வியாழன், 11 அக்டோபர், 2018

பவுத்தர்களைப் படுகொலை செய்த மனுவின் தத்துவம் (2)


பவுத்தர்களைப் படுகொலை செய்த மனுவின் தத்துவம் (2)


*மின்சாரம்




மனுதர்ம சாத்திர நூலைப்பற்றி ஆய்வுச் சொற்பொழிவு நடத்திய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு

கி. வீரமணி அவர்கள் நூறு வயதையும் கடந்து வாழ்ந்த அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்களின் "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலிலிருந்து பல எடுத்துக்காட்டுகளை அவ்வப்பொழுது கூறினார்.

இவர் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியாரின் நெருங்கிய தோழர். இந்திய அரசமைப்புச் சட்டம்  உருவாக்க வேலை நடந்து கொண்டிருந்தபோது மதப் பாதுகாப்புக்கான சரத்துகள் அதில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக, பார்லிமெண்ட் குழுவை 'இந்து' அலுவலகத்தில் சந்திப்பதற்கு ராமானுஜ தாத்தாச்சாரியாரைத் தான் தனது பிரதிநிதியாக அனுப்பி வைத்தார் என்றால், தாத்தாச்சாரியாரின் முக்கியத்துவம் எத்தகையது என்பது விளங்கும்.

இவரைப்பற்றிய மேலும் தகவல்களைத் தெரிந்து கொண் டால், இவரின் கருத்துக்கள், முடிவுகள் எந்தளவுக்கு முக்கியத் துவம் பெற்றவை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

கேந்த்ரீய வித்யா பீடம் என்ற இந்திய அரசின் கல்வி நிறுவனம் வேதத்தை விஞ்ஞான பூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக இராமானுஜ தாத்தாச்சாரியாருக்கு "டாக்டர் பட்டம்" வழங்கியிருக்கிறது. இந்தியாவின் முதல் குடியரசு விழா டில்லியில் நடைபெற்றபோது - அங்கே அதர்வண வேதம் ஓதியவர்.  இராஷ்ட்ரிய ஸமஸ்கிருத ஸம்ஸ்தான் எனும் இந்திய அரசின் நிறுவனத்தில் உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

அத்தகைய ஒருவரின் நூலிலிருந்து திராவிடர் கழகத் தலைவர் ஆதாரங்களை எடுத்துச் சொல்லும் பொழுது பார்ப் பனர்களோ, சங்பரிவார்களோ மூச்சு விட முடியாது அல்லவா?

அவரின் இந்து மதம் எங்கே போகிறது? எனும் நூலின் பக்கம் 19 என்ன சொல்லுகிறது?

"அன்று... ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத் தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டி ருக்கிறார்கள். நம்மூர் மழைச்சாலையைவிட மலைச்சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?

நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றையெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக் கணிக்கப்பட்டது.

'வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்'... ஆப்கானிஸ்தானை விட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்தபோது கூடவந்த பெண்கள் கம்மி.. வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண் களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான்.

ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால் மநு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.

மநு?...

வேதங்களை 'எல்லாராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனைவர்க்கும் அறிவு குறைவு. அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என 'எளிமை' என்ற பெயரில் செய்யப்பட்டதுதான் மநுதர்மம். -

பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை 'மநு' பிளவாக்கியது. கூடவே இவர்களை தாண்டி 'சூத்திரர்கள்' என்ற பிரிவினரை உருவாக்கி அவர் களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மநு. பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உட்பட 11 குணங்களை வகுத்த மநு... சூத்திரனைப் பற்றி இப்படி எழுதியது.

"சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோபதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்த பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை"... இப்படிப் போகிறது மநு.

வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் 'நன்றாகவே' வேலை செய்தது. ஏற்கெனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த க்ஷத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்களை வேலைக்காரர்களாக எடுபிடிகளாக வைத்திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக்கு குழைந்தனர்.

"அடே... குழந்தாய் இந்தா பால்.... இதைக் குடித்து மகிழ்வாய் வாழு..." என்ற வேதத்தை மனு திரித்து.. இந்த பாலை இவன் குடிக்க வேண்டும். ....இவன் குடிக்கக் கூடாது. இவன் எச்சில் படாமல் குடிக்க வேண்டும். இவன் பால் கறக்கும் மாட்டை மேய்க்க வேண்டும்" என பிளவு செய்தது.

ஆரியர்கள் பெண்களை அழைத்து வரவில்லை என்று சொன்னேன் அல்லவா?.... இதற்கு காரணம் என எடுத்துக் கொள்ள, ஏதுவான மநு ஸ்லோகம் ஒன்றை பாருங்கள்.

"பால்யே பிதிர்வஸே விஷ்டேது .

பாணிக்ரஹா யௌவ்வனே புத்ரானாம் பர்த்தரீ ப்ரேது

நபஜேத் ஸ்த்ரி ஸ்வதந்த்ரதாம்."

"பெண்ணே... நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன் னதை கேள்... வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதை கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதை கேட்கவேண்டும். உனக்கு இதுதான் கதி. நீ சுதந்திரமாக வாழ தகுதியற்றவள். ஆண் சொல்படி கேள்"

இப்படி 'பெண்ணுரிமை' பேசும் மநு இன்னொரு இடத்தில் சொல்கிறது. "பெண்கள் அசுத்தமானவர்கள், உனக்கு விதிக்கப்பட்டுள்ள மந்த்ரோபதேச சம்ஸ்காரங்கள் அவளுக்கு கிடையாது. அவளை மதிக்காதே...'' பிராமண ஆணுக்கு சொல்லுவதாய் வந்த கருத்து இது.

மநுவின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு 'பூம் பூம்' மாடுகள் போல தலையாட்டினார்கள் மற்ற வர்ணத்தவர்கள்.!

வைதீக கட்டுப்பாடுகள் சர்வாதிகாரமாக விதிக்கப்பட்டன. "கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறான். இதுபடி கேள். இல்லையேல் நீ பாபியாவாய்...'' என மந்த்ரங்களால் மிரட்டப்பட்டனர் மக்கள்.

பல நூறு வருடங்கள்... ஒரு கிரிமினல் - லா போன்றே மநுநீதி சமூக கட்டமைப்பை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. வைதீக கர்மாக்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய பிராமணன்... க்ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எல்லோரையும் தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்தான். அவனுக்கு கட்டுப்பட்டவர்கள் ஆனார்கள். இப்படிப்பட்ட ஒரு 'சாஸ்திர ஏகாதிபத்ய' சூழ் நிலையில்தான்... இன்றைய நேபாளத்திலி ருந்து ஒரு குரல் புறப்பட்டது.

"கடவுள் பெயரை சொல்லியும்... கர்மாக்கள் பெயரைச் சொல்லியும் சிந்தனை வளராத அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்கிறீர்களே?.. உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது?.. கடவுளா?... அவன் எங்கே இருக்கிறான்?...

வேதத்தை சாதத்துக்கு (பிழைப்புக்கு) பயன்படுத்தாதீர்கள். பேதம் வளர்க்காதீர்கள். கொடுமைதான் உங்கள் கொள்கை என்றால் வேதம் வேண்டாம். மநு வேண்டாம். கடவுள் வேண்டாம். கர்மாக்கள் வேண்டாம். மனித தர்மம் மட்டும்தான் வேண்டும். - என அந்த சூழ்நிலையில் மிக மிக மிக வித்யாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.


இன்றைக்கு அணுகுண்டு வெடி சோதனைக்கே 'புத்தர் சிரித்தார்' - என பெயர் வைக்கிறோம். அன்றைக்கு புத்தரே வெடித்தார் என்றால். விளைவுகள் என்ன?."

இவற்றை எல்லாம் சொல்லியிருப்பது திராவிடர் கழகத் தலைவர் அல்லர்; மூத்த சங்கராச்சாரியாரின் முக்கிய ஆலோச கரான ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பதை மறந்து விடக் கூடாது.

ஏதோ திராவிடர் கழகம் தான் அப்படி கூறுகிறது. பெரியார் தான் அப்படி பேசினார். அம்பேத்கர்தான் அப்படி எழுதினார், திராவிடர் கழகத் தலைவர்தான் எழுதுகிறார், பேசுகிறார் என்று ஆரிய எதிரிகள்  ஒரே வரியில் கூறி ஏமாற்றி விடலாம் என்று மனப்பால் குடிக்க முடியாது அக்னிஹோத்திரம் போன்ற வர்களே சாட்சிக் கூண்டில் ஏற்றப்பட்டுள்ளார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

எதையும் ஆதாரத்துடன் நூல்களின் பக்கங்கள் உட்பட ஆணித்தரமாக எடுத்துக் கூறுவது ஆசிரியர் வீரமணி அவர்களுக்கே உரித்தான தனித்தன்மையாகும்.

இதுவரை அவர் பேசிய பேச்சு, எழுதிய எழுத்து ஏதாவது ஒன்றிற்காக அறிவு நாணயமாகப் பதில் அளிக்க முன் வந்தவர்களைக் கூறுங்கள் பார்க்கலாம், படித்த மேதாவி என்று தங்கள் முதுகில் தம்பட்டத்தைக் கட்டிக் கொண்டு ஓங்கி அடிக்கும் ஒரே ஒரு பார்ப்பனராவது முன் வந்ததுண்டா?

ஆனானப்பட்ட 'சோ' இராமசாமியே ஆசிரியரின் ஆதாரக் குவியல்களைக் கண்டு மருண்டு போனவராயிற்றே!

இப்பொழுதெல்லாம் எங்கே மனுதர்மம் என்று திருவாளர் 'சோ' இராமசாமி கேட்ட போது, சூத்திரன் சந்நியாசி ஆக முடியாது என்று அண்மையில் வெளிவந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆதாரத்துடன் ஆசிரியர் எடுத்துக் காட்டியபோது மனுஷன் விதறிப் போகவில்லையா?

திராவிடர் கழகத் தலைவர் தன் ஆய்வுரையில் வைதிக, வருணாசிரம, யாகக் கலாச்சார ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் மத்தியில்  அறநெறிக்  கருத்துக்கள் மூலம் ஆட்கொண்ட அருளாளர் கவுதமர் புத்தரைப்பற்றி எடுத்துக் கூறினார்.

அத்தகு புத்தரின் வழிவந்த மார்க்கத்தையும், அவர்களால் நாடு தழுவிய அளவில் உருவாக்கி வைக்கப்பட்டிருந்த புத்த விகாரங்களையும் எப்படியெல்லாம் அரசர்களைக் கைகளில் போட்டுக் கொண்டு ஆரியம் நர வேட்டை ஆடியது என்பதை இடைஇடையே எடுத்துரைத்தார்.

"காக்கையைப் போன்ற கருப்பர்களான பவுத்தர்கள் வேதத்தை எதிர்த்து நாத்திகம் பேசுகிறார்கள். அவர்களால் வேத மார்க்கம் அழிக்கப்பட்டு வேதம் இருளில் மறைந்து போனது. அந்தக் கரியர்களாகிய இருளைப் போக்கி அவர்களைத் திராவிடத் தேசத்து அரசர்களைக் கொண்டே கழுவிலேற்றிக் கொல்லச் செய்து வேத மார்க்கத்தையும், மனு தர்மத்தையும் நிலை நாட்டுவேன்!" என்று ஆதி சங்கரர் சூளுரைத்ததை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

திருடனை ஒத்தவன் பவுத்தன் என்கிறது இராமாயணம்.

யதாஹி சவ்ர

ஸ்யத தயாஹி புத்த

ததாகதம் நாஸ்திக மத்ரவித்தி

(வால்மீகி இராமாயணம் அயோத்தியா காண்டம் சுலோகம் - 1502).

இன்றைக்கும் மதுரையில் ஆண்டுக்கொருமுறை சமணர்களைக் கழுவிலேற்றும் விழா கொண்டாடுப்படுவது எதைக் காட்டுகிறது?

'அநேக யாகங்களைச் செய்தவனும், தேவபக்தனுமான' "புஷ்யமித் திரன் என்னும் பெயருடைய அரசன், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பல்லாயிரக்கணக்கான 'ஆராமங் களை எல்லாம் அழித்து , அவைகளில் சத்தர்மப் பிரசாரம் (நல்லற நெறிகளை உபதேசித்துச்) செய்துவந்த தவசிரேஷ்டர் களாகிய லட்சக்கணக்கான புத்த பிக்ஷக்களைக் கொலை செய்து ஒடுக்கினான்.

பின் ஒரு நூற்றாண்டு கழிந்ததும் சிராஸ்வதிக்கு அரசானான "விக்கிரமாதித்தன்" என்பானும், மற்றொரு அரசனான "கனிஷ்கன் என்பானும் மேற்கூறியவாறே பிக்ஷக்களைச் கொல்வது, அவர்களின் பர்ணசாலைகளை அழிப்பது அரச தருமமான வேட்டை என்றே நினைத்து நடத்தி வந்தார்கள். சிவபக்தரான மிஹிரகுலன் என்பானும் இங்ஙனமே செய்துவந்தான். மேற்கு வங்காளத்திற்கு அரசனாயிருந்த "சசாங்கன்" கி.பி. ஏழாம் நூற்றாண்டில் உயிர் வாழ்ந்திருந்தவன். விளையாட்டாகவே அநேக புத்த 'விக்கிரங்களையும், துறவிகளையும் நாசம் பண்ணியும் அவ் விளையாட்டை நிறுத்த மனமின்றிப் புத்தபகவான் பரிநிர் வாணம் அடைந்த போதிவிருட்சத்தை (அரசமரம்) வேரோடு பறித்து எறிந்த பின்னரே அடங்கினானாம்.

காஷ்மீரத்தை ஆண்டுவந்த க்ஷேமகுப்தன் 'சிறீஹர்ஷன் இவ்விருவரும் புத்த பிக்ஷக்களையும், அவர்களின் கோவில் களையும் அழித்து வந்தார்கள். மீமாம்ஸா சாஸ்திர கர்த்தாவான  "குமாரிலபட்டன்'' என்னும் பார்ப்பனனொருவனுடைய ஏவுதலின் பேரில் மலையாளத்திலுள்ள புத்த பிக்ஷக்கள் அனைவரும் கொல்லப்பட்டும், கோவில்களும், மடங்களும், ஆடுமாடுகளை அறுக்கும் கொலைக்களங்களாக (காளி கோயில்) மாற்றப்பட்டும் போயின. "சுதன்வா'வென்னும் பெயருடைய அரசன் சேது முதல் இமயமலை வரையிலுள்ள குடிகளில் யாரேனும் ஒருவன் பவுத்தர்களைக் கொலை செய்யாமல் இருந்து வருவதாகத் தெரிந்தால், அக்கணமே அவனைக் கொன்றுவிடும்படி கட்டளையிட்டிருந்ததாகச் ''சங்கவிஜயம்' என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. புத்த பிக்ஷக்கள் இருக்கும் இடங்களிலும், அவர்கள் கோயில்களிலும் ஒரு பயனையும் கருதாமல் பொழுது போக்கிற்காகப் போகிறவன் கூட நரகத்தை அடைவான் என்று "பிருஹந் நாரதீய புராணம்" கூறுகிறது. வங்க நாட்டிற்கெனத் தனியாக ஒரு ஸ்மிருதி நூலை இயற்றிய "சூலபாணி" என்னும் பார்ப்பனன் புத்தசமயத்தினன் ஒருவனைத் திடீரென்று பார்க்க நேரினும், அதனால் பாவம் சூழ்ந்து கொள்ளுமென்றும், அதைப்போக்கக் கடுமையாகப் பிராயச்சித்தங்களும் விதித் திருக்கின்றான். புத்தசமயிகள் தீய நெறியில் ஒழுகி வருப வராதலால், அவர்களைக் கொலை செய்யும் பொருட்டே பிராமணகுலத்தில் விஷ்ணு பகவான் கல்கி'யென்னும் திருநாமத்தோடு அவதரிக்கப்போகிறார் என்று அனுபாகவத புராணம் கூறுகின்றது."

விரித்தால் காண்டம் காண்டமாக எழுத முடியும்.

புத்த மார்க்கத்தை வன்முறையால் வீழ்த்தினார்கள் - புத்த மார்க்கத்தை அரசு கொள்கையாகக் கொண்டு நாடு முழுவதும் இலங்கை வரைகூட பவுத்த சிந்தனைகளை பரப்பியவர் சாம்ராட் அசோகன் எனும் மவுரிய அரசன்.

இந்தியாவின் பொற்காலம் என்று மவுரிய ராஜ்ஜியத்தைத் தான் குறிப்பிட வேண்டும் என்று விரிவுரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர்.

புத்தர் தொடங்கிய ஆரிய வைதிக, சனாதன எதிர்ப்புப் போராட்டத்தின் நீட்சியே தந்தை பெரியாரும், அவர்கள் கண்ட சுயமரியாதை இயக்கமும், திராவிடர்  கழகமும்.

பவுத்தத்தை வீழ்த்தியது போல பெரியாரியலையும், திராவிட இயலையும் வீழ்த்திட பல வகைகளிலும் தீவிரமாக முயன்று தோற்று வருகிறார்கள்.

இன்று நடக்கும் போராட்டமும் இதுவே. தமிழர் தலை வரின் மனுநூல் ஆய்வைக்கூட இதனோடு தொடர்புப்படுத்திக் கொள்ள வேண்டும்.

- (வளரும்)


- விடுதலை நாளேடு, 6.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக