வியாழன், 11 அக்டோபர், 2018

தமிழர் தலைவர் ஆய்வு சொற்பொழிவு - ஒரு பார்வை! பார்ப்பனர்களுக்கு அடிமைப்பட்ட தமிழ் அரசர்கள் (3)

*மின்சாரம்


நம் நாட்டுத் தமிழ் அரசர்கள் மனுவாதி சிந்தனை களோடுதான் நடந்து கொண்டனர். நிலங்களைப் பார்ப்பனர்களுக்குத் தானமாக வழங்கியது குறித்தும், கல்விக் கூடங்கள் கட்டியது  எல்லாம் பார்ப்பனர்கள் சமஸ்கிருதம் படிப்பதற்கே தவிர தமிழர்கள் படிப்பதற்கான தமிழ்ப்பற்றிய கல்வி கிடையாது என்பது குறித்தும் சென்னை ஆய்வுக் கூட்டத்தில் எடுத்துக் கூறினார் திராவிடர் கழகத் தலைவர். மங்கலம் மங்கலம் என்று முடியும் ஊர்கள் எல்லாம் நமது வேந்தர்களால் பார்ப்பனர் களுக்குத் தானமாகத் தூக்கிக் கொடுக்கப்பட்டவை தான்.

அரசுக்குச் சொந்தமில்லாத நிலங்களாக இல்லாதிருந்தால் அந்த நில உடைமையாளர்களிடம் பணம் கொடுத்து வாங்கி, அந்நிலங்களை பார்ப்பனர்களுக்குத் தானமாக வழங்கியிருக்கிறார்கள் நமது 'மாண்புமிகு'  மானங்கெட்ட அரசர்கள்.

எடுத்துக்காட்டாக, ஒன்றைக் குறிப்பிடலாம். சுங்கம் தவிர்க்க சோழநல்லூர் 108 பிரிவுகளாக்கப்பட்டு 106 பிரிவுகள் பிராமணர்களுக்குத் தானமாகத் தரப்பட்டது. இந்தத் தானம் சமந்த நாராயண சதுர்வேதிமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள பிராமணர்களுக்கு தரப்பட்டது. மற்ற இரு பாகங்கள் மேற்படி கிராமக் கோயிலுக்குத் தரப்பட்டது.

இந்தத் தானத்தைச் செய்வதற்காக மன்னன் தமது உயர்தரமான அதிகாரியை அனுப்பி மேற்படி கிராமத்தை அதன் பூர்விக வாரிசுதாரரிடமிருந்து விலைக்கு வாங்கிச் செய்தார்.

இந்தச் சொத்து பிராமணர்களுக்குச் சர்வமான்யமாக்கப் பட்டது. அதாவது விற்க, ஈடுகட்ட, அவர்களுக்குப் பாத்தியதை செய்யப்பட்ட என்ற தகவல் தரும் சாசனம் காணக் கிடைக்கிறது. இது போல் இன்னும் ஏராளம் உண்டு.

நான்கு  வேதங்கள் படித்திருந்தால் சதுர்வேதிமங்கலம். மூன்று வேதங்கள் படித்திருந்தால் அவர்களுக்குத் தானமாக அளிக்கப்படும் நிலங்கள் அடங்கிய ஊர் திரிவேதி மங்கலம், இரு வேதங்கள் படித்தவர்களுக்குத் துவிவேதி மங்கலம், ஒரு வேதமும் தெரியாத பிராமணர்களுக்கு அளிக்கப்படு வதுதான் கிராமம். அக்கிராமங்கள் எல்லாம் பிராமணர்களின் ஆளுகைக்கு உட்பட்டவை - சூத்திரர்கள் வேலை செய்து கிடப்பதே வருண தர்மம்!

திருமுக்கூடல் என்னும் ஊரில் இருந்த வெங்கடேசப் பெருமாள் கோவிலில் - நான்கு வேதங்களைக் கற்பிக்க என்றே ஒரு வேதக் கல்லூரி நிறுவப் பெற்றிருந்தது. இந்தக் கல்லூரியில் பயில்கின்ற பார்ப்பன மாணவர்கள் தங்கியிருக்க மாணவர் விடுதிகள் 2 கட்டப்பெற்றிருந்தன.

இந்தக் கல்லூரியில் நான்கு வேதங்கள், சாத்திரங்கள், சமஸ்கிருத வியாக்ரணங்கள் எனப்பட்ட வடமொழி இலக்கணங்கள் முதலியவை கற்றுத் தரப்பட்டன.

மாணவர் விடுதியில் தங்கிப் பயின்ற பார்ப்பனச் சிறுவர்களுக்கு சுவையான உணவு வழங்கப்பட்டது.

சனிக்கிழமை தோறும் எண்ணெய் நீராட நல்லெண் ணெய் தரப்பட்டது.

இத்தகவல்களை திருமுக்கூடல் கல்வெட்டுகள் தெரி விக்கின்றன.

எண்ணாயிரம் கோவிலில்...

எண்ணாயிரம் கோவில் என்றதும் எட்டாயிரம் கோவில் களின் எண்ணிக்கை என்று எண்ணிவிட வேண்டாம். 'எண்ணாயிரம்' என்னும் ஊரில் இருந்த கோவில் இந்தப் பார்ப்பனர் கூட்டம் அனுபவித்த கல்விச் சுகத்தினையும் தின்று கொழுத்த செய்திகளையும் அறிய இருக்கிறோம்.

கி.பி. 1023-இல் முதலாம் இராசேந்திரசோழன் காலத்தில் எண்ணாயிரம் என்ற இந்த ஊரில் இருந்த கோவிலில் 'கங்கை கொண்ட சோழ மண்டபம்' என்ற பெயரில் பெரிய மண்டபம் ஒன்று இருந்தது.

இந்த மண்டபத்தில், இருக் வேதம் படிக்கும் பார்ப்பன மாணவர்கள் 75 பேர்; யசுர் வேதம் படிக்கும் பார்ப்பன மாணவர்கள் 75 பேர்; சாம வேதம் படிக்கும் பார்ப்பன மாணவர்கள் 50 பேர். அதர்வண வேதம் படிக்கும் பார்ப்பன மாணவர்கள் 10 பேர்; மற்ற சாத்திர பாடம் படிக்கும் பார்ப்பனர்கள் 20 பேர்; தெய்வக் கலையின் பழம் பிறப்பைப் பயின்றவர்கள் 40 பேர்; ஆக மொத்தம் 270 பார்ப்பன மாணவர்கள் படித்து வந்தனர்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பார்ப்பன மாணவ ருக்கும் 6 நாழி நெல் தானமாகக் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த மண்டபத்தில், வடமொழி வியாக்ரணம் கற்றோர் 25 பேர்; பிரபாகரம் என்னும் மீமாம்சை கற்றோர் 25 பேர்; வேதாந்தம் பயின்றோர் 10 பேர்; இவர்களும் அந்த மண்ட பத்தில் தங்கிப் படித்தனர். ஒவ்வொரு நாளும், ஒவ் வொருவருக்கும் 1 குறுணி 2 நாழி நெல் அளிக்கப்பட்டு வந்தது.

வியாக்ரணம் கற்பித்த பார்ப்பன ஆசிரியர்களுக்கு

1 கலம் நெல், பிரபாகரம் கற்பித்த பார்ப்பன ஆசிரியர்களுக்கு 1 கலம் நெல், வேதாந்தம் கற்பித்த ஆச்சாரியார்களுக்கு

1 கலம் நெல் கொடுக்கப்பட்டது.

வேதப் பேராசிரியர் எனப்பெற்ற பார்ப்பனர்கள் 10 பேருக்கு நாள் ஒன்றுக்கு 30 கலம் நெல்வீதம் ஆண்டுக்கு 10,506 கலம் நெல்லும் அவர்கள் பயன்படுத்த பொன்னும் தரப்பட்டது.

இதுமட்டுமா? இந்த அநியாயத்தையும் பாருங்கள்! வியாக்ரணத்தை (சமஸ்கிருத இலக்கண நூல்) விளக்கிய பேராசிரியர்களுக்கு, ஒவ்வொரு அத்தியாயத்துக்கு 1 கழஞ்சு பொன்வீதம் 8 கழஞ்சு பொன் வழங்கப்பட்டு வந்தது.

பிரபாகரம் விளக்கியவர்களுக்கு, அத்தியாயம் 1-க்கு

1 கழஞ்சு பொன் வீதம் 12 கழஞ்சு வீதம் விளக்கியவர்களுக்கு - வேதப் பேராசிரியர்கள் 13 பேருக்கு, அரை கழஞ்சு வீதம் ஆறரை கழஞ்சுப் பொன் கொடுக்கப்பட்டது.

கலைப் பேராசிரியப் பார்ப்பனர்களுக்கு ஆளுக்கு அரை கழஞ்சுப் பொன்; வியாக்ரணம், மீமாம்சை பயின்ற மாணவர்கள் 70 பேர். 1 ஆளுக்கு அரை கழஞ்சு வீதம் 35 கழஞ்சுப் பொன் குறைவின்றிக் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்தப் பார்ப்பன மாணவர்கள், பேராசிரியர்களுக்குச் செலவழிக்க நிரந்தரமான ஓர் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.

மாம்பாக்கச் சேரி என்னும் பவித்திர மாணிக்க நல்லூர் என்னும் ஊரைச் சுற்றியிருந்த 45 வேலி நிலம் கோவிலுக்குத் தானமாக உரிமைப்படுத்தப்பட்டது. இவையாவும் 'எண்ணா யிரம் கோவில்' கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

ஒரத்தநாடு சத்திரத்தில்...

எண்ணாயிரம் கோவில் கல்விதானத்தை அடி ஒற்றி 1821-இல் தஞ்சை மராட்டிய ஆட்சியில் ஒரத்தநாடு முத்தம்மாள்புரம் சத்திரக் கல்வெட்டுகள் அமைந்துள்ளன.

1.11.1869-இல் ஆங்கில ஆட்சியின் ஆணைப்படி சத்திரத்தில் 1 பள்ளி; 1 விடுதி இருந்தன. 120 மாணவர்கள் தங்கிப் படித்தனர். அனைவரும் யார் என்று கேட்க வேண்டாம்! எல்லாம் 'அவாள்'களே!

நாள்தோறும் ஒவ்வொரு மாணவருக்கும் அளிக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கு ஆனப்பட்டியலைப் பாருங்கள்!

அரிசி 1 படி; பருப்பு 1/32 படி; மிளகாய் 1/64 சேர்; புளி 3/64 சேர்; உளுந்து 1/130 படி; கொத்துமல்லி 1/64 சேர்; மிளகு 1/60 சேர்; கடுகு 1/160 சேர்; வெந்தயம் 1/800 சேர்; உப்பு 1/640  சேர்; நெய் 1/64; ந.எண்ணெய் 1/64 சேர்; மஞ்சள் 3/6400 சேர்; சுக்கு 1/3200 சேர்; மோர் 1/8 படி; விறகு 2 1/2 சேர்.

வாரம் 2 தடவை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க, 1 குளியலுக்கு 3/16 சேர் நல்லெண்ணெய், அரப்புத் தூளுக்கு 1/2 காசு வழங்கப்பட்டு வந்தது.

தமிழர் கட்டிய கோவிலில் பள்ளியும் கல்வியும், விடுதியும் பார்ப்பனக் கும்பலுக்கே தாரை வார்க்கப்பட்ட கொடுமைகளைப் பார்க்கும்போது நம் உள்ளம் குமுறாதா!


(ஆதாரம் : நூல் : "கல்வெட்டில் வாழ்வியல்" ஆசிரியர்: டாக்டர் அ. கிருஷ்ணன்).

ஆய்வுக் கூட்டத்தில் கேரள மாநிலத்தில் நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு இருந்த ஆதிக்க, எல்லைமீறும் அநாகரிக உரிமைகளை விவரித்தார் கழகத் தலைவர்.

கேரளாவில் நம்பூதிரிப் பார்ப்பனர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்கள் பொலி காளைகளாகத் திரிந்தனர். இது குறித்து ஒரு முக்கிய தகவலைத் தன் ஆய்வுச் சொற் பொழிவில் குறிப்பிட்டார்.

"நம் பூதிரியின் - உடல் பவித்ரமானதாகும். சலனம் தெய்வீகக் காட்சியாகும். அவர் உண்டு மீந்த உணவு அமிர்தமாகும். மனித உயிர்களில் ஏற்றவும், உயர்ந்த நிலையில் பூஜிக்கப்பட வேண்டியவர்களாவர்; பூமியில் தெய்வத்தின் பிரதிநிதிகளாவர். இக்காரணங்களால் அவர்களுடன் எந்தப் பெண்ணிற்கு உறவு கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெறுகின்றதோ அவள் பாக்கியம் பெற்றவள்" என்று அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்க ளிடையே நம்பிக்கை ஊட்டப்பட்டிருந்தது.

"நம்பூதிரியை மகிழ்ச்சியடைய வைப்பது தெய்வத்தைத் திருப்திபடுத்துவதற்குச் சமமானதாகும். நாயர் பெண் களுடன் சயனிப்பதற்கான உரிமை கடவுள் அவர்களுக்கு வழங்கியதாகும். அதனை நிராகரிப்பவர்கள் - எதிர்ப்ப வர்கள்  - தெய்வக் குற்றத்திற்கு ஆளாவர்". இது போன்ற மூடநம்பிக்கைகள் சமூகத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் பரவியிருந்தக் காரணத்தால், அழகான பெண் குழந்தை களைப் பெற்றிருந்த நாயர் குடும்பங்கள் தங்கள் பெண்களை ஏதாவது ஒரு நம்பூதிரியுடன் சயனிக்க வைக்க மனப் பூர்வமாக விரும்பியிருந்தனர்.

"சூத்திரப் பெண்கள் பத்தினித்தன்மையைப் பேண வேண்டிய அவசியம் இல்லை எனவும், நம்பூதிரிகளின் ஆசாபாசங்களை நிறைவேற்றி வைக்க சுயம் சமர்ப் பிக்கப்பட்டவர்கள் என்றும் இது கேரளத்திற்கு ஆச்சாரங் களைப் பரிசளித்தப் பரசுராமன் போட்டக் கட்டளையாகும் என ஆச்சாரங்களைக் கற்பித்துப் போற்றும் பிராமணர்கள் தெரிவிக்கின்றனர்". (சி. அச்சுத மேனன் - கொச்சின் மாநில கையேடு - 1910. பக்கம் 193. C.achchutha menon - Cochin State manual - 1910. Page No: 193)

நம்பூதிரி ஆண்களுக்கு உடன்படாத சூத்திரப் பெண் களை வழிகெட்டவர்களாக நினைத்து மக்கள் அவர்களை ஒதுக்கினர். அவ்வாறான வழிகெட்டப் பெண்களைக் கொன்றுவிடும் அளவிற்கு அன்று நம்பூதிரிமார்களுக்கு அதிகாரம் இருந்தது. கார்த்திகப்பள்ளியிலுள்ள தெருக்களில் காணப்பட்ட விளம்பரங்கள் இவற்றைச் சரியென எடுத்தியம்புகின்றன.

அங்கு காணப்பட்ட ஒரு விளம்பரம் இவ்வாறு கூறுகின்றது: "நம்முடைய நாட்டில் சொந்த ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ, உயர் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ வழங்கி வராத வழிகெட்டப் பெண்கள் உண்டு எனில் அவர்களை உடனடியாக கொன்று விட வேண்டும்" (கேரள வரலாற்றின் இருண்ட பக்கங்கள், இளம்குளம் குஞ்ஞன் பிள்ளை - பக்கம் 147).

சூத்திரப் பெண்டிர் மீது உயர்சாதியினரால் நிகழ்த்தப் பட்ட உச்சக்கட்ட அடக்கு முறையாகும் இது.  "நம்பூதிரி வீட்டில் மூத்த மகனுக்கு மட்டுமே திருமணம் செய்வதற்கு அனுமதி உண்டு. "மூத்த சகோதரன் மட்டும் சொந்த ஜாதியில் திருமணம் செய்வதும் மற்ற சகோதரர்கள் நாயர் பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம் திருமண வயதைக் கடந்த மிக அதிகமான கன்னிகள் நம்பூதிரி சமுதாயத்தில் இருப்பர். இதே நேரம் வீட்டில் மூத்த சகோதரன் பல மனைவிமார்களுடனும் இருப்பார்" (19 ஆம் நூற்றாண்டில் கேரளம், பி. பாஸ்கரன் உண்ணி - பக்கம் 120).  நம்பூதிரி கன்னிப் பெண்கள் தனிமையில் அடைக்கப் பட்டிருப்பர். அப்பெண்கள் மிகக் கடுமையான பாதுகாவல் களுடன் கண்காணிக்கப்படுவர். பலர் திருமணம் செய்ய முடியாமல் (வரன் கிடைக்காமல்) வாழ்ந்துக் கன்னிகளாகவே இறக்கவும் செய்வர்" (கொச்சி நாடின் வரலாறு, கெ.பி. பத்மநாப மேனன் - பக்கம் 896)

சம்பந்தம் என்னும் மோசமான பழக்கம் 7 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வந்தது.

இதுகுறித்த தகவல்கள் சுசீந்தரம் கல்வெட்டில் உள்ளன,  வேதமொழி பேசுபவர்கள் மேலானோர்கள் அவர்கள் கடவுளின் அவதாரம் என்ற ஒரு குறிப்பின் மூலம் அறியலாம், 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்புவரை தமிழகம் முழுவதும் தமிழே பேசப்பட்டு வந்தது. சேர நாட்டில் வேத மொழி பேசும் பார்ப்பனர்கள் 6 ஆம் நூற்றாண்டில் குடியேறினர் என்பதற்கான சான்றுகள் உள்ளன. "on tha southern Recension of tha Mahabharata, Brahman Migrations, and Brahmin Paleography" Electronic journal af vedic Studies. 15 (2): 17–18.

மனுவைப்பற்றிய ஆய்வுரை என்றாலும் இடை இடையே ஆசிரியர் அவர்கள் தெரிவித்த அரிய தகவல்கள் ஏராளம்! ஏராளம்!!

(நாளையும் சந்திக்கலாம்)

-  விடுதலை நாளேடு, 7.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக