வெள்ளி, 1 ஜூலை, 2016

மந்திரத்தால் மாங்காய் விழுமா?-யாகங்கள்


மந்திரத்தால் மாங்காய் விழுமோ? என்பது பாமரர்களும் பேசும் மொழியாகும். இதன் பொருள் அவ்வாறு நிகழாது என்பதுதான்.
யாகங்கள் என்பவை ஆரியக் கலாச்சாரம் - தமிழ் வேந்தர்கள் யாரேனும் யாகம் செய்தார்கள் என்றால், அது ஆரியர்களைப் பின்பற்றிய தாக்கமாகும்.
கடவுளைத் திருப்திபடுத்த தீயில் உயிர்களைப் போட்டுப் பொசுக்கி அந்த மிருகங்களைப் பங்குப் போட்டுச் சாப்பிடு வதுதான் யாகத்தைப்பற்றிய சுருக்கமாகும்.
பசு - இந்துக்களின் புனிதம் - தெய்வம் - பசுவைக் கொல்ல லாமா? பசு மாமிசம் புசிக்கலாமா? என்று ‘நெற்றிக்கண்’ணைக் காட்டுகிறார்களே - இவர்களின் யாகச் சடங்கு என்பது யாது?
30 வகையான யாகங்களையும் யஜூர் வேதம் பட்டியலிடுகிறது. அவற்றுள் ஒன்று கோஸவம் - பசு, காளை இவைகளைக் கொல்லும் யாகம். அஷ்டதச பசுவிதானம் என்பது பதினெட்டுப் பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்.
மனுதர்ம சாஸ்திரம் என்ன சொல்லுகிறது?
எக்கியத்திற்காகவோ (யாகத்துக்காகவே) பசுக்கள் பிரமனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன. அந்த எக்கியஞ் செய்தால், உலகமெல்லாம் க்ஷேமத்தை அடைகின்றது. ஆகையால், எக்கியஞ் செய்யும் பசு ஹிம்சை ஹிம்சையல்ல.
- மனுதர்மம் அத்தியாயம் 5; சுலோகம் 39
மாட்டுக் கறியைச் சாப்பிட்டார் என்று அபாண்டமாகப் பழி கூறி முசுலிம் பெரியவரான முகமது அக்லக்கை உத்தரப்பிரதேசத்தில் அடித்துக் கொன்றார்களே - அவர்கள் இந்த மனுதர்மத்தை என்ன செய்வதாக உத்தேசம்? நெருப்பு வைப்பார்களா?
விலங்குகளை உயிரோடு தீயில் வைத்துக் கொளுத்தி, அதன் புலாலை வயிறு புடைக்கத் தின்று தீர்க்கும் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைத்தான் சித்தார்த்தனாகிய கவுதம புத்தன் எதிர்த்தான். அதனால்தான் ஆரியப் பார்ப்பனர்கள் புத்தரை நாத்திகன் என்றனர் - வசை மொழி பொழிந்து தள்ளினர்.
இவர்கள் எத்தகைய காட்டுவிலங்காண்டிகள் என்பதற்கு ஓர்  எடுத்துக்காட்டு உண்டு. புருஷஞ்ஞ என்ற ஒரு யாகம் உண்டு. இதன் பொருள் என்ன தெரியுமா?
மனிதனைக் கொன்று நடத்தும் யாகமாகும். யஜுர் வேதம் என்பது இத்தகைய காட்டு விலங்காண்டித்தன யாகங்களை விவரிப்பதுதான்.
60 ஆயிரம் மனைவிமார்கள் இருந்தும் தசரதனுக்குக் குழந்தை இல்லை என்பதற்காக அசுவ மேத யாகம் செய்வித்தனர். அதற்காக வேசியர்களை அனுப்பி மயக்கவித்து ரிஷிய சிருங்கரை அழைத்து வந்து அல்லவா அந்த யாகத்தை நடத்தினான் தசரத மகா சக்ரவர்த்தி!
பிரதான பசுவாகிய அசுவரத்தினத்தை (குதிரையை) ராஜ பத்தினியாகிய கவுசல்யை, கைகேயி, சுமத்திரையுடன் இடம், வலம் சுற்றி வந்து, ஓரிரவெல்லாம் அதனோடு கூடவே யிருந்தாள். கட்டிப் புரண்டனர். பிறகு அத்வர்யு, ஹோதா, உத்காதா, பிர்மா என்ற முக்கிய ரித்விக்குகள் ராஜாவினாலே தட்சணையாகக் கொடுக்கப்பட்ட ராஜ பத்தினிகளைக் கையில் பிடித்துக்கொண்டு, அவர்களுக்காகப் பணம் பெற்றுக் கொண்டு அவர்களை அரசனுக்கே கொடுத்துவிட்டார்கள். (வால்மீகி இராமாயணம் பாலகாண்டம் 14 ஆவது சர்க்கம் - 45 ஆவது பக்கம், தாத்தா தேசிகாச்சாரியார் மொழி பெயர்ப்பு).
இவ்வளவையும் எடுத்துக்காட்டுவதற்குக் காரணம், தெலங்கானா முதலமைச்சராக இருக்கக்கூடிய சந்திரசேகர ராவ் உலக அமைதிக்காகவும், தெலங்கானா மக்களின் நல்வாழ்வுக்காகவும் 7 கோடி ரூபாய் செலவுசெய்து மேடக் மாவட்டம் எர்ரவள்ளி என்ற கிராமத்தில் மகாயுத சண்டி யாகம் நடத்தினாரே - அதன் பூர்வோத்திரம் எத்தகைய அசிங்க மானது என்று காட்டுவதற்காகத்தான்.
யாகம் செய்தால் நாட்டில் நல்லது நடக்கும் என்றால், உலகில் அமைதித் தென்றல் வீசும் என்றால், சந்திரசேகரராவ் எதற்காகக் கட்சி நடத்தவேண்டும்? ஆந்திராவிலிருந்து தனித் தெலங்கானாவை ஏன் பிரிக்கவேண்டும்? தேர்தலில் ஏன் போட்டியிட வேண்டும்? முதலமைச்சராகத்தான் ஏன் ஆகித் தொலைய வேண்டும்?
நாலு பணக்காரர்களிடம் பணத்தை வாங்கி புரோகிதப் பார்ப்பனர்களுக்குக் கொட்டிக் கொடுத்து, யாகங்களை நடத்தி நாட்டை வாழ்விக்க வேண்டியதுதானே!
சரி, இவ்வளவும் தான் செய்தாரே - அதாவது ஒழுங்காக நடந்ததா? யாகத்தீ மூண்டு பந்தலையும், யாகக் குண்டங் களையும் பதம் பார்த்துவிட்டதே!
யாரும் பலியாகவில்லை அதுவரை திருப்திதான் - இப்பொழுதுகூட என்ன சொல்லுவார்கள் - இந்தப் பார்ப்பனப் பாதகர்கள்? ஏதோ தோஷம் - சாமிக் குத்தம் - அதுதான் இப்படி நடந்திருப்பதற்குக் காரணம் என்று சொல்லி, அதற்கும் பரிகாரம் என்று சொல்லி, எந்தக் கசுமால சடங்குகளையாவது நடத்தச் சொல்லி, அதிலும் காசு பறித்து விடுவார்களே! ஏமாந்த சோணகிரிகள் இருந்தால் இத்தகைய ஏய்க்கும் கூட்டம் தொந்தியைத் துருத்திக் கொண்டுதானே முன்னே நிற்கும்?
1997 ஜூன் 8 ஆம் தேதி தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் என்ன நடந்தது? மகாகும்பாபிஷேகத்தை ஒட்டி 120 புரோகிதப் பார்ப்பனர்களை வைத்து யாகம் நடத்திக் கொண்டிருந்தபோது, யாக சாலையில் பிடித்த தீ பந்தலிலும் பாய்ந்து, 38 பேர்களைப் பலி கொண்டதே, பெருங்காயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட மேலும் 12 பேர்களும் மடிந்தனரே! இதில் பெரும்பாலும் பெண்கள்தான் - அவர்கள் கட்டிய புடவை விரைந்து ஓடி வர முடியாமல் தடுத்ததால், தீயில் சிக்கிக் கொண்டனர்.
இவ்வளவுக்குப் பிறகும், யாகம் என்ற மூட நம்பிக்கை நடந்துகொண்டுதானிருக்கிறது. புரோகிதச் சுரண்டல்கள் தாம் தூம் என்று நடந்துகொண்டுதானிருக்கிறன்றன.
உணவுப் பொருள்களையும், பட்டாடைகளையும் நெருப்பில் போட்டுப் பொசுக்குவதை கிரிமினல் குற்றமாக்கித் தண்டிக்கவேண்டாமா? மக்கள் நல அரசு என்றால், அதனைத்தானே செய்யவேண்டும். அமைச்சர்களே மூட நம்பிக்கைவாதிகளாக இருந்தால் என்ன செய்வது? பகுத்தறிவின் அவசியத்தை இப்பொழுதாவது உணர்ந்தால் சரி!
-விடுதலை,30.12.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக