"பிர்மா இந்த சாத்திரத்தை எனக்கு (மனுவுக்கு) ஓது வித்தார். நான் மரிசி, பிருகு இவர்களுக்கு ஓதுவித்தேன்"
- மனுஸ்மிருதி-அத்-1: சுலோகம்: 58
- பிராமணர் இந்த மனுஸ்மிருதியைப் படிக்கலாம். மற்றவருணத்தார்க்கு ஓதுவிக்கக் கூடாது.
- மனு.அத் : 1, சு: 103
- வேதம், சுருதி, மனுசாத்திரம் -ஸ்மிருதி இவை களைத் தர்க்க புத்தியால் மறுப்பவன் நாத்திகன் - அத்: 2, சு: 11
- பிர்மாவின் உயர்ந்த இடமாகிய முகத்தில் பிறந்த பிராமணன் முதல் வருணத்தான் ஆகையால் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தார்களுடைய பொருள்களையும், தானம் வாங்கக் கூடிய பிரபுவாயிருக்கின்றான். ஆதலால் அவன் பிறரிடம் தானம் வாங்கினாலும் தன்பொருளையே உண்டவனாவான்.
- அத்: 1, சு: 100-101
குறிப்பு: பிச்சை ஏற்பவனைப் பிரபு என்று கூறுவதை இந்நூலில்தான் காணலாம்
- பலகாரம், பாயாசம், கிழங்குகள், சுவையுள்ள இறைச்சி, நல்ல நீர் இவையாவும் பிராமணர்களுக்குரியவை.
- அத்: 3, சு: 227
- வாசனைப் பொருள்கள், தருப்பை, பூ, பொன், பால், தயிர், அவல், அரிசி, மீன், மாமிசம் இவை வலுவில் வந்தால் பிராமணன் நீக்கக்கூடாது.
- அத்: 4, சு: 250
- சோறு, பால், சோமபானம் (மது) இறைச்சி இவைகள் யாகத்திற்குரிய அவிசுகள்.
- அத்: 3, சு: 257
- யாகம் செய்து மாமிசம் புசித்தல் தேவ காரியம். தனக்கெனக் கொன்று தின்னல் இராட்சத காரியம்.
- அத்: 5, சு: 31
- உயிர்க்கு ஆபத்து நேருங்கால் நாள்தோறும் பிராணிகளை ஏராளமாகக் கொன்று தின்றாலும் பிராமணன் தோஷத்தையடைய மாட்டான். மாமிசம் கிரையத்திற்கு வாங்கினாலும், தாமே கொன்று கொண் டாலும், பிறர் கொடுத்தாலும் அதைத் தேவர்களுக்கும், பிதிரர்களுக்கும் நிவேதித்துப் புசிக்கும் பிராமணன் துரஷிக்கப்படமாட்டான்.
- அத்: 5, சு: 30-32
- பசுக்கள், மிருகங்கள், பறவைகள் இவைகளை யாகத்திலும் சிரார்த்த தினத்திலும் கொன்றால் அவை பின்பு உயர்ந்த கதியை அடைகின்றன - ஆதலால் யாகம், சிரார்த்தம் இவைகளில் உயிர்க்கொலை செய்யலாம், அக்கொலை பாவமாகாது.
- அத்: 5, சு: 40-41
- யாகத்திற்காகவே பசுக்கள், மிருகங்கள், பறவைகள் பிர்மமனால் படைக்கப்பட்டுள்ளன. அந்த யாகத்தால் உலகமெலாம் நன்மையடைகிறது. ஆகையால் யாகத்தில் செய்யும் உயிர்க்கொலை கொலையாக மாட்டா.
- அத்: 5, சு: 39
- இங்ஙனம் யாகத்திற் கொல்லப்பட்ட கொலையைக் கொலையென்று நினைக்கலாகாது; வேதத்தினாலேயே தருமம் விளங்குவதால் வேதம் கொலை செய்யக் கூறினாலும் அது புண்ணியமாகவே இருக்கும்.
- அத்: 5, சு: 44
- எள்ளு, அரிசி, உளுந்து, கிழங்கு, பழம் இவைகளால் சிரார்த்தம் செய்தால் பிதிரர்கள் ஒருமாதம் வரையில் திருப்தி அடைவார்கள்.
- அத்: 3, சு: 267
- முள்ளுள்ள வாளை மீன், கட்க மிருகம், சிவந்த ஆடு இவற்றின் இறைச்சியால் சிரார்த்தம் செய்தால் பிதிரர்கள் அளவற்ற காலம் திருப்தியடைவார்கள்.
- அத்: 3, சு: 271
- சிரார்த்தத்தில் விதிப்படி அழைக்கப்பட்ட பிரா மணன் இதில் கூறப்பட்ட மாமிசங்களைப் புசிக்கா விட்டால் அவன்21 பிறப்பு பசுவாகப் பிறப்பான்.
- அத்: 5, சு: 35
- அக்கினி எப்படி மேலான தெய்வமாகின்றதோ அப்படியே பிராமணன் ஞானியாயினும், மூடனாயினும் அவனே மேலான தெய்வம். - அத்: 9, சு: 317
பிணத்தை எரிக்கும் தீ, யாகத்திற்கும் பயன்படுதல் போல தீமையான காரியங்களைச் செய்யும் பிராமணர் களும் பூஜிக்கப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் உயர்குலத்தார் அல்லவா?
- அத்: 9, சு: 318
- சூத்திரன் இம்மையினும் மறுமையினும் பிராமணனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். சூத்திரன், மனம் வாக்குக் காயங்களால் பிராமணனுக்குத் தொண்டு செய்ய வேண்டும். பிராமணரில்லாதவிடத்தில் சத்திரியனுக்கும், அவனுமில்லாத விடத்தில் வைசி யனுக்கும் தொண்டு செய்ய வேண்டும்.
- அத்: 9, சு: 334-335
- பிராமணன் கூலி கொடுத்தோ - கொடாமலோ சூத்திரனிடம் வேலை வாங்கிக் கொள்ளலாம். ஏனெனில் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரன் பிர்ம னால் படைக்கப்பட்டிருக்கிறான்.
- அத்: 8, சு: 413
- மற்ற மூன்று வருணத்தார்க்கும் தொண்டு செய்யும்படி சூத்திரனுக்கு அரசன் உத்தரவிட வேண்டும். அப்படிச் செய்யாவிடில் உலகம் அழிந்துவிடுமாகையால் சூத்திரனைத் தண்டித்துப் பணிவிடை செய்விக்க வேண்டும்.
- அத்: 8, சு: 410
- சூத்திரன் தேடிய பொருள்களைப் பிராமணன் தடையின்றிக் கைப்பற்றிக் கொள்ளலாம், ஏனெனில் அடிமையாகிய சூத்திரன் எவ்வித பொருள்களுக்கும் உரியவனாக மாட்டான்.
- அத்: 8, சு: 417
- பிராமணன் பொருளை எடுத்த சூத்திரனுடைய அங்கங்களை வெட்டிக் கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருள்களைப் பிராமணன் தான் விரும்பியபடி கொள்ளையிடலாம்.
- அத்: 9, சு: 248
- பிராமணனுடைய தொழிலைச் சூத்திரன் செய் தாலும் பிராமணனாக மாட்டான். அவனுக்குப் பிராமணத் தொழில் செய்ய அதிகாரமில்லை. பிராமணன் சூத்திர னுடைய தொழிலைச் செய்தாலும் அவன் உயர்குலத்த வனேயாவான். இப்படியே பிர்மா நிச்சயித்துள்ளார்.
- அத்: 10, சு: 75
- சூத்திரன் பொருளாசையால் உயர்குலத்தோர்க்குரிய தொழில்களைச் செய்தால் அவன் பொருள்களை எல் லாம் பறித்துக் கொண்டு அவனைத் துரத்திவிட வேண்டும்.
- அத்: 10, சு: 96
- பிராமணன், சத்திரியன், வைசியன் இவர்கள் தம் வருணத்திலும், தம் கீழ் உள்ள மற்ற வருணங்களிலும், சூத்திரன் தன் வருணத்தில் மட்டும் மணம் செய்து கொள்ளலாம்.
- அத்: 3, சு: 13
- சூத்திரப் பெண்ணோடு சமமாய்ப் படுக்கும் பிரா மணன் நரகத்தையடைவான், அவளிடம் பிள்ளை உண்டு பண்ணுகிறவன் பிராமணத்தன்மையை இழந்து விடுகிறான்.
- அத்: 3, சு: 17
பிராமணனுக்குச் சூத்திரப் பெண்ணிடம் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு அப்பிராமணன் சொத்தில் உரிமையில்லை. அப்பிள்ளை சிரார்த்தம் செய்யலாகாது. அவன் உயிரோடிருப்பினும் பிணத்துக்குச் சமமானவன்
- அத்: 9, சு: 155-178
- பிராமண குலத்திற் பிறந்தவன் கர்மானுட்டான மில்லாதவனாயினும், ஒழுக்கங்கெட்டவனாயினும் அரசனைப்போலவே தீர்மானம் செய்யலாம். (ஆட்சி செய்யலாம், பிறரைத் தண்டிக்கலாம்) சூத்திரன் ஒரு பொழுதும் செய்யலாகாது.
- அத்: 8, சு: 20
- பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டுப் பொய் சொல்லலாம் குற்றமில்லை. பிராமணரல்லாதவரைக் கொன்றாலும் பரவாயில்லை.
- அத்: 8, சு: 112-143
- வைசியனும், சூத்திரனும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டால் வைசியனுக்கு 250 பணங்களும், சூத்தி ரனுக்கு 500 பணங்களும் பொருள் தண்டனை விதிக்க வேண்டும்.
- அத்: 8, சு: 277
- பிராமணனைச் சூத்திரன் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும். பிராமணனுடைய ஜாதிப் பெயர்களை சொல்லித்திட்டும் சூத்திரன் வாயில் காய்ச் சிய இரும்புக்கம்பியை எரிய எரியச் சொருக வேண்டும்.
- அத்: 8, சு: 270-271
- சூத்திரன் மேல் ஜாதியாரை அடித்தால் கையையும், உதைத்தால் காலையும் வெட்டிவிட வேண்டும்.
- அத்: 8, சு: 280
- சூத்திரன் (பிராமணரல்லாதவன்) மற்ற மூன்று வரு ணத்தாருடைய மனைவியைப் புணர்ந்தால் அவனை உயிர்போகும் வரை தண்டிக்க வேண்டும்.
- அத்: 8, சு: 359
குறிப்பு: பிராமணன் மற்றவர்களின் மனைவிமார் களைக் கற்பழித்தால் தண்டனை இல்லை போலும்
- தாழ்ந்த சாதிப்பெண் உயர்சாதியாரைக் கூடினால் அவளைக் கண்டிக்கக் கூடாது, உயர்ந்த குலப்பெண் ஒரு தாழ்ந்த சாதியாரைக் கூடினால் அவளைக் கண்டித்து வீட்டிலேயே அடக்க வேண்டும்
- அத்: 8, சு: 365
- உயர்குலப்பெண்ணைப் புணர்ந்த இழிகுலத் தோனை இறக்கும் வரையில் அடிக்க வேண்டும். கட்டுக் கடங்காமல் இட்டப்படி திரியும் பிராமணப் பெண்களை சூத்திரன் புணர்ந்தால் ஆண்குறியை அறுக்க வேண்டும். ஒருவர் கட்டுக்குட்பட்ட பெண்களைப் புணர்ந்தால் அவனைத் துண்டு துண்டாய் வெட்டி அவன் பொருளை யெல்லாம் கொள்ளையிட வேண்டும்.
- அத்: 8, சு: 374
- பிராமணனுடன் சூத்திரன் சமமாக உட்கார்ந்தால் இடுப்பில் சூடுபோட்டாவது, பிட்டத்தை அறுத்தாவது ஊரைவிட்டுத் துரத்திட வேண்டும்.
- அத்: 8, சு: 283
- பிராமணன் எத்தகைய கொடிய குற்றங்களைச் செய்தாலும் அவனுக்குத் தூக்குத் தண்டனை ஏற்பட்டால் தூக்கில் இடக்கூடாது. அவன் தலையை மொட்டை அடித்தல் வேண்டும். அதுவே அவனுக்குத் தூக்குத் தண்டனைக்கு ஒப்பாம். மற்ற வருணத்தார்க்குக் கொலையே தண்டனை.
- அத்: 8, சு: 379
- கொடிய குற்றம் செய்தவனாயினும் பிராமணனைக் கொல்லாமலும், வேறு எத்தகைய துன்பமும் செய்யாம லும் பொருளைக் கொடுத்து அவனை அயலூருக்கு அனுப்பிவிட வேண்டும். எத்தகைய குற்றஞ்செய்தாலும் பிராமணனைக் கொல்ல அரசன் நினைக்கலாகாது.
- அத்: 8, சு: 80, 381
- பிராமாணம் கேட்கும்போது, பிராமணனைச் சத்தியமாகச் சொல் என்று கேட்க வேண்டும். சூத்திரனை நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய மழுவைக் கையில் பிடித்துக் கொண்டு பிரமாணம் செய்யச் சொல்ல வேண்டும் அல்லது அவனைத் தண்ணீரில் அழுத்த வேண்டும். அவன் மனைவி, பிள்ளை இவர்கள் தலைகளில் ஓங்கி அடித்தும், பிரமாணம் சொல்லும் படிச் செய்ய வேண்டும். மழுவெடுத்த சூத்திரன் கை வேகாமலும், தண்ணீரில் அழுத்திய சூத்திரன் சாகாமலும், அடித்ததால் மனைவி மக்கள் தலையில் வலி தோன்றாமலும் இருந்தால்தான் அவன் சொல்லும் பிரமாணம் சத்தியம் என்று கொள்ள வேண்டும்.
- அத்: 8, சு: 113-115
- சூத்திரன் இம்மையில் உயிர்வாழ்க்கைக்கும், மறுமையில் மோட்சமடையவும் பிராமணனையே தொழ வேண்டும். அதுவே அவனுக்குப் பாக்கியம்.
- அத்: 10, சு: 122
- சூத்திரன் எவ்வளவு திறமையுள்ளவனாயினும், தனக்கெனத் தனியாக பொருள் சேர்த்து வைக்கலாகாது. சூத்திரனிடம் பொருள் இருந்தால் பிராமணனுக்குத் துன்பம் வரும்.
- அத்: 10, சு: 129
குறிப்பு: பொருள் சேர்த்துப் பிராமணனுக்குக் கொடுத்துவிட வேண்டும்.
- பிராமணன் உண்டு மிகுந்த உணவும், கட்டிக்கிழிந்த உடையும், சுவையும் ஔதமுமற்ற தானியங்களையும் பிராமணன் பார்த்து சூத்திரனுக்குக் கொடுக்க வேண்டும்.
- அத்: 10, சு: 125
- பிராமணன் வைசியனிடமுள்ள பொருளைக் கேட்டுக் கொள்ளாவிடில் வலிமையாலாவது களவினா லாவது யாகத்திற்கு வேண்டிய பொருளைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம். வைசியனிடமில்லாவிடில் சூத்திரன் வீட்டிலிருந்து ஏராளமாக யோசனையின்றிக் கேளாமல் வலிமையினாற் கொள்ளையிட்டு எடுத்துக் கொள்ளலாம்.
- அத்: 11, சு: 12,13
- யாகம் செய்கிறவன் பொருள் தேவர்கள் பொருள் என்றும், யாகம் செய்யாதவர்களின் பொருள்கள் அசுரர்களின் பொருள்களென்றும் வேதம் ஓதுகின்றது. ஆதலால் அசுரர் பொருள்களைத் தேவர்களுடைய பொருள்களாக்குதல் தருமமேயாகும்.
- அத்: 11, சு: 20
- தரும சிந்தனையுள்ள அரசன் இவ்விதம் கொள் ளையிட்டு யாகம் செய்கின்ற பிராமணர்களைத் தண்டிக் கக் கூடாது. அரசனின் அறியாமையால் பிராமணன் பசித்துன்பத்தை அடைகிறான்,
- அத்: 11, சு: 21
குறிப்பு: இதனால் பிராமணன் எந்த விதத்திலும் பிழைக்கும்படி அரசன் வழிதேடி வைக்க வேண்டும். அவர்கள் சொல்லுவனவெல்லாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
- பிராமணனுக்கு வேதம் ஓதலே தவம்; சத்திரியனுக்கு இந்நூலில் சொன்னபடி ஆட்சி செய்தலே தவம். வைசியனுக்கு வர்த்தகம் செய்தலே தவம். சூத்திரனுக்குப் பிராமணனுக்குப் பணிவிடை செய்தலே தவம் ஆகும்.
- அத்: 11, சு: 235
- இதில் சொல்லும் கருமங்களில் தவறிய அரசன் மலம், பிணம் இவைகளைத் தின்னும் கடபூதம் என்னும் பேயாகப் பிறப்பான். மேற்சொன்ன வேதஸ்மிருதிகளுக்கு அடங்காமல் விரோதமாக நடக்கும் சூத்திரன் சீலைப் பேனைத் தின்னும் பேயாகப் பிறப்பான்.
- அத்: 12, சு: 71,72
குறிப்பு: ஆதலால் இதில் சொன்னபடியே அரசன் பிராமணர்களுக்குச் சாதகமாக ஆட்சி நடத்த வேண்டும்,. சூத்திரன் பிராமணர்களுக்குத் தொண்டு செய்து நடக்க வேண்டும் என்பது தான் மனுநீதி.
மனுநீதியின் அறநெறியைப் பார்த்தீர்களா? பார்ப்பான் எதையும் தின்னலாம். எந்த குற்றங்களையும் செய்யலாம். யார்வீட்டுப் பெண்களையும் கற்பழிக்கலாம். யார் பொருளையும் கொள்ளையிடலாம். கொலையும் செய்யலாம். அவனுக்குக் குற்றத் தண்டனை கிடையாது. நாவிதக் கூலியில்லாமல் மொட்டையடித்துப் பொருள் கொடுத்து வேறு ஊருக்கு அனுப்புவதே தண்டனை. அங்கும் குற்றம் செய்தால் அப்படியே; எப்படியுள்ளது மனு (அ) நீதி? ஜாதிக்கொரு நீதி! மன்னன் மனுநீதிப்படியே மற்றவர்களை தண்டித்து அவர்களை ஆதரித்து அரசாள வேண்டும். இல்லையேல் அரசனையும் தொலைத்துக் கட்ட மனுவில் இடமுள்ளது.
விடுதலை நாளேடு, 4,5.12.18
- இரா.கண்ணிமையின் 'வடநூலார் மொழிப்படியா வள்ளுவர் நூல் செய்தார்?' என்ற கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக