வெள்ளி, 24 ஏப்ரல், 2020

பசு புனிதமா? (வேதவிளக்கம்)



யஜூர் வேதத்திற்கு இரு கிளைகள்(சாகை) உண்டு.இந்தக் கிளைகளில் ஸம்ஹிதை, ப்ராம்மணம், ஆரண்யம் என மூன்று பிரிவுகள் உண்டு. உதாரணத்திற்கு,ரிக்வேத ஸம்ஹிதையை மட்டும் நூலாக வெளியிட்டு, அதற்கு "ரிக் வேதம்" என்று பெயர் கொடுத்து விடுகிறார்கள். ஏனென்றால் ஸம்ஹிதைதான் ஒரு சாகைக்கு ஆதாரமாக, உயிர் நாடியாக இருப்பது.ஸம்ஹிதை என்றால் ஒழுங்குபடுத்திச் சேர்த்த மந்திரங்கள் என்று பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு வேதத்திலும் பல சாகைகள் இருக்கிறது மட்டும் இல்லாமல், யஜுர் வேதம் தனக்குள்ளேயே நிரம்ப மாறுபாடுகள் உள்ள இரண்டு தனி வேதங்களாகவே பிரிந்திருக்கிறது.
யஜூர் வேதத்தின் இரு சாகைகளுக்கு கிருஷ்ண யஜூர்வேதம் என்றும் (கருப்பு), சுக்ல யஜூர் வேதம் என்றும் பெயர்(வெளுப்பு). ‘யஜ்' என்றால் வழிபடுவது - இதிலிருந்தே யஜுர், யக்ஞம் வந்திருக்கின்றன. யஜுர்  அல்லது யஜுஸ் என்றாலே யக்ஞம் சம்பந்தமான வழிபாட்டுக் காரிய முறைகளை விவரிப்பது என்று பொருள்.இதில் கிருஷ்ண சாகையைச் சார்ந்ததுதான் தைத்திரீய ஸம்ஹிதை.

கர்மயோகத்தை நன்றாக அமைத்துக் கொடுத்திருப்பது யஜுர் வேதம் என்பர். ஸோம யாகம், வாஜபேயம், ராஜஸூயம், அச்வமேதம் முதலான அநேக யக்ஞங்களைப் பற்றியும், பலவிதமான யாகங்களைப் பற்றியும் விரிவாக நமக்குத் தெரிவிப்பது கிருஷ்ண யஜுஸில் உள்ள தைத்ரீய ஸம்ஹிதைதான்.

“இன்றைக்கு அதிகம் பேர் அநுஸரிப்பது யஜுர் வேதத்தைத்தான். யஜுர் வேதிகள் தான் மெஜாரிட்டி. வடக்கே இருப்பவர்களில் பெரும்பாலோர் சுக்ல யஜுர் வேதிகளாகவும், தெற்கத்திக்காரர்களில் பெரும்பாலோர் கிருஷ்ண யஜுர் வேதிகளாகவும் இருக்கிறார்கள். உபாகர்மா (ஆவணி அவிட்டம்) என்று கவர்மென்டில் லீவ் விடுவதானால்கூட ரிக்வேதிகளுக்கோ, ஸாம வேதிகளுக்கோ என்றைக்கு உபாகர்மமோ அன்றைக்கு விடுவதில்லை; யஜுர் உபாகர்மாவுக்குத்தான் லீவ் விடுகிறார்கள். யஜுர்வேதிகள் மெஜாரிட்டியாக இருப்பதாலேயே இப்படியிருக்கிறது” எனக் குறிப்பிடுகிறார் காஞ்சி மகாப் பெரியவா.

எந்த சித்தாந்தமானாலும் அதற்கு ஸூத்ரம், பாஷ்யம், வார்த்திகம் என்ற மூன்று இருக்கவேண்டுமென்பது வடகத்து மரபு.
ஸூத்ரம் என்பது சித்தாந்தத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்வது. பாஷ்யம் என்பது அதற்கு விரிவுரை. இந்த விரிவுரையையும் விஸ்தரித்து விளக்குவதுதான் வார்த்திகம்.
ஆதி சங்கரர் பிரம்ம சூத்ரத்திற்கு பாஷ்யம் எழுதினார்.இவை பத்து உபநிடத பாஷ்யங்களாக தொகுக்கப் பட்டது.
ஆதி சங்கரரின் சீடர்களுள் ஸுரேச்வரர் என்றொருவர் உண்டு, இவர் சங்கரரின் பத்து பாஷ்யங்களில் இரண்டிற்கு மட்டும்  வார்த்திகம் எழுதினார். அந்த இரண்டு, தைத்ரீய உபநிஷத்தும், பிருஹதாரண்ய உபநிஷத்தும் ஆகும். இவற்றில் தைத்திரீயம் கிருஷ்ண யஜுஸைச் சேர்ந்தது; பிருஹதாரண்யகம் சுக்ல யஜுஸைச் சேரந்தது.ஆனால் இரண்டுமே யஜுர் வேதம்தான்.

இவ்வளவு விளக்கம் தேவைதானா?,விசயத்திற்கு வருவோமே!
இந்த கிருஷ்ண யஜுர் வேதம் - தைத்திரீய ஸம்ஹிதை முதற்காண்டம் - மூன்றாம் பிரபாடகம் 1 ஆவது அநுவாகம் முதல் 11ஆவது அநுவாகம் வரை முழுக்க முழுக்க பசுவை சோம யாகத்தில் பலியிடும் முறையினை தெளிவாக விளக்குகிறது.(குறிப்பாக 8 முதல் 10 வரை உள்ள சில பகுதிகளை இணைத்துள்ளேன்).
பசுவை கயிற்றால் கட்டுதல்,தண்ணீர் குடிப்பித்தல்,நீர் தெளித்தல்,வலது பின்னங்காலில் நெய் தடவுதல்,கண்ணில்-செவியில்-இதயத்தில்-தொப்புளில்-கால்களில்-வயிற்றில் நீர் விடல்,வபை எனும் ஈரல் சவ்வை பிளந்தெடுத்தல்,வபையில் நெய் தடவுதல்,மாமிச ரசத்தை ஒமம் செய்தல், பசுவின் அங்கங்களை வேக வைத்தல், குடல் பதினொரு துண்டுகளாக்கி ஓமம் செய்தல் என அதற்கான மந்திரங்களுடன் விளக்கப் பட்டுள்ளது. தினமும் ஆடு வெட்டும் பாய்க்கு கூடத் தெரிந்திருக்காது இந்த வரிசைக் கிரமங்கள். அந்த அளவிற்கு சின்ன சின்ன விசயங்கள் துல்லியமாக விளக்கப்பட்டுள்ளன, இப்போது வாங்கும் கார் மற்றும் எந்திர உபகரணங்களுக்கு கொடுப்பார்களே user manual, அது போன்றவை இந்த மந்திரங்கள்.

ஒரு பிராமணன் என்பவன் ரிஷிகளுக்கு பிரம்மச்சர்யம் எனும் வேதப்பியசத்தாலும், தேவர்களுக்கு யாகத்தாலும், பித்ருக்களுக்கு ப்ரஜையாலும் கடமைப்பட்டவனாகிறான்.எவன் ஒருவன் புத்ரனைப் பெற்றானோ, யாகத்தைச் செய்தானோ, பிரம்ச்சாரியாக குருகுலத்தில் வாசம் செய்தானோ அவனே இக்கடன்களிலிருந்து விடுபட்டவனாகிறான்
எனக் குறிப்பிடுகிறது தைத்திரீய ஸம்ஹிதை.பசு என்பது தேவர்களுக்கு பிரியமானது, ஆகவேதான் அது யாகங்களில் பலியிடப்படுகிறது. வாஜபேய யாகத்திற்கு 23 பசுக்கள் மற்றும் அசுவமேதா யாகத்திற்கு 100 பசுக்கள் மட்டுமே பலியிடப் படுகின்றன எனும் தகவலை காஞ்சி மகாப் பெரியவா தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம் பக்கம் 355 ல் குறிப்பிடுகிறார்(இணைப்பில் இந்தப் பக்கம் உண்டு). 

100 பசுக்களைப் பலியிட்டு அசுவமேத யாகம் செய்பவன்  சர்வ பாவங்களையும் போக்கிக் கொள்கிறானாம். 400 விதமான யாகங்களை புரோகிதர்கள் செய்திருக்கிறார்கள் என்பதையும் காஞ்சி மகாப் பெரியவர் விளக்குகிறார்.இதை கருத்தில் கொண்டால், எவ்வளவு பசுக்கள் கொல்லப்பட்டிருக்கும் என்பதற்கு அளவே இல்லை.பசுவை பலியிட்டதற்கான ஆதாரமாக யஜுர் வேத தைத்திரீய ஸம்ஹிதையில் உள்ள ஒரு சில பக்கங்களை மட்டும் இணைத்துள்ளேன். டி.என்.ஜா அவர்கள் எழுதிய “பசுவின் புனிதம்” நூலில் இன்னும் நிறைய ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன.

தைத்திரீய ஸம்ஹிதை ஆர்.ராமச்சந்திர சாஸ்திரி அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு 1920 ல் வெளிவந்த நூல் ஆகும். இந்த நூலில் பலியிடப்படுவது பசு என்பது தெளிவாகவே குறிப்பிடப் பட்டுள்ளது. இன்னொரு தைத்திரீய ஸம்ஹிதை நூல் காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமிகளால் மொழிபெயர்க்கப் பட்டு 1939 ல் வெளிவந்த நூல்.இந்த நூலில் பசு என்பது கடா என்று மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இரண்டு நூல்களின் சில பக்கங்களை இணைத்துள்ளேன். ஒரு விசயம் எப்படி மடைமாற்றம் செய்யப் படுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

ஆனால் யாகத்தில் பசு என்பது பலியிடப்படும் எந்த மிருகமாகவும் இருக்கலாம் எனக் குறிப்பிடுகிறார் காஞ்சி மகாப் பெரியவர்.
எந்தெந்த மிருகங்கள் உண்பதற்கு உகந்தவை எந்தெந்த மிருகங்கள் பறவைகள் மீன் வகைகள் கூடாதவை என்பன ஆபஸ்தம்ப தர்மசூத்ரம் நூலில் உள்ளன.

இனிமேலும் நாங்கள் யாகங்களில் பசுவை பலியிட்டதில்லை, பசுவை உண்டதில்லை, மாமிசம் தீட்டு என்பதை யாராவது சொன்னால் அது எவ்வளவு பெரிய பொய்யாக இருக்கும் என்பதை, இந்தப் பதிவைப் படித்த பிறகாவது அவரவர் மனசாட்சியைக் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.

- தினகரன் சில்லீஸ் முகநூல் பதிவு, 23.4.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக