அடித்தவர்களே, அழும் நாடகம் இதோ! ஏமாறமாட்டோம்!!
—கி.வீரமணி
பார்ப்பனர் நலன் பாதுகாப்பதையே தனது ஒரே லட்சிமாய் கருதி நடத்தப்பெறும் ஏடுகளில் ஒன்றான ‘தினமலரில்' ஒரு பார்ப்பனர் தாங்கள் ஏதோ யூதர்களை ஜெர்மனியில் ஹிட்லர் வாட்டி யதைப்போல தங்களை தமிழ்நாட்டு திராவிடர்கள் - பார்ப்பனரல்லாதவர்கள் நடத்துகிறார்கள் என்று பொய்யழுகை அழுதிருப்பதற்கு ‘விடுதலை' தனது தலையங்கத்தில் மிகத் தெளிவான முறையில் பதில் அளித்துள்ளது (12.6.2021).
திராவிடர் இயக்கத்தின்மீது இந்த பார்ப்பன ‘பிரகஸ்பதிகள்' வைக்கும் குற்றச்சாற்றுகள் என்ன?
"எந்த ஓர் இனத்தையும் தவறாகப் பேசுதல், தாக்குவது இந்தியச் சட்டப்படி குற்றம். ஆனால், ஆட்சியிலிருப்போர் அந்தக் குற்றத்தைச் செய்கின்றனர்.
‘பார்ப்பனர்' என்பதே, அந்த சமூகத்தினரை இழிவுபடுத்தும் சொல்தான். ஆனால், சிறுபான்மை இனமான அவர்கள், அந்த சொல்லுக்குக்கூட எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒதுங்கி, ஒதுங்கி இருக்கின்றனர்."
- இந்த முதல் குற்றத்தில் உள்ள நியாய அநியாயங்களை விவாதிக்கலாமா?
1. ‘எந்த ஓர் இனத்தையும் தவறாகப் பேசுதல், தாக்குதல் இந்திய சட்டப்படி குற்றம்.
இதைச் செய்தது பார்ப்பனர்களான ஆரியர்கள் அல்லவா? ஆரிய வேதங்களில் கறுப்பின மக்களை ‘தஸ்யூக்கள்', ‘சண்டாளர்கள்', ‘சூத்திரர்கள்', ‘தொடக்கூடாதவர்கள் என்று எழுதியதோடு, மனுதர்மம், அர்த்தசாஸ்திரம், பகவத் கீதை முதலானவற்றில் பகிரங்கமாகவே இழிவுபடுத்தி வைத்து, அதற்கு சட்ட அங்கீகார முத்திரை பதித்தவர்கள் - திராவிட இயக்கத்தவர்களா? பெரியாரா? அண்ணாவா? கலைஞர் கருணாநிதியா? இன்றைய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினா? கி.வீரமணியா? யார்?
மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்.
2. அந்த மக்களின் எண்ணிக்கை பெரும் பான்மையாக இருந்தும், மக்களிடையே புழக்கத்தி லிருக்கும் தொகை 8 முதல் 10 கோடியாக இருக்கும் அவர்களின் தாய்மொழியான தமிழ் மொழியைத் தாழ்த்தி, ‘‘நீச்ச பாஷை - அல்ல நீஷ பாஷை, எந்த கோவிலுக்குள்ளும் அர்ச்சனைக்குத் தகுதி யற்ற மொழி, மக்களின் புழக்கத்தில் இல்லாத ‘செத்த மொழியாக' இருந்தாலும், வழிபாடுகளில், கடவுளுக்கு உகந்த மொழி ‘தேவ பாஷை'யான ஆரிய மொழியான சமஸ்கிருதம் என்று கூறி, இன்றும் தமிழ்நாட்டுக் கோவில்களில் - தமிழன் - திராவிடன் கட்டிய கோவில்களில் அர்ச்சனை மொழியாக தமிழை அனுமதிக்க மறுப்பது யார்? திராவிடர்களா? திராவிடர் இயக்கத்தவர்களா? பார்ப்பனர்களாகிய ஆரியர்களா?
3. அனல் வாதம் - புனல் வாதம் என்ற பெயரால் பல்லாயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்து, கழுவிலேற்றி அதை ஆண்டுதோறும் விழாக்கள் செய்வது ஏறத்தாழ ஒரு ‘இனப் படுகொலை'யைக் கொண்டாட வைப்பது அல்லவா?
4. மனுதர்மத்தில் சூத்திரன், பஞ்சமன் என்ற நான்கு ஜாதிகளையும், ஜாதி, அடுக்குக்குக் கீழே 5 ஆவது பஞ்சமனையும் - தீண்டத்தகாதவர்கள் - ஆறாவது மிக மிகக் கீழான மக்கள் தொகையில் சரி பகுதியாக உள்ள பெண்கள் அனைவரும் படிக்கக் கூடாதவர்களாகவும், பிறவி இழிவானவர்கள் என்றும் இன்னும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரும், கேரளாவில் சபரிமலையில் அய்யப்பன் கோவிலில் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று கச்சை கட்டி நின்று, பெண்களின் உரிமை பறித்து, அவர்களைக் கேவலப்படுத்துவது பார்ப்பன சனாதனம்தானே!
மனிதாபிமானத்தோடு அவர்கள் என்றாவது பார்த்ததுண்டா?
விதவைகளை உயிருடன் எரித்தவர்கள் யார்? எரிக்கப்பட்ட அவர்களுக்குக் ‘கோவில் கட்டி' தெய்வமாக்கி - ‘சதி மாதா'வாக்கிய சதிகாரக் கூட்டம் எது?
5. பகவத் கீதையில் 9 ஆம் அத்தியாயத்தில் 32ஆவது சுலோகத்தில் பெண்களையும், ‘சூத் திரர்கள்' என்று இழிபெயரைச் சூட்டிய உழைக்கும் மக்களையும் ‘‘பாவ யோனி''யிலிருந்து பிறந்தவர்கள் என்று எழுதி வைத்து, இழிவுப்படுத்தி வருபவர்கள் யார்?
பார்ப்பனர்களா? மற்றவர்களா?
தங்கள் தாயையே கொச்சைப்படுத்துவதுபோல் பெண்கள்மீது இப்படி ஒரு பிறவி இழிவை வீசி அடிமைகளாக்கி மகிழும் இனம் எது?
‘பார்ப்பனர்' தங்களை ‘பிராமணன்' என்று அழைக்கச் சொல்லும்போது, அதன் வர்ணாசிரம படிக்கட்டு வரிசை கதவைத் தட்டி எடுத்து வருவது ‘சூத்திரன்' என்ற இழிச் சொல்தானே?
எனவேதான் தந்தை பெரியார், ‘பார்ப்பானை பிராமணன் என்று அழையாதீர்' என்று இழிவைத் துடைக்க அந்த மக்களுக்கு அழைப்பு விடுத்தார். தங்கள் மீதுள்ள கறையைப் போக்க, அவமானத்தை நீக்கவே தவிர, வேறில்லை.
6. ‘பிராமணன்' என்ற சொல்லை பெரியாரும், திராவிட இயக்கம் மட்டுமா தவிர்த்து வருகிறது?
தமிழ் இலக்கியங்களில் எங்காவது பிராமணன் என்ற சொல்லாட்சி உள்ளதா?
(வீ) மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (குறள் 134)
என்பதில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவரின் திருக்குறளில் உள்ள சொல் அல்லவா?
(வீவீ) மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்க ணோன்பென்னை - சிலப்பதிகாரத்தில்
(கோவலன் - கண்ணகி மாந்த திருமணத்தைக் குறிக்கும் செய்யுளில் உள்ள சொல் ‘பார்ப்பான்' என்பதுதானே!
(வீவீவீ) ‘பார்ப்பன மாந்தர்காள், பகர்வது கேண்மின்
நால்வகைச் சாதியை இந்நாட்டினில் நீர் நாட்டினீர்'
- பார்ப்பனர் என்று கூறப்படும் -
பார்ப்பனர் கபிலர் அகவலில் பயன்படுத்தப் பட்டுள்ள சொல் ‘பார்ப்பனர்'தானே!
பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட வேந்தர்க்கும் பொல்லாத வியாதியாம்
திருமூலர்
திருமந்திரத்தில் கூற்று அல்லவா!
பழைய இலக்கியங்களை விட்டு பாரதியார் யுகத்திற்கு வருவோம்!
(அ) பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே!
- பாரதி பயன்படுத்தியது இச்சொல்தானே!
(ஆ) ‘‘சூத்திரனுக்கொரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறு ஒரு நீதி
சாத்திரம் சொல்லிடுமாயினும் அது சாத்திரமல்ல
சதியென்று கண்டோம்''
இப்படி இலக்கியத்தினுள் நுழைந்தால் இன்னும் ஏராளமான தரவுகள் உண்டு!
அனைவரும் உறவினர் - யாதும் கேளிர் என்ற பண்பாடு திராவிடப் பண்பாடு - சமத்துவ சங்கநாதம்!
பெயர் வைப்பதில்கூட பேதமும், இழிவும் கீழ் மக்களாக்கப்பட்ட சூத்திரர்களுக்கு சூத்திரர்களுக்கு மனுவின் கட்டளை என்ன தெரியுமா?
‘‘பிராமணனுக்கு மங்களத்தையும், க்ஷத்திரி யனுக்கு பலத்தையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகின்ற பெயரை இடவேண்டியது!
உண்ணும் பதார்த்தங்களில்கூட அவமானம் உருவாக்கியது மனு. படிக்கும்போது எங்கள் நெஞ்சங்கள் கொதிக்காதா?
மனு 3 ஆவது அத்தியாயத்தில் 241 ஆம் சுலோகத்தில்
‘‘பன்றி மோத்தலினாலும், கோழி சிறகின் காற்றினாலும், நாய் பார்வையினாலும் சூத்திரன் தொடுவதாலும் பதார்த்தம் அசுத்தமாகிறது!
என்னே கேவலம்!
பன்றியை விட -
கோழியை விட -
நாயை விட
ஆறறிவு படைத்த, இந்த மண்ணின் உழைப்புச் செல்வம் தொட்டாலே ‘தீட்டு' - அசுத்தமாகிறதாம்!
(சூத்திரன் தொட்டுக் கொடுக்கும் ரூபாய் நோட்டு, தங்க நகைகள், கறந்த பால், கடைந்த வெண்ணை, உருக்கிய நெய் ‘சூத்திரன் - சூத்திரச்சிகளின்' கைபடாமலா உருவானது?
அவற்றை மட்டும் ‘நன்னா' ரசிச்சு, ருசிச்சு சாப்பிடறேளே, அப்போது எங்கே போச்சு சூத்திர - பஞ்சமத் தீட்டு?
இவ்வளவுக் கொடுமைகளை, அடிமைத்தனத்தை ஓராண்டு, ஈராண்டு அல்ல - பல்லாயிரம் ஆண்டுகள் தொடங்கி, இன்று ஓர் இனம் - மண்ணுக்குச் சொந்தக்கார இனம் இழிவைத் தூக்கி எறிந்து, சுயமரியாதையைப் பெற்று முழு மனிதனாவது கூடாதா?
பேதத்திற்கு விடை கொடுக்க உங்களைப் பார்ப்பனர் என்று அழைப்பதால், உங்கள் அந்தஸ்து ‘ஆவி'யாகப் போய்விட்டதா? என்னே நீலிக் கண்ணீர்!
இன்னும் கல்வி யாரிடத்தில்?
இன்னும் பதவிகள் எவரிடத்தில் ஏகபோகம்?
இன்னும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் யார் வசம் ஆதிக்கத்தில்?
இன்னும் வறுமையில் யார் வாடுபவர்கள்?
ஊடகங்கள் யார் வசம்?
தொழில் அமைப்புகளின் ஆதிக்கம் எவர் கையில்?
அதிகாரவர்க்கம் அக்கிரகாரம்தானே!
மறுக்க முடியுமா?
எனவே, உண்மையில்,
வஞ்சிக்கப்பட்டவர்கள்
வாழ்வாதாரம் இழந்தவர்கள்
அவமானத்தைச் சுமந்து
பஞ்சைகளாய், பராரிகளாய், பாழ்பட்ட மக்களாகி வாழ்பவர்கள் எந்த இனத்தவர்?
இவ்வளவு அநீதி, உரிமைப் பறிப்புக்குப் பின்னரும்,
சமூகநீதி வகுப்புரிமைப்படி உங்கள் (பார்ப்பனர்) மக்கள் தொகை விகிதாச்சாரப்படி உங்கள் பங்கை நீங்கள் பெறுவதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை; ஆனால், மற்றவரைப் படிக்கவோ, உத்தியோகம் பார்க்கவோ அனுமதிக்கவே முடியாது என்று இன்னமும் சூழ்ச்சி கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்து, எங்கள் இன மீட்சிக்குப் பெருந்தடையாக உள்ளவர்கள் நீங்கள்தானே!
மீண்டும் மனு யுகத்திற்கு இந்த நாட்டை அழைத் துச் சென்று அமர வைக்க அயராது பாடுபடும் சமூக ‘‘அட்டைகள்'' உங்களைத் தவிர வேறு யார்?
மனசாட்சியுடன் பதில் கூறுங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக