மனுதர்மம் பற்றிய ஆய்வுச் சொற்பொழிவில் பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டினார் திராவிடர் கழகத்தலைவர்.
அவற்றுள் ஒன்று சென்னை தியாகராயர் நகரில் திடீர் பிள்ளையார் விவகாரம்-எவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றும் கூட!
8.9.1970 விடியற்காலை சென்னை தியாகராயர் நகரில் திடீர் பிள்ளையார் தோன்றியது என்று ஒரு பரபரப்பான செய்தி உலா வந்தது.
அவ்வளவுதான், மக்கள் திரள் - வழக்கமாக உடனே உண்டியலும் வந்தது. ஒரு பார்ப்பன காவல்துறை அதிகாரியே “ஆமாம், ஆமாம் நான் நேரில் பார்த்தேன்- நடந்தது உண்மைதான்” என்று சம்மன் இல்லாமல் ஆஜரானார்.
காஞ்சிபுரம் மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி “ஆமாம், ஆமாம்“ என்று ஆமோதித்தார். காஞ்சியில் செய்தியாளர்களிடம் (26.9.1970) என்ன சொன்னார் என்பது முக்கியம்.
லோக குரு என்று தூக்கி நிறுத்தப்படுபவர்கள் கடவுள் சமாச்சாரம் என்கிற போது மோசடிகளுக்கெல்லாம் முட்டுக் கொடுக்க ஓடோடி வருகிறார்கள் என்பதை நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். (கடவுள்களே பூணூல் தரித்துள்ளனவே!)
“இந்தியாவில் அநேகக் கோயில்களில் ‘ஸ்வயம்பு’ மூர்த்திகள் உள்ளன. எனவே தி.நகர் (தியாகராயர் நகர் என்று அவாள் வாயில் வரவே வராது) விநாயகரை ‘ஸ்வயம்பு’ என்று இந்து மதத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் சொல்வதை ஆட்சேபிக்க வேண்டியதில்லை. தி.நகரில் தோன்றியது ‘ஸ்வயம்பு’ விநாயகர்தான் என்று பலர் என்னிடமும் சொல்லியிருக்கிறார்கள். எனவே இந்து மதத்திலும், ‘ஸ்வயம்பு’ விக்கிரகங்களிலும் நம்பிக்கை உள்ளவர்கள் தி.நகர் விநாயகர் எப்படி வந்தார் என்பது பற்றிய அனாவசிய சர்ச்சைகளை நிறுத்தி விட்டு பக்தி சிரத்தையுடன் அவரை வழிபடுவார்களாக!”
சங்கராச்சாரியாரின் இந்த செய்தியைப் பாராட்டி ஏடுகள் முதல் பக்கத்தில் வெளியிட்டு கூத்தாடின.
புலனாய்வுத்துறை வேகவேகமாக செயல்பட்டு, உண்மை விடயத்தை முகத்திரையைக் கிழித்து வெளியில் கொண்டு வந்து விட்டது. செல்வராஜ் என்ற தலைமை கான்ஸ்டபிள் என்பவர் தான் இந்தப் பிள்ளையார் பொம்மையை சைக்கிளில் கொண்டு வந்து சிறுகுழி தோண்டிப் புதைத்துள்ளார். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பருத்திக் கொட்டையும் வைக்கப்பட்டது. தண்ணீரில் பருத்திக் கொட்டை ஊறினால் அது ஊதிப் பெருத்து மேலே கிளம்பும் அல்லவா! ஆகா எவ்வளவுப் பெரிய யுக்தி- தந்திரம்! (இதன் பின்னணியில் அந்தப் பகுதி சட்டமன்ற உறுப்பினரான பார்ப்பனர் கே.எம்.சுப்பிரமணியன் என்பதும் முக்கியம்)
தியாகராயர் நகர் கல்தொட்டிப் பகுதியில் சிலைகள் செய்யும் கடை வைத்திருந்த மருதப்பிள்ளை என்பவரிடம் ரூ.71க்கு கான்ஸ்டபிள் செல்வராஜ் வாங்கியதும் அம்பலமாகி விட்டது.
இந்த நிலையில் 10.10.1970 என்று காவல்துறை இந்தத் திட்டமிட்ட திடீர் பிள்ளையார் சிலையை அப்புறப்படுத்தி, உண்டியலையும் பறிமுதல் செய்து விட்டது. (சர்வ சக்தி பிள்ளையாரால் காவல்துறையைத் தடுக்க முடியவில்லை)
இதற்கிடையில் சென்னை தியாகராயர் நகரில் 12.10.1970, திங்கள் மாலை 7 மணிக்கு தந்தை பெரியார் “சமுதாய சிந்த னைகள்”என்னும் தலைப்பில் உரையாற்றுவதாக அறிவிக்கப் பட்டதால் பிள்ளையார் சிலை பறிமுதல் காவல்துறையால் முடுக்கிவிடப்பட்டது.
19.10.1970 வரை அந்தப் பகுதியில் தடை உத்தரவுப் போடப்பட்டது. பார்ப்பனர்கள் சும்மா இருப்பார்களா? அவர்களின் வயிற்றுப் பிழைப்பு தந்திரம் பாழானதே!”வீரசக்தி விநாயகர் சங்கம்“ என்ற அமைப்பு ஒன்றை உருவாக்கி தடையுத்தரவை 18ஆம் தேதியன்று மீறப்போவதாக அறிவித்தனர். பார்ப்பன ஏடுகள் அவர்களின் அம்பறாத் துணியில் எப்பொழுதும் தயாராக வைத்திருக்கும் “ஆசிரியர் கடிதங்கள்” என்ற அஸ்திரங்களை வீச ஆரம்பித்துவிட்டன.
ஆனால் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் முதல் அமைச்சர் ஆயிற்றே - அதுவும் தந்தை பெரியார் அவர்களே சம்பந்தப்பட்ட பகுதியில் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தின் அறிவிப்பும் ‘விடுதலை’யில் வெளிவந்து விட்டதே!
சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்ற நிர்வாக கண்ணோட்டத்திலும் காவல்துறை மிகத்துல்லியமாக செயல்பட்டது.
முதலமைச்சர் கலைஞர் மீது சேற்றை வாரி இறைத்தனர். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சக்கூடியவரா அந்தப் பெரியாரின் தன்மானச் சீடர்?
அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் பேசிய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் (13.10.1970) சில உண்மைகளை வெளியிட்டார்.
சம்பந்தப்பட்ட இடத்தில் மசூதிக் கட்ட முசுலிம்கள் பணம் கொடுத்து வாங்கப்பட்ட இடமாகும். அதைக் குறி வைத்து தான் இந்த திடீர் பிள்ளையார் சூழ்ச்சி அரங்கேற்றப்பட்டதை வெளிப் படுத்தினார்.
நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டதால் அந்தக் கூட்டத்தில் அவருக்கே உரித்தான நையாண்டியுடன் முதலமைச்சர் கலைஞர் கூறியதாவது:
“நீதி விசாரணை நடந்தால் பிள்ளையாரே வந்து சாட்சி சொன்னால் ‘என் பெயரால் இப்படி ஏமாற்றுபவர்களை நம்பா தீர்கள்!’ என்று சொல்லி எங்கள் பக்கம் தான் பேசுவாரே தவிர உங்கள் பக்கம் சேர மாட்டார்!” என்று சொன்னாரே பார்க்கலாம்.
பார்ப்பனர்களுக்கென்று உள்ள புத்தியை ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் ‘மனுதர்மப் புத்தி’ என்று சொல்லி விடலாம்.
அவர்கள் பித்தலாட்டத்திற்கும், மோசடிக்கும், சூழ்ச்சிக்கும், தில்லு முல்லு தனங்களுக்கும் ‘ஜெகத்குரு’ என்றும், ‘பெரியவாள்’ என்றும் தூக்கிப் பிடிக்கும் சங்கராச்சாரியாரே வக்காலத்துப் போட்டு முன் வரிசைக்கு வருகிறார் என்றால் புரிந்து கொள்ள வேண்டுமே!
அதுவும் எப்படி? ‘ஸ்வயம்பு’ எப்படி வந்தது என்று அனாவசிய பிரச்சினை பண்ணக்கூடாதாம், எப்படி? மோசடி செய்வார்களாம் - அவற்றையெல்லாம் கண்டுக் கொள்ளக் கூடாதாம் - ‘பக்தி சிரத்தையுடன் வழிபடுவார்களாக’ என்று சொல்பவர்தான் ஜெகத்குரு. வடிகட்டிய படு வெட்கக்கேடு! காஷாய வேடத்தில் கடும் விஷம்!
மனுதர்மம் என்றால் மகத்தான தர்மத்தைப் போதிக்கும் பொக்கிஷம் என்ற ஒரு மாயையை உருவாக்கி வைத்திருந்தனர். அந்த மாயையை உடைத்து அதன் மண்டைக்குள் புழுத்து நெளியும் புழுக்களாம் கொடூரத்தை அறுவை சிகிச்சை செய்து வெளியில் கொண்டு வந்து தோரணமாக தொங்கவிட்டது வடக்கே அண்ணல் அம்பேத்கர், தெற்கே தந்தை பெரியார்.
மனுதர்ம ஆய்வுச் சொற்பொழிவை நடத்திய தமிழர் தலைவர் ஒரு தகவலை சொன்ன போது எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்.
“பயிரிடுதலை மேலான தொழில்என்று சிலர் கருதுகின்றனர். ஆயினும் பெரியோர் அதைப் பாராட்டவில்லை. ஏனெனில், இரும்புக்கொழு நுதியுடைய கலப்பை, மண்வெட்டி, இவற்றைக் கொண்டு பூமியையும், பூமியில் வாழும் சிறிய உயிரினங்களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ?” (மனுதர்மம் அத்தியாயம் 10, சுலோகம் 84)
எப்படி இருக்கிறது? ஏர்பின்னது உலகம் என்ற தமிழர் பண்பாடு எங்கே? பயிர்த்தொழில் பாவம் என்னும் மனுவாதிகள் எங்கே?
பயிர்த்தொழில் பாவத்தொழில் என்றால் பார்ப்பனர் வயிற்றில் பச்சரிசி சோறு அறுத்து வைப்பது எப்படி? பச்சைக் காய்கறிகள் பரிமாறுவது எப்படி? அக்கார அடிசல் வடித்துக் கொட்டுவது எப்படி?
1921ஆம்ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் வடுவூரில் இரு பார்ப்பனர்கள் உழவுத் தொழிலை மேற்கொண்டார்கள். பார்ப்பனர்கள் அவர்களை விலக்கி வைத்தார்கள். அந்தச் சமயம் கும்பகோணம் சங்கராச்சாரியார் அந்தப் பகுதிக்கு வந்தார். அந்த இரு பார்ப்பனர்களும் சங்கராச்சாரியாருக்குக் காணிக்கை செலுத்த முன் வந்தார்கள். ஆனால் சங்கராச்சாரியாரோ அதனை ஏற்றுக் கொள்வில்லை. பிழைப்புக் காக உடலால் உழைப்பது என்ற பாவத்தைச் செய்த பிராமணர்களிடமிருந்து தாம் காணிக்கை எதையும் பெற்றுக் கொள்ளமுடியாது என்று கூறிவிட்டார்.
அந்த இரு பார்ப்பனர்களும் காந்தியாருக்குக் கடிதம் எழுதி விளக்கம் கேட்டார்கள்.
“கொடுமையான ஒரு சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப் பெறுவதே ஒரு சிறப்புத்தான். அதை வரவேற்க வேண்டும்” என்று சரியான பதிலடி கொடுத்தார் காந்தியார்.
(ஆதாரம்: ‘தமிழ்நாட்டில் காந்தியார்’ - பக்கம் 378)
பிழைப்புக்காக உடலை வருத்தக்கூடாது என்று சங்கராச் சாரியார் சொல்லுவதை கவனிக்கத் தவறக்கூடாது. இதன் பொருள் என்ன? தலை வாழை இலை போட்டு, நெய் மணக்க மணக்க, உருண்டை உருண்டையாக உள்ளே தள்ளி, வயிறு நிறைய சந்தனம் தடவிக் கொண்டு மல்லாக்கப் படுத்து புரளும் பார்ப்பனர்களுக்கு அந்த உணவு எங்கிருந்து வந்தது என்பது தெரியாதா? பஞ்சம, சூத்திரர்களின் உடலுழைப்பாலே கிடைத்த தல்லவா? பிறன் உழைக்கலாம், தான் மட்டும் பிறன் உழைப்பில் கொழிக்கலாம் என்பதுதான் பார்ப்பனத் தர்மம் - புரிந்து கொள்க!
பார்ப்பனர்களுக்குக் குறைந்த அளவு தண்டனை கொள்வதற்கு - நியாயம் கற்பித்து காஞ்சி சங்காராச்சாரியார் கூறும் விசித்திர வித்தாரக் காரணத்தை கொஞ்சம் கேளுங்கள், கேளுங்கள்!
“இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும். ராஜாவுக்கு பிராமணனை தண்டிக்க மட்டும் அதிக ‘ஜூரிஸ்டிக்ஷன்’ (ஆணையெல்லை) கொடுக்கப்படவில்லை. பிராமணனுக்குத் தரும் தண்டனை கடுமைக் குறைவாகவே இருக்கும். இதைப் பார்க்கிற போது 'equality before law' - சட்டத்துக்கு முன் ஸமத்வம் - இல்லாமல், சலுகையே தரக்கூடாத ஒரு விஷயத்தில் சலுகை தந்து நியாயம் செய்திருப்பதாகத் தோன்றலாம். அப்படி தோன்றினால் அது நியாயந்தான். ஆனாலும் இதன் காரணத் தைப் புரிந்து கொண்டால் இதிலே அநியாய பக்ஷபாதமில்லை என்று தெரியும். இப்போது ‘பிராயச்சித்தம்‘ என்று சொன்னேனே, அது தான் காரணம்.
குற்றவாளிக்கு ராஜதண்டனையே பிராயச்சித்த கர்மா ஆகிறது என்றேன். பிராமணன் வேத மந்திர ரக்ஷணையையே வாழ்க்கையாகக் கொண்டவன். ஒரு நாள் கூட அவனை விட்டு இந்த வாழ்க்கை ஆசாரம் போகப்படாது. அப்படிப் போனால் அது தேச க்ஷேமத்துக்கே கெடுதல். ஜெயிலில் போட்டால் அவன் எப்படித் தன் ஆசாரங்களுக்கு பங்கமில்லாமல் மந்திர ரக்ஷணை பண்ண முடியும்? அல்லது கண்ணை வாங்கி, காலை வாங்கி, அவனை தண்டித்தால் அப்போதும் அவனால் ஆகிய வேதரக்ஷணம் அல்லவா கெட்டுப் போகும்? வேத தர்மம் இருக்க வேண்டும் என்பதற்குத்தான் ராஜாங்கம் இருப்பதே. அதுவே தன் லட்சியத்துக்கு ஹானி செய்யலாமா? அதனால்தான் ராஜசிக்ஷையை பிராமணனுக்கு ரொம்பவும் குறைத்துச் சொல்லியிருப்பது. ஆனால் அதற்காக அவனை வெறுமே விட்டு வைத்து விடவில்லை. மந்த்ர ரக்ஷணைக்காக ஏற்பட்ட அவனுக்கு ஒவ்வொரு குற்றத்துக்கும் தண்டனையாக மந்திரப் பூர்வமாக ரொம்பவும் கடுமையான பிராயச் சித்த கர்மாக்களை சாஸ்திரமே கொடுத்திருக்கிறது. ராஜ தண்டனை இல்லா விட்டாலும் அவனுடைய ஸமூஹகத்துக்கான சபை அவனை விசாரித்து இப்படிப்பட்ட பிராயச்சித்தங்களை ரொம்பவும் ஸ்ட்ரிக்கட்டாக விதித்து, பலவித குற்றங்களுக்கு ஜாதி ப்ரஷ்டமே பண்ணிவிடுவதென்பது அவனை அப்படிப்பட்ட குற்றங்களை மனசாலும் நினைத்துப் பார்க்க முடியாமல் தடுத்தது. ராஜ தண்டனையிலிருந்து பெருமளவுக்கு பிராமணர்கள் விலக்கு பெற்றிருந்ததால் அவர்கள் ஒழுங்கு தப்பிக் குடிகாரர்களாகவும், காமுகர்களாகவும், கொள்ளை லாபக் கூட்டமாகவும் போய் விடாமல் சமீபகாலம் வரை மற்ற எல்லா சமூகங்களாலும் ரொம்பவும் மரியாதைக் குரியவர்களாகவும், உதாரணமாகப் பிறர்க்கு வழிகாட்டுபவர்களாகவுந்தானே கருதப்பட்டிருந் திருக்கிறர்கள். இதிலிருந்தே அவர்களை அர்த்த சாஸ்திரம் நடத்திய விதம் ஜஸ்டிஃபை ஆகி விடுகிறதல்லவா?”
(தெய்வத்தின் குரல், 3ஆம் பாகம், 870-872)
அடேயப்பா - எவ்வளவு வளைத்து வளைத்து வக்கணை வக்காலத்து. பிராமணன் வேத மந்திர ரக்ஷணையையே வாழ்க்கையாகக் கொண்டவனாம். ஒரு நாள் கூட அவனை விட்டு இந்த வாழ்க்கை ஆசாரம் போகப்படதாம். அப்படிப் போனால், அது தேச க்ஷேமத்துக்குக் கேடாம். அதனால் அவனுக்கு- எந்த குற்றம் செய்தாலும் கடுமையான தண்டனை கொடுக்கக் கூடதாம்.
ஜெகத் குருவான ஒருவருக்கு பிராமணர்கள் மீது மட்டுமே எத்தனை அக்கறை - எண்ணிப் பார்க்க வேண்டாமா?
மனுதர்ம சாரத்தின் பிழிவைத்தான் சங்கராச்சாரியார் தன் பாஷையில் இதோபதேசம் செய்கிறார்.
இந்தியாவில் இரயில் அறிமுகப்படுத்தப்பட்ட போது நான்கு பெட்டிகளில் ஒவ்வொரு வருணம் தீட்டப்பட்டு பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்களுக்கென்று அப்பெட்டிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பார்ப்பனர்கள் வெள்ளைக்கார அதிகாரிகளிடம் மனு கொடுத்த போது நகைத்து நிராகரித்தனர் - பார்ப்பனத் திரிநூலார் திருந்தி விட்டனர் என்பதற்கு இதுதான் அடையாளமா?
தமிழர் தலைவரின் மூன்று நாள் ஆய்வுரை ஆரியத்தின் அக்கிரம ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் மனுதர்மத்தின் கொடூரத்தை இந்தத் தலைமுறைக்குச் சொல்லியிருக்கிறது என்பதுமட்டும் காலத்தின் கல்வெட்டு!
கடைசிச் செய்தி: ராஜஸ்தான் - ஜெய்ப்பூர் உயர்நீதி மன்றத்தில் உள்ள மநுவின் சிலைக்கு கருப்பு வண்ணம் பூசிய இரு பெண்கள் கைது. (முற்றும்)
- விடுதலை நாளேடு, 10.10.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக