ஞாயிறு, 3 ஜூலை, 2016

ஆகமப் ''பூச்சாண்டியை''ப் புரிந்துகொள்வோம்!


ஆகமங்களைப் பின்பற்றி அர்ச்சகர் நியமனம் என்று உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பு - இரண்டு நீதிபதி கள் கொண்ட அமர்வு கூறியதை மிகப் பெரிதாக ஊதி விட்டு, தமிழ்நாடு (தி.மு.க.) அரசு முன்பு கொண்டு வந்து, இரண்டாவது முறையாக 2006 இல் நிறைவேற்றிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற சமூக சீர்திருத்த ஆணை - சட்டம் செல்லாது என்று  உச்சநீதிமன்றம் கூறி விட்டது என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உரு வாக்கி வைத்துள்ளன - பார்ப்பன உயர்ஜாதி - ஆதிக்க ஊடகங்கள்.
‘தலைகுப்புற வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை’ என்று கூறியவன் கதையாக, இப்போது ஆகமம், ஆகமம் என்று அதை ஒரு பெரிய சட்டப் பூச்சாண்டி போல சித்தரிக்கக் கிளம்பியுள்ளார்கள்.
எனவே, அந்த ஆகமங்கள் என்பனவற்றின் வரலாறு, கொள்கை, தத்துவம், நடைமுறை இவைகளைப்பற்றி விளக்கவேண்டியது நமது கடமையாகிறது.
சென்னைப் பல்கலைக் கழக முந்தைய வரலாற்றுத் துறை பேராசிரியரும், பன்மொழி அறிஞருமான பி.டி.சீனுவாச அய்யங்கார் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய தமிழர் வரலாறு (History of the Tamils) நூலாகும். 1929 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூல் இந்நூல்.
இதன் தமிழாக்கத்தை தமிழ் மண் பதிப்பகம் 2007 இல் வெளியிட்டது. அதற்கு அணிந்துரை அளித்தவர் பேரா சிரியர் முனைவர் ஆய்வு அறிஞர் மதுரை தமிழண்ணல் அவர்களாவர்.
அந்த அணிந்துரையில்,
‘‘இச்சூழ்நிலையில், இத்தமிழர் வரலாறு போன்ற நூல்கள் அனைவரையும் சென்றடையவேண்டும்.’’
‘‘இத்தகைய தவறான தீர்ப்புகளை (2007 இல் முந்தைய நிலைபற்றியது இது) ‘உண்மைதான்!’ என்று எடுத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்களே!
இந்நூல் இயல் 8 இல், ‘ஆகமங்கள்’பற்றி வருவன வற்றை எல்லோரும் படித்துப் பார்க்கவேண்டும்.
முக்கியமாக, இன்றைய சூழ்நிலையில், இந்நூலில் வரும் இரண்டு பகுதிகள் நம் நீதிமன்றத் தலைவர்களுக்கும், திருமடங்களின் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுப் பாடமாகச் சொல்லித் தரப்படவேண்டும்.
The Rise of the Agamas -
Tha Agamas vs The Vedas
pp.103-115 of English Original
(தமிழாக்க நூலில் பக்கங்கள் 131-139 வரை)
இதன்மூலம் - வேதம் வேறு ஆகமம் வேறு என்பதை நிறுவுகிறார் சீனுவாசர். இன்று ‘வேதாகமம்’ என்று சேர்த்துப் பேசி குழப்புவர்களுக்கும், ஆகமப்படி வட மொழியை வழிபாட்டுச் சடங்கு மொழி எனச் சாதிப்ப வர்களுக்கும் முகத்தில் பலமுறை அறைந்தாற்போன்ற விடைகள் இதில் உள்ளன.
ஆகமச் சடங்குகளில் வேத மந்திரங்களுக்குத் தொடர்பில்லை; இவை ‘‘தஸ்யூக்கள் உடையவை; ஆரிய வேத வேள்விகள் வேறு; ஆகம வழிபாடு முறைகள் வேறு. கோவிலையும், உருவ வழிபாட்டையும் அத் துவைத வேத வைதீகர்கள் வெறுத்த காலமுண்டு; வேள் விகள் குறையக் குறைய, இந்த வேதாந்திகள் வருமானம் கருதியே, கோவில்களில் நுழைய முற்பட்டனர் என்பது போன்ற, தெளிவான கருத்துகள் இதிலுள.’’
அப்பகுதியை கீழே தருகிறோம்:
இயல் 8:
‘ஆகமங்களின் தோற்றம்’ என்ற தலைப்பில் பேராசிரியர் பி.டி.சீனுவாசய்யங்கார் எழுதுகிறார்:
‘‘இன்றைய இந்து சமயம் ஏறத்தாழ முற்றிலும் ஆகமங் களை அடிப்படையாகக் கொண்டது. வேதங்களைக் கொஞ்சங்கூட அடிப்படையாகக் கொண்டது  அல்ல.
இதை நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே (அதாவது 1899) எனது இந்திய ‘இந்திய மெய்யியல் சுருக்கம்’ என்ற நூலில் குறித்துள்ளேன்.
1. மாபாரதப் போருக்குப் பின்னர் வேத முறை வழிபாடு மறையத் தொடங்கியது. இன்று ஏறத்தாழ முற் றிலும் ஒழிந்துவிட்டது. ‘‘ஸ்ரௌத கர்மம்’’ பெரும்பகுதி போய்விட்டது. சிற்சிலர் ஆங்காங்கு சில நேரங்களில் அக்னி ஆதானம், எளிய வாஜபேயம், கருட சாயனம், சோமயாகம் ஆகியவற்றைச் செய்து வருகின்றனர். ஸ்மார்த்த கருமமும் விரைவாக மறைந்து வருகிறது. மூன்று தலைமுறைகளாக அக்னி வழிபாடு செய்யாத பிராமணக் குடும்பம் பிராமணத் தன்மை இழந்துவிடும் என்பது சாத்திர விதி. அதன்படி பார்த்தால், இந்தியாவில் இன்று உண்மையான பிராமணக் குடும்பங்கள் ஒரு சிலவே இருக்கக்கூடும்! சமயத்தில் ஊறியது இந்தியா. ஆனால், அந்தச் சமயம் ஆகமச் சமயமேயொழிய வேத சமயம் அன்று.
2. ‘ஆகமத்தின்’ வேர்ச் சொற்கள் ‘‘தொன்று தொட்டு வந்தது’’ என்பதாகும். ஆகமம் என்பதற்கு ஆப்தவசனம் - அதாவது மெய்யுணர்ந்தோர் கூற்று - என்றும் பொருள் உள்ளது; ஆப்த வசனங்களில் தலைமை சான்ற வேதத் தையும் சில நேரங்களில் ஆகமம் என்று அழைப்பர். எனினும், சிவன், விஷ்ணு, சக்தி ஆகியோரை வழிபடும் தந்திர நூல்களையே ‘‘ஆகமம்’’ பொதுவாகக் குறிக்கிறது. (புத்த, சமண, சமய நூல்களும் ஆகமம் எனப்பட்டன) அனைத்து ஆகமங்களும் தொடக்கத்திலிருந்தே வேதங் களுக்கு அதாவது கர்ம காண்டத்துக்கு எதிராக உரு வானவை. சைவ ஆகமங்கள் மகேஸ்வரம், பாசுபதம் எனப்பட்டன. வைணவ ஆகமங்கள் பாகவதம் (பக வானைப் பற்றி யவை), சாத்த வாதம் (சாத்தவாத அரச பரம்பரையி னர் ஆதரித்தது?), பாஞ்சராத்திர என அழைக்கப் பட்டன. (பாஞ்ச ராத்திர என்றால் விஷ்ணு வழிபாட் டின் சிறப்புச் சடங்கு என்றும் பொருள் உண்டு. அது வைகானச = கான கத்தில் வாழும் துற விகள் சார்ந்தது) சடங்கிலிருந்து மாறுபட்டது.
3. வேதச் சடங் குகளும், ஆகமச் சடங்குகளும் ஒன்றுக்கொன்று போட் டியாக இருந்த பழங்காலத்தில் இரண்டும் வேறுபட்டவை என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்தது. ஆனால், பல நூற்றாண்டுகளாக அவை இரண்டும் ஒன்றோ டொன்று இணைந்துவிட்ட நிலையில், அவை வேறு பட்டவை என்பது இன்று மறந்துவிட்டது. ‘‘ஆகமங்கள் வேதங்களிலிருந்து பெறப்பட்டவை. தற்காலத்திற்கேற்ப வேதக் கருத்துக்களை விரிவாக்கி அல்லது மாற்றி உருவாக்கப்பட்டவை’’ என்று கூடச் சிலர் கருதுகின்றனர். வேத மந்திரங்கள் இயற்றப்பட்ட காலம் முடிந்ததும் அவை அபௌருஷேயம் - அதாவது காலம், இடம் இவற் றையெல்லாம் கடந்தவை. அநாதி எனக் கருதப்பட்டன;
யாரும் உருவாக்கியவையல்ல, ‘புருஷன்’ ஆன ஈஸ்வரன் கூட வேதங் களை உருவாக்கியவன் அல்லன். ஆனால், ஆகமங்கள் சிவன், விஷ்ணு வெளியிட்டவையாகையால் அவை பௌருஷேயம் தான். வேதசம்ஹிதை மந்திரங்களை வேதச் சடங்குகளில் ஓதவேண்டும். ஆனால், சிவன், விஷ்ணு வழிபாட்டில் பின்பற்றவேண்டிய சடங்குகள், யோகக் கோட்பாடுகள், மெய்யியல் கருத்துக்கள் ஆகியவற்றை மட்டுமே கொண்டவை. ஆகமங்கள், வேதங்களின் (வேத மந்திரங்களும் சரி, பிராமணங்களும் சரி) கர்ம காண்டம், ஞான காண்டம் ஆகியவற்றுக்கு மீமாம் சம் தேவை. ஆனால், சடங்குத் தொகுப்பு நூல்களான ஆகமங்களுக்கு உரை விளக்கம் மட்டுமே தேவை. வேத மந்திரங்கள் ‘‘சந்தஸ்’’ மொழியில் உள் ளன. ஆகமங்கள் ‘‘பாஷையில்’’ (அதா வது கி.மு.1000-க்குப் பின்னர் இருந்த வடமொழியில் உள்ளன.
4. சடங்குகளைப் பொருத்தவரை வேதச் (வைதீக) சடங்குகள் அக்னிச் சடங்குகள். ஒவ்வொரு காரியத்துக்கும் தீயுண்டாக்கி அக்னி வளர்த்து அதில் பொருள்களை அர்ப்பணிக்க வேண்டும். தீயில் போடும் பொருள்கள் தெய்வங் களுக்குச் செல்கின்றன. ஆகம வழி பாட்டில், அக்னிக்கு வேலை இல்லை. வழிபடும் தெய்வத்தின் முன்னர் வழிபாட்டுப் பொருள்களைப் படைத் துக் காட்டிவிட்டு எடுத்துவிடலாம். தெய்வம் சூக்குமமானவற்றையே ஏற்கும்; தூலமானவற்றையல்ல;’ ஆகை யால் வழிபடுபவன் தான் படைத்த பொருள்களைத் தானே உண்ணலாம், பயன்படுத்தலாம்,
பிறருக்கும் தரலாம். அக்னிச் சடங்கில் பல்வேறு காரியங் களுக்கும் தனித்தனிப் பொறுப்பு வகிக்கும் பல்வேறு தெய்வங்களுக்கும் வழிபாடு உண்டு. ஆகம வழிபாட்டில் அனைத்துக்கும் பொறுப்பேற்ற ஒரே தெய்வத்திற்கே வழிபாடு நடைபெறு கிறது. (அதாவது யெகோவாவை வழிபடுவது போல). வேதச் சடங்குகளில் ஒவ்வொரு செயல் செய்யும்பொழுதும் அதற்கென்று ஒரு மந்திரம் சொல்லப் படுகிறது. சோமம் கொண்டுவர வண்டியில் காளையைப் பூட்டுதல்; அக் காளையை ஓட்டக் குச்சி வெட்டுதல்; ஒரு பொருளைக் கையால் பிடித்தல், பால் காய்ச்சுதல்; மோர் கடைதல், ஒவ் வொன்றுக்கும் ஒரு மந்திரம் உள்ளது. ஆகம வழிபாட்டில் மந்திர சடங்கு களுக்கு இடம் இல்லை. ஆகம வழி பாட்டில் ஆங்காங்கு ஓரிரு மந்திரங்கள் ஓதுகிறார்கள். ஆனால், மடத்தனமாக தூ (பீலீu) எனத் தொடங்கும் மந்திரத்தை (வண்டியின் நுகத்தடியைத் தூக்கும் பொழுது சொல்ல வேண்டியது!) சாம் பிராணி காட்டும்பொழுது ஓதுகிறார்கள்.
ஆகம வழிபாட்டில் பெரும்பங்கு வகிப்பது, வழிபடும் கடவுளின் பெயர் களைச் சொல்லி நமஹ (நான் வணங்கு கிறேன்) என்று சொல்வதுதான். வேதச் சடங்கு என்பது பொருள்களை நெருப் பில் போட்டு கடவுள்களுக்கு அனுப்பு வது; ஆனால், ஆகம வழிபாடு உப சாரமே - அதாவது நீராட்டி, அலங் கரித்து, புனித உணவு படைத்தலே யாகும் - விருந்தினனாக வந்த ஒரு மனிதனுக்குச் செய்வதுபோல. வேதச் சடங்கில் கடவுள் உருவாரம் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. எல்லாக் கடவுள்களுக்கும் நெருப்புதான் முகவர். ஆகம வழிபாடானது எந்தக் கடவுளை வழிபடுகிறோமோ அதன் படிமம் அல்லது அதனை நினைவூட்டுவதும் கட்புலனாவதுமான ஒரு பொருளுக்கு முன்னர்த்தான் செய்யப்படவேண்டும்.
அக்கடவுளைக் குறிக்கும் தாயத்து, கருவி (வேல், தடி), உயிருள்ள மரம் / மரக்கட்டை, கல், ஆறு / ஓடை, லிங்கம், சாளகிராமக்கல் என்று எதை வேண்டு மானாலும் வழிபடலாம். குறிப்பாக வழிபடுபவர் அக்கடவுளுக்கு என்ன உருவத்தைக் கற்பித்துக் கொள்கிறார் களோ அந்த வடிவம் வரைந்த ஓவியம் அல்லது அவ்வடிவத்தில் அமைந்த உருவாரம் (செங்கல் - சுண்ணாம்பு, கல் = சமஸ்கிருதத்தில் சிலை, மாழை எதில் வேண்டுமானாலும் செய்யப்பட்டது) இவையே வழிபடப்படுகின்றன.
வேதாந்தம் வேதம் + அந்தம் = வேதாந்தம்
5. வேதத்தின் இறுதிப் பயன் வேதாந்தம். வைதீக கர்மத்தின் பயன் ஞானம். ஞானத்தின் மூலமாகவே சாகா நிலை, முக்தி எய்தலாம்.
தம் ஏவம் வித்வான் அம்ருத இஹ பவதி
நான்யாஹ் பந்தா அயனாய வித்யதே
(அவனை அறிந்தால் சாகா நிலை அடையலாம்; அவனை அடைய வேறு வழியில்லை) ஆகம வழிபாட்டின் பயன் பக்தி; இடைவிடாது அவனை நினைத்து வந்தால் சாகா நிலை அடையலாம். கிருஷ்ணன இதனை ‘‘ஏகபக்தி’’ என்கிறான். இவ்வாறு முக்தி அடைய வேண்டுமானால் உபநிஷத்துக்கள் கூறும் 32 வித்யை (முறை)களில் சிலவற்றைக் கைக்கொண்டு ஒழுக வேண்டும். ஆகமங்களின் சரியா, கிரியா (முதல், இரண்டாவது) புத்தகங்கள் சிவன் / விஷ்ணுவை வழிபடும் முறை களைத் தருகின்றன. பக்தியுடன் சிலருக்கு யோகமும் (ஓகமும்) தேவை யென்பதால், எந்த ஆகமத்திலும் மூன்றாம் பகுதி யோகம் பற்றியது.
நான்காம் பகுதி ஞானம் பற்றியது. ஆகமங்களின் ‘‘ஞானம்’’ மேற்சொன்ன வேதாந்த ஞானம் அன்று; ஆகமக் கோட்பாடுகளின் படியமைந்த மெய் யியல் கொள்கைகளுக்கிசைந்த ஞானமே. வேதாந்தத்தின்படி புவியில் (பிரபஞ்சத்தில்) உள்ள ஒரே ஒரு மெய்மை பிரம்மம் மட்டுமே. ஆகமக் கொள்கையோ, தத்துவதிரயம் ஆகும்; அதாவது ஈசுவரன், சிவாத்மா, பிரகிருதி ஆகிய மூன்று மெய்மைகள் உள்ளன. ஒவ்வொரு ஆகமத்திலும் யோகம், ஞானம் பற்றிய பகுதிகள் உள்ளன வாயினும் ஆகமங்களே பக்தி மார்க் கத்தின் ஆதாரமான புனித நூல் களாகும் (வேதாந்த ஞானமார்க்கத்தின் ஆதாரமான புனித நூல்களாகிய உப நிஷத்துக்கள் போல). ஆகமங்கள் மக்கள் அனைவருக்குமானவை, எளி யவை. உபநிஷத்துக்கள் மிகச் சிலருக்கே பொருந்துபவை; அவை காட்டும் வழி கடினமானது. கீதையில் கிருஷ்ணன் சொல்வது ‘‘வெளிப்படையாகத் தெரி யாத பிரமத்தைத் தேடுபவன் அடைவது பெருந்துன்பம். அதனைத் தேடும் மார்க்கம் உயிரிகளுக்குத் தருவது துயரமே.’’
6. வேத சமயப்படி வருணங்கள் நான்கு; நான்காவது சூத்திரவருணத் தினர் வேதம் - வேதாந்தம் பயிலக் கூடாது. இதனால் வருணாசிரம முறை உருவானது. ஒவ்வொரு வருணத்துக் கும் விதிக்கப்பட்ட நடைமுறை வேறு. சன்னியாசம் பிராமணர்களுக்கு மட் டுமே உரியது. சன்யாசத்தின் பின்னரே முக்தி கிட்டும்; ஆக பிராமணருக்கு மட்டுமே முக்தி. ஆகமக் கொள்கை இதற்கு மாறானது.
யாரும், சண்டாளன் உள்பட, விஷ்ணு, சிவன் உருவாரத்தை வைத்துப் பூசை செய்யலாம். (காள ஹஸ்தி) சிவனுக்கு ஊன் படைத்து முக்தி பெற்றான் வேடன் கண்ணப்பன்; பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் ஆன கி.பி. 8 ஆம் நூற்றாண்டுத் திருப் பாணாழ்வார் (திருவரங்கம் கோவிலுக் குள் நுழைந்தாலே தீட்டு உண்டாக்கும் சாதியினர்) ஆகமங்கள் நான்கு வருணப் பாகுபாட்டை ஏற்கவில்லை. வேதங்களின் பகுதியான வேதாந்தமோ சூத்திரர்களுக்குரியதல்ல. பதராயணன் வேதாந்த சூத்ரம் மி (வீவீவீ) 35 - 38 ல் ‘சூத்திரனுக்கு சம்ஸ்காரங்கள் உரிய வையல்ல; எனவே, வேதம் படிக்கவும் கூடாது, கேட்கவும் கூடாது’ என்கிறான்.
ஆகமங்களோ அனைத்து மக்களுக்கும் உரியவை. இன்றும் சிவதீக்கை பெற்ற பறையன் பிராமணனுக்கு தீக்கை கொடுத்து அவனுக்கு குரு ஆகலாம். ஆகம சமயத்தார் அனைத்து ஜாதி யினரிடமும் சன்யாசமும் பரவியது. (வைணவத் துறவி ஏகாந்தி; சைவத் துறவி சிவயோகி). ஆகமக் கோட்பாட் டின்படி முக்தி பெற சன்யாசியாக வேண்டுமென்ற கட்டாயம் இல்லை; பக்தி அனைத்துச் சாதியினருக்கும் பொது, இல்லறத்தானும் பக்தி செலுத் தியே முக்தி பெறலாம். சில பக்தர் துறவிகளானது ஏன்? ஆகமங்களின்படி, யோக மார்க்கமும் முக்திக்கு ஒரு வழியாகும். துறவி வாழ்க்கை யோக மார்க்கத்துக்கு உகந்தது; எனவே, யோக மார்க்கத்தின் மூலம் முக்தி பெற விரும்பிய பக்தர்களும் துறவிகளாயினர்.
வைதீர்களுக்கும் ஆகமவாதிகளுக்குமிடையே போட்டி
7. பழங்காலத்தில் வைதீகர்களுக் கும், ஆகமவாதிகளுக்கும் இடையே பெரும் அளவுக்குப் பகை இருந்து வந்தது. ஆகமவாதிகள் தெய்வத்தின் பெயரால் யாகங்களில் ரத்தம் சிந்துவது, ஊனுண்ணல் (குறிப்பாக மாடுகளின் ஊனை உண்ணல்) ஆகியவற்றை எதிர்த்தனர். அவர்கள் எதிர்ப்பை மாபாரதமும் குறிப்பிடுகிறது. பிற்காலத் தில் வைதீக - ஆகம நெறிகளுக்கு இடைப்பட்ட ஒரு வழிமுறை உருவாக்கி யாகங்களில் உயிருள்ள ஆடு, மாடு களுக்குப் பதிலாக மாவால் செய்த ‘பிஷ்டபசுக்கள்’ பயன்படுத்தப்பட லாயின.
ஆகமவாதிகளின் ஒரு பிரிவினரான பாகவதர்களின் புனித நூலே பகவத் கீதை ஆகும். பாகவதர் களின் பக்தி, வேதாந்த ஞானம், சாங்கி யர்களின் நுண்ணிய மெய்யியல் இவை யனைத்தையும் இணைத்து ஒரே மெய்ம்மையின் தனித்தனி வடிவங்களே இம்மூன்றும் என்றவாறு அருச்சுனனுக்கு உபதேசம் செய்கிறான் கண்ணன். எனி னும் ஆகமக் கொள்கையின் காரத்தை விடாமல் வேத கர்ம காண்டத்தை கீதை கடுமையாகக் கண்டிக்கிறது.
‘‘ஞானமற்றவர்கள் வோதந்த அடிப்படையில் ஏட்டுச் சுரைக் காயாக ‘‘கர்ம காண்டம் ஒன்றே வழி’’ என்பர். எனினும் அவர்கள் நெஞ்சில் உள்ளது ஆசை. கரும பலனாக சுவர்க்க போகத்தையும் மறுபிறவி யையும் இச்சித்து எண்ணற்ற சடங் காசாரங்களைப் பின்பற்றுகின்றனர். போகமும், அதிகாரமும் அவர்கள் நெஞ்சை ஆட்டிப் படைப்பதால் அவர்கள் புத்தி சாந்தமான சிந்தனை யையும், ஞானத்தையும் நாடு வதில்லை. முக்குண வசப்பட்டவற் றையே வேதம் விளம்புகிறது. அர்ச் சுனனே நீ முக்குணவசப்பட்டவற் றுக்கு மேலானவற்றையே நாடு வாயாக.’’
வைதீகர்கள் ஆகமவாதிகளை மிக இழிவாகக் கருதினர். மந்திரம் ஓதாத வரும் ‘‘ம்ருத்ரவாச’’ரும் ஆன தஸ்யூக் களை ஆரியர் இழிவாகக் கருதினர் அன்றோ. அதன் தொடர்ச்சியே இது. யமுனாசார்யர் காலத்திலிருந்தே வைதீக, ஆகம மார்க்கங்கள் இணைந்து விட்ட போதிலும் பழைய உணர்வு இன்றும் உள்ளது. சிவன் / விஷ்ணு கோவில் பூசை செய்பவர்களை வேதாந்திகள் இன்றும் தங்களை விடக் கீழ்ச் சாதியினராகவே கருதுகின்றனர். எனக்குத் தெரிந்து 50 ஆண்டுகளுக்கு முன்வரை (அதாவது 1880 இல்) அத் வைத வேதாந்தக் கொள்கையினர் எந்தக் கோவிலுக்குள்ளும் செல்லார். வேதாந்தக் கொள்கையே ஆகம வழிபாட்டைக் கண்டித்தது. பதராயணன் பாசுபதம், பாஞ்ச ராத்திரம் இரண்டை யும் கண்டித்துள்ளான்.
ஆகமங்கள் எப்பொழுது தோன்றின?
8. முதல் உலகப் போரில் (1914-18) சில கோடி மக்கள் செத்த பின்னர் இன்று உலகில் பல்துறை மாற்றங்களைக் காண்கிறோம். அதுபோல பாரதப் போரில் ஏற்பட்ட பெரும் உயிரிழப் புக்குப் பின்னர் இந்திய மக்கள் வாழ்வியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. ரிஷிகள் காலம் போயே போய்விட்டது. வேத கர்ம காண்டம் இவ்வுலகிலும் சுவர்க்கத்திலும் கிடைக் குமெனக் கூறிய கருமபலனாகிய புல னுகர்ச்சியின்மீது மக்களிடம் வெறுப்புத் தோன்றியது.
மாறும் பிருகிருதி நடுவே மாறாது நிலையாக உள்ள பரபிரம்மம் மீது சிந்தனை செலுத்திய ஞானிகள்.  உபநிஷத்துக்களில் 32 வழிகளை (வித்யா) உருவாக்கினர். உபநிஷத்துக் கள் கர்ம காண்டத்தில் பிறந்தவை; எனவே, அக்காண்ட வாசனை சாந் தோக்ய, பிரஹதாரண்ய உபநிஷத் துக்கள் கூறும் ‘‘வழிகளில்’’ உள்ளன. மக்களுள் பெரும்பாலோர் எளிமை யானவர்; உபநிஷத்துக்கள் கூறும் மித மிஞ்சிய தத்துவக் கருத்துக்களும், வழிமுறைகளும் அவர்கள் கைக் கொள்ளக் கூடியன அல்ல. அவர் களுக்காகவே ஆகமக் கருத்துக்களும், வழிமுறைகளும் உருவாக்கப்பட்டன -
சாதாரண உலகியல் வாழ்க்கையிலி ருந்து, ஆசானையும் - அரசனையும் போற்றும், வழிபடும் முறையைப் பின் பற்றிக் கடவுள் வழிபாட்டு முறைகளும், ஆகமங்களில் உருவாயின. பாரதப் போர் முடிந்த காலகட்டத்தில் உபநிஷத் துக்களும் தோன்றின; ஆகமங்களில் முதன்மையானவையும் தோன்றின.
ஆகமங்கள் எதிலிருந்து தோன்றின?
9. இதற்கு விடை தருவது சற்றுக் கடினம். ஆகம வழிபாட்டில் அக்னிக்கு இடமில்லை; வேத மந்திரமும் இல்லை. எனவே, அது தஸ்யூக்களிடமிருந்து உருவாகியிருக்கவேண்டும்; ஆரிய வழிபாட்டு முறை உருவாவதற்கு முன் னர் தஸ்யூக்கள் வழிபாட்டு முறை தான் இருந்திருக்கும். வேதங்களும் அவற்றிலிருந்து உருவான மாபெரும் வேதாங்க சாத்திரங்களும் நம் கண்முன் மலைபோல் நிற்பதால் வேத காலத்தில் தஸ்யூ வழிபாட்டு முறையின் நிலை என்ன என்று நாம் நினைப்பதில்லை.
(அய்ரோப்பிய அறிஞர்களும் ஆரியர் - தஸ்யூக்கள் சச்சரவுபற்றியும், முன்னவர் பின்னவரோடு எப்படிக் கலந்திருப்பர் என்று உன்னிப்பது பற்றியுமே கவனம் செலுத்துகின்றனர்!) வேத வழிபாடு சார்ந்த ஸ்ரௌத யக்ஞங்கள் என்றும் பெரும்பான்மை மக்கள் வழிபாட்டு முறையாக இருந்ததில்லை. பிராமண ரித்விக்குகள் மட்டுமே அதில் பங்கேற்க முடியும். அந்த யக்ஞங்களை நடத்தும் செலவை அரசர்களும், வணிகர்களும் ஏற்ற போதிலும் அவர்கள் யக்ஞம் நடத்து வதில் பங்கேற்க இயலாது. இல்லத்தில் நடத்தும் அக்னிச் சடங்கு மந்திரங்களை அதர்வண வேதம் தந்த போதிலும் அவற்றை மக்களுள் பெரும்பான்மை யினர் பின்பற்றியதற்கு ஆதாரமில்லை.
வேத காலத்திலும் பொதுமக்கள் தஸ்யூ வழிபாட்டு முறையையே பின்பற்றி வந்திருக்கவேண்டும். அவ்வழிபாட்டு முறை எப்படி இருந்திருக்கும்? தமிழ் நாட்டின் தொன்மைச் சமய வழிபாடு பற்றி ஏற்கெனவே கூறியுள்ளோம். அதுபோன்றுதான் வட இந்தியாவிலும் தஸ்யூக்கள் வழிபாட்டு முறை இருந்தி ருக்கவேண்டும். பாட்டு, கூத்துச் சடங்குகளுடன் இன்றும் தம் தெய் வத்துக்கு உணவு படைத்து வணங் கும் வழிபாட்டு முறை போன்றே தஸ்யூ வழிபாட்டு முறை இருந்திருக்கும். சுக்ரீவன் முடிசூட்டிக் கொண்ட பொழுது நடந்த சமயச் சடங்குகளை வால்மீகி வருணிப்பது தஸ்யூக்கள் வழிபாட்டு முறைதான்.
10. மாபாரதப் போர் முடிந்த பின்னர் அக்னிச் சடங்குகள் குறைந்து கொண்டே வந்தன; அதனால், தொழில் இழந்த பிராமணர் அக்னி சாராத ஆகம வழிபாட்டு முறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டி ருக்கவேண்டும். நுண்ணிய ஏட்டுச் சுரைக்காய் மெய்ம்மைகளையே கைக் கொண்டு வாழும் உயர்ந்த மனநிலை யுடையோர் எப்பொழுதும் ஒரு சிலரே. எளிய உருக்கமான மனநிலை கொண் டோரே பெரும்பாலோர், அவர்களை பக்தி மார்க்கம் கவர்ந்தது. இதுவும் பிராமணர் பக்தி மார்க்கத்திற்குள் புகுந்ததற்கு ஒரு காரணமாகலாம். புகுந்த பின்னர் திரி மூர்த்திக் கோட்பாட்டை உருவாக்கினர்
(பிர கிருதியின் முக்குணம் பற்றிக் கூறிய சாங்கியக் கோட்பாட்டைப் போன்று) விஷ்ணுவின் அவதாரங்கள் பல (பாகவத புராணப்படி 22) என்று கூறினர்; சிவன் அவ்வப்பொழுது தற்காலிகமாக மனித உருவம் எடுப்பான் என்றனர். வைணவ ஆகமங்கள் 108, சைவ ஆகமங்கள்; (பின்னர் எழுந்த) சாக்த ஆகமங்கள் 77, ஆகியவற்றை உருவாக்கினர். படைப்பதுடன் பிரமன் வேலை முடிகிறது; அவன் முக்தி தருபவன் அல்லன். எனவே, பிரமனை வழிபட ஆகமங்கள் ஏற்பட்டில. சிவன் / கிருஷ்ண வழிபாட்டைப் பாணினியே குறிப்பிட்டுள்ளார்.
11. மெதுவாக, படிப்படியாக வேதாந் தக் கோட்பாடும், ஆகமக் கோட்பாடும் ஒன்றை ஒன்று நெருங்கின. புராணங் களில் அவை இரண்டும் காணப்படு கின்றன; ஆனால், ஒன்றாக இணைய வில்லை. கி.பி. 8 ஆம் நூற்றாண்டு சார்ந்த சங்கராச்சாரியின் காலத்தில்கூட அவை ஒன்றாகவில்லை; பதராயணன் வேதாந்திர சூத்திரத்திற்கு உரை எழுதும் அவர் பதராயணனைப் போலவே கூறுகிறார் -
பாசுபதமும் பாஞ்சராத்திரமும் பதித சமயங்கள் என்று. எனினும் அவருடைய பிரபஞ்ச ஹ்ருதயம் ஆகம வழிபாட்டு நூலே என்பதுடன் அவரை சண்மதஸ்த பனாச்சார்யர் என்று அழைப்பதையும் கருதுக. விஷ்ணு, சிவன், சக்தி, கணபதி, சுப்ரஹ்மண்யன், சூர்யன் இவர்கள் அறுவரின் வழிபாட்டு முறைகளை அவர் ஒழுங்குபடுத்தி தாம் தொடங்கிய மடங்களிலும் அம்முறைகளை நிலை பெற வைத்தார். அவர் வேதாந்த வழிபாட்டையும், ஆகம வழிபாட்டை யும் தனித்தனியாகவே வைத்தார். விசிஷ்டாத்வைதம் எனப்படும் வைஷ் ணவ வேதாந்தத்தை நிறுவிய யமுனா சாரியார்தான் முதன்முதலாக வைஷ் ணவ (சாத்விக) ஆகமங்களும் வேதங் களையொத்த பிராமணங்கள் தாம் என்று வாதிட்டவர்; அவரைத் தொடர்ந்த ராமானுஜாச்சாரியார் இரு வழிபாட்டு முறைகளையும் முதன் முதலில் ஒன்றாக இணைத்தவர். ஆயி னும் தென் இந்தியாவிற்குள் ஆகம வழிபாட்டு முறை பரவி வெகு காலம் கழித்தே இது நடந்தது; எப்படிப் பரவி யது என்பதைப் பின்னர்க் காண்போம்.
12. ஆகம வழிபாட்டு முறை வடநாட்டில் தொடங்கியதை இதுவரை விரிவாகக் கண்டோம். (ஆரியருக்கு முந்தி இந்தியாவில் வழங்கிய வழி பாட்டு முறைகளிலிருந்து தழைத்த) அம்முறை கி.பி. 5 - 6 ஆம் நூற்றாண் டுகளில் தென்னாட்டு மக்கள் மனதை யும் கைப்பற்றியது; அது மட்டுமல்ல, பின்னர் வேதாந்தக் கலப்புடன் அது வடநாட்டிலும் பரவி 1000 ஆண்டுகளாக இந்தியா முழுவதுமே ‘‘வாழும் இந்து மதத்தின்’’ வழிபாட்டு முறையாக ஆகம வழிபாடே விளங்கி வருகிறது என்று ‘‘தமிழர் வரலாறு’’ எனும் நூலில் பி.டி. சீனிவாச அய்யங்கார் குறிப்பிடுகிறார்.
இவ்வளவு தெளிவற்ற நிலையில் பல்வேறு பரிமாண மாற்ற நிலைகளைக் கொண்டதுதானே இன்றுள்ள ஆகம வழிபாடு?
அதையும் எத்தனைக் கோவில்கள் கடைப்பிடிக்கின்றன!
ஆகமப்படி உள்ளவர்கள்தானா இன்றைய பிரபல கோவில்களில் அர்ச் சகராக உள்ள பார்ப்பனர்கள் என்பதை யும் ‘ஆகமப் பூச்சாண்டி’ காட்டுவோர் சிந்திக்கவேண்டும்.
இதன் பிழிவையும், இதேபோல் மற்ற சில அறிஞர்கள் - ஆய்வாளர்களது கருத்தை நாளையும் தொடர்ந்து தருவோம்.
-விடுதலை,23.12.15

இந்து மத ஞானிகள், முனிவர்கள் பிறந்த முறை

 ஞானிகள், முனிவர்கள் எப்படியெல்லாம் பிறந் துள்ளனர் என்று  புராணம் கூறும் ஆதாரங்கள்படியே !

கலைக்கோட்டு ரிஷி  - மானுக்கும்,
ஜம்புகன் - நரிக்கும்,
அகஸ்தியர் - குடத்துக்கும்,
மாண்டல்யர் - தவளைக்கும்,
காங்கேயர் - கழுதைக்கும்,
சவுனகர் - நாய்க்கும்,
கணாதர் - கோட்டானுக்கும்,
ஜாம்புவந்தர் - கரடிக்கும்,
அஸ்வத்தாமன் - குதிரைக்கும்
பிறந்தனர் என்பதுதான் இந்து மதத்தின் உச்சக்கட்ட மகாத்மியம்!

வெள்ளி, 1 ஜூலை, 2016

மந்திரத்தால் மாங்காய் விழுமா?-யாகங்கள்


மந்திரத்தால் மாங்காய் விழுமோ? என்பது பாமரர்களும் பேசும் மொழியாகும். இதன் பொருள் அவ்வாறு நிகழாது என்பதுதான்.
யாகங்கள் என்பவை ஆரியக் கலாச்சாரம் - தமிழ் வேந்தர்கள் யாரேனும் யாகம் செய்தார்கள் என்றால், அது ஆரியர்களைப் பின்பற்றிய தாக்கமாகும்.
கடவுளைத் திருப்திபடுத்த தீயில் உயிர்களைப் போட்டுப் பொசுக்கி அந்த மிருகங்களைப் பங்குப் போட்டுச் சாப்பிடு வதுதான் யாகத்தைப்பற்றிய சுருக்கமாகும்.
பசு - இந்துக்களின் புனிதம் - தெய்வம் - பசுவைக் கொல்ல லாமா? பசு மாமிசம் புசிக்கலாமா? என்று ‘நெற்றிக்கண்’ணைக் காட்டுகிறார்களே - இவர்களின் யாகச் சடங்கு என்பது யாது?
30 வகையான யாகங்களையும் யஜூர் வேதம் பட்டியலிடுகிறது. அவற்றுள் ஒன்று கோஸவம் - பசு, காளை இவைகளைக் கொல்லும் யாகம். அஷ்டதச பசுவிதானம் என்பது பதினெட்டுப் பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்.
மனுதர்ம சாஸ்திரம் என்ன சொல்லுகிறது?
எக்கியத்திற்காகவோ (யாகத்துக்காகவே) பசுக்கள் பிரமனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன. அந்த எக்கியஞ் செய்தால், உலகமெல்லாம் க்ஷேமத்தை அடைகின்றது. ஆகையால், எக்கியஞ் செய்யும் பசு ஹிம்சை ஹிம்சையல்ல.
- மனுதர்மம் அத்தியாயம் 5; சுலோகம் 39
மாட்டுக் கறியைச் சாப்பிட்டார் என்று அபாண்டமாகப் பழி கூறி முசுலிம் பெரியவரான முகமது அக்லக்கை உத்தரப்பிரதேசத்தில் அடித்துக் கொன்றார்களே - அவர்கள் இந்த மனுதர்மத்தை என்ன செய்வதாக உத்தேசம்? நெருப்பு வைப்பார்களா?
விலங்குகளை உயிரோடு தீயில் வைத்துக் கொளுத்தி, அதன் புலாலை வயிறு புடைக்கத் தின்று தீர்க்கும் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைத்தான் சித்தார்த்தனாகிய கவுதம புத்தன் எதிர்த்தான். அதனால்தான் ஆரியப் பார்ப்பனர்கள் புத்தரை நாத்திகன் என்றனர் - வசை மொழி பொழிந்து தள்ளினர்.
இவர்கள் எத்தகைய காட்டுவிலங்காண்டிகள் என்பதற்கு ஓர்  எடுத்துக்காட்டு உண்டு. புருஷஞ்ஞ என்ற ஒரு யாகம் உண்டு. இதன் பொருள் என்ன தெரியுமா?
மனிதனைக் கொன்று நடத்தும் யாகமாகும். யஜுர் வேதம் என்பது இத்தகைய காட்டு விலங்காண்டித்தன யாகங்களை விவரிப்பதுதான்.
60 ஆயிரம் மனைவிமார்கள் இருந்தும் தசரதனுக்குக் குழந்தை இல்லை என்பதற்காக அசுவ மேத யாகம் செய்வித்தனர். அதற்காக வேசியர்களை அனுப்பி மயக்கவித்து ரிஷிய சிருங்கரை அழைத்து வந்து அல்லவா அந்த யாகத்தை நடத்தினான் தசரத மகா சக்ரவர்த்தி!
பிரதான பசுவாகிய அசுவரத்தினத்தை (குதிரையை) ராஜ பத்தினியாகிய கவுசல்யை, கைகேயி, சுமத்திரையுடன் இடம், வலம் சுற்றி வந்து, ஓரிரவெல்லாம் அதனோடு கூடவே யிருந்தாள். கட்டிப் புரண்டனர். பிறகு அத்வர்யு, ஹோதா, உத்காதா, பிர்மா என்ற முக்கிய ரித்விக்குகள் ராஜாவினாலே தட்சணையாகக் கொடுக்கப்பட்ட ராஜ பத்தினிகளைக் கையில் பிடித்துக்கொண்டு, அவர்களுக்காகப் பணம் பெற்றுக் கொண்டு அவர்களை அரசனுக்கே கொடுத்துவிட்டார்கள். (வால்மீகி இராமாயணம் பாலகாண்டம் 14 ஆவது சர்க்கம் - 45 ஆவது பக்கம், தாத்தா தேசிகாச்சாரியார் மொழி பெயர்ப்பு).
இவ்வளவையும் எடுத்துக்காட்டுவதற்குக் காரணம், தெலங்கானா முதலமைச்சராக இருக்கக்கூடிய சந்திரசேகர ராவ் உலக அமைதிக்காகவும், தெலங்கானா மக்களின் நல்வாழ்வுக்காகவும் 7 கோடி ரூபாய் செலவுசெய்து மேடக் மாவட்டம் எர்ரவள்ளி என்ற கிராமத்தில் மகாயுத சண்டி யாகம் நடத்தினாரே - அதன் பூர்வோத்திரம் எத்தகைய அசிங்க மானது என்று காட்டுவதற்காகத்தான்.
யாகம் செய்தால் நாட்டில் நல்லது நடக்கும் என்றால், உலகில் அமைதித் தென்றல் வீசும் என்றால், சந்திரசேகரராவ் எதற்காகக் கட்சி நடத்தவேண்டும்? ஆந்திராவிலிருந்து தனித் தெலங்கானாவை ஏன் பிரிக்கவேண்டும்? தேர்தலில் ஏன் போட்டியிட வேண்டும்? முதலமைச்சராகத்தான் ஏன் ஆகித் தொலைய வேண்டும்?
நாலு பணக்காரர்களிடம் பணத்தை வாங்கி புரோகிதப் பார்ப்பனர்களுக்குக் கொட்டிக் கொடுத்து, யாகங்களை நடத்தி நாட்டை வாழ்விக்க வேண்டியதுதானே!
சரி, இவ்வளவும் தான் செய்தாரே - அதாவது ஒழுங்காக நடந்ததா? யாகத்தீ மூண்டு பந்தலையும், யாகக் குண்டங் களையும் பதம் பார்த்துவிட்டதே!
யாரும் பலியாகவில்லை அதுவரை திருப்திதான் - இப்பொழுதுகூட என்ன சொல்லுவார்கள் - இந்தப் பார்ப்பனப் பாதகர்கள்? ஏதோ தோஷம் - சாமிக் குத்தம் - அதுதான் இப்படி நடந்திருப்பதற்குக் காரணம் என்று சொல்லி, அதற்கும் பரிகாரம் என்று சொல்லி, எந்தக் கசுமால சடங்குகளையாவது நடத்தச் சொல்லி, அதிலும் காசு பறித்து விடுவார்களே! ஏமாந்த சோணகிரிகள் இருந்தால் இத்தகைய ஏய்க்கும் கூட்டம் தொந்தியைத் துருத்திக் கொண்டுதானே முன்னே நிற்கும்?
1997 ஜூன் 8 ஆம் தேதி தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் என்ன நடந்தது? மகாகும்பாபிஷேகத்தை ஒட்டி 120 புரோகிதப் பார்ப்பனர்களை வைத்து யாகம் நடத்திக் கொண்டிருந்தபோது, யாக சாலையில் பிடித்த தீ பந்தலிலும் பாய்ந்து, 38 பேர்களைப் பலி கொண்டதே, பெருங்காயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட மேலும் 12 பேர்களும் மடிந்தனரே! இதில் பெரும்பாலும் பெண்கள்தான் - அவர்கள் கட்டிய புடவை விரைந்து ஓடி வர முடியாமல் தடுத்ததால், தீயில் சிக்கிக் கொண்டனர்.
இவ்வளவுக்குப் பிறகும், யாகம் என்ற மூட நம்பிக்கை நடந்துகொண்டுதானிருக்கிறது. புரோகிதச் சுரண்டல்கள் தாம் தூம் என்று நடந்துகொண்டுதானிருக்கிறன்றன.
உணவுப் பொருள்களையும், பட்டாடைகளையும் நெருப்பில் போட்டுப் பொசுக்குவதை கிரிமினல் குற்றமாக்கித் தண்டிக்கவேண்டாமா? மக்கள் நல அரசு என்றால், அதனைத்தானே செய்யவேண்டும். அமைச்சர்களே மூட நம்பிக்கைவாதிகளாக இருந்தால் என்ன செய்வது? பகுத்தறிவின் அவசியத்தை இப்பொழுதாவது உணர்ந்தால் சரி!
-விடுதலை,30.12.15