செவ்வாய், 26 செப்டம்பர், 2017

பிராமணத் துவேஷமா?



மின்சாரம்



நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த டி.கே.மாடசாமி என்னும் தோழர் ‘தின மலரில்’ வெளி வந்த ஒரு கத்தரிப்பை நமக்கு அனுப்பி வைத்தார். அது பெட்டிச் செய்தியாக தனியே இதே பக்கத்தில் வெளி யிடப்பட்டுள்ளது.

* பார்ப்பனத் துவேஷம்

* ஹிந்தி எதிர்ப்பு

* சமஸ்கிருத எதிர்ப்பு

இந்த மூன்றையும் வைத்து தி.க.வும், தி.மு.க.வும் சுயநல வியாபாரத்தை செய் கின்றனவாம்.

லாலா லஜபதி ஒருமுறை சொன்னது தான் இந்த நேரத்தில் நினைவிற்கு வந்து தொலைகிறது.

“தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங் களே துவேஷ வாதியாக இருந்து, மற்றவர் களைப் பார்த்து ‘பிராமண துவேஷி, பிரா மண துவேஷி’ என்று சொல்லுவார்கள்” என்று சொன்னதுதான் அது.

பார்ப்பனர்களும், இந்துத்துவாவாதி களும் தலையில் தூக்கி வைத்து ஆடிக் கொண்டு இருக்கிறார்களே, அந்த விவே கானந்தர்தான் என்ன சொல்லுகிறார்?

“ஓ, பிராமணர்களே! சமுதாயத்தில் நீங்கள் கக்கிய விஷத்தை  நீங்கள் தான் உறிஞ்சி எடுக்க வேண்டும்” என்று சொன்னாரே எந்த அர்த்தத்தில்?

நான்கு வருணத்தையும் நானே படைத் தேன். படைத்தவனாகிய நானே நினைத் தாலும் அதனை மாற்றி அமைக்க முடியாது.

(அத்தியாயம் 4, சுலோகம் 13)

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர் களும் பாவயோனியில் பிறந்தவர்கள் (அத்தியாயம் 9, சுலோகம் 32)

இவற்றை எல்லாம் சொன்னவர் பகவான் கிருஷ்ணன் என்று சொல்லுவது யார்? இந்த கீதையை தேசிய நூலாக அறிவிக்கப் போகிறோம் என்கிற சுஷ்மா ஸ்வராஜ் யார்?

சூத்திரர்களையும், பெண்களையும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று சொல்லுவது துவேஷம் இல்லையாம்!

எங்களை சூத்திரர்கள், வேசி புத்திரர்கள் என்று சொல்லலாமாம் -  அது துவேஷம் இல்லையாம். அதே நேரத்தில் சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்று தன்மானக் குரல் கொடுத்தால், அதற்குப் பெயர் பிராமண துவேஷமாம்.

அந்தப் பிரம்மானானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளிலிருந்து உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங் களைத் தனித் தனியாகப் பகுத்தார்.

(அத்தியாயம் 1 சுலோகம் 100)

சூத்திரன் என்றால் யார்?

சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்.

1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்.

2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப் பட்டவன்.

3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்.

4. விபசாரி மகன்

5. விலைக்கு வாங்கப்பட்டவன்.

6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்.

7. தலைமுறை தலைமுறையாக ஊழி யம் செய்கிறவன்.

(அத்தியாயம் 8, சுலோகம் 415)

இவ்வளவையும் சொல்லுகிற மனுதர்ம சாத்திரத்தை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் அலங்கரித்து எடுத்துச் செல்லுகிறார்களே, இவர்கள் துவேஷவாதிகள் இல்லையா?

பிராமணனுக்கு மிஞ்சிப் புல்லினாலும், க்ஷத்திரியனுக்கு வில்லின் நாணை ஒத்த முறுவற் புல்லினாலும், வைசியனுக்கு க்ஷணப்ப நாரினாலும் மேடு பள்ளமில்லா மல் மெல்லியதாகப் பின்னி மூன்று வட மேலறை ஞாண் கட்ட வேண்டியது

(மனுதர்மம் அத்தியாயம் 2,

சுலோகம் 42)

இதில் சூத்திரர்களுக்கு  பஞ்சமர்களுக்கு இடமில்லை என்பதைக் கவனிக்க வேண் டும். இதன் பொருள் என்ன? ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பனர்கள் ஆவணி அவிட்டம் என்று கூறி பூணூலைப் புதுப்பிப் பதன் தாத்பரீயம் என்ன?

நாங்கள் பிராமணர் - பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள், நீங்களோ சூத்திரர்கள் - வேசி மக்கள் என்பதை அடையாளப்படுத்தத்தானே இந்தப் பூணூல் அடையாளம்.

இந்த இழிவை எதிர்த்து குரல் கொடுத் தால் துவேஷமா? இந்த இழிவுக்குக் காரண மானவர்கள் துவேஷமே அறியாத பரிசுத்த ஆவியில் பொரித்து எடுக்கப்பட்டவர் களாம்.

மனுவாதி ஒரு குலத்துகொரு நீதி என்று மனோன்மணியம் சுந்தரனார் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மைதானே!
எந்தக் காலத்திலோ நடந்தவையை யெல்லாம் எடுத்துக்காட்டி பேசலாமா என்று சில அதிமேதாவிகள் துள்ளி குதிக்கக் கூடும்!

இன்றைக்கும் பூணூல் அணியவில் லையா? இப்பொழுதும் ஒவ்வொரு வருட மும் பூணூலைப் புதுப்பிப்பதற்காகவே ஒரு நாளை (ஆவணி அவிட்டம்) கொண்டாட வில்லையா பார்ப்பனர்கள்?

பூணூல் அணிவதே துவிஜாதி (இரு பிறவியாளன்) பார்ப்பான் என்ற உயர்ஜாதி தத்துவத்தின் ஏற்பாடுதானே.

இந்து மதத்தில் உள்ள அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும் - அதற்குரிய பயிற்சியைப் பெற்றவர்கள் அர்ச்சகராகலாம் என்று ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் பெரியார் திட்டத்தை செயல் வடிவமாக்க அரசு சட்டம் செய்தால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் பார்ப் பனர்கள் செல்லுவது ஏன்?

சூத்திரன் சாமி சிலையைத் தொட்டால் அந்த சாமி தீட்டுப்பட்டு விடும், சாமி செத்து விடும் என்று உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்பவர்கள் துவேஷம் சிறிதும் அற்ற தூய மாமணிகளா?

பார்ப்பான் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்ளும் வரை அதன் அடையாளமாக பூணூலைத் தரித்துக் கொண்டிருக்கும் வரை, ஜாதியின் கடைசிச் செதில் இருக்கும் வரை - சங்கரமடத்தில் பார்ப்பனர் தவிர மற்றவரும் அமரும் நிலை ஏற்படும் வரை - அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரிமை என்ற நிலைப்பாடு நிலை நிறுத்தப்படும் வரை, நீங்கள் சொல் லும் ‘அந்தப் “பிராமண துவேஷம்”, ஓங்கி ஒலிக்கவே செய்யும். ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி’ என்பது இடி முழக்க மாகவே ஒலிக்கும்!  ஒலிக்கும்!!

-விடுதலை ஞா.ம.2.9.17