வியாழன், 28 நவம்பர், 2024

சிருங்கேரி சங்கராச்சாரியார் பராக்! பராக்!-கவிஞர் கலி.பூங்குன்றன்

விடுதலை நாளேடு
ஞாயிறு மலர்

 கடந்த ஒரு மாதமாக சிருங்கேரி சங்கராச்சாரியார் சிறீவிதுசேகர பாரதீ சுவாமிகள் என்று அழைக்கப்படுபவர் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் உபந்நியாசம் செய்து அலைகிறார்.

ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட மடங்கள் நான்கு. வடக்கே பத்ரிநாத், தெற்கே சிருங்கேரி, கிழக்கே பூரி, மேற்கே துவாரகை என்று அழைக்கப்படுகிறது.

32 வயதே வாழ்ந்த ஆதிசங்கரர், போக்குவரத்து வசதியற்ற அந்தக் காலத்தில் இடைவெளி அதிக தூரம் உள்ள இந்த இடங்களில் எல்லாம் மடங்களை நிறுவி இருக்க முடியாது.

ஞாயிறு மலர்

அவர்களின் சீடர்கள்தாம் நிறுவியிருக்க முடியும் என்று அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் கூறுகிறார்.
ஹிந்து மதத்தில் இவர் ஒரு ‘அத்தாரிட்டி’ என்று கூறப்படுபவர். மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியாரின் உற்ற நண்பர் – அவரின் தூதுவராகவும் கூடச் செயல்பட்டவர்.

நான்கு மடங்கள் என்பதுதான் முதலில் நிறுவப்பட்டது. அய்ந்தாவது மடமான இப்பொழுதுள்ள காஞ்சி மடம் பிற்காலத்தில்தான் நிறுவப்பட்டது. அதுகூட முதலில் கும்பகோணத்தில்தான் நிறுவப்பட்டது.

பிறகுதான் காஞ்சிபுரத்திற்கு இடப்பெயர்ச்சி செய்யப்பட்டது என்பதை விலாவாரியாக விளக்குகிறார் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

தொடக்கத்திலிருந்தே சிருங்கேரி மடத்துக்கும், காஞ்சி சங்கர மடத்துக்கும் ஏடாகூடாப் பொருத்தம்தான்.
இப்பொழுதுகூட காஞ்சிபுரம் சென்ற சிருங்கேரி சங்கராச்சாரியார், காஞ்சியில் சிருங்கேரி மடத்துக்கென்று உள்ள மடத்துக்குச் சென்றாரே தவிர, ஒரு மரியாதை நிமித்தமாகக் கூட காஞ்சி சங்கர மடத்துக்குச் (விஜயேந்திர சரஸ்வதி) சென்றார் இல்லை.
சிருங்கேரி மடத்துக்குள் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது ஒரு சுவையான வரலாறு.
இதுபற்றி அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் கூறுவது கவனிக்கத்தக்கது.

“தமிழ் பிரதேசத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான பிராமண குடும்பங்கள் ஷிமோகா மாவட்டத்திலும், மற்ற இடங்களிலும் குடியேறியிருந்தனர். அவர்களில் வேத விற்பன்னர்கள், வித்வான்களுக்கெல்லாம் அரசர்கள் உள்ளிட்ட பல புரவலர்கள் கிராமங்கள், நிலங்கள் எனப் பரிசுகளாகக் கொடுத்தனர்.

அவ்வாறு தேஜஸான வளத்தை அனுபவித்து வந்த தமிழ் பிராமணர்கள்தான் கொத்துக் கொத்தாகப் போனார்கள். இவர்களின் வளத்தைப் பார்த்தோ, மொழியைப் பார்த்தோ சிருங்கேரி மடத்துக்காரர்களில் சிலருக்கு செரிமானம் ஆகவில்லை.
“நீங்கள் தமிழ் நாட்டில் பூர்விக பிராமணர்கள் தானே?”
“ஆமாம். அதற் கென்ன?”

ஞாயிறு மலர்

“நீங்கள் ஸ்ரீமடத்தின் எல்லைக்கு அப்பாற் பட்டவர்கள். அதனால் உங்களுக்கு இங்கே ஃப்ராப்தம் இல்லை” என்றனர் சிருங்கேரி மடத்துக்காரர்கள்.

“தென்தேசம் முழுதுமே சிருங்கேரி மடத்தின் எல்லைக்குட்பட்டதுதானே… நாங்களும் தென் தேசத்துக்காரர்கள்தானே…”
“பூகோள எல்லை கிடக்கட்டும்… உங்கள் கோத்ர அனுஷ்டானங்களின்படி, பின்பற்றும் சாஸ்த்ர சம்பிர தாயங்களின்படி நீங்கள் இம்மடத்துக்கு தோஷக்காரர்கள். இம்மடத்தின் வைதிக எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு அனுமதியில்லை.”
கர்நாடக மண்ணில் ‘தமிழர்கள்’ முதன்முதலாக அனுமதி மறுக்கப்பட்டது இந்த சமயத்தில்தானோ என நினைக்கிறேன்.”
(அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய “இந்து மதம் எங்கே போகிறது?”
என்ற நூல் பக்கம் 75)

இந்தச் சூழலில்தான் தங்களுக்கென்று கும்பகோணத்தில் பார்ப்பனர்கள் ஒரு மடத்தை உண்டாக்கினார்கள். அதற்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து அந்தக் கும்பகோண மடம் காஞ்சிபுரத்துக்கு மாற்றப்பட்டது.

ஆதிசங்கரரைப் பின்பற்றுவதாகச் சொல்லப்பட்டாலும் இவர்களுக்கிடையே ஒற்றுமை என்பது பூச்சியம்தான்.
இராமேசுவரத்தில் 14.2.2001 அன்று இராமநாதசுவாமி கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது.

இதில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியும், இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரரும், சிருங்கேரி சங்கராச்சாரியாரும் கலந்து கொண்டனர். குடமுழுக்கு விழாக் குழுவினர் சங்கராச்சாரியார்களுக்கு சிறப்பு செய்தபோது யாருக்கு முதல் மரியாதை என்பதில் மோதல் ஏற்பட்டது.

மதுரை ஆதீனம் தலையிட்டு, விடிய விடிய கட்டப் பஞ்சாயத்து நடத்தி, இரு மடங்களின் மடாதிபதிகளுக்குள் சமரசம் செய்து வைத்தார். (‘தினபூமி’ 15.2.2001)

இவர்கள் எல்லாம் முற்றும் துறந்த முனிபுங்கவர்களாம்.

மும்மலங்களையும் அறுத்தவர்களாம்! அதாவது ஆணவம், கன்மம் (தீவினை), மாயை (பொய்த்தோற்றம்). இவைகளைக் கடந்ததாகக் கூறப்படுபவர்களின் யோக்கிய தாம்சம் எப்படி இருக்கிறது? ஊருக்குத்தான் உபதேசம்!
இப்பொழுது தமிழ்நாட்டில் வலம் வரும் சிருங்கேரி சங்கராச்சாரியாரின் மூத்த குருநாதர் தந்தை பெரியாருக்கு ஸ்ரீமுகம் (கடிதம்) எழுதியதுண்டு. (‘குடிஅரசு’ 2.3.1930)

தந்தை பெரியாரையும், அவர்தம் தொண்டுகளையும் புகழ்ந்து எழுதி, தமது மடத்துக்குத் துணைவியாருடன் (தர்மபத்தினி) வர வேண்டும் என்று வேண்டுகோள் கடிதம் அனுப்பினார்.

அந்தக் கடிதத்துக்கு தந்தை பெரியார் பதில் எழுதினார்.

“தங்களின் ஸ்ரீமுகத்தில் ஸநாதன தருமத்தைக் கெடுக்காமல், கரும கண்டத்தில் உள்ள அவரவர்கள் கடமையைச் செய்து, சாஸ்திரங்கள் இடம் கொடுக்கும் வகையில் என்கிற நிபந்தனைகள் கண்டு, அதற்கு விரோதம் இல்லாமல் சில ‘சுவ தந்தரங்கள் அளிக்கப்படும்’ என்கிற வாசகங்கள் காணப் படுகின்றபடியால், நாம் அங்குச் செல்வதால் ஏதாவது பயன் ஏற்படுமா என்கிற விஷயம் நமக்குச் சந்தேகமாக இருக் கின்றது” என்று மிகுந்த மரியாதை யோடு தந்தை பெரியார் பதில் எழுதினார்.

இதே சிருங்கேரி சங்கராச்சாரியார் தாழ்த்தப் பட்ட மக்கள் பற்றி என்ன அபிப்ராயம் கொண் டுள்ளார்?
The Panchama is asked to be at a distance because of the inborn impurity of his body. Any amount of washing of the body with the best available soap and any clothing and decoration of it in the best upto date style cannot remove from it its inlaid filth that has originated from the deep rooted contamination of the filthy inhereditary.
The provision for keeping the impure at a distance is strictly speaking a rule of segregation.
(‘The Hindu Ideal’ – Page – 230)

“உலகத்தில் உயர்ந்த வகை சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும், நவீன ஆடை அணி மணிகளால் அலங்கரிக்கப்பட்டாலும் பஞ்சமர்கள் என்று கூறப்படுவோர் (தாழ்த்தப்பட்டவர்) களுக்குப் பிறப்பின் அடிப்படையில் உள்ள – ஆழமாக வேரூன்றியுள்ள மிகவும் அசூயையான துப்புரவுக் கேடான தூய்மையற்ற தன்மைதான் – அவர்களைக் கிட்டே வராதே – தூர நில் என்று சொல்லுவதற்குக் காரணம்” என்கிறார் சிருங்கேரி சங்கராச்சாரியார்.

(காஞ்சிபுரம் மறைந்த மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி மட்டும் என்ன வாழுது? “தீண்டாமை சேமகரமானது” என்று தி(தெ)ருவாய் மலர்ந்தவர்தானே! நூல்: (ஸ்ரீஜெகத்குருவின் உபதேசங்கள்)

அவர் வழிவந்த சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீவிதுசேகர பாரதீதான் இப்பொழுது தமிழ்நாட்டில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
ஸநாதனத்துக்கு ஏதேதோ விளக்கங்களை உபந்நியாசமாக அள்ளி விடுகிறார்.

“ஸநாதனத்தைக் காப்பாற்ற வேண்டும், வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களில் கூறப்பட்டுள்ள தத்துவங்களைத் தெரிந்துகொள்ள, வெளிநாடுகளில் இருந்து வருகிறார்கள். ஏனெனில், மனிதப் பிறவியின் நோக்கத்தை அறிந்து கொள்ள, அதன் தத்துவத்தை அறிந்துகொள்ள ஸநாதன தர்மத்தில்தான் உள்ளது.”

“மனிதன் சுக துக்கங்களை அனுபவிப்பதற்கு ஒரு காரணம் இருக்கும். அதன் பலன்களை அனுபவிக்க, மனிதன் பல பிறவிகளை எடுத்தாக வேண்டும்.”

“எனவே, சாஸ்திரங்கள் காட்டும் வழியில் பயணித்து, இப்பிறவியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”
(‘தினமலர்’ – 2.11.2024)

சுற்றிச் சுற்றி எங்கே வருகிறார் பார்த்தீர்களா?

அவரது குருநாதரை போகிற இடங்களில் எல்லாம் புகழ்ந்து தள்ளுகிறார்.

அவர் குருநாதர் எத்தகையவர் என்பதைத்தான் பார்த்தோமே! (‘The Hindu Ideal’). பஞ்சமர்களை எட்டி நில், கிட்டே வராதே என்பதற்குக் காரணம் அவர்களின் பிறவிதான் – பரம்பரைப் பரம்பரையாக வந்த தூய்மையற்ற தன்மைதான் என்ற சொன்னவரின் சீடர்தான் இப்பொழுது தமிழ்நாட்டில் உலா வருகிறார்.

பகவான் படைப்பில் அனைவரும் சமம் – பேதம் இல்லை – உயர்வு தாழ்வு இல்லை – ஜாதி கூடாது – தீண்டாமை பாவம் என்ற வகையில் ஒரே ஒரு சொல்லையாவது சிருங்கேரியாரின் சுற்றுப் பயணத்தில் உபந்நியாசம் செய்ததுண்டா?
என்னதான் அ(ம)ருள் உபதேசம் செய்தாலும், தந்தை பெரியார் மண்ணில் அந்தப் பருப்பு வேகாது – வந்தோமா – கடைகட்டி சென்றோமா –

என்று நடை கட்டுவதுதான் உத்தமம்!
வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக