித்தான் இராமன் சம்பூகனை {தலையை)வெட்டிக் கொன்றான்(இராமாயணப்படி).
-17.11.2013 எனது முகநூல் பதிவு

செவ்வாய், 25 மே, 2021

வேதங்கள் - பேதங்கள்- (5)


 சு.அறிவுக்கரசு

ஹிந்து மத வேதங்களில் மட்டுமே ஆத்மா, மறுபிறவி ஆகியவை உண்டு. உலக மக்கள் தொகையில் ஹிந்து மதத்தினர் 90 கோடிப்பேர். உலகத்தின் மொத்த மக்கள் தொகை 750 கோடி. ஆத்மா, மறுபிறவி நம்பிக்கை உள்ளோர் மிகச் சிறுபான்மையர். 200 கோடிக்கு மேல் கிறித்துவர்கள், பவுத்தர்கள், இஸ்லாமியர் போன்ற பல்வேறு மதத்தவர்களுக்கு இந்த நம்பிக்கை கிடையாது. இல்லாத ஒன்றைப் பொய்யாகச் சொல்லி, அதன் மேல் கட்டப்பட்ட சீட்டுக்கட்டடம் போன்றதே ஹிந்து மதம். நம் கண்களால் காணும் ஸ்தூலமான உலகத்தை மாயை என்பது ஹிந்துமதம். வேறு எந்த மக்களுக்கும் இப்படிப்பட்ட மாயாவாதக் கொள்கை கிடையாது. இல்லாத ஒன்றை (ஆத்மாவை) அறிந்தவன் தான் இறைவனை அடைகிறானாம். ஆகாயத்தில் அஸ்திவாரமே இல்லாமல் கட்டப்பட்ட “கோட்டை” என்றே கூறவேண்டும் ஹிந்து மதத்தை!

18 நிமிஷங்கள் ஒரு காஷ்டை

18 காஷ்டைகள் ஒரு கலை

30 கலைகள் ஒரு க்ஷணம்

12 க்ஷணம் ஒரு முஹூர்த்தம்

30 முஹூர்த்தம் இரவு பகல் கொண்ட ஒரு நாள்

15 நாள் ஒரு பக்ஷம்

2 பக்ஷம் ஒரு மாதம்

2 மாதம ஒரு ருது

6 ருது ஒரு வருஷம்

ஹிந்து மத காலக்கணக்கு இதுவாம்! யார் கடைப்பிடிக்கிறார்கள்?

அது போலவே சிந்துநதியின் உபநதிகளான அய்ந்துக்கும் உபநிஷத்களில் வேறு பெயர்கள்.

சுதுத்ரி - ஸட்லெஜ்

பருஷ்ணி - ராயி

அஸிக்னி - சீறம்

விதஸ்தா - ஜீலம்

ஸீஷோமா - ஸோஹன்

ஆரியர்கள் கங்கை நதியை அறியாதவர்கள். சிந்து நதிக்கரையில் மாடு மேய்த்தவர்கள். சிந்து நதி பாரசீக மொழியில் ஹிந்து என்றே எழுதப்படும். காரணம், அம்மொழியில் ஸ எனும் எழுத்து இல்லை. மாற்றாக, ஹ என்று உச்சரித்தனர். நதியின் கரையில் இருந்தவர்களை அந்தப் பெயரால் அழைத்ததால் மக்களின் பெயராகவும் மண்ணின் (நாடு) பெயராகவும் அமைந்தது. வெள்ளைக்காரர்கள் மதத்திற்கும் அதே பெயரை வைத்துவிட்டனர். எனவே எல்லாமே இரவல். சமஸ்கிருதத்தில் பெயரே இல்லை. பாரசீகப் பெயர்தான். மிகப் பழமையானது என்னும் மதத்திற்கு அவர்களின் மொழியில் பெயரில் வை. விசித்திரம் தான். மக்களும் மதமும் மொழியும்.

வைசம்பாயனர் ஒரு ரிஷி, யாக்ஞவல்கியர் அவரிடம் சீடன். சீடன் செயலால் கோவப்பட்ட குரு, தான் கற்றுக் கொடுத்ததைக் கக்கிவிடும்படி சீடனிடம் கூறினார். முடியுமா? சாப்பிட்ட சோற்றை கக்கிவிடலாம். கல்வியை முடியாதே. என்றாலும் யாக்ஞவல்கியன் கக்கிவிட்டான். அவன் கக்கியதை மற்ற சீடர்கள் சிட்டுக்குருவி போல தின்று விட்டனர். ஆகவே இதன் பெயர் தைத்ரிய சாகை. க்ருஷ்ண யஜூர் வேதம் என்றும் சொல்கிறார்கள். முதல் அத்யாயம் கல்வி (சிக்ஷா)யின் பெருமை பேசும். குருகுலப் படிப்பின்போது, உப வேதங்களும் வேதாங்கங்களும் கற்பிக்கப்படுகின்றன. உபவேதங்கள் நான்கு. 1) ஆயுர் வேதம், 2) தனுர் வேதம், 3) கந்தர்வ வேதம், 4) அர்த்த சாஸ்திரம் என்பவை. மருத்துவம், வில்வித்தை, நுண்கலைகள் (இசை), ஆட்சிக்கலை போன்றவை. வேதாங்கங்கள் ஆறு. 1) சிக்ஷை (உபசரிப்பு), 2) வியாகரணம் (இலக்கணம்), 3) சந்தஸ் (செய்யுள் அமைப்பு), 4) நிருக்தம் (அகராதி அறிதல்), 5) ஜோதிஷம், 6) கல்பம் (சடங்குகள்) என்பவை.

தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் ஒன்றை அர்ப்பணம் செய்யும்போது, ஸ்வாஹா எனச் சொல்ல வேண்டுமாம். இதன் மூலம் நாம் அடைவதைத் திருப்பித் தரவேண்டும் என்பது போதனையாம்.

“லோகா ஸமஸ்தா சகிநோ பவந்து” என்பது வேதமந்த்ரமாம். உலகில் உள்ள அத்தனை பேரும் சுகமாக இருக்கட்டும் என்பது பொருளாம்.

உலகில் நான்கு பெரிய மொழிகளாம். அவை காயத்ரியில் கனிந்த மொழிகளாம். பூ, புவ, சுவ, மக எனும் நான்காம். பூ என்றால் இவ்வுலகமாம். புவ என்றால் அவ்வுலகம். சுவ என்றாலும் அவ்வுலகம் மகத் என்றால், சூரியன், சந்திரன், பிரமன், உணவாகும். பூ, புவ, சுவ மூன்றும் ஜோதியாகி, ஒளியாகி, வேதமாகிய பிரம்மமாம். மொழிகள் என்றால் என்ன? மனிதன் தன் கருத்தைப் பிறர்க்குச் சொல்லப் பயன்படுத்தும் கருவி. பேச்சு ஒலியின் மூலமோ, எழுதிய எழுத்தன் வரிவடிவம் மூலமோ தன் கருத்தை வெளிப்படுத்தப் பயன்படும் சாதனம். அதற்கு இந்த வேதம் தரும் சொற்களும் விளக்கமும் குழப்பத்தைத் தருகின்றன அல்லவா?

கடோபநிஷத் என்பது இரண்டு அத்யாயங்களாக உள்ளது. மூன்று கொடிகளாக ஒவ்வொரு அத்யாயமும் உள்ளது. மொத்தம் ஆறு வல்லிகள் (கொடிகள்) நசிகேதன் என்பவன் யமனிடம் கேட்டவைகளும் மரணத்தை வெல்லும் வழிகளும் அடங்கியவையாம்.

வாஜசிரவஸ் எனும் மன்னன் உலகத்தையே ஆளவேண்டும் என்கிற ஆசையால், விஸ்வஜித் என்ற யாகத்தைச் செய்தான். வாழ்க்கையைக் கொடுத்து வாழ்க்கையைப் பெறுவது யாகத்தின் நோக்கம். அன்று மாடுகள் தான் செல்வம். வாஜசிரவஸ்தானம் கொடுத்த மாடுகள் எல்லாம், அடி மாடுகள். பால் வற்றிப்போன கிழட்டுப் பசுக்கள். தானத்தின் நோக்கமே அடிபட்டுப் போனது. இதைக் கவனித்த வாஜசிரவஸின் மகன் நசிகேதன், தந்தையிடம் “என்னை யாருக்குத் தானம் தரப் போகிறீர்கள்?” எனக்கேட்டான். பதில் இல்லை. மறுபடியும் கேட்டான். இம்முறையும் பதில் இல்லை. மூன்றாம் முறையாகவும் மகன் கேட்டான்.

“உன்னை யமனுக்குத் தானமாகத் தரப்போகிறேன்” என்று தந்தை பதில் சொன்னார். நசிகேதனும் யமனிடம் போனான். யமன் தனது மாளிகையில் இல்லை. மூன்று நாள்கள் காத்திருந்தான். மூன்று நாள்களுக்கும் அவனுக்கு யாரும் உணவு தரவில்லை. பட்டினியாகவே கிடந்தான். அதனால் அவனைப் பார்த்து யமன், மூன்று நாள் பட்டினிக்காக மூன்று வரம் கேள் என்று சொன்னான். நசிகேதன் வரம் கேட்டானாம். திரும்பிச் சென்றால் தன் தந்தை அவனிடம் கோவமடையாமல் பாசமாக இருக்க வேண்டும் என்று கேட்டானாம். யமனும் முதல் வரத்தைக் கொடுத்தானாம்.

சொர்க்கத்திற்குப் போனால் சுகமாக இருக்கலாமாம், சொர்க்கம் போவது எப்படி என்று இரண்டாவது வரத்தைக் கேட்டான். சொர்க்கத்திற்கு போகும் வழி, இதயக் குகையில் இருக்கிறது என்றானாம் யமன். “நிஹிதம் குஹாயம்“ என்பது அவன் சொன்னதாம். அத்தகைய யாகத்தை எப்படிச் செய்வது எனும் விளக்கத்தை யமன் நசிகேதனுக்குச் சொன்னானாம். இஷ்டகா கற்கள் 360 வைத்து யாக குண்டம் அமைக்கப்பட வேண்டுமாம். யாகத்தில் விஷ்ணுவே “ப்ரதீகமாக”ப் போற்றப்பட வேண்டுமாம். யமன் சொன்னதைக் கவனமுடன் கேட்டு உள்வாங்கிக் கொண்ட நசிகேதனைப் பாராட்டிய யமன், இரத்தின மாலையைப் பரிசாக அளிக்கிறான். அத்துடன் அந்த யாகத்திற்கு அவன் பெயரைச் சூட்டி, நசிதேகயாகம் என்கிறான். ஒரு முறை சொன்னாலே கவனமுடன் கிரஹித்துக் கொண்ட “ஏகசந்த கிராஹி”யான நசிகேதன் பெற்ற சிறப்புகள் இவை. நசிகேத யாகத்தை மூன்று தடவைச் செய்தவன், பிறப்பு, இறப்பு எல்லாம் கடந்து அளவு கடந்த சாந்தியை அடைகிறான்.

 தொடரும்....

திங்கள், 17 மே, 2021

வேதங்கள் - பேதங்கள் (4)


சு.அறிவுக்கரசு

சுக்ல யஜூர் வேதம்

இது வாஜசனேய ஸம்ஹிதை என்றும் கூறப்படும். முதல் இரண்டு அத்யாயங்களில் கடவுள் பெருமை, துதிப்பாடல், அரச நிர்வாகம் போன்றவை உள்ளனவாம். அக்னிஹோத்ர ரகஸ்யம், பெற்றோர், பிள்ளைகளின் கடமைகள் முதலியன 3, 4, 5 அத்யாயங்களில் உள்ளனவாம். அத்யாயம் 6இல் மீண்டும் ராஜ்யபரிபாலனம், சபா, சமிதி உறவு, கடமை போன்றவை. ஏழாம் அத்யாயத்தில் ஆத்மா, மனம், யுத்தலட்சணம் போன்றவை கூறப்படுகின்றன.

8 மதல் 39 வரையுள்ள அத்யாயங்களில் கிருஹ் தர்மம், ராஜதர்மம், மனித தர்மம், ஸ்த்ரீபுருஷ பரஸ்பர உறவு, பார்ப்பனர், சத்திரியர் கடமைகள், மறுஜென்மம், நித்ய கடமை போன்றவை சொல்லப்படுகின்றன. அத்யாயம் 40இல் ஈசோபநிஷத் உள்ளது. இதில் வழக்கமான வேத உளறல்கள் உள்ளன. பூமியில் இரண்டு கடல்களாம். ஒன்று கல்விக்கடல் மற்றது தண்ணீர்க்கடல். திரவியம் தேடுவதற்காக அதனைக் கடக்கலாமாம். நம் விரோதிகளைப் பூண்டுடன் அழிக்க வேண்டுமாம்.

இந்த வேதத்திற்கான உபநிஷத் ‘பிருஹ தாரணீய மஹா உபநிஷத்’ என்பது. கொஞ்சம் பெரிய உபநிஷத். யஜூர் வேதச் சாரம் என்கிறார்கள். “அஸதோ மா ஸத் கமய, தமஸோ மா ஜ்யோதிர் சமய, ம்ருத்யோ மா அமிர்தம் கமய” என்பது முதல் பாடல். இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல். மரணத்திலிருந்து சாகாமைக்கு இட்டுச்செல் என்பது இதன் பொருள்.

இரண்டு மனைவிகளுடன் இல்லறத்தில் வாழ்ந்து, அடுத்த கட்டமான வானப்ரஸ்த நிலைக்கு போக விரும்பியே யாக்ஞவல்கியர் எனும் முனிவன் பெருமை பேசும் கதைகள் உள்ளன. தன் மனைவி கேட்டதற்குப் பதில் கூறிய ரிஷி “குலத்தில் பற்றும் ஜாதியில் வெறியும் பரமாத்மிகப் பக்திப் பயிற்சியே ஆகும்“ என்கிறான். கணவனும் மனைவியும் காதலிப்பதே பரமாத்மாவைக் காதலிப்பதற்கானப் பயிற்சிதான் என்கிறான். நெருப்பினால் வெளிவரும் புகை, அக்னியாகாது. அதுபோல ஸ்ருதி, ஸ்ருதிகளைப் படித்ததால் பரமாத்மாவை அறிவதல்ல. உஷ்ணம் ஏறிப் பிறகு பற்றி எரியும் அக்னியைக் காண்பதுபோல வைராக்கியம் முதிர்ந்து ஞானம் உதிக்கும்போது பரமாத்மாவைக் காணலாம் என்கிறான்.

கடவுளை (பரமாத்மாவை)ப் பார்க்கும் வழியைக் கூறுகிறான். பலரும் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் கூறும் யாக்ஞவல்கியன் கார்க்கி எனும் பெண் ஒருத்தியின் கேள்வியைச் சந்திக்கிறான். “எது வானத்திற்கு மேலும் பூமிக்குக் கீழும், வானத்திற்கும் பூமிக்கும் இடையிலும் உள்ளதெனவும், எது இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உள்ளது எனவும் கூறப்படுகிறதோ, எது அதில் குறுக்கும் நெடுக்குமாகக் கோக்கப்பட்டுள்ளதோ, அது எது?” என்று அவள் கேட்டாளாம்.

“அது உருவம் உடையதல்ல. நுட்பமாகவும் இல்லை. குட்டையுமல்ல, நெட்டையுமல்ல. நெருப்பு போலச்சிவப்பல்ல. நீரைப்போல ஈரமாக இல்லை. அதற்கு நிழல் இல்லை. அளவும் இல்லை. அதற்கு உள்ளும் இல்லை. புறமும் இல்லை. அது எதையும் உண்பதும் இல்லை. எது வொன்றாலும் உண்ணப்படுவதுமில்லை”.

எந்தப் பிரம்மம் தனக்குத்தானே நேரில் காணக்கூடியதாயும் வேறு எதையும் வேண்டாததாகவும் உள்ளதோ அது பராகதி. அதுவே பரப்பிரம்மம்“ என்று பதில் கூறினானாம் யாக்ஞவல்கியன். அவனை யாரும் வெல்ல முடியாது எனத் தீர்ப்பு கூறிவிட்டானாம் கார்க்கி.

கேள்வியைப் போலவே பதிலும் குழப்பமே. விளங்காததே. அதுதான் வேதம். வேதாந்தம்.

பல பத்தகங்களைப் படிப்பதால் ஒருவன் பகவானிடம் பிரியம் உள்ளவனாக ஆக முடியாது. ஆழம் இல்லாத குளத்தில் நீர் குடிக்க வேண்டுமானால் அதை கலக்காமல், மெதுவாகக் குடிக்க வேண்டும். கலக்கி விட்டால் அடியில் இருக்கும் சேறு நீரில் கலந்துவிடும். ‘சாஸ்திரங்களைப் பற்றிய விவதாங்களினால் மூளைதான் மேலும் கலங்கும். தெளிவு ஏற்படாது’ என்கிறது உபநிஷத். அப்படியே நம்பு, ஏற்றுக் கொள் எனக் கற்பிக்கிறது.

செய்யலாமா?

தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் ஆகிய மூவரும் கடவுளிடம் உபதேசம் கோரினார்களாம். அது “த” எனும் ஓர் எழுத்தை மட்டுமே கூறியதாம். இந்திரிய அடக்கம் அற்ற தேவர்கள், “தாம்யத” என்று உபதேசித்ததாகக் கருதிக் கொண்டனர். அடக்கமாக இருங்கள் என்று சொன்னதாக நினைத்துக் கொண்டனர். “தத்த” என்று சொல்லி, தானம் செய்யுமாறு சொன்னதாக மனிதர் எண்ணிக் கொண்டனராம்.

அசுரர்களோ “தயத்வம்“ என்று கூறியதாக நினைத்துக் கொண்டு தயை உடையவர்களாக எனக்கருதிக் கொண்டனராம். ஆகவே “த” என்ற ஒரு சொல்லின் மூலம் அடக்கம், தானம், தயை ஆகிய மூன்றையும் உபதேசித்ததாம் என்கிறது. ஸூக்ல யஜூர் வேதத்தை யாக்ஞவல்கியன் இன்றும் வாழுமாறு செய்தார் என்கிறது உபநிஷத்.

“ஈஸாவஸ்யம் இதம் ஸர்வம்“ எனத் தொடங்கும் இந்த உபநிஷத் 18 மந்த்ரங்களை மட்டுமே கொண்ட சிறிய உபநிஷத். ஈஸாவாஸ்ய உபநிஷத் எனப்படுவது. தத்யங் அதர்வணன் என்பவன் தன் மகனுக்குச் சொன்னதாம். இதன் மய்யக்கருத்து “ஈசவித்யை” என்பதாம் “கடவுள் முழுமையானது.

இந்த உலகமும் முழுமையானது. முழுமையான கடவுள் தோற்றுவித்ததே உலகம். ஒரு முழுமையிலிருந்து முழுமையை (உலகம்) எடுத்த பிறகும் எஞ்சி நிற்பதும் முழுமையே”. என்பதுதான் இதன் பொருள். ஒரு விளக்கிலிருந்து கணக்கில் அடங்காத விளக்குகள் ஏற்றப்பட்ட பின்பும் முதல் விளக்கு இருக்கிறதல்லவா? அது போல...

இந்த உலகம் மாறிக்கொண்டேயிருக்கும். மாறுகின்ற உலகத்தை இறைவன்தான் நிரப்ப வேண்டும். இருக்கும் செல்வம் உன்னுடையது அல்ல. அதற்காக ஆசைப்படாதே. எப்போதும் தியாக சிந்தையுடன் இரு. எல்லாவற்றிலும் கடவுளைக்காண். மனைவியிடமும் பிள்ளைகளிடமும் கடவுளைக் காண வேண்டும். வாழ்விலும் சாவிலும், இன்பத்திலும், துன்பத்திலும் இறைவன் சமமாக இருக்கிறான்.

உலகம் பற்றிய நம் கற்பனை பொய். மாயை. உறவுகளும் மாயை. எதுவும் நம்முடையது அல்ல. எல்லாவற்றிலும் பற்றுடனும் பற்றில்லாமலும் வாழ்ந்தால் அக வளர்ச்சிக்கான அடித்தளம் அமைகிறதாம். உடம்பு, மனம், பிராணன், புத்தி, ஆத்மா என்ற அய்ந்தும் கலந்ததே “நாம்”. ஆத்மாவை அறிவதுதான் முதல்படி. மனம் அகம் நோக்கி, ஆத்மாவுடன் ஒன்றாக்கிக் கொண்டு அதனை அறிபவர்களுக்கு மட்டுமே மறுபிறவி இல்லை உன்கிறது உபநிஷத்..

தொடரும்....

செவ்வாய், 11 மே, 2021

வேதங்கள் - பேதங்கள் (3)


சு.அறிவுக்கரசு

சூரியைக்கும் ஸோமனுக்கும் விவாஹம் நடந்ததும் முடிகிறது. சூரியை, சூரியனின் (ஸவிதாவின்) மகள். ஸோமன் நட்சத்திரங்களின் நடுவே இருக்கிறான். ஸோமன் என்பது பிராந்தியோ, விஸ்கியோ? திருமண நாளில் யாரும் ஸோமனைக் குடிப்பது இல்லையாம். அஸ்வினிகள் மாப்பிள்ளைத் தோழர்களாம். தெய்வத் திருமணத்திற்கு எல்லாத்தேவர்களும் வாழ்த்திக் கொண்டே வருகிறார்கள். “தஸாஸ்யம் புத்ரா நாதேஹி பதிம் ஏகாதசம் க்ருதி” என்று வாழ்த்துகிறார்கள். இந்திரனே, மணமகளுக்கும் பத்துப் பிள்ளைகளை அளித்திடு. அவளின் கணவனை அவள் பதினொன்றாம் மகனாக ஆக்கிக் கொள்வான் என வாழ்த்துகிறார்கள். பத்தும் புதல்வர்களாம். புதல்வியே வேண்டாமாம். என்ன புத்தி! ஆண் ஆதிக்க ஆரியச் சமுதாயப் புத்தி!

10552 பாடல்களிலும் ஒரே விதமான செய்திகள்தான். சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டு... பாடியவனுக்குச் சலிப்பு தட்டவில்லை. படிக்கும் நமக்குத்தான்...

ரிக் வேதத்திற்கான உபநிஷத், அய்தரேய உபநிஷத் என்பதாம். உலகப் படைப்பு பற்றி இந்த உபநிஷத் பேசுகிறதாம். உலகம் படைக்கப்பட்டதா? உருவானதா? மதவாதிகளும், மதநூல்களும் மட்டுமே படைப்பு என்கின்றன. அறிவியலோ, பரிணாமம் என்கிறது. எண்பித்திருக்கிறது. இந்த உபநிஷத் ஒரேயடியாக நான்கு லோகங்கள் படைக்கப்பட்டதாகப் புளுகுகிறது. 1) அம்பலோகம் - சொர்க்கத்திற்கு மேலே உள்ளதாம். 2) மரீசிலோகம் - ஒளி நிறைந்த இடைவெளியாம். மரீசிகா என்றால் கானல் நீர். 3) மர அல்லது மர்த்ய லோகம் - பூமியைக் குறிப்பது 4) ஆபலோகம் - பூமிக்குக் கீழே உள்ளதாம்.

கடவுள் பிரம்மதேவனைப் பற்றி நினைத்ததாம். பிரம்மதேவனின் வாய் முட்டை பிளப்பது போலப் பிளந்ததாம். வாயிலிருந்து பேச்சு வந்ததாம். அதிலிருந்து நெருப்பு வந்ததாம். மூக்கு தோன்றியதாம் மூக்குத் துவாரங்களிலிருந்து மூச்சு வந்ததாம். மூச்சிலிருந்து காற்று தோன்றியதாம். கண்கள் தோன்றின. பார்வையிலிருந்து சூரியன் தோன்றினானாம். காதுகள் தோன்றின. திசைகள் தோன்றின. தோல் உண்டாகியது. தோல் பிளந்து, மயிர்கள் தோன்றின. மயிரிலிருந்து செடி, கொடிகளும் மரங்களும் இதயத்தில் துவாரங்களும் உண்டாயின. இதயத்திலிருந்து மனம் என்ற தனியான பகுதி உருவாகியதாம். (மனம் என்பதற்கும் இதயத்திற்கும் தொடர்பில்லை. மூளையின் செயல்பாடுகளே மனம் என்கிறது அறிவியல்) மனத்திலிருந்து சந்திரன் தோன்றியதாம். தொப்புள் தோன்றியதாம். அதிலிருந்து அபானன், அபானனிலிருந்து மரணம் தோன்றியதாம். குறி தோன்றியதாம். பிளந்த குறியிலிருந்து விந்துவும் விந்துவிலிருந்து தண்ணீரும் உண்டாயிற்றாம். உபநிஷத்தின் உடற்கூறு வினோதமாக உள்ளதே! மருத்துவ அறிவியலுக்கும் விரோதமாக உள்ளதே!

மனித உடம்பு 11 வாசல்களை உடையதாம். கண்கள் 2, காதுகள் 2, நாசித்துளைகள் 2, வாய், தொப்புள், குறி, குதம, பிரம்மரந்திரம் என்பவையாம். இதயத்தின் நாடிகள் 101. அவற்றுள் ஒன்று உச்சந்தலையைப் பிளந்து செல்கிறதாம். அதன் வழியே ஆவியை விடுபவன், மரணமற்ற நிலையை அடைகிறானாம். வேறு வழிகளில் இறப்பவன் மறுபிறவியை அடைகிறானாம். ஆசையற்ற யோகியால் மட்டுமே பிரம்மரந்திரம் வழியே உயிரை வெளியேற்ற முடியுமாம்.

கருவில் இருக்கும் குழந்தைக்கு இறையுணர்வு அதிகமாம். கருப்பையிலிருந்து வெளியே வந்து க்வ, க்வ, க்வ என்று அழுகிறது. சமஸ்கிருதத்தில் க்வ என்றால் எங்கே என்று பொருளாம். பூமிக்கு வந்ததும் குழந்தை கடவுளை எங்கே என்று தேடுகிறதாம். முட்டாள் தனமான உளறல், அல்லவா?

இதுதான் ரிக் வேதம்.

யஜூர் வேதம்

ஒன்றாக இருந்தாதாம். பின் இரண்டாகப் பிரிக்கப்பட்டதாம். க்ருஷ்ண யஜூர், சுக்ல யஜூர் என இரண்டாக உள்ளது. யஜூர் வேதம் 101 கிளைகளை உடையதாம். இப்போது 56 மட்டுமே உள்ளன. மீதி அழிந்து விட்டனவாம். அழிவது எப்படி வேதம் ஆகும்? 56 சாகை (கிளை)கள் அக்னிவேசம் தொடங்கி வைதேயம் முடிய 15 சாகைகள் சுக்ல (வெள்ளை) யஜூரிலும் உள்ளன. க்ருஷ்ண யஜூருக்கு 32 உபநிஷத்களாம். சக்ல யஜூருக்கு 17 மட்டுமே. கிருஷ்ண யஜூர் தென்னாட்டில் பிரபலம் - வட நாட்டில் சுக்ல யஜூர் வேதத்திற்கே மவுசு.

க்ருஷ்ண யஜூர் மந்த்ரங்களுக்கு தைத்திரீய சம்ஹிதை எனவும் பெயராம். ஸம்ஹிதை என்றால் மந்திரங்களின் கூட்டங்களாம். யஜூர் வேதத்தில் அக்னி, இந்திரன், சூரியன், விஷ்ணு, சோமன், மருத்துக்கள், புவி, ஜலம், உஷை, வருணன், சந்திரன், சூத்திரன், ஸரஸ்வதி முதலியவை முதன்மை தேவர்களாம்.

யாகம் போலவே மானுட வாழ்க்கையாம். முதல் வருஷம் காலை யாகமாம். அடுத்த 44 யாகங்கள் பகல் யாகங்களாம். மீதி 48 வருஷங்கள் மாலை யாகங்களாம். 93 வருஷங்கள் மட்டுமே மனித ஆயுள் எனப் பொருளா? விளக்கம் இல்லை வேதத்தில் சோமயாகம் என்றால் சோம அமுதத்தை நாடுவதாம். சோமபானம் தயாரித்துக் குடித்தலா? செல்வத்தை நாடிச் செய்யப்படுவது வாஜபேயம் என்பதாம். இதைச் செய்பவன் வாஜபேயி எனப்படுவான். 

ஆட்சி அதிகாரம் பெற்றிடச் செய்வது ராஜசூயம். படைப்பின் அற்புதங்களை அறிய விரும்பிச் செய்யப்படுவது புருஷமேதம். அனைத்தையும் அறிய விரும்புவது சர்வமேதம். தோற்றவன் மீண்டும் வெற்றி பெற்றிடச் செய்வது சவுத்திரமணி.

பலவாறாக ஆவதற்குச் செய்பவை பிரவர்க்கியம் எனப்படுமாம். அஸ்வமேதம் என்பது அகண்ட ஞானத்தைச் சுட்டும். வேத வாழ்க்கையின் ரகஸ்யத்தைச் சொல்லும். காயத்ரி மந்த்ரம் என்பது ஒளிக்கடவுளாம். இதனால் சாதிக்க முடியாதது என்று எதுவுமே இல்லையாம். இதனை அய்ந்து பகுதிகளாக, இடையில் நான்கு முறை நிறுத்தி ஜெபிக்க வேண்டுமாம்.

ஓம் பூர் புவஸ்ஸூவ

தத் ஸவிதுர் வரேணியம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோ ந பிரசோதயாத்

என்று ஜெபிக்க வேண்டுமாம். சூரிய உதயத்திற்கு முன்பும், உச்சி சூரியன் உள்ள நடுப்பகலிலும், சூரியன் மறையும் மாலையிலும் ஜெபிப்பது நல்லது. தினமும் 108 முறையாவது ஜெபிக்க வேண்டுமாம்.

புருஷன் என்றால் கடவுள். புருஷசூக்தம் என்றால், கடவுளின் மகிமையைப் பாடுதலாம். கோயில், வீட்டில், தினசரி வழிபாட்டில், தினசரி பாராயணத்தில், வைதீகச் சடங்குகளில், தினசரி கர்மங்களில் எல்லாம் புருஷ சூக்தம் சொல்லப்படுகிறது. பொருள் இதுதான். கடவுளுக்கு ஆயிரக்கணக்கான தலைகள். ஆயிரக்கணக்கான கண்கள். ஆயிரக்கணக்கான பாதங்கள். அது பூமியெங்கும் வியாபித்துப் பத்து அங்குல அளவில் நிற்கிறதாம். அதன் முக்கால் பங்கு மேலே விளங்குகிறதாம். கால் பங்கு மட்டுமே இப்பிரபஞ்சமாம். யாகத்தில் பலியிடப்பட்ட பிரம்மாவின் முகம் பார்ப்பனனாக ஆயிற்றாம். கைகள் சத்திரியனாகவும் தொடைகள் வைசியர்களாகவும் ஆயினவாம். பாதங்களிலிருந்து மற்றவர்கள் தோன்றினராம். ரிக்வேத புருஷ சூக்தம் போலவே மஜூர் வேத சூக்தமும் உள்ளது.

வேதங்களிலும் புராணங்களிலும் காணப்படும் மகாலட்சுமியின் துதிகளின் தொகுப்பையே சிறீஸக்தம் என்கிறார்கள். வடநாட்டில் இதற்கு மரியாதை கிடையாது. தெற்கே மட்டும் தானாம். ஏன் இந்தப் பாகுபாடு? விளக்கம் இல்லை.

தொடரும்.... 


வெள்ளி, 23 ஏப்ரல், 2021

சாமி கைவல்யம்

Unmaionline -> 2019 -> ஆகஸ்ட் 16-31 2019

பசு_புனிதமா?! மற்றும் வேத விளக்கம்



யஜூர் வேதத்திற்கு இரு கிளைகள்(சாகை) உண்டு.இந்தக் கிளைகளில் ஸம்ஹிதை, ப்ராம்மணம், ஆரண்யம் என மூன்று பிரிவுகள் உண்டு. உதாரணத்திற்கு,ரிக்வேத ஸம்ஹிதையை மட்டும் நூலாக வெளியிட்டு, அதற்கு "ரிக் வேதம்" என்று பெயர் கொடுத்து விடுகிறார்கள். ஏனென்றால் ஸம்ஹிதைதான் ஒரு சாகைக்கு ஆதாரமாக, உயிர் நாடியாக இருப்பது.ஸம்ஹிதை என்றால் ஒழுங்குபடுத்திச் சேர்த்த மந்திரங்கள் என்று பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு வேதத்திலும் பல சாகைகள் இருக்கிறது மட்டும் இல்லாமல், யஜுர் வேதம் தனக்குள்ளேயே நிரம்ப மாறுபாடுகள் உள்ள இரண்டு தனி வேதங்களாகவே பிரிந்திருக்கிறது.
யஜூர் வேதத்தின் இரு சாகைகளுக்கு கிருஷ்ண யஜூர்வேதம் என்றும் (கருப்பு), சுக்ல யஜூர் வேதம் என்றும் பெயர்(வெளுப்பு). ‘யஜ்' என்றால் வழிபடுவது - இதிலிருந்தே யஜுர், யக்ஞம் வந்திருக்கின்றன. யஜுர்  அல்லது யஜுஸ் என்றாலே யக்ஞம் சம்பந்தமான வழிபாட்டுக் காரிய முறைகளை விவரிப்பது என்று பொருள்.இதில் கிருஷ்ண சாகையைச் சார்ந்ததுதான் தைத்திரீய ஸம்ஹிதை.

கர்மயோகத்தை நன்றாக அமைத்துக் கொடுத்திருப்பது யஜுர் வேதம் என்பர். ஸோம யாகம், வாஜபேயம், ராஜஸூயம், அச்வமேதம் முதலான அநேக யக்ஞங்களைப் பற்றியும், பலவிதமான யாகங்களைப் பற்றியும் விரிவாக நமக்குத் தெரிவிப்பது கிருஷ்ண யஜுஸில் உள்ள தைத்ரீய ஸம்ஹிதைதான்.

“இன்றைக்கு அதிகம் பேர் அநுஸரிப்பது யஜுர் வேதத்தைத்தான். யஜுர் வேதிகள் தான் மெஜாரிட்டி. வடக்கே இருப்பவர்களில் பெரும்பாலோர் சுக்ல யஜுர் வேதிகளாகவும், தெற்கத்திக்காரர்களில் பெரும்பாலோர் கிருஷ்ண யஜுர் வேதிகளாகவும் இருக்கிறார்கள். உபாகர்மா (ஆவணி அவிட்டம்) என்று கவர்மென்டில் லீவ் விடுவதானால்கூட ரிக்வேதிகளுக்கோ, ஸாம வேதிகளுக்கோ என்றைக்கு உபாகர்மமோ அன்றைக்கு விடுவதில்லை; யஜுர் உபாகர்மாவுக்குத்தான் லீவ் விடுகிறார்கள். யஜுர்வேதிகள் மெஜாரிட்டியாக இருப்பதாலேயே இப்படியிருக்கிறது” எனக் குறிப்பிடுகிறார் காஞ்சி மகாப் பெரியவா.

எந்த சித்தாந்தமானாலும் அதற்கு ஸூத்ரம், பாஷ்யம், வார்த்திகம் என்ற மூன்று இருக்கவேண்டுமென்பது வடகத்து மரபு.
ஸூத்ரம் என்பது சித்தாந்தத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்வது. பாஷ்யம் என்பது அதற்கு விரிவுரை. இந்த விரிவுரையையும் விஸ்தரித்து விளக்குவதுதான் வார்த்திகம்.
ஆதி சங்கரர் பிரம்ம சூத்ரத்திற்கு பாஷ்யம் எழுதினார்.இவை பத்து உபநிடத பாஷ்யங்களாக தொகுக்கப் பட்டது.
ஆதி சங்கரரின் சீடர்களுள் ஸுரேச்வரர் என்றொருவர் உண்டு, இவர் சங்கரரின் பத்து பாஷ்யங்களில் இரண்டிற்கு மட்டும்  வார்த்திகம் எழுதினார். அந்த இரண்டு, தைத்ரீய உபநிஷத்தும், பிருஹதாரண்ய உபநிஷத்தும் ஆகும். இவற்றில் தைத்திரீயம் கிருஷ்ண யஜுஸைச் சேர்ந்தது; பிருஹதாரண்யகம் சுக்ல யஜுஸைச் சேரந்தது.ஆனால் இரண்டுமே யஜுர் வேதம்தான்.

இவ்வளவு விளக்கம் தேவைதானா?,விசயத்திற்கு வருவோமே!
இந்த கிருஷ்ண யஜுர் வேதம் - தைத்திரீய ஸம்ஹிதை முதற்காண்டம் - மூன்றாம் பிரபாடகம் 1 ஆவது அநுவாகம் முதல் 11ஆவது அநுவாகம் வரை முழுக்க முழுக்க பசுவை சோம யாகத்தில் பலியிடும் முறையினை தெளிவாக விளக்குகிறது.(குறிப்பாக 8 முதல் 10 வரை உள்ள சில பகுதிகளை இணைத்துள்ளேன்).
பசுவை கயிற்றால் கட்டுதல்,தண்ணீர் குடிப்பித்தல்,நீர் தெளித்தல்,வலது பின்னங்காலில் நெய் தடவுதல்,கண்ணில்-செவியில்-இதயத்தில்-தொப்புளில்-கால்களில்-வயிற்றில் நீர் விடல்,வபை எனும் ஈரல் சவ்வை பிளந்தெடுத்தல்,வபையில் நெய் தடவுதல்,மாமிச ரசத்தை ஒமம் செய்தல், பசுவின் அங்கங்களை வேக வைத்தல், குடல் பதினொரு துண்டுகளாக்கி ஓமம் செய்தல் என அதற்கான மந்திரங்களுடன் விளக்கப் பட்டுள்ளது. தினமும் ஆடு வெட்டும் பாய்க்கு கூடத் தெரிந்திருக்காது இந்த வரிசைக் கிரமங்கள். அந்த அளவிற்கு சின்ன சின்ன விசயங்கள் துல்லியமாக விளக்கப்பட்டுள்ளன, இப்போது வாங்கும் கார் மற்றும் எந்திர உபகரணங்களுக்கு கொடுப்பார்களே user manual, அது போன்றவை இந்த மந்திரங்கள்.

ஒரு பிராமணன் என்பவன் ரிஷிகளுக்கு பிரம்மச்சர்யம் எனும் வேதப்பியசத்தாலும், தேவர்களுக்கு யாகத்தாலும், பித்ருக்களுக்கு ப்ரஜையாலும் கடமைப்பட்டவனாகிறான்.எவன் ஒருவன் புத்ரனைப் பெற்றானோ, யாகத்தைச் செய்தானோ, பிரம்ச்சாரியாக குருகுலத்தில் வாசம் செய்தானோ அவனே இக்கடன்களிலிருந்து விடுபட்டவனாகிறான்
எனக் குறிப்பிடுகிறது தைத்திரீய ஸம்ஹிதை.பசு என்பது தேவர்களுக்கு பிரியமானது, ஆகவேதான் அது யாகங்களில் பலியிடப்படுகிறது. வாஜபேய யாகத்திற்கு 23 பசுக்கள் மற்றும் அசுவமேதா யாகத்திற்கு 100 பசுக்கள் மட்டுமே பலியிடப் படுகின்றன எனும் தகவலை காஞ்சி மகாப் பெரியவா தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம் பக்கம் 355 ல் குறிப்பிடுகிறார்(இணைப்பில் இந்தப் பக்கம் உண்டு). 

100 பசுக்களைப் பலியிட்டு அசுவமேத யாகம் செய்பவன்  சர்வ பாவங்களையும் போக்கிக் கொள்கிறானாம். 400 விதமான யாகங்களை புரோகிதர்கள் செய்திருக்கிறார்கள் என்பதையும் காஞ்சி மகாப் பெரியவர் விளக்குகிறார்.இதை கருத்தில் கொண்டால், எவ்வளவு பசுக்கள் கொல்லப்பட்டிருக்கும் என்பதற்கு அளவே இல்லை.பசுவை பலியிட்டதற்கான ஆதாரமாக யஜுர் வேத தைத்திரீய ஸம்ஹிதையில் உள்ள ஒரு சில பக்கங்களை மட்டும் இணைத்துள்ளேன். டி.என்.ஜா அவர்கள் எழுதிய “பசுவின் புனிதம்” நூலில் இன்னும் நிறைய ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன.

தைத்திரீய ஸம்ஹிதை ஆர்.ராமச்சந்திர சாஸ்திரி அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு 1920 ல் வெளிவந்த நூல் ஆகும். இந்த நூலில் பலியிடப்படுவது பசு என்பது தெளிவாகவே குறிப்பிடப் பட்டுள்ளது. இன்னொரு தைத்திரீய ஸம்ஹிதை நூல் காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமிகளால் மொழிபெயர்க்கப் பட்டு 1939 ல் வெளிவந்த நூல்.இந்த நூலில் பசு என்பது கடா என்று மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இரண்டு நூல்களின் சில பக்கங்களை இணைத்துள்ளேன். ஒரு விசயம் எப்படி மடைமாற்றம் செய்யப் படுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

ஆனால் யாகத்தில் பசு என்பது பலியிடப்படும் எந்த மிருகமாகவும் இருக்கலாம் எனக் குறிப்பிடுகிறார் காஞ்சி மகாப் பெரியவர்.
எந்தெந்த மிருகங்கள் உண்பதற்கு உகந்தவை எந்தெந்த மிருகங்கள் பறவைகள் மீன் வகைகள் கூடாதவை என்பன ஆபஸ்தம்ப தர்மசூத்ரம் நூலில் உள்ளன.

இனிமேலும் நாங்கள் யாகங்களில் பசுவை பலியிட்டதில்லை, பசுவை உண்டதில்லை, மாமிசம் தீட்டு என்பதை யாராவது சொன்னால் அது எவ்வளவு பெரிய பொய்யாக இருக்கும் என்பதை, இந்தப் பதிவைப் படித்த பிறகாவது அவரவர் மனசாட்சியைக் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.
- ஆறாம் அறிவு குழு, தினகரன் செல்லையா முகநூல் பதிவு
23.4.20

வியாழன், 22 ஏப்ரல், 2021

ந.சி.கந்தையாபிள்ளை வேதம் பற்றி



ந.சி. கந்தையா பிள்ளை வரலாறு அறிந்த பெருமக்களால் வானளாவப் புகழப்பட்டவர்; தமிழ், ஆங்கிலப் புலமை மிக்கவர்!

பத்துப்பாட்டு வசனம், பரிபாடல் வசனம், கலித்தொகை வசனம், கலிங்கத்துப் பரணி வசனம் தொடங்கி பல்வேறு ஆய்வு நூல்களை யாத்தவர். பிறந்தது யாழ்பாணத்தைச் சேர்ந்த கந்தரோடை (1893-1967).

தமிழ்க்கடல் மறைமலை அடிகளால் கவரப்பட்டவர். மலேசியாவில் பணியாற்றி தமிழ்நாடும் வந்து தங்கி பல நூல்களை எழுதியவர்.

‘ஆரிய வேதங்கள்' எனும் 64 பக்கங்களைக் கொண்ட நூல் முத்தமிழ் நிலையத்தால் 1947 இல் பதிப்பிக்கப்பட்டது.

அந்நூலிலிருந்து இதோ:

(பக்கம் 45-47)

‘‘வேதகால ஆரியர் இறைச்சி வகைகளைத் தாராளமாகப் புசித்தார்கள். அவர்களின் உணவில் இறைச்சி வகையே முதன்மையாயிருந்ததென்பதைப் பற்றி ஒருவரும் ஆச்சரியமுற வேண்டியதில்லை. வெள்ளாடு. செம்மறியாடு, பசுக்கள், எருமை கள் யாகங்களிற் கொல்லப்பட்டன. அக்கினி, பசுக்களைப் புசிப்பவன் என்று வேதம் கூறுகின்றது. பாரத்துவாசர் தனக்கு உணவு வேண்டுமென்று இந்திரனைத் துதித்தார். அவன் உணவில் பசு முதன்மையுடையது. முக்கியமான விருந்து வந்தால், பெரியமாடு அல்லது பெரிய ஆட்டைக் கொல்லும்படி சதபதத் பிரமாணங் கூறுகின்றது. அரசன் அல்லது பெருமகன் ஒருவன் விருந்தாக வந்தால், பெரிய எருதை அல்லது மலட்டுப் பசுவைக் கொல்லவேண்டுமெனவும் அந்நூல் கூறியுள்ளது.

இந்திரனுக்கு எருதுகள் பலி யிடப்பட்டன. சமைக்கப்பட்ட மாட்டு இறைச்சியில் இந்திர னுக்கு மகிழ்ச்சி உண்டு. எரு மைகளும் அவனுக்குப் பலியி டப்பட்டன. அவைகளின் இறைச்சியைச் சமைத்து இந்திரனுக்குப் படைத்தபின், வழிபடுவோர் அதனை உண்டனர். சில சமயங்களில் முந்நூறு எருமைகளுக்குமேல் பலியிடப்பட்டன. ஒருவர் இறந்தால் உடலைக் கொளுத்துவதன் முன் பசுவைக் கொன்று அதன் இறைச்சியால் அது மூடப்பட்டது. குதிரைகளும் யாகத்திற்குக் கொல்லப்பட்டன. அதன் இறைச்சியை வறுத்தும் அவித்தும் கடவுளுக்குப் படைத்தபின், அடியவர் அதனை உண்டு சோம இரசத்தையும் பருகினர். இறைச்சியை விற்பனை செய்யும் கடைகளும் இருந்தன. பாரதம், நாளொன்றுக்கு 2000 பசுக்களைக் கொன்று பலருக்கு விருந்து அளித்து வந்த இரந்தி தேவரைப் பற்றிக் கூறுகின்றது! புத்தர் தோன்றித் கொல்லாமையைக் கடியும் வரையில் ஊன் உணவு கொள்ளும் வழக்கு, வடநாட்டவர் எல்லோரிடையும் இருந்து வந்தது. வேதகால ஆரியர், மாட்டு மாமிசம் உண்ணுதல் இழிவு என்று கருதவில்லை. இருக்கு வேத காலத்தின் கடைப்பகுதியில் பசு, எருதுகளைப் பலியிடுவதைப் பற்றி வெறுப்பு உண்டாயிருந்தது.

ஆரியர் இவ்வாறு செய்யும் யாகங்களுக்கு அசுரர் எதிராக இருந்து வந்தனர். அவர்கள் அவ்வகை யாகங்களை வலிமையால் தடை செய்ய முயன்று வந்தார்கள். யூபத்தில் மிருகங்கள் கட்டப்பட்டதும், அசுரர் அதனை நோக்கி வந்தார்கள். ஆரியர் யாகச்சாலையைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக மதில்போல நெருப்பை வளர்த்து, அசுரரை அணுக முடியாமற் செய்தனர். இராவணனாதியோரும். ஆரிய முனிவர்கள் செய்யும் யாகங்களை அழித்து வந்தார்கள் என இராமாயணத்திற் படிக்கிறோம்.''

கோமாதா புத்திரர்கள் இதற்கு என்ன பதில் சொல்வார்களாம்?

 - மயிலாடன்

சனி, 17 ஏப்ரல், 2021

வேதங்கள் - பேதங்கள் -1


சு.அறிவுக்கரசு

 யஜூர்வேதம் இருவகை கிருஷ்ண (கறுப்பு) யஜூர், சுக்ல (வெள்ளை) யஜூர் என இரண்டு. கிருஷ்ண யஜூர் வேதத்திற்கு 101 சாகைகள் என்று சிலரும் 86 சாகைகள் மட்டுமே எனச் சிலரும் கூறுகின்றனர். இவர்கள் எதிலும் பிளவுபட்டப் புளுகுதான் என்பதற்கு இதுகூட உதாரணம் தான். (தமிழ்நாட்டில் பஞ்சாங்கம் என்பது கூட இரண்டுதான். சுத்த வாக்யப் பஞ்சாங்கம், எண்கணிதப் பஞ்சாங்கம் என இரண்டுக்கும் காலக் கணக்கிலேயே வேறுபாடு உண்டு. இதைச் சரி செய்து ஒன்றாக்க வேண்டும் என்று கவி சுப்ர மணிய பாரதி கூட எழுதினார். இன்றளவும் இரண்டுதான்) சுக்ல யஜூர் வேதத்திற்கு 17 சாகைகள் இருந்தன. வட இந்தியாவில் இந்த வேதம்தான். சாம வேதத்தில் மூன்றே சாகைகள் குஜராத், மகாராஷ்ட்ரா, கருநாடகத்தில் மட்டுமே இவ்வேதமாம். (பின் என்ன பாரத மாதா? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரதம் ஒரு நாடு. நீர் அதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர் என்ற பாட்டு ஏன்? எந்த விஷயத் திலும் ஒரே மாதிரி இல்லையே!) அதர்வண வேதத்திற்கு ஒன்பதே சாகைகளாம். 400 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து எங்கோ போய்விட்ட வேதமாம். காஞ்சிபுரம் மடாதிபதி எதையோ கொடுத்து, அதுதான் அதர் வண வேதம் எனக் கொண்டாடுகின்றனர். இது மந்த்ர தந்த்ரங்கள், பில்லிசூன்யம், செய்வினை வைத்தல் போன்ற சமூகக் கேடான செயல்களைக் கற்றுத்தருவதாம். ஆகவே மலையாள மலப்புரம் மாவட்டப் பார்ப்பனர்கள் மத்தியில் பழக்கப்படுத்தப்படுகிறதாம்.

வேதங்களின் மூலம் உலகை அறிந்தவர்கள் எனப்படும் சிலர் தெரிவித்தவை உப அங்கங்கள் எனப்படுகின்றன. இவற்றையே இந்தியத் தத்துவங்கள் எனச்சிலர் கூறு கின்றனர். அவை, சாங்க்யம், யோகம், மீமாம்சம், வேதாந் தம், நியாயம், வைசேஷிகம் என ஆறு தலைப்புகளில் உள்ளன. கபிலர் என்பாரின் கருத்தே சாங்க்யம் எனப்படு கிறது. கடவுளைப் பற்றியே சாங்க்யம் பேசவில்லை. அதே போல, கடவுளைப் பற்றிப் பேசாத பவுத்தம் சார்ந்தவர் எனவும் கூறலாம். சாக்கிய முனி என்பவர் புத்தர்.

யோகம் என்பது உடற்பயிற்சி முறையே - இதனை பதஞ்சலி என்பவர் கூறியதாகவும் வியாசன் உள்பட பலர் விரிவுரை எழுதியுள்ளதாகவும் கூறுகின்றனர். நான்கு பாகங்களாக 194 சூத்திரங்களாக உள்ளதாம்.

மீமாம்சம் என்பது இரண்டு வகை - பூர்வ மீமாம்சம், உத்திர மீமாம்சம். பூர்வ மீமாம்சம் என்பது ஜைமினியினு டையது. இது 12 காண்டங்கள், 60 அத்தியாயங்கள் கொண்டது.

வேதாந்தம் என்பது வேதங்களின் முடிவு எனப்பொருள் படும். இதை எழுதியது வியாசன். நான்கு அத்தியாயங்கள், ஒவ்வொன்றிலும் நான்கு பாதங்கள், ஒவ்வொன்றிலும் அனேக சூத்திரங்கள் என்றுள்ளன. மொத்தம் 5 லட்சத்து 58 ஆயிரத்து 191 சூத்திரங்களாம். (ஒன்றும் விளங்காம«லே இருப்பதன் பெயர் வேதாந்தம் என்றார் கவிஞர் கண்ண தாசன்), இதற்கு (ஆதி) சங்கரனும் ராமானுஜனும் உரை எழுதியுள்ளனராம். எல்லாம் அறிந்த பிறகு பிரம்மத்தை அறிய வேண்டும் என்கிறது வேதாந்தம். (அதாதோ பிரம்ம ஜிக்ஞாயச) “சாதாரண சப்த விசேஷரத்” (சாதாரண சப்தத்தின்படி வைசுவாநரன் என்பது பரமாத்மா (கடவுள்)வின் பெயராம். மனிதர்கள் ஜீவாத்மா, கடவுள் பரமாத்மா. அதனை வைசுவாநரன் என்கிறது வேதாந்தம்.

கவுதமன் என்பார் கூறியது நியாயம். இந்நூல் 537 சூத்திரங்கள் கொண்டது. பிரமாணம், பிரமேயம், சம்சயம், பிரயோஜனம், உதாரணம், சித்தாந்தம், அவயவம், தர்க்கம், நிர்ணயம், வாதம், ஜல்பம், விதண்டாவாதம், ஹேத்வபாஸம், தந்திரம், ஜோதி, நிக்ரஹஸ்தானம் என்கிற 16 வழிகளைக் கைக்கொண்டு உண்மை, பொய்யை அறிய வேண்டுமாம். வழக்கு மன்றங்களை நியாயஸ்தலம் என்றுதான் சொல் கிறார்கள்.

வைசேஷிகம் என்றால், உலகப் பொருள்களை எல்லாம் பிரித்து, ஆய்ந்து, குணங்களை அறிவிப்பதாம். கணாத முனிவரால் 373 சூத்திரங்களில் எழுதப்பட்டது.

ரிக் வேதத்திலிருந்து ஆயுர்வேதம், யஜூர்வேதத்திலி ருந்து தனுர் (வில்) வேதம், சாமவேதத்திலிருந்து கானம் (இசை) அதர்வணத்திலிருந்து அர்த்தவேதம் போன்றவை யும் உண்டாம்.

வேதத்தை நன்றாக அறிந்து கொள்ள பிரதி சாக்கியத்தை அறிவது அவசியமாம். அதைவேதவியாகரணம் என்கிறார் கள். இலக்கணம்தான் வியாகரணம் என்பர். ரிக்வேத சாக்கியம் பார்ஷத சூத்திரம் என்று பெயர். எழுதியவன் சவுனக ரிஷியாம். சுக்லயாஜூர் வேதத்தின் பிரதிசாக்கியம் எழுதியது காத்தியாயனன். சாம வேதத்திற்கான பிரதிசாக் கியம் புஷ்ப சூத்தரிம். இதை எழுதியவர் புஷ்ப ரிஷி, அதர்வணத்திற்கு பிரதி சாக்கியம் இல்லையாம்.

“அக்னி மிளே புரோகிதம் யக்ஞஸ்ய தேவமிருத் விஜம்“ என்பது ரிக்வேதத்தின் முதல் வரியாம். இதன் பொருள், புரோகிதனான நான் யக்ஞதேவ அக்னியை நமஸ்கரிக் கிறேன் என்பதாம். ஆரியர் சடங்கில் நெருப்புக்குத்தான் முதலிடம். எதையும் பொசுக்கும் அல்லவா?

முதல் வரியை பதம்பதமாகப் பிரித்துச் சொல்ல வேண் டுமாம். அக்னிம் ஈனே, புர.ஹிதம் யக்ஞஸ்ய, தேவம், ரிக்விஜம் எனக் கூறவேண்டுமாம். சவுனக ரிஷி என்பான் கூற்றுப்படி இளமையுடன் பலம் உள்ளவர்களால்தான் வேதம் படிக்க முடியுமாம். தமிழ் போல் அல்லாது சமஸ் கிருதத்தை அடிவயிற்றிலிருந்து உச்சரிக்க வேண்டும். பிரம்மசாரியாய் மித வாழ்க்கை உள்ளவனுக்கு வலு இருப்ப தால் அவனால்தான் வேதமந்த்ரங்களை ஓதவும் சொல்ல வும் முடியுமாம்.

வேதம் படித்துப் பண்டிதைகளாகப் பெண்கள் 24 பேர் வேதகாலத்தில் இருந்தார்களாம். பிறகு ஏன் பிற்காலப் பெண்கள் படிக்கத் தடை செய்யப்பட்டனர் என்ற கேள்வி எழுகிறது. பதில் சொல்ல ஆள் இல்லை.

ஆரியர்களின் வாழ்க்கையில் செய்தே தீரவேண்டிய சடங்குகள் (ஸம்ஸ்காரங்கள்) மொத்தம் 16 ஆகும். கர்ப்ப தானம், பும்சவனம், சீமந்தம், ஜாதகர்மம், நாமகரணம், சூடா கர்ணம், நிஷ்கிரமணம், அன்னப்பிராசனம், கர்ணபேதம், உபநயனம், வேதாரம்பம், சமாவர்த்தனம், விவாஹம், வானப்பிரஸ்தம், சன்னியாஸம், அந்தியேஷ்டி ஆகியவை யாம். இவை பார்ப்பனர்க்கு மட்டுமே உரியவை.

மேலை நாட்டுக்காரர் ஒருவர் (வில்லியம் ஆர்ச்சர்) கூறியவாறு வேதங்கள் இந்தியர்களின் கலாச்சாரக் காட்டு மிராண்டித் தனத்தின் அடையாளம் “என்று சரியாய்த்தான் சொல்லியிருக்கிறார் என்பதை இவர்களின் யக்ஞங்கள் (யாகங்கள்) ஸம்ஸ்காரங்கள் மூலம் நிரூபணமாகின்றது. பார்ப்பனர்களே ஒத்துக்கொண்டவாறு,” ரிக் வேதத்தின் முக்கியத்வம் பல காலங்களுக்கு முன்பே ஓரம் கட்டப்பட்டு விட்டதாம். சம்ஹிதை என்ற பெயரில் துக்கடா மந்திரங் களின் தொகுப்பு மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது என்கிறார்கள்.

இதிஹாசங்களும் புராணங்களும் பார்ப்பனரல்லாத மக்கள் தெரிந்து கொள்வதற்காக எழுதப்பட்டன என்கிறார் கள். ஆனால் அவை, ஒரு குறிப்பிட்ட அளவு ரிக் வேதத்தின் வைதீக மதம், தத்துவங்கள், கலாச்சாரம் ஆகியவைகளை அழித்துவிட்டன என்கிற கருத்தும் உள்ளது. (வடுவூர் நாராயணன் எழுதிய “வேதங்களும் உபநிஷதங்களும்“ நூல் - பக்கம் 55) ரிக் வேத மொழியான (பழைய) ஸம்ஸ் கிருதம் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சொற்களைக் கொண்டதாம். ஆரியரல்லாத மக்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லையாம். கர்மாக்களிலும் கடவுளிட மும் பற்றில்லாதவர்கள் இதிஹாஸக்காரர்களின் ரிக் வேதத் துடன் உள்ள தொடர்பை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லையாம். அதே சமயம், இதிஹாஸக்காரர்களின் விளக்கங்களை ஏற்க ரிக்வேதம் தயாரில்லையாம். வேதங் களின் அடிப்படை நோக்கம் அறியாமை இருளை அகற்று வதாம். ரிக்வேதக் கடவுள்கள் எல்லாமே சுத்த சுயம் பிரகாச மானவையாம். ரிக் வேதத்திற்கான விளக்கங்கள் வேதத் தின் அறிவுசார்ந்த விளக்கங்களை அழித்துவிடுகின்றன வாம் (எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்பது இது தானோ?)

ரிக் வேதத்தின் ஏழாம்பகுதி புருஷசூக்தம். அதன்படி பிரபஞ்சம் முழுமைக்கும் ஒரே கடவுள். பரம புருஷன் என்றும் பெயராம். அதற்கு ஆயிரம் தலைகள். (ஸகஸ்ர சீருஷ புருஷ) இதற்குத்தான் யாகங்களில் உயிர்ப்பலி தரப்படுகிறது. மக்களின் மொழியில் வேதம் இல்லாததால், பரவவில்லை. அதே வேளையில் கவுதம புத்தர் மக்களின் மொழியான பாலி மொழியில் பேசியதால் மக்கள் கூட்டம் அவர் பின்னால் சென்றதாம். புத்தர் கடவுள் என்பதை மறுக்கவுமில்லை, ஆதரிக்கவுமில்லை. என்றாலும் மக்கள் அவரைப் பின்பற்றினர். வேதத்தைப் படிக்கவில்லை. புறக் கணித்தனர். அதைவிட முக்கியமான காரணி என்ன வென்றால், ரிக் வேதப்பாடல்களில் கருத்து ஒற்றுமை இல்லை, பல ரிஷிகள், பல்வேறு காலங்களில் எழுதியவை கதம்பமாகக் கட்டப்பட்டுக் காட்சி அளிப்பதால் முரண் பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது என்று பார்ப்பனர் சப்பைக்கட்டு கட்டுகின்றனர்.

ரிக் வேதத்தில் 8 அஷ்டகங்கள், 10 மண்டலங்கள், 64 அத்யாயங்கள், 85 அனுவாகங்கள், 1017 சூக்தங்கள், 2024 வர்க்கங்கள் 10647 ரிக்குகள், (பாடல்கள்) உள்ளன. கடவுளை அறிமுகப்படுத்துபவை ‘ருக்‘. பல ருக்குகளைக் கொண்டது சூக்தம். ஒரு சூக்தத்தில் ஒரு தேவனோ அல்லது பல தேவர் களோ இருக்குமாம். இந்த சூக்தங்களுக்கு ஒரு ரிஷியாம். அவருக்குத்தான் சூக்தத்தின் பொருள் தெரியுமாம்.

ஆனால் அவன் சொல்லமாட்டானாம். ஒரு ஈசன் உண்டு என்று எல்லா ரிஷிகளும் சொல்கிறார்கள். (பதிரேக ஆசித்) ஒருவனே தேவன். அவன்தான் பரபிரம்மம் என்கிறது ரிக்வேதம் “ஒருவனே தேவன்” என்று திருமூலன் கூடச் சொல்லியிருக்கிறான், யார் அந்தத் தேவன்? எது அந் தத் தேவன்? மும்மூர்த்திகள் என்கிறார்களே, அவையா? சிவனா? விஷ்ணுவா? பிரம்மனா? எவன்? ஒன்று மட்டும் தெரிகிறது. சிவன் எனும் கடவுள் ரிக்வேதகாலத்தில் இல் லவே இல்லை, அது புதுச்சரக்கு என்பது. ரிக் வேதம் முழு வதும் அக்னியும் இந்திரனும் மட்டுமே பேசப்படுகின்றன. அக்னி என்றால் நெருப்பு. இந்திரன் என்றால் தேவர்களின் தலைவன். தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுக்கப்படுபவன். அதனால் அடிக்கடி மாறுபவன், ஆனால் எவன் இந்திரனாக வந்தாலும், அவனுக்கு மனைவியாக இந்திராணி இருப் பாள். எவ்வளவு ஒழுக்கம் பாருங்கள். புகழ் பெற்ற ரிக்வேத கால ஒழுக்கம் பாருங்கள்.

 (தொடரும்)

செவ்வாய், 23 மார்ச், 2021

ஒழுக்கக் கேடான திருமண மந்திரங்கள்

இந்து மதத்தில் ஒழுக்கக்கேட்டிற்கு இரு எடுத்துக் காட்டுகளைக் குற்றக் கூண்டில் நிறுத்தினார் திராவிடர் கழகத் தலைவர். அதற்குச் சாட்சியமாக மறைந்த காஞ்சி சங்கராச்சாரியாரின் ஆலோசகரும், ஒரு நூற்றாண்டை எட்டிப் பிடித்தவருமான அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரை சாட்சிக்கு அழைத்தார்.

இந்து மதம் எங்கே போகிறது?' என்ற அவரின் நூலிலிருந்தே அதையும் எடுத்துக்காட்டினார் (பக்கம் 151-153).

திருமணத்தில் வாத்யார்கள் ஓதும் முரண்பாடான மந்த்ரங்களுக்கு மேலும் உதாரணம் சொல்கிறேன் என போன அத்யாயத்தில் சொல்லியிருந்தேனல்லவா!

அத்தகைய ஒரு மந்த்ரத்தைப் பாருங்கள்.

தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வ

யஸ்ஸாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ

யான ஊரு உஷதி விஸ்ரயாதை

யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்''

இது வேதத்தில் சொல்லப்பட்ட மந்த்ரம். இதை கல் யாண மேடையிலே பெண்ணையும், மாப்பிள்ளையையும் உட்கார்த்தி வைத்து சத்தமாக சொல்கிறார் வாத்யார். இந்த மந்த்ரத்தின் அர்த்தம் புரிந்தால், அந்த வாத்யாரை நீங்கள் வாத்சாயணர் என்றுதான் அழைப்பீர்கள்.

அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்? நான் அவனை கட்டிப் பிடிப்பேன். அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாகப் பொருந்தச் செய்யுமாறு... தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்....

இந்த மந்த்ரத்தின் அர்த்தத்தை இதைவிட நாகரீகமாக சொல்ல முடியாது. விளக்கமாக நான் சொல்லியிருப்பேன் என்றால்... என் மீதும் என் வயதின் மீதும் உங்களுக்கு இருக்கும் மரியாதை போய்விடும். அப்படிப்பட்ட மந்த்ரம் அது.

என் இஷ்டமித்ரர் ஒருவரது மகளின் கல்யாணம் சமீபத்தில் நடந்தது. அந்த பெண் மகாபுத்திசாலி. சமஸ்கிருதம் பயின்றவள் அவள் மணமேடையிலே உட்கார்ந்திருக்கும் போது

வாத்யார் இந்த மந்த்ரத்தை உரக்கச் சொல்ல....

ஸ்வாமீ....  நிறுத்துங்கோ என்றாள் அவள். வாத்யார் வாயடைத்து விட்டார்.

இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமோ?..... பொண்ணும் மாப்ளையும் துணியில்லாம செய்யுற காரியத்தை.....  நீங்க பல பேர் முன்னாடி சொல்றேளே....

வாத்யார் அதன்பிறகு அந்த மந்த்ரத்தை சொல்ல வில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாத்யார்கள் சடங்குகள் என்ற பெயரில் என்ன அர்த்தம் என்றே தெரியாமல்... பல மந்த்ரங்களை உச்சரித்து வருகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டத்தான்.

இதுபோல் இன்னொரு மந்த்ரம்

விஷ்ணுர் யோனி கர்ப்பயது தொஷ்டா ரூபானி பீமிசது

ஆரிஞ்சது ப்ரஜாபதி

தாதா கர்ப்பந்தாது.... இதன் அர்த்தம்... இன்னும் ஆபாசம்....!

விஷ்ணுர் யோனி கர்ப்பயது...' எனத் தொடங்கும் இந்த மந்த்ரத்தின் அர்த்தம்தான் என்ன?

பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. யோனி, மத்யமம், உபஸ்தம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது.

அதாவது, விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய தேவதைகள் இம்மூன்று பாகங்களிலும் உட்கார்ந்திருக் கிறார்கள். இவர்கள்தான்... ஆணும், பெண்ணும் தேக ஸம்பந்தம் - உடலுறவு கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்கிறார்கள். அதாவது.... நாம் தேக ஸம்பந்தம் கொள்வதை கூட விஷ்ணு உள்ளிட்ட தேவதைகள் அருகில் இருந்து, இன்னும் சொல்லப்போனால் அந்த இடத்திலேயே இருந்து கவனிக்கிறார்கள்.''

இவ்வாறு ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதியுள்ளார்.
- தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் உரையின் ஒரு பகுதி
- விடுதலை நாளேடு, 23. 3 .2019

வெள்ளி, 12 மார்ச், 2021

மனுதர்ம சாஸ்திரமும் யாகமும்

சனி, 6 மார்ச், 2021

சொர்க்கத்திற்கு வந்தது எப்படி?

புதன், 3 மார்ச், 2021

மனுதர்மத்தில் மாமிசம்

சபரிமலை அய்யப்பன் யார்?

வியாழன், 25 பிப்ரவரி, 2021

ஏன் அந்தக் கனியை ஏவாள் புசிக்கக் கூடாது?

குடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள் - 30 ஆடுகள்

திங்கள், 22 பிப்ரவரி, 2021

மனுதர்மத்தை ஒழிக்கவேண்டியது மனித நேயர்களின் கடமை