திங்கள், 31 டிசம்பர், 2018

ஜெகத்குரு என்றால் புளுகுவதில் ஜெகதலப்பிரதாபர் என்று பொருளோ!கடவுள் அரூபி என்று சொல்பவர்களும் இவர்கள் தான். அய்ம்புலன்களுக்கும் புலப்படாதவர் என்று புளுகுவதும் இவர்கள்தான்.

இவ்வளவையும் சொல்லிவிட்டு கடவுளுக்குப் பெண்டாட்டி, வைப்பாட்டி ஜோடி சேர்ப்பவர்களும் பிள்ளைக்குட்டிகளைக் கற்பிப்பவர்களும் இவர்கள்தான்.

கடவுளுக்கு உருவப் பொம்மைகள் செய்து கோயில் கருவறையில் வைத்துப் பூஜை செய்பவர்களும் இவர்கள்தான். அதற்குப் புரோக்கர்களாக புரோகிதர்களை நியமித்து சுரண்டல் தொழிலை ஓகோ என்று நடத்துபவர்களும் இவர்கள்தான்.

ஆறுகால பூஜை போட்டு தாட்டிலையில் படையல் போடுபவர்களும் இவர்கள்தான்.

கடவுளுக்குப் பள்ளியறை ஏற்பாடு செய்பவர்களும் இவர்கள்தான்.

கேட்கிறவன் ஏமாளியாக இருந்தால், எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டியது என்பானாம்.

அதைப் போன்றதுதான் இதுவும். ஜெகத்குரு என்றால்  அதன் பொருள் புளுகுவதில் ஜெகதலப் பிரதாபர் என்று பொருளோ!

அய்யப்பன் மூக்கின் மீது விரல் வைத்திருந்தானாம். தீட்சதர் எதையோ சொல்லப்போய் மூக்கின் மீது விரலை வைத்த அய்யப்பன் அதை எடுத்து விட்டானாம்.

சிவனும், விஷ்ணுவும் (மோகினி) உறவாடி அய்யப்பன் பிறந்தானாம். சிவனை அப்பா என்பதும், பார்வதியை அம்மா என்பதும் சரி, ஒரு வகையில் சிவன் புணர்ந்ததால், விஷ்ணு அம்மாவாகி விடுகிறான். விஷ்ணுவின் மனைவியை என்ன என்று அழைப்பது என்று மூக்கின் மீது விரலை வைத்த அய்யப்பன் யோசித்தானாம்.

கடவுள் குடும்பமே எப்படிப்பட்ட களவாணி குடும்பம் என்பதற்கு இது ஒன்றே போதும். மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணுவைக் கண்டு காமவெறி கொண்டான் சிவன் என்பதுதான் கடவுளுக்கான யோக்கியதையா? ஒருக்கால் அய்யப்பன் இப்படி யோசித்திருப்பானோ! விஷ்ணுவாகிய நான்தான் மோகினி அவதாரம் என்பதைக்கூட ஞான திருஷ்டியால் அறிய முடியாத ஹரன் (சிவன்) எப்படி கடவுளாவான் என்று அய்யப்பன் மூக்கின் மீது விரலை வைத்து யோசித்திருப்பானோ!

இக்காட்சியை ஜெகத் குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதியும் (வேலிக்கு ஓணான் சாட்சி) வேறு கண்டாராம். கலகலவென சிரித்தாராம். புளுகினாலும் பொருத்தமாகப் புளுகுங்கடா -  அட போக்கத்தவன்களா என்று பாடினார் உடுமலை நாராயணகவி. அதுதான் இங்கு நினைவுக்கு வந்து தொலைகிறது.

-  விடுதலை ஞாயிறு மலர், 24.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக