வியாழன், 22 பிப்ரவரி, 2024

வேதத்தின் தரம் எத்தகையது ? - கவிஞர் கலி.பூங்குன்றன்

 

பதிலடிப் பக்கம் – ‘விஜயபாரதமே!’ பதில் சொல்!

விடுதலை நாளேடு

கவிஞர் கலி.பூங்குன்றன்

(2.2.2024 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ்.
வார இதழான ‘விஜயபாரத’த்தின் பதில்களுக்குப் பதிலடி இங்கே!)
கேள்வி: நூல்களின் தேவை என்ன?
பதில்: சாஸ்திரத்தின் சாரத்தை அறிய வேண்டும். அதன்பிறகு நூல்களின் அவசியம் என்ன? சாரத்தை கிரகித்த பிறகு இறையனுபூதிக்காக ஆழ்ந்து மூழ்க வேண்டும். இறைவனே உண்மை – உலகம் உண்மை யல்ல என்ற வேதாந்தத்தின் சாரத்தை தேவி எனக்கு அறிய செய்தாள் – ராமகிருஷ்ண பரமஹம்சர்.

நமது பதிலடி: இறைவனே உண்மை – உலகம் உண்மையல்லவாம்! உண்மையற்ற உலகில் ஏன் வாழ்ந்து தொலைக்கிறார்களாம் – ராமன் கோயில் கட்டுகிறார்களாம். வேதத்தின் சாரத்தைப் பற்றி வேறு பேசுகிறது ‘விஜயபாரதம்’.
வேதத்தின் தரம் எத்தகையது என்பதற்கு இதோ ஒன்றிரண்டு இங்கே:
“தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ரா தீனம் தெய்வதம்
தன்மந்திரம் பிரம்மண உதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்”
– ரிக்வேதம் 62ஆவது பிரிவு, 10ஆம் சுலோகம்
இதன் பொருள்:
உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது, கடவுள் மந்தி ரங்களுக்குக் கட்டுப்பட்டவர். மந்திரங்கள் பிராம்மணர் களுக்குக் கட்டுப்பட்டவை – பிராம்மணர்களே நமது கடவுள்.
– இந்த வேதத்தைத்தான் எல்லோரும் ஏற்க வேண்டுமாம். ஆர்.எஸ்.எஸின் விஜயபாரதத்தின் விபரீதப் புத்தியைப் பார்த்தீர்களா?
“இந்திரா! உன்னை இந்த அதிகாலைப் படைய லுக்குக் கூப்பிடுகிறோம். சோமரசம் பிழியப்பட்டிருக் கிறது. தாகமுள்ள மானைப் போல் குடி.
எங்கள் ஆசைகளை குதிரைகளாலும், பசுக்களா லும் நிறைவேற்று” (ரிக்வேதம், 163-165).
“இந்திரனே! பழைமையாகவே தொன்றுதொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும், முதலில் உள்ளவர்களைக் கிழித்தெறியவும், நடுவில் உள்ளவர்களை நசுக்கிக் கொல்லவும்.
எவ்வளவு நாட்கள்தான் நீ மனதிட்பம் இல்லாதவன் போல், இருப்பாய்? வேள்வியை வெறுக்கின்ற, தெய் வத்தை வணங்காத தாசர்களை, உனது எரியும் ஈட்டி களைச் செலுத்திக் கொல்லவும்.”
– ரிக்வேதம், 2710
விஷ்ணு இந்தப் பூமியை மூன்று அடிகளால் அளந் தான், ஆக்ரமித்தான் அந்தப் பூமியை எங்களுக்குக் கொடுத்தான். அவன் எங்கள் தலைவனாக இருக் கட்டும்.
– ரிக்வேதம், 5926
அவன் ஆரியர்கள் வசிப்பதற்கான, பூமியை – மூன்று உலகங்களையும் – அளந்தான் – ஆக்ரமித்தான், மாட்டுத் தலையால் தன் தலையை மறைத்துக் கொண்டு சண்டை செய்த, தாசனைக் கொன்றான்
– ரிக்வேதம், 5927
யார் இந்த ஆரியர்கள் – தாசர்கள்?
திராவிடர்கள் தங்கள் மீது படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும் போர் புரிய வேண்டியிருந்தது. இத்தகைய விஷயம் ரிக் வேதத்திலேயே அனேக சுலோகங்களாக இருக்கின்றன”– டாக்டர் ரோமேஷ சந்திர மஜும்தார் எம்.ஏ. (‘பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்’, பக்.22)
ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடையத் தளங்களில் திரா விடர்கள் – தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும் ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.
இது ஆரியக்கவிகள் திராவிடர் மீது கெண்டிருந்த வெறுப்பைக் காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.
– சி.எஸ்.சீனிவாசாச்சாரி எம்.ஏ.,
எம்எஸ்.இராமசாமி அய்யங்கார் எம்.ஏ.
(“இந்திய சரித்திரம்”, பக். 16,17)
(1) ஆரியர் – திராவிடர் என்பது வெள்ளைக்காரன் இட்டுக் கட்டியதல்ல – வேதங்களிலேயே இடம் பெற்றிருக்கிறது. வேதங்களில் கூறப்படும் தாசர்கள், தஸ்யூக்கள் என்பவர்கள் எல்லாம் திராவிடர்களே என்பதும், இந்திரன் ஆரியர்களின் போர்த் தலைவன் என்பதும், மொடாக்குடிகாரன் என்பதும் ரிக் வேதத்தி லேயே கூறப்பட்டுள்ளது என்று ஆதாரங்கள் கூறு கின்றனவே. வேதத்தின் சாரம் பற்றி ஆர்.எஸ்.எஸ். வார இதழ் ‘விஜயபாரதம்’ பதில் கூறி இருக்கிறதே – இந்தப் பதிலடிக்கு முன் அவை எல்லாம் தாக்குப் பிடிக்க முடியுமா?

– – – – –


கேள்வி: இறைவன் மீது நாம் செலுத்தும் பக்திக்கு என்ன பலன் கிடைக்கும்?
பதில்: இறைவன் எல்லா உயிரினங்களிலும் இருக் கிறார் என்பது உண்மைதான். ஆனால் ஒவ்வொரு வரும் தத்தம் சமஸ்காரம், செயல்களுக்கு ஏற்ப வினைப் பயனை அனுபவிக்கிறார்கள். சூரியன் ஒன்றுதான். ஆனால் அதன் ஒளியின் பிரதிபலன்கள் இடம், பொருளின் தன்மைக்கு ஏற்ப வேறுபடுகின்றன.
நமது பதிலடி: இறைவன் எல்லா உயிர்களிலும் இருக்கிறார் என்று சொல்லிவிட்டு, ஒவ்வொருவரும் தத்தம் சமஸ்காரம் செயல்களுக்கு ஏற்ப வினைப் பயனை அனுபவிக்கிறார்களாம்!
எல்லோரையும் இறைவன் படைத்தான், எல்லா உயிர்களிலும் அவன் இருக்கிறான் என்ற சொல்லி விட்டு, வினைப் பயன் தனித்தனி என்பது எங்கிருந்து குதித்தது? அவனின்றி தான் எதுவும் அசையாதே – அப்படி இருக்கும் போது வினைப்பயன்களுக்குப் பொறுப்பும் அந்த இறைவன் தானே!

– – – – – –

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

பிறப்பால் பிராமணன் என்பதை மறுக்கும் பூணூல் சடங்கு!

ஆய்வு : 

2022 ஆகஸ்ட் 01-15 2022 கட்டுரைகள்

சிகரம்

ஆரியர் உருவாக்கிய பொருளற்ற மூட விழாக்களில் பூணூல் விழாவும் குறிப்பிடத்தக்க வொன்று. பார்ப்பான் வாழ்வின் நான்கு கட்டங்களில் முதன்மையான பிரமச் சரியத்திற்குத் தொடர்புடையது இது.
திருமணமாகாத மாணவர் பருவத்தில் பார்ப்பன இளைஞன் வேதங்களை முழுமை-யாகக் கற்றுக் கொள்ளுவதற்கெனத் தன் குருவுடனேயே தங்கி வாழக் கடமைப்பட்டவன்.
அவன் கருவான காலத்திலிருந்து ஆசானிடம் கற்று முடித்துத் திருமணம் பண்ணிக் கொள்ளும் வரையிலான பிரமச்சரியக் கட்டத்தில், அவனின் பெற்றோரிடமிருந்து அவன் மீது படியும் பாவக் கறையினைக் கழுவிக் கொள்ளும் வண்ணம் கீழ்க்கண்ட 12 தூய்மைப்படுத்தும் சடங்குகள் வற்புறுத்தப்-படுகின்றன.
கர்ப்பதானம், புண்சவனம், சீமந்தோநயனம், ஜாதகர்மம், நாமகரணம், நிஷ்க்கரணம், அன்னப்ராசனம், சுதகர்மம், உபநயனம், சமாவர்த்தனம், கேசந்தம், விவாஹம்.
இவற்றுள் சட்டக் கட்டாயமாகக் கருதப்-படும் முகாமையான இரண்டு சடங்குகள் சுதகர்மமும் உபநயனமும் ஆகும். இவ்விரண்டிலும் ஒரு சிறு குடுமியை விட்டு வைத்து, தலையில் நடுவட்ட மழிப்பு நிகழ்த்தும் சுதகர்மத்திற்கும் மேலாக உபநயனம் என்னும் பூணூல் அணியும் சடங்கு மதிக்கப்படுகிறது. பூணூல் அணியும் முன்பு வரை அவன் சூத்திரத் தன்மையுடன் இருப்பதாயும், அணிந்தவுடன் அவன் இரண்டாம் முறையாகப் புதிய பிறப்பு எடுப்பதாயும் தத்துவம் கற்பிக்கப்படுகின்றது. இதை அச்சிறுவனின் எட்டாம் அகவையிலேயே நடத்திவிடலாம்.
பிராமணன் பிறப்பாலா? பூணூல் சடங்காலா?
பருத்தி நூல்கள் மூன்றினை ஒன்றாகச் சுருள் செய்து மாலை வடிவமாக்கிப் பார்ப்பனச் சிறுவனின் இடது தோளிலிருந்து வலது இடுப்பு வரையிலும் குறுக்கே அணிவிக்கப்படும் முப்புரி நூலுக்கு யக்ஞோப விதா எனப் பெயர்.
இச்சடங்கின் தொடக்கத்தில் பார்ப்பனச் சிறுவன் சூரியனுக்கு எதிரே நின்று மும்முறை தீ வலம் வரவேண்டும். பிறகு குரு காயத்ரி மந்திரத்தைப் பத்து முறை ஓதி யக்ஞோபவிதா முப்புரிக்குத் தெய்வத்தன்மை ஏற்றிவிட்டு, அதனைப் பையனை மாட்டிக் கொள்ளச் செய்வார். பூணூலணிந்த புதிய பிறவி, தனக்கும் தன் ஆசானுக்கும் தேவையான உணவுக்கென்று விழாவில் வந்து குழுமியுள்ள கூட்டத்தினரிடம் பிச்சை கேட்டுக் கையேந்துவான்.
பின்னர் சாவித்ரி ஜெபம் பண்ணுமாறு குரு அவனைப் பயிற்றுவித்து, வேதமோதி சமயச் சடங்குகளை நிறைவேற்றும் தகுதியை அவனுக்கு உண்டாக்குவார். இறுதியாக அவனுடைய இடையில் மூஞ்சைப் புல்லால் திரிக்கப்பட்ட அரைஞாண் கட்டப்பட்டு பூணூலணியும் உபநயனச் சடங்கு முடிக்கப் பெறுகிறது.
அதன்பின் அவன் பிராமணன் ஆகிறான். அப்படியென்றால் பிறப்பால்தான் பிராமணன் உருவாகிறான் என்பது பூணூல் சடங்கின் மூலம் மறுக்கப்படுகிறது.
பூணூல் சடங்கால்தான் பிராமணன் உருவாகிறான்; பிறப்பால் எல்லோரும் சூத்திரர்தான் என்றால், பூணூல் சடங்கு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் என்பது மோசடி அல்லவா? தப்பு அல்லவா? அப்படியாயின் பூணூல் சடங்கு செய்யும் எவனும் பிராமணன் ஆகலாம் என்பதுதானே சரி?
க்ஷத்திரியரும், வைசியரும் தங்களை முப்புரி நூல் அணியும் சடங்கிற்கு உட்படுத்திக் கொண்டு இரு பிறப்பாளர் பட்டியலில் இணைந்து கொண்டாலும், இன்று நடை-முறையில் இவ்விரு வர்ணத்தாரும் சூத்திரராகவே கருதப்படுவதேன்?
இத்தகைய புல்லிய பூணூலைத்தான் ஆவணி அவிட்டத்தின்போது புதுப்பித்துக் கொள்ளு கின்றனர். ஒரு சிலரால் மட்டுமே மேற்-கொள்ளப்படும் இந்த நாணங்கெட்ட சடங்கிற்காக நாட்டிலுள்ள பல்லாயிரக் கணக்கான பள்ளிகளும், அரசுப் பணிமனை-களும் மூடிக் கிடக்க வேண்டுமாம். எத்துணை விரயம்!.


பசு வதையும் வேதப் பண்பாடும் – நேயன் (எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை) (117)


பசு வதையும் வேதப் பண்பாடும் – நேயன்

வேத காலத்தில், பசு வதை’’ இருந்ததா?

வேதப் பண்பாட்டில், பசு புனித மிருகமாகக் கருதப்பட்டதா?
பசு இறைச்சி உட்கொள்ளப்பட்டதா?

இவ்விஷயங்கள், இன்று பெரும் சர்ச்சை-யாகவே மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, இடதுசாரி வரலாற்றாசிரியர்கள், வேத காலத்தில் பசு உண்ணப்பட்டது என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இது குறித்து அவர்கள் அளிக்கும் ஆதாரங்கள், இரண்டு வகையானவை. ஒன்று, ‘கோகன’ எனும் பதத்தை அடிப்படையாகக் கொண்டது. இதனை 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தாராநாத் என்பவர், ‘பசுவைக் கொல்பவர்’ என மொழிபெயர்த்தார். அதாவது, வீட்டுக்கு வரும் மதிப்புக்குரிய விருந்தினர்களுக்குப் பசு மாமிசம் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார். இதுவும், மாட்டு மாமிசம் குறித்துப் பேசும் வேதச் செய்யுள்களும், இடதுசாரிகளின் வாதங்களுக்கு ஆதாரமாக முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், பாரம்பரியமான மொழிபெயர்ப்பில், இதனை ‘பசுவைத் தானமாகப் பெறும் தகுதி உடையவர்’ என்றே பாணினி மொழி பெயர்க்கிறார். அவ்வாறு தகுதி உடையவருக்கு, கோதானம் செய்யும் வழக்கம், பாரதப் பண்பாடு முழுமைக்கும் பரவியிருந்தது என்பதை நாம் பல ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. முக்கியமாக சென்ற நூற்றாண்டில், தமிழகத்தின் முக்கியச் சமுதாயத் தலைவர்களில் ஒருவர், ‘தாத்தா’ எனஅன்புடன் அழைக்கப்பட்ட ரெட்டைமலை ஸ்ரீனிவாசன் ஆவார். பாபாசாஹிப் அம்பேத்கருடன், லண்டன் வட்டமேசை மாநாட்டில், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெருமை உடையவர்.
அவர் கூறுகிறார்-
“நெட்டாலில் வருளமென்னும் நகரில், முருகன் என்பவர் ஒரு பெரிய பயிர்க் குடியானவராகவும் தனவந்தராகவும் இருந்தார். பிராமணர் யோக்கியம் என்னிடந்தான் அவர் கண்டதாக, என்னை வற்புறுத்தி கோதானம் பெறச் செய்து என் ஆசீர்வாதம் கோரினார்.’’
ஆக இப்பழக்கம், பெருமையும் ஒழுக்கமும் கொண்ட பெரியவர்கள் தங்கள் இல்லங்களுக்கு வருகை தரும்போது, பசுவைத் தானமாக அளிப்பதே அல்லாமல், பசுவைக் கொன்று கறி சமைப்பது அல்ல. இடதுசாரிகள் கொடுக்கும் மற்ற ஆதாரங்களிலும், எருமை அல்லது காளையே கொல்லப்பட்டுள்ளது இருக்கிறதே தவிர, பசு இல்லை. எனவே, மாட்டிறைச்சி சமைத்து உண்ணப்பட்டிருந்தாலும்கூட, பசு கொல்லப்பட்டதற்கு ஆதாரங்கள் எனக் கொடுக்கப்படுபவை, நம்பகத்தன்மை அற்றதாகவே உள்ளன.

மாறாக, வெளிப்படையாகவே பசு கொல்லப்படத்தகாதது என்றே வேதம் கூறுகிறது. கிருஷ்ண யஜுர் வேதத்தில், தைத்திரீய சம்ஹிதை முதல் காண்டம், முதல் பிரச்னம், முதல் அனுவாகத்தில் ஓதப்படும் மந்திரங்களின் கருத்து, பசுக்களின் பண்பாட்டு விவசாய முக்கியத்துவத்தை விளங்குகிறது.

“கொல்லத் தகாதவையான பசுக்களே, நீங்கள் நன்றாகப் புற்களை மேய்ந்து, மடி நிறையப் பால் பெருக்கிக்கொண்டு, தேவபாகத்தை (இந்திரனுக்கு அளிக்கப்பட வேண்டியதாகிய தயிர்) வளர்க்க வேண்டும். அதிகமான ரசமுள்ளதாகவும், பால் நிறைந்தனவாகவும், கன்றுகள் நிறைந்ததாகவும், கிருமிகள் நோய்கள் இல்லாமலும் நீங்கள் இருக்கவேண்டும்.’’

ரிக் வேதத்துக்கு நிருக்தம் எழுதிய யாஸ்கர், பசுவின் ஒன்பது வேதப் பெயர்களை வரிசைப்-படுத்துகிறார். அவற்றுள் முலாவது பெயர், அஹ்ன்யா என்பதாகும். அதாவது, கொல்லத்தகாதது. இரண்டாவது உஸ்ரா _- பால், தயிர் ஆகிய பொருள்களின் விளைவிடம். உஸ்ரியா-_ இன்பத்தை அளிப்பது. மேலும், யாஸ்கர், மஹீ, அதிதி, இளா என அனைத்து வேத பெண் தெய்வங்களின் பெயரையும் பசுவின் பெயராகவே குறிப்பிடுகிறார். வேதப் பண்பாட்டின் தொடக்க மதிப்பீடுகளில் ஒன்றாகவே பசுவதைத் தடையைக் கூறலாம். பசுவை ஏன் கொல்லக்கூடாது என்பதற்கான காரணத்தை, ஒரு வேத மந்திரம் அளிக்கிறது.

“இந்தப் பசு, ருத்திரர்களுக்கு எல்லாம் தாய். வஸுக்களின் பெண். ஆதித்தியர்களின் தங்கை. அமுதத்தின் இருப்பிடம். அறிவுடையவனுக்குச் சொல்கிறேன், குற்றமற்றதும் பெருந்தன்மை கொண்டதுமான பசுவைக் கொல்லாதீர்கள்.’’
(ரிக், 8.101.15)

தைத்ரீய சம்ஹிதையில், பசுக்களைப் பாதுகாக்கும் பணி தனக்கே இருக்க வேண்டுமென ருத்ரன் கருதுவதாகக் கூறப்படுகிறது. ருத்ரனின் பெயர், ‘அஹ்ன்யானாம்பதி’ என்பதாகும். பசு, வேளாண்மைக்கு மையமாக மட்டுமல்ல, ஒரு பிரபஞ்சத் தாயாகவும் கருதப்பட்டது என்பதை இது காட்டுகிறது. அனைத்து தெய்வங்களின் உறைவிடமாகக் காட்டப்படும் பசுவின் சித்திரம்-_ இன்று நாம் காலண்டரில் காணும் கோமாதா(காமதேனு) வேத இலக்கியத்தில் வேர் கொண்ட ஒன்றுதான்.

அனைத்து உயிர்களின் இறைத் தன்மையை மதிக்கும் ஒரு குறியீடாகவும், வேதப் பண்பாட்டில் இருந்து பசு வழிபாடு பரிணமித்து நமக்கு வந்துள்ளது. மார்வின் ஹாரிஸ் போன்ற மார்க்சிய மானுடவியலாளர்கள்கூட, ஹிந்துக்களின் பசு வணக்கம், எத்தகைய முக்கிய சூழலியல்_ பொருளாதாரப் பொருள் கொண்ட ஒன்றாக அமைந்-துள்ளது எனக் கூறியுள்ளனர்.’’ என்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.
இவர் கூறியவை சரியா என்று இனி பார்ப்போம்.

முதலில் ஆரியர்கள் பசு இறைச்சி உண்டது பற்றி அம்பேத்கர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
“ரிக் வேத ஆரியர்கள் உணவுக்காக பசுக்களைக் கொன்று மாட்டின் இறைச்சியை ஏராளமாக உண்டனர் என்பது ரிக் வேதத்திலிருந்தே மிகத் தெளிவாகத் தெரிகிறது. ரிக் வேதத்தில் ((X. 86.14) இந்திரன் சொல்கிறான்: அவர்கள் ஒருவருக்காக 15க்கு மேல் 20 காளைகளை சமைக்கிறார்கள். ரிக் வேதம் ((X. 91.14), “அக்கினிக்காக குதிரைகள், காளைகள், எருதுகள், மலட்டுப் பசுக்கள் மற்றும் ஆட்டுக்கடாக்கள் பலியிடப்பட்டன. ரிக் வேதம் ((X. 72.6)லிருந்து, பசுக்கள் வாள் அல்லது கோடரியைக் கொண்டு கொல்லப்பட்டன என்பது அறியப்படுகின்றது.

‘ஆபஸ்தம்ப தர்மசூத்திரம்’ நூலிலுள்ள கூற்றுக்கு எதிராக கீழ்க்கண்ட கருத்துகள் கவனிக்கப்பட வேண்டும்.
முதலாவதாக, அதே சூத்திரத்தில் 1.5, 14, 29இல் அடங்கியுள்ள முரணான ஒரு கூற்று சொல்கிறது:

“பசுவும் காளையும் புனிதமானவை; ஆகவே அவை உட்கொள்ளப்பட வேண்டும்.”
மதுபர்க்கம் இறைச்சி இல்லாமல் இருக்கக் கூடாது; பசு விடப்பட்டு விட்டால் வெள்ளாட்டு இறைச்சி அல்லது பாலில் சமைத்த சோறு (பாயசம்) படைக்கப்படலாம் என வேதம் அறிவிக்கின்றது என்று மத்வ (சாஸ்திரம்) 1.9.22 கூறுகிறது. இறைச்சி இல்லாமல் மதுபர்க்கம் இருக்கக் கூடாது; எனவே, பசு விடப்பட்டு விட்டால் வெள்ளாடு அல்லது ஆட்டுக்கடா அல்லது ஏதாவது (மான் முதலிய) காட்டு விலங்கின் இறைச்சி படைக்கப்படலாம் என்று பிவீக்ஷீ.ரீக்ஷீ. (1.2,51-_54) கூறுகிறது. ஒருவனால் இறைச்சியைப் படைக்க இயலாத நிலையில், அரைக்கப்பட்ட தானியங்களைச் சமைக்கலாம்.

ஆக, மதுபர்க்கத்தின் முக்கிய பாகமாக இறைச்சி, அதுவும் குறிப்பாக பசுவின் இறைச்சி உள்ளது.

விருந்தினர்களுக்காக பசுவைக் கொல்லுவது மிகவும் அதிகரித்து விட்டதால், விருந்தினர்கள் ‘கோக்னா’, அதாவது ’பசுவைக் கொல்பவர்’ என அழைக்கப்படும் வழக்கம் ஏற்பட்டது.

இந்துக்கள் பசுக்களைக் கொன்று அதன் இறைச்சியை உண்டனர் என்பதை, வேதங்கள் மற்றும் பிராமணர்களுக்கு மிகவும் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்த புத்த மத சூத்திரங்களில் பல இடங்களில் காணப்படும் யாகங்களைக் குறித்த வர்ணனைகள் மிகவும் நன்றாக மெய்ப்படுத்துகின்றன.

பசுக்களும் பிற விலங்குகளும் பிரம்மாண்ட-மான அளவில் ஏராளமாக கொல்லப்பட்டன. ஒவ்வொரு சமயத்திலும் மதத்தின் பெயரால் பிராமணர்கள் எத்தனை பசுக்களைக் கொன்றனர் என்பதைக் கூறுவது இயலாத ஒன்று. இந்த நிகழ்வுகளைக் குறிப்பிடும் புத்த மத நூல்களில் கிடைக்கின்ற மேற்கோள்களைக் கொண்டு ஓரளவுக்கு இந்தப் படுகொலைகளைக் குறித்து அறிந்துகொள்ள முடியும். கூடதண்ட சுத்தாவில் உள்ள, விலங்குகளைப் பலியிடுவது கூடாது என்று கூடதண்ட பிராமணனுக்கு, புத்தர் போதித்த அறிவுரையை ஒரு நல்ல மேற்கோளாகச் சுட்டிக்காட்ட முடியும்.’’

(தொடரும்)
ஆதாரம்: The Untouchables- Dr.B.R. Ambedkar)


வள்ளலார் சனாதனவாதியா? வர்ணாஸ்ரமத்திற்கு வெடிவைத்த வள்ளலார்!


விடுதலை நாளேடு,
Published June 23, 2023

“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்!” என்றவர் வள்ளலார்

“பசி தீர்த்த வள்ளலார்!”

இப்படித்தான் வள்ளலார் நமக்கு சொல்லிக்கொடுக்கப் பட்டிருக்கிறார். வள்ளலாருக்கு மற்றொரு முகமும் உண்டு. வள்ளலார் என்று அழைக்கப்பட்ட இராமலிங்க அடிகளார் பிறந்தது 1823ம் ஆண்டு. தந்தை பெரியார் பிறப்பதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்னரே பிறந்து மறைந்தவர் வள்ளலார். தில்லை நடராஜரின் பக்தராக இருந்து ஏராள மான பாடல்களை சிறு வயதிலேயே மனமுருகி பாடியவர் வள்ளலார். எந்த கடவுளுக்காக உருகி உருகிப் பாடினாரோ அவன் சன்னதியிலேயே பார்ப்பனர்களின் தீண்டாமை கொடுமைக்கு ஆளானவர் வள்ளலார். நடராஜன் சன்னதி யில் தன்னை அனுமதிக்க தில்லை தீட்சதர்கள் மறுத்தபோது வெகுண்டெழுந்தார் வள்ளலார். பார்ப்பன ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த அந்த நேரத்தில் தில்லை நடராஜ சன்னதிக்கு மாற்றாக தாமே ஒரு தலத்தை உருவாக்கி அங்கே நடராஜரை தருவிக்கப்போவதாக வள்ளலார் அறிவித்திருக்கிறார். இதை பாலசுந்தர நாயக்கர் தான் எழுதிய இராமலிங்க பிள்ளை பாடலில் குறிப்பிடுகிறார்.

1865ல் சமரச சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்த வள்ளலார்  வடலூரில் சத்திய தரும சாலையை 1867ல் உருவாக்கினார். பின்னர் 1872ல் சத்திய ஞானசபையை தோற்றுவித்தார். 

வள்ளலார் தனது முதல் பாமாலையிலேயே 

“பெருநெறி பிடித் தொழுக வேண்டும்!

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!!”

என்று எழுதினார் . 

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

கள்ளப்புலனனைந்தும் காடாமணி விளக்கு”

என்று கோயில் விக்ரகங்களை வழிபடுவதை மறுத்து வைதீகத்திற்கு எதிராக பார்ப்பனர்களுக்கு எதிராக கருத்து களை வெளிப்படுத்திய திருமூலரின் வழிவந்தவர் வள்ள லார். மாறாக எந்த சைவ மடாதிபதிகளிடமோ சங்கராச் சாரிகளிடமோ தீட்சதை பெற்றவர் இல்லை. 

இளமைப் பருவத்தில் சைவ மரபில் ஊறித் திளைத்தவர் பின்னாளில் அதை அறவே நம்பவேண்டாம் என்றார். 1873ம் ஆண்டு சித்தி வளாகத்தில் சன்மார்க்க கொடியை ஏற்றிவைத்து பேசிய வள்ளலார், தான் முதலில் சைவ சமயத்தின் மீது கொண்டிருந்த லட்சியத்திற்கு  அளவே இல்லை என்றும் அதற்கு தான் பாடிய அருட்பாக்களே சாட்சி என்றும் அந்த லட்சியம் இப்போது எப்படிப் போய் விட்டது பார்த்தீர்களா? என்றும் கேட்கிறார். மேலும் அவர் அப்படிப்பட்ட அழுத்தம் அப்போது தனக்கு இருந்ததென் றால் அதற்கு காரணம் அந்த காலகட்டத்தில் தனக்கிருந்த அற்ப அறிவுதான் என்று தன்னையே குறைபட்டுக் கொள்கிறார். 

தில்லை நடராஜர் சன்னதியில் தீட்சதர்களால் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் அவரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. ஜாதி மத சம்பிரதாய சாஸ்திரங்கள் அடியோடு ஒழிய வேண்டும் என்றார்.

“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே

சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணே நீர் அமிதல் அழகலவே!” என்றும்

“ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்

உற்ற கற்பனைகளும் தவிர்ந்தேன்” என்றும்

“இச்சாதி சமய விகற்பங்களெலாம் தவிர்த்தே

எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்” என்றும் பாடியவர்

“பேருற்ற உலகில் உறு சமய மதநெறி எலாம்

பேய்ப்பிடிப்பு உற்ற பிச்சுப்பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது

உயிர்கள் பல பேதம் உற்று அங்கும் இங்கும்

போருற்று இறந்து வீணே போயினர்!” என்றும்

“மதத்திலே சமய வழக்கிலே மாயை

மருட்டிலே இருட்டிலே மறவாக்

கதத்திலே மனதை வைத்து வீண்பொழுது

கழிக்கின்றார்!” என்றும்

“எய்வகை சார் மதங்களிலே பொய்வகைச் சாத்திரங்கள்

எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று

கைவகையே கதறுகின்றீர்!” என்றும் 

“கூறுகின்ற சமயம் எல்லாம் மதங்கள் எல்லாம் பிடித்துக் கூவுகின்றார்;

பலன் ஒன்றும் கொண்டறியார்; வீணே நீறுகின்றார்; மண்ணாகி நாறுகின்றார்!”

என்றும் சமயகோட்பாடுகளையும், மதகோட்பாடுகளை யும் சாடுகிறார்.

“கலையுரைத்த கற்பனையே 

நிலையெனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கம் எலாம்

மண்மூடிப் போக!”

என புராணக்குப்பைகளை விமர்சித்த வள்ளலார் அதை உருவாக்கிய கூட்டத்தையும் தோலுரிக்கத் தவற வில்லை.

“கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக் 

கூட்டமும்  அக்கூட்டத்தே கூவுகின்ற கலையும்

கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல்கதியும்

காட்சிகளும் காட்சிதரும் கடவுளரும்

எல்லாம் பிள்ளை விளையாட்டு!”என்றார்.

ஜாதி, மதங்களை சாடிய வள்ளலார் அதோடு விட்டுவிட வில்லை. பிறப்பால் பிராமணன், சூத்திரன் என்றுரைத்த வருணாசிரமத்தை சனாதனதருமத்தை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்றார்.

“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே

மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ

இருட்சாதி தத்துவ சாத்திரக் குப்பை

இருவாய்ப் புன்செயல் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம

வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு

சாதியும் மதமும் சமயமும் பொய்யென

ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி!”

என்றார். பார்ப்பனர்களின் வேதம், ஆகமம், புராணம், இதிகாசங்கள் அனைத்தும் திட்டமிடப்பட்ட சூது என்று ஓங்கி அடித்தார் வள்ளலார். 

“வேதநெறி ஆகமத்தின் நெறி

புராணங்கள் விளிம்பு நெறி

இதிகாசம் விதித்த நெறி முழுவதும்

ஓதுகின்ற சூதணைத்தும் உளவணைத்தும் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணரவைத்தினையே!” 

“சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்

சாத்திரக் குப்பையும் தணந்தேன்!”

என்றார். அதனால் தான் பார்ப்பனீயம் அவரை விட்டுவைக்கவில்லை. 

சிதம்பரத்திற்கு அருகில் உள்ள மருதூர் கிராமத்தில் பிறந்தவர் வள்ள லார். சாதாரண எளிய வகுப்பில் பிறந்தவர். பார்ப்பனர்களின் எதிர்ப்பை மட்டுமின்றி அவர்களால் தூண்டிவிடப்பட்ட உயர் ஜாதி இந்துக்களின் எதிர்ப்பையும் சந்தித்தார். வள்ளலார் இயற்றிய அருட்பாவிற்கு எதிராக ஏராளமான கண்டன நூல்களும் இயற்றப்பட்டது. அவர் வாழ்ந்த காலத்திலேயே ஆறுமுக நாவலர், சண்முகம் பிள்ளை போன்றவர்கள் வள்ளலாருக்கு எதிராக செயல்பட்டனர். ‘திருவருட்பா தூஷண பரிகாரம்’ என்று எழுதினார் சண் முகம் பிள்ளை. வள்ளலாருக்கு எதிராக வழக்கு தொடுத்தவர் ஆறுமுக நாவலர். ‘வள்ளலாரின் அருட்பா, போலி அருட்பா’ என்றும் ‘மருட்பா’ என்றும் பல்வேறு வகைகளில் தூற்றப் பட்டது. வள்ளலார் மறைந்த பின்னரும் அவர் மீதான விமர்சனங்கள் நிற்கவில்லை. ‘இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம்’ என்று எழுதினார் கதிரைவேற்பிள்ளை.

திருக்குறளை தூக்கிப் பிடித்தவர் வள்ளலார். சமஸ்கிரு தத்தைவிட தமிழே உயர்ந்தது என வாதிட்டவர். சங்கராச் சாரியார் சமஸ்கிருதத்தை மாத்ரு பாஷா (தாய் மொழி) என்று சொன்ன நேரத்தில் அப்படியானால் எங்கள் தமிழ் பித்ரு பாஷா (தந்தை மொழி) என்று குறிப்பிட்டவர் வள்ளலார். பெண் கல்வியை வலியுறுத்தியவர் வள்ளலார். கணவன் இறந்த பின் மனைவி தாலி அறுக்கத் தேவையில்லை என்றார். எல்லாவற்றிற்கும் மேலாக பிறப்பின் அடிப்படையில் கற்பிக்கப்பட்ட சூத்திர இழிவுக்கு எதிராக குரல் கொடுத்தவர் வள்ளலார் என்பதே தனிச்சிறப்பு. அதனால்தான் அப்படிப்பட்ட அருங்கருத்துகள் அடங்கிய அவரது ஆறாம் திருமுறையை பெரியார் தனது குடிஅரசு பதிப்பகத்தின் மூலம் தொகுத்து ‘இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு’ என்ற பெயரில் வெளியிட்டார். 

அதை தொகுத்தவர் பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சாமி.சிதம்பரனார் ஆவார். ஒருமுறை வடலூர் சென்ற பெரியார் வள்ளலார் மீது கொண்ட மதிப்பால் அவரது சபையை காண விரும்பி அங்கே சென்றிருக்கிறார். சபை யின் வாயிலில் ‘புலால் உண்போர் உள்ளே வர வேண்டாம்’ என்ற அறிவிப்பை கண்டதும் அங்கிருந்து உள்ளே செல்லாமல் திரும்பினார் 

1874ம் ஆண்டு வள்ளலார் தன் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டார் என்றார்கள். பின் அவர் வெளியில் வரவே இல்லை. அவர் ஜோதியாகிவிட்டார் என்றார்கள். 

நந்தன் தீக்குண்டம் இறங்கினான்! வள்ளலார் ஜோதி யாகிவிட்டார்! எல்லாம் அவாள் விடுத்த சம்பாஷனைதான். நம்பித் தொலைப்போம்.

– கி.தளபதி ராஜ் 

(முக நூல் பதிவு)


திங்கள், 12 பிப்ரவரி, 2024

யார் தேவை? பெரியாரா? பெரியவாளா?


பதிலடிப் பக்கம்

விடுதலை நாளேடு,
Published April 3, 2023

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

மின்சாரம்

யார் தேவை? பெரியாரா? பெரியவாளா?

வைக்கம் நூற்றாண்டு பற்றி ஒரு தனியார்த் தொலைக்காட்சியில் விவாதப் போர் நடைபெற்றது.

வைக்கத்தையும் கடந்து பல்வேறு சர்ச்சைகள் சரமாரியாக வெடித்தன.

சனாதனிகள் பக்கம் நின்று பேசிய ஒருவர் ஸ்மிருதி வேறு, சுருதி வேறு – ஸ்மிருதிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

சுருதி அதாவது வேதம் அத்தகையது அல்ல என்று பேசினார். வேதம் உன்னதமானது என்ற அர்த்தத்தில் நீட்டி முழங்கினார்.

ஸ்மிருதியானாலும் சுருதியானாலும் ஒரே குட்டை யில் ஊறிய மட்டைகள்தான்.

மனுதர்மம் என்ன கூறுகிறது?

அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான  பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தார்க்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார் (மனுதர்மம் அத்தியாயம் 1, சுலோகம் 87).

மனுதர்மம் அப்படிக் கூறி இருக்கலாம். வேதத்தில் எல்லாம் அப்படிக் கிடையவே கிடையாது என்று தலையில் அடித்து சத்தியம் செய்தாரே ஒரு பிரகஸ்பதி – அவரின் பார்ப்பனீய பாசி படர்ந்த கண்களுக்குப் பதில் இங்கே!

பராஹ்மணோஸ்ய பாஹு ராண்ய க்ருத

ஊருத்தஸ்ய யத் வைஸ்ய பத்ப்யாம் சதத்ரோ அஜாயத

(யஜுர் வேதம் சுலோகம் 11)

இதன் பொருள் என்ன? கடவுள் முகத்தினின்று பிராமணன் பிறந்தான். தோள்களிலிருந்து சத்திரியன் பிறந்தான், தொடைகளினின்று வைசியன் பிறந்தான், பாதங்களிலிருந்து சூத்திரன் பிறந்தான். 

அதர்வண வேதம் அத்தியாயம் 19, சுலோகம் ஆறும் அதே பொருளைத்தான் கூறுகிறது.

தெய்வாதீனம் ஜெகத்சர்வம் 

மந்த்ரா தீனம் து தெய்வதம்

தன்மந்தரம் பிரம்மணா தீனம்

தஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்

(ரிக் வேதம் 62ஆம் பிரிவு, 10ஆம் சுலோகம்)

“இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர். மந்திரங்கள் பிராம ணர்களுக்குக் கட்டுப்பட்டவை. எனவே பிராமணர் களே நமது கடவுள்” என்கிறது ரிக் வேதம். 

ஸ்மிருதியில் ஏதோ இருக்கலாம். சுருதியில் (வேதத் தில்) அப்படி யெல்லாம் கிடையாது என்று பிதற்றும் சனாதனிகள் இதற்கு என்ன பதில் வைத்துள்ளனர்.

அதை விடுங்கள். ரொம்பக் காலத்திற்கு முன்பு கூடப் போக வேண்டாம்.

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன “திரு”வாய் மலர்ந்தார்?

9.10.2002 அன்று சென்னை நாரத கான சபையில் “தாம்ப்ராஸ்” எனப்படும் பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் “அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர் கள்” நூல் வெளியீட்டு விழாவில், அந்த நூலை வெளியிட்டு ஜெயேந்திர சரஸ்வதி என்ன பேசினார்?

“எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய்தாலும் அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரை நாயக்கர்கள் ஆண்ட போது கோவிந்த தீட்சதர் என்பவர் தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர் தான் மறைந்த காஞ்சிப் பெரியவாள். ஆண்டவன் கூட அப்புறம்தான். அந்தணர் தான் முதலில்” (நக்கீரன், 16.11.2002).

மகா மகா பெரியவாள் என்று எரவாணத்தில் தூக்கி வைத்துத் துதிபாடுகிறார்களே மறைந்த காஞ்சி சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி – தீண்டாமை பற்றி காந்தியாரிடம் என்ன சம்பாஷித் தார்?

16.10.1927 அன்று பாலக்காட்டில் மாட்டுக் கொட்ட கையில் சங்கராச்சாரியாரைச் சந்தித்த காந்தியாரிடம் சங்கராச்சாரியார் கூறுகிறார்:

ஹரிஜன ஆலயப் பிரவேசத்தில் சாஸ்திரங்களையும், பழைய வழக்கங்களையும் நம்பி இருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறதென்றும் ஸ்வாமிகள் (சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி) காந்தியடிகளிடம் தெரிவித்தார். (ஆதாரம்: “தமிழ்நாட்டில் காந்தி”, பக். 575-576).

யார் பக்கம் நிற்கிறார் சங்கராச்சாரியார்? யாருடைய மனம் நோகக் கூடாது என்று கவலைப்படுகிறார்?

ஜாதித் திமிரில் இன்னொரு மனிதனைத் தீண்டத் தகாதவன் என்று கருதுபவர் பக்கம் பச்சாத்தாபப் படுகிறார். அந்தத் தீண்டாமை என்னும் கொடூரமான அவமதிப்புக்கு ஆளாகும் ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதை பற்றி, மனத்துன்பம் பற்றி ‘பெரிய வாளுக்கு’ அக்கறையில்லை.

வேத காலத்துக்குப் போக வேண்டியதில்லை. நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த “மஹா பெரியவாளின்’ யோக்கியதை எந்தத் தரத்தில் இருக்கிறது?

இந்நாட்டுப் பெரும்பான்மை மக்கள் எண்ணத்தில் எழுச்சி ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

சுதந்திர நாட்டில் பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி இருக்கலாமா? அப்படி இருந்தால் நாடு சுதந்திர நாடா? நரக நாடா? (விடுதலை, 15.8.1957) என்று கேட்ட தந்தை பெரியர் எங்கே?

தீண்டாமை க்ஷேமகரமானது (சிறீஜெகத் குருவின் உபதேசங்கள் இரண்டாம் பாகம்) என்று கூறும் சங்க ராச்சாரியார் எங்கே?

பெரியாரா? பெரியவாளா? நாட்டுக்கு யார் தேவை?

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

யார் இந்த ஜகத்குரு? தமிழாக்கம்: பொன்மலை பதி