கைவல்யம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கைவல்யம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 ஜூன், 2024

பிராமண சனாதன தருமம்


வரலாற்றுச் சுவடுகள்: 

கைவல்யம்

“உத்தியோகத்தைப் பிராமணர்கள் தேட வேண்டியதில்லை; உத்தியோகம் தானே அவர்களைத் தேடிவரும்’’ என்றார். சர்.சி.பி. அய்யர். ஏன் அப்படிச் சொன்னார்? பதவி செல்வம் என்கிற ஆணவத்தாலா? அல்லது உயர்ந்த ஜாதி என்கிற பெருமையினாலா? அல்ல. புத்தி, படிப்பு, உழைப்பின் தன்மை, சந்தர்ப்பத்தை விடாமல் உபயோகப்படுத்திக் கொள்ளும் வழி முதலியவைகளெல்லாம் பிராமண ஜாதியான தன் ஜாதிக்குத் தெரியுமென்பது அவருக்குத் தெரியும். அது புத்தியுடைய எல்லோருக்கும் உயர்ந்ததும் உரித்தானதுமாகும். பின்சபைக்கு வந்த வைதிகர்களுடையதும் மடாதிபதி களுடையது-மான ஆசிர்வாதங்களெல்லாம் குறுகிய களத்திலிருந்து வந்தவைகள். களமும் விரிந்து சின்னத்தலையும் பெரிய தலையானால் அவைகளும் நின்றுவிடும். சரியான நேர்வழிக்கும் வந்துவிடும். .

வரவேற்புரையில் பிராமணர்களைக் குற்றம். சொல்லுகிறார்கள், அது கூடாதென்று காணப்படுகிறது. பலநாட்களாகப் பிராமணர்-களைக் குற்றம் சொல்லுகிறோம். ஏன் குற்றம் சொல்லுகிறோம் என்று நினைத்துப் பார்க்க வேண்டிய பொறுப்பு அந்தச் சமூகத்திற்கு இருக்கிறது. அங்கே அவர்கள் புத்தி கட்டாயம் செல்லவேண்டும். நாங்கள் எத்தனையோ குற்றங்கள் சொன்-னோம். புரட்டுப் பித்தலாட்டங்களைப் பிரத்தியட்சமாகக் காட்டினோம். இனியும் எங்களைப் பாதிக்கும்படியான குற்றங்களை அவர்கள் விடவில்லை. உண்மை உணர்ந்த அவர்களில் சிலரிடமிருந்தேனும் உண்மைக்குப் பரிந்து பேசும் குணம் வெளிப்படவில்லை. உண்மையைக் காண்பதும், கண்டதை உண்மை-யாகச் சொல்லுவதும் பிராமணனின் இலட்சணம், அதுதான் பிராமண தருமம். அதற்குத்தான் சனாதன தருமம் என்று பெயர். சனாதன தருமம் என்றால் பழைய தருமம் என்று அர்த்தம். அவர்கள் எழுத்து, பேச்சு, எண்ணம், போக்கு, நடத்தை முதலியவைகளிலுள்ள குற்றங்களைப் பிரத்தியட்ச அனுபவத்துடன் சொல்லுகிறோம். அது சரியல்ல என்று நியாயத்துடன் சொல்லட்டும்.

அவர்களின் நியாயமும் சரியாக இருந்தால் குற்றம் சொல்வதை விட்டுவிடுகிறோம். நாங்கள் எப்படியிருந்தால் உங்களுக்கென்ன, எங்களை ஏன் குற்றம் சொல்லுகிறீர்கள் என்று அவர்கள் கேட்கலாம். பிராமண தருமம் என்றாலும், இந்து தர்மம் என்றாலும் சனாதன தருமம் என்றுதானே அர்த்தம்? சனாதன தருமத்தில் பிராமணன் இருந்தால், சூத்திரனும் இருக்கத்தானே வேண்டும்? அந்த அர்த்தத்தில்தானே அதன் பெயரை அமைத்தது; அதைத்தானே அவர்களும் நினைத்துச்சொல்லுகிறார்கள்! ஆங்கில தருமமான ஏகாதிபத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும், அதுவே உலகத்திற்கெல்லாம் நன்மை பயக்கக்கூடியது என்று ஆங்கிலேயர் சொன்னால் நாம் சும்மா இருப்போமா? இருக்கிறோமா? அதே காரணம்தான் நாங்கள் பிராமணர்களைக் குற்றம் சொல்லுவதற்கும் ஆங்கிலேயர் நம்மை அரசாட்சி செய்ய ஆரம்பித்த உடனே அதைச் சொன்னார்கள். அதற்குப்பின் அவர்களுடைய பாஷை, சட்டம், முதலியவைகளைப் படித்தோம், நியாயமும் தெரிந்துகொண்டோம், அதுபோலவே பலகால-மாகப் பிராமண தருமம் என்றும் சனாதன தருமம் என்றும் சொன்னார்கள். அதன் சட்ட திட்டமான வேதஸ்மிருதிகளை நாம் படிக்கக் கூடாதென்று சொல்லியதும் அன்றி படித்தாலும் படிக்கும் பக்கத்திலிருந்துகேட்டாலும் கொடும் தண்டனையை ஏற்படுத்தினார்கள்.

இப்பொழுதோ அவர்களுடைய காயத்திரி மத்திரபுஸ்தகம் காலணாவிற்கு விற்கிறது. உபநிஷத்துகள், பிரம்ம சூத்திர பாஷியங்கள் முதலிய தத்துவ சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் படிக்கிறோம். போதாக்குறைக்கு வடதேசம் போய் வடமொழியில் பண்டிதனாகி வந்த ஒரு தமிழனால் இருக்வேதம், ‘சாமவே தம் இரண்டையும் தமிழில் மொழிபெயர்த்து சூளை இராசாமிப் பிள்ளை முப்பது, நாற்பது ஆயிரம் ரூபாய் செலவு செய்து அச்சுப்போட்டு இனாமாகவே எல்லோருக்கும் கொடுக்கிறார்; அதையும் படித்துத்தான் குற்றம் சொல்லுகிறோம். திராவிட நாட்டு உயர்குடி மக்களையெல்லாம் இனியும் பிராமணர்கள் என்கிற ஜாதிக்குத் தாசி மக்களாகவும், வைப்பாட்டி பிள்ளைகளாகவும், அடிமைகளாகவும் இருக்கவேண்டும் என்கிற சனாதன தருமத்தைச் சொல்லுகிறார்கள். அதைக் கடவுள் சொன்னதாகவும் சொல்லு–கிறார்கள். அந்தக் கடவுளை எவ்வளவு பெரிய குற்றவாளியாக்குகிறார்கள் என்பதை உணர்வதில்லை. வேதத்தில் இருக்கிறதென்கிறார்கள். அது எவ்வளவு பெரிய போர்ஜரி என்பதைத் தெரிந்துகொள்ளவில்லை. அதை நாங்கள் நம்புகிறோம் என்கிறார்கள். அந்தப் புத்திக்கு வெட்கப்படுவதுமில்லை, இதை எல்லாம் சொன்னால் பிராமணர்களைக் குற்றம் சொல்லுகிறோம், திட்டுகிறோம் என்கிறார்கள்.

சர்.சி.பி. அய்யரை ஆங்கிலேயர் உடையிலும் பிராமணசபை உடையிலும் பிரீ இந்தியா என்கிற பத்திரிகையில் படம் போட்டிருக்கிறது. இந்தக் காலத்தில் யார் எந்த உடைபோட்டுக் கொண்டாலும் அதில் குற்றமும் ஆட்சேபனையும் இல்லை. பின் ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், சனாதன தருமம் என்கிறார்கள், அதைக் காப்பாற்ற வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். அதற்காகச் சொல்லுகிறேன். பூர்வீக சனாதன உடை நிர்வாணம், அதற்குப்பின் தழை, தாம்பு, பட்டை, தோல், நூல், பட்டு, சரிகை’, வரையிலும் ஏறி ஆங்கிலேய உடையோடு நிற்கிறது. எப்படியானாலும் பட்டும் சரிகையும் சனாதன உடையில் இல்லை. சந்நியாசியானால் தலை மொட்டையாக இருக்கவேண்டும்.. சம்சாரியானால் பசுவின் குளம்பு அளவு குடுமி வேண்டும். கிராப்புத் தலை சனாதன தருமத்தில் இல்லை, சனாதன தருமத்தில் எந்த இடத்திலிருந்து இவர்களால் காப்பாற்றப் படப்போகிற பிராமண தருமம் பிறந்ததோ, அந்த இடத்திலும் இல்லை. தலைமயிரில்கூட சனாதன தருமத்தைக் காப்பாற்ற முடியாத இவர்கள் சனாதனிகளாம், சனாதனத்தைக் காப்பாற்றப் போகிறார்களாம். அத்தகைய பேச்சுகளால்-தான் அவர்கள் ஏமாற்றைப் பரப்பி வருகிறார்கள்.

ஞானமுடையவன் பிராமணன், அய்ம்புலன்-களை, ஞனேந்திரிய_கர் மேந்திரியங்களை வென்று தவம் செய்கிறவன், ஞானி, தந்நலம் விட்டுப் பிறருக்கு உழைப்பவன் பிராமணன் என்று சனாதன தருமம் செய்கிறது, காட்டில் கூடி வேதத்தில் ஒரு பாகமான ஆரண்யம் என்பதை ஆராய்ச்சி செய்து உண்மையைக் கண்டு உலகத்திற்குச் சொல்லுவது அவர்கள் தொழில். அதற்காகத் தானதருமம் ஏற்றுப் பிச்சை எடுத்து உண்பதே ஜீவனம். பிராமணர்களுக்குப் பிச்சை ஆயிற்றா? பிச்சைக்கு வருகிறீர்களா? பிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதுதான் சனாதன ஒழுங்கின் முறை. உள்ளதை இல்லை என்றும், இல்லாததை உள்ளதென்றும், பொய்யை மெய்என்றும், மெய்யைப் பொய்யென்றும் பேசிவரும் வக்கீல் தொழிலிலிருந்து நாடகம், நாட்டியமாடும் தொழில்வரையிலும் செய்து பிழைப்பதில் சனாதன முமில்லை, பிராமண தருமமுமில்லை, பிராமணனும் இல்லை. மலையடிவாரத்திலும் மரத்தடியிலும்தான் பிராமண தருமம் வளர்ந்தது. அய்ம்பது இலட்சம்போட்டு ஆங்கிலப் பள்ளிகட்டி அதில் பி.ஏ.எம்.ஏ. பாஸ் பண்ணிவிட்டாலும் தருமம் வளராது. பிரா மணன் தன் கலையை விட்டு வேறுகலையைப் படித்தான் பிரஷ்டன் என்று ஸ்மிருதிகள் சொல்லுகின்றன.


செவ்வாய், 28 மே, 2024

சுயமரியாதைச் சுடரொளி: சாஸ்திரங்களைத் தோலுரித்த சாமி கைவல்யம்!


உண்மை இதழ்

வை.கலையரசன்

தந்தை பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டைத் தொடங்கி வைதிகத்தின் தூண்களாக விளங்கிய புராண இதிகாசங்களைத் தோலுரித்து அறிவுத் தீயைக் கொளுத்தினார். புராண இதிகாசங்-களில் அதுவரை புனிதமாக, திருவிளை-யாடலாக, கன்னத்தில் போட்டுக் கொண்டு கேட்கப்பட்ட கதைகள் விமர்சனங்களுக்கு உள்ளாயின. அதே கதைகள் அயோக்கியத்தனம், ஆபாசம், மோசடி என்று பேசப்பட்டன.
இத்தகைய பணியில் ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதிய அய்யாவின் அறிவுப்படைக்கு முன் நின்றவர்களில் ஒருவர் சாமி கைவல்யம். சாமி கைவல்யம் 22.8.1877 அன்று கேரளத்தைச் சேர்ந்த கள்ளிக்கோட்டையில் பிறந்தவர். இவரது இயற்பெயர் பொன்னுசாமி. இவருடைய முன்னோர்கள் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள். இவர் கள்ளிக்கோட்டை, பாலக்காடு, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் படித்துவிட்டு, பள்ளியில் இருந்து விலகி கடைசியாக கோவைப் பகுதிக்குச் சென்றார். பின்னர் இந்தியா முழுவதும் சாமியாராக சுற்றித் திரிந்தார். ஒருமுறை இவர் கரூருக்கு வந்தார். அங்குள்ள மவுனசாமி மடத்துக்குச் சென்றார். அங்கு சில சாமியார்கள் உண்டு. வேதாந்த விசாரணைகள் நடைபெற்றன. ‘கைவல்யம்’ என்னும் வேதாந்த விசாரணை நூல் பற்றிப் பேசப்பட்டது. கைவல்யம் தொடுத்த வினாக்கள், விசாரணைகள் பலரையும் அதிரச் செய்தன. இதன் காரணமாக அவர் ‘கைவல்யம்’ என்றே அழைக்கப்படுபவர் ஆனார்.
அவரது தர்க்க ஞானம் முதலில் பார்ப்பன மதக் கொள்கை எதிர்ப்பிலிருந்து கிளர்ந்து எழுந்ததாகும் நாடு பூராவும் சுற்றித் திரிவார்.
1903ஆம் ஆண்டு தந்தை பெரியாருடன் ஏற்பட்ட முதல் சந்திப்பு தர்க்கம் காரணமாக அதிருப்தியாய் போய் விட்டது. ஆனாலும், இருவருக்கும் ஜாதி, மத சாஸ்திரங்களில் இருந்த கருத்து ஒற்றுமையால் இருவருக்கும் நட்பு மலர்ந்தது.

ஒரு முறை ஏனம்பள்ளி ஜமீன்தார் வீட்டுக் கல்யாணத்திற்கு தந்தை பெரியாருடன் சென்றிருந்தபோது அங்கு நடந்ததை தந்தை பெரியார் கீழ்கண்டவாறு தெரிவிக்கிறார்:
“ஒரு சமயம் ஏனம்பள்ளி ஜமீன்தார் கல்யாணத்திற்கு நாங்கள் இருவரும் சென்றிருக்கும்போது, சாப்பாட்டுப் பந்தியில் பரிமாறின பார்ப்பனன் ஒருவனைத் தாகத்திற்குத் தண்ணீர் கேட்கும்போது. அவன் நம்மிடம் கீழே இருந்த டம்ளரைக் கையில் எடுத்தான். உடனே பக்கத்திலிருந்த மற்றொரு பார்ப்பனச் சமையல்காரன் இந்தப் பார்ப்பானைப் பார்த்து. “என்னடா மடையா? சூத்திரன் குடித்த டம்ளரைக் கையில் தொட்டு எடுத்து விட்டாய்’’ என்று கோபமாகப் பேசினான். உடனே, கைவல்ய சுவாமியார் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் எழுந்து எச்சில் கையாலேயே அந்தப் பார்ப்பனனை ஓர் அறை செவுளில் அறைந்து, “யாரடா சூத்திரன்?’’ என்று கேட்டார். அப்போது ஒரு சிறு கலகமாகிப் பிறகு, அந்தப் பார்ப்பனன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். இந்த மாதிரி இன்னும் பல சம்பவங்களில் நாங்கள் கலந்திருந்ததுண்டு.

மற்றும், சுவாமியாரவர்கள் எப்போது பார்த்தாலும் தேர்த் திருவிழா, கோயில் செலவு, விக்கிரக பூசை, சமுதாய வாழ்க்கையில் உள்ள பல சடங்குகள் ஆகிய இவையே இந்த நாட்டுக்குப் பெரும் க்ஷயரோகம் போன்ற வியாதி என்று சதா சொல்லி வருவார். பார்ப்பனியச் சடங்குகளின் புரட்டுகளைச் சிறிதும் தாட்சண்யமில்லாமல் எப்பேர்ப் பட்டவர்களுடனும் தர்க்கரீதியாய் எடுத்துச் சொல்லிக் கண்டித்து வருவார். இவ்வளவு செய்தும் இவருக்குப் பொதுமக்களிடம் மதிப்பும், பக்தியும் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், அவர் தனக்கென்று இடுப்பு வேஷ்டியைத் தவிர, சாப்பாட்டைத் தவிர, வேறு ஒரு சாதனத்தையும் விரும்பியதுமில்லை; வைத்துக் கொண்டிருந்ததுமில்லை. ஆதலால், அவரைப் பற்றி யாரும் ஒன்றும் சொல்ல முடியாமற் போயிற்று’’ என்கிறார்.

‘குடிஅரசு’ ஏட்டில் கைவல்யம் எழுதி வந்த கட்டுரைகள் ஆணித்தரமானவை. எழுத்து நடையோ புத்தம் புதிய பாணி! இசைபாடும் அருவி நீரோட்டம் போன்றது.
கைவல்யம் வருகிறார் என்றால், சாமியார்கள் ஆட்டம் கண்டு போய்விடுவார்-களாம். எதிரிகள் வயிற்றைக் கலக்குமாம். கழிந்துவிடுவார்களாம்; வாய் வறண்டு போகுமாம்; தொண்டை வற்றிப் போகுமாம்! அப்படியொரு அசைக்க முடியாத ஆற்றலுக்குச் சொந்தக்காரர் அவர்!.

வியாழன், 23 பிப்ரவரி, 2023

கைவல்ய சாமியார்

* சுயமரியாதை இயக்கத்தின் மிகப் பெரிய சிந்தனையாளராகத் திகழ்ந்தவர்.
* பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இன்றைய கேரளாவின் கள்ளிக் கோட்டையில் பிறந்த தமிழர்.வசதியான குடும்பத்தில் பிறந்த இவரின் தந்தை,சகோதரர்கள் வேதங்களை கற்றவர்கள்.
* இவர் இடுப்பு வேட்டியைத் தவிர,சாப்பாட்டைத் தவிர,வேறு எதையும் விரும்பியதில்லை,வைத்துக் கொண்டிருந்ததும் இல்லை என்கிறார் தலைவர் பெரியார்.
* கள்ளிக்கோட்டை,பாலக்காடு மதுரை,திருச்சி,முதலிய ஊர்களில் 18-வருடங்கள் வாழ்ந்து இறுதியில் மனவிரக்தியில் கோவை வந்து சேர்ந்தார்.
* இந்தியா முழுவதும் சாமியாராக சுற்றுப் பிரயாணம் செய்தவர்.
* பார்ப்பன கொள்கைகளை தர்க்க ரீதியாக எதிர்த்து பேசி வாதாடும் வல்லமை பெற்றவர்.
* சங்கராச்சாரி கோவை மாவட்டத்தில் சுற்றுப் பிரயாணம் செய்யும் பொழுது, அந்தந்த இடங்களில் அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்து வந்தவர்.
* பார்ப்பன எதிர்ப்பு பார்ப்பனமத எதிர்ப்பு,
* ஆணாதிக்க எதிர்ப்பு,தாழ்த்தப் பட்டோர் விடுதலை ஆகியவற்றில் உறுதியாக இருந்த கைவல்யம்.
* குடி அரசு தொடங்கிய முதல் இரண்டு ஆண்டுகளிலேயே அதில் எழுதியவர்.
* திராவிடன்,புரட்சி,ஏடுகளிலும்,பிற சுயமரியாதை இயக்க ஏடுகளிலும் தொடர்ந்து எழுதி வந்தவர்.
* தமிழ் இலக்கியங்களிலும்,புராண சாத்திரங்களிலும் ஆழ்ந்த புலமை கொண்டவர்.
* தந்தை பெரியாருடன் 1903-களில் நடந்த முதல் சந்திப்பு இருவருக்கும் அதிருப்த்தி ஏற்படும் படி இருந்தது.
* ஜாதி மத சாஸ்திர சம்பந்தமான அயிப்பிராயங்களில் ஒற்றுமையினால் நெருங்கிய சிநேகிதர்கள் ஆனார்கள் தந்தை பெரியாரும்  கைவல்யமும்.
* ஏளம்பள்ளி ஜமீன்தார் வீட்டு திருமணத்திற்கு தந்தை பெரியாருடன் கைவல்யமும் சென்றிருந்தார்.
* தந்தை பெரியார் தண்ணீர கேட்க,பரிமாறிய பார்ப்பான் பெரியாரிடம் கீழே இருந்த டம்ளரை எடுத்தான்.                                                            

பார்ப்பன சமையல்காரன்,சூத்திரன் குடித்த டம்ளரை கையில் எடுத்து விட்டாயே!என்று பரிமாறிய பார்ப்பானைப் பார்த்து கோபமாக்க் கேட்டான்.
* சாப்பிட்டுக் கொண்டிருந்த கைவல்யம் எச்சில் கையாலேயே சமையல்கார  பார்ப்பானை செவுளில் அறைந்து,யாராடா சூத்திரன்?என்று கேட்க சிறிது கலகமானது.

* பிறகு அந்தப் பார்ப்பான் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.
* இன்னும் இது மாதிரி சம்பவங்களில் நாங்கள் கலந்து இருந்ததுண்டு என்று-கைவல்யம் கட்டுரைகளை நூலாக்கி வெளியிட்டு -இந்த நிகழ்வுகளை குறித்து எழுதியிருக்கிறார்;
* தந்தை பெரியார்.
* பின் நாளில் 1980-களில் தோழர் இராமமூர்த்தி ‘சங்கமித்ரா’என்ற புனைப் பெயரில் விடுதலையில் கட்டுரைகள் எழுதிய போது ,கைவல்யத்தின் நினைவாக சங்கமித்ரா
* ‘சின்ன கைவல்யம்’என்றே அறிமுகப்படுத்தப்பட்டார்.
- பன்னீர்செல்வம் முகநூல் பக்கம்