வியாழன், 22 ஏப்ரல், 2021

ந.சி.கந்தையாபிள்ளை வேதம் பற்றி



ந.சி. கந்தையா பிள்ளை வரலாறு அறிந்த பெருமக்களால் வானளாவப் புகழப்பட்டவர்; தமிழ், ஆங்கிலப் புலமை மிக்கவர்!

பத்துப்பாட்டு வசனம், பரிபாடல் வசனம், கலித்தொகை வசனம், கலிங்கத்துப் பரணி வசனம் தொடங்கி பல்வேறு ஆய்வு நூல்களை யாத்தவர். பிறந்தது யாழ்பாணத்தைச் சேர்ந்த கந்தரோடை (1893-1967).

தமிழ்க்கடல் மறைமலை அடிகளால் கவரப்பட்டவர். மலேசியாவில் பணியாற்றி தமிழ்நாடும் வந்து தங்கி பல நூல்களை எழுதியவர்.

‘ஆரிய வேதங்கள்' எனும் 64 பக்கங்களைக் கொண்ட நூல் முத்தமிழ் நிலையத்தால் 1947 இல் பதிப்பிக்கப்பட்டது.

அந்நூலிலிருந்து இதோ:

(பக்கம் 45-47)

‘‘வேதகால ஆரியர் இறைச்சி வகைகளைத் தாராளமாகப் புசித்தார்கள். அவர்களின் உணவில் இறைச்சி வகையே முதன்மையாயிருந்ததென்பதைப் பற்றி ஒருவரும் ஆச்சரியமுற வேண்டியதில்லை. வெள்ளாடு. செம்மறியாடு, பசுக்கள், எருமை கள் யாகங்களிற் கொல்லப்பட்டன. அக்கினி, பசுக்களைப் புசிப்பவன் என்று வேதம் கூறுகின்றது. பாரத்துவாசர் தனக்கு உணவு வேண்டுமென்று இந்திரனைத் துதித்தார். அவன் உணவில் பசு முதன்மையுடையது. முக்கியமான விருந்து வந்தால், பெரியமாடு அல்லது பெரிய ஆட்டைக் கொல்லும்படி சதபதத் பிரமாணங் கூறுகின்றது. அரசன் அல்லது பெருமகன் ஒருவன் விருந்தாக வந்தால், பெரிய எருதை அல்லது மலட்டுப் பசுவைக் கொல்லவேண்டுமெனவும் அந்நூல் கூறியுள்ளது.

இந்திரனுக்கு எருதுகள் பலி யிடப்பட்டன. சமைக்கப்பட்ட மாட்டு இறைச்சியில் இந்திர னுக்கு மகிழ்ச்சி உண்டு. எரு மைகளும் அவனுக்குப் பலியி டப்பட்டன. அவைகளின் இறைச்சியைச் சமைத்து இந்திரனுக்குப் படைத்தபின், வழிபடுவோர் அதனை உண்டனர். சில சமயங்களில் முந்நூறு எருமைகளுக்குமேல் பலியிடப்பட்டன. ஒருவர் இறந்தால் உடலைக் கொளுத்துவதன் முன் பசுவைக் கொன்று அதன் இறைச்சியால் அது மூடப்பட்டது. குதிரைகளும் யாகத்திற்குக் கொல்லப்பட்டன. அதன் இறைச்சியை வறுத்தும் அவித்தும் கடவுளுக்குப் படைத்தபின், அடியவர் அதனை உண்டு சோம இரசத்தையும் பருகினர். இறைச்சியை விற்பனை செய்யும் கடைகளும் இருந்தன. பாரதம், நாளொன்றுக்கு 2000 பசுக்களைக் கொன்று பலருக்கு விருந்து அளித்து வந்த இரந்தி தேவரைப் பற்றிக் கூறுகின்றது! புத்தர் தோன்றித் கொல்லாமையைக் கடியும் வரையில் ஊன் உணவு கொள்ளும் வழக்கு, வடநாட்டவர் எல்லோரிடையும் இருந்து வந்தது. வேதகால ஆரியர், மாட்டு மாமிசம் உண்ணுதல் இழிவு என்று கருதவில்லை. இருக்கு வேத காலத்தின் கடைப்பகுதியில் பசு, எருதுகளைப் பலியிடுவதைப் பற்றி வெறுப்பு உண்டாயிருந்தது.

ஆரியர் இவ்வாறு செய்யும் யாகங்களுக்கு அசுரர் எதிராக இருந்து வந்தனர். அவர்கள் அவ்வகை யாகங்களை வலிமையால் தடை செய்ய முயன்று வந்தார்கள். யூபத்தில் மிருகங்கள் கட்டப்பட்டதும், அசுரர் அதனை நோக்கி வந்தார்கள். ஆரியர் யாகச்சாலையைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக மதில்போல நெருப்பை வளர்த்து, அசுரரை அணுக முடியாமற் செய்தனர். இராவணனாதியோரும். ஆரிய முனிவர்கள் செய்யும் யாகங்களை அழித்து வந்தார்கள் என இராமாயணத்திற் படிக்கிறோம்.''

கோமாதா புத்திரர்கள் இதற்கு என்ன பதில் சொல்வார்களாம்?

 - மயிலாடன்

2 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு