வைதீக திருமண வைபங்களில் வேத மந்திரங்கள் ஓதப்படுகின்றன. இதில் மிக மிக கொச்சையான ஆபாசமான மந்திரங்களும் அந்தச் சடங்குகளின் போது ஓதப் படுவது வைதீகத்தை பின்பற்றும் நபர்களுக்கே தெரிவதில்லை.
கன்னிகை ஸ்நானம்,நுகத்தடி வைத்தல்,கூரை உடுத்துதல்,காப்பு,தாரை வார்த்தல்,மாங்கல்ய தாரணம்,பாணிக்ரஹணம்,ஸப்தபதி,ப்ரதாந ஹோமம்,அம்மி மிதித்தல்,லாஜ ஹோமம்,கும்பம்,அருந்ததி பார்த்தல்,கிருஹப் பிரவேசம்(மறுவீடு) இப்படி பல சடங்குகளைக் கொண்டதுதான் வைதீக முறையில் புரோகிதர் அல்லது ஆத்து வாத்தியாரைக் கொண்டு நடைபெறும் திருமணங்கள்.
இப்படியான திருமண சடங்குகளின் போது ரிக் வேதம் பத்தாம் மண்டலம் 85 ஆவது அநுவாகத்தில் உள்ள மந்திரங்கள் ஒதப்படுகின்றன.இந்த மந்திரங்களுக்கான விளக்கங்களை அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் இந்து மதம் எங்கே போகிறது எனும் நூலில் “ஆபாச திருமண மந்திரங்கள்” எனும் தலைப்பில் கட்டுரைகளாக விரிவாக எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையில் உள்ள சில பகுதிகளை கீழே தருகிறேன்;
`விஷ்ணுர் யோனி கர்ப்பயது...’ எனத் தொடங்கும் இந்த மந்த்ரத்தின் அர்த்தம்தான் என்ன?
பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. யோனி, மத்யமம், உபஸ்தம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது.(பெண்கள் சரியாக மதிக்காத போது இப்படிப்பட்ட தேவதைகள் வீட்டை விட்டு வெளியேறிவிடுவர் எனும் மநு தர்ம சாஸ்திர நூலின் ஸ்லோகம் ஒன்றைப் பிடித்துக் கொண்டு மநுவாதிகள் தொடர்ந்து தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் விவாதிக்கின்றனர், வைதீக நூல்களைப் படிப்போருக்கு விளங்கும் தேவர் தேவதைகளின் லட்சணம் என்னவென்று)
அதாவது, விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய தேவதைகள் இம்மூன்று பாகங்களிலும் உட்கார்ந்திருக்கிறார்கள்.
இவர்கள்தான்... ஆணும், பெண்ணும் தேக ஸம்பந்தம் உடலுறவுகொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்கிறார்கள்.
அதாவது... நாம் தேக ஸம்பந்தம் கொள்வதை கூட விஷ்ணு உள்ளிட்ட தேவதைகள் அருகில் இருந்து, இன்னும் சொல்லப்போனால் அந்த இடத்திலேயே இருந்து கவனிக்கிறார்கள்.
இவ்வாறு கவனிக்கும் தேவதைகள் விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய சக்திகள் அவளுக்கு கர்ப்பத்தை உண்டாக்க அருள்புரிய வேண்டும்... என்கிறது இந்த மந்த்ரம்.
நாம் பெண் என்றால் தெய்வம் என்கிறோம். ஆனால், பெண்ணின் ஓர் உறுப்பிலேயே மூன்று தெய்வங்கள் எல்லை பிரித்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றன என்கிறது இந்த மந்த்ரம்.
இதை நீங்கள் பெண்மையின் உயர்வாகவே எடுத்துக் கொள்ளலாம். `அந்தரங்கம்’ எல்லாம் ‘அந்தரங்கன் அறிவான்’ என கண்ணதாசன் சொல்லி வைத்ததற்கு முதல் முதன் முன்னோடியாக விளங்கியிருக்கிறது என்றும் வைத்துக் கொள்ளலாம்.இங்கே முக்கியமானதொன்று... வேத திருமணங்கள் பெரும்பாலும் கர்ப்பாதானம் என்றே அழைக்கப்பட்டிருக்கின்றன.
விவாஹம் என்றால் தூக்கிக் கொண்டு ஓடுதல் என்றும், பாணிக்ரஹணம் என்றால் கைப்பிடித்தல்என்றும் பார்த்திருக்கிறோம். வையெல்லாம் எதற்காக? கர்ப்பாதானம் செய்து... குழந்தைகள் பெற்று மகிழ்ந்து வாழத்தானே. அதனால்தான் திருமணத்தை கர்ப்பாதானம் என்றே குறிப்பிட்டது வேதம்.
இதற்காகவே கணவனுக்கும், மனைவிக்கும் மணமேடையில் நிகழும் உரையாடலாக வேதம் இப்படி பதிவு செய்திருக்கிறது.
ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:
பொருள் : ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.
விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும்.
இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத் தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும் பொழுது சொல்கிறான்.
மந்திரம்: உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஸேத்வா அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ!
பொருள்: விசுவாசு என்னும் கந்தர்வனே இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.
மந்திரம்: உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வா வஸீந் நமஸ கீர்ப்பிரீடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி
பொருள்: இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக.
விளக்கம்: கலியாணம் நடந்து நான்கு நாள்கள் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது. நான்கு நாள் கழிந்த பிறகு மேற்கண்ட மந்திரங்களைச் சொல்ல வேண்டும். அதாவது கலியாணமான அந்த மணப் பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்ட இந்த மணமகன் தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான் என்பதாகும்.
ஆதாரம்: விவாஹ மந்த்ராத்த போதினி.
ஆக்கியோர்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல்.,(பக்கங்கள்:முறையே: 22-59)
இந்த வைதீக சடங்குகளை வைதீகர்கள் அல்லாத அடிமைகளும்,பெருமைக்காக தங்களது இல்லத் திருமணங்களிலும் அதே சடங்குகளைப் பின்பற்றி வருவது கொடுமையிலும் கொடுமை ஆகும்.
வைதீக சனாதனம் என்பதே பொய்யும் பித்தலாட்டமும் ஏமாற்றும் வன்மமும் ஆபாசமும் நிறைந்தது என்பதை இனிமேலாவது உணருங்கள் நண்பர்களே. வைதீக சனாதனம் என்பதில் துளியும் சமத்துவமோ மனித நேயமோ இல்லை என்பது உணருங்கள்.வைதீ அன்பர்களுக்கே இதை உணராமல் இருக்கிறார்கள் என்பதே வேதனையிலும் வேதனை.அறிவியல் வளர்ந்துள்ள இந்த காலத்தில்,வைதீக சனாதன தர்மம் என்பது அர்த்தமற்ற மனித நேயமற்ற, மனத குலத்திற்கு எதிராக சடங்கு குப்பைகளால் கட்டப்பட்டவை என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும். இந்த விழிப்புணர்வு ஒன்றே நமக்கு சமூக பண்பாட்டு கலாச்சார அரசியல் விடுதலைக்கு வித்திடும்.
ஆதாரங்களால்,தரவுகளால் நம்மை ஆதிக்கம் செலுத்தும் ஆதிக்கவாதிகள் திருந்தியதாய் வரலாறே இல்லை.வைதீகத்திலிருந்து நம்மை நாமே திருத்திக் கொள்வது தான் ஒரே வழி. வைதீக சடங்கு சம்பிரதாயங்களிலிருந்து முதலில் நாம் வெளிவருவோம், நம் குடும்பத்தினரையும் மீட்டெடுப்போம்,
இந்தக் ஆபாசமான சடங்குகள்தான் எங்களது பண்பாடு என மற்றவர்களிடம் சொல்வதை முதலில் நிறுத்துவோம்.அடுத்த நடவடிக்கையாக வைதீகர்களைக் கொண்டு நடத்தப்படும் சடங்குகளை நமது குடும்ப அளவில் தடை செய்வோம்.
குறிப்பு: விவாஹ மந்த்ரார்த்த போதினி நூல் பற்றி அறிந்த நாளிலிருந்து அதை online மூலம் order பண்ண முயற்சித்தேன். Out of stock என்பதால் order பண்ண முடியவில்லை.
இந்த நூலினை வாசிக்காது அக்னிஹோத்ரம் அவர்கள் எழுதிய திருமண சடங்கு பற்றி பதிவு எழுத வேண்டாம் என்றிருந்தேன்.
அந்தக் குறையினை நண்பர் இலங்கநாதன் குகநாதன் அவர்கள் இன்று தீர்த்து வைத்து விட்டார்.அவரது பக்கத்தில் இந்த நூலினை பதிவிறக்கம் செய்வதற்கான google drive link யை பதிவு செய்திருந்தார்.அந்த link னை தந்துள்ளேன், பதிவிறக்கம் செய்ய விரும்புகிறவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிண்ணூட்டத்தில் சர்சைக்குரிய மந்திர பக்கம் ஒன்றை இணைத்துள்ளேன்.
https://drive.google.com/file/d/1zA3m7-r3YzI0VvJA3QYInqpbcr5QPkde/view
- ஆறாம் அறிவு, தினகரன் செல்லையா முகநூல் பதிவு,1.11.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக