வியாழன், 28 பிப்ரவரி, 2019

மனுநீதி சோழன் என்பானும் உண்டோ!


கலி.பூங்குன்றன்


‘மனுநீதி சோழன், மனுநீதி சோழன்’ என்று கிளிப் பிள்ளைக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது போல சொல்லிக் கொண்டு திரிகிறார்களே - உண்மையிலேயே அப்படி ஒரு சோழ அரசன் இருந்தானா? அதற்கான வரலாறுதான் உண்டா? அவன் இருந்தது உண்மையென்றால், அவன்  வாழ்ந்த காலம் என்ன? ஆண்ட ஆண்டு என்ன? அவனு டைய இயற்பெயர் என்ன ?

இந்த வினாவை நீண்ட காலமாகக் கேட்டுத்தான் வருகிறோம் - இதுவரை நாணயமான பதில்தான் இல்லை.

அப்படி இருக்கும்போது - தமிழக அரசு சார்பில் ரூ.1.10 கோடியில் திருவாரூரில் மனுநீதிச் சோழனுக்கு மண்டபம் கட்டியது தான் வேடிக்கை.

இந்தச் செய்தியை வெளியிட்ட தினமணி’, சோழப் பெருமன்னர்களின் சிறப்புக்குரிய திலகமாக விளங்கி, மனு நெறிப்படி வாழ்ந்து காட்டிய மன்னன் மனுநீதிச் சோழன் என்று குறிப்பிட்டதே - இதன் உள்நோக்கம்தான் என்ன?

மனுநீதிச் சோழனைப் பற்றிய கதை அளப்பு என்ன தெரியுமா? மனு நீதி சோழனுக்கு ஒரு மகனாம். அவனது தேர்க் காலில் பசுங்கன்று ஒன்று சிக்கி செத்து விட்டதாம். உடனே தாய்ப்பசு அரசனின் அரண்மனைக்கு நேரே வந்து, தன் கொம்பினால் ஆராய்ச்சி மணியை அடித் ததாம். அரசன் விசாரித்தபோது உண்மை என்ன என்று அறிந்து, தன் மகனைத் தேர்க்காலில் வைத்துக் கொன்றானாம்.

இதைப் படிக்கும்பொழுதே இதன் புராணக் கற்பனை யின் முகம் வெளுத்துப் போகிறதே!

பசு ஆராய்ச்சி மணியை வந்து அடித்தது என்பது நம்பத் தகுந்ததுதானா? அரசனிடம் நீதி கேட்டது - முறையிட்டது என்பது எல்லாம் ஏற்கக்கூடியதுதானா?

பின் ஏன் இப்படி ஒரு கதை? மனு தர்மத்தை உயர்த்திப் பிடிக்க பார்ப்பனப் பண்டாரங்கள் எழுதித் திணித்த சரடு இது என்பதுதான் அதற்கான உள்ளீடு.

சும்மா ஆடுமா ‘தினமணி’ அய்யர் வாளின் குடுமி? இதுதான் சந்தர்ப்பம் என்று சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவியது.

உண்மையிலேயே மனுநீதிப்படி ஆட்சி செய்தால் நிலைமை என்னாகும்?

“நீதிமன்றத்திற்கு அரசன் வர இயலாதபோது அரசனது இருக்கையில் பிராமணன் அமர்ந்து நீதி வழங்கலாம். அந்தப் பிராமணன் வேத விதிமுறை களைக் கல்லாதவனாயினும் சரியே. மிகமிக இழிந்த பிராமணனாயினும் சரியே! அவன் எப்படிப் பட்டவனாயினும் அதுபற்றிக் கவலையில்லை! அவன் பிராமணனாயிருக்கவேண்டும். அவ்வளவுதான்! ஆனால், நான்காம் வருணத்தவன் (சூத்திரன்) அரசனது இருக்கையில் அமர்ந்து நீதி சொல்லக் கூடாது; அவன் அறிஞனே என்றாலும், சூத்திரன் ஆகையால் அரசன் சார்பாக நீதியுரைக்கக்கூடாது.’’

“The judicial officer of a king must be a Brahmin, even if he be a mere Brahmana by birth (and bereft of the virtues of his order) or a mere professional adjudicator of issues, and not a sudra under any circumstances what so ever’’ என்கிறது மனுதருமம்.

“மன்னன் இயற்றவேண்டிய விசா ரணைகள் எந்த நாட்டில் சூத்திரனால் நடைபெறுகின்றதோ அந்த நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப்போல் கண் முன்னே துன்ப முறுவதா கின்றது” என்று மனுதருமம் தொழிலாளர்கள் (நான்காம் வருணத்தவர்) சான்றோர்களாயினும் நீதி விசாரணையில் ஈடுபடக் கூடாது என்று வற்புறுத்துகின்றது.”

“The realm of a king where in a sudra Official administers Justice, is destroyed under his very eyes, like a cow merged in the mud.’’ (MN DUTT)

பிப்ரவரி -7:


நாடெங்கும் மனுதர்மம்


எரியட்டும்! எரியட்டும்!!


மனுவாதி : ஒருகுலத்துக்கொருநீதி என்றார் மனோன் மணியம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளை. பார்ப்பனர் கொலை செய்தால் சிகைச் சேதம் - அதாவது முடியைச் சிரைக்க வேண்டும். அதே நேரத்தில் சூத்திரன் கொலை செய்தால் சிரச்சேதம் - அதாவது தலையை வெட்ட வேண்டும் (மனுதர்மம் அத்தியாயம் 8; சுலோகம் 379) என்கிறது மனுநீதி.

சூத்திரன் ஆட்சி செய்யக்கூடாது - அப்படி ஆட்சி செய்தால், அந்த நாடு சேற்றில் மூழ்கிய பசுவைப்போல மூழ்கி விடும் என்ற மனுதர்மத்தை ஏற்றுக்கொண் டால், மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் முதல மைச்சர் ஆசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்ய முடியுமா?

ஏன் மோடிதான் பிரதமர் நாற்காலியில் அமர முடியுமா?

எந்தக் காலத்திலோ, எந்த ஒரு கிறுக்கனோ எழுதிக் குவித்ததை எல்லாம் அப்படியே நம்பிவிடலாமா? இது ஜெய லலிதா காலத்தில் முடிவு செய்ததாகவே இருக்கட்டும்; யார் தவறு செய்தாலும் தவறு தவறுதானே!

பெண்களைப்பற்றி மனுதர்மம் கூறியி ருப்பதைப் படித்தால், மானமுள்ள எவனும் அந்தத் தருணத்திலேயே கொளுத்தத்தான் செய்வான். படுக்கை, ஆசனம், அலங் காரம், கோபம், பெண், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனு வானவர் கற்பித்தார் (மனு நீதி அத்தியாயம் 9 சுலோகம் 17).

இதற்கு விளக்கமும் வேண்டுமா? ஒவ்வொரு பெண்ணும் கூட்டுமாரை எடுத்துக் கொண்டு புறப்பட வேண்டாமா?,

அன்னை மணியம்மையார் அவர் களின் பிறந்த நாளான மார்ச் 10 ஆம் தேதியன்று (2017 )தமிழ்நாடெங்கும் 10 மய்யங்களில் மனுநீதியைக் கொளுத்தும் போராட்டத்தை திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை நடத்தியது.

அதற்கு முன் 17.5.1981 அன்று திராவிடர் கழகம் மனுதர்மத்தை எரித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் 1922 திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டிலேயே இராமாயணத் தையும் மனு தர்மத்தையும் கொளுத்த வேண்டும் என்றார் தந்தைபெரியார்.

1927 டிசம்பர் 4 அன்று வடாற்காடு குடியாத்தம் சுயமரியாதை மாநாட்டில் மனுதர்மம் கொளுத்தப்பட்டது.

இப்பொழுது மீண்டும் வரும் 7.2.2019 அன்று தமிழ்நாடெங்கும் மனுதர்மம் எரிக்கப்படட்டும்!  எரிக்கப்படட்டும்!!

 - விடுதலை ஞாயிறு மலர், 2.2.19


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக