கீதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கீதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 நவம்பர், 2024

கீதை உபந்நியாசமாம்! (2)

பதிலடிப் பக்கம்: 

விடுதலை நாளேடு

 கவிஞர் கலி.பூங்குன்றன்

சென்னையில் இஸ்கான் சார்பில் பகவத் கீதை வாயிலாக மன அழுத்த மேலாண்மை பற்றிய வாராந்தர வகுப்பு நடத்தப்படுகிறது என்ற தகவலையடுத்து…
25.10.2024 அன்றைய ‘விடுதலை’யில் “கீதை உபந்நியாசமாம்” என்ற தலைப்பில் முதல் கட்டுரை எழுதப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக பழம்பெரும் சுயமரியாதை இயக்க எழுத்தாளர் பி.வி.ஆர். ‘விடுதலை’யில் 19.8.1956இல் எழுதிய கட்டுரை இங்கே தரப்படுகிறது.

கிருஷ்ணன் அவதாரங்கள்
வெறும் கற்பனைக் கட்டுக் கதைகள்
லண்டன் பல்கலைக் கழக ஆராய்ச்சிப் பேராசிரியர் ஜே.பி.எஸ்.ஹால்டேன் உலகத் தோற்றம்பற்றி வெளியிட்டுள்ள கருத்தில் நீந்துவன, ஊர்வன, விலங்குகளிலிருந்து மனிதர்கள் தோற்றமாயினர் என்றும், இந்துமத புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஷ்ணுவின் அவதாரங்கள் இந்த உலக உயிரினத் தோற்ற வளர்ச்சி வரலாற்றையே குறிப்பிடுகிறதென்றும் பேராசிரியர் சாஹ்னி தெரிவித்த கருத்து உலகத் தோற்றம் பற்றி, இப்போது ஆராய்ச்சியாளர் கருத்துக்கு ஆதரவாகவுள்ளது என்றும், நீந்துவனவான மீனினத்திலிருந்து, ஆமை முதலிய ஊர்வனவும், ஆமையிலிருந்து பன்றி முதலிய விலங்குகளும், இந்த விலங்குகளிலிருந்து குள்ள மனிதர்களும், இந்த குள்ள மனிதர்களிலிருந்து பெரிய உருவமும் ஆற்றலுமிக்க சிம்மம் போன்ற மனிதர்களும் தோன்றினர் என்பதே இவரது விளக்கக் கருத்து என்றும், இந்த உலகத் தோற்ற உண்மையை அக்கால இந்திய மக்கள் தெளிவுற உணர்ந்து இருந்தனரென்று தான் என்றும் நினைக்கவில்லை. ஆனால், இந்த அவதாரக் கதைகளின் வரிசைக் கோர்வையை கவனிக்குமிடத்து அடிநாள் இந்தியர் வெளியிட்டிருந்த கருத்துக்களைக் கொண்டு, பழக்கத்தின் மீது இக்கருத்துக் கொண்டு இப்படி பிற்காலத்தில் கதைகள் புனைந்துள்ளனர் என்றே எண்ணச் செய்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். அவதாரங்கள் வெறும் புரட்டு என்பதற்கு ஏராளமாக ஆதாரங்கள் உள்ளன.

தழுவல்
மச்சாவதாரம் என்பது பண்டைக்கால ரோமர் புராணக் கதைகளில் உள்ள ஜானஸ் என்ற இருமுக தேவனின் கதையின் தழுவல் என்று பிரிட்டன் தத்துவக்கழக உறுப்பினரான திருமதி எலிசபெத் ஏ ரீட் என்பவர் தாம் எழுதிய இந்து இலக்கியங்கள் அல்லது இந்தியாவின் பண்டைக்கால நூல்கள் என்பதில் விளக்கியுள்ளார். இந்த ஜானஸ்தேவனும் இவனது மனைவியும் தங்கை காமசேனியும் உடலின் மேல் பகுதி மனித உருவமாகவும் இடுப்புக்குக் கீழ்ப்பகுதி மீன் உருவமுமாகக் கொண்டவர்கள்.
மற்றும் பாபிலோனிய புராணம். தேவன் ஒன்ஸ் என்பவனும் சிரிய நாட்டுக் கடவுளிச்சியான அதகாரிஸ் என்பவளும் மேல் உடல் பகுதி மனித உருவமும் கீழ் உடல் மீனுருவமும் கொண்டவர்கள்.
கிறிஸ்தவ சகாப்தம் மத்திய காலத்தில்தான் இந்த வேத பார்ப்பன இந்துமத புராணங்கள் எழுதப்பட்டு கிருஷ்ணன் ராமன் முதலியவர்கள் விஷ்ணு அவதாரங்கள் ஆக்கப்பட்டதாக என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவில் தக்க ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது மற்றும் கிருஷ்ணன் நரி தந்திரங்கள் கொண்டவன் என்னும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநாகரிக வெறிக்கதைகள்
சிவன், கிருஷ்ணன் பற்றிய கதைகள் எல்லாம் பிற்காலத் தொகுப்புகள் என்றும் அநாகரீக வெறியாட்டுக் கற்பனைகள் என்றும் மாக்ஸ்முல்லரும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்துக் கடவுள்கள் தங்களுடைய அன்றாட உணவுக்கும் மனிதர்களை எதிர்பார்த்துக் கிடக்கின்றன என்று நையாண்டியும் செய்துள்ளார். இவர் இவ்வகை இந்த இந்து கடவுள்கள் என்பதெல்லாம் பொய் வெறும் கற்பனை சித்திரங்களும் மனிதர் செய்த சிலைகளுமேயாகும் என்ற உண்மையையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார்; மகாபாரதக் கதைகள் பைத்தியக்காரனின் கனவுகள் போன்றவை என்பதும் இந்த ஆராய்ச்சி மேதையான எலிசபெத்தின் தீர்ப்பு.
ஆந்திரப் பெரியார் வேமன்னா ராமாயணம் கொலைக்கதை பாரதம் குடும்ப பாசக்கதை என்கிறார்.

கிறிஸ்தவரிடம் சென்ற 3 பார்ப்பனர்
மேனாட்டு இலக்கிய சரித்திர ஆராய்ச்சிப் புலவர்களான வெப்பர், லேசன் என்பவர்கள் எழுதியுள்ள ஆராய்ச்சி நூல்களில் மற்றொரு கருத்தும் காணப்படுகிறது.
அதாவது கிறுஸ்தவ சகாப்தத்தின் துவக்க காலத்தில் மூன்று வட இந்தியப் பார்ப்பனர்கள் கிறிஸ்தவர்கள் வாழும் இடத்துக்குச் சென்று சிறிது காலம் தங்கியிருந்தனர் என்றும், இம்மூவரும் தங்கள் ஊருக்குத் திரும்பியதும் தங்களுடைய பார்ப்பன வேத மதத்தில் மாற்றங்கள் செய்து கிருஷ்ண வாசுதேவ வணக்கத்தையும் நுழைத்தனர் என்கின்றனர் இவர்கள். மற்றும் மகாபாரதக் கதையில் சில 5 முக்கிய பகுதிகள் கிறிஸ்து பிறந்து சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டவை என்பது பல மேனாட்டு ஆசிரியர்களின் கருத்து.
திரு. காசிநாத திரும்பக்தெலாங் எம்.ஏ. என்ற இந்திய ஆசிரியரும் மகாபாரதக் கதையில், பிற்காலத்தில் இடைச்செருகல் நடந்திருப்பதை ஆமோதிக்கிறார். மகா பாரதத்தில் 37ஆவது அத்தியாயம் பதஞ்சலி என்ற சமஸ்கிருத பண்டிதன் காலத்தில் எழுதப்பட்டதென்கிறார்.
துரியோதனன் கதை முஸ்லிம் மத ஏடான குரானிலிருந்து எடுக்கப்பட்டது என்று டால்பாஸ் வீலர் என்பவர் கூறுகிறார்.
இதன்படி மகாபாரதம் கி.பி.7ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டதாகிறது. இவற்றைக் கருதுமிடத்து இது அவதார வரலாறும் அல்ல, உண்மை சரித்திர வரலாறுமல்ல வெறும் கற்பனைக்கட்டுக் கதை என்றாகிறது.

பகவத்கீதை
பகவத்கீதையின் ஆசிரியர் யார் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் காணப்படவில்லை. இது ஒரு வைஷ்ணவப் பார்ப்பனனால் எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்பதும், பார்ப்பனர்களை உசத்திகாட்டவும், அவர்கள் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவும் எழுதப்பட்டதென்பதும், பகவத் கீதையில் காணப்படும் கருத்துக்களே சான்று கூறுகின்றன.
மற்றும் மகாபாரத மூலக்கதை தோன்றி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்த கீதைப்பகுதி நுழைக்கப்பட்டுள்ள தென்பது, பாக்களின் நடைமாற்றமும், இரு நூல்களிலுமுள்ள கருத்துக்கள் பழமையும் புதுமையுமாக இருப்பதும் உறுதிப்படுத்தும். மேனாட்டுப் புலவர் டாக்டர் பர்ன் என்பவரும் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ரிச்சார்டு சுர்லின்ஸ் என்பவர், கிரேட் பிரிட்டன் தத்துவக் கழகத்தில் ஆற்றிய ஆராச்சியுரையில், கி.பி. 3ஆம் நூற்றாண்டில்தான் பகவத் கீதை எழுதப்பட்டதென்று விளக்கியுள்ளார். சர்.மானியர் வில் லியமஸ் என்பவரும் இது பிற்காலத் தொகுப்புதான் என்கிறார்.

பல கிருஷ்ணர்கள்
கிருஷ்ணன் மனைவிகளை இந்திரன் கொன்றதாகவும், இதற்காக ஆரிய வேதப் பார்ப்பனர்கள் இந்திரனைப் போற்றும் ரிக் வேதத்தில் உள்ளதாகவும் மேனாட்டு ஆசிரியர் வில்சன், ஆங்கில மொழி பெயர்ப்பு. ரிக் வேதத்தில் முதல் தொகுப்பு 260ஆம் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றும் இந்திரன் 50,000 கிருஷ்ணன்களைக் கொன்றதாகவும், இந்திரன் ஆரிய வேதியர்களின் காவலன் என்றும், இந்திரன் தன் எதிரிகளைத் தீயிட்டுப்பொசுக்கிக் கோரக்கொலை செய்பவனென்றும், இந்த ரிக் வேதப் பாக்களில் காணப்படுவதாக இவர் எடுத்துக் காட்டியுள்ளார்.
அதாவது கிருஷ்ணன் என்ற அசுரன் 10,000 வீரர்களுடன் வந்ததாகவும் இந்திரனுடன் அம்சுமதி ஆற்றங்கரையில் சண்டை நடந்ததாகவும் வில்சன் எழுதிய ரிக் வேத மொழிபெயர்ப்பு தொகுதி 5 பக்கம் 191இல் காணப்படுகிறது.
அங்கிர நாட்டு முனிவன் கிருஷ்ணன் என்றும் ரிக் வேதத்திலுள்ளது என்றும் துரோபதைக்கும் கிருஷ்ணா – கிருஷ்ணவேணி என்ற பெயருள்ளது..
ஆரிய வேதங்களைத் தொகுத்தவரும் மகாபாரத – ராமாயணங்களைத் தீட்டியவருமான வேத வியாசருக்கும் கிரு்ஷ்ண தேவபாயனா என்றும் பெயர். இவரது காலம் கி.பி.ஆறாம் நூற்றாண்டென்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர்.
மற்றும் சண்டியோக உபநிஷத்திலும் ஒரு கிருஷ்ணன் கதாநாயகனாக்கப்பட்டுள்ளது. அருக்சுனனுக்கும் கிருஷ்ணன் என்றும் பெயருண்டு. ஆந்திரர் ஆட்சியில் ஹவிதேஹனா என்று மன்னனுக்கும் கிருஷ்னன் என்ற மகனிருந்ததாகவும் இவனைக் கதாநாயகனாகக் கொண்டும் ஒரு கதையுள்ளதாகவும் தெரிகிறது. அசுரர்கள் கருப்பு நிறமுள்ளவர். எனவே, அவர்களையும், கிருஷ்ணன் என்றே சில ஆரிய புராணங்களில் குறிப்பிட்டிருப்பதாகவும் வில்சன் சுட்டிக்காட்டுகிறார். எனவே அவதார கிருஷ்ணன் என்பவன் யார் என்பதே நிர்ணயிக்க முடியாதபடி ஆயிரக்கணக்கான கிருஷ்ணன்களும் கிருஷ்ணன் கதைகளுமுள்ளன.
கிருஷ்ணன் முதுமையுற்ற பின்னர் ஒரு வேடன் எய்த அம்பு இவனது காலில் பாய்ந்ததால் இவன் இறந்ததாக விஷ்ணு புராணத்திலுள்ளது. இது கிரேக்க வீரன் அச்சீலிஸ் (ட்ரோஜன் போர்) இறந்த வரலாற்றை ஒத்துள்ளதாகவும் இவர் எடுத்துக்காட்டுகிறார்.

கிருஷ்ணனையும் அவனது குடும்பத்தாரையும், பாண்டவருடன் தொடர்புபடுத்த பிற்கால ஆரிய மொழிப் பண்டிதர்கள் மகாபாரத பாகவதக் கதைகள் அடிக்கடி மாற்றி எழுதியுள்ளனர் என்பது மேனாட்டு ஆசிரியர் கே.டால்பாபஸ் வீலர் கருத்துத் தெரிவித்துள்ளார். பாரதக் கதை நகரமான அஸ்தினாபுரத்துக்கும் (டில்லி) கிருஷ்ணன் பிறந்ததாகக் கூறப்படும் குஜராத் வட்டாரத்திலுள்ள துவாரகைக்கும், 700 மைல் தொலைவு .அப்படியிருக்க, விரைவான வண்டி வாகன வசதியற்ற அந்த அநாகரிகக் காலத்தில், கிருஷ்ணனும், பாண்டவரும் எவ்விதம் நெருங்கி தொடர்பு கொண்டிருந்திருக்க முடியும்? கிருஷ்ணனின் வரலாறு எனப்படும் புராணக் கதையான பாகவதம் 12ஆம் நூற்றாண்டின் வாமதேவா என்பவரால் தொகுக்கப்பட்டது என்று மற்றொரு வரலாறும் காணப்படுகிறது.
நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கோசாயினனிகள் எழுதிய பிரம்ம வைவர்தா என்றதிலும், அய்ந்தாம் நூற்றாண்டில் எழுதிய பத்ம புராணத்திலும் இந்த கிருஷ்ணனுடைய வரலாறுகள் வெவ்வேறாக உள்ளன.
கிருஷ்ணன் தேவகியின் 8ஆவது குழந்தை என்றும், இதற்கு முன் ஆறு குழந்தைகள் தேவகிக்கும் இரண்யகசிபுவுக்கும் பிறந்தவர்கள் என்றும் விஷ்ணு புராணத்தில் (பக்கம் 498) உள்ளது.

கிருஷ்ண வணக்கம் ஆரிய வேதத்திலுமில்லை என்றும், வில்சன் கூறுகிறார். கிருஷ்ணன், குழந்தைப் பருவத்தில் திருடனாக இருந்ததாகவும், ஒழுங்கீனமான சண்டைக்காரனென்றும் காமத் திருவிளையாடல்காரனென்றும் புராணங்களில் விவரித்திருப்பது இந்திய மக்களுக்கே மானக்கேட்டை விளைவிப்பதாகும் என்று திருமதி எலிசெபத் ரீட் சுட்டிக் காட்டுகிறார்.
16,000 மனைவிகளைக் கொண்டவன் என்பது, மக்களுக்கு நல்லொழுக்கத்தை உண்டாக்காது என்றும், கிருஷ்ணனைப் பற்றியவற்றை எல்லாம் வெளிப்படையாக விவரிக்கவும் அசங்கியமாகவும் அவருவருப்பாகவும் இருப்பதாகவும், இந்த பகவத் கீதை வரலாற்றிலும் கிருஷ்ணன் போக்கு நேர்மையாக இல்லை என்றும் இவர் விளக்குகிறார்.
(பி.வி.ஆர்.)

எப்படி இருக்கிறது – வியாசர் விருந்து எழுதிய ராஜாஜியே பாகவதம் பற்றியும் கிருஷ்ண லீலைகள் குறித்தும் அசூயை அடைகிறார் என்றால், கிருஷ்ணனின் தராதரத்தைத் தெரிந்து கொள்ளலாமே!
இந்தக் கிருஷ்ணனால் அருளப்பட்டதாகக் கூறப்படும் கீதையும். சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று ஒரு கடவுள் – தன்னால் எழுதப்பட்ட கீதையில் குறிப்பிடுவது எல்லாம் நாகரிகமானதா?
இந்தக் கீதை பற்றிய உபந்நியாசம் தான் ஞாயிறுதோறும் சென்னை மயிலாப்பூரில் நடத்தப்படுகிறதாம்!
அய்யய்ய.. வாயால் சிரிக்க முடியவில்லையே!

திங்கள், 28 அக்டோபர், 2024

கீதை உபந்நியாசமாம்! (1)

 

பதிலடிப் பக்கம்: 

விடுதலை நாளேடு

சென்னையில் இஸ்கான் சார்பில்

மன அழுத்த மேலாண்மை வகுப்பு!
கவிஞர் கலி.பூங்குன்றன்

சென்னை – இஸ்கான் சார்பில் பகவத் கீதை வாயிலாக மன அழுத்த மேலாண்மை பற்றிய வாராந்திர வகுப்பு நடத்தப்படுகிறது.
இதுகுறித்து சென்னை இஸ்கான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: நாம் பிறந்து விட்டோம் என்பது கடந்த காலம். ஆனால் நாம் ஏன் பிறந்தோம் என்பதை அறிவது நம்மில் மாற்றத்தை ஏற்படுத்தும். பகவத் கீதை வாயிலாக இதைப் பற்றிய வாராந்திர வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன.
அந்த வகையில், அக்.13ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) இந்த வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. மேற்கு மாம்பலம், சுப்பிரமணியன் தெருவில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் மாலை 6.30 மணி வரை இந்த வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்த பாடநெறி ஆன்மிகப் பாதையில் உள்ள உங்கள் சந்தேகங்களை தெய்வீக விஞ்ஞானத்தின் உதவியுடன் தீர்த்து வைக்கும். இதனால் நேர்மையாக பயிற்சி செய்பவருக்கு அமைதியும் ஆறுதலும் கிடைக்கும்.
– இவ்வாறு ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

இந்த 2024ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்கள் எதில் குறியாக இருக்கிறார்கள் என்பது கவனத்துக்கு உரியது.
தெய்வீக விஞ்ஞானத்தின் உதவியுடன் தீர்த்து வைக்கப் போகிறார்களாம் இந்த கீதாபதேசம் மூலம்.
உண்மையில் கிருஷ்ணன் என்று ஒருவன் இருந்தானா? அவன் கீதையை உபதேசம் செய்தானா என்பது பற்றி நாம் கூறுவது ஒரு புறம் இருக்கட்டும்; அமெரிக்கா வரை சென்று ‘பிராமணீசம்’ என்ற தலைப்பில் உரையாற்றிப் ‘புகழ்பெற்ற’ விவேகானந்தர் என்ன கூறுகிறார்? விவேகானந்தர் நாத்திகர் அல்லவே – கடவுள் மறுப்பாளர் அல்லவே!
விதாண்டாவாதம் பேசுகிறார் என்று கூறி ஒதுக்கித் தள்ளிட முடியாதே ஆன்மீகவாதிகளால் – இதோ விவேகானந்தர் பேசுகிறார்.

கீதை பற்றி விவேகானந்தர்
கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கிய மான பலவற்றைப் புரிந்து கொள்ளவேண்டும்.
முதன்முதலில் மகா பாரதத்தின் ஒரு பகுதியாக அதாவது வேத வியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா?
இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திரரீதியாக உயிர்வாழ்ந்த ஒருவரா?
மூன்றாவதாக கீதையில் கூறப்படுவதுபோல் குருசேத்திரப்போர் உள்ளபடியே நடந்ததா?
நான்காவதாக அர்ஜுனனும் ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானா? என்பன.

சொல்லுவது நாமல்ல, ராஜாஜி
ஞாபகம் இருகக்கட்டும்
சூதும் மதுவும்தான் பக்தியா?
கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத்தினார் என்று சிலர் கருதுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டிருந்தாலும் சரி குருசேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ஜுனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ளமுடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண்டாரா என்ற பிரச்சினை எழுகிறது.
அர்ஜுனன், ஏனையப் பெயர்கள் பயன் படுத்தப்பட்டுள்ளனவே தவிர இவர்கள் இருந்தனர் என்றோ, குருசேத்திர யுத்தம் செய்தனர் என்றோ கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.


– விவேகானந்தர் ‘கீதையைப் பற்றிய கருத்துகள்’ என்ற நூலில், ஆதாரம் : ஏ.எஸ்.கே. அய்யங்கார் எழுதிய ‘பகுத்தறிவுச் சிகரம் பெரியார்’ என்ற நூல் – பக்கம் 117).
விவேகானந்தரின் இந்தக் கூற்றுக்கு ஒரே ஒரு வரி பதில் சொல்லிவிட்டு, வேட்டியை மடக்கிக் கட்டிக் கொண்டு நம்மிடம் கோதாவில் குதிக்கட்டும்.
விவேகானந்தர் வீசுவது வெறும் வேல் அம்பு அல்ல – வெடிகுண்டு கணையையல்லவா வீசித் தள்ளுகிறார்.
எந்த அமெரிக்காவுக்குச் சென்று விவேகானந்தர் ‘வீராவேச’ சொற்பொழிவுகளை வீசினாரோ அந்த அமெரிக்காவிற்கு கீதையைப் பற்றிய கருத்து என்ன? அதற்கும் ஆதாரம் உண்டு – இதோ:

கீதையின் ஜாதிய பிரிவினை புத்தியை
உணர்ந்த அமெரிக்கா
அமெரிக்காவின் இடஹோ மாகாண அரசு அலுவலகத்தில் பகவத்கீதை தொடர்பான வகுப்பு ஒன்றை நடத்த அம்மாகாண உறுப்பினர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான பரிசீலனையின் போது இடஹோ மாகாண உறுப்பினர் ஸ்டீவ்விக் கூறியதாவது:
‘அமெரிக்காவில் எந்த ஒரு மாகாணத்திலும் அரசு அலுவலகங்களில் பகவத்கீதை வகுப்பு களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. மேலும், இந்துமதம் அமெரிக்க அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டம் தயாரிக்கப்பட்டபோது அனைத்து மதவிதிகளும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது இந்துமதம் மற்றும் அதில் உள்ள ஜாதிய பேதங்கள் குறித்து அந்த மதப் பிரதிநிதி களுடன் விவாதிக்கப்பட்டது. அந்த மதத்தில் மனிதர்களைப் பிரிக்கும் ஜாதி உள்ளது. ஆகையால், அமெரிக்க அரசமைப்புச் சட்ட நூலில் இந்துமதம் குறித்த எந்த ஒரு வாசகமும் இடம் பெறவில்லை. பகவத்கீதை மனிதர்களைப் பிரிக்கும் ஜாதியை வலியுறுத்துகிறது. பிறப்பால் ஜாதி பாராட்டும் நூல் பகவத்கீதை. பிறப்பால் மனிதர்களை ஜாதிகளாகப் பிரிக்கும், மனிதநேயமற்ற கருத்தைக் கூறும் பகவத்கீதை என்ற நூல் வலியுறுத்தும் மதம் அமெரிக்க மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும். அதை அமெரிக்க அரசு அலுவலகங்களில் படிக்கக் கூடாது’ என்று கூறியதுடன் இந்துமத வழிபாடு நடக்க எதிர்ப்புத் தெரிவித்து அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
– 20.6.2015

மகாபாரத காலத்தில் கிருஷ்ணன் வாழவே இல்லை என்று பிரபல வரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ்.சர்மா முடிவாகக் கூறுகிறார்.
11ஆவது வகுப்புக்கான என்.சி.சி.ஆர்.டி. வெளியிட்டுள்ள தொன்மை இந்திய வரலாறு (ஏன்சியன்ட் இண்டியன் ஹிஸ்டரி) எனும் நூலை எழுதினார் ஆர்.எஸ்.சர்மா. (ராம் சரண் சர்மா).
அந்த நூலில், கிருஷ்ணன் மகாபாரதத்தில் முக்கிய பங்கு ஆற்றியதாக இருந்தாலும், மதுரா நகரில் கி.மு.200 முதல் கி.பி. 200 வரை கிடைக்கப் பெறும் சிற்பத் துண்டுகள், கிருஷ்ணனைப் பற்றிய தகவலைத் தரவில்லை. இதன் காரணமாக ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றின் அடிப்படையில், இதிகாச காலம் எனும் கருத்தைப் பற்றிப் பேசுவதை விட வேண்டும் என எழுதப்பட்டிருக்கிறது. இது வரலாற்று ஆசிரியர்

ஆர்.எஸ்.சர்மாவின் படப்பிடிப்பு!
கேள்வி: மகாபாரதத்தில் கிருஷ்ணன் நினைத்திருந்தால் சில நிமிடங்களில் துரியோதனன் உட்பட கவுரவர்கள் அத்தனைப் பேரையும் அழித்திருக்கலாம். ஏன் குரு சேத்திரப் போர் வரை செய்ய விட்டார்.
பதில்: முதன்முதலில் எழுதப்பட்ட மகாபாரதத்தின்படி, கிருஷ்ணன் யாதவர்களின் அரசனே தவிர, கடவுள் இல்லை. துரியோதனனிடம் பாண்டவர்களின் பிரதிநிதியாகச் சென்று ‘போர் வேண்டாம்’ என்று கருத்துரைக்க மட்டுமே கிருஷ்ணனால் முடிந்தது. அவர் கடவுள் அவதாரமாகக் கருதப்பட்டது – மிகப் பிற்பட்ட காலத்தில்தான். பிறகு கடவுளுக்குரிய அம்சங்கள் மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டன. மிகப்பெரிய அளவில் கிருஷ்ணன் வழிபாட்டை முதலில் துவக்கி வைத்த பெருமை வங்காளிகளுக்கே சேரும்.
– ஆனந்தவிகடன், 31.10.2007புராணக் கட்டுக்கதைகளை எடுத்துக் கொண்டால்கூட, அதில் பகவான் கிருஷ்ணன் என்று சொல்லுவதற்கு ஒரே ஒரு பருக்கை உண்டா?

அறிஞர் அண்ணா சொன்னார்: சிறுவயதிலே வெண்ணெய்யைத் திருடி வாலிப வயதிலே பெண்ணைத் திருடுபவன் எல்லாம் கடவுளா? இத்தகைய கடவுள்கள் எதைப் போதிக்கின்றன? எதைக் கற்றுக் கொடுக்கின்றன என்பது தான் முக்கியம்.
அந்தக் காலத்தில் எல்லாம் பெரும்பாலான வீடுகளிலும், சலூன்களிலும் ஒரு படம் கட்டாயம் மாட்டப்பட்டிருக்கும்.
குளத்தில் பெண்கள் குளித்துக் கொண்டு இருப்பார்கள். ‘கடவுள்’ கிருஷ்ணன் என்ன செய்வான்? குளக்கரையில் பெண்கள் கழற்றி வைத்திருந்த ஆடைகளை எல்லாம் களவாடி எடுத்துச் சென்று; மரக்கிளையில் அமர்ந்து குளிக்கும் கோபியர்களின் நிர்வாணத்தைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கும் படம் தான் அது!
இப்பொழுது அந்தப் படம் எல்லாம் போயே போச்சு.

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் ஆற்றிய பிரச்சாரப் பெருந்தொண்டால் வெட்கப்பட்டுப் பக்தர்களே ஏற்கெனவே மாட்டப்பட்டிருந்த அந்தப் படங்களைக் கழற்றிக் கழிசடையில் வீசி எறிந்து விட்டனர் என்பதுதான் உண்மை.
புத்தர் கொள்கையை ஒழிக்கவே கிருஷ்ண அவதாரக் கதை என்கிறது என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா.
புத்தர்பிரான் அற மொழிகளில் (பஞ்சசீலம்) முக்கியமானது. பிறர் மனைவியை விரும்பாதே என்பது இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக – கிருஷ்ணாவதாரக் கொள்கை ஆரிய பார்ப்பனர்களால் இட்டுக்கட்டிப் பரப்பப்பட்டது – காம விளையாட்டுக்களை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே ‘கிருஷ்ண லீலா’ கதையின் நோக்கம்.
புத்தர் கெள்கையின் சொல்வாக்கை ஒழிக்கவே கிருஷ்ண அவதாரக் கதை இட்டுக் கட்டப்பட்டது என்கிறது என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா.
இத்தகையதோர் சூழலில் சென்னை மயிலாப்பூரில் இவர்களின் அமைப்பின் சார்பில் மன அழுத்த மேலாண்மை வகுப்பில் ஞாயிறுதோறும் உபந்நியாசம் நடத்துகிறார்களாம்.
பார்ப்பன ஆதிக்க உயிர் இந்தக் கடவுள் காடாத்திடம் தானே உயிர் வாழ்கிறது – அதனால் தான் இதுபோன்ற வேலைகளைத் துணிந்து செய்கின்றனர் – எச்சரிக்கை.

கிருஷ்ணனின் பாகவதம்
பற்றி ராஜாஜி!
“வியாசர் விருந்து என்ற தலைப்பிலும், சக்ரவர்த்தி திருமகன் என்ற தலைப்பிலும் மகாபாரதத்தையும், இராமாயணத்தையும் ‘கல்கி’யில் தொடராக ராஜாஜி எழுதி வந்தது அன்பர்களுக்குத் தெரியும். அதன்பின்னர் பாகவதத்தை எளிய தமிழில் எழுதலாமே என்று சதாசிவம் தமது யோசனையை ராஜாஜியிடம் வெளியிட்டார். அதற்கு ராஜாஜி கூறிய பதில் சிந்திக்க வைப்பதாகும்.
“சதாசிவம், எனக்குப் பாகவதத்தில் நாட்டமில்லை அதில் பகவானின் லீலைகளும் அற்புதங்களும் மிகுதியாக உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
– ‘கல்கி’, 4.10.2009, பக். 72

தினமலரில் (16-12-2003)
வெளிவந்த விமர்சனம் இதோ:
“நமக்குள்ள இருப்பது போலி ஆசாரம். சிலதை புனிதம் இல்லைன்னு தடை பண்ணி வச்சிருக்கோம். ஆன்மிகம் என்பதை நம்மைப் போல தப்பாப் புரிந்து கொண்டவர்கள் யாரு மில்லை. ‘நேத்து மாலை முழுவதும் உனக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். நீ ஏன் வரல்லே? என்தாபம் தாங் கல்லே!’ இப்படி ஒரு பாட்டு தெலுங்குல இருக்கு. அர்த்தம் தெரிஞ்சா தடை போட்டுடு வாங்க!
க்ஷேத்திரக்ஞர் பாட்டு ஒண்ணு இருக்கு, ‘கிருஷ்ணா! இப்ப வந்திருக்கிறே… போ… போயிடு. அப்புறம் வா. என் புருஷன் வர நேரமிது!’ என்று. யாராவது அர்த்தம் தெரிஞ்சு ஆடறாங்களா?
அஷ்டபதி ஒண்ணு இருக்கு. தலைவி சொல்றா… ‘தாபம் அதிகமாயிட்டது. அவனைப் போய் இழுத்துக் கொண்டு வாடி’ என்கிறாள். தோழி போயிட்டு லேட்டா வரா. ‘ஏன் தலை எல்லாம் கலைஞ்சிருக்கு?’ன்னு தலைவி தோழிக்கிட்ட கேட்கிறாள். ‘காத்துல கலைஞ்சு போயிட்டுது’ன்னு பதில் சொல்றா.
ஜீவாத்மா பரமாத்மாவை அடைய தாபத்துல துடிக்கிறது என்பதெல்லாம் மழுப் பலாகத்தான் தோன்றது. சில சமயங்களில் மாலை நேரக் கச்சேரியில் மரியாதை பண்ணனும் என்பதற்கா கவே தொண்டை போனவர் களை எல்லாம் போட்டு விடுகின்றனர். அவர்களை விடவும் முடியாது. இந்த மாதிரி உள்ளவர்களை காலை நேரக் கச்சேரியில் தள்ளி விடலாம். பல்செட் வைத்துக் கொண்டு பாடு கிறவர்களுக்கு எப்படிக் கூட்டம் வரும்?
– இசை விமர்சகர் சுப்புடு
‘தினமலர்‘ (16.12.2003) நாளிதழில்

புதன், 6 மார்ச், 2024

அடித்தவர்களே, அழும் நாடகம் இதோ! ஏமாறமாட்டோம்!! (பார்ப்பனர்களின் இனவெறி)

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!

 அடித்தவர்களே, அழும் நாடகம் இதோ! ஏமாறமாட்டோம்!!

—கி.வீரமணி

பார்ப்பனர் நலன் பாதுகாப்பதையே தனது ஒரே லட்சிமாய் கருதி நடத்தப்பெறும் ஏடுகளில் ஒன்றான ‘தினமலரில்' ஒரு பார்ப்பனர் தாங்கள் ஏதோ யூதர்களை ஜெர்மனியில் ஹிட்லர் வாட்டி யதைப்போல தங்களை தமிழ்நாட்டு திராவிடர்கள் - பார்ப்பனரல்லாதவர்கள் நடத்துகிறார்கள் என்று பொய்யழுகை அழுதிருப்பதற்கு ‘விடுதலை' தனது தலையங்கத்தில் மிகத் தெளிவான முறையில் பதில் அளித்துள்ளது (12.6.2021).

திராவிடர் இயக்கத்தின்மீது இந்த பார்ப்பன ‘பிரகஸ்பதிகள்' வைக்கும் குற்றச்சாற்றுகள் என்ன?

"எந்த ஓர் இனத்தையும் தவறாகப் பேசுதல், தாக்குவது இந்தியச் சட்டப்படி குற்றம். ஆனால், ஆட்சியிலிருப்போர் அந்தக் குற்றத்தைச் செய்கின்றனர்.

‘பார்ப்பனர்' என்பதே, அந்த சமூகத்தினரை இழிவுபடுத்தும் சொல்தான். ஆனால், சிறுபான்மை இனமான அவர்கள், அந்த சொல்லுக்குக்கூட எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒதுங்கி, ஒதுங்கி இருக்கின்றனர்."

- இந்த முதல் குற்றத்தில் உள்ள நியாய அநியாயங்களை விவாதிக்கலாமா?

1. ‘எந்த ஓர் இனத்தையும் தவறாகப் பேசுதல், தாக்குதல் இந்திய சட்டப்படி குற்றம்.

இதைச் செய்தது பார்ப்பனர்களான ஆரியர்கள் அல்லவா? ஆரிய வேதங்களில் கறுப்பின மக்களை ‘தஸ்யூக்கள்', ‘சண்டாளர்கள்', ‘சூத்திரர்கள்', ‘தொடக்கூடாதவர்கள் என்று எழுதியதோடு, மனுதர்மம், அர்த்தசாஸ்திரம், பகவத் கீதை முதலானவற்றில் பகிரங்கமாகவே இழிவுபடுத்தி வைத்து, அதற்கு சட்ட அங்கீகார முத்திரை பதித்தவர்கள் - திராவிட இயக்கத்தவர்களா? பெரியாரா? அண்ணாவா? கலைஞர் கருணாநிதியா? இன்றைய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினா? கி.வீரமணியா? யார்?

மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்.

2. அந்த மக்களின் எண்ணிக்கை பெரும் பான்மையாக இருந்தும்,  மக்களிடையே புழக்கத்தி லிருக்கும் தொகை 8 முதல் 10 கோடியாக இருக்கும் அவர்களின் தாய்மொழியான தமிழ் மொழியைத் தாழ்த்தி, ‘‘நீச்ச பாஷை - அல்ல நீஷ பாஷை, எந்த கோவிலுக்குள்ளும் அர்ச்சனைக்குத் தகுதி யற்ற மொழி, மக்களின் புழக்கத்தில் இல்லாத ‘செத்த மொழியாக' இருந்தாலும், வழிபாடுகளில், கடவுளுக்கு உகந்த மொழி ‘தேவ பாஷை'யான ஆரிய மொழியான சமஸ்கிருதம் என்று கூறி, இன்றும் தமிழ்நாட்டுக் கோவில்களில் - தமிழன் - திராவிடன் கட்டிய கோவில்களில் அர்ச்சனை மொழியாக தமிழை அனுமதிக்க மறுப்பது யார்? திராவிடர்களா? திராவிடர் இயக்கத்தவர்களா? பார்ப்பனர்களாகிய ஆரியர்களா?

3. அனல் வாதம் - புனல் வாதம் என்ற பெயரால் பல்லாயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்து, கழுவிலேற்றி அதை ஆண்டுதோறும் விழாக்கள் செய்வது ஏறத்தாழ ஒரு ‘இனப் படுகொலை'யைக் கொண்டாட வைப்பது அல்லவா?

4. மனுதர்மத்தில் சூத்திரன், பஞ்சமன் என்ற நான்கு ஜாதிகளையும், ஜாதி, அடுக்குக்குக் கீழே 5 ஆவது பஞ்சமனையும் - தீண்டத்தகாதவர்கள் - ஆறாவது மிக மிகக் கீழான  மக்கள் தொகையில் சரி பகுதியாக உள்ள பெண்கள் அனைவரும் படிக்கக் கூடாதவர்களாகவும், பிறவி இழிவானவர்கள் என்றும் இன்னும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரும், கேரளாவில் சபரிமலையில் அய்யப்பன் கோவிலில் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று கச்சை கட்டி நின்று, பெண்களின் உரிமை பறித்து, அவர்களைக் கேவலப்படுத்துவது பார்ப்பன சனாதனம்தானே!

மனிதாபிமானத்தோடு அவர்கள் என்றாவது பார்த்ததுண்டா?

விதவைகளை உயிருடன் எரித்தவர்கள் யார்? எரிக்கப்பட்ட அவர்களுக்குக் ‘கோவில் கட்டி' தெய்வமாக்கி - ‘சதி மாதா'வாக்கிய சதிகாரக் கூட்டம் எது?

5. பகவத் கீதையில் 9 ஆம் அத்தியாயத்தில் 32ஆவது சுலோகத்தில் பெண்களையும், ‘சூத் திரர்கள்' என்று இழிபெயரைச் சூட்டிய உழைக்கும் மக்களையும் ‘‘பாவ யோனி''யிலிருந்து பிறந்தவர்கள் என்று எழுதி வைத்து, இழிவுப்படுத்தி வருபவர்கள் யார்?

பார்ப்பனர்களா? மற்றவர்களா?

தங்கள் தாயையே கொச்சைப்படுத்துவதுபோல் பெண்கள்மீது இப்படி ஒரு பிறவி இழிவை வீசி அடிமைகளாக்கி மகிழும் இனம் எது?

‘பார்ப்பனர்' தங்களை ‘பிராமணன்' என்று அழைக்கச் சொல்லும்போது, அதன் வர்ணாசிரம படிக்கட்டு வரிசை கதவைத் தட்டி எடுத்து வருவது ‘சூத்திரன்' என்ற இழிச் சொல்தானே?

எனவேதான் தந்தை பெரியார், ‘பார்ப்பானை பிராமணன் என்று அழையாதீர்' என்று இழிவைத் துடைக்க அந்த மக்களுக்கு அழைப்பு விடுத்தார். தங்கள் மீதுள்ள கறையைப் போக்க, அவமானத்தை நீக்கவே தவிர, வேறில்லை.

6. ‘பிராமணன்' என்ற சொல்லை பெரியாரும், திராவிட இயக்கம் மட்டுமா தவிர்த்து வருகிறது?

தமிழ் இலக்கியங்களில் எங்காவது பிராமணன் என்ற சொல்லாட்சி உள்ளதா?

(வீ) மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (குறள் 134)

என்பதில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவரின் திருக்குறளில் உள்ள சொல் அல்லவா?

(வீவீ) மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்

தீவலம் செய்வது காண்பார்க ணோன்பென்னை - சிலப்பதிகாரத்தில்

(கோவலன் - கண்ணகி மாந்த திருமணத்தைக் குறிக்கும் செய்யுளில் உள்ள சொல் ‘பார்ப்பான்' என்பதுதானே!

(வீவீவீ) ‘பார்ப்பன மாந்தர்காள், பகர்வது கேண்மின்

நால்வகைச் சாதியை இந்நாட்டினில் நீர் நாட்டினீர்'

- பார்ப்பனர் என்று கூறப்படும் -

பார்ப்பனர் கபிலர் அகவலில் பயன்படுத்தப் பட்டுள்ள சொல் ‘பார்ப்பனர்'தானே!

பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்

போர் கொண்ட வேந்தர்க்கும் பொல்லாத வியாதியாம்

திருமூலர்

திருமந்திரத்தில் கூற்று அல்லவா!

பழைய இலக்கியங்களை விட்டு பாரதியார் யுகத்திற்கு வருவோம்!

(அ) பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே!

- பாரதி பயன்படுத்தியது இச்சொல்தானே!

(ஆ) ‘‘சூத்திரனுக்கொரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறு ஒரு நீதி

சாத்திரம் சொல்லிடுமாயினும் அது சாத்திரமல்ல

சதியென்று கண்டோம்''

இப்படி இலக்கியத்தினுள் நுழைந்தால் இன்னும் ஏராளமான தரவுகள் உண்டு!

அனைவரும் உறவினர் - யாதும் கேளிர் என்ற பண்பாடு திராவிடப் பண்பாடு - சமத்துவ சங்கநாதம்!

பெயர் வைப்பதில்கூட பேதமும், இழிவும் கீழ் மக்களாக்கப்பட்ட சூத்திரர்களுக்கு சூத்திரர்களுக்கு மனுவின் கட்டளை என்ன தெரியுமா?

‘‘பிராமணனுக்கு மங்களத்தையும், க்ஷத்திரி யனுக்கு பலத்தையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகின்ற பெயரை இடவேண்டியது!

உண்ணும் பதார்த்தங்களில்கூட அவமானம் உருவாக்கியது மனு. படிக்கும்போது எங்கள் நெஞ்சங்கள் கொதிக்காதா?

மனு 3 ஆவது அத்தியாயத்தில் 241 ஆம் சுலோகத்தில்

‘‘பன்றி மோத்தலினாலும், கோழி சிறகின் காற்றினாலும்,  நாய் பார்வையினாலும் சூத்திரன் தொடுவதாலும் பதார்த்தம் அசுத்தமாகிறது!

என்னே கேவலம்!

பன்றியை விட -

கோழியை விட -

நாயை விட

ஆறறிவு படைத்த, இந்த மண்ணின் உழைப்புச் செல்வம் தொட்டாலே ‘தீட்டு' - அசுத்தமாகிறதாம்!

(சூத்திரன் தொட்டுக் கொடுக்கும் ரூபாய் நோட்டு, தங்க நகைகள், கறந்த பால், கடைந்த வெண்ணை, உருக்கிய நெய் ‘சூத்திரன் - சூத்திரச்சிகளின்' கைபடாமலா உருவானது?

அவற்றை மட்டும் ‘நன்னா' ரசிச்சு, ருசிச்சு சாப்பிடறேளே, அப்போது எங்கே போச்சு சூத்திர - பஞ்சமத் தீட்டு?

இவ்வளவுக் கொடுமைகளை, அடிமைத்தனத்தை ஓராண்டு, ஈராண்டு அல்ல - பல்லாயிரம் ஆண்டுகள் தொடங்கி, இன்று ஓர் இனம் - மண்ணுக்குச் சொந்தக்கார இனம் இழிவைத் தூக்கி எறிந்து, சுயமரியாதையைப் பெற்று முழு மனிதனாவது கூடாதா?

பேதத்திற்கு விடை கொடுக்க உங்களைப் பார்ப்பனர் என்று அழைப்பதால், உங்கள் அந்தஸ்து ‘ஆவி'யாகப் போய்விட்டதா? என்னே நீலிக் கண்ணீர்!

இன்னும் கல்வி யாரிடத்தில்?

இன்னும் பதவிகள் எவரிடத்தில் ஏகபோகம்?

இன்னும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் யார் வசம் ஆதிக்கத்தில்?

இன்னும் வறுமையில் யார் வாடுபவர்கள்?

ஊடகங்கள் யார் வசம்?

தொழில் அமைப்புகளின் ஆதிக்கம் எவர் கையில்?

அதிகாரவர்க்கம் அக்கிரகாரம்தானே!

மறுக்க முடியுமா?

எனவே, உண்மையில்,

வஞ்சிக்கப்பட்டவர்கள்

வாழ்வாதாரம் இழந்தவர்கள்

அவமானத்தைச் சுமந்து

பஞ்சைகளாய், பராரிகளாய், பாழ்பட்ட மக்களாகி வாழ்பவர்கள் எந்த இனத்தவர்?

இவ்வளவு அநீதி, உரிமைப் பறிப்புக்குப் பின்னரும்,

சமூகநீதி வகுப்புரிமைப்படி உங்கள் (பார்ப்பனர்) மக்கள் தொகை விகிதாச்சாரப்படி உங்கள் பங்கை நீங்கள் பெறுவதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை; ஆனால், மற்றவரைப் படிக்கவோ, உத்தியோகம் பார்க்கவோ அனுமதிக்கவே முடியாது என்று இன்னமும் சூழ்ச்சி கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்து, எங்கள் இன மீட்சிக்குப் பெருந்தடையாக உள்ளவர்கள் நீங்கள்தானே!

மீண்டும் மனு யுகத்திற்கு இந்த நாட்டை அழைத் துச் சென்று அமர வைக்க அயராது பாடுபடும் சமூக ‘‘அட்டைகள்'' உங்களைத் தவிர வேறு யார்?

மனசாட்சியுடன் பதில் கூறுங்கள்!

புதன், 25 அக்டோபர், 2023

திசை திருப்புவோரே இதற்கு தெளிவான பதில் உண்டா? - கி.வீரமணி (கீதை கூறுவது என்ன?)

   

பகவத் கீதையில்... 

"சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்
குணகர்ம விபாகஷ.... 

என்று கீதையில் உபதேசித்த கிருஷ்ணன் சுலோகத்தை, "ஜாதி வர்ண தர்மத்தை நானே உண்டாக்கினேன்" என்று கூறுவதை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா,"The Truth About the Gita" என்ற அரிய ஆராய்ச்சி நூலை எழுதிய ஆந்திர சிந்தனையாளர் வி.ஆர். நார்ளா (V.R. Narla),  காஷ்மீரத்து புரட்சி செக்கியூலரிஸ்ட்  பிரேம்நாத் பாஸ் (Premnath Bass) போன்றவர்கள் சுட்டிக் காட்டும் நிலையில்,  அதைத் திசை திருப்ப, கீதையைப் பிரச்சாரம் செய்யும்  கீதை வியாக்கியான திரிபுவாத நிபணர்களுக்கு ஒரு கேள்வி.

(காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரரோ இதில் நாணயமாக, "ஜாதி வர்ணம் என்பது பிறப்பின் அடிப்படையில் தான்; குணத்தின் அடிப்படையில் ஒருபோதும் அமையாது" என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார். "பெரியவா" என்று பய பக்தியுடன் இவர்கள் கூறும் அவரது விளக்கத்தை கீதை விளக்கக்காரர்கள் ஏனோ இதில்  ஏற்பதில்லை!)

"குணத்தை வைத்தே மேல் ஜாதி, கீழ் ஜாதி என்று கொள்ள வேண்டும்" என்பதையே சதுர் வர்ணம் மயாசிருஷ்டத்திற்கு"ப் பொருள் கொள்ள வேண்டும் என்றால், இதன்படி உயர்ந்த குணம் உள்ள "சூத்திரனை" பிராமணன் என்று அங்கீகரிக்க சாஸ்திரமோ, சட்டமோ அனுமதிக்கிறதா? ஒப்புக் கொள்கிறதா? பிராம்மண வர்ணத்தில் பிறந்து தவறு செய்பவன் "சூத்திர - பிராமணன்" ஆகிறார் என்றால் அப்படி ஒரு பிரிவு, ஜாதி இருந்திருக்க வேண்டுமே! 

நல்ல உயர்ந்த குணம் படைத்து வாழும் சூத்திரன் - "பிராமணோ - சூத்திரன்" என்று பிராமணோர் பெற்ற தனி ஜாதியாக - இத்தனைப் பிரிவுகள் உள்ள ஜாதிகளில் ஆகியிருக்க வேண்டுமே - அப்படி இதுவரை இல்லையே -  ஏன்? ஏன்?

பதினொன்றாவது அத்தியாயத்தில், சுலோகம் 84 :

"பிராமணன் பிறப்பினாலாயே தேவர்களுக்கும்

பூஜிக்கத் தக்கவனாய் இருக்கிறான்.

பத்தாவது அத்தியாயம் 73ஆவது சுலோகத்தில்

"பிராமணன் தொழிலைச் செய்தாலும் சூத்திரன் பிராமண ஜாதியாக மாட்டான். ஏனென்றால் அவனுக்கு பிராமண ஜாதித் தொழிலில் அதிகாரமில்லையல்லவா?

சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் சூத்திர ஜாதியாக மாட்டான். ஏனென்றால் அவன் எந்தத் தொழிலைச் செய்தாலும் அவன் உயர்ஜாதி அல்லவா? இப்படியே இந்த விஷயங்களை பிரம்மாவும் நிச்சயம் செய்திருக்கிறார்."

இதற்கும், குணத்தை அடிப்படையாகக் கொண்டதே கீதை கூறும் வர்ணம் என்று அர்த்தம் கூறுவதற்கும் எத்தகைய முரண்பாடு?

சிந்தித்துப் பாருங்கள், "வர்ண தர்மத்தைப் பாதுகாக்கவே சொந்தங்களிடையேகூட தயங்காது போர் செய்!" என உபதேசம்.

"கடமையைச் செய்" என்பதை வார்த்தைகளால் கூறினால் அந்தக் கடமை செய்வது வர்ண தர்மப்படி விதித்த கடமையே தவிர பொதுவான அர்த்தம் கொண்டதல்ல என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். 

சனி, 15 ஏப்ரல், 2023

கீதை – மாணவர்கள் கற்க வேண்டிய ஒன்றா?

 


மே 1-15,2022

கவிமாமணி இரா.குடந்தையான்

மாணவர்களை மூளைச் சலவை செய்து, மதவுணர்வையூட்டி, பா.ஜ.க. அரசுகள் தற்போது முயன்று மடமையை வளர்த்துக் கொண்டிருக்கின்றன.

மத்தியப் பிரதேச அரசு 2011இல் செய்த அந்தத் திருப்பணியைத்தான், இன்று கருநாடக, குஜராத் அரசுகள் செய்ய முன்வந்துள்ளன. பகவத் கீதை நீதி போதனைகளைச் சொல்லும் நூலல்ல. ஆன்மா, கர்மா, வர்ணாசிரமம், உலகத் தோற்றம், படைப்பு பற்றிப் பேசும் தத்துவ நூல்.  மாணவர்களில் அறிவு வளர்ச்சிக்கு கீதை எந்த அளவில் பயன்படும் என்று தெரியவில்லை.

ஒரு நூலைப் பாடமாக வைக்க அரசு முடிவு செய்தால், அரசு கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பொருத்தமான பதிலைச் சொல்ல முன்வர வேண்டும்.

1.            நூல் எழுதப்பட்ட காலம் எது?

2.            நூலாசிரியன் யார்? அவனது கல்வித் தகுதி என்ன?

3.            மாணவர்களுக்கு நூல் மூலம் சொல்லப் போகும் செய்தி என்ன? படிப்பினை என்ன?

4.            நூல் மாணவர்களிடையே ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

நூலின் காலம் எது?: பகவத் கீதை கிருஷ்ணனால் அர்ச்சுனனுக்குச் சொல்லப்பட்ட 700 ஈரடிப் பாடல்களைக் கொண்ட நூல். மகாபாரதம் கி.மு.850இல் நிகழ்ந்ததாகக் கூறுகிறார்கள்.

ஆனால், கீதையின் எழுத்து நடை, சொற் பயன்பாடுகள், அமைப்பு முறை இவை வைத்துப் பார்க்கும்போது அது கி.பி.300இல் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“சேத்திரம் என்பது யாது? அது எத்தன்மையது? என்பது பற்றி ரிஷிகள் வேதத்தில் பலவிதமாகப் பாடியிருக்கிறார்கள். பிரம்ம சூத்திரத்திலும், உபநிடதங்களிலும் ஏதுக்களை அறுதியிட்டுக் கூறியிருக்கிறார்கள்.’’ (‘கீதை’ -_ 13:34)

கீதையில் பிரம்ம சூத்திரத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்ம சூத்திரம் எழுதப்பட்ட காலம் கி.மு.600. கீதை கி.மு.850இல் சொல்லப்பட்டிருக்கு மானால் 250 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்படும் பிரம்ம சூத்திரத்தைப் பற்றி கிருஷ்ணனுக்கு முன்னதாக எப்படித் தெரியும்? எனவே, கீதை மகாபாரத காலத்தில் எழுதப்படவில்லை.

ஆசிரியன் யார்? அவனது ஒழுக்கம் என்ன?

வரலாற்றில் 4 கிருஷ்ணர்கள் உள்ளனர்.

1.            கி.மு.1200இல் எழுதப்பட்ட ரிக்வேதம் பழங்குடி இனத்தவனான கருப்பன், யது குல கிருஷ்ணனைப் பற்றிக் கூறுகிறது. இவனுக்கு இந்திரன் எதிரி.

2.            கி.மு.600இல் எழுதப்பட்ட சாந்தோக்கிய உபநிடதத்தில் தேவகியின் மைந்தனாகச் சொல்லப்படும் கிருஷ்ணன் ஆங்கிரச முனிவரின் சீடன். ஆனால் அவதாரமல்ல.

3.            கி.மு.850இல் பாண்டவர்கள் காண்டவா காடுகளை எரித்து நகராக்கியபோது அவர்களுக்குத் துணையாக _ நண்பனாக இருந்தவன் ஒரு கிருஷ்ணன்.

4.            இதைத் தவிர கிரேக்க நாட்டில் ஹிராக்லிஸ் என்ற கிருஷ்ணன் இருந்திருக்கிறான். இவனும் காளிங்க பாம்பைக் கொன்றவன். சூரியனின் சாபத்தால் எரிந்து கருப்பானவன்.

இந்த நால்வரில் பாண்டவர்களின் நண்பனாய் இருந்தவனையே கீதாசாரியன் என்று எடுத்துக் கொண்டால் மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதற்கோ, நீதி போதனை செய்வதற்கோ அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது?

“கோபியர் புடவைகளைக் கைப்பற்றி விளையாடி, பல்வேறு பெண்களுடன் காதல் களியாட்டங்களில் ஈடுபட்டவனும், தன் சொந்த மாமனையே கொலை செய்தவனும், மகாபாரதத்தில் கபட யோசனைகளை அள்ளி வீசியவனும் ஆகிய கிருஷ்ணன் எந்த ஒரு ஒழுக்கத்துக்கும் தகுதி உடையவனாக இல்லை. அவனுக்கு 16,108 மனைவிகள் இருந்தனர்’’ என்கிறார் டி.டி.கோசாம்பி (நூல்: பண்டைய இந்தியா)

கீதையின் எட்டாவது அத்தியாயத்தில் இரவு, பகல், உத்திராயணம், தடசிணாயனம் என்பது பற்றி பேசுகிறான்.

பூமி 23.5 டிகிரி சாய்ந்த அச்சில் சூரியனைச் சுற்றி வருவதால் வடக்கு நோக்கி நகர்வது போலவும் (உத்திராயணம்), தெற்கு நோக்கி நகருவது (தட்சிணாயனம்) போலவும் ஒரு மாயத் தோற்றம் தெரிகிறது. இதைத் தவிர சூரியன் உதிப்பதுமில்லை. மறைவதும் இல்லை என்பதே அறிவியல் உண்மை!

“சித்தத்தை அடக்கியாண்ட முனிவனின் யோகநிலை காற்று இல்லாத இடத்தில் கொழுந்து விட்டெரியும் விளக்கு போன்றது’’ (கீதை 18:67) என்கிறான் கிருஷ்ணன். காற்று இல்லாவிட்டால் விளக்கே எரியாது எனும் அறிவியலுக்கு எதிரானது கீதை. அப்படிப்பட்ட கீதை பாடநூலா?

இந்த முட்டாள்தனமான வாசகங்கள் நிரம்பிய கீதையைப் படித்து மாணவர்கள் பாழாய்ப் போக வேண்டுமா?

“பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரர்களுக்கென்று வகுக்கப்பட்ட கர்மங்கள் அவரவர் சுபாவத்தில் தோன்றும் குணங்களை வைத்தே பார்க்கப்படுகிறது. இதில் சூத்திரர்களின் பணி ஊழியம் புரிவதே; அது சூத்திர இயல்பும் காரியமும் ஆகும். (கீதை 18:4)

குணங்களின்படி பிரிவு என்றால், அது பரம்பரையாக எப்படி சாத்தியமாகும்? அப்பனுக்குள்ள குணம் பிள்ளைக்கோ, பிள்ளைக்குள்ள குணம் பேரக்குழந்தைக்கோ வராதே! எனவே, பிறப்பின் அடிப்படையில் பேதம் என்பது மனித தர்மத்திற்கு எதிர் அல்லவா?

இப்படி பிறப்பாலேயே பேதங்களைக் கற்பிக்கும் பகவத் கீதையை மாணவர்களுக்குப் பாடமாக வைக்கும் அரசு, ஜாதிப் பாகுபாடுகளை வளர்க்கவும், ஆணவக் கொலைகளைப் பெருக்கவும் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா?

“பகவத் கீதை மத நூல் அல்ல. அது ஒரு வாழும் நெறி, நன்நெறியைப் போதிக்கிறது. சமூக நீதியைக் காப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது’’ என்றெல்லாம் உயர் நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்குமானால் நீதிபதிகளின் தகுதியே அய்யத்திற்குரியதாகும்.

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “கருநாடக, குஜராத் அரசு போல அனைத்து மாநிலங்களும் கீதையைப் பாடமாக்க முன்வர வேண்டும்’’ என்று பரிந்துரை செய்கிறார். தொடக்கத்திலேயே இம்முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்!

‘ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக் கூடாது, தேர்வு எழுதக் கூடாது’ என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விதிக்கும் பா.ஜ.க. அரசுகள், மாநிலங்களை மத அடிப்படையில் பிரித்து வெறியர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதைத் தகர்த்து, மத நல்லிணக்கம், மனித சமத்துவம், மடமை ஒழிப்பு இவற்றை நிலைநிறுத்தி, மாணவர்களின் பாடத் திட்டங்களை உருவாக்க வேண்டும்!ஸீ