கலி. பூங்குன்றன்
நெற்றிக்குறியீடுகள் பற்றி திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் ஈராண்டுக்கு முன் எங்கோ ஒரு திருமணத்தில் பேசி விட்டாராம் (தோண்டி எடுத்து சண்டைக்கு வருகிறார்கள் பாருங்கள்!). அது எப்படிப் பேசலாம் என்று தாம்! தூம்! என்று தாவிக் குதிக்கிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்.
அறிவு நாணயம் என்ற ஒன்று இருந்தால் நெற்றிக் குறிகளின் நேர்மை குறித்தும், தத்துவம் குறித்தும் பட்டியல் போட்டுக் காட்டி தளபதி ஸ்டாலின் அவர் களின் கருத்தில் பிழையுள்ளது என்று பீற்றிக் கொள் ளலாம். அதற்கான யோக்கியாம்சம் அறவேயில்லாத நிலையில், பூணூலை உருவலாமா? தளபதி மு.க. ஸ்டாலின் எடுத்துக் கூறிய தகவல்கள் உண்மையேயன்றி வேறு எதுவும் இல்லை என்பது நிறுவப்பட்டு விட்ட ஒன்றே!
தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் கோடிட்டுதான் காட்டியிருக்கிறார், இதற்கே இவ்வளவுப் பாய்ச்சலா? இருப்பதை எல்லாம் எடுத்துவிட்டால் இவர்கள் குதிகால் பிடரியில் இடிபட ஓட்டம் பிடிக்க வேண்டியதுதான்.
நமக்கும் ஒரு சந்தர்ப்பம் தானே - நெற்றிக் குறிகளின் சமாச்சாரம் என்னதான் என்பதைத் தெரிய வைக்க வேண்டாமா? இதோ: வாதவூர் புராணம் பிரமோத்தா காண்டம் திருநீற்றின் பெருமையை மிகப் பிரமாதமாகக் கூறுகிறது!
விபூதிமா மகிமை 34 முதல் 42 முடிய பாட்டின் கருத்தாவது:
"அதிக தூர்த்தனாக இருந்த ஒரு பிராமணன், ஒரு இராத்திரி, ஒரு புலைமாதுடன் வியபசாரம் பண்ணிக் கொண்டிருக்கையில், அம்மாதின் கணவன் கண்டு, அத் தூர்த்தனை வாளினால் வெட்டிக் கொன்று, வேலிக்கு அப்பால் எறிந்தானாம். அந்நேரம் பசியால் வருந்தி குப்பைச் சாம்பலிலே புரண்டிருந்த ஒரு நாய், அப் பிராமணப் பிணத்தைக் கண்டு அதன் மேல் ஏறி, மிதித்துக் கொண்டு தசையைக் கடித்து இழுத்துத் தின்றது. நாய் கால்களிலே ஒட்டிக் கொண்டிருந்த குப்பைச் சாம்பல் பிராமணப் பிணத்தின் மேல் படிந்த தால், சிவகணங்கள் வந்து உபசரித்து புட்ப விமானத்தில் ஏற்றுஞ் சமயம், பிராமணனின் தூர்த்த நடத்தைக்காக அவனைத் தண்டிக்க யமதூதர்கள் வந்த சேர, அவர் களை சிவகணங்கள் விரட்டியடித்துத் துரத்தி விட்டு, காமதூர்த்த பிராமணனை சிவலோகத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் என்ன தெரிகிறது? எவ்வளவு கேவல மான - அநீதியான ஒழுக்கக் கேடான காரியத்தைச் செய்தாலும், அவன் திருநீறு பூசிக் கொண்டால் (குப்பை மேட்டு சாம்பல் உடலில் பட்டாலும்) பாவங்கள் போகும். மோட்சம் கிடைக்கும் என்றாகிறதல்லவா? அப்படி என் றால் நாட்டில் பாவம் செய்ய யார்தான் பயப்படுவார்கள்? பெரிய பாவங்கள்- சிறிய கழுவாய்கள் - இது தான் மதமா? இது ஒழுக்கத்தை வளர்க்குமா - கெடுக்குமா? சிந்திப்பீர்!
நாமக் குறியா? ஆண் குறியா?
இந்து மதத்தின் பெருங் கடவுளர் மூவர். இவர்களுள் ஒருவர் விஷ்ணு. இந்த விஷ்ணுவைக் கும்பிடுகிறவர்கள் வைஷ்ணவர்கள். வைஷ்ணவ பக்தர்களை வழி நடத் தும் பார்ப்பன பூசாரிகள் அய்யங்கார்கள் எனப்படு வார்கள். இந்துக்களில் ஏறத்தாழப் பாதிப் பேர் வைஷ்ண வர்கள். மற்ற இந்துமதப் பிரிவுகளிலிருந்து வைஷ்ண வர்களைத் தனிமைப்படுத்திக் காட்டுவது அவர்கள் தங்கள் நெற்றியில் அணியும் மதக்குறி. இந்தக் குறியின் பெயர் நாமம் என்பது. நாமக்குறியின் உட்பொருள் சிருஷ்டி தத்துவம் தானாம். அதாவது சைவர்களின் லிங்கத்துக்கு இணை யான வைணவக்குறியே நாமம்! சைவர்கள் என்பவர்கள் சிவன் என்னும் இந்துக் கடவுளை வழிபடுவார்கள். சிவன் இந்துக்களின் முப்பெரும் கடவுள்களில் இன் னொரு கடவுள். லிங்க வழிபாடு என்பது பிறப்பு உறுப்பு வழிபாடு ஆகும்.
நெற்றியில் செங்குத்தாக இரண்டு வெள்ளைக் கோடுகள், இந்த இரண்டுக்கும் இடையே ஒரு சிவப்புக் கோடு - இது தான் நாமம்! இரண்டு வெள்ளைக் கோடு களும் மகா விஷ்ணுவின் தொடைகளைக் குறிக்கும். மத்தியில் உள்ள சிவப்புக் கோடு சிருஷ்டி தத்துவத்தை குறிக்கும். (அதாவது தொடைகள் இரண்டுக் கும் இடையில் தொங்கும் உறுப்பு - ஆண்குறி). வைணவர்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. இவை ஒன்றுக்கு ஒன்று எதிரும் புதிருமானவை. இவர்களை ஒருவரிலிருந்து மற்றவரைப் பிரித்து அறிந்துகொள்வது எப்படி? இவர்கள் நாமம் தீட்டிக் கொள்ளும் விதத்தின் அடிப்படையில் தான் - அதாவது, நாமத்தின் இரண்டு வெள்ளைக் கோடுகளை எப்படி இணைப்பது என்பதில் தான்!
வடகலையினர் எனப்படுவோர் இரண்டு வெள்ளைக் கோடுகளையும் இணைக்கப் பரவளைவு (Parabola) ஒன்றினைத் தீட்டுகிறார்கள். தென்கலையினரோ இதற் குக் கீழே தனியாக ஒரு தாங்கு காலைத் தங்கள் மூக்கின் மீது வரைந்து கொள்கிறார்கள்.
கொட்டப்பட்ட குருதி கொஞ்சமா நஞ்சமா?
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டுகளாகத் தென்கலையினரும், வடகலையினரும் தங்களுக்குள் கலகம் செய்து வருகிறார்கள். மதவெறி பிடித்த இவர் களது உற்சாகம் காரணமாகத் தென்னகத்தின் வரலாற் றில் கொட்டப்பட்ட குருதிக்குக் கணக்கே இல்லை.
குருதி கொட்டும் இந்துக் கலகங்களைவிட மோச மானது இவர்கள் பெரும் பணம் செலவிட்டு நீதிமன்றங் களில் நடத்தியிருக்கும் வழக்குகள்தாம். இந்த வழக்கு களின் பயன் என்ன? வழக்குரைஞர்களுக்கு நல்ல சம்பாத்தியம், அய்ரோப்பிய நீதிபதிகளுக்கு நல்ல தமாஷா, பொதுமக்களுக்கோ ஓயாத தலை வேதனை!
காஞ்சீபுரம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென் கலை நாமம் போடுவதா என்று இலண்டன் பிரிவு கவுன்சில் வரை சென்று உலகமே சிரித்ததுண்டு! வட கலைக்காரன் தென் கலைக்காரனைக் கண்டு விட்டாலே சுவரில் போய் முட்டிக் கொள்வான். இதற்குப் பெயர் கண்டு முட்டு; ஒருவரைப் பற்றி இன்னொருவர் காதால் கேட்டு விட்டாலோ சுவரில் போய் முட்டிக் கொள்வான் - இதற்குப் பெயர் கேட்டு முட்டு. ஒரே இந்து மதத்துக்குள் இவ்வளவுப் பெரிய உறுமல்! இந்த லட்சணத்தில் இந்துக் களே ஒன்று சேருங்கள் என்று கூப்பாடு வேறு - வெட்கக்கேடு!
ஓம் என்னும் ஆஸ்திகச் சின்னம்
தாந்திரீகம் என்ற வழிபாட்டு முறையில் ஆண் - பெண் பாலியல் ஆற்றல் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது?
தாந்திரீகர்கள் கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத் திலும் பாலியல் புணர்ச்சி வணக்கத்திற்குரியதாகி வந் துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். பிரம் மாவும் மாயாவும் போல, சிவனும் பார்வதியும் போலத் தெய்வங் களுங் கூடத் தங்களுக்கு இணை - துணை களைப் பெற்றுள்ளனர்! இந்தியாவில் உள்ளதைவிட வேறெந்த நாட்டிலும் ஆண்-பெண் கலப்பைச் சின்ன மாகக் கொண்ட இயற்கைச் சக்தி வழிபாடு அதிக அளவில் நடைமுறைப் படுத்தப் பெறவில்லை!
இலிங்கமும் (ஆண்குறி), யோனியும் (பெண்குறி) இன்னும் இவ்விரண்டின் இணைப்பு அடையாளங்களும் சிவசக்திக் கலாச்சாரமாக இலட்சக்கணக்கான இந்திய மக்களால் வணங்கப் பெறுகின்றன.
எனவே இந்த வழிபாடு உண்மையில் சக்தி தேவதையின் வாயிலாக வெளிப்படும் இயற்கையின் பெண்சக்தியை அல்லது பார்வதியென்றும், தேவியென் றும், துர்க்கையென்றும், பவானியென்றும், மீனாட்சி என்றும், மகாகாளியென்றும் அறியப்படுகின்ற சிவக் கடவுளின் இணைகளின் ஆற்றல் விசையை வணங் குதல் என்பதேயாகும்.
ஓம் என்னும் அடையாளமும், ஓம்காரமும் இவ்வு லகத்தில் இன்றுவரை வாழமுடிந்துள்ள வேறெந்த சின்னத்தைக் காட்டிலும் காலத்தால் முந்தியது என் பதைத் தாந்திரீகர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், இந்தியா, தென் கிழக்கு ஆசியா, நேபாளம், மங்கோலியா, சைனா, ஜப்பான் ஆகிய நாடுகளையும், வட தென் அமெரிக்கர்களின் பழைய நாகரிகங் களையும் சேர்ந்த இலட்சக் கணக்கான மக்கள் ஓம் என்பதையோ, ஓம்காரம் என்பதையோ, ஆண் - பெண் கூட்டினை வற்புறுத்தும் ஆழ்ந்த உட்பொருள் கொண்ட சின்னமாக நம்புகின்றனர் என உறுதிப்படுத்துகின்றனர்.
இந்தப் பொருள் பற்றிப் பல்வேறு புனை கருத்துகள் முன்னெடுத்து வைக்கப் பட்டாலும் ஓம் என்பது நிரந்தர சக்தி விசையின் அடையாளம் - உயிரின் அடிவேர் - கண்ணுக்குத் தெரியாத அணுவிலிருந்து இந்த அண்டப் பரப்பு அல்லது ஆண்டவன் வரையிலுமான படைப் புக்கள் அத்தனைக்கும் அடிப்படை - இறந்த, நிகழ், எதிர் காலங்களின் சின்னம் என்பதிலே ஹிந்துக்கள், ஜை னர்கள், பவுத் தர்கள், கீழை உலகின் குடிகள் ஆகியோரி டையே முழுமையான கருத்தொற்றுமை நிலவுகிறது.
தாந்திரீகம் சுட்டிக்காட்டுவதைப் பாருங்கள்
1) கடவுளின் பெயர் அல்லது ஓம் - ஓம்கார் என்னும் தேவநாகரி எழுத்து புழக்கத்திற்கு வருவதற்கு முன் மென்மையான களிமண்ணில் தூய சமஸ்கிருதத்தில் படம் 1-இல் காட்டப் பட்டுள்ளபடி எழுதப்பட்டு வந்தது. படம் 2 ஆனது ஓம் அல்லது ஓம்கார் என்ற அடை யாளம் பனையோலைகளில் எழுதப்பெற்றதும் இன்றும் எழுதப்படுவதும் ஆகும்.
2) எனவே 'ஓம்' என்னும் சொல் உண்மையில் 3ஆம் 4 ஆம் பட எழுத்து களில் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ள லிங்கம் (ஆண்குறி) 5 ஆம் படத்தின் எழுத்தில் முக்கியத் துவப்படுத்தப்பட்டுள்ள யோனி (பெண்குறி) இரண்டின் சேர்க்கையின் மூலத்திலிருந்து தருவிக்கப்பட்டதே.
"இந்தப் பிரபஞ்சம் எப்படிப்பட்டது?" எனும் கேள் விக்கு பண்டைய தீர்க்க தரிசிகள் "ஓம்" என்று விடை யிறுத்தனர். இரு பாலரின் இணைப்பையே அவர்கள் ஓம் என அடையாளப்படுத்தினர். இந்த இணைப் பினால்தான் உலகமே உண்டாயிற்று. இந்தியாவின் பழங்கால முனிவர்களும், வரும் பொருளுரைப்போரும், யோகிகளும், இந்த ஆண்-பெண் புணர்ச்சிக் குறியீடே ஓம் என்பதில் எந்த அய்யத்திற்கும் இடம் வைக்கவில்லை.
இலட்சக்கணக்கான மக்கள் பரந்த அளவில் நல்லறி குறியாகப் பயன்படுத்தி வரும் இந்திய ஸ்வஸ்திகா என்பது போகம் யோகம் ஆகிய இரண்டும் உருகிக் கலக்கும் உச்சக் கட்ட நிலையை அடையாளப்படுத்திக் காட்டுவதேயாகும் என்பதைத் தாந்திரீகர்கள் நிறுவு கின்றனர். ஒரு கருத்து நெறியினர் திபெத், நேபாளம், பூட்டான், சிக்கிம், இன்னும் பல இந்திய மாநிலங்கள் ஆகிய இடங்களில் மிகவும் சாதாரணமாய்-பொது வானதாய் ஆகிவிட்ட பல்கணவர் உடைமை எனும் மரபினை அடிப்படையாய்க் கொண்டதுதான் ஸ்வஸ்திகா என்று நம்புகின்றனர். தந்திரக் கலையானது ஸ்வஸ்தி காவை 'யோனியின் புனிதக் கோயில்' என்றே அழைக் கிறது. தாந்திரீகர்கள் பாலியல் புணர்ச்சி தொடங்குவதற்கு முன்னால், "ஸ்வஸ்திகா மங்களத்ரவ்யா" என்ற சொற் றொடரை ஓதுகின்றனர். ஸ்வஸ்திகா அடையாளம் ஓம் அல்லது ஓம்காரின் விளைவான கிளை என்பது மறந்து விடாதவாறு குறிப்பிடப் படவேண்டிய ஒன்று.
இரண்டாவதாக மிகமிகச் சாதாரணமாய்ப் பயன் படுத்தப்பெறும் மந்திரம் ஓம் மணி பத்மே ஹம்' என்ப தாகும். சுருக்கமாய்க் குறிப்ப தென்றால் இனக்கலவி யையும், பேரின்பத் தையும் பற்றிய மந்திரம். ஓம் என்பது தொடக்கத்திற்கும் முடிவுக்குமானவோர் அசைச் சொல் லாகும்; லிங்கத்தை (ஆண்குறி) சுட்டுவது மணி; பத்மே என்றால் புனித யோனியில் (பெண் குறி) எனப் பொருள் படும்; ஹம் என்பது மிகவுயர்ந்த சக்தியின் ஆதார மந்திரமாகும்.
"ஆண் - பெண் பாலியல் சேர்க்கையே தலைமையான படைப்பாற்றலின் - வாழ்க்கையின் விருப்பாற்றலின் அடிப்படை!"
- தாந்திரீக மந்திரம்.
(கோல்டன் எஃப்.டி.கொலாபவாலா எழுதிய "தந்திரா-காமம் சார்ந்த வழிபாடு" (TANTRA the erotic cult) எனும் Orient Paper Backs )
இவை எல்லாம் குருமூர்த்தி போன்ற இந்து மத ஆன்மிகக் கண்காட்சி நடத்திக் கொண்டிருக்கும் பேர் வழிகளுக்கு ஆபாசமாகத் தெரியவில்லையா? அருவருப் பாகப்படவில்லையா? எந்த ஒழுக்கக் கேட்டையும் செய்துவிட்டு, குப்பை மேட்டுச் சாம்பல் உடல்மீதுபட்ட மாத்திரத்திலேயே அது திருநீறாகப் பாவிக்கப்பட்டு பாவங்கள் பஞ்சாய்ப் பறந்து ஓடி விடும் என்றால், இவர்கள் ஒழுக்கக் கேட்டைத் தீனி போட்டு வளர்ப் பவர்கள் இல்லையா?
இவற்றைக் குறை கூறக் கூடாது என்பவர்கள் எவ்வளவுக் கேவலமானவர்கள் என்பதையும் எண்ணிப் பார்க்கட்டும்!
சரி, குங்குமத்தின் கதைதான் என்ன? இதோ:
மலட்டு நிலத்தை மாத விலக்கான பெண்களைக் கொண்டு உழச் செய்யின், விளைச்சல் ஏற்படும் என்ற நம்பிக்கையும் ஒரு காலத்தில் நிலவியது. மாதவிலக்கு சினைப் படும் வளத்தை அறிமுகப்படுத்து வது என்பது உண்மையே! இச்சிறப்பை அறிவிக்கும் முகமாகவே புராதன காலத்தில் மாத விலக்கு வேளையில் ஏற்படும் இரத்தக் கசிவைத் திலகமாக நெற்றியில் பெண்கள் இட்டுத் தமது கருவளத்தைத் தெரிவித்து வந்தனர் என்பர். இன்றும் இவ்வழக்கம் குங்குமப் பொட்டாக, பெண்கள் நெற்றியில் திகழ்வதைக் காண்கிறோம்.
(செ. கணேசலிங்கம் எழுதிய 'பெண்ணடிமை தீர...' எனும் நூலிலிருந்து)
குங்குமத்தின் தாத்பரியம் இவ்வளவுக் கேவலமாக இருக்கலாமா என்று கேட்டு விடக் கூடாது - இந்தக் கீதா அபிமானிகளிடத்தில்; கேட்டால் 'அய்யய்யோ இந்து மதவாதிகளைப் புண்படுத்துகிறார்களே!' என்று இந்து மதத்தின் மொத்த வியாபாரிகள்போல ஊளையிடுவார்கள்.
பரமசிவன் சடையில் குடியிருக்கும் கங்கையின் மாத விடாய்தான் இந்தக் குங்குமம் என்ற குறிப்பும் உண்டு.
கேரளா மாநிலத்தில் கண்ணனூர் பகவதியம்மன் கோயில் கதை தெரியுமா? மாதம் தோறும் இந்த அம்மனுக்கு மாதவிடாய் வருமாம். சிலையில் கூட இது நடக்குமா என்று கேட்டு விடாதீர்கள் - அபவாதம் - அபவாதம் என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள் வார்கள்.
சந்தனம் பூசும் சங்கதி!
திருநீறு முடிந்தது; குங்குமக் கதையும் சொல்லியாயிற்று. நாமக் கதையும் நாறிப்போச்சு. நெற்றியில் சிலர் சந்தனத்தைத் தடவிக் கொள்வார்களே, அதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டாமா? இதோ:
"நாம் நாட்டுக்கோட்டை நகரத்திற்குப் போய்வந்த பிறகு அங்குள்ள சில நேயர்கள் ஒன்றுகூடி அவர் களுடைய சமயத்திற்கு நம்மால் பெரிய ஆபத்து வந்து விட்டதாகவும், உடனே அதற்குத் தக்க முயற்சி எடுத்துக் கொள்ளாவிட்டால் சைவ சமயமே முழுகிப் போகும் என்றும் கருதி பல ஆயிர ரூபாய்கள் ஒதுக்கி வைத்து "சிவநேசன்" என்பதான ஒரு பத்திரிகை ஆரம்பித்தார்கள். அப்பத்திரிகையை இந்து மதத்தைக் காப்பாற்ற புறப் பட்டதாகச் சொல்லி மக்களிடையே பரப்பினார்கள். அதன் முதலாவது ஆண்டு பதினாலாவது மலர் அனு பந்தத்தில் "கோபிசந்தனம்" என்னும் தலைப்பில் ஒரு சைவ சித்தாந்த செல்வர் எழுதுவதாவது:
"......தேவர்கள் முதலிய யாவரும் விபூதியைத் தரித்து மோட்சமடைய வேண்டும் என்னும் கருத்தினாலேயே கடவுள் மனிதனின் நெற்றியை குறுக்காகவே படைத் திருப்பதை யாவரும் காணலாம். இதற்கு ஆதாரம் கூர்ம புராணத்தில் சொல்லியிருப்ப தானது "ஸ்ருஷ்டா" ஸ்ருஷ்டி சலே சாஹர்தி புண்ட ரஸ்ய ரசஸ் த தாம, ஸஸர்ஜ சலலாடம் ஹித்ரியக் கோர்த்துவம், நகர்த் துலம் ததாபி மாவை மூர்க்கா நகுர்வந்தித்ரி புண்டாரகம்."
அதாவது "பிரம்மா சிருஷ்டி தொடங்கும் போதே விபூதி மகிமை கூறி, அதனை அணிந்து உய்வதற்காகவே சர்வசனங்களின் நெற்றி களையும் குறுக்கே ஆகிர்தியாகப் படைத்தனர். நெடுமையாகவேனும் வட்டமாக வேனும் படைத் திலர். அப்படியிருக்க சிலர் அவ்விபூதி திரி புண்டா மணியாமல் தீவினை வயப்பட்டு உழலுகிறார்கள் என்று விளங்குதலால் அறியலாம்" என்கிறார். நெற்றியின் குறுக்கு தோற்றத்திற்குக்கூட இப்படி ஒரு காரணமா? ஆமாம். நெற்றியில் திரு நீறோ, குங்குமமோ, நாமமோ தரிக்காத பிற மதத்தவர்கள், நாத்திகர்களின் நெற்றி வேறு வடிவத்தில் வட்டமாக, நீட்டமாக, செங்குத் தாக இருக்கிறதோ! இனி, கோபி சந்தனத்தைப்பற்றி வாசுதேவ உப நிஷத்தில், வாசுதேவன் மகன் அதாவது கிருஷ்ணன் கூறுவதாவது:
கிருஷ்ணன் கோபிகா ஸ்தீரிகளை தழுவிக் கலந்த போது அப்பெண்களின் ஸ்தனங்களிலிருந்தும் கிருஷ்ணன் மேனியில் ஒட்டியபின் அவர்கள் கழுவுவதால் வழிந் தோடிய சந்த னமே கோபி சந்தனமென்று கூறப்படுகிறது. அப்பெயராலேயே அவ்வுண்மை விளங்கும் என எழுதியிருக்கிறார்.
எனவே சைவர்கள் பூசும் விபூதி யாகக் குண்டத்தில் இருந்து வந்ததென்றும், வைண வர்கள் பூசும் கோபி சந்தனம் என்னும் நாமம் கிருஷ்ணன் கோபிகளைப் புணர்ந்த பிற்பாடு கழுவிய தண்ணீரென்றும் கருத்தை வைத்துக் கூறப்பட்டிருக்கிறது. இது உண்மையோ, பொய்யோ என்று நாம் விசாரிக்க நேரம் செலவழிக்க வில்லை. ஏனெனில் அவர் சொல் வது இன்ன இன்ன சாஸ்திரத்தில் இருக்கின்றது என்பதாக அவரே எடுத்துக் காட்டியிருக்கிறார். ஆதலால் அதைப்பற்றி அதிகமாய் சந்தேகிக்க வும் வேண்டியதில்லை. ஆனால் ஒன்று நமக் குத் தெரிய வேண்டும். அதாவது:
கிருஷ்ணனும் கோபிகளும் கலந்தபின் கழுவினது தான் வைணவர் நெற்றியில் வைக்கும் கோபி நாமம் என்று இந்து மத ஆதாரங்களில் இருந்து சைவர்கள் எடுத்துக் காட்டுவது, சைவர்களுக்கு இந்துமத தூஷ ணையும், வைணவ சமய தூஷ ணையும் அல்லவென்று தோன்றும்போதும், ஆண்குறியும், பெண்குறியும் சேர்ந்த போது அறுந்து விழுந்ததின் தத்துவம் தான் லிங்கமும், ஆவுடையாரும் என்றும், அதைத்தான் கடவுளாக வணங்குகிறார்கள் என்றும், வைணவர்கள் சொல்லி இந்து மத ஆதாரங்களில் இருந்தே மேற்கோள்கள் எடுத்துக்காட்டுவது இந்து மத தூஷணையும், சைவசமய தூஷ ணையும் அல்லவென்று வைணவர்களுக்குத் தோன்றும்போது நாம் இவ்விரண்டையும் திரட்டி எடுத்துக் காட்டும்போது மாத்திரம் நம்மையேன் இவர்கள் இந்துமத தூஷணை, சமய தூஷணை, நாஸ்திகம் என்று சொல்லுகின்றார்கள் என்பதுதான் நமக்கு விளங்கவில்லை.
தவம், மதப்பித்துக் கொண்ட பேயர்களைப் பற்றியோ, வயிற்றுப் பிழைப்புக்கும், கூலிக்கும் பிரச்சாரம் செய்யக் கிளம்பும் மனிதாபிமானிகளைப் பற்றியோ நாம் ஒரு சிறிதும் கவலைப்படவில்லை. ஆனால், ஆராய்ச்சிக்காரர்கள் என்றும் பண்டிதர் களென்றும், வித்துவான்கள் என்றும், பெயர் வைத்துக் கொண்டு சமய வேஷமும் போட்டுக் கொண்டு சமய வரலாற்றுக்கும், சமய நூல்களுக்கும் தங்களையே நிபுணர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களை மாத்திரம் ஒன்று கேட்கிறோம். நாம் எழுதுவதும், பேசுவ தும் நம்முடைய கற்பனையா? அல்லது இந்து மத ஆதாரங்கள் என்பவைகளில் உள்ளவைகளா? உள்ள வைகளானால் அதற்கு என்ன சமாதானம் சொல்லு கிறீர்கள்? என்றுதான் கேட்கிறோம். தக்க சமாதானம் சொல்ல முன்வராமல் சூழ்ச்சிப் பிரச்சாரமும், பேடிப் பிரச் சாரமும் செய்யாதீர்கள். நபரைக் குறித்து ஆத்திரப் படாதீர்கள். உங்களைப் போல் பல கற்றறிந்த மூடர்கள் சேர்ந்துதான் பார்ப்பனர்களுக்கு உதவி செய்து நாட்டைப் பார்ப்பனர்களுக்கு அடிமையாக்கி, மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்தி, அறிவற்ற மிருகங்களாக்கி விட்டார்கள். இதுவரை செய்ததே போதும். இனியாவது உங்கள் ஆராய்ச்சி என்பதையும், சமய நிபுணத்துவம் என்பதையும், புதிது புதிதாகக் கண்டுபிடித்தல் என்ப தையும் மக்களின் மனிதத் தன்மைக்கும், தன்னம்பிக் கைக்கும், சுயரிமரியாதைக்கும். அறிவு வளர்ச்சிக்கும் பயன்படும்படி செய்யுங்கள். முடியாவிட்டால் சப்தத் திற்கும், எழுத்துக் கும், வார்த்தைக்கும் இலக்கணம் சொல்லும் வேலையில் உங்கள் வாழ்வை நடத்திக் கொள்ளுங்கள். சமயம் என்கிற வேலையில் புகுந்து மக்களைப் பாழ்படுத்தாதீர்கள். முட்டாள்கள் ஆக்கா தீர்கள் என்றுதான் சொல்லுகிறோம்.
- தந்தை பெரியார் ('குடிஅரசு' - கட்டுரை - 15.04.1928)
இந்த ஆதாரங்களுக்கெல்லாம் மறுப்பு சொல்ல முன் வரட்டும் குருமூர்த்திகள்; குயுக்தி வேலைகள் எங்களிடம் வேண்டாம்!
கடைசியில் இருவருடைய பொன்மொழிகள்.
"இங்கிலாந்தில் நமது சுவாமிகள் (விவேகானந்தர்) மகாபண்டிதர் மாக்ஸ் முல்லருடன் தர்க்கம் செய்கையில் மாக்ஸ்முல்லர் சொன்னதாவது: "இந்துக்கள் மதத்தை ஆராய்ச்சி செய்யுமிடத்து சுவாசமிடும் நுரையீரல் எரிந்துவிடும்!" என்றார் மாக்ஸ் முல்லர்.
- கைவல்யம், (கைவல்ய சாமியார் கட்டுரைகள்)
"மதச்சண்டைகளும் சாதி வேற்றுமைகளும், கலகங் களும் பெருகுவதற்கு ஒரு பெருங் கருவியாய் இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால் இப்போராட்டங்களும் தொலைந்து போகுமென்று வருந்திக் கூறினார் விவேகானந்தர்
(மறைமலை அடிகளாரின் "தமிழர் மதம்" - பக்கம் 24)
குங்குமம், விபூதி பற்றி...
பிரபல தோல் நிபுணர் டாக்டர் தம்பையா கூறுகிறார்!
"நாற்பது வரு டத்துக்கு மேல் நான் ப்ராக்டீஸ் பண்றேன். பதி னைந்து வருடங் களுக்கு முன்பிருந்து தான் குங்குமம், விபூதி அலர்ஜியாகிற பேஷண்டுகள் வர்றது அதிகரிக்க ஆரம்பிச்சது. நவீன உலகில் குங்குமத்தில் என்னென்ன கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன! அவை எப்படி எப்படித் தோலைப் பாதிக்கின்றன என்பது பற்றிப் பெரிய ஆராய்ச்சியே பண்ணி தீஸிஸ்கூட சப்மிட் செஞ்சிருக்காங்க.
கலப்பட விபூதி பத்தியும் இதுமாதிரி யாராச்சும் ஸ்டடி. பண்ணிக் கண்டுபிடிக்கணும். குங்குமம், விபூதி போன்றவற்றை ஒருசிலக் குடும்பங்கள் பாரம்பரியமாகத் தயாரித்தன. அதாவது, குடிசைத் தொழில் மாதிரி... இப்ப அது மாறிப் போயிடுச்சு.
இந்த மாதிரி குங்குமம், விபூதி போன்றவற்றால் தோலில் பிரச்சினை ஏற்பட்டு என்னை அணுகு பவர்களிடம், முதலில் குங்குமம், விபூதி இடுவதைத் தற்காலிகமாக நிறுத்தச் சொல்லிவிட்டு, பிறகுதான் சிகிச்சையைத் தொடங்குகிறேன்..." என்றார்.
(நன்றி: 'ஜூனியர் விகடன்', 26.10.1997)
- விடுதலை நாளேடு, 9.2.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக