புதன், 25 அக்டோபர், 2023

திசை திருப்புவோரே இதற்கு தெளிவான பதில் உண்டா? - கி.வீரமணி (கீதை கூறுவது என்ன?)

   

பகவத் கீதையில்... 

"சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்
குணகர்ம விபாகஷ.... 

என்று கீதையில் உபதேசித்த கிருஷ்ணன் சுலோகத்தை, "ஜாதி வர்ண தர்மத்தை நானே உண்டாக்கினேன்" என்று கூறுவதை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா,"The Truth About the Gita" என்ற அரிய ஆராய்ச்சி நூலை எழுதிய ஆந்திர சிந்தனையாளர் வி.ஆர். நார்ளா (V.R. Narla),  காஷ்மீரத்து புரட்சி செக்கியூலரிஸ்ட்  பிரேம்நாத் பாஸ் (Premnath Bass) போன்றவர்கள் சுட்டிக் காட்டும் நிலையில்,  அதைத் திசை திருப்ப, கீதையைப் பிரச்சாரம் செய்யும்  கீதை வியாக்கியான திரிபுவாத நிபணர்களுக்கு ஒரு கேள்வி.

(காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரரோ இதில் நாணயமாக, "ஜாதி வர்ணம் என்பது பிறப்பின் அடிப்படையில் தான்; குணத்தின் அடிப்படையில் ஒருபோதும் அமையாது" என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார். "பெரியவா" என்று பய பக்தியுடன் இவர்கள் கூறும் அவரது விளக்கத்தை கீதை விளக்கக்காரர்கள் ஏனோ இதில்  ஏற்பதில்லை!)

"குணத்தை வைத்தே மேல் ஜாதி, கீழ் ஜாதி என்று கொள்ள வேண்டும்" என்பதையே சதுர் வர்ணம் மயாசிருஷ்டத்திற்கு"ப் பொருள் கொள்ள வேண்டும் என்றால், இதன்படி உயர்ந்த குணம் உள்ள "சூத்திரனை" பிராமணன் என்று அங்கீகரிக்க சாஸ்திரமோ, சட்டமோ அனுமதிக்கிறதா? ஒப்புக் கொள்கிறதா? பிராம்மண வர்ணத்தில் பிறந்து தவறு செய்பவன் "சூத்திர - பிராமணன்" ஆகிறார் என்றால் அப்படி ஒரு பிரிவு, ஜாதி இருந்திருக்க வேண்டுமே! 

நல்ல உயர்ந்த குணம் படைத்து வாழும் சூத்திரன் - "பிராமணோ - சூத்திரன்" என்று பிராமணோர் பெற்ற தனி ஜாதியாக - இத்தனைப் பிரிவுகள் உள்ள ஜாதிகளில் ஆகியிருக்க வேண்டுமே - அப்படி இதுவரை இல்லையே -  ஏன்? ஏன்?

பதினொன்றாவது அத்தியாயத்தில், சுலோகம் 84 :

"பிராமணன் பிறப்பினாலாயே தேவர்களுக்கும்

பூஜிக்கத் தக்கவனாய் இருக்கிறான்.

பத்தாவது அத்தியாயம் 73ஆவது சுலோகத்தில்

"பிராமணன் தொழிலைச் செய்தாலும் சூத்திரன் பிராமண ஜாதியாக மாட்டான். ஏனென்றால் அவனுக்கு பிராமண ஜாதித் தொழிலில் அதிகாரமில்லையல்லவா?

சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் சூத்திர ஜாதியாக மாட்டான். ஏனென்றால் அவன் எந்தத் தொழிலைச் செய்தாலும் அவன் உயர்ஜாதி அல்லவா? இப்படியே இந்த விஷயங்களை பிரம்மாவும் நிச்சயம் செய்திருக்கிறார்."

இதற்கும், குணத்தை அடிப்படையாகக் கொண்டதே கீதை கூறும் வர்ணம் என்று அர்த்தம் கூறுவதற்கும் எத்தகைய முரண்பாடு?

சிந்தித்துப் பாருங்கள், "வர்ண தர்மத்தைப் பாதுகாக்கவே சொந்தங்களிடையேகூட தயங்காது போர் செய்!" என உபதேசம்.

"கடமையைச் செய்" என்பதை வார்த்தைகளால் கூறினால் அந்தக் கடமை செய்வது வர்ண தர்மப்படி விதித்த கடமையே தவிர பொதுவான அர்த்தம் கொண்டதல்ல என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக