திங்கள், 15 அக்டோபர், 2018

தமிழர் தலைவரின் மனுதர்மம் குறித்த மூன்று நாள் ஆய்வுரை மனுதர்மத்தின் மந்தராலோசனைக் கூடாரமே சங்கர மடம் (4)மனுதர்மம் பற்றிய ஆய்வுச் சொற்பொழிவில் பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டினார் திராவிடர் கழகத்தலைவர்.

அவற்றுள் ஒன்று சென்னை தியாகராயர் நகரில் திடீர் பிள்ளையார் விவகாரம்-எவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றும் கூட!

8.9.1970 விடியற்காலை சென்னை தியாகராயர் நகரில் திடீர் பிள்ளையார் தோன்றியது என்று ஒரு பரபரப்பான செய்தி உலா வந்தது.

அவ்வளவுதான், மக்கள் திரள் - வழக்கமாக உடனே உண்டியலும் வந்தது. ஒரு பார்ப்பன காவல்துறை அதிகாரியே “ஆமாம், ஆமாம் நான் நேரில் பார்த்தேன்- நடந்தது உண்மைதான்” என்று சம்மன் இல்லாமல் ஆஜரானார்.

காஞ்சிபுரம் மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி “ஆமாம், ஆமாம்“ என்று ஆமோதித்தார். காஞ்சியில் செய்தியாளர்களிடம் (26.9.1970) என்ன சொன்னார் என்பது முக்கியம்.

லோக குரு என்று தூக்கி நிறுத்தப்படுபவர்கள் கடவுள் சமாச்சாரம் என்கிற போது மோசடிகளுக்கெல்லாம் முட்டுக் கொடுக்க ஓடோடி வருகிறார்கள் என்பதை நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். (கடவுள்களே பூணூல் தரித்துள்ளனவே!)

“இந்தியாவில் அநேகக் கோயில்களில் ‘ஸ்வயம்பு’ மூர்த்திகள் உள்ளன. எனவே தி.நகர் (தியாகராயர் நகர் என்று அவாள் வாயில் வரவே வராது) விநாயகரை ‘ஸ்வயம்பு’ என்று இந்து மதத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் சொல்வதை ஆட்சேபிக்க வேண்டியதில்லை. தி.நகரில் தோன்றியது ‘ஸ்வயம்பு’ விநாயகர்தான் என்று பலர் என்னிடமும் சொல்லியிருக்கிறார்கள். எனவே இந்து மதத்திலும், ‘ஸ்வயம்பு’ விக்கிரகங்களிலும் நம்பிக்கை உள்ளவர்கள் தி.நகர் விநாயகர் எப்படி வந்தார் என்பது பற்றிய அனாவசிய சர்ச்சைகளை நிறுத்தி விட்டு பக்தி சிரத்தையுடன் அவரை வழிபடுவார்களாக!”

சங்கராச்சாரியாரின் இந்த செய்தியைப் பாராட்டி ஏடுகள் முதல் பக்கத்தில் வெளியிட்டு கூத்தாடின.

புலனாய்வுத்துறை வேகவேகமாக செயல்பட்டு, உண்மை விடயத்தை முகத்திரையைக் கிழித்து வெளியில் கொண்டு வந்து விட்டது. செல்வராஜ் என்ற தலைமை கான்ஸ்டபிள் என்பவர் தான் இந்தப் பிள்ளையார் பொம்மையை சைக்கிளில் கொண்டு வந்து சிறுகுழி தோண்டிப் புதைத்துள்ளார். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பருத்திக் கொட்டையும் வைக்கப்பட்டது. தண்ணீரில் பருத்திக் கொட்டை ஊறினால் அது ஊதிப் பெருத்து மேலே கிளம்பும் அல்லவா! ஆகா எவ்வளவுப் பெரிய யுக்தி- தந்திரம்! (இதன் பின்னணியில் அந்தப் பகுதி சட்டமன்ற உறுப்பினரான பார்ப்பனர் கே.எம்.சுப்பிரமணியன் என்பதும் முக்கியம்)

தியாகராயர் நகர் கல்தொட்டிப் பகுதியில் சிலைகள் செய்யும் கடை வைத்திருந்த மருதப்பிள்ளை என்பவரிடம் ரூ.71க்கு கான்ஸ்டபிள் செல்வராஜ் வாங்கியதும் அம்பலமாகி விட்டது.

இந்த நிலையில் 10.10.1970 என்று காவல்துறை இந்தத் திட்டமிட்ட திடீர் பிள்ளையார் சிலையை அப்புறப்படுத்தி, உண்டியலையும் பறிமுதல் செய்து விட்டது. (சர்வ சக்தி பிள்ளையாரால் காவல்துறையைத் தடுக்க முடியவில்லை)

இதற்கிடையில் சென்னை தியாகராயர் நகரில் 12.10.1970, திங்கள் மாலை 7 மணிக்கு தந்தை பெரியார் “சமுதாய சிந்த னைகள்”என்னும் தலைப்பில் உரையாற்றுவதாக அறிவிக்கப் பட்டதால் பிள்ளையார் சிலை பறிமுதல் காவல்துறையால் முடுக்கிவிடப்பட்டது.

19.10.1970 வரை அந்தப் பகுதியில் தடை உத்தரவுப் போடப்பட்டது. பார்ப்பனர்கள் சும்மா இருப்பார்களா? அவர்களின் வயிற்றுப் பிழைப்பு தந்திரம் பாழானதே!”வீரசக்தி விநாயகர் சங்கம்“ என்ற அமைப்பு ஒன்றை உருவாக்கி தடையுத்தரவை 18ஆம் தேதியன்று மீறப்போவதாக அறிவித்தனர். பார்ப்பன ஏடுகள் அவர்களின் அம்பறாத் துணியில் எப்பொழுதும் தயாராக வைத்திருக்கும் “ஆசிரியர் கடிதங்கள்” என்ற அஸ்திரங்களை வீச ஆரம்பித்துவிட்டன.

ஆனால் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் முதல் அமைச்சர் ஆயிற்றே - அதுவும் தந்தை பெரியார் அவர்களே சம்பந்தப்பட்ட பகுதியில் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தின் அறிவிப்பும் ‘விடுதலை’யில் வெளிவந்து விட்டதே!

சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்ற நிர்வாக  கண்ணோட்டத்திலும் காவல்துறை மிகத்துல்லியமாக செயல்பட்டது.

முதலமைச்சர் கலைஞர் மீது சேற்றை வாரி இறைத்தனர். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சக்கூடியவரா அந்தப் பெரியாரின் தன்மானச் சீடர்?

அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் பேசிய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் (13.10.1970) சில உண்மைகளை வெளியிட்டார்.

சம்பந்தப்பட்ட இடத்தில் மசூதிக் கட்ட முசுலிம்கள் பணம் கொடுத்து வாங்கப்பட்ட இடமாகும். அதைக் குறி வைத்து தான் இந்த திடீர் பிள்ளையார் சூழ்ச்சி அரங்கேற்றப்பட்டதை வெளிப் படுத்தினார்.

நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டதால் அந்தக் கூட்டத்தில் அவருக்கே உரித்தான நையாண்டியுடன் முதலமைச்சர் கலைஞர் கூறியதாவது:

“நீதி விசாரணை நடந்தால் பிள்ளையாரே வந்து சாட்சி சொன்னால் ‘என் பெயரால் இப்படி ஏமாற்றுபவர்களை நம்பா தீர்கள்!’ என்று சொல்லி எங்கள் பக்கம் தான் பேசுவாரே தவிர உங்கள் பக்கம் சேர மாட்டார்!” என்று சொன்னாரே பார்க்கலாம்.

பார்ப்பனர்களுக்கென்று உள்ள புத்தியை ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் ‘மனுதர்மப் புத்தி’ என்று சொல்லி விடலாம்.

அவர்கள் பித்தலாட்டத்திற்கும், மோசடிக்கும், சூழ்ச்சிக்கும், தில்லு முல்லு தனங்களுக்கும் ‘ஜெகத்குரு’ என்றும், ‘பெரியவாள்’ என்றும் தூக்கிப் பிடிக்கும் சங்கராச்சாரியாரே வக்காலத்துப் போட்டு முன் வரிசைக்கு வருகிறார் என்றால் புரிந்து கொள்ள வேண்டுமே!

அதுவும் எப்படி? ‘ஸ்வயம்பு’ எப்படி வந்தது என்று அனாவசிய பிரச்சினை பண்ணக்கூடாதாம், எப்படி? மோசடி செய்வார்களாம் - அவற்றையெல்லாம் கண்டுக் கொள்ளக் கூடாதாம் - ‘பக்தி சிரத்தையுடன் வழிபடுவார்களாக’ என்று சொல்பவர்தான் ஜெகத்குரு. வடிகட்டிய படு வெட்கக்கேடு! காஷாய வேடத்தில் கடும் விஷம்!

மனுதர்மம் என்றால் மகத்தான தர்மத்தைப் போதிக்கும் பொக்கிஷம் என்ற ஒரு மாயையை உருவாக்கி வைத்திருந்தனர். அந்த மாயையை உடைத்து அதன் மண்டைக்குள் புழுத்து நெளியும் புழுக்களாம் கொடூரத்தை அறுவை சிகிச்சை செய்து வெளியில் கொண்டு வந்து தோரணமாக தொங்கவிட்டது வடக்கே அண்ணல் அம்பேத்கர், தெற்கே தந்தை பெரியார்.

மனுதர்ம ஆய்வுச் சொற்பொழிவை நடத்திய தமிழர் தலைவர் ஒரு தகவலை சொன்ன போது எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

“பயிரிடுதலை மேலான தொழில்என்று சிலர் கருதுகின்றனர். ஆயினும் பெரியோர் அதைப் பாராட்டவில்லை. ஏனெனில், இரும்புக்கொழு நுதியுடைய கலப்பை, மண்வெட்டி, இவற்றைக் கொண்டு பூமியையும், பூமியில் வாழும் சிறிய உயிரினங்களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ?” (மனுதர்மம் அத்தியாயம் 10, சுலோகம் 84)

எப்படி இருக்கிறது? ஏர்பின்னது உலகம் என்ற தமிழர் பண்பாடு எங்கே? பயிர்த்தொழில் பாவம் என்னும் மனுவாதிகள் எங்கே?

பயிர்த்தொழில் பாவத்தொழில் என்றால் பார்ப்பனர் வயிற்றில் பச்சரிசி சோறு அறுத்து வைப்பது எப்படி? பச்சைக் காய்கறிகள் பரிமாறுவது எப்படி? அக்கார அடிசல் வடித்துக் கொட்டுவது எப்படி?

1921ஆம்ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் வடுவூரில் இரு பார்ப்பனர்கள் உழவுத் தொழிலை மேற்கொண்டார்கள். பார்ப்பனர்கள் அவர்களை விலக்கி வைத்தார்கள். அந்தச் சமயம் கும்பகோணம் சங்கராச்சாரியார் அந்தப் பகுதிக்கு வந்தார். அந்த இரு பார்ப்பனர்களும் சங்கராச்சாரியாருக்குக் காணிக்கை  செலுத்த முன் வந்தார்கள். ஆனால் சங்கராச்சாரியாரோ அதனை ஏற்றுக் கொள்வில்லை. பிழைப்புக் காக உடலால் உழைப்பது என்ற பாவத்தைச் செய்த பிராமணர்களிடமிருந்து தாம் காணிக்கை எதையும் பெற்றுக் கொள்ளமுடியாது என்று கூறிவிட்டார்.

அந்த இரு பார்ப்பனர்களும் காந்தியாருக்குக் கடிதம் எழுதி விளக்கம் கேட்டார்கள்.

“கொடுமையான ஒரு சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப் பெறுவதே ஒரு சிறப்புத்தான். அதை வரவேற்க வேண்டும்” என்று சரியான  பதிலடி கொடுத்தார் காந்தியார்.

(ஆதாரம்: ‘தமிழ்நாட்டில் காந்தியார்’ - பக்கம் 378)

பிழைப்புக்காக உடலை வருத்தக்கூடாது என்று சங்கராச் சாரியார் சொல்லுவதை கவனிக்கத் தவறக்கூடாது. இதன் பொருள் என்ன? தலை வாழை இலை போட்டு, நெய் மணக்க மணக்க, உருண்டை உருண்டையாக உள்ளே தள்ளி, வயிறு நிறைய சந்தனம் தடவிக் கொண்டு மல்லாக்கப் படுத்து புரளும் பார்ப்பனர்களுக்கு அந்த உணவு எங்கிருந்து வந்தது என்பது தெரியாதா? பஞ்சம, சூத்திரர்களின் உடலுழைப்பாலே கிடைத்த தல்லவா? பிறன் உழைக்கலாம், தான் மட்டும் பிறன் உழைப்பில் கொழிக்கலாம் என்பதுதான் பார்ப்பனத் தர்மம் - புரிந்து கொள்க!

பார்ப்பனர்களுக்குக் குறைந்த அளவு தண்டனை கொள்வதற்கு - நியாயம் கற்பித்து காஞ்சி சங்காராச்சாரியார் கூறும் விசித்திர வித்தாரக் காரணத்தை கொஞ்சம் கேளுங்கள், கேளுங்கள்!

“இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும். ராஜாவுக்கு பிராமணனை தண்டிக்க மட்டும் அதிக ‘ஜூரிஸ்டிக்ஷன்’ (ஆணையெல்லை) கொடுக்கப்படவில்லை. பிராமணனுக்குத் தரும் தண்டனை கடுமைக் குறைவாகவே இருக்கும். இதைப் பார்க்கிற போது 'equality before law' - சட்டத்துக்கு முன் ஸமத்வம் - இல்லாமல், சலுகையே தரக்கூடாத ஒரு விஷயத்தில் சலுகை தந்து நியாயம் செய்திருப்பதாகத் தோன்றலாம். அப்படி தோன்றினால் அது  நியாயந்தான். ஆனாலும் இதன் காரணத் தைப் புரிந்து கொண்டால் இதிலே அநியாய பக்ஷபாதமில்லை என்று தெரியும். இப்போது ‘பிராயச்சித்தம்‘ என்று சொன்னேனே, அது தான் காரணம்.

குற்றவாளிக்கு ராஜதண்டனையே பிராயச்சித்த கர்மா ஆகிறது என்றேன். பிராமணன் வேத மந்திர ரக்ஷணையையே  வாழ்க்கையாகக் கொண்டவன். ஒரு நாள் கூட அவனை விட்டு இந்த வாழ்க்கை ஆசாரம் போகப்படாது. அப்படிப் போனால் அது தேச க்ஷேமத்துக்கே கெடுதல். ஜெயிலில் போட்டால் அவன் எப்படித் தன் ஆசாரங்களுக்கு பங்கமில்லாமல் மந்திர ரக்ஷணை பண்ண முடியும்? அல்லது கண்ணை வாங்கி, காலை வாங்கி, அவனை தண்டித்தால் அப்போதும் அவனால் ஆகிய வேதரக்ஷணம் அல்லவா கெட்டுப் போகும்? வேத தர்மம் இருக்க வேண்டும் என்பதற்குத்தான் ராஜாங்கம் இருப்பதே. அதுவே தன் லட்சியத்துக்கு ஹானி செய்யலாமா? அதனால்தான் ராஜசிக்ஷையை பிராமணனுக்கு ரொம்பவும் குறைத்துச் சொல்லியிருப்பது. ஆனால் அதற்காக அவனை வெறுமே விட்டு வைத்து விடவில்லை. மந்த்ர ரக்ஷணைக்காக ஏற்பட்ட அவனுக்கு ஒவ்வொரு குற்றத்துக்கும் தண்டனையாக மந்திரப் பூர்வமாக ரொம்பவும் கடுமையான பிராயச் சித்த கர்மாக்களை சாஸ்திரமே கொடுத்திருக்கிறது. ராஜ தண்டனை இல்லா விட்டாலும் அவனுடைய ஸமூஹகத்துக்கான சபை அவனை விசாரித்து இப்படிப்பட்ட பிராயச்சித்தங்களை ரொம்பவும் ஸ்ட்ரிக்கட்டாக விதித்து, பலவித குற்றங்களுக்கு ஜாதி ப்ரஷ்டமே பண்ணிவிடுவதென்பது அவனை அப்படிப்பட்ட குற்றங்களை மனசாலும் நினைத்துப் பார்க்க முடியாமல் தடுத்தது. ராஜ தண்டனையிலிருந்து பெருமளவுக்கு பிராமணர்கள் விலக்கு பெற்றிருந்ததால் அவர்கள் ஒழுங்கு தப்பிக் குடிகாரர்களாகவும், காமுகர்களாகவும், கொள்ளை லாபக் கூட்டமாகவும் போய் விடாமல் சமீபகாலம் வரை மற்ற எல்லா சமூகங்களாலும் ரொம்பவும் மரியாதைக் குரியவர்களாகவும், உதாரணமாகப் பிறர்க்கு வழிகாட்டுபவர்களாகவுந்தானே கருதப்பட்டிருந் திருக்கிறர்கள். இதிலிருந்தே அவர்களை அர்த்த சாஸ்திரம் நடத்திய விதம் ஜஸ்டிஃபை ஆகி விடுகிறதல்லவா?”

(தெய்வத்தின் குரல், 3ஆம் பாகம், 870-872)

அடேயப்பா - எவ்வளவு வளைத்து வளைத்து வக்கணை வக்காலத்து. பிராமணன் வேத மந்திர ரக்ஷணையையே வாழ்க்கையாகக் கொண்டவனாம். ஒரு நாள் கூட அவனை விட்டு இந்த வாழ்க்கை ஆசாரம் போகப்படதாம். அப்படிப் போனால், அது தேச க்ஷேமத்துக்குக் கேடாம். அதனால் அவனுக்கு-  எந்த குற்றம் செய்தாலும் கடுமையான தண்டனை கொடுக்கக் கூடதாம்.

ஜெகத் குருவான ஒருவருக்கு  பிராமணர்கள் மீது மட்டுமே எத்தனை அக்கறை - எண்ணிப் பார்க்க வேண்டாமா?

மனுதர்ம சாரத்தின் பிழிவைத்தான் சங்கராச்சாரியார் தன் பாஷையில் இதோபதேசம் செய்கிறார்.

இந்தியாவில் இரயில் அறிமுகப்படுத்தப்பட்ட போது நான்கு பெட்டிகளில் ஒவ்வொரு வருணம் தீட்டப்பட்டு பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்களுக்கென்று அப்பெட்டிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பார்ப்பனர்கள் வெள்ளைக்கார அதிகாரிகளிடம் மனு கொடுத்த போது நகைத்து நிராகரித்தனர் - பார்ப்பனத் திரிநூலார் திருந்தி விட்டனர் என்பதற்கு இதுதான் அடையாளமா?

தமிழர் தலைவரின் மூன்று நாள் ஆய்வுரை ஆரியத்தின்  அக்கிரம ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் மனுதர்மத்தின் கொடூரத்தை இந்தத் தலைமுறைக்குச் சொல்லியிருக்கிறது என்பதுமட்டும் காலத்தின் கல்வெட்டு!

கடைசிச் செய்தி: ராஜஸ்தான் - ஜெய்ப்பூர் உயர்நீதி மன்றத்தில் உள்ள மநுவின் சிலைக்கு கருப்பு வண்ணம் பூசிய இரு பெண்கள் கைது.                                         (முற்றும்)

- விடுதலை நாளேடு, 10.10.18

சனி, 13 அக்டோபர், 2018

வர்ணம் பற்றி கீதை என்ன சொல்கிறது!

இதுதான் இந்து மதத்தின் ‘ஜாதி பாராமைக்கான’ இலட்சணமா?


கேள்வி: தமிழ்நாட்டில் அரிஜனங்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட இருக்கிறார்களே... அதைப் பற்றி?

சங்கராச்சாரி: அர்ச்சனை நடந்த அவர்களுக்குத் தகுதியில்லை. ஆகவே அவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது சரி இல்லை.

கேள்வி: அர்ச்சனை முறைகளைக் கற்றுக் கொள்ளலாம் அல்லவா? அதற்கு பிறகு அர்ச்சகர்களாகப் பணிபுரியும் தகுதி அவர்களுக்கு ஏற்படலாமே?

சங்கராச்சாரி: அவர்களுக்கு தகுதி இல்லை. அவ்வளவுதான். மேலே இதைப்பற்றி விவாதத்திற்கே இடமில்லை.

கேள்வி: ‘சாதுர்வர்ணயம்மயா சிருஷ்டம்’ என்ற கீதையின் சுலோகத்தைப் பற்றிச் சுவாமிகள் என்ன கருதுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

சங்கராச்சாரி: பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் போன்ற நால்வகையினரையும் தாமே படைத்ததாகக் கடவுள் கூறுகிறார்.

கேள்வி: ஆனாலும் குணம், தொழில் அடிப்படையில் (குணகர்மா) அவர்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தானே கீதாசிரியர் கூறுகிறார்?

சங்கராச்சாரி: இக்காலத்துக் குணகர்மங்களின் அடிப்படையில் அல்ல. முற்பிறவியில் அவர்கள் செய்த குணகர்மங்களின் அடிப்படையில்தான் பிராமணர்கள் என்றும், க்ஷத்திரியர்கள் என்றும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த சுலோகத்தில் சொல்லப்படும் குணகர்மா முற்பிறவி சம்பந்தப்பட்ட குணகர்மாவாகும். ஒரு பிராமணன் தன்னுடைய கடமைகளைச் செய்யாவிட்டால் அடுத்த பிறவியில் கடவுள் அவனைத் தண்டிப்பார்.

 - பூரி சங்கராச்சாரியாரிடம் மணியன் பேட்டி,

‘ஆனந்த விகடன்’, 16.6.1974 

விடுதலை ஞாயிறு மலர், 22.9.18

ரிக் வேதத்தில்

டாக்டர் ராஜேந்திரலால் மித்ரா, அவர்கள் கூறுவது மாதிரி, இரத்த பலி கொடுப்பது அன்றும் இன்றும் நடைபெற்று வரும் ஒரு பண்டைய வழக்காகும். வங்காளத்தில் இன்றும் காணலாம், துர்க்கா பூஜை காலங்களில் சிலை முன்பு நின்று கொண்டு பெண்கள் தங்கள் மார்பு இரண்டுக்கும் நடுவிலுள்ள பாகத்தில் சற்று சீறி ரத்தம் வெளிப்படுத்தி தங்களது முன்னாளைய பிரார்த்தனையைச் செலுத்துவதன் அறிகுறியாக, கன்னங்களில் வெள்ளி வேலால் குத்திக் கொள்ளும் பழக்கம் இன்றும் - உண்டே தென்னாட்டுப் பகுதியில்!


பழங்குடி மக்கள் மேல் படையெடுத்துச் செல்லுமுன்னர் அவர்கள் தங்கள் கடவுளர்களைப் பிரார்த்திக்கும் முறை பாருங்கள்! சிறு சிறு பகுதியாக வந்து, நூற்றுக்கானக்கான ஆண்டுகட்குப் பிறகேதான் சற்றேனும் இடத்தைப் பிடிக்க முடிந்தது அவர்களால் என்பது நினைவில் இருக்கட்டும். தங்கள் கடவுள்களை வேண்டின முறை பாரீர்!

எரியல் விழுங்கிந்த எத்தர்

களையும் பித்தர்களையும் (36.20)

இடியே இ எறியவர் மேல்

உன் வச்சிராயுதத்தை! (36.20)

அழியல் வறிவிலர் தமை

எரித்துவிடு ஒழியக் குழுவை

துரத்தக் கொடியாரை

அழல்கண் னரையழியாப்

பகையால்பாட்டு

தழலோய் கூட்டோடே

கடிந்திடப் பகையை.

ரிக்வேதம் 8.18:13

(ஆங்கில மொழி பெயர்ப்பின் கருத்தி னைக் கொண்டது. ஆ.ர்.)

பச்சை மாமிசம் தின்போர், திருடர், வஞ்சகர், கொலைஞர், அழிவுக்காரர்கள் என்றெல்லாம் திராவிடர்களைப் பற்றிக் கூறும் பொருட்டு வசைபாடும், அது தான் வேதமாக இருக்கிறது.

- விடுதலை 8.7.1953

- விடுதலை ஞாயிறு மலர், 22.9.18

வியாழன், 11 அக்டோபர், 2018

தமிழர் தலைவர் ஆய்வு சொற்பொழிவு - ஒரு பார்வை! பார்ப்பனர்களுக்கு அடிமைப்பட்ட தமிழ் அரசர்கள் (3)

*மின்சாரம்


நம் நாட்டுத் தமிழ் அரசர்கள் மனுவாதி சிந்தனை களோடுதான் நடந்து கொண்டனர். நிலங்களைப் பார்ப்பனர்களுக்குத் தானமாக வழங்கியது குறித்தும், கல்விக் கூடங்கள் கட்டியது  எல்லாம் பார்ப்பனர்கள் சமஸ்கிருதம் படிப்பதற்கே தவிர தமிழர்கள் படிப்பதற்கான தமிழ்ப்பற்றிய கல்வி கிடையாது என்பது குறித்தும் சென்னை ஆய்வுக் கூட்டத்தில் எடுத்துக் கூறினார் திராவிடர் கழகத் தலைவர். மங்கலம் மங்கலம் என்று முடியும் ஊர்கள் எல்லாம் நமது வேந்தர்களால் பார்ப்பனர் களுக்குத் தானமாகத் தூக்கிக் கொடுக்கப்பட்டவை தான்.

அரசுக்குச் சொந்தமில்லாத நிலங்களாக இல்லாதிருந்தால் அந்த நில உடைமையாளர்களிடம் பணம் கொடுத்து வாங்கி, அந்நிலங்களை பார்ப்பனர்களுக்குத் தானமாக வழங்கியிருக்கிறார்கள் நமது 'மாண்புமிகு'  மானங்கெட்ட அரசர்கள்.

எடுத்துக்காட்டாக, ஒன்றைக் குறிப்பிடலாம். சுங்கம் தவிர்க்க சோழநல்லூர் 108 பிரிவுகளாக்கப்பட்டு 106 பிரிவுகள் பிராமணர்களுக்குத் தானமாகத் தரப்பட்டது. இந்தத் தானம் சமந்த நாராயண சதுர்வேதிமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள பிராமணர்களுக்கு தரப்பட்டது. மற்ற இரு பாகங்கள் மேற்படி கிராமக் கோயிலுக்குத் தரப்பட்டது.

இந்தத் தானத்தைச் செய்வதற்காக மன்னன் தமது உயர்தரமான அதிகாரியை அனுப்பி மேற்படி கிராமத்தை அதன் பூர்விக வாரிசுதாரரிடமிருந்து விலைக்கு வாங்கிச் செய்தார்.

இந்தச் சொத்து பிராமணர்களுக்குச் சர்வமான்யமாக்கப் பட்டது. அதாவது விற்க, ஈடுகட்ட, அவர்களுக்குப் பாத்தியதை செய்யப்பட்ட என்ற தகவல் தரும் சாசனம் காணக் கிடைக்கிறது. இது போல் இன்னும் ஏராளம் உண்டு.

நான்கு  வேதங்கள் படித்திருந்தால் சதுர்வேதிமங்கலம். மூன்று வேதங்கள் படித்திருந்தால் அவர்களுக்குத் தானமாக அளிக்கப்படும் நிலங்கள் அடங்கிய ஊர் திரிவேதி மங்கலம், இரு வேதங்கள் படித்தவர்களுக்குத் துவிவேதி மங்கலம், ஒரு வேதமும் தெரியாத பிராமணர்களுக்கு அளிக்கப்படு வதுதான் கிராமம். அக்கிராமங்கள் எல்லாம் பிராமணர்களின் ஆளுகைக்கு உட்பட்டவை - சூத்திரர்கள் வேலை செய்து கிடப்பதே வருண தர்மம்!

திருமுக்கூடல் என்னும் ஊரில் இருந்த வெங்கடேசப் பெருமாள் கோவிலில் - நான்கு வேதங்களைக் கற்பிக்க என்றே ஒரு வேதக் கல்லூரி நிறுவப் பெற்றிருந்தது. இந்தக் கல்லூரியில் பயில்கின்ற பார்ப்பன மாணவர்கள் தங்கியிருக்க மாணவர் விடுதிகள் 2 கட்டப்பெற்றிருந்தன.

இந்தக் கல்லூரியில் நான்கு வேதங்கள், சாத்திரங்கள், சமஸ்கிருத வியாக்ரணங்கள் எனப்பட்ட வடமொழி இலக்கணங்கள் முதலியவை கற்றுத் தரப்பட்டன.

மாணவர் விடுதியில் தங்கிப் பயின்ற பார்ப்பனச் சிறுவர்களுக்கு சுவையான உணவு வழங்கப்பட்டது.

சனிக்கிழமை தோறும் எண்ணெய் நீராட நல்லெண் ணெய் தரப்பட்டது.

இத்தகவல்களை திருமுக்கூடல் கல்வெட்டுகள் தெரி விக்கின்றன.

எண்ணாயிரம் கோவிலில்...

எண்ணாயிரம் கோவில் என்றதும் எட்டாயிரம் கோவில் களின் எண்ணிக்கை என்று எண்ணிவிட வேண்டாம். 'எண்ணாயிரம்' என்னும் ஊரில் இருந்த கோவில் இந்தப் பார்ப்பனர் கூட்டம் அனுபவித்த கல்விச் சுகத்தினையும் தின்று கொழுத்த செய்திகளையும் அறிய இருக்கிறோம்.

கி.பி. 1023-இல் முதலாம் இராசேந்திரசோழன் காலத்தில் எண்ணாயிரம் என்ற இந்த ஊரில் இருந்த கோவிலில் 'கங்கை கொண்ட சோழ மண்டபம்' என்ற பெயரில் பெரிய மண்டபம் ஒன்று இருந்தது.

இந்த மண்டபத்தில், இருக் வேதம் படிக்கும் பார்ப்பன மாணவர்கள் 75 பேர்; யசுர் வேதம் படிக்கும் பார்ப்பன மாணவர்கள் 75 பேர்; சாம வேதம் படிக்கும் பார்ப்பன மாணவர்கள் 50 பேர். அதர்வண வேதம் படிக்கும் பார்ப்பன மாணவர்கள் 10 பேர்; மற்ற சாத்திர பாடம் படிக்கும் பார்ப்பனர்கள் 20 பேர்; தெய்வக் கலையின் பழம் பிறப்பைப் பயின்றவர்கள் 40 பேர்; ஆக மொத்தம் 270 பார்ப்பன மாணவர்கள் படித்து வந்தனர்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பார்ப்பன மாணவ ருக்கும் 6 நாழி நெல் தானமாகக் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த மண்டபத்தில், வடமொழி வியாக்ரணம் கற்றோர் 25 பேர்; பிரபாகரம் என்னும் மீமாம்சை கற்றோர் 25 பேர்; வேதாந்தம் பயின்றோர் 10 பேர்; இவர்களும் அந்த மண்ட பத்தில் தங்கிப் படித்தனர். ஒவ்வொரு நாளும், ஒவ் வொருவருக்கும் 1 குறுணி 2 நாழி நெல் அளிக்கப்பட்டு வந்தது.

வியாக்ரணம் கற்பித்த பார்ப்பன ஆசிரியர்களுக்கு

1 கலம் நெல், பிரபாகரம் கற்பித்த பார்ப்பன ஆசிரியர்களுக்கு 1 கலம் நெல், வேதாந்தம் கற்பித்த ஆச்சாரியார்களுக்கு

1 கலம் நெல் கொடுக்கப்பட்டது.

வேதப் பேராசிரியர் எனப்பெற்ற பார்ப்பனர்கள் 10 பேருக்கு நாள் ஒன்றுக்கு 30 கலம் நெல்வீதம் ஆண்டுக்கு 10,506 கலம் நெல்லும் அவர்கள் பயன்படுத்த பொன்னும் தரப்பட்டது.

இதுமட்டுமா? இந்த அநியாயத்தையும் பாருங்கள்! வியாக்ரணத்தை (சமஸ்கிருத இலக்கண நூல்) விளக்கிய பேராசிரியர்களுக்கு, ஒவ்வொரு அத்தியாயத்துக்கு 1 கழஞ்சு பொன்வீதம் 8 கழஞ்சு பொன் வழங்கப்பட்டு வந்தது.

பிரபாகரம் விளக்கியவர்களுக்கு, அத்தியாயம் 1-க்கு

1 கழஞ்சு பொன் வீதம் 12 கழஞ்சு வீதம் விளக்கியவர்களுக்கு - வேதப் பேராசிரியர்கள் 13 பேருக்கு, அரை கழஞ்சு வீதம் ஆறரை கழஞ்சுப் பொன் கொடுக்கப்பட்டது.

கலைப் பேராசிரியப் பார்ப்பனர்களுக்கு ஆளுக்கு அரை கழஞ்சுப் பொன்; வியாக்ரணம், மீமாம்சை பயின்ற மாணவர்கள் 70 பேர். 1 ஆளுக்கு அரை கழஞ்சு வீதம் 35 கழஞ்சுப் பொன் குறைவின்றிக் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்தப் பார்ப்பன மாணவர்கள், பேராசிரியர்களுக்குச் செலவழிக்க நிரந்தரமான ஓர் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.

மாம்பாக்கச் சேரி என்னும் பவித்திர மாணிக்க நல்லூர் என்னும் ஊரைச் சுற்றியிருந்த 45 வேலி நிலம் கோவிலுக்குத் தானமாக உரிமைப்படுத்தப்பட்டது. இவையாவும் 'எண்ணா யிரம் கோவில்' கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

ஒரத்தநாடு சத்திரத்தில்...

எண்ணாயிரம் கோவில் கல்விதானத்தை அடி ஒற்றி 1821-இல் தஞ்சை மராட்டிய ஆட்சியில் ஒரத்தநாடு முத்தம்மாள்புரம் சத்திரக் கல்வெட்டுகள் அமைந்துள்ளன.

1.11.1869-இல் ஆங்கில ஆட்சியின் ஆணைப்படி சத்திரத்தில் 1 பள்ளி; 1 விடுதி இருந்தன. 120 மாணவர்கள் தங்கிப் படித்தனர். அனைவரும் யார் என்று கேட்க வேண்டாம்! எல்லாம் 'அவாள்'களே!

நாள்தோறும் ஒவ்வொரு மாணவருக்கும் அளிக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கு ஆனப்பட்டியலைப் பாருங்கள்!

அரிசி 1 படி; பருப்பு 1/32 படி; மிளகாய் 1/64 சேர்; புளி 3/64 சேர்; உளுந்து 1/130 படி; கொத்துமல்லி 1/64 சேர்; மிளகு 1/60 சேர்; கடுகு 1/160 சேர்; வெந்தயம் 1/800 சேர்; உப்பு 1/640  சேர்; நெய் 1/64; ந.எண்ணெய் 1/64 சேர்; மஞ்சள் 3/6400 சேர்; சுக்கு 1/3200 சேர்; மோர் 1/8 படி; விறகு 2 1/2 சேர்.

வாரம் 2 தடவை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க, 1 குளியலுக்கு 3/16 சேர் நல்லெண்ணெய், அரப்புத் தூளுக்கு 1/2 காசு வழங்கப்பட்டு வந்தது.

தமிழர் கட்டிய கோவிலில் பள்ளியும் கல்வியும், விடுதியும் பார்ப்பனக் கும்பலுக்கே தாரை வார்க்கப்பட்ட கொடுமைகளைப் பார்க்கும்போது நம் உள்ளம் குமுறாதா!


(ஆதாரம் : நூல் : "கல்வெட்டில் வாழ்வியல்" ஆசிரியர்: டாக்டர் அ. கிருஷ்ணன்).

ஆய்வுக் கூட்டத்தில் கேரள மாநிலத்தில் நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு இருந்த ஆதிக்க, எல்லைமீறும் அநாகரிக உரிமைகளை விவரித்தார் கழகத் தலைவர்.

கேரளாவில் நம்பூதிரிப் பார்ப்பனர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்கள் பொலி காளைகளாகத் திரிந்தனர். இது குறித்து ஒரு முக்கிய தகவலைத் தன் ஆய்வுச் சொற் பொழிவில் குறிப்பிட்டார்.

"நம் பூதிரியின் - உடல் பவித்ரமானதாகும். சலனம் தெய்வீகக் காட்சியாகும். அவர் உண்டு மீந்த உணவு அமிர்தமாகும். மனித உயிர்களில் ஏற்றவும், உயர்ந்த நிலையில் பூஜிக்கப்பட வேண்டியவர்களாவர்; பூமியில் தெய்வத்தின் பிரதிநிதிகளாவர். இக்காரணங்களால் அவர்களுடன் எந்தப் பெண்ணிற்கு உறவு கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெறுகின்றதோ அவள் பாக்கியம் பெற்றவள்" என்று அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்க ளிடையே நம்பிக்கை ஊட்டப்பட்டிருந்தது.

"நம்பூதிரியை மகிழ்ச்சியடைய வைப்பது தெய்வத்தைத் திருப்திபடுத்துவதற்குச் சமமானதாகும். நாயர் பெண் களுடன் சயனிப்பதற்கான உரிமை கடவுள் அவர்களுக்கு வழங்கியதாகும். அதனை நிராகரிப்பவர்கள் - எதிர்ப்ப வர்கள்  - தெய்வக் குற்றத்திற்கு ஆளாவர்". இது போன்ற மூடநம்பிக்கைகள் சமூகத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் பரவியிருந்தக் காரணத்தால், அழகான பெண் குழந்தை களைப் பெற்றிருந்த நாயர் குடும்பங்கள் தங்கள் பெண்களை ஏதாவது ஒரு நம்பூதிரியுடன் சயனிக்க வைக்க மனப் பூர்வமாக விரும்பியிருந்தனர்.

"சூத்திரப் பெண்கள் பத்தினித்தன்மையைப் பேண வேண்டிய அவசியம் இல்லை எனவும், நம்பூதிரிகளின் ஆசாபாசங்களை நிறைவேற்றி வைக்க சுயம் சமர்ப் பிக்கப்பட்டவர்கள் என்றும் இது கேரளத்திற்கு ஆச்சாரங் களைப் பரிசளித்தப் பரசுராமன் போட்டக் கட்டளையாகும் என ஆச்சாரங்களைக் கற்பித்துப் போற்றும் பிராமணர்கள் தெரிவிக்கின்றனர்". (சி. அச்சுத மேனன் - கொச்சின் மாநில கையேடு - 1910. பக்கம் 193. C.achchutha menon - Cochin State manual - 1910. Page No: 193)

நம்பூதிரி ஆண்களுக்கு உடன்படாத சூத்திரப் பெண் களை வழிகெட்டவர்களாக நினைத்து மக்கள் அவர்களை ஒதுக்கினர். அவ்வாறான வழிகெட்டப் பெண்களைக் கொன்றுவிடும் அளவிற்கு அன்று நம்பூதிரிமார்களுக்கு அதிகாரம் இருந்தது. கார்த்திகப்பள்ளியிலுள்ள தெருக்களில் காணப்பட்ட விளம்பரங்கள் இவற்றைச் சரியென எடுத்தியம்புகின்றன.

அங்கு காணப்பட்ட ஒரு விளம்பரம் இவ்வாறு கூறுகின்றது: "நம்முடைய நாட்டில் சொந்த ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ, உயர் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ வழங்கி வராத வழிகெட்டப் பெண்கள் உண்டு எனில் அவர்களை உடனடியாக கொன்று விட வேண்டும்" (கேரள வரலாற்றின் இருண்ட பக்கங்கள், இளம்குளம் குஞ்ஞன் பிள்ளை - பக்கம் 147).

சூத்திரப் பெண்டிர் மீது உயர்சாதியினரால் நிகழ்த்தப் பட்ட உச்சக்கட்ட அடக்கு முறையாகும் இது.  "நம்பூதிரி வீட்டில் மூத்த மகனுக்கு மட்டுமே திருமணம் செய்வதற்கு அனுமதி உண்டு. "மூத்த சகோதரன் மட்டும் சொந்த ஜாதியில் திருமணம் செய்வதும் மற்ற சகோதரர்கள் நாயர் பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம் திருமண வயதைக் கடந்த மிக அதிகமான கன்னிகள் நம்பூதிரி சமுதாயத்தில் இருப்பர். இதே நேரம் வீட்டில் மூத்த சகோதரன் பல மனைவிமார்களுடனும் இருப்பார்" (19 ஆம் நூற்றாண்டில் கேரளம், பி. பாஸ்கரன் உண்ணி - பக்கம் 120).  நம்பூதிரி கன்னிப் பெண்கள் தனிமையில் அடைக்கப் பட்டிருப்பர். அப்பெண்கள் மிகக் கடுமையான பாதுகாவல் களுடன் கண்காணிக்கப்படுவர். பலர் திருமணம் செய்ய முடியாமல் (வரன் கிடைக்காமல்) வாழ்ந்துக் கன்னிகளாகவே இறக்கவும் செய்வர்" (கொச்சி நாடின் வரலாறு, கெ.பி. பத்மநாப மேனன் - பக்கம் 896)

சம்பந்தம் என்னும் மோசமான பழக்கம் 7 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வந்தது.

இதுகுறித்த தகவல்கள் சுசீந்தரம் கல்வெட்டில் உள்ளன,  வேதமொழி பேசுபவர்கள் மேலானோர்கள் அவர்கள் கடவுளின் அவதாரம் என்ற ஒரு குறிப்பின் மூலம் அறியலாம், 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்புவரை தமிழகம் முழுவதும் தமிழே பேசப்பட்டு வந்தது. சேர நாட்டில் வேத மொழி பேசும் பார்ப்பனர்கள் 6 ஆம் நூற்றாண்டில் குடியேறினர் என்பதற்கான சான்றுகள் உள்ளன. "on tha southern Recension of tha Mahabharata, Brahman Migrations, and Brahmin Paleography" Electronic journal af vedic Studies. 15 (2): 17–18.

மனுவைப்பற்றிய ஆய்வுரை என்றாலும் இடை இடையே ஆசிரியர் அவர்கள் தெரிவித்த அரிய தகவல்கள் ஏராளம்! ஏராளம்!!

(நாளையும் சந்திக்கலாம்)

-  விடுதலை நாளேடு, 7.10.18

பவுத்தர்களைப் படுகொலை செய்த மனுவின் தத்துவம் (2)


பவுத்தர்களைப் படுகொலை செய்த மனுவின் தத்துவம் (2)


*மின்சாரம்
மனுதர்ம சாத்திர நூலைப்பற்றி ஆய்வுச் சொற்பொழிவு நடத்திய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு

கி. வீரமணி அவர்கள் நூறு வயதையும் கடந்து வாழ்ந்த அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்களின் "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலிலிருந்து பல எடுத்துக்காட்டுகளை அவ்வப்பொழுது கூறினார்.

இவர் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியாரின் நெருங்கிய தோழர். இந்திய அரசமைப்புச் சட்டம்  உருவாக்க வேலை நடந்து கொண்டிருந்தபோது மதப் பாதுகாப்புக்கான சரத்துகள் அதில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக, பார்லிமெண்ட் குழுவை 'இந்து' அலுவலகத்தில் சந்திப்பதற்கு ராமானுஜ தாத்தாச்சாரியாரைத் தான் தனது பிரதிநிதியாக அனுப்பி வைத்தார் என்றால், தாத்தாச்சாரியாரின் முக்கியத்துவம் எத்தகையது என்பது விளங்கும்.

இவரைப்பற்றிய மேலும் தகவல்களைத் தெரிந்து கொண் டால், இவரின் கருத்துக்கள், முடிவுகள் எந்தளவுக்கு முக்கியத் துவம் பெற்றவை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

கேந்த்ரீய வித்யா பீடம் என்ற இந்திய அரசின் கல்வி நிறுவனம் வேதத்தை விஞ்ஞான பூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக இராமானுஜ தாத்தாச்சாரியாருக்கு "டாக்டர் பட்டம்" வழங்கியிருக்கிறது. இந்தியாவின் முதல் குடியரசு விழா டில்லியில் நடைபெற்றபோது - அங்கே அதர்வண வேதம் ஓதியவர்.  இராஷ்ட்ரிய ஸமஸ்கிருத ஸம்ஸ்தான் எனும் இந்திய அரசின் நிறுவனத்தில் உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

அத்தகைய ஒருவரின் நூலிலிருந்து திராவிடர் கழகத் தலைவர் ஆதாரங்களை எடுத்துச் சொல்லும் பொழுது பார்ப் பனர்களோ, சங்பரிவார்களோ மூச்சு விட முடியாது அல்லவா?

அவரின் இந்து மதம் எங்கே போகிறது? எனும் நூலின் பக்கம் 19 என்ன சொல்லுகிறது?

"அன்று... ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத் தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டி ருக்கிறார்கள். நம்மூர் மழைச்சாலையைவிட மலைச்சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?

நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றையெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக் கணிக்கப்பட்டது.

'வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்'... ஆப்கானிஸ்தானை விட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்தபோது கூடவந்த பெண்கள் கம்மி.. வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண் களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான்.

ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால் மநு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.

மநு?...

வேதங்களை 'எல்லாராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனைவர்க்கும் அறிவு குறைவு. அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என 'எளிமை' என்ற பெயரில் செய்யப்பட்டதுதான் மநுதர்மம். -

பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை 'மநு' பிளவாக்கியது. கூடவே இவர்களை தாண்டி 'சூத்திரர்கள்' என்ற பிரிவினரை உருவாக்கி அவர் களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மநு. பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உட்பட 11 குணங்களை வகுத்த மநு... சூத்திரனைப் பற்றி இப்படி எழுதியது.

"சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோபதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்த பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை"... இப்படிப் போகிறது மநு.

வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் 'நன்றாகவே' வேலை செய்தது. ஏற்கெனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த க்ஷத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்களை வேலைக்காரர்களாக எடுபிடிகளாக வைத்திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக்கு குழைந்தனர்.

"அடே... குழந்தாய் இந்தா பால்.... இதைக் குடித்து மகிழ்வாய் வாழு..." என்ற வேதத்தை மனு திரித்து.. இந்த பாலை இவன் குடிக்க வேண்டும். ....இவன் குடிக்கக் கூடாது. இவன் எச்சில் படாமல் குடிக்க வேண்டும். இவன் பால் கறக்கும் மாட்டை மேய்க்க வேண்டும்" என பிளவு செய்தது.

ஆரியர்கள் பெண்களை அழைத்து வரவில்லை என்று சொன்னேன் அல்லவா?.... இதற்கு காரணம் என எடுத்துக் கொள்ள, ஏதுவான மநு ஸ்லோகம் ஒன்றை பாருங்கள்.

"பால்யே பிதிர்வஸே விஷ்டேது .

பாணிக்ரஹா யௌவ்வனே புத்ரானாம் பர்த்தரீ ப்ரேது

நபஜேத் ஸ்த்ரி ஸ்வதந்த்ரதாம்."

"பெண்ணே... நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன் னதை கேள்... வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதை கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதை கேட்கவேண்டும். உனக்கு இதுதான் கதி. நீ சுதந்திரமாக வாழ தகுதியற்றவள். ஆண் சொல்படி கேள்"

இப்படி 'பெண்ணுரிமை' பேசும் மநு இன்னொரு இடத்தில் சொல்கிறது. "பெண்கள் அசுத்தமானவர்கள், உனக்கு விதிக்கப்பட்டுள்ள மந்த்ரோபதேச சம்ஸ்காரங்கள் அவளுக்கு கிடையாது. அவளை மதிக்காதே...'' பிராமண ஆணுக்கு சொல்லுவதாய் வந்த கருத்து இது.

மநுவின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு 'பூம் பூம்' மாடுகள் போல தலையாட்டினார்கள் மற்ற வர்ணத்தவர்கள்.!

வைதீக கட்டுப்பாடுகள் சர்வாதிகாரமாக விதிக்கப்பட்டன. "கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறான். இதுபடி கேள். இல்லையேல் நீ பாபியாவாய்...'' என மந்த்ரங்களால் மிரட்டப்பட்டனர் மக்கள்.

பல நூறு வருடங்கள்... ஒரு கிரிமினல் - லா போன்றே மநுநீதி சமூக கட்டமைப்பை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. வைதீக கர்மாக்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய பிராமணன்... க்ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எல்லோரையும் தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்தான். அவனுக்கு கட்டுப்பட்டவர்கள் ஆனார்கள். இப்படிப்பட்ட ஒரு 'சாஸ்திர ஏகாதிபத்ய' சூழ் நிலையில்தான்... இன்றைய நேபாளத்திலி ருந்து ஒரு குரல் புறப்பட்டது.

"கடவுள் பெயரை சொல்லியும்... கர்மாக்கள் பெயரைச் சொல்லியும் சிந்தனை வளராத அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்கிறீர்களே?.. உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது?.. கடவுளா?... அவன் எங்கே இருக்கிறான்?...

வேதத்தை சாதத்துக்கு (பிழைப்புக்கு) பயன்படுத்தாதீர்கள். பேதம் வளர்க்காதீர்கள். கொடுமைதான் உங்கள் கொள்கை என்றால் வேதம் வேண்டாம். மநு வேண்டாம். கடவுள் வேண்டாம். கர்மாக்கள் வேண்டாம். மனித தர்மம் மட்டும்தான் வேண்டும். - என அந்த சூழ்நிலையில் மிக மிக மிக வித்யாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.


இன்றைக்கு அணுகுண்டு வெடி சோதனைக்கே 'புத்தர் சிரித்தார்' - என பெயர் வைக்கிறோம். அன்றைக்கு புத்தரே வெடித்தார் என்றால். விளைவுகள் என்ன?."

இவற்றை எல்லாம் சொல்லியிருப்பது திராவிடர் கழகத் தலைவர் அல்லர்; மூத்த சங்கராச்சாரியாரின் முக்கிய ஆலோச கரான ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பதை மறந்து விடக் கூடாது.

ஏதோ திராவிடர் கழகம் தான் அப்படி கூறுகிறது. பெரியார் தான் அப்படி பேசினார். அம்பேத்கர்தான் அப்படி எழுதினார், திராவிடர் கழகத் தலைவர்தான் எழுதுகிறார், பேசுகிறார் என்று ஆரிய எதிரிகள்  ஒரே வரியில் கூறி ஏமாற்றி விடலாம் என்று மனப்பால் குடிக்க முடியாது அக்னிஹோத்திரம் போன்ற வர்களே சாட்சிக் கூண்டில் ஏற்றப்பட்டுள்ளார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

எதையும் ஆதாரத்துடன் நூல்களின் பக்கங்கள் உட்பட ஆணித்தரமாக எடுத்துக் கூறுவது ஆசிரியர் வீரமணி அவர்களுக்கே உரித்தான தனித்தன்மையாகும்.

இதுவரை அவர் பேசிய பேச்சு, எழுதிய எழுத்து ஏதாவது ஒன்றிற்காக அறிவு நாணயமாகப் பதில் அளிக்க முன் வந்தவர்களைக் கூறுங்கள் பார்க்கலாம், படித்த மேதாவி என்று தங்கள் முதுகில் தம்பட்டத்தைக் கட்டிக் கொண்டு ஓங்கி அடிக்கும் ஒரே ஒரு பார்ப்பனராவது முன் வந்ததுண்டா?

ஆனானப்பட்ட 'சோ' இராமசாமியே ஆசிரியரின் ஆதாரக் குவியல்களைக் கண்டு மருண்டு போனவராயிற்றே!

இப்பொழுதெல்லாம் எங்கே மனுதர்மம் என்று திருவாளர் 'சோ' இராமசாமி கேட்ட போது, சூத்திரன் சந்நியாசி ஆக முடியாது என்று அண்மையில் வெளிவந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆதாரத்துடன் ஆசிரியர் எடுத்துக் காட்டியபோது மனுஷன் விதறிப் போகவில்லையா?

திராவிடர் கழகத் தலைவர் தன் ஆய்வுரையில் வைதிக, வருணாசிரம, யாகக் கலாச்சார ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் மத்தியில்  அறநெறிக்  கருத்துக்கள் மூலம் ஆட்கொண்ட அருளாளர் கவுதமர் புத்தரைப்பற்றி எடுத்துக் கூறினார்.

அத்தகு புத்தரின் வழிவந்த மார்க்கத்தையும், அவர்களால் நாடு தழுவிய அளவில் உருவாக்கி வைக்கப்பட்டிருந்த புத்த விகாரங்களையும் எப்படியெல்லாம் அரசர்களைக் கைகளில் போட்டுக் கொண்டு ஆரியம் நர வேட்டை ஆடியது என்பதை இடைஇடையே எடுத்துரைத்தார்.

"காக்கையைப் போன்ற கருப்பர்களான பவுத்தர்கள் வேதத்தை எதிர்த்து நாத்திகம் பேசுகிறார்கள். அவர்களால் வேத மார்க்கம் அழிக்கப்பட்டு வேதம் இருளில் மறைந்து போனது. அந்தக் கரியர்களாகிய இருளைப் போக்கி அவர்களைத் திராவிடத் தேசத்து அரசர்களைக் கொண்டே கழுவிலேற்றிக் கொல்லச் செய்து வேத மார்க்கத்தையும், மனு தர்மத்தையும் நிலை நாட்டுவேன்!" என்று ஆதி சங்கரர் சூளுரைத்ததை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

திருடனை ஒத்தவன் பவுத்தன் என்கிறது இராமாயணம்.

யதாஹி சவ்ர

ஸ்யத தயாஹி புத்த

ததாகதம் நாஸ்திக மத்ரவித்தி

(வால்மீகி இராமாயணம் அயோத்தியா காண்டம் சுலோகம் - 1502).

இன்றைக்கும் மதுரையில் ஆண்டுக்கொருமுறை சமணர்களைக் கழுவிலேற்றும் விழா கொண்டாடுப்படுவது எதைக் காட்டுகிறது?

'அநேக யாகங்களைச் செய்தவனும், தேவபக்தனுமான' "புஷ்யமித் திரன் என்னும் பெயருடைய அரசன், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பல்லாயிரக்கணக்கான 'ஆராமங் களை எல்லாம் அழித்து , அவைகளில் சத்தர்மப் பிரசாரம் (நல்லற நெறிகளை உபதேசித்துச்) செய்துவந்த தவசிரேஷ்டர் களாகிய லட்சக்கணக்கான புத்த பிக்ஷக்களைக் கொலை செய்து ஒடுக்கினான்.

பின் ஒரு நூற்றாண்டு கழிந்ததும் சிராஸ்வதிக்கு அரசானான "விக்கிரமாதித்தன்" என்பானும், மற்றொரு அரசனான "கனிஷ்கன் என்பானும் மேற்கூறியவாறே பிக்ஷக்களைச் கொல்வது, அவர்களின் பர்ணசாலைகளை அழிப்பது அரச தருமமான வேட்டை என்றே நினைத்து நடத்தி வந்தார்கள். சிவபக்தரான மிஹிரகுலன் என்பானும் இங்ஙனமே செய்துவந்தான். மேற்கு வங்காளத்திற்கு அரசனாயிருந்த "சசாங்கன்" கி.பி. ஏழாம் நூற்றாண்டில் உயிர் வாழ்ந்திருந்தவன். விளையாட்டாகவே அநேக புத்த 'விக்கிரங்களையும், துறவிகளையும் நாசம் பண்ணியும் அவ் விளையாட்டை நிறுத்த மனமின்றிப் புத்தபகவான் பரிநிர் வாணம் அடைந்த போதிவிருட்சத்தை (அரசமரம்) வேரோடு பறித்து எறிந்த பின்னரே அடங்கினானாம்.

காஷ்மீரத்தை ஆண்டுவந்த க்ஷேமகுப்தன் 'சிறீஹர்ஷன் இவ்விருவரும் புத்த பிக்ஷக்களையும், அவர்களின் கோவில் களையும் அழித்து வந்தார்கள். மீமாம்ஸா சாஸ்திர கர்த்தாவான  "குமாரிலபட்டன்'' என்னும் பார்ப்பனனொருவனுடைய ஏவுதலின் பேரில் மலையாளத்திலுள்ள புத்த பிக்ஷக்கள் அனைவரும் கொல்லப்பட்டும், கோவில்களும், மடங்களும், ஆடுமாடுகளை அறுக்கும் கொலைக்களங்களாக (காளி கோயில்) மாற்றப்பட்டும் போயின. "சுதன்வா'வென்னும் பெயருடைய அரசன் சேது முதல் இமயமலை வரையிலுள்ள குடிகளில் யாரேனும் ஒருவன் பவுத்தர்களைக் கொலை செய்யாமல் இருந்து வருவதாகத் தெரிந்தால், அக்கணமே அவனைக் கொன்றுவிடும்படி கட்டளையிட்டிருந்ததாகச் ''சங்கவிஜயம்' என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. புத்த பிக்ஷக்கள் இருக்கும் இடங்களிலும், அவர்கள் கோயில்களிலும் ஒரு பயனையும் கருதாமல் பொழுது போக்கிற்காகப் போகிறவன் கூட நரகத்தை அடைவான் என்று "பிருஹந் நாரதீய புராணம்" கூறுகிறது. வங்க நாட்டிற்கெனத் தனியாக ஒரு ஸ்மிருதி நூலை இயற்றிய "சூலபாணி" என்னும் பார்ப்பனன் புத்தசமயத்தினன் ஒருவனைத் திடீரென்று பார்க்க நேரினும், அதனால் பாவம் சூழ்ந்து கொள்ளுமென்றும், அதைப்போக்கக் கடுமையாகப் பிராயச்சித்தங்களும் விதித் திருக்கின்றான். புத்தசமயிகள் தீய நெறியில் ஒழுகி வருப வராதலால், அவர்களைக் கொலை செய்யும் பொருட்டே பிராமணகுலத்தில் விஷ்ணு பகவான் கல்கி'யென்னும் திருநாமத்தோடு அவதரிக்கப்போகிறார் என்று அனுபாகவத புராணம் கூறுகின்றது."

விரித்தால் காண்டம் காண்டமாக எழுத முடியும்.

புத்த மார்க்கத்தை வன்முறையால் வீழ்த்தினார்கள் - புத்த மார்க்கத்தை அரசு கொள்கையாகக் கொண்டு நாடு முழுவதும் இலங்கை வரைகூட பவுத்த சிந்தனைகளை பரப்பியவர் சாம்ராட் அசோகன் எனும் மவுரிய அரசன்.

இந்தியாவின் பொற்காலம் என்று மவுரிய ராஜ்ஜியத்தைத் தான் குறிப்பிட வேண்டும் என்று விரிவுரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர்.

புத்தர் தொடங்கிய ஆரிய வைதிக, சனாதன எதிர்ப்புப் போராட்டத்தின் நீட்சியே தந்தை பெரியாரும், அவர்கள் கண்ட சுயமரியாதை இயக்கமும், திராவிடர்  கழகமும்.

பவுத்தத்தை வீழ்த்தியது போல பெரியாரியலையும், திராவிட இயலையும் வீழ்த்திட பல வகைகளிலும் தீவிரமாக முயன்று தோற்று வருகிறார்கள்.

இன்று நடக்கும் போராட்டமும் இதுவே. தமிழர் தலை வரின் மனுநூல் ஆய்வைக்கூட இதனோடு தொடர்புப்படுத்திக் கொள்ள வேண்டும்.

- (வளரும்)


- விடுதலை நாளேடு, 6.10.18