திங்கள், 24 ஏப்ரல், 2017

இதுதான் மனுநீதி


ஆதித்த கரிகாலன் சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமையனும் சுந்தர சோழரின் மகனுமாவான்
இடைக்காலச் சோழர்களில் பலம் வாய்ந்த அரசர்களில் ஒருவனாக விளங் கியவன் சுந்தர சோழன். இவன் கி.பி 957 முதல் கி.பி. 973 வரை 16 ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்டான். இவன் முதலாம் பராந்தகச் சோழனின் பேரனும், அரிஞ்சய சோழனின் புதல்வனும் ஆவான். தனது முன்னோர் காலத்தில் இழந்த நிலப்பகுதிகளை மீட்டுச் சோழ நாட்டை வலிமையுள்ள நாடாக மாற்றியவன் இவன். தெற்கே திறை செலுத்த மறுத்துவந்த பாண்டிநாட்டின் மீது படை நடத்தி வெற்றிகண்டான். வடக்கிலும் இராஷ்டிரகூடர்களிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்றும் பொருட்டு அவர்களுடன் போரிட்டு அவற்றை மீண்டும் சோழ நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தினான். இவரு டைய மூத்த மகனும் பட்டத்து இளவர சனுமாகிய ஆதித்த கரிகால சோழன் கொலை செய்யப்பட்டார். இக்கொலை குறித்து உடையார் குடி கல்வெட்டு கூறும் செய்தியில்
உடையார் குடி கல்வெட்டுக்களில் ஆதித்த சோழனின் கொலையாளி களின் பெயர்கள் கீழ்க்கண்டவாறு கொடுக்கப் பட்டுள்ளன.
சோமன்

இவன் தம்பி ரவிதாசன் பிரம்மாதி ராஜன் இவன் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவன் இவன் தம்பி பரமேசுவரன் ஆனால் சோழநாட்டுப் பிரஜை இவர்கள். உடன் பிறந்த மலையனு ரானும் இவன் பெயர் மலையனூரன பார்ப்பனச்சேரி ரேவதாச கிரமவித் தனும் இவன் மகனும் இவன் தாய்பெரிய நங்கைச் சாணியும்

இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களும் ராமத்ததம் பேரப்பன் மாரும்

இவர்களுக்கு பிள்ளைக் கொடுத்த மாமன் மாரிடும் இவர்கள் உடன் பிறந்த பெண்களை வேட்டரினவும் இவர்கள் மக்களை வேட்டரினவும் ஆக
இவ்வனைவரும் கொலையில் தொடர்புடையவர்கள் என இக்கல் வெட்டு கூறுகிறது. இவர்களுடைய நிலத்தைப் பறிமுதல் செய்துவிடுமாறு ராஜராஜ சோழன் முன்பு உத்தரவு இட்டதை இந்த கல்வெட்டு சுட்டுகிறது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தை அல்லது நிலத்தின் ஒரு பகு தியை வெண்ணையூருடையார் பரதன் என்னும் விஜய மல்லன் என்பவன் 115 பொன்னுக்கு வாங்கி அதை திருவனந் தீஸ்வரர் பட்டாரகர் கோவில் பார்ப்பனர் களுக்கு உணவு கொடுப்பதற்கு கொடை யாக வழங்கினான் என தெளிவாக இக்கல்வெட்டு கூறும் செய்தியாகும் கொலைசெய்த அனைவரும் பார்ப்பனர் என்பதற்காக ராஜராஜ சோழன் கொலை யாளிகளைத் தண்டிக்கவில்லை என்ற செய்தியும் இதில் அடங்கியுள்ளது. கொன்றவர்கள் அனைவரும் பார்ப்ப னர்களே அவர்களில் பாண்டிய நாட் டைச் சேர்ந்தவர்கள் இருவர் மீதிப்பேர் சோழ நாட்டை சேர்ந்தவர்கள். பாண் டிய மன்னன் தலையைக் கொய்ததற்கு சோழ நாட்டைச் சேர்ந்த பார்ப்பனர்கள் ஏன் சினம் கொள்ளவேண்டும்? பார்ப் பனர்களுக்கு நாட்டுப்பற்றை விட ஜாதிப்பற்று அதிகம் என்பது இங்கு தெரியவரும் மற்றுமொரு செய்தியாகும்.

-விடுதலை ஞா.ம.,22.4.17

திங்கள், 3 ஏப்ரல், 2017

சங்க இலக்கியங்களில் வைதீக எதிர்ப்பு

பிற ஏடுகளிலிருந்து...

சங்க இலக்கியங்களில் வைதீக எதிர்ப்பு

அவைதிகம் என்பதற்கு வைதிகம் அல்லாதது என்று பொருள். வைதிகம் என்றால் வேதங்கள் மற்றும் அவற்றின் பக்கவிளைவுகளான உபநிடதங்கள், புராணங்கள், மந்திர தந்திரங்கள் உள்ளிட்ட மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் உண்மை என சாதிப்பது. அவைதிகம் என்பது இவற்றை யெல்லாம் நிராகரிப்பது. சுருங்கச் சொன்னால் நாத்திகம் என்பதே அவைதிகம் எனப்படும். இதற்கு சான்றாகச் சிலர் அளித்துள்ள விளக்கங்களைக் காணலாம். தத்துவ ஆய்வறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா ‘‘இந்திய நாத்திகம்’’ என்ற நூலில் இவ்வாறு விளக்கம் தருகிறார். உலகாயதம் சாருவாகம் ஆகியவற்றின் பொருண்மை நாத்திக வாதமே ஆகும். இவற்றோடு சாங்கியம், புத்தம். சமணம். மீமாம்சம். நியாயவைசேசிகம் ஆகியவையும் கீழ்காண்பவற்றை மய்யக் கருத்துக்களாக கொண்டிருந்தன.

1.வேத வேள்விகளையும் வருணாசிரமங்களையும் பல கடவுள் வழிபாட்டையும் மறுத்தன.

2.உபநிடதங்கள் உரைக்கும் ஒரு கடவுளுண்மை வாதத்தையும் உடன்படவில்லை.

3.வேதங்கள் விளம்பும் இயற்கைச் சக்திகளுக்கும் உபநிடதங்கள் உரைக்கும் பரம்பொருளுக்கும் பதிலாக அண்ட அமைப்பியல் நியதிகளை வரையறுத்தன.

4.இயற்கை இறந்த ஆற்றல்களைப் புறக்கணித்தன.

5.அண்டத்தில் இயற்கை விதியின் ஆட்சியை மதித்தன. உடன்பாட்டு முறையில் நோக்கினால் அவைதிக அல்லது நாத்திக தத்துவங்கள் அமைப்பியல் நியதிகளை வரையறுத்தன; அண்டத்தின் இயற்கை விதியின் ஆட்சியை மதித்தன. செயற்கையாக முன் வைக்கப்பட்ட கடவுள் , இயற்கை கடந்த ஆற்றல் இன்ன பிறவற்றை அவை ஏற்க மறுத்தன என்கிறார் சட்டோபத்யாயா. நாத்திகம் குறித்த தந்தை பெரியாரின் கருத்தும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

‘‘இன்றைய தினம் நாத்திகன் என்ற பதத்திற்குக் கடவுளை இல்லை யென்பவன் என்றாக்கிவிட்டார்கள். தர்க்கரீதியில் புத்தியை உபயோகப்படுத்தி விஷயத்தை ஆராய்ச்சி செய்கிறவன் எவனாக இருந்தாலும் அவன் நாத்திகன் தான்’’ என்கிறார் பெரியார்.

தனது கருத்துக்கு ஆதரவாக அவர் பவுத்தம், புத்தம் என்ற சொற்களுக்கான விளக்கத்தை முன்வைக்கிறார். ‘‘சொந்த புத்தியைக் கொண்டு வேத சாஸ்திரங்களைத் தர்க்கம் செய்பவன் நாத்திகன். அப்படிப்பட்ட புத்தியை உபயோகப்படுத்துகிறவன் புத்தன்.’’ அபிதான சிந்தாமணி, என்சைக்கிளோபீடியா ஆகிய நூல்களில் பவுத்தம் என்பதற்குப் ‘‘புத்தியைக் கொண்டு - அறிவைக்கொண்டு பார்ப்பவர்கள்; கண்மூடித்தனமாக நம்பாதவர்கள்’’ என்றே பொருள் சொல்லியிருக்கிறார்கள் (பெரியார் களஞ்சியம்  தொகுதி 4 பக்கம்: 236) இந்திய தத்துவக் களஞ்சியம் என்ற நூலில் முனைவர் சோ.நா. கந்தசாமி அவர்கள்நாத்திகம் என்பதற்கு அளித்துள்ள சில விளக்கங்களையும் காணல் நன்று. ‘‘பாணினி இலக்கண விதிக்கு (எ - 460)பதஞ்சலி செய்த மாபாடியத்திற்கு விளக்கவுரை எழுதிய சாயாதித்தர் ஆத்திகர்  பரலோகத்தை உடன்பட்டவர்; நாத்திகர்  அதனை நம்பாதவர்’’ என்று விளக்கம் கூறினார்.மனு, நாத்திகரை விளக்கும் பொழுது ‘‘வேதக்கொள்கைகளை நிந்தனை புரிபவர்’’ என்று குறித்துள்ளார்.

‘‘சுக்கிர நீதியில் கற்பதற்குரிய கலைகளில்’’ நாத்திக சாத்திரமும் ஒன்றாக எண்ணப்பட்டுள்ளது. இச்சாத்திரம் சுபாவ வாதத்தைக் கூறுவதுடன் தருக்க வாதங்களை வலிமையாகக் கொண்டது. வேதங்களையும் கடவுளையும் மறுத்துரைப்பது. இந்த விளக்கங்கள் வழி நாம் ஒரு முடிவுக்கு வரலாம் பொதுவாக நாத்திகம் என்பதுகடவுள் மறுப்பு என்று சொல்லப் பட்டாலும் வேத மறுப்பு மேலுலக மறுப்பு. சடங்கு மறுப்பு போன்றவற்றையும் உள்ளடக்கியதாகும். இந்தப் புரிதலை அடியொற்றி செவ்வியல் இலக்கியங்களில் நாத்திக அல்லது அவைதிக மரபுகள் பதிவாகியிருப்பதைக் கண்டுகாட்ட முற்படுவதே கட்டுரையின் நோக்கமாகும். செவ்வியல் இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு மற்றும் அய்ம்பெரும் காப்பியங்கள் அய்ஞ்சிறு காப்பியங்கள் ஆகியவற்றுக்கெல்லாம் ஆதி நூலாக விளங்குவது தமிழுக்கான இலக்கணத்தை மொழியியல், வாழ்வியல் அடிப்படையில் கூறும் தொல்காப்பியம் ஆகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட இவ்விலக்கண நூல் உலகத்து உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டவை என்கிற அடிப்படை வைதிக மரபை ஏற்கவில்லை. மாறாக உயிர்களின் பரிணாம வளர்ச்சி என்கிற அறிவியலுக்கு முன்னுரை எழுதியுள்ளது. ஓரறிவு உயிரிலிருந்து ஆறறிவு உயிர் வரையிலான வகைப்பாட்டினைத் தொல்காப்பியம் எடுத்துரைக்கிறது.

ஒன்றறிவதுவே உற்றறிவதுமே இரண்டறிவதுவே அத னொடு நாவேமூன்றறிவதுவே அவற்றொடு முக்கே நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே அய்ந்தறிவதுவே அவற்றொடு செவியே ஆறறிவதுவே அவற்றொடு மனனேநேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே!’’

(தொல், பொருள். மரபியல்நூற்பா 27) பொதுவான உயிர் வகைமைகளைக் கூறி நிறுத்தாமல்

புல்லும் மரனும் ஓரறிவினவே

நந்தும் முரலும் ஈரறிவினவே

சிதலும் எறும்பும் மூவறிவினவே

நண்டும் தும்பியும் நான்கறிவினவே

மாவும் மாக்களும் அய்யறிவினவே

மக்கள் தாமே ஆறறிவுயிரே

(தொல். பொருள் மரபியல் நூற்பாக்கள் 28 - 33)

என்று விளக்கம் தருகிறது. ஒருசெல் தாவரங்களிலிருந்தே பரிணாம வளர்ச்சி துவங்குகிறது. இதன் இறுதி வடிவமே மனிதன் என்று அறிவியல் கூறுவதன் முன்னோட்டம் போலவே தொல்காப்பிய நூற்பாக்கள் அமைந்துள்ளன. உலகின் உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டவை என்ற ஒற்றை வரியோடு நின்றிருந்தால் தொல்காப்பியம் வைதிகத்தின் வழிப்பட்டதாகி இருக்கும். அதிலிருந்து விலகி நிற்பதால் தமிழர்களின் அவைதிக மரபுக்குத் தொல்காப்பியம் வழி திறந்திருக்கிறது எனலாம்.அது மட்டுமல்ல. உலகத்தைப் படைத்தது கடவுள் அல்ல என்பதான கருத்தையும் தொல்காப்பியம் முன்வைக்கிறது.

‘‘நிலம், தீ, நீர், வளி, விசும்பொடு அய்ந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆகலின்’’ (தொல். பொருள் நூற்பா 635) தொல்காப்பியத்தைப் பின்பற்றுவது போன்ற கருத்துக்கள் புறநானூறு தொகை நூலிலும் காணப்படுகின்றன.மன்னனைப் புகழ்ந்து பாடுவதென்ற பெயரால் தங்களின் கோட்பாட்டு சார்பு நிலையைப் புலவர்கள் சொல்வார்கள். இவ்வகையில் உறையூர் முதுக்கண்ணன் சாத்தனர் சோழன் நலங்கிள்ளி யின் குணநலன்களைக் கூறுவதுபோல உலகின் அய்ம் பூதத்தியற்கையைப் பதிவுசெய்கிறார்.

மண்திணிந்த நிலனும்

நிலன் ஏந்திய விசும்பும்

ஒளித் தலைஇய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

அய்ம்பெரும் பூதத்து இயற்கைபோல

(புறநானூறு - 2)

மன்னனின் குணங்கள் இருந்ததாகக் கூறுகிறார் புலவர்.ஆரம்பத்தில் உலகாயதர் என்றும் பின்னர்சாருவாகர் என்றும் அறியப்பட்ட ஆதிச் சிந்தனையாளர்களில் ஒரு பிரிவினர் முன்வைத்த இயற்பண்பு (ஸ்வாபம்) வாதத்தை இந்தப் பாடலில் காணமுடிகிறது.இப்புலவரின் இன்னொரு பாடலும் வானியலை அளந்து கூறுவதாக இருக்கிறது.

செஞ்ஞாயிற்றுச் செலவும்

அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்

பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்

வளிதிரிதரு திசையும்

வறிது நிலைஇய காயமும் என்றிவை

சென்று அளந்து அறிந்தோர் போல என்றும்

இனைத்து என்போரும் உளரே

(புறநானூறு - 30)

‘‘செஞ்ஞாயிற்றுச் செலவும்அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவைசென்று அளந்து அறிந்தோர் போல என்றும் இனைத்து என்போரும் உளரே’’ (புறநானூறு - 30)

ஞாயிறு எனும் சூரியனின் பயணம், அதனைச் சூழ்ந்த மண்டலம், (பிறகோள்கள்) காற்றின் திசை, காற்றே இல்லாத ஆகாயம் என இவற்றையெல்லாம் நேரில் சென்று அளந்தது போல கணித்துச் சொல்வோரும் உள்ளனர் என்பது இப்பாடலின் கருத்தாகும். ஞாயிற்றின் மண்டிலம் என்ற அறிவியல் முன்னோட்டத்தை மேம்படுத்த மறந்ததாலும்  வைதிகக் கருத்தாளர்கள் மறைத்ததாலும், நவக் கிரகங்களைச் சுற்றிவந்து பூசனை செய்யும். பூமியிலிருந்து மேற் செல்லச் செல்ல குறிப்பிட்ட தூரத்திற்குப்பின் சுவாசிக்கத் தேவையான காற்று கிடைப்பதில்லை புவியீர்ப்பு விசை இல்லையாகிறது என்ற இன்றைய ஆய்வுகளுக்குக் கட்டியம் கூறுவதுபோல இருக்கும் தொடர் ‘‘வறிது நிலை இய காயமும் என்பதாகும். அனைத்துக்கும் மேலாக இவற்றையெல்லாம் நேரில் சென்று அளந்ததுபோல் கணித்துச் சொல்வோரும் உள்ளனர் என்று சொல்லியிருப்பது புலவரின் காலத்தோடு ஒப்பு நோக்கி மதிக்கத் தக்கதாகும்.ஆகாயத்தில் பரலோகம் இருக்கிறது. சொர்க்கம் இருக்கிறது. முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள். தேவேந்திரனும் முப்பெருங் கடவுளரும் தேவியரும் இருக்கிறார்கள் என்றெல்லாம் இன்றும் சொல்லி நம்பவைத்துக் கொண்டிருக்கும் வைதிகப் புராண மரபை அன்றே உடைத்தெறிந்திருக்கிறார் புலவர் முதுகண்ணன் சாத்தனார் இவரது பெயரைக் கொண்டே இவர் புத்தமதச் சார்பாளர் என்று கொள்ள இடமுண்டு. புத்தமதம் உள்ளிட்ட நாத்திக சமயங்கள் அண்ட அமைப்பியல் நியதிகளை வரையறுத்தன. அண்டத்தில் இயற்கையின் ஆட்சியை மதித்தன என்ற சட்டோபாத்யாயாவின் நிர்ணயிப்பையும் இதுபோன்ற கருத்துக்கள் மெய்ப்பிக்கின்றன.

நன்றி: ‘தீக்கதிர்’, 3.4.2017

-விடுதலை,3.4.17

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

சீர்திருத்தமும் இந்துமத ஸ்மிருதியும்


 
திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரி அவர்கள் தற்காலம் ஆலோசனையிலும் கமிட்டி விசாரணையிலும் இருந்து வரும் குழந்தை விவாகத் தடை மசோதாவைக் கண்டித்து ஒரு ஸ்ரீமுகம் வெளியிட்டிருக்கின்றார். அதை சுதேசமித்திரன் பிரசுரித்துள்ளபடி மற்றொரு பக்கத்தில் எடுத்துப் போட்டி ருக்கின்றோம். அதன் காரண காரியங்களைப் பற்றி ஆராயுமுன் திரு. சத்திய மூர்த்தி யார் என்பதையும், அவர் எந்த முறையில் வெளிப்படுத்தியிருக்கின்றார் என்பதையும் முதலில் கவனிப்போம்.
திரு. சத்தியமூர்த்தியை அவருடைய தனித்த ஹோதாவில் ஒரு சாதாரண மனிதர் என்பதாகச் சொல்லி விடலாமானாலும் அவருக்கு இம்மாதிரியான ஸ்ரீமுகங்கள் வெளியிட சந்தர்ப்பங்கள் அளித்ததும் அந்த ஸ்ரீமுகங்களை மக்கள் கவனிக்க நேர்ந்ததும், சில விஷயங்களிலாவது அவர் இந்திய மக்கள் பிரதிநிதி என்கின்ற தன்மை அடைந்திருக்கிறார் என்பதே அதாவது தேசிய அரசியல் இயக்கம் என்று சொல்லப் படுவதில் ஒரு குறிப்பிட்ட மனிதராகவும், சென்னை சட்டசபை என்பதில் ஜனப் பிரதிநிதி அங்கத்தினராகவும், அதிலும் படித்த மக்களின் பிரதிநிதியாகவும், அதாவது யுனிவர்சிட்டி பிரதி நிதியாகவும், சென்னை முனிசிபாலிட்டியின் ஒரு அங்கத் தினராகவும், மற்றும் பொது ஜனசேவை செய்கின்றவர் என்று சொல்லிக் கொள்ளும் கூட் டத்தில் சேர்ந்தவராகவும் இருக்கின்றார் என்பதே. அன்றியும், தன்னை ஒரு சீர்திருத்தக்காரர் என்றும், மதம், சமூகம் முதலியவைகளில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம்தான் என்றும் சொல்லிக் கொள்பவர்.
எனவே, இப்படிப்பட்ட ஒருவர், குழந்தைகள் புருஷன் பெண்ஜாதியான வாழ்வு நடத்தா திருப்பதற்கும், குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவம் மாறாததற்கு முன்பே பிள்ளை பெறும்படியான நிலைமையை உண்டாக்காமல் இருப்பதற்கும், மற்றும் மனித சமுகத்தின் அறிவு, சரீர வளர்ச்சி, பலம் முதலியவைகள் விர்த்தி அடைவதற்கும் அவசியமானதான மேல்கண்ட குழந்தை விவாகத் தடுப்பு மசோதா என்பதை எதிர்த்துப் போராடவந்து அதற்கு ஆதாரமாக பெரிதும் மதசம்பந்தமான ஆட்சேபனைகளையே எடுத்துக்காட்டி இருக்கிறார்.
இது மாத்திரமல்லாமல், மற்றும் இது போன்ற பல சீர்திருத்தங்களையும், மதத்தைச் சாக்காகக் கொண்டே ஆட்சேபித்து வந்திருக்கின்றார். இதற்கு உதாரணமாக இரண்டொன்றைக் குறிப்பிடுகின்றோம்.
அதாவது கொஞ்ச நாளைக்கு முன் சென்னை சட்டசபையில் திரு. முத்துலட்சுமி அம்மாளால் கொண்டுவரப்பட்ட சாமிபேரால் விபச்சாரத்திற்குப் பொட்டுகட் டும் வழக்கத்தடுப்பு மசோதாவையும் மதத்தைச் சாக்காகக் கொண்டே தடுத்து நின்றதும் யாவருக்கும் தெரிந்ததாகும். அந்தச் சமயத்தில் திரு. சத்தியமூர்த்தி அய்யர் சொன்ன ஆட்சேபனை, என்ன வென்றால் பொட்டுகட்டுகின்ற வழக்கம், கேட்டைத் தரத்தக்கதானாலும், அதை நிறுத்தச் சம்மதிப்பது மதத்தில் பிரவேசிப் பதாகும் என்றும், இன்று பொட்டுகட்டுவதை நிறுத்த ஒப்புக்கொண்டால் நாளை மற் றொரு சீர்திருத்தம் வரும் என்றும், ஆத லால் அதற்குச் சம்மதிக்க முடியாதென்றும் சொல்லி விட்டார்.
பிறகு சென்ற வாரத்தில், சென்னையில் நடைபெற்றுவரும் விபச்சாரங்களை தடுக்க ஒரு மசோதா கொண்டுவர முயற்சித்த போதும் இதுபோலவே தடைக்கல்லாய் நின்றதுடன் அவர் சொன்ன சமாதானம் என்னவென்றால், விபச்சாரிகள் எவ்வளவு தான் ஒழுக்க ஈனமாக நடந்துகொண்டாலும் அவர்களும் நமது சமூகத்தார் அல்லவா? அப்படியிருக்க அவர்களின் விபச்சாரத் தொழிலை நிறுத்தி விட்டால் பிறகு அவர்கள் ஜீவனத்திற்கு என்ன செய்வார்கள் என்று சொல்லி ஆட்சேபித்தாராம்.
இம்மாதிரியாகவே எவ்விதமான சீர்திருத் தங்கள் வந்த போதிலும் மதத்தின் பேராலும் சமுகத்தின் பேராலும் ஆட்சேபித்து அவைகள் நிறைவேற்றப்படாமல் போவதாயிருந்தால் பிறகு எந்த விதத்தில் தான் நமக்குக் கதிமோட்சம் ஏற்படக் கூடும்? அன்றியும் பராசரர் ஸ்மிருதியும் மனுஸ் மிருதியும் நமது வாழ்க்கைக்கும் மதத்திற்கும் ஆதாரமென்பதை நாம் சகித்துக் கொண்டு அதைப் பின்பற்றுவதென்றால், அதை விட ஈன வாழ்க்கை வேறு எங்காவது ஏதாவது உண்டா என்று கேட் கின்றோம். இப்பேர்ப்பட்ட இந்துமதம் என்பதும் அதனுட் பிரிவுகள் என்பதான சைவ வைணவ முதலிய சமயங்கள் என்பதும், அதன் ஆதாரங்களான வேதம், சாஸ்திரம், ஸ்ருதி, ஆகமங்கள் என்பவைகளும், நமது மோட்ச சாதனத்திற்கு ஏற்பட்டவை என்றும், உலகத்திலுள்ள மற்ற மதங்களுக் கெல்லாம் சிறந்தது என்றும் சொல்லிக்கொண்டு அச்சமயங்களைக் காப்பாற்ற வெளிவந்திருக்கும் வீரர்கள், சுயமரியாதை இயக்கம் இந்து மதத்தைக் கெடுக்கின்றது. வைணவ மதத்தை வைகின்றது, சைவ சமயத்தை ஒழிக்கின்றது என்று ஊளையிட்டு கொண்டிருக்கின்றவர்களே இம்மாதிரி சீர்திருத்தத்தைப் பற்றியாவது கடுகளவு கவலையாவது கொள்ளுகின்றார்களா என்பதைப் பொது ஜனங்கள் யோசித்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்ளுகின்றோம்.
அன்றியும் மத சமயக்காரர்கள் என்பவர்கள் சம்பந்தன் சமணர்களைக் கழுவேற்றினது பொய்யா மெய்யா? முதலை தான் உண்ட பாலகனை 14 வருஷம் வரை வயிற்றில் வளர்த்து வெளியில் கக்கினதை ஒப்புக் கொள்ளுவாயா? மாட்டாயா  ராமன் கடவுளா மனிதனா? ராவணன் யோக்கியனா? ராமன் யோக் கியனா? சிவன் பெரியவனா, விஷ்ணு பெரியவனா? விஷ்ணுவுக்கு வடகலை நாமமா, தென்கலை நாமமா? சூரியனுடைய ரதத்திற்கு எட்டு குதிரையா? பதினாறு குதிரையா? விதி பெரியதா மதி பெரியதா? இதுபோன்ற விசயங் களில் மதபக்தியையும் அறிவு சக்தியையும் காண்பித்துக் கொண்டு சமயத் தொண்டையும், தெய்வத் தொண் டையும் செய்துகொண்டும், இம்மாதிரியான விஷயங்களிலெல்லாம் பார்ப்பனர்கள் சொன்னதை தெய்வவாக்கு என்பதாகவும், அதை மறுத்தால் தங்களுக்கு எந்த வித யோக்கியதையும் இல்லாமல் போய்விடும் என்று பயந்து கொண்டும் பாமர மக்களை மிருகங் களாக்கி விடுகின்றார்கள். ஆதலால் இம்மாதிரி மதமும் சமயமும் நமக்கு எதற்காக வேண்டும்? இவை மக்களுக்கு நன்மையளிக்கும் சமயமாகுமா? என்பதாக கேட்க ஆரம்பித்தால் அதை நாஸ்திகம் என்று சொல்லி விரட்டியடிக்கப் பார்க்கின்றார்களேயொழிய மனிதத் தன்மை அறிவுத் தன்மை என்பதை ஒரு சிறிதும் காட்டுவதே கிடையாது.
தவிர திரு. சத்தியமூர்த்தி, பால்ய விதவைகளின் கொடுமையையும் சிறு குழந்தைகள் பிள்ளை பெற்று தாயாகி விடுவதால் வரும் கெடுதியையும் நான் அறிவேன் என்று கொடுமைகளையும் கஷ்டங்களையும் ஒப்புக்கொள்ளு கின்றார்.
ஆனால் கூடவே அதன் கீழ் 12 வயதுக்குள் பெண் களுக்குக் கல்யாணம் செய்யாவிட்டால் பாவம் வரும் என்று பராசர ஸ்மிருதியில் சொல்லி இருக்கின்றது என்கின்றார். கொடுமையையும் கெடுதியையும் நீக்குவது பாவமாகுமானால் அந்தப் பாவத்திற்குப் பயப்படவேண்டுமா? என்றுதான் கேட்கின்றோம்,.
அன்றியும் திரு. சத்தியமூர்த்தி ஆதாரம் காட்டும் பராசர ஸ்மிருதியின் விவாகப் பிரகரணத்தில், 8 வயது பெண்ணை விவாகம் செய்து கொடுத்தவன் சுவர்க்க லோகத்தையும், 9 வயதுப்பெண்ணை விவாகம் செய்து கொடுத்தவன் வைகுண் டத்தையும், 10 வயதுப் பெண்ணை விவாகம் செய்து கொடுத்தவன் பிரம்ம லோகத் தையும் அடைகிறான்; அதற்கு மேற்பட்டு பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் ரவுரவதி நரகத்தை அடைகிறான் என்று எழுதியிருக்கின்றது.
ஆனால், திரு. சத்தியமூர்த்தி 10 வயதுக்கு முன் கல்யாணம் செய்யும் வழக்கம் இப்போது நின்றுபோய்விட்டது என்று சொல்லுகின்றார். இந்தப்படி பார்த்தால் இப்போது பெண் பெற்றவர்கள் எல்லோரும் ரவுரவாதி நரகத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று தானே சொல்ல வேண்டும். எனவே இனி 16 வயதில் கல்யாணம் செய்பவர்களுக்குப் புதிதாகப் பாவம் ஏது என்று கேட்கின்றோம்.
தவிர திரு. சத்தியமூர்த்தி பயப்படுவதாக வேஷம் போடும் பராசர ஸ்மிருதியின் யோக்கியதையைக் கவனிப்போம்.
10 வயதுக்கு மேற்பட்ட பெண்ணுக்குக் கல்யாணம் செய்யாவிட்டால் ரவுரவாதி நரகத்தை அடைய வேண்டும் என்று சொல்லும் ஸ்மிருதியானது அதே ஸ்திரிகள் விஷயத்தில் சொல்லுவது என்ன என்றால், ஸ்திரிகள் பூமிக்குச் சமமானவர்கள். அவர்கள் குற்றம் செய்தால் தூக்ஷிக்கக் கூடாது. அவர்கள் என்ன தவறுதல் செய்தாலும் அவர்களை விலக்கிவிடக் கூடாது. சண்டாளன் வசித்த பூமியை எப்படிச் சில சுத்திகள் செய்து அதில் நாம் வசிக்கின்றோமோ, அதுபோல் ஸ்திரிகள் சண்டாள சம்பந்தம் வைத்துக் கொண்டாலும் அவர்களைச் சுத்தி பிராயச்சித்தம் செய்து ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று சொல்லியிருக்கின்றது. அந்த பிராயச்சித்தம் என்னவென்று பார்ப்போமானால் அதாவது ஒரு பிராமண ஸ்திரீ தன் மனதறிந்து ஒரு சண்டாளனுடன் சம்பந்தம் வைத்துக் கொண்டால் சாந்திராயண கிருச்சிரம் செய்துவிட்டால் சுத்தியாகிறாள் என்று சொல்லியிருக் கின்றது. இது பராசர ஸ்மிருதி பிராயச்சித்த காண்டம் 7வது அத்தியாயம் 23வது சுலோகம்.
சாந்திராயண கிருச்சிரம் என்பது கிருஷ்ண பட்சம் முதல் அமாவாசை வரை யில் தினம் ஒரு பிடிசாதமாகக் குறைத்துக் கொண்டு வந்து ஒரு நாள் பட்டினி விரதமிருந்து, மறுபடியும் ஒவ்வொரு பிடி விருத்தி செய்து சாப்பிட வேண்டியது இது 7ஆவது காண்டம் 2ஆவது சுலோகம்.
ஒரு பிராமண ஸ்திரீ பாவ சீலர்களான சூத்தி ரர்களால் அனுபவிக்கப்பட்டால் அவள் பிரஜாபத்திய கிருச்சிரம் செய்வதாலும் ருது ஆவதாலும் சுத்தி அடைகின்றாள் என்று சொல்லுகின்றது (இது மேல்படி காண்டம் மேல்படி அத்தியாயம் 24ஆவது சுலோகம்)
பிரஜாபத்திய கிருச்சிரம் என்பது 3 நாள் காலையிலும் 3 நாள் மாலையிலும் புசித்து 3 நாள் யாசிக்காமல் வந்ததைப் புசித்து 3 நாள் உபவாசமிருத்தல் (இது பராசர ஸ்மிருதி 7ஆவது காண்டத்தில் 9ஆவது அத்தியாத்தில் சொல்லப்படுகின்றது.)
இதுவும் செய்வதற்குக் கஷ்டமாயிருக்கு மானால் 12 பிராமணர்களுக்கு சாப்பாடு போட்டால் போதும் (இதுவும் மேற்படி அத்தியாயம்.)
இன்னும் இதுபோலவே மகாபாதகம் என்று சொல்லும் படியான குருபத்தினியைப் புணர்ந்தவன் ஒரு பசுவையும் எருதையும் பிராமணனுக்குக் கொடுத்தால் சுத்தனாகிறான் (மேற்படி காண்டம் அத்தி யாயம் சுலோகம் 13)
இன்னும் இதைவிட மகாபாதகமான அனேக காரியங்களுக்கும் ஒரு வேளை இரண்டு வேளை பட்டினி கிடப்பதும் பிரா மணனுக்குக் கொடுப்பதுமே பிராயச்சித்தமாய்ச் சொல்லப்படுகின்றது. அதிலும் பிராமணன் சூத்திரன் என்பதாகப் பிரித்து அதற்குத் தகுந்தபடி பிராயச்சித்தம் சொல்லப்பட்டிருக்கின்றது. அதாவது ஒரு வேதம் ஓதின ஒரு பிராமணன் ஒரு பசுவைப் புணர்ந்தால் ஒரு பசுவைப் பிரா மணனுக்குக் கொடுத்தால் சுத்தனாகிறான். இதே காரியத்தை ஒரு சூத்திரன் செய்தால் 4 பசுவையும், 4 எருதையும் பிராமண னுக்குக் கொடுத்தால் சுத்தனாகிறான் என்று சொல்லுகிறது.
(மேற்படி அத்தியாம் 14ஆவது சுலோகம்)
எனவே இப்பேர்ப்பட்ட காரியங்களுக் கெல்லாம் எவ்வளவு சுலபமாக பிராயச் சித்தம் சொல்லி இருக்கும்போது ஒரு பெண்ணை 12 வயது ஆன பிறகு பிறந்து கல்யாணம் செய்வதால் ஏற்படும் பாவத் திற்கு மிகவும் சுலபமான பிராயசித்தம் தானே இருக்கக்கூடும். ஆதலால் பராசர ஸ்மிருதியை கடவுள் வாக்கு என்றே நம்புகின்றவர்களுக்குக் கூட குழந்தை விவாகத் தடுப்பு மசோதாவில் பிரமாதமான கெடுதி ஒன்றும் வந்துவிடாது என்றே சொல்லுவோம். அதிகமான தண்டனை விதித்திருந்தாலும் அது பாலும் பழமும் மாத்திரம் சாப்பிட்டுக் கொண்டு ஒரு வேளை பட்டினி கிடக்கவேண்டும் என்று தான் இருக்கக் கூடும். ஆதலால் உண்மையானதும் அவசியமானதுமான சீர் திருத்தங்களை விரும்புகின்றவர்கள் மதம், சமயம், சாஸ்திரம், சாமி என்கின்ற பூச்சாண்டிகளுக்கு ஒரு சிறிதும் பயப்படக் கூடாது என்பதற்காகவே இதை எழுதுகிறோம்.
- குடிஅரசு - தலையங்கம் - 21.10.1928
-விடுதலை,2.4.17