சங்கராச்சாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்கராச்சாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 பிப்ரவரி, 2024

யார் தேவை? பெரியாரா? பெரியவாளா?


பதிலடிப் பக்கம்

விடுதலை நாளேடு,
Published April 3, 2023

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

மின்சாரம்

யார் தேவை? பெரியாரா? பெரியவாளா?

வைக்கம் நூற்றாண்டு பற்றி ஒரு தனியார்த் தொலைக்காட்சியில் விவாதப் போர் நடைபெற்றது.

வைக்கத்தையும் கடந்து பல்வேறு சர்ச்சைகள் சரமாரியாக வெடித்தன.

சனாதனிகள் பக்கம் நின்று பேசிய ஒருவர் ஸ்மிருதி வேறு, சுருதி வேறு – ஸ்மிருதிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

சுருதி அதாவது வேதம் அத்தகையது அல்ல என்று பேசினார். வேதம் உன்னதமானது என்ற அர்த்தத்தில் நீட்டி முழங்கினார்.

ஸ்மிருதியானாலும் சுருதியானாலும் ஒரே குட்டை யில் ஊறிய மட்டைகள்தான்.

மனுதர்மம் என்ன கூறுகிறது?

அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான  பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தார்க்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார் (மனுதர்மம் அத்தியாயம் 1, சுலோகம் 87).

மனுதர்மம் அப்படிக் கூறி இருக்கலாம். வேதத்தில் எல்லாம் அப்படிக் கிடையவே கிடையாது என்று தலையில் அடித்து சத்தியம் செய்தாரே ஒரு பிரகஸ்பதி – அவரின் பார்ப்பனீய பாசி படர்ந்த கண்களுக்குப் பதில் இங்கே!

பராஹ்மணோஸ்ய பாஹு ராண்ய க்ருத

ஊருத்தஸ்ய யத் வைஸ்ய பத்ப்யாம் சதத்ரோ அஜாயத

(யஜுர் வேதம் சுலோகம் 11)

இதன் பொருள் என்ன? கடவுள் முகத்தினின்று பிராமணன் பிறந்தான். தோள்களிலிருந்து சத்திரியன் பிறந்தான், தொடைகளினின்று வைசியன் பிறந்தான், பாதங்களிலிருந்து சூத்திரன் பிறந்தான். 

அதர்வண வேதம் அத்தியாயம் 19, சுலோகம் ஆறும் அதே பொருளைத்தான் கூறுகிறது.

தெய்வாதீனம் ஜெகத்சர்வம் 

மந்த்ரா தீனம் து தெய்வதம்

தன்மந்தரம் பிரம்மணா தீனம்

தஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்

(ரிக் வேதம் 62ஆம் பிரிவு, 10ஆம் சுலோகம்)

“இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர். மந்திரங்கள் பிராம ணர்களுக்குக் கட்டுப்பட்டவை. எனவே பிராமணர் களே நமது கடவுள்” என்கிறது ரிக் வேதம். 

ஸ்மிருதியில் ஏதோ இருக்கலாம். சுருதியில் (வேதத் தில்) அப்படி யெல்லாம் கிடையாது என்று பிதற்றும் சனாதனிகள் இதற்கு என்ன பதில் வைத்துள்ளனர்.

அதை விடுங்கள். ரொம்பக் காலத்திற்கு முன்பு கூடப் போக வேண்டாம்.

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன “திரு”வாய் மலர்ந்தார்?

9.10.2002 அன்று சென்னை நாரத கான சபையில் “தாம்ப்ராஸ்” எனப்படும் பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் “அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர் கள்” நூல் வெளியீட்டு விழாவில், அந்த நூலை வெளியிட்டு ஜெயேந்திர சரஸ்வதி என்ன பேசினார்?

“எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய்தாலும் அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரை நாயக்கர்கள் ஆண்ட போது கோவிந்த தீட்சதர் என்பவர் தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர் தான் மறைந்த காஞ்சிப் பெரியவாள். ஆண்டவன் கூட அப்புறம்தான். அந்தணர் தான் முதலில்” (நக்கீரன், 16.11.2002).

மகா மகா பெரியவாள் என்று எரவாணத்தில் தூக்கி வைத்துத் துதிபாடுகிறார்களே மறைந்த காஞ்சி சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி – தீண்டாமை பற்றி காந்தியாரிடம் என்ன சம்பாஷித் தார்?

16.10.1927 அன்று பாலக்காட்டில் மாட்டுக் கொட்ட கையில் சங்கராச்சாரியாரைச் சந்தித்த காந்தியாரிடம் சங்கராச்சாரியார் கூறுகிறார்:

ஹரிஜன ஆலயப் பிரவேசத்தில் சாஸ்திரங்களையும், பழைய வழக்கங்களையும் நம்பி இருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறதென்றும் ஸ்வாமிகள் (சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி) காந்தியடிகளிடம் தெரிவித்தார். (ஆதாரம்: “தமிழ்நாட்டில் காந்தி”, பக். 575-576).

யார் பக்கம் நிற்கிறார் சங்கராச்சாரியார்? யாருடைய மனம் நோகக் கூடாது என்று கவலைப்படுகிறார்?

ஜாதித் திமிரில் இன்னொரு மனிதனைத் தீண்டத் தகாதவன் என்று கருதுபவர் பக்கம் பச்சாத்தாபப் படுகிறார். அந்தத் தீண்டாமை என்னும் கொடூரமான அவமதிப்புக்கு ஆளாகும் ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதை பற்றி, மனத்துன்பம் பற்றி ‘பெரிய வாளுக்கு’ அக்கறையில்லை.

வேத காலத்துக்குப் போக வேண்டியதில்லை. நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த “மஹா பெரியவாளின்’ யோக்கியதை எந்தத் தரத்தில் இருக்கிறது?

இந்நாட்டுப் பெரும்பான்மை மக்கள் எண்ணத்தில் எழுச்சி ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

சுதந்திர நாட்டில் பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி இருக்கலாமா? அப்படி இருந்தால் நாடு சுதந்திர நாடா? நரக நாடா? (விடுதலை, 15.8.1957) என்று கேட்ட தந்தை பெரியர் எங்கே?

தீண்டாமை க்ஷேமகரமானது (சிறீஜெகத் குருவின் உபதேசங்கள் இரண்டாம் பாகம்) என்று கூறும் சங்க ராச்சாரியார் எங்கே?

பெரியாரா? பெரியவாளா? நாட்டுக்கு யார் தேவை?

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

யார் இந்த ஜகத்குரு? தமிழாக்கம்: பொன்மலை பதி


சனி, 8 ஜூலை, 2023

பிறப்பால் தான் - குணத்தால் அல்ல!

**"பிறப்பால் தான் - குணத்தால் அல்ல"**

"ஜாதி வித்யாஸமே இல்லை - பகவான் சொல்ல வில்லை; ஆனால், பிறப்பின்படி இன்றி, குணத்தின் படி கர்மாவைப் பிரித்துத் தரும் சதுர் வர்ணத்தைத் தாம் ஸ்ருஷ்டித்ததாகத்தான் சொல்கிறார். 'சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச:' என்றே சொல்கிறார் என்கிறார்கள்.

சரி, ஆனால், எத்தனை வயசுக்குமேல் இப்படிக் குணத்தை அறிந்து அதை அநுசரித்து அதற்கான வித்தையைப் பயின்று அதற்கப்புறம் தொழிலை அப்பியாஸம் பண்ணுவது? முக்கியமாக பிராம் மணனின் தொழிலை எடுத்துக்கொண்டால் இவன் ஏழெட்டு வயசுக்குள் குருகுலத்தில் சேர்ந்தால்தானே அப்புறம் பன்னிரெண்டு வரு ஷங்களில் தன் தொழிலுக்கான வற்றைப் படித்து விட்டுப் பிறகு அவற்றில் தானே அநுஷ்டானம் பண்ண வேண்டியதைப் பண்ண வும், பிறருக்குப் போதிக்க வேண் டியதைப் போதிக்கவும் முடியும்? குணம் form ஆன பிறகு (ஓர் அமைப்பில் உருவான பிறகு)தான் தொழிலை நிர்ணயிப்பது என்றால், கற்க வேண்டிய இளவயசு முழுதும் பல பேர் தொழிலைத் தெரிந்து கொள்ளாமல் வீணாவதாகவும், அப்புறம் சோம்பேறியாக ஒரு தொழிலுக்கும் போகப் பிடிக்காமல் இருப்பதாகவுமே ஆகும். அப்படியே கற்றுக்கொண்டு தொழிலுக்கு போகும்போதும் சமூகத்துக்கு அவ னால் கிடைக்கிற பிரயோஜனத்தில் வெகுவான காலம் நஷ்டமாயிருக் கும். க்ஷணகாலம்கூட வீணாக்காமல் ஒழுங்காக, விதிப்படி கர்மா பண்ணிக் கொண்டேயிருக்கவேண்டும் என்று திருப்பித் திருப்பிச் சொல்லும் பகவான் இதை ஆதரித்துப் பேசி யிருப்பாரா?

📷📷

அப்படியானால் அவர் 'தியரி'யில் (கொள்கையளவில்) குணப்படி தொழில் என்றாலும், 'ப்ராக்டிஸில்' (நடைமுறையில்) பிறப்பால் தொழில் என்பதைத்தான் ஆதரித்தாரா? என்றால், பாலிடீஷி யன்கள் (அரசியல்வாதிகள்) போல பகவான் கொள்கை ஒன்று, காரியம் இன்னொன்று என்று இருப்பவர் அல்ல.

சரி அவருடைய வாழ்க்கையில் நாம் என்ன பார்க்கிறோம்? "நான் யுத்தம் பண்ண மாட்டேன்; பந்துமித்தரர்களின் ரத்தத்தைச் சிந்தி சாம்ராஜ் யாபிஷேகம் பண்ணிக் கொள்வதைவிட, ஆண்டிப் பரதேசியாக பிக்ஷை எடுத்துச் சாப்பிடுவது எத்தனையோ மேல்'' என்று சொல்லிக்கொண்டு தேர்த் தட்டில் உட்கார்ந்து ஸ்த்யாக்ரஹம் பண்ணி விட்ட, அர்ஜூனனிடம் அவர் என்ன சொன்னார்? "நீ க்ஷத்ரிய ஜாதியில் பிறந்தவன். யுத்தம் பண்ணுவது தான் உன் ஸ்வதர்மம். எடுவில்லை - போடு சண்டையை'' என்றுதான் அவனைவிடப் பிடிவாதம் பிடித்து அவனை யுத்தம் பண்ண வைத்தார்.

அப்படியானால் தர்ம புத்திரரின் விஷயம் என்ன? சண்டையே கூடாது. சமாதானமாகவே போய்விடவேண்டும் என்று தானே அவர் ஆரம்ப காலத்திலிருந்து இருந்து வந்திருக்கிறார்?.... அவரையும் பரமாத்மா க்ஷத்ரிய தர்மத்தைத் தான் அநுஷ்டிக்கப் பண் ணினார் என்றால், அவர் ''ஸ்வதர்மம்'' என்கிறபோது அவரவர் ஜாதி தர்மத்தைத்தான் சொன்னார் என்றுதான் அர்த்த மாகும். பிராமணராகப் பிறந்தும் க்ஷத்ரிய தர்மப்படி யுத்தத்தில் இறங்கிய த்ரோணாச் சாரியார் மாதிரியானவர்கள் பெரிய வர்கள் என்பதால் பகவானாக அவர்களை நிந்திக்க மாட்டாராயினும், பீமஸேனன் போன்றவர்கள் இவர்களை ஜாதி தர்மம் விட்டதற்காகக் குத்திக்காட்டிப் பேசிய போதெல் லாம் பகவான் ஆக்ஷேபித்த தில்லை. அதனால் பிறப்பால் ஏற்படுகிற ஜாதி தர்மமே அவர் சொன்ன ஸ்வதர்மம் என்று உறுதியாகிறது. அப்படியானால், ஏன் 'குணகர்ம விபாகச:' என்றார் என்றால்,

இந்த ஜாதி தர்மமே தான் உள்ளூர அவரவரின் குணமாகவும் இருக்குமாதலால் குணத்தால் சதுர்வர்ணம் பிரிவதாக பகவான் சொன்னதும், பிறப்பால் இப்படி ஜாதியாகப் பிரிவதும் ஒன்றே தான்; ஒன்றுக்கொன்று முரணானதல்ல. தியரி, ப்ராக்டீஸ் என்று வெவ்வேறு விஷயங்களைச் சொல்கிற தோஷம் பரமாத்மாவுக்கு ஏற்படவில்லை.''

- காஞ்சி சங்கராச்சாரியார்

சந்திரசேகரேந்திர சரஸ்வதி

"தெய்வத்தின் குரல்" நூல் - முதற்பாகம் - பக். 1001-1003.

- கவிஞர் கலி. பூங்குன்றன்
விடுதலை நாளேடு, 8.7.20

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

ஜாதி வர்ணாசிரமத்தை வலியுறுத்தி காந்தியை குறைகூறும் சங்கரர்

 


தெய்வத்தின் குரல் ( 
முதல் பாகம்)

வைதிக மதம்

தலைவலிக்குப் பரிகாரம் சிரச்சேதமா ?

இப்போது பெரிய பெரிய தலைவர்களிலிருந்து ஆரம்பித்து தெருவில் போகின்றவன் வரை அத்தனை பேரும் ஜாதி எதற்கு என்கிறார்கள். நாமும்தான் இதைப் பற்றி பேசலாமே என்று ஆரம்பித்தேன். நன்றாக ஆலோசனைப் பண்ணிப் பார்த்தால், இப்படிப்பட்ட ஒரு பாகுபாடு இருப்பதுதான் எல்லாருக்கும் க்ஷேமம் என்று தெரிகிறது. சமூகம் முழுவதும் முன்னேறுவதற்கும் சரி, அவரவரும் சித்த சுத்தியடைந்து ஆத்மாவைக் கடைத்தேற்றிக் கொள்வதற்கும் சரி, இந்த ஏற்பாடே நிரம்ப சகாயம் செய்கிறது என்று தெரிகிறது.

இதை நான் சொல்கிறேன் என்பதற்காக ஒப்புக்கொள்ள வேண்டியதில்லை; சாஸ்திரங்கள் சொல்கின்றன என்பதற்காக ஒப்புக்கொள்ள வேண்டியதில்லை. “முன்னேற்றத்”துக்கு விரோதிகளான பிற்போக்குக்காரர்கள் என்றே எங்களை வைத்துவிட்டாலும் சரி, ஆனால் இந்தத் தேசம் எப்படியும் முன்னேர வேண்டும் என்பதுதான் ஒருத்தருக்கு லட்சியமாக இருந்தது என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள். தேசத்தில் இருந்த பேதங்களை, மூட நம்பிக்கையை எல்லாம் நீக்கி, பிற்பட்டவர்களை மற்றவர்களுக்குச் சமமாக ஆக்குவதற்காகவே அவர் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார் என்று எல்லோரும் நம்புகிறார்கள். அப்படிப்பட்ட அந்த ஒருத்தரான காந்தி இந்த வர்ணாசிரம தர்மத்தை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு ரொம்பவும் சிலாகித்திருக்கிறார். இதைத் சொன்னாலாவது எல்லோரும் இந்த ஏற்பாட்டில் இருக்கிற நல்லதை எடுத்துக் கொள்வீர்களோ என்பதால் சொல்கிறேன். My Varnashrama Dharma (என் வர்ணாசிரம தர்மம்) என்றே காந்தி ஒரு வியாஸம் எழுதியிருக்கிறார். அதிலே,* ‘இந்த வர்ணாசிரமம் என்பது மநுஷ்யனுக்குத் தானாக ஏற்பட்டது. ஸ்வாபாவிகமானது, இயல்பானது, ஒருத்தனுக்குப் பிறப்பாலேயே அமைந்துவிட்ட விஷயம் அது. இந்த இயற்கை விதியை ஹிந்து மதம் ஒரு ஸயன்ஸாக, சாஸ்திரமாக ஒழுங்குபடுத்தித் தந்திருக்கிறது’ என்றார். ‘இந்த ஏற்பாடு, தொழிலை நாலாகப் பிரித்துக் கடமைகளைத்தான் தருகிறதே தவிரச் சலுகைகளைத் தரவில்லை. ஒருத்தன் தனக்கு உசத்தி கொண்டாடிக் கொள்வதோ, இன்னொருத்தனை மட்டம் தட்டி வைப்பதோ ஹிந்து மதத்தின் உயிர்ப் பண்புக்கே விரோதமானது. அவரவரும் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொண்டு வாழவும், சமுதாயத்தின் சக்தியை விரயமாக்காமல் சிக்கனமாக காக்கவுமே வர்ணாசிரமம் இருக்கிறது’ என்றெல்லாம் ரொம்பவும் சிலாகித்துக் சொல்லியிருக்கிறார். ‘தீண்டாமையைத்தான் நான் தீமை என்று சண்டை போடுகிறேனே ஒழிய, வர்ணாசிரமம் என்பது சயன்ஸ் மாதிரி ஒரு சத்தியத்தையே சொல்கிறது என்பதால் அதை ஆதரிக்கவே செய்கிறேன். ஒருத்தனுடைய பிறப்பை அடிப்படையாக வைத்துத் தொழில்களைப் பிரித்துக் கொடுக்கிற வர்ணாசிரம தர்மம் சமூதாய வாழ்வுக்கு ரொம்பவும் ஆரோக்கியமூட்டுவது என்பதே என் அபிப்பிராயம். இது ஏதோ குறுகிய புத்தியால் செய்த ஏற்பாடில்லை. இந்த ஏற்பாடு ஒரு தொழிலாளிக்குக்கூட பெரிய அறிவாளிக்குள்ள அந்தஸ்தைத் தருகிற அமைப்பு என்பதே என் அபிப்பிராயம்’ ** என்றெல்லாம் சநாதனிகளைவிடப் பெரிதாக ஆதரித்துப் பேசுகிறார்.

‘ஆனாலும் அவர் செய்த பல காரியங்கள் ஆசார அநுஷ்டானங்களில் உள்ள வித்தியாசங்களைப் புறக்கணிப்பதாகவே இருந்தனவே; கலப்பு மணத்தைக்கூட அவர் ஆதரித்தாரே’ என்றால் அதற்குக் காரணம், ‘வர்ண தர்மம் ரொம்ப நல்லதுதான் என்றாலும் தற்போது அது சீர் குலைந்து போயாகிவிட்டது. இனிமேல் அதை மறுபடி புத்துயிர் கொடுத்துப் பழையபடி எழுப்ப முடியாது. சாரம் போனபின் சக்கையைப் பிடித்துக் கொண்டிருக்கிற மாதிரி, வர்ண தர்மப் படியான தொழில் பங்கீடு சிதறிப் போய்விட்ட இன்றைக்கு, வெளி வித்தியாசங்களை மட்டும் பிடித்து வைத்துக் கொள்வது மகா தப்பு’ என்று அவர் நினைத்துவிட்டார்.

நான் அப்படி நினைக்கவில்லை. நம்முடைய மதத்துக்கு முதுகெலும்பு மாதிரி இருக்கும் ஒரு ஏற்பாடு சொஸ்தப்படுத்த முடியாதபடி பாழாகிவிட்டது என்று விட்டுவிடுவதானால் மடமும் வேண்டியதில்லை, மடாதிபதியும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆணி வேரான தர்மம் போகவிட்டு, மதாசாரியன் என்று சொல்லிக் கொண்டு ஒரு ஸ்தாபனத்தை நடத்துவது சமூகத்தைப் பிடுங்கித்தின்கிற காரியம்தான். வாஸ்தவமாகவே பழைய ஏற்பாடு போயே போய்விட்டது என்றால் மடம் வேண்டியதில்லை! கலைந்துவிட வேண்டியதுதான். ஆனால் இன்னமும் அப்படி ஆகிவிடவில்லை என்றே நம்பிக்கொண்டிருக்கிறேன். அல்லது இன்னும் கொஞ்சம் நாளில் அது அடியோடு அழிந்துபோகிறதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் நான் நினைத்துவிடவில்லை. இப்போதாவது நாம் விழித்துக்கொண்டு செய்ய வேண்டியதை முழு மூச்சோடு செய்தால் அதை புது தெம்போடு எழுந்திருக்கப் பண்ணலாம் என்றே நம்புகிறேன். மற்றத் தொழில் பிரிவினைகள் எப்படிக் கலந்து போனாலும் போகட்டும். எல்லாவற்றுக்கும் உயிர் நாடியாக இருக்கப்பட்ட வேதாத்யயனம் இன்னமும் அங்கங்கே ஒரொரு பாடசாலையில் பழைய வழி தப்பாமலே இருந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது கணிசமான வசதிகளை செய்து கொடுத்து வேத வித்தைப் பரப்புவதற்காக எடுத்திருக்கிற பிரயத்தனங்களுக்கும் உற்சாகமான வரவேற்பு இருக்கிறது. நிறைய வித்யார்த்திகள் சேருகிறார்கள். அடுத்த தலைமுறையில் வேதம் என்று ஒன்று இருக்கப் பண்ணுவதற்கு ஒரு சின்னக் கூட்டமாவது நிச்சயமாக இருக்கிறது. இதை இருக்கப் பண்ணுவதும் மேலும் விருத்திப் பண்ணப் பாடுபடுவதும்தான் என் கடமை. இது ஒன்று இருந்துவிட்டால் மற்ற வர்ணங்களில் ஏற்படுகிற குழறுபடிகளால் உண்டாகும் தோஷங்களுக்கும் நிவிருத்தியாக வழி பிறக்கும். ஓர் உதாரணமாக (example), வழிகாட்டிகளாக (guide) பிராம்மணம்-அத்தனை பிராம்மணர்களும் இப்படி செய்யாவிட்டாலும், ஒரு சிலராவது–தன் பிராசீன வழியிலேயே உறுதியாக இருந்து கொண்டிருந்தால், இதுவே மற்றவர்களையும் அவரவர்களுக்கான தர்மத்தில் திருப்பி விடுகிற சக்திக்காக (influence) இருக்கும்.

காந்தியும் என்னைப் போலவே வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்தவர்தான். ஆனால் அது, யதார்த்தத்தில் கெட்டுப்போய் விட்டது. அதை சீர்திருத்த முடியாது என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். நானோ இந்தத் தர்மம் மங்கிததான் போய்க் கொண்டிருக்கிறது என்றாலும், அடியோடு அணைந்துவிடவில்லை, இருக்கிற பொறிகளை ஊதி ஊதி நன்றாக மூட்டிவிட முடியும், என்று நினைக்கிறேன். ஏனென்றால் இதை விட்டால் சமூதாயத்துக்கு மகத்தான கஷ்டம்தான் வருகிறது என்பது நம் தேசத்தின் கடைசீ ஐம்பது வருஷ சரித்திரத்தைப் பார்த்தாலே தெரிகிறது, வர்ண தர்மம் இல்லாத மற்றத் தேசங்களின் பெரிய நாகரீகங்களுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்தாலும் தெரிகிறது.

மெஷின்கள், பெரிய ஆலைகள் வந்ததுதான் பழைய பாரம்பரியத் தொழில்கள் நலிவதற்கு முக்கியமான காரணம். எளிய வாழ்க்கையில் மெஷினுக்கு அதிக இடமில்லை. கைத்தொழில்களே செய்து எல்லோரும் எளிமையாக வாழ்ந்தால் பழைய ஏற்பாடுகளைக் காப்பாற்றி விடலாம். ‘மநுஷ சக்தியைக் கொண்டுதான் காரியங்கள் நடக்க வேண்டும். ராக்ஷஷ மெஷின்கள் கூடாது; வாழ்க்கையே ரொம்ப எளிமையாக இருக்க வேண்டும்; அத்யாவசியத் தேவைக்கு அதிகமாகத் துளிக்கூட டாம்பிகமே உதவாது’ என்றெல்லாம் காந்தியும்தான் ஓயாமல் சொல்லி வந்தார். இப்படி அவர் சொன்னதெல்லாம் வர்ண தர்மத்தை நிலைப்படுத்துவதற்கு அநுகூலம்தான்.

ஆனால் இப்போது சர்க்கார் திட்டங்கள், ஜனங்களின் மனப்பான்மை எல்லாமே இந்த எளிய வாழ்க்கை, கைத்தொழில்கள் இவற்றுக்கு வித்தியாசமாக ஆகியிருக்கின்றன. ஆனால் இன்னமும் வாயால் ‘காந்தி’ ‘காந்தி’ என்று ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டிருப்பதை மட்டும் விடக்காணோம். ஏனென்றால் அவர் நிச்சயமாகவே சமுதாயத்துக்கு நல்லதை நினைத்து, சமத்துவத்துக்காகப் பாடுபட்ட சீர்திருத்தவாதிதானே தவிர, பழசு என்பதற்காகவே சாஸ்திருத்தங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிற ‘முரட்டு ஸநாதனி’ அல்ல என்பதில் எல்லோருக்கும் நம்பிக்கையிருக்கிறது. அதனால்தான் இப்படி நடுநிலையிலிருந்து பார்க்கப்பட்டவர் வர்ணாசிரமத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்று எடுத்துச்சொன்னால், அது உங்களுக்கு மனஸில் கொஞ்சம் அழுத்தமாகவே பதியக்கூடும் என்று நினைத்தேன்.

இப்போது பொதுவாக ஜாதி வேண்டாம் என்று ஏன் சொல்கிறார்கள் என்றால் இதனால் உசத்த -தாழ்த்தி உண்டாகி, சண்டை ஏற்பட்டு விடுகிறது எனறு நினைப்பதால்தான். வாஸ்தவத்தில் உயர்த்தி-தாழ்த்தியே இல்லை என்பதாகச் சொல்கிறேன்.

‘வாஸ்தவத்தில் இருக்கிறதோ இல்லையோ, இப்படி ஒரு அபிப்ராயம் வந்துவிட்டதால் சண்டைகள் ஏற்பட்டிருப்பது நன்றாகத் தெரிகிறதோ, இல்லையோ? இந்தச் சண்டைகள் வேண்டாம் என்கிறோம்’ என்கிறார்கள்.

ஆனால் இப்படிச் சொல்வது, தலையை வலிக்கிறது என்பதற்காகச் சிரச்சேதம் பண்ணிக் கொள்கிற மாதிரிதான். பழைய தர்மத்துக்கு ஒரு தலைவலி மாதிரி சண்டை வருகிறது என்றால், உண்மையை எடுத்துச் சொல்லி, பக்குவமாக, ஹிதமாக, சாந்தமாக, விடாமல் விளக்கிச் சொல்லி – அதைப் போக்கடித்து, பழைய தர்மத்தை ஆரோக்கியமாக வைப்பது தான் சிகித்ஸை முறை, சண்டை வந்திருக்கிறதே, அதனால் மூலதர்மத்தையே கொன்றுவிடலாம் என்றால், அது அஸம்பாவிதம்.

ஒருவிஷயம் சண்டைக்கு ஆஸ்பதமாக இருக்கிறது என்ற ஒரு காரணத்துக்காக, அந்த விஷயத்தையே அழித்துவிட வேண்டும் என்றால் லோகமே நடக்க முடியாது. லோகத்தில் எதையெடுத்தாலும் கட்சி – பிரதி கட்சி இருக்கத்தான் செய்யும்; அபிப்பிராய பேதம் வரத்தான் செய்யும். அப்படியானால் ஒவ்வொரு விஷயமாக அழித்துக் கொண்டே போவதா?

இப்போது குறிப்பாக இரண்டு சமாச்சாரங்களால் ஏகப்பட்ட சண்டை உண்டாகி வருகிறது. ஒன்று, பாக்ஷை; இன்னொன்று, கொள்கை (ideology) இதற்காக பாக்ஷையே வேண்டாம், கொள்கையே வேண்டும் என்று ஆக்கிவிடுவதா?

இப்போது இந்தத் தேசத்தில் வந்திருக்கிற பாஷைச் சண்டை மாதிரி எங்கேயும் பார்த்ததில்லை. ஜாதிச் சண்டையெல்லாம் இதனிடம் உறைபோடக் காணாது என்கிறமாதிரி அங்கங்கேயும் வெறிக் கூத்தாகப் பார்த்துவிட்டோம். தமிழனுக்கும் தெலுங்கனுக்கும் சண்டை, ஹிந்திக்காரனோடு ‘உரிமைப்போர்’. பெங்காலிக்கும் பீகாரிக்கும் சண்டை, கன்னடியனுக்கும் மராட்டியக்காரனுக்கும் சண்டை, ஹிந்திக்கும் இங்கிலீஷுக்கும் சண்டை என்று தேசம் முழுவதும் கசாமுசா என்று ஆனதைப் பார்க்கிறோம். பாஷை விஷயம் வாய்ச்சண்டையாக இல்லாமல் கையும் ஓங்கி அசல் சண்டையாகவே ஆகியிருக்கிறது. ‘பல பாஷைகள் இருப்பதால்தான் இப்படிச் சண்டைகள் வருகின்றன. பாஷைகளையே அழித்து விடலாம், ஊமையாகி விடலாம்’ என்றால் இதற்குப் பரிகாரமாகுமா?

இன்னொன்று; எந்தக் கொள்கை (ஐடியாலஜி)யின் பேரில் ஆட்சி இருக்க வேண்டும். ராஜாங்கம் அமைக்க வேண்டும் என்பதற்காக நடக்கிற சண்டைகள் கொஞ்சமல்ல. இதிலே கம்யூனிஸம், காபிடலிஸம் என்பது பெரிய பிரிவு – பெரிய சண்டைக்கு இடமாகி, லோகம் முழுக்க கண்டத்துக்குக் கண்டம் பரவியிருக்கிறது. தினம் பேப்பரைப் பார்த்தால் சின்னச் சின்ன தேசங்களையும் இந்தச் சண்டை விட்டு வைக்கவில்லை என்று தெரிகிறது. உலக யுத்தம் என்று மூளாமலே, எத்தனையோ தேசங்களில் அன்றன்றும் ஆயிரக்கணக்கான ஜனங்கள் அநியாயமாகச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ-காபிலிடசச் சண்டை தவிர அங்கங்கே மானார்கி (முடியரசு) விழுந்து குடியரசு வருவதும், மிலிடரி ஆட்சி, டிக்டேடர்ஷிப் (சர்வாதிகாரம்) என்று வருவதும், அவைகளுக்காகப் பலபேர் பலியாவதும், இந்த ‘ஐடியாலஜி’யால்தான். எல்லோரும் பொதுவாகத் தங்கள் கொள்கையை ஜனநாயகப் பண்பு (டெமாக்ரஸி) என்று மட்டும் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் உள்ளூற இருக்கிற வித்தியாசங்களோ பெரிதாக இருப்பதால்தான் இத்தனை சண்டை ஏற்படுகிறது.

சண்டையிருக்கிறதே என்பதற்காக ஒரு ‘ஐடியாலஜி’யும் வேண்டாம் என்றால், ராஜாங்கம் என்பதே ஒவ்வொரு கொள்கையை உடையவர்களால் ஏற்படுவதுதானே? அரசியல் கொள்கை ஒன்றுமே வேண்டாம் என்றால், சர்க்காரே வேண்டாம். என்றல்லவா ஆகும்? அப்படியானால் சர்க்கார் என்ற அமைப்பையே அடித்துவிட்டு மிருகங்கள் மாதிரி ஆகிவிடுவதா? பாக்ஷைச் சண்டையிருப்பதால் பாஷையே வேண்டாம், கொள்கைச் சண்டையிருப்பதால் கவர்மெண்டே வேண்டாம் என்று ஒப்புக் கொண்டால், ஜாதிச் சண்டை – மதச் சண்டைகள் இருப்பதால் ஜாதி மதமும் வேண்டாம்தான். ஆனால் அப்போது இன்னொரு படி மேலே போய்ப் பார்த்தால், நாம் எல்லோரும் இருப்பதால்தானே சண்டை போட்டுக் கொள்ள முடிகிறது. அதனால் நாமே… (பேசவொண்ணாமல் ஸ்ரீ பெரியவர்கள் சிரித்து விடுகிறார்கள்).

ஆக, பரிகாரம் என்னவென்றால் சண்டைகளைத் தீர்ப்பதுதானே தவிர, மூல தத்துவத்தையே தீர்த்துக் கட்டி விடுவதல்ல.

இப்போது ஜாதியே கூடாது என்று பெரிதாகச் சொல்கிறார்களே தவிர, ‘எலெக்ஷன்’ என்று வந்துவிட்டால் அங்கே ஜாதிதான் முக்கியமாகி விடுகிறது. சகல கட்சிகளும் ஜாதியை வைத்துதான் ‘வோட்’ வாங்கக் காரியம் நடந்துகின்றன. ‘ஜாதியே வேண்டாம்’ என்பது உண்மையில் ‘ஒரு ஜாதி மட்டும் வேண்டாம்’ என்பதற்காகத்தான் இருக்கிறது.

வாஸ்தவத்தில் தனக்கென ஒரு சமூகப் பொறுப்பு இல்லாமலே பெயரளவில் மட்டும் இருக்கிற ஜாதிகளை வெறும் சுயாபிமானத்துக்காக வளர்ப்பது நியாயமே இல்லை. சமூக க்ஷேமத்துக்காகவே ஒவ்வொரு கூட்டத்தாரிடம் பாரம்பரியமாக ஒவ்வொரு காரியத்தைக் கொடுத்து வளர்ப்பதுதான் எல்லோருக்கும் நல்லது. முக்கியமாக சப்த விசேஷம், தத்வார்த்தம் இரண்டாலும் உயிர்க்குலம் முழுவதற்கும் நன்மை செய்கிற வேதத்தை ஓதிக்கொண்டு, அதிலிருக்கும் கர்மாநுஷ்டானங்களைச் செய்வதையே, வாழ்க்கைப் பணியாக (life work) கொண்ட ஒரு கூட்டம் இந்தத் தேசத்தில் இருந்து கொண்டேயிருக்க வேண்டும்.

ஜாதியிருப்பதால்தான் உயர்த்தி-தாழ்த்திச் சண்டை என்று புது நாகரிகக்காரர்கள் நினைத்தாலும், இந்த உயர்த்தி தாழ்த்தி அபிப்ராயம் அடியோடு போக வேண்டும் என்பதற்காகவே நான் இந்தத் தர்மம் இருந்தாக வேண்டும் என்கிறேன். ‘நாம் இப்படிப் பிறந்தோமா? சரி, இது ஈசுவரச் சித்தம். ஈஸ்வராக்ஞையால் நமக்கு இந்தக் காரியம் லபித்திருக்கிறது. இதைச் செய்து நம்மாலான சமூக க்ஷேமத்தைச் செய்வோம். இன்னொருத்தனுக்கு இன்னொரு காரியம் பாரம்பரியமாக வந்திருக்கிறது என்றால், அது அவனுக்கு ஏற்பட்ட ஈசுவர ஆக்ஞை. அவரவரும் அதைச் செய்து ஈச்வரார்ப்பணம் பண்ணுவோம்’ என்ற மனோபாவம் ஏற்பட்டுவிட்டால், அப்புறம் ஒரு காரியம் உசத்தி, இன்னொன்று தாழ்த்தி என்று நினைப்பதற்கு இடமேயில்லை அல்லவா? இந்த மனோபாவம் உண்டாகத்தான் நாம் பிரயத்தனம் செய்ய வேண்டும். பிரசாரம் செய்ய வேண்டும்.

பெரிய பிரயத்தனம் முதலான பிரசாரம் என்னவென்றால் நாமே அப்படி வாழ்ந்து காட்டுவதுதான். அப்போது வாய்ப்பிரசாரமே தேவைக்கூட இல்லை. ஏற்கெனவே ஜாதி முறையால் உயர்வு-தாழ்வு வந்திருந்தால் அது மூல தத்துவத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாததன் கோளாறுதான். இந்தக் கோளாறுகூடப் போகிற மாதிரி இப்போது நாம் இந்த தர்மத்தைக் குற்றமில்லாமல் அநுஷ்டித்து வளர்க்கச் சங்கற்பம் செய்து கொள்ள வேண்டும்.

‘ஜீவனம், ஜீவனம்’ என்று எப்போது பார்த்தாலும் பணத்தின் ஞாபகமாகவே இருப்பதுதான் இப்போது ஜாதி தர்மம் போனபின் நாம் பார்க்கிற நிலை. 70, 75 வருஷம் முந்தி வரைக்கும் எவனுக்குமே இப்படி ஜீவனத்தின் ஞாபகம் இருக்கவில்லை. கடமையின் ஞாபகம்தான் இருந்தது. ஜீவனமே குறி என்றால் யார் யாரிடம் அதிகப் பணமோ, பெரிய பதவியோ போகிறதோ அவர்களைப் பார்த்து மற்றவர்கள் அசூயைப் படவேண்டியதுதான்; சண்டை போட வேண்டியதுதான். அவனவனுக்கும் அதது கடமை என்கிறபோது, அதில் உயர்வு-தாழ்வு இல்லவே இல்லை. ஆனால் பணம் குறிக்கோள், பதவி குறிக்கோள் என்றால் அதிகப் பணம் சேர்க்கிறவன் உசத்தி, மற்றவன் தாழ்த்தி; பெரிய பதவியில் வருகிறவன் உயர்த்தி, மற்றவன் தாழ்த்தி, என்ற பேத அபிப்ராயங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். அதாவது வர்ண தர்மத்தில் வாஸ்தவத்தில் இல்லாத ஏற்றத் தாழ்வு, அது எடுபட்டு போனால்தான் உண்டாகிறது. அதனால் ஜாதிகள் எல்லாமே போய் ஜாதிச் சண்டை போய்விட்டாலும் வேறுவிதத்தில் வகுப்புப் பூசல் (Class conflict) ஏற்படத்தான் செய்யும். இதைத்தான் பிரத்யக்ஷமாகவே நன்றாக அனுபவித்து வருகிறோம்.

உயர்த்தி – தாழ்த்தியே இல்லாமல், சண்டையே இல்லாமல் எல்லோரும் அரன்குடி மக்களாக அன்போடு, ஐக்கியத்தோடு, சௌஜன்யத்தோடு, பரஸ்பர விசுவாசத்தோடு, பரஸ்பர சகாயம் செய்துகொண்டு எங்கேயும் சாந்தியும் சந்தோஷத்தையும் உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே பழைய தர்மங்களை நலியாமல் காப்பாற்றும்படி சொல்கிறேன். இந்த லட்சியத்தில் நாம் கொஞ்சம் அடி எடுத்து வைத்தால் ஸ்வாமி கை கொடுப்பார். அவரைத்தான் பிரார்த்தனை பண்ணுகிறேன். 

–  சந்திரசேகரேந்திர சரஸ்வதி

'காமகோடி' இணைய பக்கம்

மஹாத்மா காந்தி அஹிம்ஸகர். ஆனால் அவரை ஒருவன் சுட்டுக் கொன்றான் என்றால் அவருடைய அஹிம்ஸையும் பூர்ண அஹிம்ஸை அல்ல என்று ஏற்படுகிறது. சரித்ரத்தில் அவர் தம் வீட்டில் ஓர் கன்று சாகும் தருவாயில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததைக் சகிக்காமல் அதைக் சுட்டுக் கொன்று அதன் துக்கத்தை போக்கினார் என்று படிக்கிறோம். தேசத்தில் உணவு பற்றாத சமயம் அவர் சமுத்ரத்தில் உள்ள மீன்களைப் பிடித்து உண்ணலாம் என்று அறிக்கை விடுத்ததும் அஹிம்சைக்குப் புறம்பானதே.

ஸ்ரீ காமகோடி ப்ரதீபம் ஆகஸ்டு-செப்டம்பர் 1980 இதழ் 7,8 அஹிம்ஸையின் தத்துவம்

செவ்வாய், 24 நவம்பர், 2020

சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் மனப்பான்மை

 


மகா மகா பெரியவர்கள் என்று பீற்றுகிறார்களே - அந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் மனப்பான்மை - ஜாதியைப் பொறுத்து என்னவாம்?

"இவன் (பிராமணன்) ஸ்தூலமாக அவனோடு (பிராமணரல்லாதான்) ரொம்பவும் ஒட்டி வாழ்ந்தால் அவனுடனேயே உட்கார்ந்து கொண்டு இன்னும் இவனும் சாப்பிட்டால் அவனுடைய ஆகாராதிகளை நாம்தான் ருசி பார்ப்போமே என்ற சபலம் உண்டாகத் தான் செய்யும். அந்தச் சபலம் இவனை இழுத்துக் கொண்டு போய்க் கடைசியில் இவன் தர்மத்துக்கே ஹானி விளைவிக்கிற அளவுக்கு ஆகி விடும். அந்தந்தச் சமுதாயத்துக்கு அந்தந்தகுல தர்மம், பழக்க வழக்கம் ஆகார முறைகள் தான் உகந்தவை. ஆனால் சமத்துவம் என்ற எண்ணத்தில் ஸ்தூலமாக (Physical) எல்லோரும் பழகி, இந்தத் தனித்தனி ஏற்பாடுகளை யெல்லாம் பலப்பட்டறையாக குழப்ப ஆரம்பித்தால், அத்தனைக் காரியமும் கெட்டு, மொத்தத்தில் பொதுக் காரியமே சீர் குலைகிறது. இதனால்தான் அக்ரஹாரம், வேளாளர் தெரு, சேரி என்று கிராமங்களில் பிரித்து வைத்தார்கள்" ('தெய்வத்தின் குரல்' பாகம் 1 - பக்கம் (192).

திங்கள், 31 டிசம்பர், 2018

ஜெகத்குரு என்றால் புளுகுவதில் ஜெகதலப்பிரதாபர் என்று பொருளோ!



கடவுள் அரூபி என்று சொல்பவர்களும் இவர்கள் தான். அய்ம்புலன்களுக்கும் புலப்படாதவர் என்று புளுகுவதும் இவர்கள்தான்.

இவ்வளவையும் சொல்லிவிட்டு கடவுளுக்குப் பெண்டாட்டி, வைப்பாட்டி ஜோடி சேர்ப்பவர்களும் பிள்ளைக்குட்டிகளைக் கற்பிப்பவர்களும் இவர்கள்தான்.

கடவுளுக்கு உருவப் பொம்மைகள் செய்து கோயில் கருவறையில் வைத்துப் பூஜை செய்பவர்களும் இவர்கள்தான். அதற்குப் புரோக்கர்களாக புரோகிதர்களை நியமித்து சுரண்டல் தொழிலை ஓகோ என்று நடத்துபவர்களும் இவர்கள்தான்.

ஆறுகால பூஜை போட்டு தாட்டிலையில் படையல் போடுபவர்களும் இவர்கள்தான்.

கடவுளுக்குப் பள்ளியறை ஏற்பாடு செய்பவர்களும் இவர்கள்தான்.

கேட்கிறவன் ஏமாளியாக இருந்தால், எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டியது என்பானாம்.

அதைப் போன்றதுதான் இதுவும். ஜெகத்குரு என்றால்  அதன் பொருள் புளுகுவதில் ஜெகதலப் பிரதாபர் என்று பொருளோ!

அய்யப்பன் மூக்கின் மீது விரல் வைத்திருந்தானாம். தீட்சதர் எதையோ சொல்லப்போய் மூக்கின் மீது விரலை வைத்த அய்யப்பன் அதை எடுத்து விட்டானாம்.

சிவனும், விஷ்ணுவும் (மோகினி) உறவாடி அய்யப்பன் பிறந்தானாம். சிவனை அப்பா என்பதும், பார்வதியை அம்மா என்பதும் சரி, ஒரு வகையில் சிவன் புணர்ந்ததால், விஷ்ணு அம்மாவாகி விடுகிறான். விஷ்ணுவின் மனைவியை என்ன என்று அழைப்பது என்று மூக்கின் மீது விரலை வைத்த அய்யப்பன் யோசித்தானாம்.

கடவுள் குடும்பமே எப்படிப்பட்ட களவாணி குடும்பம் என்பதற்கு இது ஒன்றே போதும். மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணுவைக் கண்டு காமவெறி கொண்டான் சிவன் என்பதுதான் கடவுளுக்கான யோக்கியதையா? ஒருக்கால் அய்யப்பன் இப்படி யோசித்திருப்பானோ! விஷ்ணுவாகிய நான்தான் மோகினி அவதாரம் என்பதைக்கூட ஞான திருஷ்டியால் அறிய முடியாத ஹரன் (சிவன்) எப்படி கடவுளாவான் என்று அய்யப்பன் மூக்கின் மீது விரலை வைத்து யோசித்திருப்பானோ!

இக்காட்சியை ஜெகத் குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதியும் (வேலிக்கு ஓணான் சாட்சி) வேறு கண்டாராம். கலகலவென சிரித்தாராம். புளுகினாலும் பொருத்தமாகப் புளுகுங்கடா -  அட போக்கத்தவன்களா என்று பாடினார் உடுமலை நாராயணகவி. அதுதான் இங்கு நினைவுக்கு வந்து தொலைகிறது.

-  விடுதலை ஞாயிறு மலர், 24.11.18

சனி, 13 அக்டோபர், 2018

வர்ணம் பற்றி கீதை என்ன சொல்கிறது!

இதுதான் இந்து மதத்தின் ‘ஜாதி பாராமைக்கான’ இலட்சணமா?


கேள்வி: தமிழ்நாட்டில் அரிஜனங்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட இருக்கிறார்களே... அதைப் பற்றி?

சங்கராச்சாரி: அர்ச்சனை நடந்த அவர்களுக்குத் தகுதியில்லை. ஆகவே அவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது சரி இல்லை.

கேள்வி: அர்ச்சனை முறைகளைக் கற்றுக் கொள்ளலாம் அல்லவா? அதற்கு பிறகு அர்ச்சகர்களாகப் பணிபுரியும் தகுதி அவர்களுக்கு ஏற்படலாமே?

சங்கராச்சாரி: அவர்களுக்கு தகுதி இல்லை. அவ்வளவுதான். மேலே இதைப்பற்றி விவாதத்திற்கே இடமில்லை.

கேள்வி: ‘சாதுர்வர்ணயம்மயா சிருஷ்டம்’ என்ற கீதையின் சுலோகத்தைப் பற்றிச் சுவாமிகள் என்ன கருதுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

சங்கராச்சாரி: பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் போன்ற நால்வகையினரையும் தாமே படைத்ததாகக் கடவுள் கூறுகிறார்.

கேள்வி: ஆனாலும் குணம், தொழில் அடிப்படையில் (குணகர்மா) அவர்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தானே கீதாசிரியர் கூறுகிறார்?

சங்கராச்சாரி: இக்காலத்துக் குணகர்மங்களின் அடிப்படையில் அல்ல. முற்பிறவியில் அவர்கள் செய்த குணகர்மங்களின் அடிப்படையில்தான் பிராமணர்கள் என்றும், க்ஷத்திரியர்கள் என்றும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த சுலோகத்தில் சொல்லப்படும் குணகர்மா முற்பிறவி சம்பந்தப்பட்ட குணகர்மாவாகும். ஒரு பிராமணன் தன்னுடைய கடமைகளைச் செய்யாவிட்டால் அடுத்த பிறவியில் கடவுள் அவனைத் தண்டிப்பார்.

 - பூரி சங்கராச்சாரியாரிடம் மணியன் பேட்டி,

‘ஆனந்த விகடன்’, 16.6.1974 

விடுதலை ஞாயிறு மலர், 22.9.18