08.05.1948 - குடிஅரசிலிருந்து....
நம்மவர் தென்னாட்டில் பெரும் பகுதியாகவும், வடநாட்டில் ஆரியர் பெரும் பகுதியாகவும் இருப்பது வட நாட்டிலிருந்த திராவிடர்கள் ஆரிய எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் தென்னாட்டை நோக்கி வந்து இருக்கவேண்டும் என்பதைத்தான் காட்டுகிறது. ஆரியர்களின் முக்கிய சடங்காகிய யாகத்தை எவன் பழித்தானோ, கெடுத்தானோ அவனே ஆரியர்களால் அரக்கனென்றும், இராட்சத னென்றும் கூறப்பட்டான். ஆகவே, யாகத்தில் உயிர்ப்பலி கூடாது, அத்தியாவசியமான பொருள்கள் நெருப்பில் போட்டு எரிக்கப்படக் கூடாது என்று கூறும் நம்மைத்தான், அரக்கர் என்கின்றனர் இந்த அன்னக்காவடிப் பார்ப்பனர். இன்றும் நாம் யாகத்தைத் தடுக்கிறோம். பழிக்கிறோம். ஜீவஹிம்சை கூடாது என்று கெஞ்சிக் கூத்தாடிச் சர்க்காருக்கு விண்ணப்பித்துக் கொண்டு யாகங் களின் மீது தடையுத்தரவு வாங்கி வருகிறோம்.
யாகம் என்றால் என்ன? என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். ஆடு, மாடு தின்ன ஆசைப்படும் சில பிராமணப் பைசாசங்கள் ஒன்று கூடிக்கொண்டு, அவற்றின் இரத்தம் வெளிப்பட்டால் ருசி கெட்டுவிடும் என்பதற்காக, அவற்றை வெட்டிக் கறி செய்யாமல், அவை களைக் கட்டிப் போட்டு, அவற்றின் விதைகளைக் கிடுக்கிக் கொண்டு கசக்கிக் கசக்கிச் சாக வைப்பார்கள். ஒரு ஆடோ, மாடோ இவ்விதம் சாக வைக்கப்பட பல மணிநேரங்கூட ஆகலாம். ஆனாலும், அகோர மாமிச பிண்டங்களான இந்த யாகப் பிசாசுகளுக்கு அதுபற்றிக் கவலை யேது? இவ்வாறு உயிர்வதை செய்யப்பட்ட மிருகத்தை யாக குண்டத்தி லிட்டு, அதில் நெய்யூற்றி வேக வைத்துத் தின்பதுதான் மனுதர்ம சாஸ்திரப்படி செய்யப்படும் யாகம். இப்படிப்பட்ட கோரவதை கூடாது என்று தடுத்தவர்கள்தான் ஆரியரால் அரக்கராக சித்தரிக்கப் பட்டனர்.
சூத்திரனுக்கு யாகம் செய்யும் உரிமை கிடையாது. யாகத்தை வெறுப்பவன் சூத்திரன். ஆகவே, யாகத்தை வெறுக்கும் திராவிடராகிய நாம் ஆரிய சாஸ்திரப்படி சூத்திரர்தான். ஆரியன் ஏது? சூத்திரன் ஏது? என்று நம்மைக் கேட்கிறார்கள் சில அப்பாவி மக்கள். சட்டம் கூறுமா சூத்திரன் இல்லையென்று? சூத்திரன், பிராமணன் இல்லை யென்றால், கோயிலில் மணியடிக்கும் தொழில் ஒரே ஜாதிக்காரன் வசமே இருக்கக் காரணமென்ன? கோயில் அர்ச்சகர்கள் யார்? அவர்கள் ஏன் சமஸ்கிருதம் ஓதுகிறார்கள்? சமஸ்கிருதம்தான் தேவ பாஷை, மற்றவை மிலேச்ச பாஷை, நீச்ச பாஷை என்று ஆரிய சாஸ்திரம் கூறியிருப்பதை நீ அறிவாயா? திடுதிடுவென்று நாலு ஜாதியாரும் கோயிலுக்குள் போவோம், சற்றிருங்கள் என்று கூறி, பிராமணத் தோழன் உங்களைத் தாண்டிக் கொண்டு மூலஸ் தானத்திற்குள் போய்விடுகிறானா இல்லையா பாருங்களேன்? இதைப் பார்த்த பிறகும் எந்தத் தோழனாவது பிராமணன் சூத்திரன் இல்லை என்று கூறுவானாயின் அவன் அறிவு மலையேறி விட்டது என்றுதானே கூறவேண்டும். ஏன் இந்த உயர்வு தாழ்வுக் கொடுமையை இன்னும் மூடி வைக்கப் பார்க்கிறீர்கள்? உள்ளதை மூடி வைத்தால் அது புரை ஓட ஆரம்பித்துவிடும் என்பதை நீங்கள் அறியீரோ!
- விடுதலை நாளேடு, 19.4.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக