பதிலடிப் பக்கம்:
கவிஞர் கலி.பூங்குன்றன்
சென்னையில் இஸ்கான் சார்பில் பகவத் கீதை வாயிலாக மன அழுத்த மேலாண்மை பற்றிய வாராந்தர வகுப்பு நடத்தப்படுகிறது என்ற தகவலையடுத்து…
25.10.2024 அன்றைய ‘விடுதலை’யில் “கீதை உபந்நியாசமாம்” என்ற தலைப்பில் முதல் கட்டுரை எழுதப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக பழம்பெரும் சுயமரியாதை இயக்க எழுத்தாளர் பி.வி.ஆர். ‘விடுதலை’யில் 19.8.1956இல் எழுதிய கட்டுரை இங்கே தரப்படுகிறது.
கிருஷ்ணன் அவதாரங்கள்
வெறும் கற்பனைக் கட்டுக் கதைகள்
லண்டன் பல்கலைக் கழக ஆராய்ச்சிப் பேராசிரியர் ஜே.பி.எஸ்.ஹால்டேன் உலகத் தோற்றம்பற்றி வெளியிட்டுள்ள கருத்தில் நீந்துவன, ஊர்வன, விலங்குகளிலிருந்து மனிதர்கள் தோற்றமாயினர் என்றும், இந்துமத புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஷ்ணுவின் அவதாரங்கள் இந்த உலக உயிரினத் தோற்ற வளர்ச்சி வரலாற்றையே குறிப்பிடுகிறதென்றும் பேராசிரியர் சாஹ்னி தெரிவித்த கருத்து உலகத் தோற்றம் பற்றி, இப்போது ஆராய்ச்சியாளர் கருத்துக்கு ஆதரவாகவுள்ளது என்றும், நீந்துவனவான மீனினத்திலிருந்து, ஆமை முதலிய ஊர்வனவும், ஆமையிலிருந்து பன்றி முதலிய விலங்குகளும், இந்த விலங்குகளிலிருந்து குள்ள மனிதர்களும், இந்த குள்ள மனிதர்களிலிருந்து பெரிய உருவமும் ஆற்றலுமிக்க சிம்மம் போன்ற மனிதர்களும் தோன்றினர் என்பதே இவரது விளக்கக் கருத்து என்றும், இந்த உலகத் தோற்ற உண்மையை அக்கால இந்திய மக்கள் தெளிவுற உணர்ந்து இருந்தனரென்று தான் என்றும் நினைக்கவில்லை. ஆனால், இந்த அவதாரக் கதைகளின் வரிசைக் கோர்வையை கவனிக்குமிடத்து அடிநாள் இந்தியர் வெளியிட்டிருந்த கருத்துக்களைக் கொண்டு, பழக்கத்தின் மீது இக்கருத்துக் கொண்டு இப்படி பிற்காலத்தில் கதைகள் புனைந்துள்ளனர் என்றே எண்ணச் செய்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். அவதாரங்கள் வெறும் புரட்டு என்பதற்கு ஏராளமாக ஆதாரங்கள் உள்ளன.
தழுவல்
மச்சாவதாரம் என்பது பண்டைக்கால ரோமர் புராணக் கதைகளில் உள்ள ஜானஸ் என்ற இருமுக தேவனின் கதையின் தழுவல் என்று பிரிட்டன் தத்துவக்கழக உறுப்பினரான திருமதி எலிசபெத் ஏ ரீட் என்பவர் தாம் எழுதிய இந்து இலக்கியங்கள் அல்லது இந்தியாவின் பண்டைக்கால நூல்கள் என்பதில் விளக்கியுள்ளார். இந்த ஜானஸ்தேவனும் இவனது மனைவியும் தங்கை காமசேனியும் உடலின் மேல் பகுதி மனித உருவமாகவும் இடுப்புக்குக் கீழ்ப்பகுதி மீன் உருவமுமாகக் கொண்டவர்கள்.
மற்றும் பாபிலோனிய புராணம். தேவன் ஒன்ஸ் என்பவனும் சிரிய நாட்டுக் கடவுளிச்சியான அதகாரிஸ் என்பவளும் மேல் உடல் பகுதி மனித உருவமும் கீழ் உடல் மீனுருவமும் கொண்டவர்கள்.
கிறிஸ்தவ சகாப்தம் மத்திய காலத்தில்தான் இந்த வேத பார்ப்பன இந்துமத புராணங்கள் எழுதப்பட்டு கிருஷ்ணன் ராமன் முதலியவர்கள் விஷ்ணு அவதாரங்கள் ஆக்கப்பட்டதாக என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவில் தக்க ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது மற்றும் கிருஷ்ணன் நரி தந்திரங்கள் கொண்டவன் என்னும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநாகரிக வெறிக்கதைகள்
சிவன், கிருஷ்ணன் பற்றிய கதைகள் எல்லாம் பிற்காலத் தொகுப்புகள் என்றும் அநாகரீக வெறியாட்டுக் கற்பனைகள் என்றும் மாக்ஸ்முல்லரும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்துக் கடவுள்கள் தங்களுடைய அன்றாட உணவுக்கும் மனிதர்களை எதிர்பார்த்துக் கிடக்கின்றன என்று நையாண்டியும் செய்துள்ளார். இவர் இவ்வகை இந்த இந்து கடவுள்கள் என்பதெல்லாம் பொய் வெறும் கற்பனை சித்திரங்களும் மனிதர் செய்த சிலைகளுமேயாகும் என்ற உண்மையையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார்; மகாபாரதக் கதைகள் பைத்தியக்காரனின் கனவுகள் போன்றவை என்பதும் இந்த ஆராய்ச்சி மேதையான எலிசபெத்தின் தீர்ப்பு.
ஆந்திரப் பெரியார் வேமன்னா ராமாயணம் கொலைக்கதை பாரதம் குடும்ப பாசக்கதை என்கிறார்.
கிறிஸ்தவரிடம் சென்ற 3 பார்ப்பனர்
மேனாட்டு இலக்கிய சரித்திர ஆராய்ச்சிப் புலவர்களான வெப்பர், லேசன் என்பவர்கள் எழுதியுள்ள ஆராய்ச்சி நூல்களில் மற்றொரு கருத்தும் காணப்படுகிறது.
அதாவது கிறுஸ்தவ சகாப்தத்தின் துவக்க காலத்தில் மூன்று வட இந்தியப் பார்ப்பனர்கள் கிறிஸ்தவர்கள் வாழும் இடத்துக்குச் சென்று சிறிது காலம் தங்கியிருந்தனர் என்றும், இம்மூவரும் தங்கள் ஊருக்குத் திரும்பியதும் தங்களுடைய பார்ப்பன வேத மதத்தில் மாற்றங்கள் செய்து கிருஷ்ண வாசுதேவ வணக்கத்தையும் நுழைத்தனர் என்கின்றனர் இவர்கள். மற்றும் மகாபாரதக் கதையில் சில 5 முக்கிய பகுதிகள் கிறிஸ்து பிறந்து சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டவை என்பது பல மேனாட்டு ஆசிரியர்களின் கருத்து.
திரு. காசிநாத திரும்பக்தெலாங் எம்.ஏ. என்ற இந்திய ஆசிரியரும் மகாபாரதக் கதையில், பிற்காலத்தில் இடைச்செருகல் நடந்திருப்பதை ஆமோதிக்கிறார். மகா பாரதத்தில் 37ஆவது அத்தியாயம் பதஞ்சலி என்ற சமஸ்கிருத பண்டிதன் காலத்தில் எழுதப்பட்டதென்கிறார்.
துரியோதனன் கதை முஸ்லிம் மத ஏடான குரானிலிருந்து எடுக்கப்பட்டது என்று டால்பாஸ் வீலர் என்பவர் கூறுகிறார்.
இதன்படி மகாபாரதம் கி.பி.7ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டதாகிறது. இவற்றைக் கருதுமிடத்து இது அவதார வரலாறும் அல்ல, உண்மை சரித்திர வரலாறுமல்ல வெறும் கற்பனைக்கட்டுக் கதை என்றாகிறது.
பகவத்கீதை
பகவத்கீதையின் ஆசிரியர் யார் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் காணப்படவில்லை. இது ஒரு வைஷ்ணவப் பார்ப்பனனால் எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்பதும், பார்ப்பனர்களை உசத்திகாட்டவும், அவர்கள் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவும் எழுதப்பட்டதென்பதும், பகவத் கீதையில் காணப்படும் கருத்துக்களே சான்று கூறுகின்றன.
மற்றும் மகாபாரத மூலக்கதை தோன்றி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்த கீதைப்பகுதி நுழைக்கப்பட்டுள்ள தென்பது, பாக்களின் நடைமாற்றமும், இரு நூல்களிலுமுள்ள கருத்துக்கள் பழமையும் புதுமையுமாக இருப்பதும் உறுதிப்படுத்தும். மேனாட்டுப் புலவர் டாக்டர் பர்ன் என்பவரும் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ரிச்சார்டு சுர்லின்ஸ் என்பவர், கிரேட் பிரிட்டன் தத்துவக் கழகத்தில் ஆற்றிய ஆராச்சியுரையில், கி.பி. 3ஆம் நூற்றாண்டில்தான் பகவத் கீதை எழுதப்பட்டதென்று விளக்கியுள்ளார். சர்.மானியர் வில் லியமஸ் என்பவரும் இது பிற்காலத் தொகுப்புதான் என்கிறார்.
பல கிருஷ்ணர்கள்
கிருஷ்ணன் மனைவிகளை இந்திரன் கொன்றதாகவும், இதற்காக ஆரிய வேதப் பார்ப்பனர்கள் இந்திரனைப் போற்றும் ரிக் வேதத்தில் உள்ளதாகவும் மேனாட்டு ஆசிரியர் வில்சன், ஆங்கில மொழி பெயர்ப்பு. ரிக் வேதத்தில் முதல் தொகுப்பு 260ஆம் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றும் இந்திரன் 50,000 கிருஷ்ணன்களைக் கொன்றதாகவும், இந்திரன் ஆரிய வேதியர்களின் காவலன் என்றும், இந்திரன் தன் எதிரிகளைத் தீயிட்டுப்பொசுக்கிக் கோரக்கொலை செய்பவனென்றும், இந்த ரிக் வேதப் பாக்களில் காணப்படுவதாக இவர் எடுத்துக் காட்டியுள்ளார்.
அதாவது கிருஷ்ணன் என்ற அசுரன் 10,000 வீரர்களுடன் வந்ததாகவும் இந்திரனுடன் அம்சுமதி ஆற்றங்கரையில் சண்டை நடந்ததாகவும் வில்சன் எழுதிய ரிக் வேத மொழிபெயர்ப்பு தொகுதி 5 பக்கம் 191இல் காணப்படுகிறது.
அங்கிர நாட்டு முனிவன் கிருஷ்ணன் என்றும் ரிக் வேதத்திலுள்ளது என்றும் துரோபதைக்கும் கிருஷ்ணா – கிருஷ்ணவேணி என்ற பெயருள்ளது..
ஆரிய வேதங்களைத் தொகுத்தவரும் மகாபாரத – ராமாயணங்களைத் தீட்டியவருமான வேத வியாசருக்கும் கிரு்ஷ்ண தேவபாயனா என்றும் பெயர். இவரது காலம் கி.பி.ஆறாம் நூற்றாண்டென்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர்.
மற்றும் சண்டியோக உபநிஷத்திலும் ஒரு கிருஷ்ணன் கதாநாயகனாக்கப்பட்டுள்ளது. அருக்சுனனுக்கும் கிருஷ்ணன் என்றும் பெயருண்டு. ஆந்திரர் ஆட்சியில் ஹவிதேஹனா என்று மன்னனுக்கும் கிருஷ்னன் என்ற மகனிருந்ததாகவும் இவனைக் கதாநாயகனாகக் கொண்டும் ஒரு கதையுள்ளதாகவும் தெரிகிறது. அசுரர்கள் கருப்பு நிறமுள்ளவர். எனவே, அவர்களையும், கிருஷ்ணன் என்றே சில ஆரிய புராணங்களில் குறிப்பிட்டிருப்பதாகவும் வில்சன் சுட்டிக்காட்டுகிறார். எனவே அவதார கிருஷ்ணன் என்பவன் யார் என்பதே நிர்ணயிக்க முடியாதபடி ஆயிரக்கணக்கான கிருஷ்ணன்களும் கிருஷ்ணன் கதைகளுமுள்ளன.
கிருஷ்ணன் முதுமையுற்ற பின்னர் ஒரு வேடன் எய்த அம்பு இவனது காலில் பாய்ந்ததால் இவன் இறந்ததாக விஷ்ணு புராணத்திலுள்ளது. இது கிரேக்க வீரன் அச்சீலிஸ் (ட்ரோஜன் போர்) இறந்த வரலாற்றை ஒத்துள்ளதாகவும் இவர் எடுத்துக்காட்டுகிறார்.
கிருஷ்ணனையும் அவனது குடும்பத்தாரையும், பாண்டவருடன் தொடர்புபடுத்த பிற்கால ஆரிய மொழிப் பண்டிதர்கள் மகாபாரத பாகவதக் கதைகள் அடிக்கடி மாற்றி எழுதியுள்ளனர் என்பது மேனாட்டு ஆசிரியர் கே.டால்பாபஸ் வீலர் கருத்துத் தெரிவித்துள்ளார். பாரதக் கதை நகரமான அஸ்தினாபுரத்துக்கும் (டில்லி) கிருஷ்ணன் பிறந்ததாகக் கூறப்படும் குஜராத் வட்டாரத்திலுள்ள துவாரகைக்கும், 700 மைல் தொலைவு .அப்படியிருக்க, விரைவான வண்டி வாகன வசதியற்ற அந்த அநாகரிகக் காலத்தில், கிருஷ்ணனும், பாண்டவரும் எவ்விதம் நெருங்கி தொடர்பு கொண்டிருந்திருக்க முடியும்? கிருஷ்ணனின் வரலாறு எனப்படும் புராணக் கதையான பாகவதம் 12ஆம் நூற்றாண்டின் வாமதேவா என்பவரால் தொகுக்கப்பட்டது என்று மற்றொரு வரலாறும் காணப்படுகிறது.
நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கோசாயினனிகள் எழுதிய பிரம்ம வைவர்தா என்றதிலும், அய்ந்தாம் நூற்றாண்டில் எழுதிய பத்ம புராணத்திலும் இந்த கிருஷ்ணனுடைய வரலாறுகள் வெவ்வேறாக உள்ளன.
கிருஷ்ணன் தேவகியின் 8ஆவது குழந்தை என்றும், இதற்கு முன் ஆறு குழந்தைகள் தேவகிக்கும் இரண்யகசிபுவுக்கும் பிறந்தவர்கள் என்றும் விஷ்ணு புராணத்தில் (பக்கம் 498) உள்ளது.
கிருஷ்ண வணக்கம் ஆரிய வேதத்திலுமில்லை என்றும், வில்சன் கூறுகிறார். கிருஷ்ணன், குழந்தைப் பருவத்தில் திருடனாக இருந்ததாகவும், ஒழுங்கீனமான சண்டைக்காரனென்றும் காமத் திருவிளையாடல்காரனென்றும் புராணங்களில் விவரித்திருப்பது இந்திய மக்களுக்கே மானக்கேட்டை விளைவிப்பதாகும் என்று திருமதி எலிசெபத் ரீட் சுட்டிக் காட்டுகிறார்.
16,000 மனைவிகளைக் கொண்டவன் என்பது, மக்களுக்கு நல்லொழுக்கத்தை உண்டாக்காது என்றும், கிருஷ்ணனைப் பற்றியவற்றை எல்லாம் வெளிப்படையாக விவரிக்கவும் அசங்கியமாகவும் அவருவருப்பாகவும் இருப்பதாகவும், இந்த பகவத் கீதை வரலாற்றிலும் கிருஷ்ணன் போக்கு நேர்மையாக இல்லை என்றும் இவர் விளக்குகிறார்.
(பி.வி.ஆர்.)
எப்படி இருக்கிறது – வியாசர் விருந்து எழுதிய ராஜாஜியே பாகவதம் பற்றியும் கிருஷ்ண லீலைகள் குறித்தும் அசூயை அடைகிறார் என்றால், கிருஷ்ணனின் தராதரத்தைத் தெரிந்து கொள்ளலாமே!
இந்தக் கிருஷ்ணனால் அருளப்பட்டதாகக் கூறப்படும் கீதையும். சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று ஒரு கடவுள் – தன்னால் எழுதப்பட்ட கீதையில் குறிப்பிடுவது எல்லாம் நாகரிகமானதா?
இந்தக் கீதை பற்றிய உபந்நியாசம் தான் ஞாயிறுதோறும் சென்னை மயிலாப்பூரில் நடத்தப்படுகிறதாம்!
அய்யய்ய.. வாயால் சிரிக்க முடியவில்லையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக