திங்கள், 12 பிப்ரவரி, 2024

யார் தேவை? பெரியாரா? பெரியவாளா?


பதிலடிப் பக்கம்

விடுதலை நாளேடு,
Published April 3, 2023

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

மின்சாரம்

யார் தேவை? பெரியாரா? பெரியவாளா?

வைக்கம் நூற்றாண்டு பற்றி ஒரு தனியார்த் தொலைக்காட்சியில் விவாதப் போர் நடைபெற்றது.

வைக்கத்தையும் கடந்து பல்வேறு சர்ச்சைகள் சரமாரியாக வெடித்தன.

சனாதனிகள் பக்கம் நின்று பேசிய ஒருவர் ஸ்மிருதி வேறு, சுருதி வேறு – ஸ்மிருதிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

சுருதி அதாவது வேதம் அத்தகையது அல்ல என்று பேசினார். வேதம் உன்னதமானது என்ற அர்த்தத்தில் நீட்டி முழங்கினார்.

ஸ்மிருதியானாலும் சுருதியானாலும் ஒரே குட்டை யில் ஊறிய மட்டைகள்தான்.

மனுதர்மம் என்ன கூறுகிறது?

அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான  பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தார்க்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார் (மனுதர்மம் அத்தியாயம் 1, சுலோகம் 87).

மனுதர்மம் அப்படிக் கூறி இருக்கலாம். வேதத்தில் எல்லாம் அப்படிக் கிடையவே கிடையாது என்று தலையில் அடித்து சத்தியம் செய்தாரே ஒரு பிரகஸ்பதி – அவரின் பார்ப்பனீய பாசி படர்ந்த கண்களுக்குப் பதில் இங்கே!

பராஹ்மணோஸ்ய பாஹு ராண்ய க்ருத

ஊருத்தஸ்ய யத் வைஸ்ய பத்ப்யாம் சதத்ரோ அஜாயத

(யஜுர் வேதம் சுலோகம் 11)

இதன் பொருள் என்ன? கடவுள் முகத்தினின்று பிராமணன் பிறந்தான். தோள்களிலிருந்து சத்திரியன் பிறந்தான், தொடைகளினின்று வைசியன் பிறந்தான், பாதங்களிலிருந்து சூத்திரன் பிறந்தான். 

அதர்வண வேதம் அத்தியாயம் 19, சுலோகம் ஆறும் அதே பொருளைத்தான் கூறுகிறது.

தெய்வாதீனம் ஜெகத்சர்வம் 

மந்த்ரா தீனம் து தெய்வதம்

தன்மந்தரம் பிரம்மணா தீனம்

தஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்

(ரிக் வேதம் 62ஆம் பிரிவு, 10ஆம் சுலோகம்)

“இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர். மந்திரங்கள் பிராம ணர்களுக்குக் கட்டுப்பட்டவை. எனவே பிராமணர் களே நமது கடவுள்” என்கிறது ரிக் வேதம். 

ஸ்மிருதியில் ஏதோ இருக்கலாம். சுருதியில் (வேதத் தில்) அப்படி யெல்லாம் கிடையாது என்று பிதற்றும் சனாதனிகள் இதற்கு என்ன பதில் வைத்துள்ளனர்.

அதை விடுங்கள். ரொம்பக் காலத்திற்கு முன்பு கூடப் போக வேண்டாம்.

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன “திரு”வாய் மலர்ந்தார்?

9.10.2002 அன்று சென்னை நாரத கான சபையில் “தாம்ப்ராஸ்” எனப்படும் பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் “அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர் கள்” நூல் வெளியீட்டு விழாவில், அந்த நூலை வெளியிட்டு ஜெயேந்திர சரஸ்வதி என்ன பேசினார்?

“எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய்தாலும் அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரை நாயக்கர்கள் ஆண்ட போது கோவிந்த தீட்சதர் என்பவர் தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர் தான் மறைந்த காஞ்சிப் பெரியவாள். ஆண்டவன் கூட அப்புறம்தான். அந்தணர் தான் முதலில்” (நக்கீரன், 16.11.2002).

மகா மகா பெரியவாள் என்று எரவாணத்தில் தூக்கி வைத்துத் துதிபாடுகிறார்களே மறைந்த காஞ்சி சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி – தீண்டாமை பற்றி காந்தியாரிடம் என்ன சம்பாஷித் தார்?

16.10.1927 அன்று பாலக்காட்டில் மாட்டுக் கொட்ட கையில் சங்கராச்சாரியாரைச் சந்தித்த காந்தியாரிடம் சங்கராச்சாரியார் கூறுகிறார்:

ஹரிஜன ஆலயப் பிரவேசத்தில் சாஸ்திரங்களையும், பழைய வழக்கங்களையும் நம்பி இருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறதென்றும் ஸ்வாமிகள் (சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி) காந்தியடிகளிடம் தெரிவித்தார். (ஆதாரம்: “தமிழ்நாட்டில் காந்தி”, பக். 575-576).

யார் பக்கம் நிற்கிறார் சங்கராச்சாரியார்? யாருடைய மனம் நோகக் கூடாது என்று கவலைப்படுகிறார்?

ஜாதித் திமிரில் இன்னொரு மனிதனைத் தீண்டத் தகாதவன் என்று கருதுபவர் பக்கம் பச்சாத்தாபப் படுகிறார். அந்தத் தீண்டாமை என்னும் கொடூரமான அவமதிப்புக்கு ஆளாகும் ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதை பற்றி, மனத்துன்பம் பற்றி ‘பெரிய வாளுக்கு’ அக்கறையில்லை.

வேத காலத்துக்குப் போக வேண்டியதில்லை. நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த “மஹா பெரியவாளின்’ யோக்கியதை எந்தத் தரத்தில் இருக்கிறது?

இந்நாட்டுப் பெரும்பான்மை மக்கள் எண்ணத்தில் எழுச்சி ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

சுதந்திர நாட்டில் பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி இருக்கலாமா? அப்படி இருந்தால் நாடு சுதந்திர நாடா? நரக நாடா? (விடுதலை, 15.8.1957) என்று கேட்ட தந்தை பெரியர் எங்கே?

தீண்டாமை க்ஷேமகரமானது (சிறீஜெகத் குருவின் உபதேசங்கள் இரண்டாம் பாகம்) என்று கூறும் சங்க ராச்சாரியார் எங்கே?

பெரியாரா? பெரியவாளா? நாட்டுக்கு யார் தேவை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக