வியாழன், 21 பிப்ரவரி, 2019

அக்கப்போரின் அச்சு வடிவமான 'துக்ளக்' ஏடு, பித்தலாட்ட பிரச்சாரத்தின் மொத்த வடிவம்!

மனுதர்மக் கருத்துகளை மாற்றிக் கூறி சோ மோசடி!


மஞ்சை வசந்தன்


இன்று ஆசிரியராய் இருக்கும் குருமூர்த்தி அய்யர் மட்டுமல்ல, அவரின் குருவான சோ இராமசாமியும் அப்பட்டமான பொய்களை அசல் உண்மைபோல ஆலாபனம் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள்.

அப்படி மோசடியாய், பொய்யாய், தப்பாய் எழுது கிறோமே என்று கொஞ்சங்கூட கூச்சநாச்சமில்லாமல் எழுதக் கூடியவர்கள்.

27.02.2019 தேதியிட்ட துக்ளக் இதழில் தருமத்தின் சாரம் என்னும் தொடரில், மனுஸ்மிருதி கூறும் சட்டங் கள் என்னும் தலைப்பில் சோ இராமசாமி எழுதியவை வெளியிடப்பட்டுள்ளன.

அக்கட்டுரையில் சோ எழுதியுள்ளவை: பிராமணன் என்றால் வெறும் பிறப்பால் மட்டும் ஆகாது.

ஸூத்ரோ ப்ரோஹ்மணதாமேதி ப்ராஹ்மணச் சேதி ஸூத்ரதாம்

க்ஷத்ரியாத் ஜாதமேவம் து வித்யாத் வைச்யாத் ததைவ ச

- மனுஸ்மிருதி 10-ஆவது அத்தியாயம், 65-ஆவது ஸ்லோகம்

தன்னுடைய நடவடிக்கையினால் ஒரு சூத்திரன் பிராமணன் ஆகலாம். பிராமணன் சூத்திரன் ஆகலாம். இப்போது நான் கூறிய மாதிரி எல்லாம் வாழ்ந்து, அதை விட மட்டமாக எல்லாம் வாழ்ந்து - க்ஷத்திரியனும், வைசி யனும் இடம் மாறலாம்; க்ஷத்திரியன் வைசியனாகலாம். வைசியன் க்ஷத்திரியனாகலாம். இதெல்லாம் நடத்தை யைப் பொறுத்தது. அவனது குணத்தைப் பொறுத்தது என்று மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். தவிர, பிராம ணனுக்கு உரிய சலுகைகள் குறித்தும் மனுஸ்மிருதியில் சொல்லியிருக்கிறது. என்கிறார் சோ இராமசாமி.

இது அப்பட்டமான மோசடி! தப்பான பித்தலாட்டப் பிரச்சாரம்!

சோ குறிப்பிடும் மனுஸ்மிருதி 10ஆவது அத்தியாயம் 65ஆவது ஸ்லோகத்தில் உண்மையில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பதை அப்படியே கீழே தருகிறோம்.

மேற்சொன்னபடி பெண்சந்ததி வழியினால் சூத்திரகுலத்தில் ஏழாந்தலைமுறையில் பிராமணனுக்குப் பிறந்தவன் பிராமணனாகிறான். அந்த சூத்திர ஸ்திரீயிடத்திலேயே பிராமணனுக்குப் பிறந்த புருஷசந்ததி சூத்திரத் தன்மையை அடையும். க்ஷத்திரியனுக்கு சூத்திர ஸ்திரீயிடத்தில் பிறந்த பெண்சந்ததி க்ஷத்திரியனையே விவாகஞ் செய்துக் கொண்டுவந்தால் அய்ந்தாவது தலைமுறையில் க்ஷத்திரியத் தன்மையையும், வைசிய னுக்கு சூத்திர ஸ்திரீயிடத்தில் பிறந்த பெண் சந்ததி மூன்று தலைமுறை வரையில் வைசியனை விவாகஞ் செய்து கொண்டுவந்தால் வைசியத் தன்மையையும் அடையும். என்று அந்தச் சுலோகம் சொல்கிறது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ளதற்கும், சோ இராமசாமி கூறியுள்ளதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? மனுதர்மத்தில் கூறியுள்ளதை மாற்றி, இவர் கற்பனையில் மோசடியாக எழுதியுள்ளார்.

அது மட்டுமல்ல மனுஸ்மிருதி 10ஆவது அத்தியாயம் 73ஆவது ஸ்லோகம் என்ன சொல்கிறது தெரியுமா?

பிராமணன் தொழிலைச் செய்தாலும் சூத்திரன் பிராமண ஜாதியாக மாட்டான். ஏனென்றால் அவனுக்கு பிராமண ஜாதித் தொழிலில் அதிகாரமில்லை அல்லவா. சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் சூத்திர ஜாதியாக மாட்டான். ஏனென்றால் அவன் ஹீனத் தொழிலைச் செய்தாலும் அவன் ஜாதி உயர்ந்ததல்லவா. இப்படியே இந்த விஷயங்களை பிரம்மாவும் நிச்சயஞ் செய்திருக்கிறார். என்கிறது மனுதர்மம்.

அதாவது பிராமணன், சூத்திரன் என்ற பிரிவு பிரம் மாவில் செய்யப்பட்டது. அது குணத்தாலோ, செயலாலோ வருவதல்ல என்கிறது.

சோ இராமசாமி சொல்வதற்கு நேர் மாறான கருத்தை மனுநீதி சொல்லியுள்ளது.

மனுஸ்மிருதியில் சொல்லாததை மட்டுமல்ல, மனுஸ்மிருதி சொல்லியுள்ளதற்கு நேர் எதிரான கருத்தை மாற்றி மோசடியாக எழுதி, மனுதர்மத்திற்கு மகத்துவம் உண்டாக்கப் பார்க்கிறார் இந்த பித்தலாட்டப் பேர்வழி.

அது மட்டுமல்ல. 10ஆவது அத்தியாயம் 64ஆவது ஸ்லோகத்தில்,

பிராமணன் விவாகஞ் செய்துகொண்ட சூத்திர ஸ்திரீ யிடத்தில் பிறந்த பெண் பிராமணனையே விவாகஞ் செய்துகொண்டு அவளுக்கும் பெண்ணாகவே பிறந்து அவளுக்கும் பெண்கள் பிறந்து அவர்களும் இவ்வித மாகவே ஏழு தலைமுறைவரையில் பிராமணனையே விவாகஞ் செய்து கொண்டுவந்தால் ஏழாவது தலை முறையில் பிறந்தவர்கள் பிராமண ஜாதியர்களாகிறார்கள். என்கிறது  மனுதர்மம்.

பிராமணனுக்கும், சூத்திரப் பெண்ணுக்கும் பிறப்ப வன்கூட பிராமணன் ஆக முடியாது. ஏழு தலைமுறை பிராமணப் பெண்ணின் வயிற்றில் பிறந்த பிறகுதான் பிராமணனாக முடியும் என்று மனுஸ்மிருதி கூறுகிறது. ஆக பிறப்பின் அடிப்படையில் வருவது பிராமண - சூத்திர வேறுபாடு என்பதை மனுஸ்மிருதி ஆணித் தரமாய் கூறியுள்ள நிலையில் அதை மாற்றி மோசடியான கருத்தை சோ இராமசாமி எழுதியதும், அதை குருமூர்த்தி அய்யர் மறுபதிப்பு செய்வதும் மகத்தான மோசடிச் செயல் அல்லவா?

மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மத்தை திராவிடர் கழகம் எரித்து மக்கள் மனுதர்மத்தை வெறுக்கும்படி செய்யும் நிலையில், மனுதர்மத்திற்கு உயர்வு தந்து அதன் மீது மக்களுக்கு மதிப்புண்டாக்க குருமூர்த்தி அய்யர் முயற்சி செய்கிறார்!

அது மட்டுமல்ல,

10ஆவது அத்தியாயம் 4ஆவது ஸ்லோகம்

நாலு வருணத்தாருக்குள் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் இம்மூவரும் இரண்டுவிதமாகப் பிறப்பதனால் துவிஜாதிகளென்று சொல்லப்படுகிறார்கள். சூத்திரனுக்கு உபநயந முதலிய வில்லாததால் ஒரு ஜாதியாகவேயிருக்கிறான்.  என்கிறது. அதன்படி சூத்திரன் என்றும் சூத்திரன் தான் என்கிறது மனுதர்மம். உண்மை அப்படியிருக்க, சூத்திரனும் நடத்தையால் பிராமணன் ஆகலாம் என்று சோ சொல்வது பித்தலாட்டக் கருத்தல்லவா?

மேலும், அத்தியாயம் 10, ஸ்லோகம் 1-இல்

தன் கருமத்தில் நிலைபெற்ற பிரம்ம க்ஷத்திரிய வைசியர் மூவரும் வேதமோத வேண்டும். அதில் க்ஷத்திரிய வைசியர்களுக்கு பிராமண ணோதிவைக்க வேண்டும். அவ்விருவரும் ஓதிவைக்கக் கூடாது. இது சாஸ்திர நிச்சயம்.

என்கிறது. மனுதர்மம். இதன்படி பிராமணன் தொழிலை மற்றவர்கள் செய்யக் கூடாது. அவர்கள் ஓதி வைக்கக் கூடாது என்றால் அவர்கள் எப்படி பிராமணன் ஆக முடியும்? ஆக, சோ கூறுவது மனுதர்மத்தில் இல்லாத இவரது சொந்த சரக்குகள். மோசடிக் கருத்துகள். இவர்தான் நேர்மைக்கு அடையாளம் என்கிறது பூணூல் கூட்டம்! புரிந்து கொள்ளுங்கள்!

மனு கூறும் தண்டனை பற்றிக் குறிப்பிடும் சோ இராமசாமி பிராமணனுக்குக் கூடுதல் தண்டனை கொடுக்க வேண்டும் என்று மனுஸ்மிருதி சொல்வதாய் எடுத்துக்காட்டுகிறார். ஆனால், மனுதர்மம் உண்மையில் என்ன சொல்கிறது?  கொலைக்குற்றத்திற்கு உரிய தண்டனையை மனுதர்மம் கீழ்க்கண்டவாறு சொல்கிறது.

மனுஸ்மிருதி எட்டாவது அத்தியாயம் 379ஆவது ஸ்லோகம்

பிராமணனுக்குத் தலை மயிரை மொட்டையடிப்பது கொலைத் தண்டமாகும். மற்ற வருணத்தாருக்கு மரண தண்டனை தரவேண்டும் என்கிறது. அதாவது,

பிராமணனன் கொலை செய்தால் அவன் தலைமயிரை மொட்டையடிக்க வேண்டும். மற்ற வருணத்தார் கொலை செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்கிறது.

இதை மறைத்து மனுஸ்மிருதியை பாராட்டுகிறார் சோ.

அது மட்டுமல்ல, மனுஸ்மிருதியைப் போல ஒரு சிறந்த நூலே இல்லை. இப்படியொரு நூலை இந்தியாவில் ஒருவர் எழுதியிருப்பதை எண்ணி நாம் பெருமைப் படவேண்டும் என்கிறார்.

ஆனால், உண்மையில் மனுதர்மம் பெருமைக்குரிய நூலா? அது மனித தர்மத்திற்கு எதிராகவும், ஆரிய பார்ப் பனர் உயர்விற்கும், நலத்திற்கும், மற்றவர்கள் தாழ்விற் கும், இழிவிற்கும் கருத்து சொல்லும் நூல்.

சான்றாகச் சில:

பிராமணன் பிறவிச் சிறப்பாளன்; தேவரும் மதிக்கத் தக்கவன்; மனிதரில் உயர்ந்தவன்; தேவமந்திரமே அவன் உயர்வுக்குக் காரணம். எனவே அவன் முடிவுப்படி நடக்க. (மனு: 11:84)

பிராமணன் ஞானியாயிருந்தாலும் மூடனாயிருந்தாலும் அவனே மேலான தெய்வம். (மனு: 9:317)

பத்து வயதுள்ள பிராமணனையும், நூறு வயதுள்ள சத்திரியனையும் தகப்பன் - பிள்ளையாக அறிய வேண் டியது. பிராமணன் தகப்பன் மரியாதையும், சத்திரியன் புத்திர மரியாதையும் வகிக்க வேண்டியது. (மனு: 2:135)

கணவன் துராசாரமுள்ளவனாக விருந்தாலும் அந்நிய ஸ்திரீலோலனாயிருந்தாலும் நற்குணம் இல்லாத வனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது! (மனு: 5:154)

கணவன் சூதாடுகிறவனாயிருந்தாலும், குடியனாக விருந்தாலும், நோயாளியாகவிருந்தாலும் அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யாவிட்டால் அவ ளுக்கு அலங்காரம், துணிமணிகள், படுக்கை இவற்றைக் கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது. (மனு: 9:78)

மாதர்களின் சுபாவமே மனிதர்கட்குச் சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும். (மனு: 2: 213)

மாதர்கள் கற்பு நிலையின்மையும் நிலையா மனமும் நண்பின்மையும் இயற்கையாக உடையவர்கள்! (மனு: 9:15)

மாதர் ஆடவரிடத்தில் அழகையும் பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மட்டும் முக்கியமாக எண்ணிப் புணருகிறார்கள்! (மனு: 9:14)

ஒருவனின் மனையாளிடத்தில் மனையாளில்லாத மற்றொருவன் பிள்ளையையும் உண்டு பண்ணலாம். (மனு: 9:52)

பிராமணன் சாப்பிட்ட மிச்சம், பழைய துணிகள், ஒதுக்கித் தள்ளும் தானியங்கள், பாத்திரங்கள் இவையே சூத்திரனுக்குரிய கூலி (மனு: 125, அத்-10)

ஆரியர் அல்லாத மற்றவர்கள் கறைப்பட்ட கருப்பையில் பிறந்தவர்கள் (மனு-58, அத்-10)

பெண்களுக்கு சுயவாழ்வு இல்லை. அவர்கள் பிள்ளைப் பருவத்தில் பெற்றோரையும், அடுத்து கணவ னையும், பின் பிள்ளைகளையும் சார்ந்தே வாழ வேண்டும். (மனு - 148, அத்-5)

கணவன் தீயகுணம், செயல் உள்ளவனாக விருந்தாலும், பல பெண்களோடு உறவு கொள்பவனாக இருந்தாலும் பெண்ணானவள் அவனை தெய்வமாக எண்ணிப் பூசிக்க வேண்டும்.(தொழவேண்டும்) (மனு 5: 154)

பிராமணன் சூத்திரனிடத்தில் ஏதாவது பொருள் இருந்தால் அதைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் சூத்திரன் பிராமணனுக்கு அடிமையானதால் சூத்திரனுக்கென்று பொருள்கூட உரிமையில்லை. (மனு: 8ஆம் அத்தியாயம், சுலோகம் 417)

கூலி கொடுத்தோ அல்லது கூலி கொடுக்காமலோ சூத்திரனை பிராமணன் வேலை வாங்கலாம். ஏனென் றால், பிராமணனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டே சூத்திரன் பிரம்மாவால் படைக்கப்பட்டிருக்கிறான். (மனு: 8ஆம் அத்தியாயம், சுலோகம் 413)

இப்படிப்பட்ட மனுதர்மம்தான் அரசியல் சட்டம் ஆகவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தப்பித்  தவறி மீண்டும் மோடி வித்தைகள் பலித்து மத்தியில் ஆட்சிக்கு வந்தால், அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்திற்குப் பதில், மனுதர்மம்தான் இந்நாட்டில் அரசியல் சட்டமாகும். அப்படி மனுதர்மம் வந்தால், மேற்கண்ட அவல நிலை தான் வரும்

இம்முயற்சி, இந்த ஆபத்து உடனே தகர்க்கப்பட வேண்டும்! எனவேதான் மனுதர்மம் எரிக்கப்பட வேண்டும்!

- விடுதலை நாளேடு, 21.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக