வெள்ளி, 6 மார்ச், 2020

சூத்திரனுக்குக் கல்வி கொடாதே! - மனு

கட்டுமா கீழ் ஜாதிக்காரர்கட்கு அறிவைப் புகட்டக் கூடாது. அப்படி ஓர் ஆசிரியன் சூத்திரனுக்கு கல்வி புகட்ட முயற்சித்தால் அவன் கடும் தண்டனைக்கு உள்ளாக்கக் கடவன். ஒரு பார்ப்பான் சூத்திரனுக்கு கல்வி கொடுத்தால் பிற பார்ப்பனர்கள் அவனை ஜாதிக் கட்டுப் பாடு செய்ய வேண்டும். அந்த பார்ப்பான் ஒரு சண்டாளனைப் போல் நடத்தப்பட வேண்டும். ஊர் கடத்தப்பட வேண்டும். கல்வி கற்ற சூத்திரர்களையும் ஊரைவிட்டே விரட்ட வேண்டும் என்று கூறுகிறது ஸ்கந்தபுராணம் (விஸ்வ காண்டம் அத். 19 பிரம்ம காண்டம் அத்,10.)

வேதத்தைப் பயில்வதற்கும், கேட்பதற்கும் தண்டனை!

வேதத்தினின்றும் சூத்திரர்களை தள்ளியே வைக்க வேண்டும் என்று வேதச் சூத்திரங்கள் கூறுகின்றன.

"ஒரு சூத்திரன் வேத மந்திரங்களை காதால் கேட்க நேர்ந்திடின் அவன் காதுகளில் உருக்கிய உலோ கத்தினை ஊற்ற வேண்டும். அவன் வேத மந்திரங்களை ஓதினால் அவன் நாக்குகளை வெட்ட வேண்டும். அவன் சில வேதங்களை மனப் பாடம் செய்திருந்தானேயானால் அவனை கோடரியால் வெட்ட வேண்டும்”.

- (கவுதம தர்ம சூத்திரம் 2/3/4)

"ஒரு சூத்திரன் ஒரு பார்ப்பான் அமரும் இடத்தில் அமர நினைத் தாலோ, தூங்க நினைத்தாலோ அல்லது பார்ப்பான் நடக்கும் தெருக்களில் நடக்க எண்ணினாலோ அல்லது பார்ப்பனனுக்கு ஒப்பாக பேச நினைத்தாலோ அந்தச் சூத்திரன் பல்வேறு ஆக்கினைக்கு உட்பட வேண்டும்."

- (கவுதம தர்ம சூத்திரம் 2/3/4)

பாணினி (Panini) என்ற புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியன் தன் 'அஸ்டாத்யாயி” என்ற நூலில் எழுதுகிறான் - "ஒரு மரியாதைக் குரிய மனிதரை ஒரு சூத்திரன் வணக்கம் செலுத்தும்போது அவர் திருப்பி வணக்கம் சொல்லத் தேவையில்லை. ஆனால் மற்ற ஜாதிக்காரர்கட்கு அப்படி செய்தல் வேண்டும்.

- (அஸ்டாத்யாயி 8.2.1983)

நாட்டிய சாஸ்திரப்படி சூத்திரர் கள் நாட்டிய மேடையில் உள்ள நீல தூணின் பக்கத்தே மேடையின் வட கிழக்கு திசையில் அமர வேண்டும்.

(Sanscrit Drama P. 386).

சூத்திர வேடம் புரிபவர் நீல நிற உடையணிந்திருக்க வேண்டும்.

- (Sanscrit Drama P. 394, 395)

"சமஸ்கிருத நாடக கதாநாயகர்கள் உயர் ஜாதியில் பிறந் தோராயிருத்தல் வேண்டும்”

- (Sahitya Darpan 3/30)

"மகாகாவியங்கள், இதிகாசங்கள், கதைகள் அனைத்தும் கடவுளரைப்பற்றியும் (அ) சத்திரிய ரைப்பற்றியும் (அ) உயர் குல வழி வந்தோரைப்பற்றியதாகவும் இருக்க வேண்டும்."

- (Sahitya Darpan 3/316)

"நாடக பாத்திரங்கள் பேச வேண்டிய மொழியைக்கூட மிகத் துல்லியமாய் இன்ன ஜாதி இன்ன மொழிதான் பேச வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உயர் ஜாதியினர் சமஸ்கிருதத்திலும், கீழ் ஜாதியினர் பிராகிருதத் திலும், மிகக் கீழ் ஜாதியினர் பைசாச (அ) மகாதி மொழியிலும் பேச வேண்டும்”

- (தாசரூபகம் 2/64-65)

தீண்டாமை

சூத்திரர்கள் தொட்டால் மேல் ஜாதியினர் தீட்டாகி விடுவர் என்று இந்து சமய சாத்திரங்கள் கூறுகின்றன. சூத் திரன் நிழல்கூட தீட்டு ஏற்படுத்தும் ஆகையால் அதினின் றும் விலகியிருக்க வேண்டும் என்றும் சாத்திரங்கள் கூறு கின்றன.

"ஒரு துப்புரவுத் தொழிலாளியை, ஒரு பெண்ணை அவள் மாத விடாய் காலத்தில் உதிரப் பெருக்கு அதிகமாகும் நாள்களில், சமீபத்தில் மகப்பேறுற்ற தாயை, ஒரு பிணத்தை, ஒருவன் தொடுவதால் அது அவனைத் தீட்டாக்குகிறது. தீட்டு நீங்க அவன் குளிக்க வேண்டும்”

- சம்வார்த ஸ்மிருதி

இவைகளிலெல்லாம் திருப்தியுறாத இந்து மத சாத்திரங் கள் ஒரு சூத்திரன் ஒரு உயர் ஜாதி இந்து வைப் பார்த்தாலே அந்த பார்வை அந்த உயர்ஜாதி இந்துவை தீட்டாக்கும் என்று சொல்லும் அளவிற்கு இந்துமத சாத்திரங்கள் சென் றிருக்கின்றன.

"ஒரு தோட்டியை பார்த்ததால் உண்டான தீட்டை கழுவ சூரியனைப் பார்க்க வேண்டும்”

(பராஷர் ஸ்மிருதி 6/24)

"பனியா, கிரதர், காயஸ்தர், சண்டாளர் முதலியோர் தீண்டப்படாதோர். சாதாரணமாக இவர்களுடன் உரை யாடல் கூட பார்ப்பனமேல் ஜாதி இந்துக்களை தீட்டுண் டாக்கும். இத்தீட்டு தலை முழுகுவதால் கழியும். தீண்டப் படாதோரை பார்த்தால் உண்டான தீட்டை சூரியனைப் பார்த்து கழிக்கலாம்”

- வியாச ஸ்மிருதி (1/22/12)

இந்துமத சாஸ்திரங்கள் சூத்திரர்களின் உப-ஜாதி களைப் பற்றி மிகக் கொடுமையாய் பேசுகின்றன.

மனுஸ்மிருதியில் 10-வது அத் தியாயத்தில் காணப்படும் பின்வரும் செய்திகள் தான் நாய்க் கறி உண்ணும் சூத்திரர் களிடம், சண்டாளர்களிடம் காட்டப்பட்ட கொடூர ஆக்கி னைகட்கு அத்தாட்சி பத்திரமாய் இலங்குகின்றன.

(மனுஸ்மிருதி அத். 10; சுலோகம்-151-56)

"சண்டாளர் மற்றும் ஸ்வபாச்சர்களின் குடியிருப்புகள் ஊரின் வெளி எல்லையில் கிடக்க வேண்டும்”

- (சுலோ -51)

"நாய் மற்றும் கழுதைகளையே தம் உடைமையாகவும், இறந்தோர் உடலின்மீது போடப்பட்ட துணிகளையே ஆடையாகவும் கொள்ள வேண்டும்”

- (சு-52)

"வெண்கல ஆபரணங்களையே அணிதல் வேண்டும், உடைந்த மட் பாண்டங்களையே சமைக்க உபயோகிக்க வேண்டும்”

- (சு-53)

"சண்டாளன் தன் சேவகத்திற்குப்பின் எங்கும் நில்லா மல் தன் வசிப்பிடம் செல்ல வேண்டும்”

- (சு.54)

"உடைந்த மட்பாண்டங்களில் தான் சூத்திரனுக்கு உணவளிக்க வேண்டும். அதையும் ஒரு சேவகன் மூலமே செய்ய வேண்டும்".

- (சு.55)

"இரவு நேரங்களில் சண்டாளன் கிராமத்திலோ, நகரத் திலோ நட மாடக் கூடாது. சண்டாளன் பணியில் ஈடுபடும் போது அரசாங்க முத்திரையை கட்டிக் கொள்ள வேண்டும். நாதியற்ற பிணங்களை அப்புறப்படுத்தலும், தண்டனைக் குட்பட்ட குற்றவாளிகளை கொலை செய்வதும் சண்டாள ரின் பணிகளில் அடங்கும்” (சு.56)

- (மனுஸ்மிருதி 10.51-10:56)

 - விடுதலை ஞாயிறு மலர் 22 2 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக