வெள்ளி, 19 ஏப்ரல், 2019

யாகத்தை எதிர்க்கும் நாம் அரக்கர்களாம் சூத்திரர்களாம்!

08.05.1948  - குடிஅரசிலிருந்து....

நம்மவர் தென்னாட்டில் பெரும் பகுதியாகவும், வடநாட்டில் ஆரியர் பெரும் பகுதியாகவும் இருப்பது வட நாட்டிலிருந்த திராவிடர்கள் ஆரிய எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் தென்னாட்டை நோக்கி வந்து இருக்கவேண்டும் என்பதைத்தான் காட்டுகிறது. ஆரியர்களின் முக்கிய சடங்காகிய யாகத்தை எவன் பழித்தானோ, கெடுத்தானோ அவனே ஆரியர்களால் அரக்கனென்றும், இராட்சத னென்றும் கூறப்பட்டான். ஆகவே, யாகத்தில் உயிர்ப்பலி கூடாது, அத்தியாவசியமான பொருள்கள் நெருப்பில் போட்டு எரிக்கப்படக் கூடாது என்று கூறும் நம்மைத்தான், அரக்கர் என்கின்றனர் இந்த அன்னக்காவடிப் பார்ப்பனர். இன்றும் நாம் யாகத்தைத் தடுக்கிறோம். பழிக்கிறோம். ஜீவஹிம்சை கூடாது என்று கெஞ்சிக் கூத்தாடிச் சர்க்காருக்கு விண்ணப்பித்துக் கொண்டு யாகங் களின் மீது தடையுத்தரவு வாங்கி வருகிறோம்.

யாகம் என்றால் என்ன? என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். ஆடு, மாடு தின்ன ஆசைப்படும் சில பிராமணப் பைசாசங்கள் ஒன்று கூடிக்கொண்டு, அவற்றின் இரத்தம் வெளிப்பட்டால் ருசி கெட்டுவிடும் என்பதற்காக, அவற்றை வெட்டிக் கறி செய்யாமல், அவை களைக் கட்டிப் போட்டு, அவற்றின் விதைகளைக் கிடுக்கிக் கொண்டு கசக்கிக் கசக்கிச் சாக வைப்பார்கள். ஒரு ஆடோ, மாடோ இவ்விதம் சாக வைக்கப்பட பல மணிநேரங்கூட ஆகலாம். ஆனாலும், அகோர மாமிச பிண்டங்களான இந்த யாகப் பிசாசுகளுக்கு அதுபற்றிக் கவலை யேது? இவ்வாறு உயிர்வதை செய்யப்பட்ட மிருகத்தை யாக குண்டத்தி லிட்டு, அதில் நெய்யூற்றி வேக வைத்துத் தின்பதுதான் மனுதர்ம சாஸ்திரப்படி செய்யப்படும் யாகம். இப்படிப்பட்ட கோரவதை கூடாது என்று தடுத்தவர்கள்தான் ஆரியரால் அரக்கராக சித்தரிக்கப் பட்டனர்.

சூத்திரனுக்கு யாகம் செய்யும் உரிமை கிடையாது. யாகத்தை வெறுப்பவன் சூத்திரன். ஆகவே, யாகத்தை வெறுக்கும் திராவிடராகிய நாம் ஆரிய சாஸ்திரப்படி சூத்திரர்தான். ஆரியன் ஏது? சூத்திரன் ஏது? என்று நம்மைக் கேட்கிறார்கள் சில அப்பாவி மக்கள். சட்டம் கூறுமா சூத்திரன் இல்லையென்று? சூத்திரன், பிராமணன் இல்லை யென்றால், கோயிலில் மணியடிக்கும் தொழில் ஒரே ஜாதிக்காரன் வசமே இருக்கக் காரணமென்ன? கோயில் அர்ச்சகர்கள் யார்? அவர்கள் ஏன் சமஸ்கிருதம் ஓதுகிறார்கள்? சமஸ்கிருதம்தான் தேவ பாஷை, மற்றவை மிலேச்ச பாஷை, நீச்ச பாஷை என்று ஆரிய சாஸ்திரம் கூறியிருப்பதை நீ அறிவாயா? திடுதிடுவென்று நாலு ஜாதியாரும் கோயிலுக்குள் போவோம், சற்றிருங்கள் என்று கூறி, பிராமணத் தோழன் உங்களைத் தாண்டிக் கொண்டு மூலஸ் தானத்திற்குள் போய்விடுகிறானா இல்லையா பாருங்களேன்? இதைப் பார்த்த பிறகும் எந்தத் தோழனாவது பிராமணன் சூத்திரன் இல்லை என்று கூறுவானாயின் அவன் அறிவு மலையேறி விட்டது என்றுதானே கூறவேண்டும். ஏன் இந்த உயர்வு தாழ்வுக் கொடுமையை இன்னும் மூடி வைக்கப் பார்க்கிறீர்கள்? உள்ளதை மூடி வைத்தால் அது புரை ஓட ஆரம்பித்துவிடும் என்பதை நீங்கள் அறியீரோ!

-  விடுதலை நாளேடு, 19.4.19

யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்? - மனுதர்மம்

10.03.1935  - குடிஅரசிலிருந்து....

யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்?

மனு தர்ம சாஸ்திரம் என்பது நமது மதத்திற்கே ஆதார மாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அனுஷ்டிக்கப் பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்டத்திட்டங்களால் அனுசரிக்கப்பட்டது மாகும். அதிலுள்ள நீதிகளும், விதிகளும். எந்தவிதமான ஒழுங்கு முறையில் முன்னோர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு மக்கள் அடிமைப் படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருக் கின்றன என்பதை யாரும் உணர்ந்துகொள்ளுவது அவசிய மாகும். ஆதி திராவிட சமுகம் முதல், சகல அடிமைப் படுத்தப்பட்ட சமுகத்தார்கள் வரை இந்த மனுதர்மத்தை நீதியாகக் கொண்ட இப்படிப்பட்ட கொடுமையான இந்துமதத்தில் இருப்பதைவிட பிற மதத்தில் சேர்ந்து தங்களுக்கு விடுதலையைத் தேடிக் கொள்வது சரியா? பிசகா? என்பதையும் அல்லது இம்மாதிரியான அநீதியான சட்டத் திட்டங்கள் அமைந்துள்ள இந்து மதத்திலேயே அடிமைப்பட்டாகிலும் வாழ வேண்டுமா என்பதையும் கீழ்வரும் மனுதர்ம விதிகளைப் படித்து முடிவு செய்து கொள்ளும்படி கோருகிறோம்.

1.            பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவ னாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது.  - அத்தியாயம் 8, சுலோகம் 20

2.            சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை உடையதாய் இருக்கும். அ.12, சு.43.

3.            சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி. அ.12. சு43.

4.            ஸ்திரீகள் புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை. அ.8. சு.112.

5.            நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்யவேண்டிய பிராமணனைச் சத்தியமாகச் சொல்லுகிறேன் என்று சொல்ல செய்யவேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத் திரனைப் பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணர வேண்டும்.- அ. 8. சு. 113-115.

6.            சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்.  - அ.8. சு. 271.

7.            சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்.  - அ.8  சு.271.

8.            பிராமணனைப் பார்த்து, நீ இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண் ணெய்யைக்  காய்ச்சி ஊற்ற வேண்டும். அ.8  சு.272.

9.            சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட் கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்.   - அ.8  சு.281.

10.          பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமண ரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவமில்லை.  -  அ.8.  சு.349.

11.          சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர் போகும் வரையும் தண்டிக்க வேண்டும். பிராமணன் கொலை குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிடவேண்டும். - அ.8 சு.380

12.          அரசன் சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த ஜாதிக்கு பணிவிடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும். - அ.8.சு.410.

13.          பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப்பட்டிருக்கிறான். - அ. 8  சு.413

14.          பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான் - அ.8.சு.417.

15.          சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது. - அ. 9  சு. 416

16.          பிராமணனால் சூத்திர ஸ்திரீக்குப் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்குத் தந்தை சொத்தில் பங்கில்லை.  - அ.8  சு. 155.

17.          பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்திரவதை செய்து, கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம். - அ.9  சு.248.

18.          பிராமணன் மூடனானாலும் அவனே மேலான தெய்வம்.  - அ.9  சு. 317

19.          பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந் தாலும் பூஜிக்கத்தக்கவர்கள் ஆவர்கள். - அ. 9 சு.319.

20.          பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவ னாதலால் அவன் பிராமணனுக்குத் துன்பம் செய்தால் அவனைச் சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும். - அ.9 சு.320.

21.          சூத்திரனுக்கு பிராமணப்பணிவிடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாத விடத்தில் சத்திரியனுக் கும், சத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக் களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டு கொடுக்கா விட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு. - அ.11.  சு.12.

22.          சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும், யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம். - அ.11.  சு.13.

23.          யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைத் தண்டிக்கக் கூடாது. - அ.11  சு.20.

24.          பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும். - அ.11  சு.66.

25.          ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும். - அ.11.  சு.131.

25           (அ)       அதுவும் முடியாவிடில் வருண மந்தி ரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது - அ.11.  சு.132.

26.          சத்திரியன் இந்நூலில் (மனுதர்ம சாஸ்திரத்தில்) சொல்லப் பட்டபடி ராஜ்யபாரம் பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமண பணிவிடை செய்வதே தவமாகும். - அ.11  சு.285.

27.          சூத்திரன் பிராமணனுடைய தொழிலை செய் தாலும் சூத்திரனேயாவான். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமணனேயாவான். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார். - அ.10. சு.75.

28.          பிராமணரல்லாதவன் உயர்குலத்தோருடைய தொழிலைச் செய்தால் அரசன் அவனது பொருள் முழுவ தையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும். - அ.10  சு.96

29.          சூத்திரன் இம்மைக்கும், மோட்சத்திற்கும் பிராமண னையே தொழ வேண்டும். - அ.10. சு.96.

30.          பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த ஆடையும், கெட்டுப்போன தானியமும் சூத்திரனுடைய ஜீவனத்துக்கு கொடுக்கப்படும். - அ.10. சு.125

31.          சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனாகயிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக் கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது பிராமணனுக்கு துன்பமாய் முடியும். - அ.10.  சு.129.

32.          மனுவால் எந்த வருணத்தாருக்கு இந்த மனுதர்ம சாஸ்திரத்தால் என்ன தர்மம் விதிக்கப் பட்டதோ, அதுவே வேத சம்மதமாகும். ஏனென்றால், அவர் வேதங்களை நன்றாய் உணர்ந்தவர். - அ.2.  சு.7.

இன்னும் இதைப் போன்று ஆயிரக்கணக்கான அநீதியானதும், ஒரு சாராருக்கு நன்மையும், மறுசாராருக்குக் கொடுமையும் செய்வதுமான விதிகள் மனுதர்மத்தில் நிறைந்திருக்கின்றன. சுருங்கச் சொல்லுங்கால் பிராமணன் என்ற வகுப்பாரைத் தவிர, வேறு எந்த வகுப்பாருக்கும் அதில் யாதொரு நன்மையும் இல்லை என்றே கூறலாம். ஆகையால் தோழர்களே! இந்நூலை மனுதர்மம் என்று கூறுவதா? அல்லது மனுஅதர்மம் என்று கூறுவதா? சற்று யோசித்து முடிவு செய்யுங்கள்.

-  விடுதலை நாளேடு, 19.4.19

தாலி கட்டுவது என்ற சடங்கு இருந்ததில்லை.

தாலி அகற்றும் நிகழ்வைக் கொச்சைப்படுத்தும் தலை இல்லா ஆசாமிகளே!

இதற்கு உங்கள் பதில் என்ன?

1) வேதகாலத்திலோ, அதற்குப்பின் இதிகாச காலங்களிலோ, கடவுளுக்கு நடந்த கல்யாணங் களிலோகூட தாலி கட்டுவது என்ற சடங்கு இருந்ததில்லை.

சடங்குகளின் கதை! - இந்துமதம் எங்கே போகிறது? 2ஆம் பாகம், பக்கம் 41ல் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதுகிறார்

திருமணம் என்றாலே நம் எல்லோரின் நினைவிற்கு வருவது?... அல்ல... அல்ல... வரவைக்கப்பட்டிருப்பது

மாங்கல்யம் தந்துநாநேந மமஜீவந ஹேதுநா

கண்ட்டே பத்நாமி ஸூபகே ஸஞ்ஜீவ ஸநத... ஸதம்...

டி.வி., சினிமா, ரேடியோ, கீடியோ என எல்லாவற்றிலும் கல்யாணம் என்றாலே... இந்த சுலோகம்தான்  ஒலிக்கிறது. இதை வைத்து தாலி கட்றான் என அடையாளப்படுத்துகிறார்கள்.

இந்த சுலோகத்துக்கு வயது என்ன- என்று பார்த்தால் வேதகாலத்திலோ... வேத மந்த்ரத்திலோ இந்த தாலி என்ற சடங்கே இல்லை. மாங்கல்ய தாரணம் அதாவது தாலி கட்டுவதற்கென்று வேதத்தில் மந்த்ரமே இல்லை. அது குறிப்பிடப்படவே இல்லை.

2)  இவர் மட்டுமல்ல

Encyclopedia of Puranic Beliefs and Practices by Sadashiv A.  Dange
R.G. Bhandarkar Formerly Professor and Head of the Dept of sanskrit bombay university

‘Marriage’ என்ற தலைப்பிலும்

‘Ritual Details’ என்ற தலைப்பில்.

ஏழு அடி - சப்தபதி பற்றிதான் சொல்லப்பட் டுள்ளதே தவிர (சிவபார்வதி, கல்யாணம் துவங்கி) எங்கேயும் தாலி கிடையாது (பக்கம் 997-998)

Ritual Details: details about the rituals of marriage obtain, with local touches. As per the Vedic tradition. all gods are believed to be present at the altar at the marriage. The bride is said to take seven steps\(saptapadi) stepping in seven circles specially drawn….

… Further details of the practices at marriage are available from the description of the marriage of siva and parvati. ..

..Then followed the ritual of wearing the sacred thread; and both, the bride and the bride-groom had to undergo it..

..The father of the bride gave various gifts to the bride groom..

..The brahma describes the marriage of parvati as svayamvara (marriage by her own choice’, which is described in chapter36…

இவற்றில் தாலி பற்றி எங்கும் கிடையாதே.

3) தமிழர்களின் திருமணச் சடங்கிலும் கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்கு முன்பு, தாலி கட்டும் பழக்கமே கிடையாது.

பிற்காலத்தில் புகுத்தப்பட்டது. (- டாக்டர் மா. ராசமாணிக்கனார்  தமிழர் திருமணத்தில் தாலி என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.)

எனவே, இது இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்று கூறுவது, ஒன்று அறியாமையால் அல்லது திட்டமிட்ட விஷமத்தால்தான் -

எனவே, தாலியை பெண்ணடிமைச் சின்னமாக கருதி விரும்பி அகற்றிக் கொள்ள தாமே முன் வருபவர்களின் உரிமையை எவரே தடுக்க முடியும்?

ஏன் விதண்டாவாதத்தில் ஈடுபட்டு விளம்பர நாடகம் ஆடுகிறீர்கள்?

-விடுதலை,11.4.15

புதன், 3 ஏப்ரல், 2019

மனுதர்மம் எரிந்த வரலாறு
1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் கூட சூத்திரர்கள் என்ற விவரம் தரப்பட்டு இருந்தது.

1922இல் திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டை ஒட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் இவற்றுக்கு பாதுகாப்பாய் உள்ள இராமாயணத்தையும் மனுஸ்மிருதியையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

1927இல் சென்னையில் கூடிய பார்ப்பனர் அல்லாத இளைஞர்களின் முதல் மாநில மாநாட்டில் ஜே.எஸ்.கண்ணப்பர், அரசு பதிவேடுகளிலிருந்து சூத்திரன் என்ற சொல் நீக்கப்பட வேண்டும் என்று தீர்மானத்தை முன்வைத்தார்.

4.12.1927 அன்று வடார்க்காடு மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் மனுதர்ம சாஸ்திர நூல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

25.12.1927 அன்று அம்பேத்கர் தலைமையில் மராட்டிய மாநிலத்தில் மகத் நகரில் மனுதர்மம் எரிக்கப்பட்டது.

17.5.1981 அன்று திராவிடர் கழகம் சார்பில் நாடெங்கும் மனுதர்மத்தை திராவிடர் கழகம் எரித்து சாம்பலாக்கியது.

10.3.2017 அன்று திராவிடர் கழக மகளிரணியினரே முற்றிலும் பங்கேற்று தமிழ் நாடெங்கும் மனுதர்ம எரிப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

7.2.2019 அன்று மனுதர்ம எரிப்புப் போராட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமையில் நடைபெற்றது.

“மனுநீதி போதிப்பது என்ன?” ஆய்வுச் சொற்பொழிவுகள் கி.வீரமணி, பக்கம் 122,

- க.பழனிசாமி, தெ.புதுப்பட்டி

- விடுதலை ஞாயிறு மலர் 23. 3. 2019

யாகம் செய்வதற்காகத் திருடலாமாம்!‘பெல்’ ஆறுமுகம்


‘தினமலர்’ போன்ற பார்ப்பனர்கள் எங்கே மனுதர்மம் இருக்கிறது? என்று கேள்வி கேட்டு நாம்தான் ஏதோ இல்லாத மனுதர்மத்தைப் பற்றி பிழைப்பில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதுபோல் எழுதி வருகிறது. அப்படி எழுதிய தினமலர், ஒரு சில நாட்களிலேயே நாகசாமி என்கிற பார்ப்பன பித்தலாட்டப் பேர்வழி எழுதிய 'மனுதர்மத்தின் சாரம்தான் திருக்குறள்' என்ற நூலுக்கு ஆய்வுரை எழுதுகிறது. இரட்டை வேடம் போடுவது அவர்களுக்குக் கைவந்த கலை.

துக்ளக்கில் திருவாளர் சோ அவர்கள் மனுதர்மத்தின் பெருமைகளை விலாவாரியாக எழுதி இருந்தார். அதனை அவருக்குப் பிறகு ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ள திருவாளர் குருமூர்த்தி அவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். 20.2.2019 துக்ளக்கில் தர்மத்தின் சாரம் என்ற தலைப்பில் 'மனுதர்மம் கூறும் சட்டங்கள்' என்ற கட்டுரை வெளி வந்துள்ளது.

மனுதர்மம் மாதிரி ஒரு எக்ஸலண்ட் டாக்குமென்ட் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் இப்படி ஒருவர் எழுதி இருக்கிறாரே என்று எல்லோரும் பெருமைப்பட வேண்டும் என்று எழுதி விட்டு பல்வேறு கப்சாக்களை சோ அவர்கள் அள்ளி வீசுகிறார்.

அந்த கப்சாக்களில் ஒன்று "தன்னுடைய நடவடிக்கையினால் ஒரு சூத்திரன் பிராமணன் ஆகலாம். பிராமணன் சூத்திரன் ஆகலாம். இதெல்லாம் அவனது நடத்தையைப் பொறுத்தது என்று எழுதிவிட்டு அதற்கு ஆதாரமாக ஒரு ஸ்லோகத்தைச் சொல்லி இருக்கிறார் சோ.மனுதர்மம் பத்தாவது அத்தியாயம் 65ஆவது சுலோகம் இவ்வாறு சொல்வதாக அதில் எழுதுகிறார். சுலோகம் என்பதைக்கூட ச்லோகம் என்கிறார். ஆனால் உண்மையில் அந்த சுலோகம் பிறப்பின் அடிப் படையைத்தான் பிராமணன் ஆவதற்குக் கூறுகிறதே தவிர சோ கூறுவதுபோல் குணத்தை எங்கேயும் கூறவில்லை. 1919ஆம் ஆண்டு இராமானுஜாச்சாரியார் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்ட அசல் மனுதர்ம சாஸ்திரம், சோ கூறும் அதே பத்தாவது அத்தியாயம் ஸ்லோகம் 64 என்ன கூறுகிறது தெரியுமா?

"பிராமணன் விவாகஞ் செய்துகொண்ட சூத்திர ஸ்திரீயிடத்தில் பிறந்த பெண் பிராமணனையே விவாகஞ்செய்து கொண்டு அவளுக்கும் பெண்ணாகவே பிறந்து அவளுக்கும் பெண்கள் பிறந்து அவர்களும் இவ்விதமாகவே ஏழு தலைமுறையில் பிராம ணனையே விவாகஞ்செய்து கொண்டு வந்தால் ஏழாவது தலைமுறையில் பிறந்த வர்கள் பிராமண சாதியாகிறார்கள்'' என்றுதான் அந்த ஸ்லோகம் சொல்கிறது.

இதில் பிறப்புத்தான் வருணத்தைத் தீர்மானிக்கிறதே அன்றி எங்கே குணம் வருகிறது? பிராமணன்தான் கணவன். ஆனாலும் அந்த பிராமணனுக்கு சூத்திரப் பெண் மூலமாகப் பிறக்கும் பிள்ளை பிராமணனாக ஆக முடியாது. ஏழு தலைமுறைக்கும் பெண்ணாகவே பிறந்து அந்த ஏழு பெண்களும் பிராமணனையே திருமணம் செய்து ஏழாவது தலைமுறையில் பிறப் பவன்தான் பிராமணன் ஆவான் என்றால் அது நடக்கிற காரியமா? ஏழு தலைமுறையில் இடையிலே மூன்றாவது தலைமுறையோ நான்காவது தலை முறையோ பெண் பிறக் காமல் ஆண் பிள்ளை பிறந்து விட்டால் அவன் பிராமணன் ஆக முடியாது என்பதுதானே இதன் பொருள்? ஏழு தலை முறை என்றால் அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்? ஒரு தலைமுறைக்கு பதினைந்து ஆண்டுகள் என்று வைத்துக் கொண்டாலே 100 ஆண்டுகளுக்கும் மேல் ஆகுமே! நூறு ஆண்டுகளுக்குமேல் இதனை யார் கணக்கில் வைத்துக் கொள்வது. எத்தனாவது தலைமுறை என்று சான்றளிப்பது யார் ?இது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்?

ஆக பிறப்பின் அடிப்படையில் யாருமே பிராமணன் ஆக முடியாது என்பதுதான் இதன் உண்மைப் பொருளே அன்றி குணம் என்பதற்கு இதில் இடம் கிடையாது. இந்த 64ஆவது சுலோகத்தை சோ அவர்கள் சொல்லாமல் 65ஆவது சுலோகத்தை எடுத்துச் சொல்கிறார். இது அதைவிடப் பெரிய பித்தலாட்டம். அந்த 65ஆவது சுலோகம் என்ன கூறுகிறது என்றால் சூத்திரப் பெண்ணை பிராமணன் மணந்தால் அவன் ஏழு தலைமுறைக்குப் பின் பிராமண ஜாதியாகிறான் என்று கூறும் அந்த சுலோகம் ஒரு சூத்திரப் பெண்ணை சத்திரியன் இதேபோல் விவாகஞ் செய்தால் அய்ந்தாவது தலைமுறையில் அவன் சத்திரியன் ஆகிறான் என்றும் வைசியன் அதேபோல சூத்திரப் பெண்ணை மணந்தால் மூன்றாவது தலைமுறையில் வைசியன் ஆகிறான் என்றும் தான் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலும் ஒரு குலத்துக்கு ஒரு நீதிதான் சொல்லப்பட்டிருக் கிறதே தவிர குணத்தின் அடிப்படையில் ஒருவன் பிராமணனாகவோ சத்திரியன் ஆகவோ வைசியன் ஆகவோ ஆக முடியாது என்பதுதான் மனுதர்மத்தின் சாரம். இதனை இன்றும்கூட நியாயப்படுத்தி ஒரு கூட்டம் நம்மை ஏய்த்துக் கொண்டிருக்கிறது.

அத்துடன் அதே கட்டுரையில் சோ மேலும் எழுதுகிறார், அதாவது மனுதர்மம் பிராமணனுக்கு கடுமையான தண்டனை விதிக்கிறது. சூத்திரன் குற்றம் செய்தால் அவனுக்கு எட்டு மடங்கு தண்டனையும் வைசியனுக்கு பதினாறு மடங்கும், சத்திரி யனுக்கு முப்பத்திரண்டு மடங்கும், பிராமண னுக்கு 64 மடங்கு அல்லது 128 மடங்கு தண்டனை விதிக்கிறது. அதனால் பிராமண னுக்குத்தான் கடுமையான தண்டணையை மனுதர்மம் விதிக்கிறது. அதனால் மனு பிராமணர்களுக்கு சலுகை காட்டுகிறது என்பது தவறான வாதம் என்று சோ வியாக்கியானம் செய்கிறார். அதற்கு ஆதார மாக எட்டாம் அத்தியாயம் 337, 338 ஆவது சுலோகத்தைக் காட்டுகிறார். அதிலேயும் சோ வார்த்தை ஜாலம் செய்திருக்கிறார். அந்த ஸ்லோகம் என்பது வெறுமனே குற்றம் என்பதற்கான தண்டனை அல்ல. என்ன குற்றம் என்பது அதில் தெளிவாகச் சொல்லப்பட்டி ருக்கிறது. என்ன குற்றம் என்றால் திருட்டுக் குற்றம். அந்தத் திருட்டுக் குற்றத்திற்குத்தான் வர்ணத்திற்குத் தகுந்தாற்போலத் தண்டனை என்றும் அதிலே பார்ப்பானுக்குத்தான் அதிகபட்சத் தண்டனை என்றும் அதனால் பார்ப்பனர்கள் ரொம்பப் பாவம் என்பது போலவும் மனு தர்மம் பார்ப்பனர் களுக்கு சலுகை தருவதை விட தண்டனைதான் விதித்திருக்கிறது என்று புலம்புகிறார்.

ஆனால் அதே மனுதர்மம் பார்ப்பனர்கள் திருடுவதை ஒரு குற்றமாகவே கூறவில்லை என்பதுதான் உண்மை . அதே எட்டாவது அத்தியாயம் 417ஆவது சுலோகம் என்ன சொல்கிறது தெரியுமா?

பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன ஏழுவிதமான தொழிலாளியான சூத்திரர் இடத்தினின்று பொருளை வலிமையினாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறது.

ஒருவன் பொருளை வலிமையினால் எடுத்துக் கொள்ளலாம் என்றால் அதற்கு என்ன பொருள்? திருட்டுத்தானே! ஆனால் சூத்திர னுடைய பொருளை வலிமையினால் எடுத்துக் கொள்ள மனுதர்மம் பார்ப்பானுக்கு உரிமை அளித்திருக்கிறது. இதுதான் மனு பார்ப்பன ருக்கு விதிக்கும் தண்டனையா?

அது மட்டுமல்ல, திருட்டு தொடர்பாகவே மேலும் மனு என்ன கூறுகிறது தெரியுமா?

யாகம் செய்வதற்காக பார்ப்பான் திருடலாம் என்கிறது மனு. 11ஆவது அத்தியாயம் 12ஆவது சுலோகம் என்ன சொல்கிறது என்றால் வைசியன் வீட்டில் இருந்து யாகஞ் செய்கிற பொருளை கேட்டும் கொடாவிடில் வலிமை செய்தாவது, அல்லது களவு செய்தாவது கொண்டு வரலாம் என்கிறது. அதே நேரத்தில் சூத்திரன் பொருள் வைத்திருந்தால் அவனிடம் கேட்க வேண்டியதில்லை. அவனைக் கேட்காமலும் வலிமையினாலும் அவன் பொருளை யாகம் செய்யக் கொண்டு வரலாம் என்று பார்ப்பனருக்கு சலுகை வழங்குகிறது. அதே அத்தியாயம் 21ஆவது சுலோகம் என்ன தெரிவிக்கிறது என்றால் அவ்வாறு திருடி வந்து யாகம் செய்கிற பிராமணனை அரசன் தண்டிக்கக் கூடாது. மாறாக அத்தகைய பார்ப்பனர்களுக்கு அரண்மனையிலிருந்து அந்த பிராமணனுக்கு போதுமான ஜீவன் விருத்தியை அதாவது அவனுக்கு போதுமான செல்வத்தைக் கொடுத்துக் காப்பாற்ற வேண்டும் என்கிறது.

திருட்டுக் குற்றத்திற்கு பார்ப்பானுக்கு அதிகப்படியான தண்டனை என்று சொல்கிற மனுதர்மம் பார்ப்பான் திருடுவதற்கு விதி விலக்குகளை அளிக்கிறது. மற்றவர்களுக்கு அவ்வாறு எந்த சலுகையும் வழங்கவில்லை. மாறாக ஒரு குற்றத்திற்கு சூத்திரனுக்கு மரண தண்டனை விதிக்கச் சொல்லும் மனுதர்மம் அதே குற்றம் செய்கிற பார்ப்பானுக்கு தலையை மொட்டை அடித்தால் போதும் என்றும் அவனுக்கு அவனுடைய செல்வத்தை எல்லாம் கொடுத்து நாடு கடத்த வேண்டும் என்று மட்டுமே கூறுகிறது. இதுதான் மனு பார்ப் பனர்களுக்கு விதிக்கும் கடும் நிபந்தனைகளா?

இப்படியெல்லாம் இவர்கள் பேசுவார்கள் என்பதனால்தான் இதற்கான பதிலை அண் ணல் அம்பேத்கர் அவர்கள் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே தோலுரித்து அதனைத் தீயிட்டுப் பொசுக்கி அம்பலப்படுத்தி இருக்கிறார். பார்ப்பனியத்தின் வெற்றி என்ற தனது கட்டுரையில் சோ போன்றவர்களுடைய இந்த வியாக்கியானங்களுக்கு பதில் அளித் துள்ளார்.

மனு சாஸ்திரத்தில் பிராமணர்களுக்கு கஷ்டமான நியமங்களை எல்லாம் சொல்லி இருக்கிறது என்பது பற்றி அண்ணல் கூறுவது என்னவென்றால் " பிராமணனுக்கு வறுமையும் சேவையும் தான் இலட்சியமாக இருக்க வேண்டும் என்று மனு கூறுவதாக முடிவு செய்வது வேண்டுமென்றே மிகையாக இட்டுக் கட்டிக் கூறும் ஒரு கட்டுக்கதை" என்று கூறு கிறார். அதற்கு பல்வேறு உதாரணங் களைக் கூறுகிறார்.

மனு பிராமணர்களுக்கு விதித்திருக்கும் கடுமையான தண்டனை என்ன தெரியுங்களா?

''ஒரு பிராமணன் மூன்று உலகங்களின் மக்களையும் கொன்றிருந்தால்கூட, ரிக், யஜூர், சாம, வேதத்தை உபநிஷத்துடன் சேர்த்து மூன்றுமுறை ஓதினால் எல்லாப் பாவங்களிலும் இருந்தும் அவன் முற்றிலும் விடுதலை பெறுகிறான்” என்று மனு அத்தியாயம் 11 ஸ்லோகம் 261,262 கூறுவதாக அண்ணலே எடுத்துரைக்கிறார். ஆகா, எவ்வளவு கஷ்ட மான நிபந்தனை பார்த்தீர்களா? வேதங்களை ஓதுவது அவ்வளவு பெரிய கஷ்டமா? உன் பிழைப்பே அதுதானே அய்யா?

(தொடரும்)

 - விடுதலை ஞாயிறு மலர் 23. 3. 2019