ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

சீர்திருத்தமும் இந்துமத ஸ்மிருதியும்


 
திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரி அவர்கள் தற்காலம் ஆலோசனையிலும் கமிட்டி விசாரணையிலும் இருந்து வரும் குழந்தை விவாகத் தடை மசோதாவைக் கண்டித்து ஒரு ஸ்ரீமுகம் வெளியிட்டிருக்கின்றார். அதை சுதேசமித்திரன் பிரசுரித்துள்ளபடி மற்றொரு பக்கத்தில் எடுத்துப் போட்டி ருக்கின்றோம். அதன் காரண காரியங்களைப் பற்றி ஆராயுமுன் திரு. சத்திய மூர்த்தி யார் என்பதையும், அவர் எந்த முறையில் வெளிப்படுத்தியிருக்கின்றார் என்பதையும் முதலில் கவனிப்போம்.
திரு. சத்தியமூர்த்தியை அவருடைய தனித்த ஹோதாவில் ஒரு சாதாரண மனிதர் என்பதாகச் சொல்லி விடலாமானாலும் அவருக்கு இம்மாதிரியான ஸ்ரீமுகங்கள் வெளியிட சந்தர்ப்பங்கள் அளித்ததும் அந்த ஸ்ரீமுகங்களை மக்கள் கவனிக்க நேர்ந்ததும், சில விஷயங்களிலாவது அவர் இந்திய மக்கள் பிரதிநிதி என்கின்ற தன்மை அடைந்திருக்கிறார் என்பதே அதாவது தேசிய அரசியல் இயக்கம் என்று சொல்லப் படுவதில் ஒரு குறிப்பிட்ட மனிதராகவும், சென்னை சட்டசபை என்பதில் ஜனப் பிரதிநிதி அங்கத்தினராகவும், அதிலும் படித்த மக்களின் பிரதிநிதியாகவும், அதாவது யுனிவர்சிட்டி பிரதி நிதியாகவும், சென்னை முனிசிபாலிட்டியின் ஒரு அங்கத் தினராகவும், மற்றும் பொது ஜனசேவை செய்கின்றவர் என்று சொல்லிக் கொள்ளும் கூட் டத்தில் சேர்ந்தவராகவும் இருக்கின்றார் என்பதே. அன்றியும், தன்னை ஒரு சீர்திருத்தக்காரர் என்றும், மதம், சமூகம் முதலியவைகளில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம்தான் என்றும் சொல்லிக் கொள்பவர்.
எனவே, இப்படிப்பட்ட ஒருவர், குழந்தைகள் புருஷன் பெண்ஜாதியான வாழ்வு நடத்தா திருப்பதற்கும், குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவம் மாறாததற்கு முன்பே பிள்ளை பெறும்படியான நிலைமையை உண்டாக்காமல் இருப்பதற்கும், மற்றும் மனித சமுகத்தின் அறிவு, சரீர வளர்ச்சி, பலம் முதலியவைகள் விர்த்தி அடைவதற்கும் அவசியமானதான மேல்கண்ட குழந்தை விவாகத் தடுப்பு மசோதா என்பதை எதிர்த்துப் போராடவந்து அதற்கு ஆதாரமாக பெரிதும் மதசம்பந்தமான ஆட்சேபனைகளையே எடுத்துக்காட்டி இருக்கிறார்.
இது மாத்திரமல்லாமல், மற்றும் இது போன்ற பல சீர்திருத்தங்களையும், மதத்தைச் சாக்காகக் கொண்டே ஆட்சேபித்து வந்திருக்கின்றார். இதற்கு உதாரணமாக இரண்டொன்றைக் குறிப்பிடுகின்றோம்.
அதாவது கொஞ்ச நாளைக்கு முன் சென்னை சட்டசபையில் திரு. முத்துலட்சுமி அம்மாளால் கொண்டுவரப்பட்ட சாமிபேரால் விபச்சாரத்திற்குப் பொட்டுகட் டும் வழக்கத்தடுப்பு மசோதாவையும் மதத்தைச் சாக்காகக் கொண்டே தடுத்து நின்றதும் யாவருக்கும் தெரிந்ததாகும். அந்தச் சமயத்தில் திரு. சத்தியமூர்த்தி அய்யர் சொன்ன ஆட்சேபனை, என்ன வென்றால் பொட்டுகட்டுகின்ற வழக்கம், கேட்டைத் தரத்தக்கதானாலும், அதை நிறுத்தச் சம்மதிப்பது மதத்தில் பிரவேசிப் பதாகும் என்றும், இன்று பொட்டுகட்டுவதை நிறுத்த ஒப்புக்கொண்டால் நாளை மற் றொரு சீர்திருத்தம் வரும் என்றும், ஆத லால் அதற்குச் சம்மதிக்க முடியாதென்றும் சொல்லி விட்டார்.
பிறகு சென்ற வாரத்தில், சென்னையில் நடைபெற்றுவரும் விபச்சாரங்களை தடுக்க ஒரு மசோதா கொண்டுவர முயற்சித்த போதும் இதுபோலவே தடைக்கல்லாய் நின்றதுடன் அவர் சொன்ன சமாதானம் என்னவென்றால், விபச்சாரிகள் எவ்வளவு தான் ஒழுக்க ஈனமாக நடந்துகொண்டாலும் அவர்களும் நமது சமூகத்தார் அல்லவா? அப்படியிருக்க அவர்களின் விபச்சாரத் தொழிலை நிறுத்தி விட்டால் பிறகு அவர்கள் ஜீவனத்திற்கு என்ன செய்வார்கள் என்று சொல்லி ஆட்சேபித்தாராம்.
இம்மாதிரியாகவே எவ்விதமான சீர்திருத் தங்கள் வந்த போதிலும் மதத்தின் பேராலும் சமுகத்தின் பேராலும் ஆட்சேபித்து அவைகள் நிறைவேற்றப்படாமல் போவதாயிருந்தால் பிறகு எந்த விதத்தில் தான் நமக்குக் கதிமோட்சம் ஏற்படக் கூடும்? அன்றியும் பராசரர் ஸ்மிருதியும் மனுஸ் மிருதியும் நமது வாழ்க்கைக்கும் மதத்திற்கும் ஆதாரமென்பதை நாம் சகித்துக் கொண்டு அதைப் பின்பற்றுவதென்றால், அதை விட ஈன வாழ்க்கை வேறு எங்காவது ஏதாவது உண்டா என்று கேட் கின்றோம். இப்பேர்ப்பட்ட இந்துமதம் என்பதும் அதனுட் பிரிவுகள் என்பதான சைவ வைணவ முதலிய சமயங்கள் என்பதும், அதன் ஆதாரங்களான வேதம், சாஸ்திரம், ஸ்ருதி, ஆகமங்கள் என்பவைகளும், நமது மோட்ச சாதனத்திற்கு ஏற்பட்டவை என்றும், உலகத்திலுள்ள மற்ற மதங்களுக் கெல்லாம் சிறந்தது என்றும் சொல்லிக்கொண்டு அச்சமயங்களைக் காப்பாற்ற வெளிவந்திருக்கும் வீரர்கள், சுயமரியாதை இயக்கம் இந்து மதத்தைக் கெடுக்கின்றது. வைணவ மதத்தை வைகின்றது, சைவ சமயத்தை ஒழிக்கின்றது என்று ஊளையிட்டு கொண்டிருக்கின்றவர்களே இம்மாதிரி சீர்திருத்தத்தைப் பற்றியாவது கடுகளவு கவலையாவது கொள்ளுகின்றார்களா என்பதைப் பொது ஜனங்கள் யோசித்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்ளுகின்றோம்.
அன்றியும் மத சமயக்காரர்கள் என்பவர்கள் சம்பந்தன் சமணர்களைக் கழுவேற்றினது பொய்யா மெய்யா? முதலை தான் உண்ட பாலகனை 14 வருஷம் வரை வயிற்றில் வளர்த்து வெளியில் கக்கினதை ஒப்புக் கொள்ளுவாயா? மாட்டாயா  ராமன் கடவுளா மனிதனா? ராவணன் யோக்கியனா? ராமன் யோக் கியனா? சிவன் பெரியவனா, விஷ்ணு பெரியவனா? விஷ்ணுவுக்கு வடகலை நாமமா, தென்கலை நாமமா? சூரியனுடைய ரதத்திற்கு எட்டு குதிரையா? பதினாறு குதிரையா? விதி பெரியதா மதி பெரியதா? இதுபோன்ற விசயங் களில் மதபக்தியையும் அறிவு சக்தியையும் காண்பித்துக் கொண்டு சமயத் தொண்டையும், தெய்வத் தொண் டையும் செய்துகொண்டும், இம்மாதிரியான விஷயங்களிலெல்லாம் பார்ப்பனர்கள் சொன்னதை தெய்வவாக்கு என்பதாகவும், அதை மறுத்தால் தங்களுக்கு எந்த வித யோக்கியதையும் இல்லாமல் போய்விடும் என்று பயந்து கொண்டும் பாமர மக்களை மிருகங் களாக்கி விடுகின்றார்கள். ஆதலால் இம்மாதிரி மதமும் சமயமும் நமக்கு எதற்காக வேண்டும்? இவை மக்களுக்கு நன்மையளிக்கும் சமயமாகுமா? என்பதாக கேட்க ஆரம்பித்தால் அதை நாஸ்திகம் என்று சொல்லி விரட்டியடிக்கப் பார்க்கின்றார்களேயொழிய மனிதத் தன்மை அறிவுத் தன்மை என்பதை ஒரு சிறிதும் காட்டுவதே கிடையாது.
தவிர திரு. சத்தியமூர்த்தி, பால்ய விதவைகளின் கொடுமையையும் சிறு குழந்தைகள் பிள்ளை பெற்று தாயாகி விடுவதால் வரும் கெடுதியையும் நான் அறிவேன் என்று கொடுமைகளையும் கஷ்டங்களையும் ஒப்புக்கொள்ளு கின்றார்.
ஆனால் கூடவே அதன் கீழ் 12 வயதுக்குள் பெண் களுக்குக் கல்யாணம் செய்யாவிட்டால் பாவம் வரும் என்று பராசர ஸ்மிருதியில் சொல்லி இருக்கின்றது என்கின்றார். கொடுமையையும் கெடுதியையும் நீக்குவது பாவமாகுமானால் அந்தப் பாவத்திற்குப் பயப்படவேண்டுமா? என்றுதான் கேட்கின்றோம்,.
அன்றியும் திரு. சத்தியமூர்த்தி ஆதாரம் காட்டும் பராசர ஸ்மிருதியின் விவாகப் பிரகரணத்தில், 8 வயது பெண்ணை விவாகம் செய்து கொடுத்தவன் சுவர்க்க லோகத்தையும், 9 வயதுப்பெண்ணை விவாகம் செய்து கொடுத்தவன் வைகுண் டத்தையும், 10 வயதுப் பெண்ணை விவாகம் செய்து கொடுத்தவன் பிரம்ம லோகத் தையும் அடைகிறான்; அதற்கு மேற்பட்டு பெண்ணை விவாகம் செய்து கொடுப்பவன் ரவுரவதி நரகத்தை அடைகிறான் என்று எழுதியிருக்கின்றது.
ஆனால், திரு. சத்தியமூர்த்தி 10 வயதுக்கு முன் கல்யாணம் செய்யும் வழக்கம் இப்போது நின்றுபோய்விட்டது என்று சொல்லுகின்றார். இந்தப்படி பார்த்தால் இப்போது பெண் பெற்றவர்கள் எல்லோரும் ரவுரவாதி நரகத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று தானே சொல்ல வேண்டும். எனவே இனி 16 வயதில் கல்யாணம் செய்பவர்களுக்குப் புதிதாகப் பாவம் ஏது என்று கேட்கின்றோம்.
தவிர திரு. சத்தியமூர்த்தி பயப்படுவதாக வேஷம் போடும் பராசர ஸ்மிருதியின் யோக்கியதையைக் கவனிப்போம்.
10 வயதுக்கு மேற்பட்ட பெண்ணுக்குக் கல்யாணம் செய்யாவிட்டால் ரவுரவாதி நரகத்தை அடைய வேண்டும் என்று சொல்லும் ஸ்மிருதியானது அதே ஸ்திரிகள் விஷயத்தில் சொல்லுவது என்ன என்றால், ஸ்திரிகள் பூமிக்குச் சமமானவர்கள். அவர்கள் குற்றம் செய்தால் தூக்ஷிக்கக் கூடாது. அவர்கள் என்ன தவறுதல் செய்தாலும் அவர்களை விலக்கிவிடக் கூடாது. சண்டாளன் வசித்த பூமியை எப்படிச் சில சுத்திகள் செய்து அதில் நாம் வசிக்கின்றோமோ, அதுபோல் ஸ்திரிகள் சண்டாள சம்பந்தம் வைத்துக் கொண்டாலும் அவர்களைச் சுத்தி பிராயச்சித்தம் செய்து ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று சொல்லியிருக்கின்றது. அந்த பிராயச்சித்தம் என்னவென்று பார்ப்போமானால் அதாவது ஒரு பிராமண ஸ்திரீ தன் மனதறிந்து ஒரு சண்டாளனுடன் சம்பந்தம் வைத்துக் கொண்டால் சாந்திராயண கிருச்சிரம் செய்துவிட்டால் சுத்தியாகிறாள் என்று சொல்லியிருக் கின்றது. இது பராசர ஸ்மிருதி பிராயச்சித்த காண்டம் 7வது அத்தியாயம் 23வது சுலோகம்.
சாந்திராயண கிருச்சிரம் என்பது கிருஷ்ண பட்சம் முதல் அமாவாசை வரை யில் தினம் ஒரு பிடிசாதமாகக் குறைத்துக் கொண்டு வந்து ஒரு நாள் பட்டினி விரதமிருந்து, மறுபடியும் ஒவ்வொரு பிடி விருத்தி செய்து சாப்பிட வேண்டியது இது 7ஆவது காண்டம் 2ஆவது சுலோகம்.
ஒரு பிராமண ஸ்திரீ பாவ சீலர்களான சூத்தி ரர்களால் அனுபவிக்கப்பட்டால் அவள் பிரஜாபத்திய கிருச்சிரம் செய்வதாலும் ருது ஆவதாலும் சுத்தி அடைகின்றாள் என்று சொல்லுகின்றது (இது மேல்படி காண்டம் மேல்படி அத்தியாயம் 24ஆவது சுலோகம்)
பிரஜாபத்திய கிருச்சிரம் என்பது 3 நாள் காலையிலும் 3 நாள் மாலையிலும் புசித்து 3 நாள் யாசிக்காமல் வந்ததைப் புசித்து 3 நாள் உபவாசமிருத்தல் (இது பராசர ஸ்மிருதி 7ஆவது காண்டத்தில் 9ஆவது அத்தியாத்தில் சொல்லப்படுகின்றது.)
இதுவும் செய்வதற்குக் கஷ்டமாயிருக்கு மானால் 12 பிராமணர்களுக்கு சாப்பாடு போட்டால் போதும் (இதுவும் மேற்படி அத்தியாயம்.)
இன்னும் இதுபோலவே மகாபாதகம் என்று சொல்லும் படியான குருபத்தினியைப் புணர்ந்தவன் ஒரு பசுவையும் எருதையும் பிராமணனுக்குக் கொடுத்தால் சுத்தனாகிறான் (மேற்படி காண்டம் அத்தி யாயம் சுலோகம் 13)
இன்னும் இதைவிட மகாபாதகமான அனேக காரியங்களுக்கும் ஒரு வேளை இரண்டு வேளை பட்டினி கிடப்பதும் பிரா மணனுக்குக் கொடுப்பதுமே பிராயச்சித்தமாய்ச் சொல்லப்படுகின்றது. அதிலும் பிராமணன் சூத்திரன் என்பதாகப் பிரித்து அதற்குத் தகுந்தபடி பிராயச்சித்தம் சொல்லப்பட்டிருக்கின்றது. அதாவது ஒரு வேதம் ஓதின ஒரு பிராமணன் ஒரு பசுவைப் புணர்ந்தால் ஒரு பசுவைப் பிரா மணனுக்குக் கொடுத்தால் சுத்தனாகிறான். இதே காரியத்தை ஒரு சூத்திரன் செய்தால் 4 பசுவையும், 4 எருதையும் பிராமண னுக்குக் கொடுத்தால் சுத்தனாகிறான் என்று சொல்லுகிறது.
(மேற்படி அத்தியாம் 14ஆவது சுலோகம்)
எனவே இப்பேர்ப்பட்ட காரியங்களுக் கெல்லாம் எவ்வளவு சுலபமாக பிராயச் சித்தம் சொல்லி இருக்கும்போது ஒரு பெண்ணை 12 வயது ஆன பிறகு பிறந்து கல்யாணம் செய்வதால் ஏற்படும் பாவத் திற்கு மிகவும் சுலபமான பிராயசித்தம் தானே இருக்கக்கூடும். ஆதலால் பராசர ஸ்மிருதியை கடவுள் வாக்கு என்றே நம்புகின்றவர்களுக்குக் கூட குழந்தை விவாகத் தடுப்பு மசோதாவில் பிரமாதமான கெடுதி ஒன்றும் வந்துவிடாது என்றே சொல்லுவோம். அதிகமான தண்டனை விதித்திருந்தாலும் அது பாலும் பழமும் மாத்திரம் சாப்பிட்டுக் கொண்டு ஒரு வேளை பட்டினி கிடக்கவேண்டும் என்று தான் இருக்கக் கூடும். ஆதலால் உண்மையானதும் அவசியமானதுமான சீர் திருத்தங்களை விரும்புகின்றவர்கள் மதம், சமயம், சாஸ்திரம், சாமி என்கின்ற பூச்சாண்டிகளுக்கு ஒரு சிறிதும் பயப்படக் கூடாது என்பதற்காகவே இதை எழுதுகிறோம்.
- குடிஅரசு - தலையங்கம் - 21.10.1928
-விடுதலை,2.4.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக