வியாழன், 24 டிசம்பர், 2020

அடிமை_சூத்திரனும்_வைதிக_சடங்குகளும் (கோத்திர புரட்டு)


சூத்திரனுக்கும் அவர்ணர்களுக்கும் ஹிந்து வைதிக சனாதன சடங்குகளுக்கும் சம்பந்தமே இல்லை!

இந்து வேத வைதீக சனாதன தர்மத்தில் மூன்று வர்ணத்தார்களுக்கு மட்டுமே தனி அந்தஸ்து உண்டு.
சூத்திரர்களும் அவர்ணர்களும் (பஞ்சமர்,சண்டாளர்கள்,பதிதர்கள்,
ஆதி குடிகள்) இந்து வைதீக சனாதன தர்மத்தை சொந்தங் கொண்டாடுவதும் அதில் தங்களுக்கு உரிய இடமும் பங்கும் உண்டெனத் தேடுவது அறியாமை ஆகும். ஏன் சூத்திரர் மற்றும் அவர்ணர்களுக்கு வைதிக சனாதனத்தில்  இடமில்லை என்பதை விளக்குவதற்கே இந்தப் பதிவு. 

சிரார்த்தம், திதி செய்யும் போது புரோகிதர் தற்காலிக பூணூல் இட்டு, தர்ப்பை புல்லினால் பவித்திரம் கூர்ச்சம் முதலியவற்றை அணிவித்து மந்திரங்களை உச்சரிப்பார்.உபநயனம் செய்த இரு பிறப்பாளர்களுக்கு மட்டுமே வேத மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்பது சாஸ்திரப் பிரமாணம்.மற்றவர்களுக்குக் கூடாது, இது திருமணங்களுக்கும் மற்ற கர்ம அனுஷ்டானங்களுக்கும் எல்லா வைதிக சடங்குகளுக்கும் பொருந்தும். காரணம் இந்தச் சடங்குகளின் போது புரோகிதரோ, வாத்தியாரோ வேத மந்திரங்களைக் கூறியே சடங்குகளை நடத்தியாக வேண்டும்.
இருபிறப்பாளர்கள் அல்லாத, அதாவது துவிஜர்கள் அல்லாத சூத்திரர், அவர்ணர்களுக்கு அருகில் வேத மந்திரங்களை ஓதுதல் கூடாது.ஆனால் புரோகிதர்கள் இன்றைய காலகட்டத்தில் இருபிறப்பாளர்கள் அல்லாதவர்களுக்கும் வைதிக சடங்குகளை பணத்திற்காகவும் தானத்திற்காகவும் செய்து வைக்கிறார்கள்.
சூத்திரர் மற்றும் வர்ணத்தில் சேராதவர்களும் இந்த வைதிக சடங்குகளை புரோகிதரை வைத்துச் செய்வதை கவுரவமாகவும் பெருமையாகவும் எண்ணுகிறார்கள். அப்படிச் செய்து வைக்கும் சடங்குகளில் அந்தப் புரோகிதரானவர் சூத்திரனுக்கு தற்காலிகமாக பூணூல் மற்றும் தர்ப்பை புல்லால் ஆன பவித்ரம் அல்லது கூர்ச்சம் அணிவிப்பார். சடங்கு முடிந்ததும் இவை இரண்டையும் கழற்றி அவரே கொண்டு செல்வார். 

ஏன் புரோகிதர்கள் நமக்கு  தற்காலிகமாக
பூணூல்  அணிவிக்கிறார், விரலில் கூர்ச்சம் அணிவிக்கிறார் என நாம் கேள்வி எழுப்புவதில்லை.
போகட்டும, அடுத்து இடையிடையே சிரார்த்தம், திதி செய்பவரது கோத்திரத்தை மந்திரங்களுடன் சேர்த்து உச்சரிப்பார். கோத்திரம் என்பது குடும்பப் பெயர் போன்றதாகும், வேத கால ரிஷிகளின் வழி வந்தவர்கள் என அவர்களது பெயர்களை கோத்திரங்களாகவும், ப்ரவரம் எனவும் தனித்தனி அடையாளங்களை இட்டு அழைப்பர். இந்த கோத்ரம் மற்றும் ப்ரவரம் முதல் மூன்று வர்ணங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது இருபிறப்பாளர்களுக்கு மட்டுமே கோத்திரமும் ப்ரவரமும் உண்டு.

பிராமணர்களின் கோத்ரம் : அகஸ்திய, வாஸிஷ்ட, சாண்டில்ய,அத்ரி,கண்வ,கௌசிக,கௌர,ஜைமினி,தந்வந்திரி,பராசர,பாரத்வாஜ,புலஸ்தி,மார்க்கண்டேய,மாரீச,மௌன,ரேணு,வத்ஸ,ஸோமராஜக,ஹிரண்ய, கபில, ஜாபாலி,பாணிநி,வால்மீகி என ஐநூறுக்கும் மேற்பட்ட கோத்ரங்கள் உண்டு.

ஷத்ரியர்களின் கோத்ரம்: மதங்க, மௌத்கல்ய, மாண்டவ்ய, ஸாலிக,காசியப,விசுவாமித்ர, சரபங்க, ஹரித,உபதன்யு, பகீரத,ஜமதக்னி,சயவன,கண்வ என ஷத்ரியர்களாக தங்களைப் பாவிக்கும் சௌராட்டிரர்களுக்கு மட்டும் 64 கோத்ரங்களுக்கு மேல் உண்டு.
திவரிய(ரஜபுத்ர), கோயல், ராவல் டோப்பு இப்படி நீண்டு கொண்டு போகும்.
தமிழ்நாட்டில் ஜம்பு மகரிஷி கோத்ரம் என ஒரு பிரிவினர் தங்களை ஷத்ரியர்களாக அடையாளப்படுத்தி வருகின்றனர். இந்த ஜம்பு மகரிஷி பற்றி வேறெங்கும் குறிப்புகள் தகவல்கள் இல்லை. நால்வர்ணப்படி ஷத்ரியர்கள் இரு பிறப்பாளர்களாக இருத்தல் வேண்டும், தவிர உரிய வயதில் உபநயன சடங்கும் செய்து வேதங்களில் தேறியவர்களாகவும் இருத்தல் வேண்டும். இந்த உண்மை அறியாமல் பெயருக்கு தங்களை ஷத்ரியர்கள் எனப் பெயரிட்டுக் கொள்பவர்கள் இப்போது தமிழ்நாட்டில் அதிகரித்துவிட்டனர்.

வைசியர்களின் கோத்ரம்: குத்ஸாஸ, கோபஹாஸ,தல்பியாஸ,நரதாஸ,பாலவாஸ,மானவாஸ,முனி ராஜஸ,வடுகாஸ,வருணாஸ,வியாஸ,சௌம்யாஸ என நூற்றுக்கும் மேற்பட்ட கோத்ரப் 
பெயர்கள் இணையத்தில் உண்டு.தவிர இவர்களும் இறு பிறப்பாளர்கள் என்பதால் மேலுள்ள பிராமண கோத்ரப் பெயர்களில் பலவும்  இவர்களுக்குப் பொருந்தும்.

சூத்ரர்களுக்கு கோத்ரப் பெயர்கள் எதுவும் கிடையாது. இன்றைய தேதியில் புரோகிதம் செய்பவர்கள் சிராத்த மந்திரம் ஓதும்போது கோத்ரம் சொல்ல வேண்டும் என்பதற்காக பொதுவான “சிவ கோத்ரம்”அல்லது “விஷ்ணு கோத்ரம்” எனச் சொல்லி சிரார்த்த மற்றும் திதி சடங்கை முடிக்கிறார்கள். அல்லது சூத்திரர்களது குல தெய்வப் பெயரைக் கோத்ரமாக பாவித்து மந்திரம் ஓதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.இவை எதுவுமே இல்லையென்றாலும் கௌசிக கோத்ரம் என பொதுவான ஒன்றை குறிப்பிட்டு சடங்குகளை முடிக்கின்றனர்.
இதிலிருந்து தெளிய வேண்டியது சில முக்கிய விடயங்கள் உண்டு, 

சூத்ரர்களுக்கே   கோத்ரம் இல்லையெனில் அவர்ணர்களான பஞ்சமர் சண்டாளர்களுக்கு கோத்ரம் ஏது?!
சுற்றிச் சுற்றி எல்லா இந்து சனாதன நூல்களும் இறு பிறப்பாளர்களான முதல் மூன்று வர்ணத்தாரின் புகழ் மற்றும் நலன்களைப் பற்றி மட்டுமே பேசுகின்றன! 
இதை ஒரு சில சாஸ்திர புராண நூல்களைப் படித்தாலே உண்மை என உணரலாம்.
மொத்தத்தில் சூத்ர பஞ்சம சண்டாளர்களுக்கு எந்த ஒரு வைதீக (திருமணம், சிரார்த்தம், திதி உட்பட) சடங்கையும் செய்வதற்கு பிரமாணம் ஏதும் இல்லை. பொருளுக்காக இன்றும் இந்த வாணிபம் நன்றாகவே நடப்பது நிதர்சணம்!

தமிழ் நிலப்பகுதியில் ஷத்ரியர்களோ வைசியர்களோ இல்லை. தமிழ் மண்ணில் சிலர் தங்களை ஷத்ரியர்களாகவும் வைசியர்களாகவும் எண்ணி ஏமாந்து போகின்றனர். அவர்கள் ஷத்ரியர்கள் எனில் காயத்ரி மந்திர தீட்ஷை பெற்று உபநயன சடங்கு உரிய வயதில் செய்து பூணூல் அணிந்திருக்க வேண்டும். அவரவர் கோத்ரம் தெரிந்திருக்க வேண்டும். வேதம் பற்றிய தெளிவும் அறிவும் வேண்டும். இவற்றில் ஒன்றுமே இல்லாமல் பெயரை மட்டும் வரட்டு கௌரவத்திற்காக போட்டுக் கொள்கின்றனர்.
இந்த அடிப்படையில் தமிழ் மண்ணில் பிராமணர்களும் சூத்ரர்களும் பஞ்சம சண்டாளர்களும் அதி குடிமக்களும் உள்ளனர் என்பது தெளிவு.

இந்து வேத சனாதன நூல்கள் அனைத்திலும் இழிவாக சித்தரிக்கப் பட்டுள்ள சூத்ர, பஞ்சம சண்டாளர்களுக்கு அந்த தர்மத்தில்  அல்லது சமயத்தில் துளியும் இடமில்லை. பின் ஏன் அதைப் பிடிவாதமாகப் பற்றியிருக்க வேண்டும்?! சாதி இந்துக்களின் இருப்பிடம் தவிர இந்துக் கோயில்கள் ஏதும் பஞ்சமர்களின் சண்டாளர்களின் இருப்பிடங்களில் இல்லை என்பதே இதற்கு போதுமான சான்று!
உணர்வுள்ளவர்கள் இதை புரிந்து கொள்வார்கள்!ஈரமுள்ளவர்கள் தவற்றை உணர்ந்து திருத்திக் கொள்வார்கள்! சமத்துவர்கள் மனித நேயமற்ற இழி செயலை எதிர்த்து புரட்சி செய்வார்கள்! 
மனித நேய பண்பாளர்கள் புதிய சிந்தனையில் மக்களை வழி நடத்துவார்கள்! 

உதாரணத்திற்காக சிரார்த்த சடங்கின் ஒரு வகையினை உங்களுக்காக இதோ:-

ஆவாஹனம் -எழூந்தருளச் செய்தல்.
பித்ருக்களே !மிகவும் நல்லவர்களான நீங்கள்,எங்களுக்கு சந்ததியையும், செல்வத்தையும்  நீண்ட ஆயுளையும் ஆசிர்வதித்து,கம்பீரமாகச் சிறந்த ஆகாச மார்க்கத்தில் இங்கு எழுந்தருளுங்கள் .
இந்த கூர்ச்சத்தில் (தர்ப்பையைத் திரித்துச் செய்வது) இரண்டு வம்ச பித்ருக்களை ஆவாகனம் செய்கின்றேன் .

ஆசனம் - இருக்கை.
தரப்பையே !நீ  என்னால் சேகரிக்கப் பட்டாய்.
உன்னைப் பித்ருக்க்ளுக்காகப் பரப்புகிறேன்.
நீ அவர்களுக்குப் பஞ்சு போல் மித மிருதுவான ஆசனமாக இரு.
அருள் சுரக்கும்  பித்ரு,பிதாமஹ ப்ரபிதாமஹர்கள் தங்களுடைய பரிவாரங்களுடன் இங்கு
எழுந்தருளட்டும்.
(இரண்டு வம்ச பித்ருக்களுக்கும் இது ஆசனம்,
அவர்களை எல்லா வித உபசாரங்களுடன் பூஜிக்கின்றேன்)

தர்ப்பணம்.
சோம யாகம் செய்த சிறந்த பித்ருக்களைப் போலவே,நடுத்தரத்தினரும் கடைப்ப்பட்டவரும் கூட உயர்ந்த கதியை அடையட்டும்.
நம்மிடம் கோபமற்றவர்களாய் அவர்கள் நாம் செய்யும் நற் கர்மாவை உணர்ந்து ,நமது பிராணனை ரக்க்ஷித்து,நாம் அழைக்கும்போது வந்து, நம்மைக் காத்தருளவேண்டும்.
இன்ன கோத்திரனரும் இன்ன பெயருள்ளவரும், வாசு ரூபியான எங்கள் தந்தையை நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன் .
அங்கீரசர்,அதர்வணர்,பிருஹுக்கள் என்று பெயருள்ள நமது பித்ருக்கள் புதிது புதிதான வகையில் அருள் புரிபவர்கள்.

சோம யாகம் செய்தவர்கள்.
பூஜித்தர்க்குரிய அவர்களுடய எந்த சிறந்த வழியில் சென்றதோ,அதையே நாமும் பின் பற்றி ,மங்களகரமான நல்ல மனது உடையவர்கள் ஆவோம் .

இன்ன கோத்திரத்தினரும் …தர்ப்பணம் செய்கின்றேன்.
அக்னிச்வாத்தர்கள் என்பவர்களும் ,சோம யாகம் செய்தவர்களுமான நமது பித்ருக்கள் தேவ மார்க்கமாக இந்து எழுந்தருளட்டும் .
இங்கு நாம் செய்யும் ஆராதனையில் சந்தோஷமடயட்டும் .
நம்மைக் காப்பாற்றட்டும் .
இன்ன ……… .
பிதா மகர்
ஜலங்களே ,எல்லாவற்றிலும் உள்ள சாரத்தை நீங்கள் உங்களிடம் கொண்டிருகிறீர்கள் .
ஆகையால் அம்ரிதமாகவும், நெய்யாகவும், பாலாகவும்,மதுவாகவும் பானகமாகவும் பரிணமித்து (எது வேண்டுமோ,அதுவாய் நின்று நீங்கள்) எங்கள் பித்ருக்களை திருப்தி செய்வீர்களாக.

இன்ன கோத்திர '.... எனது பிதா மகரை நமஸ்கரித்து ..தர்ப்பணம் செய்கிறேன்
ஸ்வதா என்னும் சொல்லால் திருப்தி அடையும் பித்ருக்களுக்கு ஸ்வதா எனக்கூறி நமஸ்கரிக்கின்றேன்.
ஸ்வதா என்னும் சொல்லால் திருப்தி அடையும் பித்த மகர்களுக்கும்,ப்ரபிதா மகர்களுக்கும் ஸ்வதா எனக்கூறி நமஸ்கரிக்கின்றேன்.

இன்ன ……
எந்த பித்ருக்கள் இவ்வுலகில் இருக்கின்றார்களோ, எவர்கள் இங்கு இல்லையோ, இவர்களை நாங்கள் அறிவோமோ,இவர்களை அறிய
மாட்டோமோ,அவர்களை எல்லாம் அக்னி பகவானே, நீர் அனைத்தையும் அறியும் ஜாதவேதஸ் ஆதல்லல் அறிவீர்.அவர்களுக்குரிய
இதை அவைகளிடம் சேர்த்து அருள்வீர்.
அதனால் அவர்கள் சந்தோஷமடயட்டும்.

இன்ன ……ப்ரபிதா மகர்.
காற்று இனிமையாக வீசட்டும்.
நதிகள் இனிமையைப் பெருக்கிக் கொண்டு ஓடட்டும்.
செடி கொடிகள் இனிமை அளிப்பவையாக இருக்கட்டும்.
இன்ன …….ப்ரபிதா மகரை நமஸ்கரிக்கின்றேன்.
இரவும் காலையும் இனிமையாக இருக்கட்டும்.
பூமியின் புழுதியும் இன்பந் தருவதாய் இருக்கட்டும்.
நமது தந்தை போனற ஆகாயம் இன்பமளிக்கட்டும்.

இன்ன……
வன விருக்ஷங்கள் இன்பம் நிறைந்தவகளாக இருக்கட்டும்.
சூரியன் இன்பந் தரட்டும்..
பசுக்கள் மத்ரமான பாலைத் தரட்டும்.

இன்ன …தாயார்.
இன்ன கோத்திரத்தினரும் இன்ன… பெயருள்ளவரும் வசு ரூபிணியும் ஆகிய எனது தாயை நமஸ்கரித்து
அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன்.( மூன்று முறை )

இன்ன கோத்திரத்தினரும் இன்ன… பெயருள்ளவரும்,ருத்ர ரூபிணியும் ஆகிய எனது மாதா மகியை
நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன். (மூன்று முறை)

இன்ன கோத்திரத்தினரும் இன்ன… பெயருள்ளவரும்,ஆதித்ய ரூபிணியும் ஆகிய எனது ப்ரபிதா மகியை நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன்.(மூன்று முறை)
தாய் வழித் தாத்தா,கொள்ளுத் தாத்தா பாட்டி கொள்ளுப்பாட்டி வகை.

இன்ன கோத்திரத்தினரும் இன்ன… பெயருள்ளவரும் வசு ரூபியும் ஆகிய எங்கள் மாதா மகருக்கு தர்ப்பணம்
செய்கின்றேன்..( மூன்று தடவை )

ருத்ர ரூபியாகிய எங்கள் தாயின் பிதா மகருக்கு தர்ப்பணம்.( மூன்று தடவை )
ஆதித்ய ரூபியாகிய எங்கள் தாயின் ப்ரபிதா மகருக்குத் தர்ப்பணம் ..( மூன்று தடவை )
வசு ரூபியாகிய எண்கள் மாதா மகிக்கு தர்ப்பணம் ( மூன்று தடவை ).
ருத்ர ரூபியாகிய எங்கள் தாயின் பிதா மகிக்குத் தர்ப்பணம் .( மூன்று தடவை ).
ருத்ர ரூபியாகிய எங்கள் தாயின் ப்ரபிதா மகிக்குத் தர்ப்பணம்.( மூன்று தடவை ).
அன்னரசமாகவும் அம்ருதமாகவும் ,நெய்யாகவும்,பாலாகவும், தேனாகவும் பானகம் ஆகவும் பரிணமித்து, எது வேண்டுமோ அதுவாய் நின்று நீங்கள் எனது பித்ருக்களைத் திருப்தி செய்வீர்களாக!
பித்ருக்களே,
திருப்தி அடையுங்கள்.
திருப்தி அடையுங்கள்.
திருப்தி அடையுங்கள். .
பூணூல் வலம்.
தேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும் அவ்வாறே மகா யோகிகளுக்கும் நமஸ்காரம்.
ஸ்வதா என்னும் பெயர் கொண்டு விளங்கும் பர தேவதைக்கு எப்போதும் மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
( மூன்று முறை )
அபிவாதனம்,நமஸ்காரம் .
பூணல் இடம்.
பித்ருக்களே !
மிகவும் நல்லவர்களான நீங்கள் எங்களுக்கு சந்ததியையும்,செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் ஆசிர்வத்திது அளித்துக்கொண்டு கம்பிரமாக சிறந்த ஆகாய மார்க்க்கத்தில் எழுந்து அருளுங்கள்.
இந்த கூர்ச்சத்தில் இருந்து இரண்டு வர்க்க பித்ருக்களையும் அவரவர்களுடைய இருப்பிடங்களுக்கு எழுந்து அருளப் பிரார்த்திக்கிறேன்.
பவித்ரத்தை வலது காதில் வைத்துக்கொண்டு உபவீதியாக,ஆசமனம் செய்து, பவித்ரத்தை போட்டுக் கொண்டு பூணூலை இடமாக்கவும்.
எவர்களுக்கு தாயோ தந்தையோ ச்நேகிதரோ தாயாதிகளோ பந்துக்களோ இல்லையோ அவர்களெல்லாம் நான் என் தரப்பை நுனியால் விடும் தீர்த்தத்தால் திருப்தி அடையட்டும்.
கூர்ச்சததைப் பிரித்து நுனி வழியாக தர்ப்பணம் செய்யவும் .
பவித்ரம் பிரிக்கவும்.
பூணூல் வலம்.
ஆசமனம்.
பின்பு பிரம்ம யக்யம் செய்க.

பவித்ரம்,ஆசமனம்,யக்யம்: தர்மசாஸ்திரத்தை செயல் படுத்தும்போது, கையில் தர்ப்பை (பவித்ரம்) அணிய வேண்டும். 'பவித்ரம்' என்றால் தூய்மை! இயல்பாகவே தர்ப்பை தூய்மையானது. ஆகவே, பவித்ரம் என்பதே தர்ப்பையின் பெயராக விளங்குகிறது என்கிறது வேதம் (பவித்ரம் வை தர்பா:).ஜபம் மற்றும் தானம் செய்யும்போது தர்ப்பபாணி யாக இருக்க வேண்டும். தாமரை இலையில் தண்ணீர் எப்படி ஒட்டாமல் இருக்கிறதோ, அதே போல் தர்ப்பை அணிந்திருப்பவனிடம் பாவம் ஒட்டாது என்கிறது தர்மசாஸ்திரம் (விப்யதெ நஸபாபேன பத்ம பத்ர மிவாம்பஸா).
ஆசமனம்: கர்மானுஷ்டானத்தின் ஆரம்பத்திலும்,முடிவிலும், சிறு துளிகலாக மூன்று முறை மந்திரங்களுடன் கூடிய ஜலத்தை வலது உள்ளங்கையினால் பருகுதல்.

வைதிகச் சடங்குகளை வைதிகர்கள் அல்லாதவர்கள் ஒதுக்கினாலே வைதிக சனாதனத்திலிருந்து விடுதலை நிச்சயம். 

ஆதார நூல்கள் மற்றும் இணைய முகவரி: கோத்திரங்களும் பிரவரங்களும்
- ஸனாதன தர்ம ப்ரசாரப் பதிப்பு 1979
சநாதந தர்மம், மொழி பெயர்ப்பு : ப.நாராயண ஐயர், ஆநந்தா பதிப்பு 1906
தர்மஸூத்ரம், வேத தர்மசாஸ்திர பரிபாலன ஸபை, கும்பகோணம் வெளியீடு, 1951
தர்மசாஸ்த்ர ஸங்க்ரஹம், ஶ்ரீ S.V.ராதாக்ருஷ்ண சாஸ்த்ரிகள், மூன்றாம் பதிப்பு 2002
Arya Vysya Gothras : www.vysyamala.com
- தினகரன் செல்லையா முகநூல் பதிவு, 5.12.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக