புதன், 3 ஏப்ரல், 2019

யாகம் செய்வதற்காகத் திருடலாமாம்!‘பெல்’ ஆறுமுகம்


‘தினமலர்’ போன்ற பார்ப்பனர்கள் எங்கே மனுதர்மம் இருக்கிறது? என்று கேள்வி கேட்டு நாம்தான் ஏதோ இல்லாத மனுதர்மத்தைப் பற்றி பிழைப்பில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதுபோல் எழுதி வருகிறது. அப்படி எழுதிய தினமலர், ஒரு சில நாட்களிலேயே நாகசாமி என்கிற பார்ப்பன பித்தலாட்டப் பேர்வழி எழுதிய 'மனுதர்மத்தின் சாரம்தான் திருக்குறள்' என்ற நூலுக்கு ஆய்வுரை எழுதுகிறது. இரட்டை வேடம் போடுவது அவர்களுக்குக் கைவந்த கலை.

துக்ளக்கில் திருவாளர் சோ அவர்கள் மனுதர்மத்தின் பெருமைகளை விலாவாரியாக எழுதி இருந்தார். அதனை அவருக்குப் பிறகு ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ள திருவாளர் குருமூர்த்தி அவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். 20.2.2019 துக்ளக்கில் தர்மத்தின் சாரம் என்ற தலைப்பில் 'மனுதர்மம் கூறும் சட்டங்கள்' என்ற கட்டுரை வெளி வந்துள்ளது.

மனுதர்மம் மாதிரி ஒரு எக்ஸலண்ட் டாக்குமென்ட் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் இப்படி ஒருவர் எழுதி இருக்கிறாரே என்று எல்லோரும் பெருமைப்பட வேண்டும் என்று எழுதி விட்டு பல்வேறு கப்சாக்களை சோ அவர்கள் அள்ளி வீசுகிறார்.

அந்த கப்சாக்களில் ஒன்று "தன்னுடைய நடவடிக்கையினால் ஒரு சூத்திரன் பிராமணன் ஆகலாம். பிராமணன் சூத்திரன் ஆகலாம். இதெல்லாம் அவனது நடத்தையைப் பொறுத்தது என்று எழுதிவிட்டு அதற்கு ஆதாரமாக ஒரு ஸ்லோகத்தைச் சொல்லி இருக்கிறார் சோ.மனுதர்மம் பத்தாவது அத்தியாயம் 65ஆவது சுலோகம் இவ்வாறு சொல்வதாக அதில் எழுதுகிறார். சுலோகம் என்பதைக்கூட ச்லோகம் என்கிறார். ஆனால் உண்மையில் அந்த சுலோகம் பிறப்பின் அடிப் படையைத்தான் பிராமணன் ஆவதற்குக் கூறுகிறதே தவிர சோ கூறுவதுபோல் குணத்தை எங்கேயும் கூறவில்லை. 1919ஆம் ஆண்டு இராமானுஜாச்சாரியார் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்ட அசல் மனுதர்ம சாஸ்திரம், சோ கூறும் அதே பத்தாவது அத்தியாயம் ஸ்லோகம் 64 என்ன கூறுகிறது தெரியுமா?

"பிராமணன் விவாகஞ் செய்துகொண்ட சூத்திர ஸ்திரீயிடத்தில் பிறந்த பெண் பிராமணனையே விவாகஞ்செய்து கொண்டு அவளுக்கும் பெண்ணாகவே பிறந்து அவளுக்கும் பெண்கள் பிறந்து அவர்களும் இவ்விதமாகவே ஏழு தலைமுறையில் பிராம ணனையே விவாகஞ்செய்து கொண்டு வந்தால் ஏழாவது தலைமுறையில் பிறந்த வர்கள் பிராமண சாதியாகிறார்கள்'' என்றுதான் அந்த ஸ்லோகம் சொல்கிறது.

இதில் பிறப்புத்தான் வருணத்தைத் தீர்மானிக்கிறதே அன்றி எங்கே குணம் வருகிறது? பிராமணன்தான் கணவன். ஆனாலும் அந்த பிராமணனுக்கு சூத்திரப் பெண் மூலமாகப் பிறக்கும் பிள்ளை பிராமணனாக ஆக முடியாது. ஏழு தலைமுறைக்கும் பெண்ணாகவே பிறந்து அந்த ஏழு பெண்களும் பிராமணனையே திருமணம் செய்து ஏழாவது தலைமுறையில் பிறப் பவன்தான் பிராமணன் ஆவான் என்றால் அது நடக்கிற காரியமா? ஏழு தலைமுறையில் இடையிலே மூன்றாவது தலைமுறையோ நான்காவது தலை முறையோ பெண் பிறக் காமல் ஆண் பிள்ளை பிறந்து விட்டால் அவன் பிராமணன் ஆக முடியாது என்பதுதானே இதன் பொருள்? ஏழு தலை முறை என்றால் அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்? ஒரு தலைமுறைக்கு பதினைந்து ஆண்டுகள் என்று வைத்துக் கொண்டாலே 100 ஆண்டுகளுக்கும் மேல் ஆகுமே! நூறு ஆண்டுகளுக்குமேல் இதனை யார் கணக்கில் வைத்துக் கொள்வது. எத்தனாவது தலைமுறை என்று சான்றளிப்பது யார் ?இது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்?

ஆக பிறப்பின் அடிப்படையில் யாருமே பிராமணன் ஆக முடியாது என்பதுதான் இதன் உண்மைப் பொருளே அன்றி குணம் என்பதற்கு இதில் இடம் கிடையாது. இந்த 64ஆவது சுலோகத்தை சோ அவர்கள் சொல்லாமல் 65ஆவது சுலோகத்தை எடுத்துச் சொல்கிறார். இது அதைவிடப் பெரிய பித்தலாட்டம். அந்த 65ஆவது சுலோகம் என்ன கூறுகிறது என்றால் சூத்திரப் பெண்ணை பிராமணன் மணந்தால் அவன் ஏழு தலைமுறைக்குப் பின் பிராமண ஜாதியாகிறான் என்று கூறும் அந்த சுலோகம் ஒரு சூத்திரப் பெண்ணை சத்திரியன் இதேபோல் விவாகஞ் செய்தால் அய்ந்தாவது தலைமுறையில் அவன் சத்திரியன் ஆகிறான் என்றும் வைசியன் அதேபோல சூத்திரப் பெண்ணை மணந்தால் மூன்றாவது தலைமுறையில் வைசியன் ஆகிறான் என்றும் தான் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலும் ஒரு குலத்துக்கு ஒரு நீதிதான் சொல்லப்பட்டிருக் கிறதே தவிர குணத்தின் அடிப்படையில் ஒருவன் பிராமணனாகவோ சத்திரியன் ஆகவோ வைசியன் ஆகவோ ஆக முடியாது என்பதுதான் மனுதர்மத்தின் சாரம். இதனை இன்றும்கூட நியாயப்படுத்தி ஒரு கூட்டம் நம்மை ஏய்த்துக் கொண்டிருக்கிறது.

அத்துடன் அதே கட்டுரையில் சோ மேலும் எழுதுகிறார், அதாவது மனுதர்மம் பிராமணனுக்கு கடுமையான தண்டனை விதிக்கிறது. சூத்திரன் குற்றம் செய்தால் அவனுக்கு எட்டு மடங்கு தண்டனையும் வைசியனுக்கு பதினாறு மடங்கும், சத்திரி யனுக்கு முப்பத்திரண்டு மடங்கும், பிராமண னுக்கு 64 மடங்கு அல்லது 128 மடங்கு தண்டனை விதிக்கிறது. அதனால் பிராமண னுக்குத்தான் கடுமையான தண்டணையை மனுதர்மம் விதிக்கிறது. அதனால் மனு பிராமணர்களுக்கு சலுகை காட்டுகிறது என்பது தவறான வாதம் என்று சோ வியாக்கியானம் செய்கிறார். அதற்கு ஆதார மாக எட்டாம் அத்தியாயம் 337, 338 ஆவது சுலோகத்தைக் காட்டுகிறார். அதிலேயும் சோ வார்த்தை ஜாலம் செய்திருக்கிறார். அந்த ஸ்லோகம் என்பது வெறுமனே குற்றம் என்பதற்கான தண்டனை அல்ல. என்ன குற்றம் என்பது அதில் தெளிவாகச் சொல்லப்பட்டி ருக்கிறது. என்ன குற்றம் என்றால் திருட்டுக் குற்றம். அந்தத் திருட்டுக் குற்றத்திற்குத்தான் வர்ணத்திற்குத் தகுந்தாற்போலத் தண்டனை என்றும் அதிலே பார்ப்பானுக்குத்தான் அதிகபட்சத் தண்டனை என்றும் அதனால் பார்ப்பனர்கள் ரொம்பப் பாவம் என்பது போலவும் மனு தர்மம் பார்ப்பனர் களுக்கு சலுகை தருவதை விட தண்டனைதான் விதித்திருக்கிறது என்று புலம்புகிறார்.

ஆனால் அதே மனுதர்மம் பார்ப்பனர்கள் திருடுவதை ஒரு குற்றமாகவே கூறவில்லை என்பதுதான் உண்மை . அதே எட்டாவது அத்தியாயம் 417ஆவது சுலோகம் என்ன சொல்கிறது தெரியுமா?

பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன ஏழுவிதமான தொழிலாளியான சூத்திரர் இடத்தினின்று பொருளை வலிமையினாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறது.

ஒருவன் பொருளை வலிமையினால் எடுத்துக் கொள்ளலாம் என்றால் அதற்கு என்ன பொருள்? திருட்டுத்தானே! ஆனால் சூத்திர னுடைய பொருளை வலிமையினால் எடுத்துக் கொள்ள மனுதர்மம் பார்ப்பானுக்கு உரிமை அளித்திருக்கிறது. இதுதான் மனு பார்ப்பன ருக்கு விதிக்கும் தண்டனையா?

அது மட்டுமல்ல, திருட்டு தொடர்பாகவே மேலும் மனு என்ன கூறுகிறது தெரியுமா?

யாகம் செய்வதற்காக பார்ப்பான் திருடலாம் என்கிறது மனு. 11ஆவது அத்தியாயம் 12ஆவது சுலோகம் என்ன சொல்கிறது என்றால் வைசியன் வீட்டில் இருந்து யாகஞ் செய்கிற பொருளை கேட்டும் கொடாவிடில் வலிமை செய்தாவது, அல்லது களவு செய்தாவது கொண்டு வரலாம் என்கிறது. அதே நேரத்தில் சூத்திரன் பொருள் வைத்திருந்தால் அவனிடம் கேட்க வேண்டியதில்லை. அவனைக் கேட்காமலும் வலிமையினாலும் அவன் பொருளை யாகம் செய்யக் கொண்டு வரலாம் என்று பார்ப்பனருக்கு சலுகை வழங்குகிறது. அதே அத்தியாயம் 21ஆவது சுலோகம் என்ன தெரிவிக்கிறது என்றால் அவ்வாறு திருடி வந்து யாகம் செய்கிற பிராமணனை அரசன் தண்டிக்கக் கூடாது. மாறாக அத்தகைய பார்ப்பனர்களுக்கு அரண்மனையிலிருந்து அந்த பிராமணனுக்கு போதுமான ஜீவன் விருத்தியை அதாவது அவனுக்கு போதுமான செல்வத்தைக் கொடுத்துக் காப்பாற்ற வேண்டும் என்கிறது.

திருட்டுக் குற்றத்திற்கு பார்ப்பானுக்கு அதிகப்படியான தண்டனை என்று சொல்கிற மனுதர்மம் பார்ப்பான் திருடுவதற்கு விதி விலக்குகளை அளிக்கிறது. மற்றவர்களுக்கு அவ்வாறு எந்த சலுகையும் வழங்கவில்லை. மாறாக ஒரு குற்றத்திற்கு சூத்திரனுக்கு மரண தண்டனை விதிக்கச் சொல்லும் மனுதர்மம் அதே குற்றம் செய்கிற பார்ப்பானுக்கு தலையை மொட்டை அடித்தால் போதும் என்றும் அவனுக்கு அவனுடைய செல்வத்தை எல்லாம் கொடுத்து நாடு கடத்த வேண்டும் என்று மட்டுமே கூறுகிறது. இதுதான் மனு பார்ப் பனர்களுக்கு விதிக்கும் கடும் நிபந்தனைகளா?

இப்படியெல்லாம் இவர்கள் பேசுவார்கள் என்பதனால்தான் இதற்கான பதிலை அண் ணல் அம்பேத்கர் அவர்கள் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே தோலுரித்து அதனைத் தீயிட்டுப் பொசுக்கி அம்பலப்படுத்தி இருக்கிறார். பார்ப்பனியத்தின் வெற்றி என்ற தனது கட்டுரையில் சோ போன்றவர்களுடைய இந்த வியாக்கியானங்களுக்கு பதில் அளித் துள்ளார்.

மனு சாஸ்திரத்தில் பிராமணர்களுக்கு கஷ்டமான நியமங்களை எல்லாம் சொல்லி இருக்கிறது என்பது பற்றி அண்ணல் கூறுவது என்னவென்றால் " பிராமணனுக்கு வறுமையும் சேவையும் தான் இலட்சியமாக இருக்க வேண்டும் என்று மனு கூறுவதாக முடிவு செய்வது வேண்டுமென்றே மிகையாக இட்டுக் கட்டிக் கூறும் ஒரு கட்டுக்கதை" என்று கூறு கிறார். அதற்கு பல்வேறு உதாரணங் களைக் கூறுகிறார்.

மனு பிராமணர்களுக்கு விதித்திருக்கும் கடுமையான தண்டனை என்ன தெரியுங்களா?

''ஒரு பிராமணன் மூன்று உலகங்களின் மக்களையும் கொன்றிருந்தால்கூட, ரிக், யஜூர், சாம, வேதத்தை உபநிஷத்துடன் சேர்த்து மூன்றுமுறை ஓதினால் எல்லாப் பாவங்களிலும் இருந்தும் அவன் முற்றிலும் விடுதலை பெறுகிறான்” என்று மனு அத்தியாயம் 11 ஸ்லோகம் 261,262 கூறுவதாக அண்ணலே எடுத்துரைக்கிறார். ஆகா, எவ்வளவு கஷ்ட மான நிபந்தனை பார்த்தீர்களா? வேதங்களை ஓதுவது அவ்வளவு பெரிய கஷ்டமா? உன் பிழைப்பே அதுதானே அய்யா?

(தொடரும்)

 - விடுதலை ஞாயிறு மலர் 23. 3. 2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக