வருணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வருணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 ஜனவரி, 2019

குருமூர்த்திகள் எத்தனைக் குட்டிக்கரணம் போட்டாலும்...



இந்தக் கார்ட்டூன் மூலம் துக்ளக் வழியாக திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் என்ன சொல்ல வருகிறார்?

கோயில் ஒன்றுக்குச் சென்ற ராகுல்காந்தி அர்ச்சகர் பார்ப்பனர் கேட்ட கோத்திரம் உள்ளிட்டவைகளுக்கு, நான் காஷ்மீர் கவுல் பிராமணர், தாத்தாத்ரேய கோத்ரம் என்று சொல்லிவிட்டாராம்.

அப்படிப்பட்ட ஒருவரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், திமுக தலை வர் மு.க.ஸ்டாலினும் ஆதரிக்கிறார்களாம்.

இதற்காகத் திருவாளர் குருமூர்த்தி அய் யர் கேலி சித்திரம் வரைந்து தள்ளியுள்ளார்.

இவர்கள் விரும்பும் ஹிந்து ராஷ்டிரம் என்பது கூடக் கடவுள் நம்பிக்கையற்றவரான சாவர்க்கர் கண்டு பிடித்ததுதான். அதை வைத்து நாம் கூட கேலிச்சித்திரம் வரைய முடியுமே!

அதுசரி, திருவாளர் கு.அய்யர் என்ன ஜாதி ஒழிப்பு வீரரா? தன் முதுகுப் பூணூலை அறுத்து எறிந்தவரா?

இன்னும் தங்களுடைய பிராமணத் திமிரை கொஞ்சம்கூட விட்டுக்கொடுக்க முன்வராத மூர்க்கத்தனம் பிடித்தவர்களுக்கு ஜாதி குறித்துப் பேசத் தகுதி உண்டா?

சென்னை நாரத கான சபையில் தாம் ப்ராஸ் எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங் கத்தின் ஏற்பாட்டில் அருந்தொண்டாற்றிய அந்தணர்கள் எனும் நூலை வெளியிட்ட இவாளின் ஜெகத்குரு - கொலை வழக்கில் ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந்து திரிந் தவரான திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி என்ன கூறினார்?

எந்த ஆட்சியாக இருந்தாலும்; அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதை பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய்தாலும், அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரை நாயக்கர்கள் ஆண்ட போதும் அந்தணர்தான் குருவாக இருந்தார். தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்ட போது கோவிந்த தீக்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த காஞ்சிப் பெரியவர். ஆண்டவன் கூட அப்புறம்தான் - அந்தணன் தான் முதலில் (நக்கீரன் 15.11.2002)

இந்த ஜாதி - வருணத்திமிர் பிடித்த கூட்டம்தான் ஜாதி ஒழிப்பு வீரர்கள் போல சலங்கை கட்டி ஆடுகிறது.

காங்கிரசை ஆதரிப்பது, ராகுலை ஆதரிப்பது எல்லாம், இந்தப் பார்ப்பன ஆதிக்க - மனுதர்மக் கொடியினை கையில் ஏந்தி புறப்படுகின்ற ஹிந்து வெறி பிடித்த பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்து வதற்குத்தான் - சங்பரிவார் வட்டாரத்தின் வாலை ஒட்ட நறுக்கத்தான் என்பதைக் குருமூர்த்திகள் நெஞ்சில் குறித்து வைத்துக் கொள்ளட்டும்!

- - -


2.1.2019 நாளிட்ட துக்ளக் இதழில் கீழ்க் கண்ட கேள்வி பதில் இடம் பெற்றிருக்கிறது.

கே: ஹிந்து மதத்தில் வர்ணம்தான் உண்டு, ஜாதி இல்லை' என்கிறார் திரு.சோ. ஆனால், காஞ்சிப் பெரியவரோ, 'டிவிஷன் ஆஃப் லேபர் பிரச்னையை ஜாதி - மூலம் ஹிந்து மதம் அழகாகச் சரி செய்தது' என்கிறார். முரணாக உள்ளதே?

(Division of Labour அல்ல; Division of Labourersதொழிலையல்ல - தொழிலா ளர்களை பிரிக்கிறது இந்து மதவர்ணம் என்றுதான் அண்ணல் அம்பேத்கர் சொல் லுகிறார் - அதனைத் தலைகீழாகப் புரட்டு வது ஏன்?)

ப: மகாத்மா காந்தியும், காஞ்சி பெரிய வரும் வர்ணத்தைப் பற்றி ஒரே மாதிரி கருத்து கூறுகிறார்கள். - சோவும், திலகரும் வேறு மாதிரி கருத்து கூறுகிறார்கள். - "ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி'' ('உண்மை ஒன்றே. அதை விஷய மறிந்தவர்கள் பலவிதமாகப் பார்க்கிறார்கள்) என்று கூறுகிறது ரிக் வேதம். அதுபோலத்தான் காஞ்சிப் பெரியவரும், காந்தியும்; திலகரும் சோ-வும் கூறுவது முரணாகத் தோன்றுகிறது. உலக விஷயங்களில் மாற்றுக் கருத்து, மாற்று நடத்தை எல்லாமே முரணாகவே தோன்றும். இதை சோ பலமுறை கூறியிருக் கிறார். உதாரணமாக, தந்தைக்குப் பணிந் தான் ராமன், அதனால் அவன் உயர்ந்தவன். தந்தையை மீறினான் பிரஹலாதன், அதனால் அவன் உயர்ந்தவன். கணவனை வணங்கினாள் சீதை, அதனால் அவள் உயர்ந்தவள்.

கணவனை மீறினாள் மீரா, அதனால் அவள் உயர்ந்தவள். அண் ணனை மீறினான் விபீஷணன், அதனால் அவன் உயர்ந்தவன். அண்ணனுக்குப் பணிந்தான் கும்பகர்ணன், அதனால் அவன் உயர்ந்தவன். எனவே எது சரி, எது தவறு என்பது தர்ம சங்கடமான விஷயம். தர்மம் என்றாலே தர்மசங்கடம்தான். இந்த வேறு பாடுகளைப் புரிந்து கொள்ள, மற்றவர் களின் கருத்துக்களை ஏற்கா விட்டாலும், சகித்துக்கொள்ள வேண்டும். அதனால் தான் ஹிந்து மதத்துக்கு சகிப்புத்தன்மை இயற்கையாக உருவாகியது. ஒரு கருத்து மட்டுமே சரி என்று கூறும் சித்தாந்தங்கள் காரணமாக உலகில் இரத்த ஆறுதான் ஓடியது. எனவே, இரு முரணான கருத்துக் களை ஏற்கும் நமது சித்தாந்தம், நமக்கு சகிப்புத்தன்மையை வளர்த்தது. - இதுதான் துக்ளக்கின் குருமூர்த்தியாரின் பதில்.

ஹிந்து மதத்தில் வர்ணம் உண்டு - ஜாதி இல்லை என்று சொல்லிவிட்டாராம் சோ - இதை விடப் பித்தலாட்டம் ஒன்று இருக்க முடியாது. சோ கூட்டமும் குருமூர்த்தி கும்பலும் அய்யர், அய்யங்கார்கள் பற்றிக் கேள்வி பட்டதில்லையா? தந்தை பெரியா ராலும், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கத்தாலும் இவர்கள் பெயருக்குப் பின்னால் ஜாதி வாலை வெட்டிக் கொண் டாலும் இவாளின் தோப்பனார் பெயர்களில் ஒட்டியிருந்த அய்யர் வா(ல்)ள் என்பது ஜனாதிபதி வழங்கிய பத்மசிறீ பட்டமா?

காந்தியார் தீண்டாமை ஒழிக என்று சொன்னாரே தவிர, வர்ணம் - ஜாதிகளில் நம்பிக்கை உள்ளவர் தானே! காந்தியாரையும், சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியையும் ஒப் பிட்டு எழுதுகிறதே துக்ளக் - இது எவ்வள வுப் பெரிய மோசடி - பாஷாணத்தில் மூழ்கி எழுந்த போக்கிரித்தனம்.

இதே சங்கராச்சாரியாரை பாலக்கோட் டில் காந்தியார் சந்திக்கவில்லையா? (15.10.1927) மாட்டுக் கொட்டகையில் வைத்து காந்தியாரை அந்த சங்கராச்சரியார் சந்திக்க வில்லையா? தீண்டாமை ஒழிப்புக்கு சங்கராச்சாரியார் ஒத்துழைக்க காந்தியார் வேண்டுகோள் வைத்தபோது, இவாளின் யோகக்குருவான சங்கராச்சாரியார் அதனை நிராகரிக்கவில்லையா? (ஆதாரம்: தமிழ் நாட்டில் காந்தி: பக்கம் 575-576)

இந்த நிலையில் காந்தியாரையும், சங்க ராச்சாரியாரையும் ஒப்பிடுவது யாரை ஏமாற்றிட?

ஹிந்துமதத்தில் வர்ணம் உண்டு, ஜாதி யில்லை என்று சோ கூறிவிட்டாராம். குருமூர்த்திகளின் - ஆர்.எஸ்.எஸ்.காரர்க ளின் குருநாதரான கோல்வாக்கர் ஜாதிபற்றி என்ன கூறுகிறார்?

"நீண்டகாலமாக ஜாதி அமைப்பு முறையை சிலர் எதிர்த்து வருகிறார்கள். பழங்காலத்திலேயே ஜாதி அமைப்பு முறை இருந்து வந்திருக்கிறது. நாம் அதன் உச்சியில் இருந்தோம். ஆனால் ஜாதி முன்னேற்றத்திற்கு முட்டுக்கட் டையாக இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது; உண்மையில் சொல்லப்போனால் இந்த ஜாதி அமைப்பு என்பது சமூகத்தில் ஒற்றுமை யைக் காப்பதற்கே உதவி செய்திருக்கிறது என்ற தமது “BUNCH OF THOUGHTS” என்ற நூலில் கோல்வாக்கர் எழுதிய தற்கு என்ன பதில்?

சோ சொல்லுவது சரியா - கோல்வாக்கர் சொல்லுவது சரியா? அறிவு நாணயத்தோடு பதில் சொல்லட்டும் குருமூர்த்தி அய்யர் வாள்.

குணத்தின் அடிப்படையில் தான் வருணம் என்று சாதிக்க முற்படும் சோ என்ன சொல்லுகிறார்?

"இந்த நிலையிலே ஒரு விஷயத்தை தெளிவாக்கி விடுவது நல்லது. இந்த நான்கு வர்ணங்கள் பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டவை அல்ல. குணம், வாழும் வகை ஆகியவற்றின் அடிப்படை யில் மனிதர்கள் இப்படி வகைப்படுத்தப் பட்டனர். இது பற்றி 'எங்கே பிராமணன்' தொடரில் விளக்கமாக எழுதியிருக்கிறேன். இந்தக் கட்டுரையிலும் ஓரளவுக்கு இவ் விஷயத்தைப் பார்க்க நேரிடலாம். குணம், வாழும் வகை ஆகியவற்றின் அடிப்படை யில் ஏற்படுத்தப்பட்ட இந்த நான்கு வகைகள், காலப் போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்து, பிறப்பின் அடிப்படையில் ஏற் படுகிற பிரிவுகளாக உருவெடுத்து விட்டன'' என்று சாதிக்கிறார். சோவின் கட்டுரையில் பிற்பகுதி முழுவதுமே இதனை மய்யமாக வைத்தே புனையப்பட்டுள்ளன. இதற்குப் பதிலடி  கொடுத்து விட்டாலே அந்த எல்லா வற்றிற்குமே போதுமானதாகிடும்.

வர்ணம் என்பது பிறப்பின் அடிப்படை யிலானது அல்ல என்பது சோலின் வாதம்.

இது அடிப்படையிலேயே தவறானது என்பது இந்து மதத்தின் அடிப்படை ஆதா ரங்களைக் கொண்டே தகர்த்து விடலாம். 'சோ' குறிப்பிடும் வேதங்களுள் 'யஜுர் வேதம் ஒன்று; அதன் அத்தியாயம் 31 சுலோகம் 11 என்ன கூறுகிறது? ''ப்ராஹ்ம ணோஸ்ய முகமாஸீத் பாஹு ராஜன்ய: க்ருத: 1 ஊரூத்தஸ்ய யத்வைஸ்ய: பத்ப்யாம் சூத்ரோ அஜாயத 11

(கடவுளின் முகத்தினின்றும் பிராமணன் பிறந்தான், தோள்களினின்றும் க்ஷத்திரியன் பிறந்தான், துடைகளினின்று வைசியன் பிறந்தான், பாதங்களினின்று சூத்திரன் பிறந்தான்.) அதர்வண வேதம் என்ன கூறுகிறது? ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத் பாஹு ராஜன்யோபவத் 1

மத்யம் ததஸ்ய யத் வைஸ்ய: பத்ப்யாம் சூத்ரோ அஜாயத 11

(அத்தியாயம் 19 சுலோகம் 6) யஜுர் வேதத்தில் கூறப்பட்ட அதே பொருள்தான் இதற்கும்.

மனுர்வையத் கிஞ்சிதவத் தத் பேஷஜம் - இதன் பொருள் மனு எதைச் சொன்னாரோ அது மருந்து என்பதாகும். பதினெட்டு ஸ்மிருதிகள்; மனுஸ் மிருதிக்கு விரோதமாய் மற்ற பதினேழு ஸ்மிருதிகளும் ஒரே வாக்காய்ச் சொல்லி யிருந்தாலும் அது ஒப்புக் கொள்ளத்தக்க தன்று என்று மனுதர்ம சாத்திரம் பீடிகை கூறுகிறது. அவ்வளவுப் பெரிய அந்தஸ்து மனுதர்ம சாத்திரத்துக்கு!

அந்த மனுவானப்பட்டவரும் என்ன கூறுகிறார்?

அந்தப் பிரம்மாவானவர் இந்த வுலகத் தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், துடை, பாதம் இவைகளினின்று முண்டான பிராமண ஷத்திரிய வைசிய சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கு மறுமைக்கு முபயோகமான கருமங்களைத் தனித்தனி யாகப் பகுத்தார் (அத்தியாயம் ஒன்று சுலோகம் 87) வேதங்களும், மனுதர்ம சாத்திரமும் இதன் மூலம் எதை உறுதிப்படுத்துகின்றன?

பிரம்மா என்ற கடவுள் படைப்பிலேயே பிறப்பின் அடிப்படையிலேயே தன் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பிராம ணன், சத்திரியன், வைசியன், சூத்திரர்க ளைப் படைப் பித்து இருக்கிறான் என்பது திட்டவட்டமாகத் தெளிவாக்கப் பட்டுள் ளதா இல்லையா?

படைக்கப்படும் போதே இந்தப் பிரிவு களை பிறப்பின் அடிப்படையில் பிரம்மா படைத்து விட்டார் என்று இந்து மத வேதங்களும், ஸ்மிருதியும் கூறிவிட்ட நிலையில், பிறப்பின் அடிப்படையில் இவை உண்டாக்கப்படவில்லை என்று சோ கூறுவதை எண்ணிப் பார்க்க வேண்டும். வேதங்களையும் ஸ்மிருதிகளையும் மறுக்கும் மகா புரட்சி யாளராக சோ மாறி விட்டாரா? அல்ல - அல்ல! வேதங்கள், ஸ்மிருதிகள் கூறியவற்றை ஏற்றுக் கொண்டு அவற்றின் அடிப்படையில் விவாதிக்க முயற்சித்தால் அவாளின் இந்துத்துவா கபாலம் கழன்று விடும் என்பது அவர்களுக்கு மிக நன்றா கவே தெரியும். கடவுளேயானாலும், காந்தி யாரே ஆனாலும் அவர்களைப் பொருத்த வரை அவர்கள் காரியத்துக்கு எந்த அள வுக்குப் பயன்படும் என்பதைப் பொறுத் ததேதான்.

சோ வியாக்கியானம் செய்வது போலவே வேறு சிலரும் இந்தக் காரியத்தில் ஈடுபடு கிறார்கள். இதற்கு ஆப்பு அடிக்கும் வகை யில் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியார் விளக்க மாகவே கூறி இருக்கிறார். இந்து மத சமாச்சாரங்களுக்கு வியாக் கியானம் கூற சோவைவிட சங்கராச்சாரி யார் தான் தகுதியானவர் என்பதை சோவே மறுக்க முடியாதே!

காஞ்சி சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரல்' - முதல் பாகம் (பக்கம் 1001-1003) என்ன கூறுகிறது?.

"ஜாதி வித்யாஸமே இல்லை என்று பகவான் சொல்லவில்லை: ஆனால், பிறப் பின்படி இன்றி, குணத்தின்படி கர்மாவைப் பிரித்துத் தரும் சதுர் வர்ணத்தைத் தாம் ஸ்ருஷ்டித்ததாகத் தான் சொல்கிறார். 'சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச' என்றே சொல்கிறார் என்கிறார்கள்.

சரி, ஆனால், எத்தனை வயசுக்கு மேல் இப்படிக் குணத்தை அறிந்து அதை அநு சரித்து அதற்கான வித்தையைப் பயின்று அதற்கப்புறம் தொழிலை அப்பியாஸம் பண்ணுவது? முக்கியமாக பிராம்மணனின் தொழிலை எடுத்துக் கொண்டால் இவன் ஏழெட்டு வயசுக்குள் குருகுலத்தில் சேர்ந் தால்தானே அப்புறம் பன்னிரெண்டு வரு ஷங்களில் தன் தொழிலுக்கானவற்றைப் படித்து விட்டுப் பிறகு அவற்றில்தானே அநுஷ்டானம் பண்ண வேண்டியதைப் பண்ணவும், பிறருக்குப் போதிக்க வேண் டியதைப் போதிக்கவும் முடியும்? குணம் ஆன பிறகு (ஓர் அமைப்பில் உருவான பிறகு) தான் தொழிலை நிர்ணயிப்பது என்றால், கற்க வேண்டிய இளவயசு முழுதும் பல பேர் தொழிலைத் தெரிந்து கொள்ளாமல் வீணாவதாகவும், அப்புறம் சோம்பேறியாக ஒரு தொழிலுக்கும் போகப் பிடிக்காமல் இருப்பதாகவுமே ஆகும். அப்படியே கற்றுக் கொண்டு தொழிலுக்குப் போகும்போதும் சமூகத்துக்கு அவனால் கிடைக்கிற பிரயோஜனத்தில் வெகுவான - காலம் நஷ்டமாயிருக்கும். க்ஷணகாலம்கூட வீணாக்காமல் ஒழுங்காக, விதிப்படி கர்மா பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று திருப்பி திருப்பிச் சொல்லும் பகவான் இதை ஆதரித்துப்  பேசியிருப்பாரா?

அப்படியானால் அவர் 'தியரி'யில் (கொள்கையளவில்) குணப்படி தொழில் என்றாலும், 'ப்ராக்டிஸில்' (நடைமுறையில்) பிறப்பால் தொழில் என்பதைத்தான் ஆத ரித்தாரா? என்றால், பாலிடீஷியன்கள் (அரசியல்வாதிகள்) போல பகவான் கொள்கை ஒன்று, காரியம் இன்னொன்று என்று இருப்பவர் அல்ல.

சரி அவருடைய வாழ்க்கையில் நாம் என்ன பார்க்கிறோம்? - "நான் யுத்தம் பண்ண மாட்டேன்; பந்துமித்தரர்களின் ரத்தத்தைச் சிந்தி சாம்ராஜ்யாபிஷேகம் பண்ணிக்கொள்வதைவிட, ஆண்டிப் பரதே சியாக பிக்ஷை எடுத்துச் சாப்பிடுவது எத்த னையோ மேல், என்று சொல்லிக்கொண்டு தேர்த் தட்டில் உட்கார்ந்து ஸ்த்யாக் ரஹம் பண்ணிவிட்ட அர்ஜூனனிடம் அவர் என்ன சொன்னார்?. "நீ க்ஷத்ரிய ஜாதி யில் பிறந்தவன். யுத்தம் பண்ணுவதுதான் உன் ஸ்வதர்மம். எடு வில்லை - போடு சண் டையை" என்றுதான் அவனைவிடப் பிடி வாதம் பிடித்து அவனை யுத்தம் பண்ண வைத்தார்.

அப்படியானால் தர்ம புத்திரரின் விஷயம் என்ன? சண்டையே கூடாது. சமாதானமாகவே போய்விட வேண்டும் என்று தானே அவர் ஆரம்ப காலத்தி லிருந்து இருந்து வந்திருக்கிறார்?. அவரை யும் பரமாத்மா க்ஷத்ரிய தர்மத்தைத்தான் அனுஷ்டிக்கப் பண்ணினார் என்றால், அவர் "ஸ்வதர்மம் என்கிறபோது அவரவர் ஜாதி தர்மத்தைத்தான் சொன்னார் என்று தான் அர்த்தமாகும். பிராமணராகப் பிறந்தும் க்ஷத்ரிய தர்மப்படி யுத்தத்தில் இறங்கிய த்ரோணாச்சாரியார் மாதிரியானவர்கள் பெரியவர்கள் என்பதால் பகவானாக அவர்களை நிந்திக்க மாட்டாராயினும், பீமஸேனன் போன்றவர்கள் இவர்களை ஜாதி தர்மம் விட்டதற்காகக் குத்திக் காட்டிப் பேசியபோதெல்லாம் பகவான் ஆக்ஷேபித் ததில்லை. அதனால் பிறப்பால் ஏற்படுகிற ஜாதி தர்மமே அவர் சொன்ன ஸ்வதர்மம் என்று உறுதியாகிறது. அப்படியானால், ஏன் குணகர்ம விபாகச: என்றார் என்றால்,

இந்த ஜாதி தர்மமே தான் உள்ளூர அவரவரின் குணமாகவும் இருக்குமாதலால் குணத்தால் சதுர்வர்ணம் பிரிவதாக பகவான் சொன்னதும், பிறப்பால் இப்படி ஜாதியாகப் பிரிவதும் ஒன்றே தான்; ஒன்றுக்கொன்று முரணானதல்ல. தியரி, ப்ராக்டீஸ் என்று - வெவ்வேறு விஷயங் களைச் சொல்கிற தோஷம் பரமாத்மாவுக்கு ஏற்படவில்லை . என்று சங்கராச்சாரியார் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

இதற்கு என்ன பதில் சொல்கிறார் திரு வாளர் சோ? குணத்தின் அடிப்படையில் வர்ணம் - அதற்குரிய தொழில்கள் என்பது சாத்தியமில்லை என்று பாஷ்யம் கூறி விட்டாரே - இதற்குமேல் சோவோ, குரு மூர்த்திகளோ முண்ட முடியுமா?

ஜாதி வேறு வர்ணம் வேறு என்று பிரிக்க முயலுவதற்கும் இதில் பதில் இருக்கிறதே - இதற்கு என்ன பதில்?

ஆகா - இந்த முரண்பாடுகளை எவ்வளவு சாமார்த்தியமாக சப்பைக்கட்டுக் கட்டி பம்மாத்து வேலை பண்ணுகிறார் குருமூர்த்தி அய்யர்வாள்!

தர்மம் என்றாலே தர்ம சங்கடம் தானாம், இந்த வேறுபாடுகளை புரிந்து கொள்ள மற்றவர்களின் கருத்துக்களை ஏற்காவிட்டாலும் சகித்துக் கொள்ள வேண்டுமாம்!

திருவாளர் குருமூர்த்தி அய்யர் அவர் களே! வேறு பாடு என்பது வேறு, முரண் பாடு என்பது வேறு, இங்கே சோ கூறுவது - சங்காராச்சாரியார் கூறுவது முரண்பாடே தவிர வேறுபாடல்ல. இதனை நாணயமாக ஒப்புக்கொள்ளும் ஒழுக்கம் குருமூர்த்திக்கு இல்லாததை நாம் புரிந்து கொள்ள முடியும். அவாளிடம் முரண்பாடு ஏற்பட்டால் அதைச் சகித்துக் கொள்ள வேண்டு மாம், எப்படி?

காரணம் சோவும், சங்கராச்சாரியாரும் அவாள் அல்லவா? இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் பற்றை யும் தாண்டிய வெறித்தனம் என்பது.

ஒரு பார்ப்பான் இன்னொரு பார்ப் பானை விட்டுக் கொடுக்க மாட்டான் என் கிறபோது குருமூர்த்தி அய்யர் மட்டும் எப்படி விட்டுக் கொடுப்பார் என்று எதிர்ப் பார்க்க முடியும்? இதைத்தான் நம்மின மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், குருமூர்த்திகள் என்ன தான் குட்டிக் கரணம் போட்டாலும் பெரியார் மண் அவர்களின் முகத்திரையை கிழித்தே தீரும் என்பது நினைவில் இருக்கட்டும்!

- விடுதலை ஞாயிறு மலர்,5.1.19

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

வருணங்களின் அமைப்பு முறை


தந்தை பெரியார்
பஞ்சமர் - பெயர்ச்சொல்!
அருகிவரும் வழக்கு: நான்கு வகையாகப் பிரிக்கப்பட்ட (இந்துக்களில்) பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியோர் அல்லாத அய்ந்தாவது ஜாதியினர்.
சூத்திரர்கள் தாழ்ந்தவர்களா? பஞ்சமர்கள் தாழ்ந்த வர்களா?
தீண்டாமை என்பது என்ன? தீண்டாமை காங்கிரஸில் ஒரு திட்டமாய் வருவானேன்? என இவ்விரண்டு விஷயங்களையும் நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.
தேசத்தில் நமது இந்து மதத்தில் மாத்திரம்தான் தீண்டாமை அனுஷ்டிப்பதாக நாம் காண்கிறோம். மனிதனுக்கு மனிதன் பார்ப்பது, பேசுவது, பக்கத்தில் வருவது, தொடுவது முதலானவைகள் தீண்டாமையின் தத்துவங்களாக விளங்குகின்றன. இவற்றிற்கு ஆதாரம் என்னவென்றால் வேதமென்று சொல்லுவதும், சிலர் சாஸ்திரம் என்று சொல்லுவதும், சிலர் ஸ்மிருதி என்று சொல்லுவதும், சிலர் புராணங்கள் என்று சொல்லுவதும், சிலர் பழக்க வழக்கங்கள் என்று சொல்லுவதும் இப்படிப் பலவிதமாக ஆதாரங்கள் கற்பிக்கப்படுகின்றன.
பழக்கத்தில் தீண்டாமையானது வருணாச்சிரம தர்மத்தில் பட்டதென்றும், வரிசைக்கிரமத்தில் ஒருவருக் கொருவர் தாழ்ந்தவரென்றும், வருணாசிரமமானது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என அய்ந்து வகை ஜாதியாய் பிரிக்கப்பட்டிருக்கின்றன வென்றும், இவற்றிற்கு ஆதாரம் மனு ஸ்மிருதி என்றும் சொல்லப்படுகின்றது. தமிழர்களாகிய நமக்கு இவை எதுவும் சார்ந்ததாகத் தோன்றவில்லை. ஏனெனில் வருணாச்சிரமம் என்பதும், ஜாதி என்பதும், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதும் மனுதர்ம சாஸ்திரமே, மனுஸ்மிருதியே என்பதும் ஆகிய வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளல்ல. தமிழ் நாட்டி னருக்கோ, தமிழருக்கோ இவ்வன்னியபாஷைப் பெயர்கள் பொருந்துவதற்கே நியாயமில்லை. தவிர இந்த ஜாதிகளுக்கே ஏற்பட்டிருக்கிற குணமும் தமிழர்க்குப் பொருந்தியது என்று சொல்லுவதற்கும் இடமில்லை. உதாரணமாக, நம்மில் பெரும்பான்மையோர் சூத்திரர்கள் என்று அழைக்கப் படுகின்றனர். நாமும் நம்மை அனேகமாய் சூத்திரர்கள் என்றே சொல்லிக் கொள்ளுகிறோமென்பதை பற்றி இப்பெழுது ஆராயத் தேவையில்லை.
சூத்திரர் என்பது என்ன ? நாம் சூத்திரர்களா என்பதைக் கவனிப்போம். சூத்திரன் என்றால் மனுஸ்மிருதியில் விலைக்கு வாங்கப்பட்ட அடிமை, யுத்தத்தில் ஜெயித்து அடிமையாக்கப்பட்டவன், அடிமைத் தொழிலுக்காக ஒருவனால் மற்றொருவனுக்குக் கொடுக்கப்பட்டவன், வைப்பாட்டியின் மகன் முதலிய ஏழுவித மக்களுக்கு சூத்திரர்கள் என மனுதர்ம சாஸ்திரத்தில் பெயரிடப்பட்டி ருக்கிறது. அப்பெயரை நாம் ஏற்றுக்கொண்டு நம்மை நாமே சூத்திரர்கள் என்றுதான் சொல்லிக் கொள்ளுகிறோம்.
அடுத்தாற்போல் பஞ்சமர்கள் எனச் சொல்லப்படுவது யாரை என்பதே நமக்குச் சரியாய் ஆதாரத்தின் மூலமாய் தெரிந்து கொள்ளக்கூட முடியவில்லை. வழக்கில் சக்கிலி, பறையன், வண்ணான், நாவிதன், பள்ளன், குடும்பன், சாம்பன், வள்ளுவன் சிற்சில இடங்களில் தீயர், ஈழவர், நாடாரையுமே சேர்த்து மேலே சொல்லப்பட்ட பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர ஆகிய நான்கு வருணத்தாரும் மேற்கண்ட முறைப்படி கொடுமையாக நடத்தப்படுவதைப் பார்க்கிறோம். இவர்களையே பஞ்சமர்கள் என்று சொல்லுவதையும் கேட்கிறோம். அனேகமாய், நாம் கூட அவர்களை அதே மாதிரியாக நடத்துகிறோம். அப்படி நடத்தினபோதிலும் சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம் தாழ்ந்தவர்களா ? பஞ்சமர் என்று சொல்லப்படுகின்ற அவர்கள் தாழ்ந்தவர்களா? என்பதை யோசித்துப் பார்த்தால் பஞ்சமர்களைவிட சூத்திரர்களே தாழ்ந்தவர்கள் என்பது தெரியவரும். மேலே கூறப்பட்டபடி சூத்திரர் என்பதற்கு ஆதாரப்படி தாசிமகன் என்பதுதான் பொருள். தத்துவமாய்ப் பார்த்தால் பறையன், சக்கிலியை விட தாசிமகன் தாழ்ந்தவன் என்பதுதான் எனது தாத்பரியம். என்னை ஒருவன் சூத்திரன் என்று அழைப்பதைப் பார்க்கிலும் பஞ்சமன் என்று அழைப்பதில்தான் நான் சந்தோஷப்படுவேன்.
இவ்விதக் கெடுதியான பெயர் நமக்கு இருப்பதைப் பற்றி நாம் கொஞ்சமும் கவனியாமல் நிரபராதிகளாய் இருக்கும் நமது சகோதரர்களைக் காண, அருகில் வர, தொட, பேச, பார்க்கமுடியாதபடி கொடுமையாய் நடத்தி ஊருக்கு வெளியில் குடியிருக்கும்படியும், ஸ்நானம் செய்வதற்கே, வேஷ்டி துவைத்துக் கொள்ளுவதற்கே, வீதியில் நடப்பதற்கே, சில இடங்களில் தாகத்திற்குக்கூட தண்ணீர் இல்லாமல் அவஸ்தைப்படும்படி நடத்துகிறோம். மேற்கண்ட கொடுமையான குணங்கள் அவர்களோடு மாத்திரம் நில்லாமல் அனேக சமயங்களில் நாமும் நமக்கு மேல் வருணத்தார் என்று சொல்லுகின்றவர்களும்கூட அனுபவிப்பதைப் பார்க்கிறோம். உதாரணமாக, சூத்திரர்களை அதற்கு மேல்பட்ட மூன்று வருணத்தார்களும் தொடுவதில்லை என்பதையும், இவர்கள் முன்னிலையில் அவர்கள் ஆகாரம் எடுத்துக்கொள்வதில்லை என்பதையும், சிற்சில சமயங்களில் இவர்களேடு பேசுவதும் பாவம் என்பதையும் அனுபவிக்கிறோம். அதே மாதிரி வைசியர் களிடத்திலும் சத்திரியர்கள், பிராமணர்கள் நடந்து கொள்ளுவதையும், சத்திரியர்களிடத்திலும் பிராமணர் நடந்து கொள்ளுவதையும், பிராமணர்களுக்குள்ளேயும் ஒருவருக்கொருவர் தாழ்மையாக நடத்தப்படுவதையும் பார்க்கிறோம். உதாரணமாக, திருச்செந்தூர், மலையாளம் முதலிய இடங்களில் உள்ள பிராமணர்கள் தாங்கள் உயர்ந்தவர்களென்றும், மற்ற பிராமணர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் கருதி, தங்களுக்கு அனுமதியுள்ள இடத்தில் மற்றொருவர் பிரவேசிப்பது தோஷமெனக் கருதுகிறார்கள்.
நம் நாட்டிலேயும் முறைப்படி நடக்கிற பிராமணர்கள் என்று சொல்லுவோர்கள் சத்திரியனிடத்திலேயோ, வைசியனிடத்திலேயோ, சூத்திரனிடத்திலேயோ பேசுகின்ற காலத்தில், ஜலமலபாதிக்குப் பேகும்போது எப்படி பூணுலைக் காதில் சுற்றிக்கெண்டு போகிறார்களோ அதுபோல பெரிய தீட்டென நினைத்துப் பூணூலைக் காதில் சுற்றிக்கொண்டு பேசுகிறார்கள். இப்படி நமது நாட்டில் தீண்டாமை, பார்க்காமை, பேசாமை, கிட்ட வராமை ஆகிய இவை ஒருவரையாவது விட்டவை அல்ல. ஒருவர் தனக்குக்கீழ் இருப்பவரைத் தீண்டாதவர், பார்க்காதவர் என்று சொல்லுவதும், அதே நபர் தனக்குமேல் உள்ளவருக்கு தான் தீண்டாதவராகவும், பார்க்கக்கூடாதவராகவும் இருப்பது வழக்கமாயிருப்பது மாத்திரம் அல்லாமல், இவர்கள் இத்தனை பேரும் சேர்ந்து நம்மை ஆளுகிற ஜாதியாயிருக்கிற அய்ரோப்பியருக்குத் தீண்டாதவராகவும், இன்னும் தாழ்மையாகவும் இருந்து வருவதையும் நாம் காண்கிறோம். இந்த முறையில் தீண்டாமை என்பதை ஒழிப்பது என்று சொல்வது கேவலம். பஞ்சமர்களை மாத்திரம் முன்னேற்ற வேண்டுமென்பதல்லாமல், அவர் களுக்கு இருக்கும் கொடுமைகளை மாத்திரம் விலக்க வேண்டுமென்பதல்லாமல் நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் இழிவையும், கொடுமையையும் நீக்கவேண்டும் என்பதுதான் தீண்டாமையின் தத்துவம்.
இதைச் சொல்லுகிறபோது ஆ! தீண்டாமை விலக்கா? பஞ்சமரையா தெருவில் விடுவது? அவர்களையா தொடுவது? அவர்களையா பார்ப்பதென்று ஆச்சரியப்பட்டு விடுகிறார்கள். நம்மில் ஒரு கூட்டத்தாராகிய சூத்திரர் என்று சொல்லிக்கொள்ளும் நாம், நம்மில் ஒருவன் சூத்திரன் என்று அழைக்கும் போது ஆ ! நம்மையா, சர் பட்டம் பெற்ற நம்மையா, ஜாமீன்தாராகிய நம்மையா, லட்சாதிகாரியாகிய நம்மையா, சத்திரம் சாவடி கட்டிய நம்மையா, தூய வேளாள னாகிய நம்மையா, பரிசுத்தனாகிய நம்மையா, உத்தமனான நம்மையா, மடாதிபதியான நம்மையா இன்னும் எத் தனையோ உயர்குணங்களும், எவ்வித இழிவுமற்ற நம்மையா தேவடியாள் மகன், வைப்பாட்டி மகன், அடிமையென்று அர்த்தம் கொண்ட சூத்திரன் என்று சொல்லுவதென ஒருவரும் வெட்கப்படுவதேயில்லை. மலையாளம் போன்ற சிற்சில இடங்களில் நாயர்கள் என்று சொல்லுவோர் தங்களைச் சூத்திரர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகின்றனர்.
இந்த இழிவு, சூத்திரர்கள் என்பவரை எப்படிக் கட்டிக் கொண்டது என்பதைப் பார்ப்போமாகில் தங்களுக்குக் கீழ் ஒருவர் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களைத் தாழ்மைப்படுத்திய பாவமானது இவர்களைத் தேவடியாள் மகன் என்று இன்னொருவர் கூப்பிடும்படியாகக் கடவுள் வைத்துவிட்டார். நமக்கும் அதன் பலனாய் நமக்குக் கீழ் ஒருவர் இருந்தால் போதுமென்று நினைத்து மகிழ்ந்து கொண்டு நம்மை ஒருவன் வைப்பாட்டி மகனெனக் கூப்பிடுகிறானே, கூப்பிடுவது மாத்திரம் நில்லாது கல்லும் காவேரியும் உள்ளவரை அழியாமல் எழுதி வைத்து விட் டானே, அஃதோடு நில்லாமல் நம்மை நாமே வைப்பாட்டி மகனென்று சொல்லிக் கொள்ளும் நிலைமைக்கு வந்துவிட்டதே என்றுகூட கவலைப்படுவதேயில்லை. இது எதைப் போலிருக்கிற தென்றால் அரசியல் வாழ்வில் இந்துக்களுக்கு இந்துக்கள் என்று சொல்லுவதற்கில்லாமல் நம்முடைய அரசாங்கத்தார் முகமதியரல்லாதார் என்று அழைப்பது போலவும், நாமும் இந்துக்களாகவும், இந்தியாவின் புராதனக்காரராகவும் இருக்கிற நம்மை அல்லாதார் என்கிற அணியைக் கூட்டி மகமதியர் அல்லாதார் என்று ஏன் அழைக்க வேண்டும் என்கிற கவலை கொஞ்சமும் இல்லாமல், எப்படியானாலும் உத்தியோகமோ, பதவியோ கிடைத்தால் போதுமென்கிற இழிவான ஆசையில் பட்டு மகமதியரல்லாதார் பிரிவுக்கு யான் சட்டசபை அங்கத்தினனாய் நிற்கிறேன் என்று கவுரவமாய் நம்முடைய படித்தவர்கள், பெரியோர்கள், பணக்காரர்கள், சாஸ்திரிகள், ஆச்சாரியார்கள் என்று சொல்லக்கூடிய கூட்டத்தார் நடந்து கொள்வதுபோல் இருக்கிறது.
ஆகவே, நம்மில் யாரும் நமக்கு இவ்வித இழிவுப் பெயர்கள் இருப்பதை லட்சியம் செய்யாமல் சுயநலமே பிரதானமாகக் கருதி அலட்சியமாயிருக்கிறோம். யாராவது இவற்றைக் கவனித்து இவ்விதக் கொடுமையும், இழிவும் நமக்கு ஒழிய வேண்டுமென்று முயற்சித்தால் அது சுயநலக்காரரால் துவேஷமென்று சொல்லப்பட்டுவிடுகிறது.
பறையன், சக்கிலி முதலியோரை நாம் ஏன் தொடக்கூடாது, பார்க்கக்கூடாது என்கிறோம் என்பதைச் சற்று கவனித்தால் அவன் பார்வைக்கு அசிங்கமாயிருக் கிறான்; அழுக்குடை தரிக்கிறான்; அவன்மீது துர்நாற்றம் வீசுகிறது; அவன் ஆகாரத்திற்கு மாட்டு மாமிசம் சாப் பிடுகிறான்; மாடு அறுக்கிறான்; மற்றும் சிலர் கள் உற்பத்தி செய்கிறார்கள் என்கிறதான குற்றங்கள் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. இவற்றை நாம் உண்மை என்றே வைத்துக்கொள்வோம். இவர்கள் பார்வைக்கு அசிங்க மாகவும், அழுக்கான துணிகளுடனும், துர்வாடையுற்றும் ஏன் இருக்கிறார்கள் என்றும், இதற்கு யார் பொறுப்பாளி என்றும் யோசியுங்கள். அவர்களை நாம் தாகத்திற்கோ, தண்ணீர் குடிப்பதற்கில்லாமல் வைத்திருக்கும்போது குளிக்கவோ, வேஷ்டி துவைக்கவோ வழியெங்கே? நாம் உபயோகிக்கும் குளமோ, குட்டையோ, கிணறோ இவர்கள் தொடவோ, கிட்ட வரவோ கூடாதபடி கொடுமை செய் கிறோம். அதனால் அவர்கள் அப்படியிருக்கிறார் களேயல்லாமல் அது அவர்கள் பிறவிக்குணமாகுமா ? நம்மை யாராவது குளிக்க விடாமலும், வேஷ்டி துவைக்க விடாமலும் செய்துவிட்டால் நம்மீது துர்நாற்றம் வீசாதா? நம் துணி அழுக்காகாதா? நாம் பார்வைக்கு அசிங்கமாய் காணப்பட மாட்டோமா? அவர்களுக்குக் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் நாம் சவுகரியம் செய்து கொடுத்து விட்டால் பின்னும் இவ்விதக் குற்றமிருக்குமா? ஆதலால் நாம்தான் அவர்களின் இந்நிலைக்குக் காரணமாயிருக் கிறோம்.
மாடு தின்பது முதலியவைகளால் எப்படித் தீண்டாத வனாய் விடுவான்? அய்ரோப்பியர், மகமதியர் முதலானோர் தின்பதில்லையா? அவர்களை நாம் தீண்டாதார், பார்க் காதார் என்று சொல்லக்கூடுமா? அப்படியே சொல்வ தானாலும் மாடு தின்பது என்ன ஆடு, கோழி தின்பதை விட அவ்வளவு பாவம்? ஆடு, கோழி, பன்றி தின்பவர்களை நாம் பஞ்சமரைப்போல் நினைப்பதில்லை. கோழியும், பன்றியும் தின்னாத வஸ்துவையா மாடு தின்கிறது? செத்த மாட்டைத் தின்பது உயிருள்ள ஜெந்துவை உயிருடன் வதைத்து கொலை செய்து சாப்பிடுவதை விட உயிரற்ற செத்துப்போன பிராணியின் மாமிசத்தை  - மண்ணில் புதைப்பதை வயிற்றுக்கில்லாத கொடுமையால் சாப்பிடுவது எப்படி அதிக பாவமாகும்? மாடு அறுப்பது பாவமென்றால் ஆடு, கோழி அறுப்பதும் பாவம்தான். மனித பிணத்தையும் கூட வைத்திய சாலைகளில் அறுக்கிறார்கள். அவரை நாம் பஞ்சமரென்று சொல்லுகிறோமா?
கள் இறக்குவது குற்றமென்றும், அது பாவமென்றும் அதனால் அவர்களைத் தொடக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்றும் சொல்வது எவ்வளவு முட்டாள்தனமாகும். அந்தக் கள்ளைக் குடிப்பவனும், அதற்காக மரம் விடுபவனும், அந்த வியாபாரம் செய்பவனும், அதைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவனும் தொடக்கூடியவன், தெருவில் நடமாடக்கூடியவன் என்றால் அதை ஜீவனத்தின் காரணமாய் இறக்குவது மாத்திரம் எப்படிக் குற்றமாகும்? உற்பத்தி செய்வது குற்றமென்றால் சாராயம், கஞ்சா, அபின், பிராந்தி இவைகள் உற்பத்தி செய்கிறவர்கள் எப்படித் தொடக் கூடியவர்களாவார்கள் ? இதில் பணம் சம்பாதிக்கும் நமது அரசாங்கத்தை இன்னும் சம்பாதிக்க விட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த உத்தியோகத்திற்கு நாம் தொங்குகிறேம். இந்தப் பணத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கல்வியை நாம் கற்கிறோம்; இவ்வளவு செய்பவர்கள் யோக் கியர்கள்; தீண்டக் கூடியவர்கள்; பார்க்கக் கூடியவர்கள். ஆனால் மேல் சொன்னவர்கள் மாத்திரம் தீண்டவும், பார்க்கவும் கூடாதவர்கள் என்றால் இது என்ன கொடுமை? இந்த ஜனங்களுக்கு சுயராஜ்யம் எப்படி வரும்? கடவுள் ஒருவர் இருப்பது உண்மையானால் இப்படி கொடுமைப் படுத்தும் சமூகத்தை ஆதரிப்பாரா? இவர்களுக்கு விடு தலையை அளிப்பாரா? அல்லது இவர்களை அடியுடன் தொலைத்து அடிமைப்படுத்துவாரா? என்பதை நினையுங்கள்.
இந்தக் கொடுமையை நம்மிடம் வைத்துக்கெண்டு வெள்ளையர் கொடுமை என்றும், கென்யா, தென்னாப் பிரிக்காவில் வெள்ளையர் ஜாதி இறுமாப்பென்றும் நாம் பேசுவது எவ்வளவு முட்டாள்தனமும், பார்ப்பவர்க்குக் கேலியுமாகும் என்பதைக் கவனிக்க வேண்டும். நம் நாட்டில் பிறந்த நம் சகோதரரை நாம் பார்த்தால் பாவம், கிட்டவந்தால் பாவம், தொட்டால் பாவம் என்று சொல்லிக்கொண்டு அதற்கு ஆதாரம் காட்டவும், எழுதி வைத்துக் கொண்டி ருக்கும் அக்கிரமத்தை விடவா 1818 - வது வருஷத்து ஆக்ட்டும், ரௌலட் ஆக்ட்டும், ஆள்தூக்கிச் சட்டமும் 144, 107, 108 பிரிவுப் பிரயோகமும் அக்கிரமமானது என்பதைச் சற்று யோசியுங்கள். நம்மவரை நாமே செய்யும் கொடுமையைவிடவா அன்னியர் கொடுமை பெரிது? மதுரைக் கோவிலில் குடிகாரன், மாமிசம் சாப்பிடுகிறவன், குஷ்டரோகி முதலிய தொத்து வியாதியஸ்தர் முதலியவர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். அன்னிய மதஸ்தர்கள் சுற்றுப்பிரகாரம் கடந்து செல்லலாம். ஆனால் நமது சகோ தரர்களான நாடார்கள் எவ்வளவு பரிசுத்தமானவர்களும், தர்மிஷ்டர்களும், ஜீவகாருண்யமுடையவர்களும், படித்த வர்களுமாயிருந்தாலும் வாசப்படி மிதிக்கக்கூடாது, மிதித்தால் தெய்வத்தின் சக்தி குறைந்துபோகுமாம். இதற்கு ஆதாரமும் இருக்கிறதென்றால், ரவுலட் சட்டத்திற்கும், ஆள்தூக்கிச் சட்டத்திற்கும் உள்ள ஆதாரங்களை நாம் குற்றம் சொல்வானேன்? இவ்விதம் கொடுமைகள் செய்யும் ஜனசமூகத்திற்கு சத்தியம், தர்மம் என்று பேசிக்கொள்ள யோக்கியதை ஏது? உண்மையில் ஆதாரம் என்று சொல்லக்கூடிய மாதிரியாவது நாம் நடக்கிறோமா? தந்தை பெரியார் அவர்கள் காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து...
- குடிஅரசு - 7.6.1925, 21.6.1925, 28.6.1925 நூல்:- பெரியார் களஞ்சியம், குடிஅரசு தொகுதி -1
- விடுதலை நாளேடு, 9.12.18