சனி, 9 பிப்ரவரி, 2019

நகரத்தார்களும், வாணிய செட்டியார்களும் பூணூல் அணிந்திட தகுதி உண்டு என்று பிரிவியூ கவுன்சில்வரை சென்று தோற்றது தெரியுமா?

மனுதர்மம்பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்ட அரிய தகவல்
சென்னை, நவ.14- நகரத்தார்களும், வாணிய செட்டி யார்களும் பூணூல் அணிந்திட தகுதி உண்டு என்று பிரிவியூ கவுன்சில்வரை சென்று தோற்றது தெரியுமா? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

5.10.2018 அன்று சென்னை பெரியார் திடல் நடிக வேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற மனுதர்ம ஆராய்ச்சி தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் (3.10.2018 முதல் 5.10.2018)  மூன்றாம் நாளன்று மனுநீதி  ஒரு குலத்துக்கொரு நீதி என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி!


மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய மனுதர்ம சாஸ்திர ஆராய்ச்சி என்ற தலைப்பில், நிகழ்த்தப்பட்ட ஆய்வுரைகளுக்கான நன்கொடை ரூ.40 ஆயிரம் விரைவில் பணிகள் தொடங்கப்படவிருக்கக்கூடிய பெரியார் உலகத்திற்கு உங்களால் அளிக்கப்படுகிறது  என்பதை மகிழ்ச்சியோடு முதற்கண் அறிவித்துக் கொள் கிறேன்.

நண்பர்களே, மூன்றாவது நாள் சொற்பொழிவின் இறுதியில் கேள்வி - பதில்களை அமைத்துக் கொள்ள லாம் என்று இருந்தாலும், நேற்று விட்ட இடத்திலிருந்து சில செய்திகளைச் சொல்லவேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் திருக்குறள் என்பது மனுதர்மத்தை எதிர்த்து, அல்லது மனுதர்மக் கருத்துகள் பரவுகின்ற காலகட்டத்தில், அதைத் தடுத்து நிறுத்தக் கூடிய ஒரு பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான ஒரு நிலையை உருவாக்கி இருக்கிறார்கள் என்று நேற்றைய சொற்பொழிவில் முடித்தேன். அதனை இப்பொழுது தொடர விரும்புகிறேன்.

திருக்குறள் - வள்ளுவர்!


அய்யா அவர்கள் சொல்கிறார்கள்,

திருக்குறள் ஆரியக் கொள்கைகளை மறுக்க, அவைகளை மடியச் செய்ய, அக்கொள்கைகளிலிருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்றுதான் நான் கருதுகிறேன். உதாரணமாக மனுதர்மம் - வருணாசிரம தர்மத்தை வற்புறுத்தி மக்களில் நான்கு ஜாதிகள் - பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் உண்டு என்று உபதேசிக்கிறது.

பிராஹ்மண க்ஷத்திரியே வைஸ்த: த்ரயோவர்ணாத் விஜரதய; சதுர்த்த ஏகஜ திஸ்து சூத்ரோ நாஸ்திது பஞ்சம்: பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என்ற இம்மூவரும் துவிஜர்கள் நான்காவது ஜாதியான சூத்திரன் ஒரே ஜாதி இவனுக்கு உபநயனமில்லாததால் த்விஜாதியாக மாட்டான் என்கிறது மனுதர்மம்.

துவிஜர்கள் என்றால், இருபிறப்பாளர்கள். இரு பிறப்பு என்றால், குழப்பிக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. மனுதர்மப்படி உலகில் பிறக்கும் அத்தனை பேரும் கீழ்ஜாதிக்காரர்களாகத்தான் பிறக்கிறார்கள். பிறகுதான், பிறவியினால்தான் பேதம் என்று ஒரு பக்கம் சொல்லி, உண்டாக்கும்பொழுதே சூத்திரனாக உண்டாக்கினான் என்று முதலில் எழுதியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு எவ்வளவு பெரிய முரண்பாடு என்பதைப் பாருங்கள்!

உயர்ந்த ஜாதிக்காரன், கீழ்ஜாதிக்காரனாக ஆகலாம்; கீழ்ஜாதிக்காரன் உயர்ந்த ஜாதிக்காரனாக ஆக முடியாது என்றும் சொன்னார்கள்.

ஒரே நாளில் இதுபோன்று வந்திருக்க முடியாது.

முதலில், அந்த பிரம்மா ஆனவர், இந்த உலகத்தைக் காப்பாற்றும் பொருட்டு, தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறு மைக்கும் உபயோகமான கருமங்களைத் தனித்தனியே பகுத்தார் என்று மிகத் தெளிவாக மனுதர்மத்தில் சொல்லி வைத்துவிட்டு,

பிறகு ஏன் இன்னொரு பிறப்பு? அதெப்படி என்றால், பூணூல் போட்ட பிறகுதான் உண்மையான பிராமணன் ஆகிறானாம்!

துவிஜர்கள் என்றால் இரண்டு. இரு பிறப்பாளர்கள் என்று தமிழில் சொல்வோம். சமஸ்கிருதத்தில் துவிஜர்கள்.

உபநயனம் நடத்தவில்லையானால், அவனுக்கும், நமக்கும் வேறுபாடு கிடையாது, மனுதர்மப்படி அவனும் சூத்திரன்தான்.

ஆனாலும், இந்த நாட்டைப் பொறுத்தவரையில், உபநயனம் நடத்துவதற்கு முன்பே, எட்டு வயது பார்ப்பன பையன், 80 வயது நம்மாளைப் பார்த்து, ஏண்டா, முனுசாமி என்கிறான். சரிங்க, சாமி என்று இவனும் பதில் சொல்கிறான். அதனுடைய தாக்கம் எந்த அளவிற்கு சமுதாயத்தில் ஊடுருவிருக்கிறது என்பதற்கும், எப்படிப்பட்ட முரண்பாடு என்பதையும் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

பார்ப்பனர்களுக்கு பூணூல் கல்யாணம்தான் மற்ற கல்யாணத்தைவிட மிகவும் முக்கியம்!


ஆகவே, பூணூல் கல்யாணம்தான் மற்ற கல்யா ணத்தைவிட பார்ப்பனர்களுக்கு மிகவும் முக்கியம். ஆகவேதான், அதை பார்ப்பனர்கள் மிகவும் ஆடம் பரமாக நடத்துவார்கள்.

சரி, அந்தப் பூணூல் போடுவது எல்லோருக்கும் உண்டா?  என்று சிலர் நினைக்கலாம்.

நம்மாள் இது புரியாமல், நம்மை திசை திருப்புவ தற்காக, என்னங்க, பூணூலை அய்யர் மட்டும்தான் போடுகிறாரா? நம்முடைய செட்டியார், வன்னியரும், சில இடங்களில் நாடாரும்கூட போடவில்லையா? என்றெல்லாம் கேட்பார்கள்.

நாம் போடுவதெல்லாம் டூப்ளிகெட் பூணூல். மனு தர்மம் அங்கீகரிக்காத பூணூல் இது. வர்ண தர்மப்படி உரிமையற்ற செயல்.

பிரிவியூ கவுன்சில் வரை வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்


நகரத்தார்கள், நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், ஒவ்வொரு ஜாதியினரும் பார்ப்பானோடு போட்டி போடவேண்டும் என்று வெள்ளைக்காரர்கள் காலத்தி லேயே பிரிவியூ கவுன்சில் வரை வழக்குத் தொடுத்தி ருக்கிறார்கள்.

வாணியச் செட்டியாரில் ஒரு சாரார்களுக்குப் பிரிவியூ கவுன்சில் தீர்ப்பு இருக்கிறது. அதே போன்று நாட்டுக்கோட்டை நகரத்தார் என்று சொல்லக் கூடியவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், நாங்கள் தன வைசியர்கள்; நாங்கள் சூத்திரர்கள் அல்ல; எங்களுக் குக் கோவிலில் தனி இடம் கொடுக்கவேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தனர்.

ஆனால், அவர்கள் என்ன சொன்னாலும், நீங்கள் சூத்திரர்கள்தான் என்று ஆதாரம், இந்து லா (Hindu Law) சாஸ்திரம், மனுதர்மத்தை எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லி, பிரிவியூ கவுன்சிலில் தீர்ப்பு எழுதி வைத்திருக்கிறார்கள்.

பூணூலை யார் யார் போடவேண்டும்?


ஆகவே, பூணூல் போடவேண்டும்; அந்தப் பூணூலை கூட எப்படி போடவேண்டும்? யார் யார் போடவேண்டும்? என்பதை தெளிவாகவே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

அத்தியாயம் 2:

சுலோகம் 44

பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், க்ஷத்திரியனுக்கு க்ஷணப்ப நூலாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்கவேண்டியது.

வன்னியர்கள், மற்றவர்கள் ஜாதியைப் பிரித்த பிறகு, வன்னியகுல சத்திரியர்கள் என்று சொன்னவுடன், எங்களுக்குப் பூணூல் போடும் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.

இல்லை, இல்லை எல்லோரும் சூத்திரர்கள்தான் என்றார்கள்.

அதைவிட மிக முக்கியமான உச்சநீதிமன்றத் தீர்ப்பு - அங்கீகரிக்கப்பட்டது - சாஸ்திர ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்னவென்றால்,

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பதில், தென்னாட்டில் சத்திரியனும் இல்லை, வைசியனும் இல்லை. வடநாட்டில் மட்டும்தான் நான்கு பிரிவுகள் உண்டு. தென்னாட்டில் இரண்டு பிரிவுகள் தான் உண்டு என்பது உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு. அதை உயர்நீதிமன்றங்கள் உறுதிப்படுத்திக் கொண் டிருக்கின்றன.

ஆகவே, இங்கே பிராமணன் - சூத்திரன்.

பார்ப்பனர் - பாரப்பனரல்லாதார் என்பதில்தான் எழுச்சி ஏற்பட்டது. ஆகவே இதனுடைய அடித்தளம்கூட இதுதான்.

பூணூல் போடுவதில்கூட பேதத்தை வைத்தான்!


நடுவில் வெவ்வேறு ஜாதிக்காரர்கள், ஜாதியின் அடிப்படையில் சொன்னாலும் அப்படி கிடையாது.

அப்படிப்பட்ட பூணூல் போடுவதில்கூட பேதத்தை வைத்தான்.

அத்தியாயம் 2:

சுலோகம் 44

பிராமணனுக்குப் பஞ்சி நூலாலும், க்ஷத்திரியனுக்கு க்ஷணப்ப நூலாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது.

சூத்திரனுக்குப் பூணூல் கிடையாது - முதுகு சும்மாதான் இருக்கும் - வெறுமுதுகுதான்!

பஞ்சு நூலை அவாள் ரிசர்வ் செய்துவிட்டார்கள்!

க்ஷணப்ப நூல் சத்திரியனுக்கு. ராஜாக்களாக இருக்கிறவர்களுக்குக்கூட பஞ்சு நூல் கிடையாது.

வைசியர்களுக்கு வெள்ளாட்டின் மயிரால் மூன்று வடமாகத் பூணூல் தரிக்கவேண்டும் என்றால், இவன் முதுகு சொரிவதற்கே ஒரு ஆளைகூட அழைத்துச் செல்லவேண்டும். ஏனென்றால், அது எப்பொழுது பார்த்தாலும் அரித்துக் கொண்டுதான் இருக்கும்.

எல்லா இடங்களிலும், எல்லாவற்றிலும் பேதம். மகளிர் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள். மன்னிக்க வேண்டும்.

ஆண் குறி உயர்ந்தது - பெண் குறி தாழ்ந்தது என்றும்கூட மனுதர்மத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

இதைக் கேட்கும்பொழுது உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். ஆனால், இதை சொல்வதற்கு அசிங்கமாகவும் இருக்கிறது; ஆபாசமாகவும் இருக்கிறது.

பேதம் என்பதே மனுதர்மத்தினுடைய உயிர்நிலை.

மேலும் திருக்குறள் - வள்ளுவர் என்ற நூலில் பெரியார் சொல்கிறார்:

திருக்குறள்-மக்கள் அனைவரும் ஒரே இனந்தான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குஞ் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான் (குறள் - 972)

மனுதர்மம் - மாமிசம், மச்சம் சாப்பிடவேண்டும். யாகம் செய்யவேண்டும். அதில் ஆடு, மாடு, குதிரை முதலியவைகளைப் பலி தரவேண்டும் என்கிறது.

மத்யம் மாம்ஸம் சமீனம் சமுத்ரா, மைதுனமேவச : ஏதே பஞ்சமகாரா: ஸ்யுர் மோக்ஷதா ஹியுகே யுகே.

கள், இறைச்சி, மீன், சமுத்ரா, மைதுனம் இவ்வைந்தும் மோட்சத்திற்குச் சாதனங்கள்.

இதுதான் சட்டத்திற்கு அடிப்படை. ரிஷிகள் சொன் னார்கள். காலங்காலமாக எந்த காலத்திலிருந்தோ இருக் கிறது. இதற்கு வியாக்கியானம் எழுதுவதற்குத்தான் நம்மு டைய உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் இருக்கிறது.

உடனே அவர்கள் எழுதுகிறார்கள்,

பராசரர் ஸ்மிருதி சொல்கிறது

யக்ஞவல்கியர் சொல்கிறது

மேடததி வியாக்கியானம் சொல்கிறது

என்று எழுதிவிட்டு, அதில் விளக்கமாக எழுது கிறார்கள்.

நாரதா ஸ்ருமிதியை எழுதி வைத்திருக்கிறார்கள்.

எங்கள் குடும்பமே பாதிக்கப்பட்டது


இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம் இதில். எங்கள் குடும்பமே பாதிக்கப்பட்டது. என்னுடைய துணைவியாருடைய தாயாருக்கும் - தகப்பனாருக்கும் பெரியார்தான் திருமணம் செய்து வைத்தார் 1934 ஆம் ஆண்டு.

அவர்களுக்குச் சொத்துப் பிரச்சினை வந்தபொழுது, சூத்திரர்களுக்கு சுயமரியாதைத் திருமணம் நடந்ததே சட்டப்படி செல்லாதது என்று சொல்லிவிட்டார்கள்.

சட்டப்படி செல்லாது என்பதற்கு என்ன ஆதாரம் காட்டுகிறார்கள் என்றால்,

யக்ஞவல்கியர் சொல்கிறது

மனு சொல்கிறது

நாரதா சொல்கிறது

என்று.

மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி!

அப்பொழுதுதான் பெரியார் அவர்கள் அதற்கு விளக்கம் எழுதினார். மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி சிறிய புத்தகம் 10 ரூபாய்க்குப் போட்டிருக்கிறார்.

அதில் பல செய்திகளை அய்யா அவர்கள் சொல்லி யிருக்கிறார்.

ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்.

வேத சாஸ்திரங்களை உண்டாக்கின முனிவர்கள், ரிஷி புங்கவர்களின் பிறப்புத் தன்மை

இந்தரிஷிகளின் மூலம் (பிறப்பு) எல்லாம்இயற் கைக்கு மாறானதும், ஆபாசமும் அசிங்கமும் நிறைந்த வையாகவும் அறிவுக்குப் பொருந்தாதனவாகவும் உள்ளன. எடுத்துக்காட்டாக,

கலைக்கோட்டு ரிஷி     -      மானுக்கும்

கவுசிகர்           -      குயத்திக்கும்

ஜம்புகர்           -      நரிக்கும்

வால்மீகி          -      வேடனுக்கும்

அகஸ்தியர்        -      குடத்திற்கும்

வியாசர்          -      செம்படத்திக்கும்

வசிஷ்டர்         -      ஊர்வசிக்கும்

நாரதர்            - வண்ணாத்திக்கும்

காதனசல்லியர்          -      விதவைக்கும்

மதங்கர்           -      சக்கிலிச்சிக்கும்

மாண்டவியர் -    தவளைக்கும்

சாங்கியர் -  பறைச்சிக்கும்

காங்கேயர்        -      கழுதைக்கும்

சவுனகர்          -      நாய்க்கும்

கணாதர்          -  கோட்டானுக்கும்

கர் -  கிளிக்கும்

ஜாம்புவந்தர்       -      கரடிக்கும்

அஸ்வத்தாமன்    -      குதிரைக்கும் பிறந்தனராம்.

இந்த முனிவர்களின் பிறப்பு யோக்கியதை இது தான். காட்டுமிராண்டி காலத்து மக்கள் அறிவுகூட இதைவிட பண்பட்டதாகத்தான் இருக்கும். அதனி னும் கீழானதாகத்தான், இந்த முன்னோர்கள் - ரிஷி புங்கவர்களின் மூலம் என்றால் நம் இழிவுக்கும் மடமைக்கும் வேறு அளவுகோல் வேண்டுமா? என்று தந்தை பெரியார் கேட்டார்.

ஆகவே, அந்த ரிஷிகள் சொன்னார்கள் என்று இன்றைக்கு 2018 இல் உச்சநீதிமன்றத்தில் அமர்ந்து, அதை மேற்கோள்காட்டி சிவில் சட்டங்கள் செல்லுமா? செல்லாதா? நம்மாள் சந்நியாசியாகப் போவது நியாயமா? இல்லையா? என்று கேட்டால்,

நாராதர் என்ன சொல்கிறார்?

யக்ஞவல்கியர் என்ன சொல்கிறார்?

பராசரர் என்ன சொல்கிறார்?

என்று பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள் உட்கார்ந்து கொண்டு - இதுதான் இந்துலா (Hindu Law)

மூன்று வருணத்தாருக்கும் பணிவிடை செய்தலே சூத்திரனுக்குத் தொழில்


திருக்குறள் - வள்ளுவர் என்ற நூலில் பெரியார் மேலும் சொல்கிறார்:

திருக்குறள்-ஜீவ இம்சையே கூடாது, மாமிசம் சாப்பிடக் கூடாது, யாகம் கூடாது என்கிறது.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும் (குறள் -260)

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று (குறள் - 259)

மனுதர்மம் - பிறவியினாலேயே பார்ப்பான் உயர்ந்த ஜாதி என்கிறது.

அனார்யமார்ய கர்மாணம் ஆர்யம் சானார்ய கர்மிணம்; ஸம்ப்ர

தார்யா ரவீத் தாதா, நஸமென நாஸமாவிதி

ஆரியன் (பார்ப்பான்) தொழிலைச் செய்கிற அனாரி யன் (தமிழன்) ஆரியனும் ஆகப்போவதில்லை. அனாரி யன் தொழிலைச் செய்கிற ஆரியன் அனாரியனு மாகமாட்டான்.

ஏகமேவது சூத்ரஸ்ய ப்ரபு : கர்மஸமாதிசத்?

எதேஷமேவ வர்ணானாம் சுஸ்ரூஷா மனஸயய

பொறாமையன்றி மூன்று வருணத்தாருக்கும் பணிவிடை செய்தலே சூத்திரனுக்குத் தொழில் என்று கடவுள் கட்டளை இட்டிருக்கிறார். திருக்குறள் - ஒழுக்கம் உண்டானால்தான் பார்ப் பான் உயர்ந்தவன்என்று சொல்லிக் கொள்ளலாம்; ஒழுக்க மற்றவன் பார்ப்பானாயினும் கெட்டவன் என்கிறது.

மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் (குறள் - 134)

மனுதர்மம் - ஒரு மனிதன் செல்வனாகப் பிறந்து சுக போகத்துடன் வாழ்வதற்குக் கடவுள்தான் காரணம் என்கிறது.

விஸ்ரப்தம் ப்ராஹ்மண சூத்ராத் த்ரவ்யோ பாதான மாசரேத்:

நஹிதஸ்பாஸ்தி கிஞ்சித் ஸ்வம் பர்த்ளு ஹார்யயனாஹிச

சூத்திரனிடத்தில் ஏதேனும் பொருளிருந்தால் அதைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், அவன் அடிமையாகப் படைக்கப்பட்டிருத்தலால், அவனுக்கென்று பொருள் சிறிதேனுமில்லை.

திருக்குறள் - ஒரு மனிதனை ஏழையாகப் பிறப் பித்து வருந்த வைப்பது கடவுளானால் அக்கடவுள் ஒழியவேண்டும் என்கிறது.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக இவ்வுலகியற்றி யான் (குறள் - 1062)

மனுதர்மத்தில் - பிராமணன் சூத்திரன் என்று மக்களைப் பல ஜாதியினராகப் பிரித்துப் பல இடங்களில் வருணாச்சிரம தர்மம் கூறப்பட்டிருக்கிறது.

வேதத்தில் 180 ஜாதிகள் கூறப்பட்டிருக்கின்றன. மனுஸ்மிருதியிலும் சூத்திரரினும் தாழ்ந்த ஜாதிகள் பல கூறப்பட்டிருக்கின்றன.

திருக்குறளில் - ஒரு இடத்தில் கூட பிராமணன் - சூத்திரன் என்கிற வார்த்தைகள் இல்லை. பார்ப்பான் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது - வர்ணாச்சிரம தர்ம வாசனையே கிடையாது.

இப்படி அநேக கருத்துகள் ஆரிய தர்மத்துக்கு மாறாகக் கூறப்பட்டிருக்கின்றன. சுருங்கக் கூறினால் - புத்தர் செய்த வேலையைத்தான் திருக்குறள் செய்திருக் கிறது - திருவள்ளுவர் செய்துள்ளார்! புத்த தர்மமும் ஆரியத்திற்கு மாறான தர்மம்தான். அதனால்தான் அது இந்நாட்டு ஆரியர்களால் அழிக்கப்பட்டது. ஆரிய தர்மத்தை எதிர்த்து அழித்து ஒழிப்பதற்காகத்தான் திருக்குறள் பாடப்பட்டதென்பது அதை ஆராய்ச்சி செய்வோர் எவருக்கும் விளங்காமற் போகாது.  லட்சு மிரதன் பாரதி அவர்களது தந்தையாரான நாவலர் எஸ்.சோமசுந்தர பாரதியார் அவர்களைப் போன்ற பெரும் புலவர்கள் திருக்குறளை ஆதாரமாகக் கொண்டு ஆரியர் - தமிழர் வேறுபாடுகளை விளக்கமாக எடுத்துக் கூறுவார்களானால், பல அறிவுக்கியைந்த அற்புதங்கள் வெளிப்படும். அவரைப் போன்ற அறிஞர்கள் பேசக் கேட்டுத்தான் எனக்கும் திருக்குறளின் பெருமை தெரிய வந்தது.

என்னைப் பொறுத்த வரையில் திருக்குறளைச் சிறிதாவது ஆராய்ச்சி செய்தவன் என்று என்னால் கூறிக் கொள்ள முடியாவிட்டாலும், அதன் பெருமையை நான் ஓர் அளவுக்காவது உணர்ந்திருக்கிறேனென்பதையும், அதன் மீது எனக்கு அளவற்ற பற்றுண்டு என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

இருக்கலாமென்றாலும், அதையே முடிந்த முடி வென்றோஅதில்கூறப்பட்டுள்ளகருத்துகளேஎல்லாக் காலத்திற்கும் பொருந்துமென்றோ, மதவாதிகள் வேதத் துக்குச் சொல்வது போல நான் கூற வில்லை. இன்றைய கருத்துக்கேற்ப சில மாற்றங்கள் திருக்குறளில் செய்ய வேண்டியது அவசியமாய் இருக்கலாமென்றாலும், திருக்குறள் ஆரியக்கருத்துக்கு நேர்மாறானது; மனு தர்மத்துக்கு நேர்மாறானது; திராவிடர்களுக்குப் பெரிதும் ஏற்றது என்று மட்டும் நான் நிச்சயமாகக் கூறுவேன்.

(தொடரும்)
-  விடுதலை நாளேடு, 14.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக