வியாழன், 11 அக்டோபர், 2018

மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி (1)


மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி (1)


தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடலில் அவ்வப்போது பேசும் சிறப்புக் கூட்டங்களுக்குத் தனி ஈர்ப்புண்டு.

அத்தகு கூட்டங்களில் பார்வையாளர்கள் வரிசையில் புதிய புதிய புதுமுகங்களைக் காண முடிகிறது.

கடந்த புதனன்று (3.10.2018) முதல் மூன்று நாள்கள் சென்னைப் பெரியார் திடலில் "மனுதர்ம ஆராய்ச்சி"

1) மனுதர்மமும் டாக்டர் அம்பேத்கரும்.

2) மனுதர்மமும் தந்தை பெரியாரும்

3) மனுநீதி - ஒரு குலத்துக்கொரு நீதி

என்ற தலைப்புகளில் அச்சொற்பொழிவு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி - சிறுகனூரில் வேக வேகமாக பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கும் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக மூன்று நாள் கூட்டத்துக்கும் நுழைவு நன்கொடையாக ரூபாய் நூறு என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன்பும் கூட இத்தகு நான்கு நாள் (23.9.2014 முதல் 26.9.2014 வரை) சிறப்புச் சொற்பொழிவு நுழைவு நன்கொடை வைத்து நடத்தப்பட்டதுண்டு. 23.9.2014 முதல் 26.9.2014 வரை நான்கு நாட்கள் தந்தை பெரியாருக்கு அய்.நா.வின் யுனெஸ்கோ விருது தொடர்பான ஆசிரியரின் பொழிவரங்கம் நடைபெற்றது. நான்கு நாட்கள் ரூ.100 நன்கொடையாக பெறப்பட்டு அந்த தொகை பெரியார் உலகத்திற்கு கொடுக்கப்பட்டது. அந்தவுரையும் நூலாகவே வெளி வந்துள்ளது. ("யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார்")

ஒரு கால கட்டமிருந்தது. - நுழைவுக் கட்டணம் வைத்து திராவிட இயக்க சிறப்புச் சொற்பொழிவுகள் நடைபெற்ற கால கட்டம் அது.

இடைக் காலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்திய சிறப்புப் பட்டிமன்றங்களும் அவ்வாறே நடத்தப் பட்டதுண்டு.

கடுமையான மழை இருக்கும் என்ற வானிலைத் துறை மிரட்டிக் கொண்டிருந்தும், அதனையும் பொருட்படுத்தாது கடந்த இரு நாட்களிலும் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். மழையைப் பற்றியெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் பல தரப்பு மக்களும், மாணவர்களும், பேராசிரியர்களும் திரண்டனர். குறிப்பாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் இராசேந்திரன், திருச்சி தூய வளவனார் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் ஆரோக்கியசாமி, பேராசிரியர் மு.பி. பாலசுப்பிரமணியம் போன்றோர் வருகை தந்திருந்தனர்.

மனுதர்மத்துக்கு இப்பொழுது என்ன வந்தது? எதற்காக இந்த ஆய்வுச் சொற்பொழிவு என்ற வினாக்களை சமூக வலைதளங்களில் வினா எழுப்பியவர்களுக்கு காரணம் தெரியும்தான். இன்னும் சொல்லப் போனால் மனுதர்மப் புத்தியை மனதில் கொண்டுதான் இந்தக் கேள்விகளை எழுப்புகின்றனர்.

அவர்கள் ஜாதி மறுப்பாளர்கள் அல்லர் - ஜாதிக் குள்ளேயே திருமணம் செய்து கொள்ளத் துடிப்பவர்கள்தாம்.

மனுதர்மம் பற்றி விமர்சனம் வந்து விடக் கூடாது; அதன் ஆபாச முகம் வெளி உலகுக்குத் தெரிந்து விடக் கூடாது - அதன் மூலம் இந்து மதத்தின் மானம் கப்பலேறி விடக் கூடாது என்பதுதான் அவர்களின் உள் நீரோட்டம்.

ஆனாலும் மனுதர்மம் என்பதெல்லாம் எங்கே இருக்கிறது? வீணாக பழைய குப்பைகளைக் கிளறுகிறார்கள் என்று மேதாவிபோல விமர்சிப்பது ஒரு வகையான யுக்தியேயாகும்.

ஆர்.எஸ்.எசுக்குக் குருநாதர் கோல்வால்கர் என்பதை அவர்கள் மறுக்கக் கூடியவர்களா? அவருடைய 'ஞான கங்கை' (ஙிஸீநீலீ ஷீயீ ஜிலீஷீரீலீ) என்னும் நூல்பற்றி அறியாதவர்களா? அதில் மனுதர்மத்தின் வர்ணாசிரமம் தூண்களாக தூக்கி நிறுத்தப்படுவதுபற்றி அவர்களுக்குத் தெரியாதா? ஆரியர்களாகிய நாம் தான் அறிவுக் கொழுந்துகள், மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள் என்று "ஞான கங்கை"யில் கோல்வால்கர் எழுதியிருப்பதை எல்லாம் அறியாத கூழ் முட்டைகளா இவர்கள்?

1981ஆம் ஆண்டில் புனேவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். மாநாடு ஊர்வலத்தில் மனுதர்ம சாஸ்திர நூலை அலங்கரித்து எடுத்துச் செல்லப்பட்டது தெரியாதா?

இன்னும் சொல்லப் போனால் அம்பேத்கர் தலைமையில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு அந்த இடத்தில் மனுதர்மத்தை வைக்க வேண்டும் என்பது தானே ஆர்.எஸ்.எஸின் நிலைப்பாடு.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதப் பாதுகாப்பு என்ற போர்வையில் ஜாதி பத்திரமாகக் காப்பாற்றப்படுகிறது என்ற அம்சம் மனுதர்மத்தின் நீட்சியல்லவா!

மன்னர்கள் ஆட்சிக் காலம் முடிவுக்கு வந்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரை இந்தியாவை ஆண்டு கொண்டு இருந்தது மனுதர்மம்தானே!

இந்துச் சட்டம் என்பதன் முக்கிய மூன்று மூலக் கூறுகள் சுருதி, ஸ்மிருதி மற்றும் ஆசாரங்கள் ஆகியவையே.

மனுவின் மாணவ தரும சாத்திரமும், யக்ங  வல்கியரின் சாத்திரமும் சேர்ந்தது தான் இந்துச் சட்டம் என்று திரு. மாக்ஸ்முல்லர் கூறுகிறார்.

(ஆதாரம்: சட்டப்படி இன்னும் நாம் சூத்திரரே - கி.வீரமணி எம்.ஏ., பி.எல்., கரூர் பி.ஆர். குப்புசாமி பி.ஏ., பி.எல்.)

மறைந்த திருவாளர் சோ. இராமசாமி தனது 'துக்ளக்' இதழில் பக்கம் பக்கமாக இந்தக் கால கட்டத்திலும் மனுதர்ம சாஸ்திரத்துக்காக வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்துப் போட்டு எழுதினாரா இல்லையா?

அப்படி எழுதிக் கொண்டு வரும் போதே, மனுதர்மத்தில் உள்ள ஒரு முரண்பாட்டை தன்னை அறியாமலேயே ஒத்துக் கொண்டும் எழுதியதுண்டே!

சோ மறைந்த பிறகும்கூட அவர் முன்பு எழுதிய புராணக் குப்பைகளை எல்லாம் தூசு துடைத்து மறுபதிப்பு இன்றுவரை நடந்து கொண்டு தானே இருக்கிறது.

மனுதர்மம் பற்றி நாம் விமர்சிக்கும் பொழுது, 'மனுதர்மம் என்பதெல்லாம் இப்பொழுது எங்கே இருக்கிறது' என்றும் 'நாம் மறந்தாலும் வீரமணி மறக்க மாட்டார் போலிருக்கிறது' என்று ஏகடியம் செய்வதும் பார்ப்பனர்களுக்கே உரித்தான ஒரு யுக்தி. அவ்வளவுதான்!

நேபாளத்தை  எடுத்துக் கொள்ளலாம். உலகில் ஒரே இந்து ராஜ்ஜியம் என்று கூறிக் கொண்டார்களே, அங்கு என்ன நடந்தது? சோதிடன் ஒருவன் பேச்சைக் கேட்டு அரச குடும்பமே சுடப்பட்டு மாண்டு போகவில்லையா?

அதற்குப் பரிகாரம் என்னவாக இருந்தது?

உலகில் இருந்த ஒரே இந்து ராஜ்ஜியமும் பார்ப்பனீயத் தால் அழிந்ததே என்ற ஆத்திரத்தால், ஆற்றாமையால் அப்பாழுதுகூட காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன கூறினார்? "நேபாளத்தில் வணங்கி வரும் ஸ்ரீபகவதி நாதருடைய அருளால் அந்நாட்டு மக்கள் அரசப் பரம்பரை தொடர்ந்து வருவதற்கு ஆதரவளிக்கவும், அந்நாட்டில் ஸ்திரத் தன்மை ஏற்படவும், ஸ்ரீசந்திர மவுலீஸ்வரரைப் பார்த்திருக்கிறோம்"  என்றாரே - நாள் தோறும் நேபாள மன்னர் அந்த ஸ்ரீசந்திரமவுலீஸ்வரரைப் பூஜித்து வரக் கூடியவர்தான். ஆனாலும் என்ன நடந்தது? அப்பொழுதுகூட கடவுளைப் பிடித்துக் கரையேற வழி சொல்லுவது அறியாமையல்ல; பார்ப்பனீயத்தை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற வெறித்தனமே!

மன்னர்கள் காலத்தில் நம் நாட்டில் மனுதர்மத்தின் ஆளுமை எப்படி இருந்தது? மனுநீதி சோழன் என்று வெட்கமில்லாமல் ஓர் அரசன் அழைக்கப்படுவது பெருமைக்குரியதுதானா?

இதோ ஓர் எடுத்துக்காட்டு: உடையான்குடி கல்வெட்டு என்பது பிரசித்தி பெற்றது - அது என்ன கூறுகிறது?

சுந்தர சோழனின் மகன் ஆதித்த கரிகாலனை நான்கு பார்ப்பனர்கள் ரவிதாசன், பரமேசுவரன், கோமன், தேவதாசன் ஆகியோர் கொன்றனர். அவர்களைத் தண்டிக்க பார்ப்பனர்கள் அடங்கிய குழு ஒன்று உடையான் குடி சிவன் கோயிலில் கூடி தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டனை என்ன தெரியுமா? கொலைகார பார்ப்பனர்கள் நால்வருக்கும் 32 பசுக்கள், '10 குடம் பொன் மற்றும் பணியாட்கள்', ஆடைகள் கொடுக்கப்பட்டு எல்லை வரையில் பல்லக்கில் வைத்து அழைத்துச் சென்று விடப்பட்டனர். (தஞ்சைக் கல்வெட்டுகளில் - சென்னை அருங்காட்சியகத்தில் காணலாம்).


'மனுதர்மம் ஏதோ ஒரு நூல்' என்று அலட்சியமாகக் கருதக் கூடாது, கொலைகாரனுக்குப் பசுக்களும், பொன்னும் அளித்து பல்லக்கில் வைத்து அனுப்பி வைக்கப்படுகிறான் என்றால் அதன் பொருள் என்ன?

இதைத்தான் மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் வள்ளுவர் செய்திருக்குறளை

மருவற நன்குணர்ந்தோர்

உள்ளுவரோ மனுவாதி

ஒருகுலத்துக்கொரு நீதி என்றார்.

இதனை முதல் நாள் ஆய்வுச் சொற்பொழிவில் எடுத்துக் காட்டினார் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

மனுநீதி என்பது பிறவியில் பேதம் கற்பிப்பது - திருக் குறளோ 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதாகும்.

இரண்டும் இரு துருவங்களாகும். ஆனால் திருக் குறளுக்கு உரை எழுதிட வந்த பரிமேலழகர் என்ற பார்ப்பனர் என்ன எழுதினார்?

திருக்குறளின் அறமாவது - மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் ஆம், என்று உரைப்பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

பரிமேலழகர் என்ற பார்ப்பனரிலிருந்து சங்கராச்சாரியார் பாரப்பனர் வரையிலும் இன்று வரை திருக்குறளின் தனித் தன்மையை ஏற்றுக் கொள்ளும் நல்ல மனம் இல்லையே.

"திருக்குறளில் உள்ள அறத்துப்பால் கிட்டதட்ட பகவத் கீதையின்தமிழாக்கமேயாகும் (தினத்தந்தி 15.4.2004). சொன்னவர்தானே பார்ப்பனர்களின் லோகக் குருவான காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி.

இந்து மதத்தில் கடவுளை மறுப்பது நாஸ்திகமல்ல - அப்படி என்றால் நாஸ்திகம் என்பதுதான் என்ன? இதே மனுதர்மம் என்ன கூறுகிறது? வேதம் (சுருதி) தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண்டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகன்   (மனுதர்மம் அத்தியாயம் 2 - சுலோகம் 11).

மனுதர்மம் என்பது ஆரியம் - கேள்விக்கு அப்பாற்பட்டது ஆஸ்திகம் - அதனை எதிர்ப்பதுதான் திராவிடம், கேள்வி கேட்பது - இதுதான் நாத்திகம் என்பதைத் தன் ஆய்வுச் சொற்பொழிவு மூலம் நிரூபித்து கொண்டிருக்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

(நாளை பார்ப்போம்)

 - விடுதலை நாளேடு, 5.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக