வெள்ளி, 29 நவம்பர், 2024

ஆரியர்களின் தீயும், திராவிடர்களின் தீபமும்! சுமன் கவி

 

விடுதலை நாளேடு

தீயினைக் கும்பிடும் பார்ப்பார் – நித்தம்

திக்கை வணங்கும் துருக்கர்,
கோவிற் சிலுவையின் முன்னே – நின்று
கும்பிடும் யேசு மதத்தார்.

என்று வெவ்வேறு மதத்தவர்களின் வழிபாட்டு முறைகளை தனது கவிதையில் சொல்கிறார் பாரதியார்.

தான் ஒரு பார்ப்பனராக இருந்த போதும், பல இடங்களில் தன் கவிதைகளிலும், கட்டுரைகளிலும் ஸநாதனக் கருத்துகளைச் சொல்லிய போதும், சில இடங்களில் தன்னையும் அறியாமல் பார்ப்பனர்கள் குறித்து உண்மைகளை சொல்லிவிடுவார் பாரதியார்.

அப்படி சொல்லப்பட்ட ஓர் முக்கியமான உண்மைதான் மேற்குறிப்பிட்டது. இதில் தீயினைக் கும்பிடும் ஹிந்துக்கள் என்று குறிப்பிடாமல் பார்ப்பார் என்றே குறிப்பிடுகிறர். இது கூர்ந்து கவனிக்கத் தக்கது.

பிற மதத்தவர்களை அடக்கி ஒடுக்குவதற்காக மட்டும், நம்மை ஹிந்துக்கள் என்று ஒன்றுதிரட்டும் ஸநாதனவாதிகளுக்கு எதிராக, பார்ப்பனர்கள் வேறு, வெகுசன மக்கள் வேறு என்று சாட்சியம் கூறுகிறார் பாரதியார்.
ஹிந்துக்கள் என்று சொல்லப்படும் வெகுமக்கள், ஸநாதனம் பார்ப்பனர்களுக்கு முற்றிலும் விரோதமான கடைப்பிடிப்புகளை, சடங்குகளைக் கொண்டவர்கள் என்பதற்குப் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.
அவற்றில் மிகவும் முக்கியமான ஒன்று தீ வழிபாடு.

ஆரியப் பார்ப்பனர்கள் இந்திய துணைக்கண்டத்திற்குள் நுழைவதற்கு முன்பிருந்தே இங்கு வாழ்ந்துவரும் ஆரியரல்லாத மக்களின் வழிபாட்டு முறைகள் விக்கிரகங்களை வழிபடுவது, நடுகற்களை வணங்குவது, முன்னோர் வணக்கம் என பல்வேறுபட்டதாக இருந்தது.
ஆனால் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் கைபர், போலன் கணவாய் வழியே ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு இங்கே நுழைந்த ஆரியக் கூட்டம் தீயை வழிபடும் பழக்கமுடையவர்கள். அவர்கள் புலம்பெயர்ந்து வந்த மத்திய ஆசியப் பகுதிகள் மிகவும் குளிர் நிறைந்தவை. நிலத்தைக் கையகப்படுத்தி விவசாயம் செய்வதற்கு அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் வாழ்ந்த இயற்கைச் சூழலும் விவசாயம் செய்வதற்கு ஏற்றதாக இல்லை.

ஓர் இடத்தில் நிலையாக தங்கி வாழ்ந்த மக்கள்தான், குறிப்பட்ட இடத்தில் சிலைகளையோ, நடுகற்களையோ அமைத்து வழிபட முடியும். நகர்ந்து கொண்டே இருக்கும் நாடோடிக் கூட்டத்தார் விக்கிரகங்களையோ, கோயில்களையோ அமைத்து வழிபடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

ஆரியர்கள் வாழ்ந்த சூழல் தீயை அருமையானதாகவும், மிகவும் போற்றத் தக்க ஒன்றாகவும் கருதிடக் காரணமாக அமைந்தது. இதைக் குறிப்பிடும் பேராசிரியர்

சுப.வீரபாண்டியன் “நெருப்பு குளிர் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு முக்கியமான ஒன்று. அதனால்தான் ஆங்கிலேயர்கள் ஒருவரை வரவேற்க ‘warm welcome’ என்ற பதத்தை பயன்படுத்துகின்றனர். அதையே நாம் “குளிர்ந்த முகத்தோடு வரவேற்பு….” என்று கூறுகிறோம். ஏனெனில் வெப்பப் பகுதியில் வாழும் நமக்கு குளிர்ச்சி முக்கியமானது. இங்கு நாம் “ஒருவருக்கு சூடான வரவேற்பு கொடுக்கப்பட்டது” என்று சொன்னால். அது அவரை அடித்துப் புடைப்பதைக் குறிக்கிறது” என்கிறார் சுப.வீ.

புலம்பெயர்ந்து செல்லும் இடங்களில் எல்லாம் கூடாரங்களை அமைப்பது, நெருப்பு மூட்டி கூட்டமாக இருந்து குளிர் காய்வது என்றிருந்தவர்கள் அந்த நெருப்பையே கடவுளை அடைவதற்கான வாசலாகக் கருதி வழிபட்டிருக்கின்றனர். அதில் பலியிடப்படும் விலங்குகள், பறவைகள் என அனைத்தும் சொர்க்கத்தை அடையுமென்று நம்பியிருக்கின்றனர். பசுக்கள், குதிரைகள் என தாங்கள் வளர்த்த எல்லா பிராணிகளையும் யாகத்தில் இட்டு அவற்றின் மாமிசத்தை ’அவிசு’ என்கிற பெயரில் உண்ணும் வழக்கம் கொண்டிருந்தனர். அவற்றில் ‘புருஷ மேத யக்ஞம்’ என்கிற பெயரில் நடத்தப்பட்ட வேள்வியில் மனிதர்களையே பலியிட்டிருக்கின்றனர் பார்ப்பனர்கள்.

புத்தம், சமணம் போன்ற சிரமண மதங்களின் எழுச்சிக்குப் பின் மாமிச உணவுகளை விட்டொழித்த ஆரியப் பார்ப்பனக் கூட்டம், தங்களது வேள்வி கலாச்சாரத்தை மட்டும் விட்டுவிடவில்லை. அதனால்தான் இன்றும் வேள்வியில், துணிகள், உணவுப் பொருட்கள், நெய் என எல்லாவற்றையும் கொட்டி வீணடிக்கிற வேலையைச் செய்கின்றனர்.

வேத வேள்விகளை பார்பனர்கள் போற்றிய அதே நேரத்தில், வேள்விகளை பெரிதென்று எண்ணாத, சிலைவழிபாடு கொண்ட திராவிடர்களின் தெய்வங்களை அவர்கள் திருடத் தொடங்கினர். தங்களது அதிகாரத்தை சடங்குகளோடு பிணைத்திருந்த பார்ப்பனக் கூட்டம் பல தெய்வ வழிபாடு கொண்ட வெகுமக்களின் வழிபாட்டு முறையோடு தங்களது யாக வேள்விகளை இணைத்துக் கொண்டனர்.

எல்லாநேரங்களிலும், எல்லா இடங்களிலும் வேள்விகளை நடத்த இயலாது என்பதனால் அதன் சிறு வடிவமான தீயை விக்கிரகங்களின் முன் காண்பிக்கிற வேலையைச் செய்தனர். இதுதான் ஆரியர்களின் வழிபாட்டு முறையும், ஆரியரல்லாத பூர்வகுடி மக்களின் வழிபாட்டு முறையும் சந்திக்கும் இடமாகும். கோவில்களில் வழிபடும் பார்ப்பனரல்லாத மக்கள் பெரும்பாலோர் அதை தீபமாகவே காண்கின்றனர்: அதாவது ‘Light’ வெளிச்சமாக. ஆனால் இது ஆரிய தீ வழிபாட்டின் சிறு அடையாளமாகும்.
தீயை வழிபடுவதற்கும் ஒளியை வழிபடுவதற்கும் மாபெரும் வேறுபாடு உண்டு.

“அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை” என்றார் வள்ளலார். அவர் இறைவன் ஒளி வடிவானவன் என்றார். அந்த ஒளியே எல்லா ஜீவன்களிலும் இருக்கிறது என்றார். இது ஒரு தத்துவார்த்த நிலை. ஆனால் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை எல்லாம் நெருப்பில் போட்டுப் பொசுக்கி அவை இறைவனைச் சென்று சேர்கின்றன என்று கருதும் ஆரிய கோட்பாட்டிற்கு சற்றும் தொடர்பற்றது இந்த ஒளி தத்துவம்.

ஒளியை இறையாக வழிபட்ட வள்ளலார், மறுபுறம் மனிதர்கள் இறந்த பின் எரிக்கின்ற வழக்கத்தைச் சாடுகிறார்.

“பரன் அளிக்கும் தேகம் இது சுடுவது அபராதம் எனப்
பகர்கின்றேன் நீர்  சிரம் நெளிக்கச் சுடுகின்றீர்..!”

என்கிறார்.
தீயோடு தமது சடங்கு சம்பிரதாயங்களை பிணைத்து வைத்திருக்கும் ஆரியர்கள் அதே தீயில் இறந்த உடல்களையும் இட்டு அவர்கள் சொர்கத்திற்குச் செல்வதாகக் கருதினர். ஆனால் மறுபிறப்பு உண்டு என்று நம்பிய மக்களும், புதைப்பதற்கு நிலமும், மீண்டும் வந்து அதை வழிபடுவதற்கான வாய்ப்புகள் கொண்ட மக்களும் புதைப்பதையே தங்கள் மரபாக கொண்டிருக்கின்றனர்.
இன்றும் கூட பார்ப்பனரல்லாத பலரும் இறந்தவர்களை எரிக்கின்ற வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். இதை பல வரிகளில் தொடர்ந்து இடித்துரைக்கிறார் வள்ளலார். சித்தர்கள் மரபில் புதைத்து அதில் ‘சமாதி’ எழுப்புவதே வழக்கமாக உள்ளது. ஜாதிய அடுக்கில் பிற்பாதியில் உள்ள பல சமூகங்கள் இன்றும் புதைப்பதையே மரபாக கொண்டிருக்கின்றனர்.
இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். ‘ஒளி’யை வழிபடுவது வேறு, ‘தீ’யை ‘புனித’மென்று கருதுவது வேறு.
ஆரியர்களின் வேள்வி – யாகங்களை ஏற்றுக் கொண்ட பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்கிற மன்னன் இருந்ததாக சங்க இலக்கியங்களில் சொல்லப்படுவதைக் காண்கிறோம். அதே வேளையில்,

“அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று.”

என்ற திருவள்ளுவர், “வேள்விகளை சிறப்பென்கிறீர்களே, அதைவிட ஓர் உயிரைக் கொலைசெய்யாமல் இருப்பதே சிறப்பு என்கிறார். அக்காலத்தில் வேள்விகளில் உயிர்கள் பலியிடப்பட்டிருக்கின்றன என்பது இதில் மறைபொருளாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான வேள்வி எதிர்ப்பும், தீயின் ‘புனித’த்தை மறுப்பதும் ஆரியரல்லாத திராவிட மக்களிடையே மரபாகத் தொடர்ந்து வந்திருக்கிறது.
இந்த வேற்றுமையைத் தான் பாரதியாரும் முதலில் சொன்ன வரிகளில் குறிப்பிடுகின்றார்.
ஆனால் பல்வேறு கவிதைகளில் வேதத்தையும், வேள்விகளையும் வியந்தோதிப் பாடியவர் அவர். அதுதான் அவரின் ஆரிய உணர்வு.
இந்தப் பாகுபாட்டை அறியாமல், ‘ஹிந்து’ என்கிற சூழ்ச்சி வலைக்குள் நம்மில் பலரே வீழ்ந்துகிடப்பதுதான் வேதனை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக