ஞாயிறு, 19 மார்ச், 2023

மனுதர்மம் என்ன கூறுகிறது?

 

வறட்டுக் கூச்சல் போடாதீர்!

மின்சாரம்

ஹிந்து மதத்தைப் பற்றி மானமிகு ஆ. இராசா ஏதோ கூறி விட்டாராம்!

அவர் என்ன கூறினார்? அவர் கூறியதில் என்ன தவறு? ஆதாரமில்லாமல் கூறி இருக் கிறாரா? என்று அறிவு நாணயத்தோடு பதில் கூறிட வக்கற்றவர்கள், அவர்மீது மண்ணை வாரித் தூற்றுவது மதிகெட்ட, மானமற்ற செயல் அல்லாமல் வேறு என்னவாம்?

அதுவும் சங்பரிவார்க் கூட்டத்தைச் சேர்ந்த வானதி போன்ற படித்த பெண்கள் மானா வாரியாகப் பேசலாமா?

ஹிந்து மதத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் போற்றப்படும் மனுதர்ம சாஸ்திரம் பெண்களைப் பற்றி என்ன என்னவெல்லாம் கூறுகிறது? இதோ சில எடுத்துக்காட்டுகள்: 

 மனுதர்மம் - அத்தியாயம் 5

சுலோகம் 147: பாலியமாகவிருந்தாலும், யௌவனமாக  இருந்தாலும், வார்த்திபமாகவி ருந்தாலும் ஸ்திரிகள் தன்றன் வீடுகளிலும் தன் மனம் போனபடி ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது.

சுலோகம் 148:  பாலியத்தில் தகப்பன் ஆஞ்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆஞ்ஞையிலும், கணவனிறந்த பின்பு பிள்ளைகள் ஆஞ்ஞையிலும் இருக்க வேண்டிய தேயல்லது ஸ்திரிகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக்கூடாது.

சுலோகம் 154:       கணவன் துர்ராச்சாரமுள்ள வனாக விருந்தாலும், அந்நிய ஸ்திரி லோலனாயிருந்தாலும், நற்குணமில்லாதவனாயிருந் தாலும் பதிவிரதையான  ஸ்திரியானவள் அவனை தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது.

சுலோகம் 162: ஸ்திரிக்குத் தன் கணவனைவிட மற்றொருவனால் உண்டாக்கப்பட்ட பிள்ளை யும் சாஸ்திரத்தினாலொப்புக் கொள்ளப்பட்ட பிள்ளையன்று. உண்டு பண்ணுகிறவனுக்கும் உபயோகமில்லை. பதிவிரதா ஸ்திரிகளுக்கு இரண்டாவது விவாகமும் ஒரு சாஸ்த்திரத்திலுஞ் சொல்லப்பட வில்லை.

சுலோகம் 163:       தாழ்ந்தவனான தன் புருஷனை நீக்கி உயர்ந்தவனான மற்றொரு வனை எந்த ஸ்திரியடைகிறாளோ அவள் நிந்திக்கப்படுவாள். மற்றொருவனோடு சேர்ந்த வளென்றுஞ் சொல்லப்படுகிறாள். ஒருவராலும் கொண்டாடப்பட மாட்டாள்.

சுலோகம் 164: ஸ்திரி விபச்சாரஞ் செய்கிற தினால் உலகத்தில் நிந்திக்கப்படுகிறதுமல்லாமல் இறந்த பின் குள்ளநரியாகவும் பிறந்து வெண் குட்டம் முதலிய கர்ம வியாதியையும் அனுபவிக்கிறாள்.

மனுதர்மம் - அத்தியாயம் 9

சுலோகம் 14: மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி அவர்களைப் புணருகிறார்கள்.

சுலோகம் 15: மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும், நண்பின்மையும், இயற்கையாக வுடைய வராதலால் கணவனாற் காக்கப்பட்டிருப் பினும் அவர்களை விரோதிக் கின்றார்கள்.

சுலோகம் 17:   படுக்கை, ஆசன அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.

சுலோகம் 18 :  மாதர்களுக்கு ஜாதகர்ம முதலி யவை மந்திரத்தோடு கிடையாது. மனச்சுத்தியுங் கிடையாது. பாவத்தைப் போக்குகிற மந்திரோப தேசமுமில்லை. ஆகையால் அபரிசுத் தாளாயிருக்கிறார்கள்.

சுலோகம் 19:  மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷ முள்ளவர்களென்று அநேக சுருதிகளிலுஞ் சாஸ்திரங்களிலுஞ் சொல்லப்பட்டி ருக்கின்றன. அதற்கு திருஷ் டாந்திரமாக அந்த விபச்சாரத்துக்கு சுருதியில் சொல்லிய பிரயாச் சித்தத்தைத் கேளுங்கள்.

சுலோகம் 30:          கணவன் சொற்படி நட வாதவள் உலகத் தாரால் நிந்திக்கப்பட்டு நரியாய்ப் பிறந்து பாவப் பிணியால் வருந்துவாள்.

சுலோகம் 46 : கணவன் மனையாளைத் தள்ளி விட்டாலும், விற்றாலும் அந்த மனையாள் தன்மை அவளை விட்டு நீங்காது. இப்படி இவர்களுக்கு பிரமன் சிருஷ்டி காலத்திலேயே ஏற்படுத்தியிருக்கிற சாசுவதமான தருமத்தை நாமறிந்திருக்கிறோம். ஆதலாலிவ்விதமான பிறன் மனையாளிடத்தில் பிறந்த பிள்ளையும் உபயோகப்படமாட்டான்.

சுலோகம் 52 :          ஒருவனுக்கு நிலமில்லாமல் வித்துள்ளவனாயிருந்தால் மற்றுமொருவனை யடைந்து உன்னிலத்தில் நான் பயிரிடுகிறேன். அப்பயிர் நம்மிரு வருக்கும் பொதுவாயிருக் கட்டு மென்று ஏற்பாடு செய்து கொண்டு பயிரிடுகிறார்ப் போல் ஒருவன் மனையாளி டத்தில் மனையாளில்லாத  மற்றொருவன் பிள் ளையையும் உண்டு பண்ணலாம். அந்த வேற்பாடு இல்லாவிட்டால் உடையவனைச் சாருமென்பது பிரத்திய கூலமாகவேயிருக்கிறது. ஏனெனில் பிஜத்தை விட நிலமுயர்ந்ததல்லவா? 

சுலோகம் 53: நில விஷயத்தைப் போல் மாதர் விஷயத்திலும், கணவனும் மற்றொரு வனும், பயிரைக் குறித்தாற்போல் புத்திரவுற் பத்தியைக் குறிக்கும் ஏற்பாடு செய்துகொண்டால் அதில் விளைகிற தானியம்போல் பிறந்த பிள்ளையும் இருவருக்கும் சொந்தமாகவி ருப்பதை உலகத்திற் கண்டிருக்கிறோம்.

சுலோகம் 59:          பிள்ளையில்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக விருந்தால் அப்போதந்த ஸ்திரி தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழுதலை முறைக் குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல் லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ளலாம்.

சுலோகம் 60:          விதவையிடத்தில் பெரி யோர் களின் அனுமதிப் பெற்றுக் கொண்டு புணரப் போகிறவன் தன் தேகமெங்கும் நெய்யைப் பூசிக் கொண்டு இரவில் இருட்டான இடத்தில் அவளைப் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டுபண்ண வேண்டியது. இரண்டாம் பிள் ளையை ஒரு போதும் உண்டு பண்ணக்கூடாது.

சுலோகம் 69:          ஒரு பெண்ணை ஒருவ னுக்குக் கொடுக்கிறதா உண்மையாக வாக்குத் தானம் செய்த பின் அந்த ஒருவன் இறந்து போனால் அவன் தம்பி அல்லது அண்ணன் விவாகம் செய்து மேற்சொல்லும் விதிப்படி இருக்க வேண்டியது.

சுலோகம் 70:          அவனந்தப் பெண்ணை விதிப் படி விவாகஞ் செய்து வெள்ளை வஸ் திரமுடைய வளாயும், திரிகரண சுத்தியுடைய வளாயுமிருக்கச் செய்து, ருதுஸ்நான மானவுடன் ஒரு நாள் புணர்ந்து மறுபடி ருதுகாலம் வரையிற் பார்த்து கருப்ப முண்டாகாவிடில் கருப்பமுண் டாகிறவரையில் அந்தந்த ருதுஸ்நானமான வுடன் ஒவ்வோர் நாள் புணர வேண்டியது.

சுலோகம் 77: கணவனை மனைவி பகைத்தால் அவன் ஒரு வருஷம் வரையிலும் பார்த்து அவள் வணங்காவிடில் அவளுக்குத் தான் கொடுத்த ஆடையாபரணம் முதலிய வற்றை வாங்கிக் கொண்டு  அவளோடு பேசு தலும், புணர்தலும் ஒழிக்க ஜீவனத்துக்காகக் கொடுத்தது கவரத் தக்கதன்று.

சுலோகம் 78:  கணவன் சூதாடுகிறவனயிருந்தாலும், குடியனாகவிருந்தாலும், நோயாளி யாக இருந்தாலும், அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யா விட்டால் அவளுக்கு அலங்காரம் வஸ்த்திரம் படுக்கை இவைகளைக் கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது.

சுலோகம் 81:  மலடியான மனைவியை எட்டு வருஷத்திற்கு மேலும், சாப்பிள்ளை பெறு பவளை பத்து வருஷத்திற்கு மேலும், பெண் ணையே பெறுபவளை பதினொரு வருஷத் திற்கு மேலும், தீங்கு சொல்பவளை அப்பொழு தேயும் நீக்கி வேறு விவாகம் செய்து கொள்க. இந்த மனைவியர்களுக்கு மனமகிழ்ச்சிப் பொருள் கொடுக்க வேண்டியதில்லை.

சுலோகம் 88: குலம், நல்லொழுக்கம் இவை களாலுயர்ந்தவனாயும், பெண்ணுக்குத் தக்க ரூபமுள்ளவனாயும், தன் ஜாதிக்குத் தக்க ஜாதியுள்ள வனாயுமிருக்கிறவானுக்கு தனது பெண் எட்டு வயதுக்குட்பட்டிருந்தாலும், விதிப்படி விவாகம் செய்து கொடுத்து விடலாம்.

சுலோகம் 94: முப்பது வயதுள்ள வரன் அழகான பன்னிரெண்டு வயதுள்ள பெண் ணையும்,  இருபத்தி நாலு வயதுள்ள வரன் எட்டு வயது பெண்ணையும் விவாகம் செய்து கொள்ளலாம். இதற்கு முன் விவாகம் செய்து கொள்ள அவசரப்பட்டால் வேதமோதல் முதலிய தர்ம காரியம் கெடும். அதனால் பின்பு துக்கப்படுவான்.

மேற்கண்ட சான்றுகள் 1919இல் வெளியிடப்பட்ட திருவைந்திபுரம், கோமாண்டூர், இளைய வில்லி இராமாநுஜாச்சாரியரால் மொழிபெயர்க்கப்பட்ட 'அசல் மனுதரும சாஸ்திரம்' நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.

இந்த எடுத்துக்காட்டுகள் உண்மையா பொய்யா என்பதை இதில் கூறப்பட்டுள்ள ஆதார நூல்களுடன் ஒப்பிட்டு நாணயமான முடிவுக்கு வரட்டும்.

எடுத்துக்காட்டப்பட்டுள்ளவை உண்மை என்று தெரிந்தால், அந்த மனுதர்மத்தைக் கொளுத்துவோம் என்ற மான உணர்ச்சியோடு வெளியில் வரட்டும்.

அதை விட்டு விட்டு வறட்டுக் கூச்சல் போடு வதால் பயனில்லை - பயனில்லை.

சனி, 18 மார்ச், 2023

உண்மையிலேயே துவேஷிப்பவர்கள் யார்?

 ஒற்றைப் பத்தி

யார் துவேஷிகள்?

கேள்வி: ஹிந்து மதத்தில் பிறந்து, ஹிந்துவாக வாழ்ந்து,ஹிந்துக்கள் சடங்குகளுடன் ஹிந்துத்துவ துவேஷம் கொள்வது ஏன்?

பதில்: ஹிந்துக்களைத் துவேஷித்தால்தான் மைனாரிட்டி மக்கள் வாக்களிப்பார்கள் என்பதே அந்தச் செய்தி.

'துக்ளக்', 18.1.2023, 

பக்கம் 32

நாத்திகத்திற்கும், ஹிந்து மதத்தில் இடம் உண்டு என்று ஆனபிறகு, ஹிந்து மதத்தை விமர்சிப்பது பற்றிப் புலம்புவானேன்?

உண்மையிலேயே துவேஷிப்பவர்கள் யார்? பிறக்கும்போதே பிராமணன் என்றும், சத்திரியன் என்றும், வைசியன் என்றும், சூத்திரன் என்றும், பஞ்சமன் என்றும் வகைப்படுத்தியது எந்த மதம்? ஹிந்து மதம்தானே!

இந்த ஏற்பாட்டை பிர்மா என்ற கடவுள்தான் செய்தார் என்பதும் ஹிந்து மதம்தானே!

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று 'பகவான்' கிருஷ்ணன் சொன்னதாகக் கீதை கூறுகிறதே! (அத்தியாயம் 9, சுலோகம் 32).

இதில் துவேஷிப்பவர்கள் யார்? இவர்கள் எல்லாம் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்களாம்; குருமூர்த்தி கூட்டத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் புண்ணிய யோனியிலிருந்து பிறந்தவர்களா? சீ... எவ்வளவுப் பெரிய ஆபாசக் கூட்டம் இது!

கொஞ்சம்கூட வெட்கம் இல்லாமல், முன்யோசனையும் இல்லையே! பகுத்தறிவோடு சிந்தித்துப் பேசுபவர்களை 'துவேஷிகள்' என்று தூற்றுவது யோக்கியமான செயலா?

தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே துவேஷிகளாக இருந்துகொண்டு, மற்றவர்களைப் பார்த்துத் 'துவேஷிகள், துவேஷிகள் என்பார்கள்' என்று லாலா லஜபதி சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

குருமூர்த்தி கூட்டத்திற்கு ஒன்று! முதலில் உங்கள் முதுகில் தொங்கும் பூணூலைத் 'தூ' என்று சொல்லி தூக்கி எறியுங்கள் பார்க்கலாம்!

தாங்கள் துவிஜாதி (இரு பிறப்பாளர்கள்) என்று காட்டுவதுதானே அந்தச் சின்னம்! துவேஷம்!

பார்ப்பனப் பெண்களுக்குக்கூடப் பூணூல் அணியும் உரிமை கிடையாதே! அவர்களையும் சேர்த்து விபச்சார தோஷமுடையவர்கள் என்று உங்கள் மனுதர்ம சாஸ்திரம் (அத்தியாயம் 9, சுலோகம் 19) சொல்லவில்லையா?

பெற்ற தாயையே விபச்சார தோஷமுள்ளவர் என்று கூறும் கேடுகெட்ட கூட்டம் யாரைப் பார்த்து துவேஷிகள் என்று கூறுவது?

 -  மயிலாடன்


வியாழன், 9 மார்ச், 2023

கோயபல்சு குருமூர்த்தியே, பதில் சொல்! ( கந்தன் பிறப்பு)

 

மின்சாரம்


புராணம் என்றாலே புளுகு மூட்டைதான். புராணங்களுக்கு வக்காலத்து வாங்கும் குருமூர்த்திகள் அதைவிடப் புளுகுணியாகத்தானே இருப்பார்கள்!

பார்வதி தேவியின் அழுக்கில் பிறந்தவன் தான் விநாயகன் என்று அவர்கள் எழுதிய புராணத்தை ஆதாரம் காட்டியே எழுதுகிறோம்.

அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை - அல்லது உண்மையை ஒப்புக் கொள்ளும் அறிவு நாணயம் இல்லை என்கிறபோது, இவர்களாகவே இன்னொரு பொய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டுவார்கள்.

இதோ ஒரு புளுகுணித்தனம்:

"மனு நீதியில் (சனா தனத்தில்) பல ஆபாசங்களும் பார்வதி தன் அழுக்கைத் திரட்டியதே விநாயகர் என்றும் - கம்யூனிஸ்டுகளும் ஹிந்து எதிர்ப்பாளர்களும் கூறுவதற்கு என்னால் பதில் கூற முடியவில்லை. நீங்கள் உதவ முடியுமா?" என்று கேட்டிருக்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த வாசகர் ஈ. இளங்கோவன். முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  சனாதனம் என்பது (சோ எழுதியது போல) ஒரு மஹா சமுத்திரம். அதில் சிறு துளிகளே இந்த நூல்கள், கதைகள். ஹிந்து மதம் பற்றிய கேவலமான ஏச்சுக்கு எப்படிப் பதிலளிப்பது என்று பார்ப்போம்.

"ஹிந்து மதத்தைக் கேவலப்படுத்த வேண்டும் என்று துவேஷ பாவத்தில் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு பதிலளிப்பது சுலபம்." 

"பார்வதி தன்மீது பூசிய மஞ்சளை - அழுக்கை அல்ல - திரட்டி விநாயகரை உண்டு பண்ணினார் என்பது நம் அய்தீகம் - இதற்குப் பதில் நாம் எல்லோருமே கேவலமான அழுக்கில் பிறந்தவர்கள்தான், விநாயகர் அந்தக் கேவலமான அழுக்கில் பிறக்கவில்லை என்பதே, அவதாரங்கள் எல்லாம் மனிதர்களாக, நம்மை போலப் பிறந்தவர்கள் தான்! ஆனால், விநாயகர் அப்படிப் பிறக்கவில்லை என்று திருவாளர் கோணிப் புளுகர் குருமூர்த்தி எழுதித் தள்ளியுள்ளார் ('துக்ளக்' 28.9.2022 பக்கம் 8).

இது உண்மையா? விநாயகர் அழுக்கில்தான் பிறந்தார் என்று  Motilal Banarsidass Publishers, Delhi  வெளியிட்டுள்ள The Skanda Purana எனும் நூலின் பக்கம் 277 என்ன கூறுகிறது?

"In the meantime, the goddess cleansed her person and applied perfumes and unguents over her body. With the dirt of the cleansing therefrom she created a human body with the elephantine face"

இந்த நிலையில் , பார்வதி வாசனைத் திரவியங்களை பூசிக்கொண்டு இருந்தார். பின்னர்  குளிக்கச்செல்லும் போது தன் மேல் இருந்த அழுக்குகளைத் திரட்டி மனித உடலை உருவாக்கினார்.

இவ்வளவு வெளிப்படையாக பார்வதி தேவி தன் உடல் அழுக்கிலிருந்து (ஞிவீக்ஷீt) விநாயகனை உருவாக்கினாள் என்று இருக்கும் பொழுது - அதை மாற்றி தன் உடல்மீது பூசிய மஞ்சளை - அழுக்கை அல்ல - திரட்டி விநாயகரை உண்டு பண்ணினார் என்று எழுதுகிறார் - ஆடிட்டராக இருந்து எடிட்டரான குருமூர்த்தி என்றால், இவர்களின் மூளையில் படிந்த அழுக்கை என்னவென்று சொல்லுவது!

இன்னொரு கேள்வியும் உண்டு - அழுக்காகட்டும், மஞ்சளாகவே இருக்கட்டும் - இவற்றிலிருந்து பிள்ளை பிறக்குமா? 'கேட்பவன் கேனையனாக இருந்தால் எருமை மாடு ஏரோப் பிளான் ஓட்டும்' என்பான்.

விநாயகர் அழுக்கில் பிறந்தார் என்பது கேள்வி கேட்டவருக்கே தெரிந்து இருக்கிறது. பதில் சொல்லும் குருமூர்த்தியோ - கேவலமான அழுக்கில் பிறந்தவர் அல்ல விநாயகர் என்று எழுதுகிறார்.

விநாயகர் அழுக்கில்தான் பிறந்தார் என்று அவர்களின் ஸ்கந்தபுராணத்திலிருந்தே நாம் எடுத்துக்காட்டிய நிலையில், விநாயகன் பிறப்பு கேவலமானது என்று அவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்களே!

இதைப் போன்ற புளுகு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டும் போது கடைசியில் எப்படி முடிப்பார்கள் தெரியுமா?

'என்பது அய்தீகம்' என்றுதான் முடிப்பார்கள்.

அய்தீகத்தின் யோக்கியதையும் இதன் மூலம் அம்பலமாகவில்லையா?

குருமூர்த்திகளே, குருமூர்த்திகளே! ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம்!

திரிநூல் தினமலரின் தில்லுமுல்லு திருகுதாளம்! (மனுதர்ம சாஸ்திரத்தில் விபச்சாரிகளின் மகன்கள்)

 

மின்சாரம்

சாரை விறுவிறுத்தால் அது யாரையோ கூப்பிடுமாம். அந்தப் பட்டியலில் 'தினமலருக்கு' முதலிடத்தைக் கொடுத்து விடலாம்.

'இது உங்கள் இடம் என்ற பகுதி' - என்பது உண்மையிலேயே வாசகர்களின் பகுதி என்பதைவிட அவாளே எழுதிக் கொள்ளும் பகுதிதான்.

(எடுத்துக்காட்டுக்கு பெட்டி செய்தி காண்க!)

இன்று வெளிவந்த 'தினமலர்' ஏட்டில் 'இது உங்கள் இடம்' என்ற பகுதியில் ஒரு கடிதம்.

(1) மனுதர்ம சாஸ்திரத்தில் ஹிந்துக்கள் அனைவரும் விபச்சாரிகளின் மகன்கள் என்று குறிப்பிட்டு இருப்பதாக புளுகுகிறார் எம்.பி. 

ஆ. ராஜா என்று குறிப்பிட்டுள்ளது 'தினமலர்'.

அறிவு நாணயம் இருந்தால் ஆதாரத்தைக் காட்டட்டும். அவர் உரை ஒலிப்பதிவு செய்யப் பட்டது 'விடுதலை' ஏட்டிலும் முழுமையாக வெளி வந்துள்ளது (12.9.2022)

அவர் சொல்லாததைச் சொன்னதாகக் கூறி வயிறு வளர்ப்பதும் ஒரு பிழைப்பு தானா?

அவர் பேசியது என்ன?

"இந்துவாக இருக்கின்றவரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கின்றவரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கின்றவரை நீ பஞ்சமன். இந்துவாக இருக்கின்றவரை நீ தீண்டத்தகாதவன்" என்று தானே பேசினார்.

இதற்கு ஆதாரமாக மனுதர்மத்தையும் எடுத்துக் காட்டுகிறார் (மனுதர்ம சாஸ்திரம் 1919 பதிப்பு - திருவைந்திரபுரம் கோமாண்டூர் இளைய வில்லி இராமாநுஜாசாரியார் - ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது - பெட்டிச் செய்தி காண்க)

இந்த மனுதர்ம சாஸ்திர நூல் எட்டாம் அத்தியாயம்  - 415, 417 (பக்கம் 234) இவற்றினை ஆதாரம் காட்டி தான் பேசினார்.

தினமலருக்கு அறிவு நாணயம் இருந்தால் இந்த அத்தியாயத்தையும், சுலோகங்களையும் எடுத்துக் காட்டியல்லவா மறுக்க வேண்டும்.

இதற்கு மாறாக பொய்யில் புழுத்த கேவலத்துக்குப் பொட்டு வைத்ததுபோல "ஹிந்துக்கள் அனைவருமே விபச்சாரி மகன்கள்" என்று ஆ. இராசா பேசினார் என்று  சொல்லுவது பச்சையான அயோக்கியத்தனம் அல்லவா?

2). திராவிட கழகம் சார்பில் (அதில்கூட பித்தலாட்டம் - திராவிடர் கழகமே தவிர திராவிட கழகம் அல்ல) "கி.வீரமணி எழுதி விடுதலை பதிப்பகம் வெளியிட்ட அசல் மனுதர்மம் என்ற புத்தகத்தை காட்டுகிறார், அசல் மனுதர்மம் என்றால் "டூபிளி கேட்' மனுதர்மம் என்று ஒன்று உள்ளது போலும்" என்று 'தினமலரி'ல் எழுதப்பட்டுள்ளது.

அசல் மனுதர்மம் என்று போட்டதற்கே காரணம்   (மேலே எடுத்துக்காட்டியபடி)

திராவிடர் கழக அலுவலகத்தில் டைப் செய்யாமல் (ஞிஜிறி) ஒரிஜினல் மனுதர்மத்தை ஸ்கேன் செய்து அப்படியே வெளியிட்டது. 

'தினமலர்' உண்மையிலேயே அவர்கள் கூறும் அந்த அசல் மனுதர்மத்தைக் கொண்டு வந்த காட்டி, எடுத்துக்காட்டி, வீரமணி சொல்லுவதுபோல சூத்திரன் என்பதற்கு அந்த அர்த்தம் கிடையாது என்று நிரூபிக்கட்டுமே பார்க்கலாம் - இதனை சவால் விட்டே கேட்கிறோம்!

3) "மனுதர்ம சாஸ்திரம் சமஸ்கிருதத்தில் எழுதப் பட்ட தொகுப்பாகும். தி.க. வீரமணிக்கு சமஸ்கிருதம் எழுதவும் தெரியாது, படிக்கவும் தெரியாது, புரிந்து கொள்ளவும் தெரியாது."

"ஒரு மொழியை சுத்தமாக தெரியாதவர் எப்படி அந்த மொழியில் வெளியிடப்பட்டுள்ள நூலின் கருத்தைப் புரிந்து கொள்ள முடியும்?" என்று அதிபுத்திசாலியாக தம்மை நினைத்துக் கொண்டு, அக்கப் போராக எழுதுகிறது இனமலர் ஏடு!

சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இராமாயணம், கீதை எல்லாம் தமிழில் வெளி வரவேயில்லையா?

அவற்றை மேற்கோள் காட்டுவதே கிடையாதா?

திராவிடர் கழகம் அப்படியே அசல் எடுத்து வெளியிட்ட மனுதர்ம சாஸ்திர நூலை தமிழில் மொழி பெயர்த்து எழுதிய இராமானுஜாசாரியார் சமஸ்கிருதம் தெரிந்தவர்தானே - அதற்குச் சாற்றுக்கவி கொடுத்தவர் வே. வேதாந்தாசாரியார்தானே.

ஹிந்து மதமும், அதன் சாஸ்திரங்களும் பெரும் பாலான மக்களை சூத்திரர்கள் என்றும், சூத்திரர்கள் என்றால் தேவடியாள் மக்கள் என்றும் கூறி இருப்பதை அம்பலப்படுத்தி, ஹிந்து மதத்தின் மேலாதிக்க பார்ப்பனர்களின் சதியையும் வெளிப்படுத்தி வெகு மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி விட்டால், தங்கள் ஆதிக்கத்தின் ஆணிவேருக்கு ஆப்பு என்பதைப் புரிந்து கொண்டதால்தான் 'தினமலர்' 'துக்ளக்' கும்பல் 'லபோ துபோ!' என்று ஆத்திரம் கொப்பளிக்கக் குதியாட்டம் போடுகிறது.

'சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!' என்ற முழக்கத்தை முன் வைத்தார் தந்தை பெரியார்.

அதற்குப் பிறகு தான் அந்த உயர்ஜாதி பார்ப்பன ஆதிக்கத் திமிர் அடங்கியது. மீண்டும் பெரும்பான்மையான பார்ப்பனர் அல்லாத மக்களை 'தினமலர்' கூட்டம் இழிவுபடுத்த ஆசைப்பட வேண்டாம் அவர்களின் ஆத்திரத்தைத் தூண்ட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.

தினமலரின் பித்தலாட்டத்தைப் பாரீர்! 'தினமலர்' ஏடு, 'காலைக் கதிர்' என்ற ஏட்டையும் நடத்தி வருகிறது.

தினமலரில் உங்கள் இடம் என்ற பகுதியில் ஒரு கடிதம் வரும். அதனை எழுதியவரின் பெயர், ஊர் எல்லாம் இருக்கும். அதே கடிதம் அதன் காலைக் கதிர் ஏட்டில் வெளிவரும். அதில் எழுதியவர் பெயரும், ஊரும் வேறாக இருக்கும்.

எடுத்துக்காட்டுக்குச் சில:

தினமலர் 31.1.2004

தலைப்பு: "பாடம் புகட்டுவோம் ராமதாசுக்கு"

எழுதியவர்: ஆர். ராஜகோபால் விருதுநகரிலிருந்து...

காலைக்கதிர் 4.2.2004

தலைப்பு: "பலத்தைக் காட்டுவோம் ராமதாசுக்கு"

எழுதியவர்: மு. ரஜினிபித்தன், கரூர்

இரண்டும் அட்சரம் பிறழாமல் அப்படியே வெளியிடப்பட்டுள்ளது.

தினமலர் 30.1.2004 

தலைப்பு: "ரஜினி ரசிகர்களே - எம். சுரேஷ் கடலூரிலிருந்து" 

காலைக் கதிர் 3.2.2004

தலைப்பு : "ராமதாசுக்கு பாடம் புகட்டுவோம்"

எழுதியவர்: ம. முத்துக்குமார் ஈரோடு

இரண்டும் அட்சரம் அரைப்புள்ளி மாறாமல் அதே மேட்டர். எடுத்துக்காட்டுக்கு இவை.

தினமலரின் ஆள் மாற்றுவேலை; திரிபு திரிபுதாள பித்தலாட்டம் புரிகிறதா? 

வந்தாரய்யா கோயபல்சு குருமூர்த்தி வழிக்கு!

ஆ.இராசா இப்படிப் பேசலாமா? "அத்திரிபாச்சா கொழுக் கட்டை!" என்று துள்ளிக் குதித்த கூட்டம் கடைசியில் 

ஆ. இராசா வழிக்கே வந்து சலாம் போட்டு விட்டது. 

நேற்று வெளிவந்த 'துக்ளக்' 11ஆம் பக்கத்தைப் பாருங்கள்.

கேள்வி: 'நீ கிறிஸ்தவனாக, இஸ்லாமியனாக, பெர்சியனாக, இல்லை என்றால் ஹிந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது' என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா கூறியுள்ளார். அவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளதா?

பதில்: அப்படிக் கூறுவது உச்சநீதிமன்றம் அல்ல, நமது அரசியல் சாஸனம். அதற்கு விசுவாசத்துடன் இருப்பேன் என்று அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் அதன்கீழ் உறுதிமொழி எடுத்திருக்கிறார் ஆ. இராசா.

('துக்ளக்' 5.10.2022 பக்கம் 11)

உச்சநீதிமன்றம் சொன்னதா, அரசியல் சாசனம் சொன்னதா என்பதல்ல பிரச்சினை - இன்னும் சொல்லப் போனால் 

ஆ. இராசா சொன்னது மேலும் வலிமை பெற்றதாகி விட்டது.

ஆக, 'ஆ.இராசா சொன்னது உண்மை - உண்மை  - உண்மைதான்!'  அரசியல் சாசனத்தில் உளளதைத்தான் 

ஆ. இராசா கூறியுள்ளார் என்று சலாம் போட்டு ஒப்புக் கொண்டு விட்டார் கோயபல்சு குருமூர்த்தி. ஹி.... ஹி!

வியாழன், 23 பிப்ரவரி, 2023

கைவல்ய சாமியார்

* சுயமரியாதை இயக்கத்தின் மிகப் பெரிய சிந்தனையாளராகத் திகழ்ந்தவர்.
* பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இன்றைய கேரளாவின் கள்ளிக் கோட்டையில் பிறந்த தமிழர்.வசதியான குடும்பத்தில் பிறந்த இவரின் தந்தை,சகோதரர்கள் வேதங்களை கற்றவர்கள்.
* இவர் இடுப்பு வேட்டியைத் தவிர,சாப்பாட்டைத் தவிர,வேறு எதையும் விரும்பியதில்லை,வைத்துக் கொண்டிருந்ததும் இல்லை என்கிறார் தலைவர் பெரியார்.
* கள்ளிக்கோட்டை,பாலக்காடு மதுரை,திருச்சி,முதலிய ஊர்களில் 18-வருடங்கள் வாழ்ந்து இறுதியில் மனவிரக்தியில் கோவை வந்து சேர்ந்தார்.
* இந்தியா முழுவதும் சாமியாராக சுற்றுப் பிரயாணம் செய்தவர்.
* பார்ப்பன கொள்கைகளை தர்க்க ரீதியாக எதிர்த்து பேசி வாதாடும் வல்லமை பெற்றவர்.
* சங்கராச்சாரி கோவை மாவட்டத்தில் சுற்றுப் பிரயாணம் செய்யும் பொழுது, அந்தந்த இடங்களில் அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்து வந்தவர்.
* பார்ப்பன எதிர்ப்பு பார்ப்பனமத எதிர்ப்பு,
* ஆணாதிக்க எதிர்ப்பு,தாழ்த்தப் பட்டோர் விடுதலை ஆகியவற்றில் உறுதியாக இருந்த கைவல்யம்.
* குடி அரசு தொடங்கிய முதல் இரண்டு ஆண்டுகளிலேயே அதில் எழுதியவர்.
* திராவிடன்,புரட்சி,ஏடுகளிலும்,பிற சுயமரியாதை இயக்க ஏடுகளிலும் தொடர்ந்து எழுதி வந்தவர்.
* தமிழ் இலக்கியங்களிலும்,புராண சாத்திரங்களிலும் ஆழ்ந்த புலமை கொண்டவர்.
* தந்தை பெரியாருடன் 1903-களில் நடந்த முதல் சந்திப்பு இருவருக்கும் அதிருப்த்தி ஏற்படும் படி இருந்தது.
* ஜாதி மத சாஸ்திர சம்பந்தமான அயிப்பிராயங்களில் ஒற்றுமையினால் நெருங்கிய சிநேகிதர்கள் ஆனார்கள் தந்தை பெரியாரும்  கைவல்யமும்.
* ஏளம்பள்ளி ஜமீன்தார் வீட்டு திருமணத்திற்கு தந்தை பெரியாருடன் கைவல்யமும் சென்றிருந்தார்.
* தந்தை பெரியார் தண்ணீர கேட்க,பரிமாறிய பார்ப்பான் பெரியாரிடம் கீழே இருந்த டம்ளரை எடுத்தான்.                                                            

பார்ப்பன சமையல்காரன்,சூத்திரன் குடித்த டம்ளரை கையில் எடுத்து விட்டாயே!என்று பரிமாறிய பார்ப்பானைப் பார்த்து கோபமாக்க் கேட்டான்.
* சாப்பிட்டுக் கொண்டிருந்த கைவல்யம் எச்சில் கையாலேயே சமையல்கார  பார்ப்பானை செவுளில் அறைந்து,யாராடா சூத்திரன்?என்று கேட்க சிறிது கலகமானது.

* பிறகு அந்தப் பார்ப்பான் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.
* இன்னும் இது மாதிரி சம்பவங்களில் நாங்கள் கலந்து இருந்ததுண்டு என்று-கைவல்யம் கட்டுரைகளை நூலாக்கி வெளியிட்டு -இந்த நிகழ்வுகளை குறித்து எழுதியிருக்கிறார்;
* தந்தை பெரியார்.
* பின் நாளில் 1980-களில் தோழர் இராமமூர்த்தி ‘சங்கமித்ரா’என்ற புனைப் பெயரில் விடுதலையில் கட்டுரைகள் எழுதிய போது ,கைவல்யத்தின் நினைவாக சங்கமித்ரா
* ‘சின்ன கைவல்யம்’என்றே அறிமுகப்படுத்தப்பட்டார்.
- பன்னீர்செல்வம் முகநூல் பக்கம்

வெள்ளி, 9 டிசம்பர், 2022

அட, பஞ்சப் பாண்டவப் புத்திரர்களே! (பதிலடிப் பக்கம்)

 பதிலடிப் பக்கம்

அட, பஞ்சப் பாண்டவப் புத்திரர்களே!

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

தொகுப்பு: மின்சாரம்

‘துக்ளக்'கில் ஒன்னரைப் பக்க நாளேடு என்னும் ஒரு பகுதி  - சகட்டு மேனிக்குப் பொய்ப் புழுக்கைகளை அவிழ்த்துக் கொட்டுவதுதான் அதன் பிழைப்பு.

மனுநீதி காத்த மாவீரன் - ஆ.ராசாவுக்கு வீரமணி பட்டம் என்பது அதன் தலைப்பு அது - எழுதிய பகுதி இதோ: (‘துக்ளக்', 9.10.2022)

"ஹிந்துக்களைப் கேவலப்படுத்திப் பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு பெரியார் திடலில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், ‘மனுநீதி காத்த மாவீரன்' என்ற பட்டத்தை வழங்கி வீரமணி பேசியதாவது:

மனுதர்மம்

"மனுதர்மத்தில் சூத்திரர்கள் எப்படியெல்லாம் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை எடுத்துக் கூறிய ஒரே காரணத்துக்காக ஆ.ராசாவை ஒட்டு மொத்த ஹிந்துக்களும் சேர்ந்து கொண்டு அரசியலிலிருந்தே ஒழித்துக் கட்டப் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட அநீதி உலகத்தில் எந்த நாட்டிலும் நடக்காது.

பெரியார்

"பெரியார் இருந்திருந்தால், ஹிந்துக்களுக்கு இவ் வளவு சொரணை வந்திருக்குமா? ராசா என்ன தன்னு டைய கருத்தையா சொன்னார்? வர்ணாசிரமத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று பெரியார் சொன்ன தைத் தானே திருப்பிச் சென்னார்?

வகை

"மனுதர்மப்படி ஹிந்துக்கள் எத்தனை வகைன்னு ஹிந்துக்களுக்கே தெரியாது, சூத்திர ஹிந்துக்கள் வேறு, பார்ப்பன ஹிந்துக்கள் வேறு, பா.ஜ.க. ஹிந் துக்கள் வேறு மதச்சார்பற்ற ஹிந்துக்கள் வேறு, மானம் கெட்ட ஹிந்துக்கள் வேறு, ரோஷம் கெட்ட ஹிந்துக் கள் வேறு.

மானம் கெட்ட ஹிந்துக்களைப் பற்றி ராசா பேசி னால், ரோஷம் கெட்ட ஹிந்துக்களுக்கு ஏன் ரோஷம் வருகிறது? சூத்திர ஹிந்துக்களுக்கு சொரணை இல்லை என்று ராசா சொன்னால், பார்ப்பன ஹிந் துக்கள் ஏன் சம்பந்தம் இல்லாமல் தலையிடுகிறார்கள்.

பட்டம்

"நீ ஹிந்துவாக இருக்கும் வரை உனக்கு புத்தி கிடையாது, மூளை கிடையாது, அறிவு கிடையாது, இதை நானோ ராசாவோ சொல்லவில்லை. மனுநீதி கூறுகிறது. வேறு மதத்துக்கு மாறினால் இவை எல்லாமே உடனடியாக வந்துவிடும். எங்களுக்கே அப்படித்தான் வந்தது. இதைத்தான் சுருக்கமாகச் சொன்னார் ராசா. அவரைப் பாராட்ட வக்கில்லாத மோடி அரசு, அவருக்கு எதிராக போராட்டம் நடத்து கிறது. பெரியார் இருந்திருந்தால் ராசாவுக்கு எந்த பட்டத்தை வழங்கியிருப்பாரோ, அதைத்தான் திராவி டர் கழகம் வழங்குகிறது." இதுதான் துக்ளக் கிறுக்கல்கள்.

2022ஆம் ஆண்டில் நம் கண்ணுக்கு எதிரே நடந்த நிகழ்ச்சியைப் பற்றி - இப்படி எல்லாம் அண்டப்புழுகு - ஆகாய புழுகுகளை அவிழ்த்துக் கொட்டுகிறார்கள் என்றால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த அவிட்டுத் திரிகள் எவ்வளவு சாக்கடைக் கும்பியை நனைத்து எழுதிக் குவித்திருப்பார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் சொல்லாததை எல்லாம், எப்படியோ  எடிட்டர் ஆன ஆடிட்டர் உளறிக் கொட்டியுள்ளார்.

மானங்கெட்ட ஹிந்துக்கள், ரோஷம் கெட்ட ஹிந்துக்கள் என்று ஆ.இராசா சொல்லாததை எல்லாம் குருமூர்த்தி அய்யர் ‘வாள்' ஆவேசமாக அவிழ்த்துக் கொட்டியுள்ளார்.

‘நீ ஹிந்துவாக இருக்கும் வரை உனக்கு புத்தி கிடையாது, மூளை கிடையாது' - இவையும் இராசா சொல்லாத குருமூர்த்தி குருக்கள் வாய் உதிர்த்தவை தான்.

குருமூர்த்திகளுக்கு அப்படி என்ன ஹிந்துக்கள் மீது ஆறாத துவேஷம்? இராசாவின் பெயரைச் சொல்லி இப்படியெல்லாம் ஹிந்துக்களைத் திட்டித் தீர்த்துள்ளார்.

ஆ.இராசா சொன்னது மனுதர்மத்திலிருந்து - அத்தியாயம் 8, சுலோகம் 415, 417லிருந்து.

யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் - இவன்தான் ஏழு வித தொழிலாளியாகிய சூத்திரன் - இவனிடமிருந்து பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம், யஜமான் எடுத்துக் கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரன் தன் பொருளுக்குக் கொஞ்சமும் சொந்தக்காரனல்ல.

அறிவு நாணயம் இருந்தால், ஒழுக்கத்தில் கொஞ்சமேனும் அக்கறை இருந்தால் ஆ.இராசா கூறிய ஆதாரப்பூர்வமான எடுத்துக்காட்டுகள் எல்லாம் பொய்யென்று செல்ல முன்வரட்டுமே பார்க்கலாம்.

பார்ப்பனர் அல்லாதரை சூத்திரர்கள் என்பார்கள் - சூத்திரன் என்றால் தேவடியாள் மக்கள் என்பார்கள், அதைக் கேட்டுக் கொண்டு பேன் குத்திக் கொண்டு இருக்க வேண்டுமா?

அட பஞ்சப் பாண்டவப்புத்திரர்களே, அறிவு நாணயமிருந்தால் ஆதாரத்தோடு மறுத்து எழுது - அல்லது சலாம் போட்டு ஓடிவிடு!

அட, துக்ளக் கூட்டமே

ஆ.இராசா சொல்லாதவற்றை எல்லாம் சொன்ன தாகக் கதைகட்டும் திரவுபதையின் பிள்ளைகளே! நீங்கள் வேண்டுமானால் அபாண்டங்களை அள்ளி வீசலாம்.

நாங்கள் நினைத்தால் உங்கள் புராண இதிகாச கழிசடைகளை வண்டி வண்டியாகக் கொட்ட முடியும். எடுத்துக்காட்டுக்கு இங்கே:

(ஆதாரம்: மத விசாரணை, ஆசிரியர் சுவாமி சிவானந்த ஸரஸ்வதி, பக். 133-138)

விஷ்ணுவின் சதி.

ஒரு காலத்தில் 'நாரத முனிவர் இமயமலையில் கடுந்தவமியற்றிக் கொண்டிருந்தார். இந்திரன் இதைப் பார்த்து பயங்கொண்டு தவத்தைக் கெடுத்துவரும்படி காமனைப் பலதரம் ஏவியும் கோரிய பலன் கைகூட வில்லை. ஆனால் நாரதருக்குத்தான் "தபஸ்வி" என்கிற செருக்கு ஏற்பட்டது. பின்னர் இதைக்குறித்த முழு விவரத்தை யும் சிவபெருமானிடம் தெரிவித்தார். சிவபெருமான் இதற்குச் செவிசாய்த்து பின் நாரதரே! என்னிடம் கூறிய மாதிரி விஷ்ணுவினிடம் கூற வேண்டாம் என்று உபதேசித்தார். பிறகு நாரதர் பிரம லோகம் சென்று பிரமனிடமும் தெரிவித்தார். பிறகு விஷ்ணு வினிடம் சென்று கதை முழுவதும் தெரி வித்துவிட்டு விஷ்ணுவை வணங்கி விடை பெற்றுப் பிரயாணமானார். நாரதர் சென்று கொண்டிருக்கும் வழியில் பெண்களாலும் ஆண்களாலும் நிறையப் பெற்ற இரு நகரங்கள் விஷ்ணுவினால் உண்டாக்கப் பெற்றன. அந்நகரங்களுக்கு அரசனான ‘சீலநிதி' என்பானின் மகள் ஸ்ரீமதி என்பவளுக்கு 'சுயம் வரம்' ஏற்பாடாயிருந்தது. இதற்காகப் பல தேசத்து மன்னர் களும் வந்திருந்தார்கள். நாரதர் இக்கன்னிகைமீது காதல்கொண்டு அவள் தன்னை விரும்புதற்கேற்ற அழகைப்பெற எண்ணி விஷ்ணுவினிடம் திரும்பி வந்து விஷயத்தைத் தெரிவித்து தங்களின் உருவத்தை அடியேனுக்கு அளித்தருளவேண்டும் எனப் பிரார்த் திக்க விஷ்ணு செய்த சதியாவது:-

நாரதமுனிவரின் இத்தகைய வார்த்தையைக்கேட்டு மது சூதனன் (விஷ்ணு) நகைத்தவராய் பரமசிவனு டைய பிரபுத்தன்மையையும் நினைத்து தயவுடன் மறுமொழி பகர்ந்தார். (சு-30)

"முனிவரே; உமது விருப்பத்திற்குரிய இடம் எதுவோ அங்கு செல்வீராக, உமது விருப்பத்தை நான் நிறைவேற்றுவேன். ஏனென்றால் நோயுற்றவனுக்கு வைத்தியன்போன்று நீர் எனக்கு மிகவும் பிரியமுடை யவர் (சு-32)

இவ்வாறு கூறி அந்நாரதருக்கு குரங்கின் முகத் தையும் தனது ஸ்வரூபத்தையும் (சதுர்புஜம் முதலியன) அளித்து மறைந்தருளினார். (சு-32)

சிவபுராணம் ருத்ரஸம்ஹிதா சிருஷ்டி கண்டம்.

அத்தியாயம் 3, சுலோகம் 30-31-32).

சகோதரர்களே! விஷ்ணுவின் சதியைப்பார்த்தீர் களா இவ்வஞ்சகனான விஷ்ணுவின் இனிய மொழி களில் மயங்கிய நாரதர் "அவசரக்கோலம் அள்ளித் தெளி" என்னும் பழமொழிக்கிணங்க ஸ்ரீமதியின் சுயம்வர மண்டபத்தை அடைந்தார் பாவம்! கண்ணாடி யில் தனது முகத்தை முதலில் பார்த்துவிட்டுப் பின்னர் சுயம்வரத்திற்குச் சென்றிருக்கலாகாதா ஓய் நாரதரே! "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்னும் பழமொழி உம்மைப்பற்றி தான் எழுந்தது போலும்.

வாசகர்களே! பின்னர் நடந்ததையும் கேளுங்கள்.

"அழகிய இலக்கணங்களையுடைய அவள் (ஸ்ரீமதி) அச்சுயம்வர மண்டபத்தின் நடுவில் பொன்னி னாலாக்கப் பெற்ற மாலை ஒன்றைக் கையிலேந்தி இலட்சுமிதேவியைப்போல் தோன்றினாள். (சு-45)

விஷ்ணுவின் சரீரமும் குரங்கின் முகமும் உடைய நாரதமுனியைக் கண்ணுற்றுக் கோபங்கொண்டாள். (சு-46)

தன் பார்வையை அந் நாரதனிடத்திலிருந்து திருப்பி சந்தோஷத்தோடு (மற்றொருவனிடம் சென்றாள். (சு-47)

அச்சமயம் அரசவுருவோடு விஷ்ணுவானவர் அங்கு வந்தார். ஆனால் அவளால் மட்டும் விஷ்ணு காணப்பட்டார் வேறு யாரும் பார்க்கவில்லை. (சு-49)

பின்னர் விஷ்ணுவைக் கண்டு மனம் மகிழ்ந்து அக்கட்டழகி அம்மாலையை அவன் கழுத்தில் சாற்றினாள். (சு-50)

(சிவபுராணம் ருத்ரஸம்ஹிதா சிருஷ்டி கண்டம் 

(அத்தியாயம் 3)

வாசகர்களே! விஷ்ணுவானவர் தன்னை நம்பின பக்தசிரோமணியான நாரதமுனியையே இவ்வாறு சதியால் ஏமாற்றினாரென்றால் அத்தகையார் அசுரர் களை ஏமாற்றிக் கொலை செய்தது ஆச்சரியமல்ல. இவ்வாறு ஜனங்களை ஏமாற்றித் துன்புறுத்துவதனாற் போலும் விஷ்ணுவிற்கு "ஜனார்த்தனன்" என்னும் பெயர் வந்தது. (ஜனார்த்தனன் ஜனங்களைத் துன் புறுத்துகிறவன்).

பிறகு அப்பெண்னைத் தூக்கிச் செல்லத் தலைப் பட்டார். அச்சமயம் நாரதர் மிகவும் துக்கித்து தன்னைச் சதிசெய்த அவ்விஷ்ணுவைப் பலவாறு தூற்றி சாபங்கொடுத்தார்,

"அரியே! நீ மிகக்கொடியவன். உலகத்தை வஞ்சிப்பவன். பிறனுடைய ஆனந்தத்தைப் பொறாதவன், துர்ப்புத்தி அழுக்கு படிந்த மனத்தினன். (சு-6)

பண்டு மோகினி வடிவெடுத்து அவர் ஏமாற்றி வாருணியைப் பருகும் செய்தாய். அமிர்தத்தை அவர்களுக்கு கொடுக்கவில்லை (வாருணி-கள்) (சு-7)

ஏமாற்று வித்தையில் உனக்குப் பிரியம் அதிகம். நீ நன்னடத்தையுடைபவனல்லாதிருந்தும் பிரபுவினால் சுவதந்திரனாகச் செய்யப்பட்டிருக்கிறாய் (பிரபு-பரமசிவன்) (சு-9)

அரியே! அதை (உன் வஞ்சனையை) அறிந்த நான் இப்போது உன்னைச் சிக்ஷிக்கின்றேன். ஏனென்றால் இனிமேல் நீ இத்தகைய குற்றத்தைச் செய்யலாகாது. (சு-12)

மாயையால் மயக்குற்ற முனியானவர் இவ்வாறு மொழிந்து சினத்தினால் வெறுப்புற்று தனது பிரம தேஜஸை வெளிப்படுத்திக் கொண்டு விஷ்ணுவைச் சபித்தார். (சு-14)

பெண்ணின் பொருட்டு என்னைத் துன்புறச் செய்தாய். எந்த வுருவுடன் என்னை வஞ்சித்தனையோ அவ்வுருவோடு துக்கத்தை அனுபவிக்கும் மனுஷனா கக் கடவாய். அன்றியும் எந்தப் பிராணியினுடைய முகத்தை எனக்குக் கொடுத்தாயோ அவை அப்போது உனக்கு உதவி செய்யட்டும். (சு-16)

பிறருக்குத் துன்பத்தைத் தரும் நீ பெண்ணைப் பிரிந்து துன் புறுவாயாக, அறியாமையினால் மயங்கிய திரிவாயாக. மனுஷனைப் போன்று (சு-17)

(ருத்ரஸம்ஹிதா சிருஷ்டி கண்டம்.)

அத்தியாயம் 4.

வாசகர்களே! இத்தகைய இழிதன்மையையுடைய விஷ்ணுவை இறைவனாக ஏற்றிப் போற்றுவதனால் அடையும் பயன் யாது? "யதா ராஜா ததா ப்ரஜா' இம்மூதுரையின் அர்த்தப்படிக்குள்ள பிரயோஜனம் தான்,

பிரமதேவனின் மற்றொரு விளையாட்டும் 

காமதேவனுடைய பிறப்பும்,

பிரமதேவர் தனது புத்திரனான நாரதமுனிவரிடம் கூறுகின்றார்:-

ஓ முனியே பிரமதேவனாகிய நான் எப்போது எனது மனதிலிருந்து மரீசி, அத்ரி, புலஹன், புலஸ்தி யன், அங்கிரஸ் க்ரது, வஸிஷ்டன், நாரதன், தக்ஷன், பிருகு என்னும் புத்திரர்களைத் தோற்றிவித்தேனோ அப்போது என் மனதினின்றும் அழகிய பெண் ஒருத்தியும் தோன்றினாள் (சு.18-19)

அவள் சந்த்யா, திவக்ஷாந்தா சாயம்சந்த்யா, ஜபந் திகா முதலிய பெயர்களால் அறியப்படுபவள். முனி களின் மனதையும் மயக்குபவள் (சு-20)

அவளுக்கொப்பாக மற்றொரு அழகி சுவர்க்கம், பூமி, பாதாளம் என்னும் மூவுலகங்களிலும் மூன்று காலங்களிலும் இல்லை. எல்லாக் குணங்களும் நிறைந்தவள். (சு-21)

அவளைக் கண்டதும் எழுந்து நான் என் மனதில் ஏதோ எண்ணினேன், தக்ஷன் முதலிய எனது புத்திசர் களும் யோசனை செய்யத் தொடங்கினார்கள் (சு-22)

 முனிசிரேஷ்டரே! இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டிருந்த பிரதமதேவனாகிய என் மனதினின்றும் "காமதேவன்" என்னும் கட்டழகன் பிறந்தான். (சு-23)

நான் அவனுக்கு கட்டளையிட்டதாவது:- ஓ மகனே! நீ உன் உருவத்துடன் ஐந்து வகைப் பூக்களால் ஆக்கப்பெற்ற அம்புகளைத் தாங்கியவனாய் ஆண்களையும் பெண்களையும் மயக்கி "சனாதன சிருஷ்டி"யைச் செய்ய வேண்டும். (சு-37)

நான், வாசுதேவன், புருஷோத்தமனான தானு இம்மூவரும் உன் வயப்படுவார்கள் என்றால் மற்ற உயிர்களைக் குறித்துக் கூறுவானேன். (சு-39)

வாசுதேவன் = விஷ்ணு, தாணு = பரமசிவன்.

(சிவபுராணம் ருத்ரஸம்ஹிதா ஸ்தீகண்டம் அத்தியாயம் 2).

வாசகர்களே! இக்கதையைக் கவனியுங்கள். சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமதேவன் தான் பெற்ற பெண்ணின்மீது தனக்குற்ற மிருக விருப்பத்தைத் தனது புத்திரனுக்குக் கூறுகிறார். அப்புத்திரன் யாரென்றால் அச்சமயம் தன்னுடன் இருந்தவர்களும் தன்னைப் போன்ற படிற்றொழுக்கத்தினர்களுமான பல பிள்ளைகளுள் ஒருவன். ஆனால் பல்லாண்டு களுக்குமுன் நடந்த இவ்வற்புதம் தமது அரும் புதல்வன் மறந்துபோயிருந்தால் என்செய்வது. மூவுல கங்களுக்கும் "வார்த்தாவிதரணம்" செய்பவரல்லவோ தனது புதல்வரான நாரதர் ஆகையால் நினைப் பூட்டுகிறார் போலும். இப்பிரமதேவனின் அறிவே அறிவு. இவரைக் கடவுளாகக் கூறும் புராணங்களின் பெருமைக்கும் அவைகளைப் படித்து ஆனந்தமுறும் பக்தசிரோமணிகளின் பாக்கியத்திற்கும் ஒப்பும் இணையும் உண்டோ.

எடுத்துக்காட்டுக்குத்தான் இவை. சீண்டினால் உங்கள் ‘ஹிந்து'வின் குப்பை வண்டி பூமிக்கும் வானுக்குமாகக் கொட்டிக் கிடக்கும் நிலை ஏற்படும்!

நீங்கள் கிறுக்குவது பொய்யில் பிறந்த பித்தலாட்டமே! நாங்கள் எழுதுவதோ நீங்கள் எழுதிக் குவித்த ஆதாரங்களின் அடிப்படையில்!

வாழை இலைகள் முள் செடியோடு மோத ஆசைப்பட வேண்டாம்! எச்சரிக்கை!!

வெள்ளி, 14 அக்டோபர், 2022

தை அமாவாசை-திதி-தர்ப்பணம் ( திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் மந்திரம்)

 

பகுத்தறிவு : தை அமாவாசை-திதி-தர்ப்பணம்

மார்ச் 16-31,2021

தமிழர்கள் செய்ய வேண்டியவை யாவை?

செய்யக் கூடாதவை யாவை?

செய்ய வேண்டியவை :

விளக்கேற்றி வையுங்கள்.

பிறருக்கு உணவளியுங்கள்.

வள்ளல் பெருமானார் இயற்றிய அகவல் பாக்களை வாசியுங்கள் அல்லது ஒலிக்க விடுங்கள்.

செய்யக் கூடாதவை :

பிராமணர்களை வைத்து சமஸ்கிருத மந்திரங்களை ஓத விடாதீர்கள், “அவர்களுக்கு மட்டுமே” தானம் கொடுக்காதீர்கள்.

காரணம். அவர்களின் சமஸ்கிருத மந்திரங்களின் பொருள் இவை.

இறந்த பின்பு நடக்கின்ற சடங்குகளில் சொல்லப்படும் இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம். முதலில் இறந்த தந்தைக்கு திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் ஒரு மந்திரம்.

“யன்மே மாதா பிரலுலோப சரதி

அனனு விருதா தன்மே ரேதஹ

பிதா விருங்க்தா அபுரண் யோப பத்யதாம்

ரங்கராஜ சர்மனே ஸ்வாஹா

ரங்கராஜ சர்மனே அஸ்மது பித்ரே

இதம் நமம கிருஷ்ண கிருஷ்ண’’

இந்த மந்திரத்தின் பொருள்: “என்னுடைய அம்மா பத்தினியாக இல்லாது இருந்து, என்னை வேறு ஒருவருக்குப் பெற்றிருந்தால், இந்த திவசத்திற்கு உரிமை கோரி என்னுடைய உண்மையான தகப்பனார் வருவார். அப்படி இல்லாத என்னுடைய அம்மாவின் கணவரே இந்த திவசத்தைப் பெறட்டும்.’’ இதுதான் இந்த மந்திரத்தின் பொருள். அதாவது, “திதி கொடுப்பவனுடைய தாய் சில வேளைகளில் சோரம் போய் வேறு யாருக்காவது அவனைப் பெற்றிருக்கலாம்’’ என்று இந்த மந்திரம் சொல்கின்றது.

“உன்னுடைய அப்பா வேறு யாராவதாக இருக்கலாம். நீ அப்பன் பேர் தெரியாதவனாக இருக்கலாம்’’ என்று இந்த புனித மந்திரம் சொல்கின்றது.

தந்தைக்கு திவசம் செய்கின்ற போதுதான் இப்படி என்று நினைக்க வேண்டாம். சமஸ்கிருதம் தாய்க்கு திவசம் செய்கின்ற போதும் வஞ்சகத்தோடுதான் பொருள் கூறுகிறது.

அம்மாவிற்கு திவசம் செய்கின்ற போது சொல்கின்ற ஒரு மந்திரம் இதோ:

“என்மே மாதா ப்ரவது லோபசரதி

அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ பிதா

வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா அவபத்ய நாம”

இதன் பொருள்: “என்னுடைய அம்மா யாருடன் படுத்து என்னைப் பெற்றாளோ தெரியவில்லை. ஒரு நம்பிக்கையில்தான் அவளை என்னுடைய அப்பாவின் மனைவியாகக் கருதுகின்றேன். அந்த அம்மாவிற்கு இந்த திவசம் சென்று சேரட்டும்’’ என்பது.

அருட்பிரகாச இராமலிங்க வள்ளல் பெருமகனார், புரட்சிப் பெரு நெருப்பு… இதன் காரணமாகவே கருமாதி, திதி கூடாது என்கிறார்.

சரி… நாம் நமது அறிவைக் கொண்டு யோசிப்போம்.

“மறுபிறவி” உண்டு என்று நீங்கள் நம்பினால், இறந்தவர் உடனே வேறு தாய்க்குப் பிறந்திருப்பார்தானே?!

உங்கள் நம்பிக்கை அப்படி என்றால் இன்னொரு முறை பிறந்துவிட்ட, உயிரோடு இருக்கும் ஒரு உயிருக்குத் திவசம் செய்கிறீர்களே… இது என்ன நியாயம்?!

எனவே, இறந்த நம் முன்னோர் உருவங்களை மனப்பூர்வமாக வணங்கி நன்றி பாராட்டுவோம். “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’’ எனப் போற்றுவோம்.

இவ்வாறு செய்தால், அவர்கள் பிறப்பெடுத்திருந்தாலும் நம் வழிபாடு நேர்மறையாக அவர்களை வாழ்த்துவதாக அமையும். மாறாக, பிண்டம், திதி, சமஸ்கிருத மந்திரங்கள் வாயிலாக அசிங்கப்படுத்துவது, அவர்களை எதிர்மறையாக ஆக்குவதாகவே அமையும்.