சனி, 15 ஏப்ரல், 2023

கீதை – மாணவர்கள் கற்க வேண்டிய ஒன்றா?

 


மே 1-15,2022

கவிமாமணி இரா.குடந்தையான்

மாணவர்களை மூளைச் சலவை செய்து, மதவுணர்வையூட்டி, பா.ஜ.க. அரசுகள் தற்போது முயன்று மடமையை வளர்த்துக் கொண்டிருக்கின்றன.

மத்தியப் பிரதேச அரசு 2011இல் செய்த அந்தத் திருப்பணியைத்தான், இன்று கருநாடக, குஜராத் அரசுகள் செய்ய முன்வந்துள்ளன. பகவத் கீதை நீதி போதனைகளைச் சொல்லும் நூலல்ல. ஆன்மா, கர்மா, வர்ணாசிரமம், உலகத் தோற்றம், படைப்பு பற்றிப் பேசும் தத்துவ நூல்.  மாணவர்களில் அறிவு வளர்ச்சிக்கு கீதை எந்த அளவில் பயன்படும் என்று தெரியவில்லை.

ஒரு நூலைப் பாடமாக வைக்க அரசு முடிவு செய்தால், அரசு கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பொருத்தமான பதிலைச் சொல்ல முன்வர வேண்டும்.

1.            நூல் எழுதப்பட்ட காலம் எது?

2.            நூலாசிரியன் யார்? அவனது கல்வித் தகுதி என்ன?

3.            மாணவர்களுக்கு நூல் மூலம் சொல்லப் போகும் செய்தி என்ன? படிப்பினை என்ன?

4.            நூல் மாணவர்களிடையே ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

நூலின் காலம் எது?: பகவத் கீதை கிருஷ்ணனால் அர்ச்சுனனுக்குச் சொல்லப்பட்ட 700 ஈரடிப் பாடல்களைக் கொண்ட நூல். மகாபாரதம் கி.மு.850இல் நிகழ்ந்ததாகக் கூறுகிறார்கள்.

ஆனால், கீதையின் எழுத்து நடை, சொற் பயன்பாடுகள், அமைப்பு முறை இவை வைத்துப் பார்க்கும்போது அது கி.பி.300இல் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“சேத்திரம் என்பது யாது? அது எத்தன்மையது? என்பது பற்றி ரிஷிகள் வேதத்தில் பலவிதமாகப் பாடியிருக்கிறார்கள். பிரம்ம சூத்திரத்திலும், உபநிடதங்களிலும் ஏதுக்களை அறுதியிட்டுக் கூறியிருக்கிறார்கள்.’’ (‘கீதை’ -_ 13:34)

கீதையில் பிரம்ம சூத்திரத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்ம சூத்திரம் எழுதப்பட்ட காலம் கி.மு.600. கீதை கி.மு.850இல் சொல்லப்பட்டிருக்கு மானால் 250 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்படும் பிரம்ம சூத்திரத்தைப் பற்றி கிருஷ்ணனுக்கு முன்னதாக எப்படித் தெரியும்? எனவே, கீதை மகாபாரத காலத்தில் எழுதப்படவில்லை.

ஆசிரியன் யார்? அவனது ஒழுக்கம் என்ன?

வரலாற்றில் 4 கிருஷ்ணர்கள் உள்ளனர்.

1.            கி.மு.1200இல் எழுதப்பட்ட ரிக்வேதம் பழங்குடி இனத்தவனான கருப்பன், யது குல கிருஷ்ணனைப் பற்றிக் கூறுகிறது. இவனுக்கு இந்திரன் எதிரி.

2.            கி.மு.600இல் எழுதப்பட்ட சாந்தோக்கிய உபநிடதத்தில் தேவகியின் மைந்தனாகச் சொல்லப்படும் கிருஷ்ணன் ஆங்கிரச முனிவரின் சீடன். ஆனால் அவதாரமல்ல.

3.            கி.மு.850இல் பாண்டவர்கள் காண்டவா காடுகளை எரித்து நகராக்கியபோது அவர்களுக்குத் துணையாக _ நண்பனாக இருந்தவன் ஒரு கிருஷ்ணன்.

4.            இதைத் தவிர கிரேக்க நாட்டில் ஹிராக்லிஸ் என்ற கிருஷ்ணன் இருந்திருக்கிறான். இவனும் காளிங்க பாம்பைக் கொன்றவன். சூரியனின் சாபத்தால் எரிந்து கருப்பானவன்.

இந்த நால்வரில் பாண்டவர்களின் நண்பனாய் இருந்தவனையே கீதாசாரியன் என்று எடுத்துக் கொண்டால் மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதற்கோ, நீதி போதனை செய்வதற்கோ அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது?

“கோபியர் புடவைகளைக் கைப்பற்றி விளையாடி, பல்வேறு பெண்களுடன் காதல் களியாட்டங்களில் ஈடுபட்டவனும், தன் சொந்த மாமனையே கொலை செய்தவனும், மகாபாரதத்தில் கபட யோசனைகளை அள்ளி வீசியவனும் ஆகிய கிருஷ்ணன் எந்த ஒரு ஒழுக்கத்துக்கும் தகுதி உடையவனாக இல்லை. அவனுக்கு 16,108 மனைவிகள் இருந்தனர்’’ என்கிறார் டி.டி.கோசாம்பி (நூல்: பண்டைய இந்தியா)

கீதையின் எட்டாவது அத்தியாயத்தில் இரவு, பகல், உத்திராயணம், தடசிணாயனம் என்பது பற்றி பேசுகிறான்.

பூமி 23.5 டிகிரி சாய்ந்த அச்சில் சூரியனைச் சுற்றி வருவதால் வடக்கு நோக்கி நகர்வது போலவும் (உத்திராயணம்), தெற்கு நோக்கி நகருவது (தட்சிணாயனம்) போலவும் ஒரு மாயத் தோற்றம் தெரிகிறது. இதைத் தவிர சூரியன் உதிப்பதுமில்லை. மறைவதும் இல்லை என்பதே அறிவியல் உண்மை!

“சித்தத்தை அடக்கியாண்ட முனிவனின் யோகநிலை காற்று இல்லாத இடத்தில் கொழுந்து விட்டெரியும் விளக்கு போன்றது’’ (கீதை 18:67) என்கிறான் கிருஷ்ணன். காற்று இல்லாவிட்டால் விளக்கே எரியாது எனும் அறிவியலுக்கு எதிரானது கீதை. அப்படிப்பட்ட கீதை பாடநூலா?

இந்த முட்டாள்தனமான வாசகங்கள் நிரம்பிய கீதையைப் படித்து மாணவர்கள் பாழாய்ப் போக வேண்டுமா?

“பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரர்களுக்கென்று வகுக்கப்பட்ட கர்மங்கள் அவரவர் சுபாவத்தில் தோன்றும் குணங்களை வைத்தே பார்க்கப்படுகிறது. இதில் சூத்திரர்களின் பணி ஊழியம் புரிவதே; அது சூத்திர இயல்பும் காரியமும் ஆகும். (கீதை 18:4)

குணங்களின்படி பிரிவு என்றால், அது பரம்பரையாக எப்படி சாத்தியமாகும்? அப்பனுக்குள்ள குணம் பிள்ளைக்கோ, பிள்ளைக்குள்ள குணம் பேரக்குழந்தைக்கோ வராதே! எனவே, பிறப்பின் அடிப்படையில் பேதம் என்பது மனித தர்மத்திற்கு எதிர் அல்லவா?

இப்படி பிறப்பாலேயே பேதங்களைக் கற்பிக்கும் பகவத் கீதையை மாணவர்களுக்குப் பாடமாக வைக்கும் அரசு, ஜாதிப் பாகுபாடுகளை வளர்க்கவும், ஆணவக் கொலைகளைப் பெருக்கவும் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா?

“பகவத் கீதை மத நூல் அல்ல. அது ஒரு வாழும் நெறி, நன்நெறியைப் போதிக்கிறது. சமூக நீதியைக் காப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது’’ என்றெல்லாம் உயர் நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்குமானால் நீதிபதிகளின் தகுதியே அய்யத்திற்குரியதாகும்.

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “கருநாடக, குஜராத் அரசு போல அனைத்து மாநிலங்களும் கீதையைப் பாடமாக்க முன்வர வேண்டும்’’ என்று பரிந்துரை செய்கிறார். தொடக்கத்திலேயே இம்முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்!

‘ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக் கூடாது, தேர்வு எழுதக் கூடாது’ என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விதிக்கும் பா.ஜ.க. அரசுகள், மாநிலங்களை மத அடிப்படையில் பிரித்து வெறியர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதைத் தகர்த்து, மத நல்லிணக்கம், மனித சமத்துவம், மடமை ஒழிப்பு இவற்றை நிலைநிறுத்தி, மாணவர்களின் பாடத் திட்டங்களை உருவாக்க வேண்டும்!ஸீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக