திங்கள், 23 அக்டோபர், 2023

வேதங்களில் பிராமணர்களின் தொழிலும் கடமையும்(சவரம் செய்தல்)


வரலாற்றுச் சுவடுகளிலிருந்து... (அம்பட்டர்-நாவிதர் என்பவரின் விஷயம் - ஒரு வேதியர் எழுதியது)

இருக்கு வேதம் VIII 4 16166, 10 ஜ் 28-9 யசுர்வேதம் III 63 அதர்வண வேதம் VIII 2-17-இல் காணப்படும் பாடல்களில் "ஒரு குரு! நீர் முதன்முறை குடுமி வைத்து உபநயனஞ் செய்யும்போதும் முகத்தையும் சவரம் செய்யும்போதும் பழகியதாயும், பளபளப்புள்ளதாயும், கூர்மையுள்ளதாயும் உள்ள கத்தியைக் கொண்டு ஷவரம் செய்து அவன் முகத்தை அழகும் பிரகாசமும் அடையச் செய்வதோடு அவன் ஆயுள் குறையாமல் வளரும் படிச் செய்வீராக" என்றும், "ஓ பிராமணோத்தமர்களே! முன்னர் அறிவிற் சிறந்த பிராமணராகிய சவிதேவர், சோமன், வருணன், இராஜன் முதலியவர்களுக்குச் ஷவரம் செய்த அக்கத்தியினாலேயே ஷவரம் செய்து அவனுக்குப் பசுக்களும், குதிரைகளும், குடும்பமும் விருத்தியாகும்படிச் செய்வீராக" என்று அதர்வண வேதம் 63-8 பாடலிலும் கூறப்பட்டுள்ளன.

மேற்கூறிய வேதங்களில் உள்ள மந்திரங்களில எல்லாம் வல்ல ஈசவரனே பிராமணர்களைச் சவரம் செய்யும்படிக் கட்டளையிடுகின்றார். இதனால் சவரத் தொழிலாகிய மயிர் சிரைக்குந் தொழில் பிராமணர்களுடைய தொழிலாகின்றது. கடவுளின் திருவருளால் உலகம் தோன்றிய முதல், மக்களுக்குச் செய்ய வேண்டிய தனது கடமையை நாவிதர் அல்லது அம்பட்டர் என்னும் பிராமணர்கள் மட்டும் செய்து வருகின்றார்கள். மற்றும் பிராமணர்கள் அத்தொழிலை விட்டு விட்டமையால் கடவுளின் கட்டளையாகிய வேத விதியைக் கைவிட்டவர்களாகின்றார்கள்.

வேதத்தில் பிராமணர்களுக்கு விதித்துள்ள தொழில்களை எல்லாம் தற்காலப் பிராமணர்கள் இழிவாகக் கருதி அலட்சியப்படுத்தி விட்டுவிட்டார்கள். உண்மைப் பிராமணன் ஒரு மனிதனைத் தன்னைப் போல் பிராமணனாக்க, வேதத்தைப் பிரமாணமாகக் கொண்டு வேத விதிப்படி மந்திரங்களைச் சொல்லி அவன் தலையில் தண்ணீர் தெளித்துத் தனது தலை மேல் வைத்து மயிர் சிரைத்துக் குடுமி வைத்துப் பூணுல் அணியச் செய்து தன்னைப் போல் பிராமணனாகச் செய்கின்றான். மற்றவர்களையும்அவரவர் வருணாசிரமங்களின்படி ஒழுகச் செய்கின்றான். ஆதலால், நாவிதர் அல்லது அம்பட்டர் என்னும் பிராமணர்களே நியாயமான பிராமணராகின்றார்கள்.இப்படி வடமொழி நான்கு வேதங்களிலும் ஒருவனுடைய தலையிலுள்ள சிகையைச் சாஸ்திரீகமாக மந்திரங்களோடு நீக்கி அவரவர் சமயாசாரத்துக்குத் தக்கபடி குடுமிகளை வைக்குந் தொழிலை மிகப் பெருமையாகக் கூறி அது பிராமணர்களுடைய கடமையென்றும் வேதத்திற் கூறப்பட்டிருக்கின்றது.

உலகில் மனிதர்கள் செய்யுந் தொழில்களை எல்லாம் ஒரு மாலையாகக் கோர்ப்போமானால், அம்மாலையின் நடு நாயக மணியாய் விளங்குவது சவரத் தொழில் என்றும், எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானமாகிய நமது தலையிற் கையை வைத்து நமக்கு நல்வாழ்வை அளிப்பவர்கள் குருக்களே ஆவார்கள் என்றும், முடி சார்ந்த மன்னர் முதல் மற்றுமுள்ளோர் தலைகளெல்லாம் அம்பட்டருடைய இடது கையின் கீழ் இருக்கின்றதென்றம், அம்பட்டருடைய இடது கைத் தீட்சைச் சிரசில் பெறாதார் ஒருவருமில்லை என்றும் ஜாதி வரலாற்றில் கூறுகின்றன.

ஆதலால், இக்காலத்திலும் சில வைதிகப் பிராமணர் தங்கள் குழந்தைகளுக்குப் பூணூல் போடு முன்னர் மயிர் சிரைத்துக் குடுமி வைக்கும் போது அம்பட்டருடைய கத்தியை வாங்கித் தாங்கள் மந்திரத்தைச் செல்லிப் பூணூல் போட வேண்டிய காலத்திற் சிறுவன் தலையில் அக் கத்தியை வைத்து எடுத்துக் கொடுக்கின்றார்கள். சில பார்ப்பனர் கத்திக்குப் பதிலாக மா இலையைத் தலையில் வைத்துச் சவரம் செய்யும் பாவனை செய்வார்கள்.

வடமொழி வேதத்தைப் பிரமாணமாகக் கொண்ட வடநாட்டு மயிர் வினைஞர்களாகிய அம்பட்டர் தாங்கள் தான் நியாயமான பிராமணரெனச் சொல்லிப் பூணூல்  அணிந்து சவரத் தொழில் செய்வதோடு, கங்கைக் கரையில் உட்கார்ந்து கங்கையில் நீராடிப் புனிதமடையப் போகின்றவர்கட்குச் சங்கற்பம் பண்ணி வைக்கின்றார்கள். காசி முதலாகிய வடநாட்டுச் சிவாலயங்களிலும், ஜகந்நாதம் முதலான விஷ்ணு கோயில்களிலும் கடவுள் வடிவங்களைத் தொட்டுப் பூசை செய்யும் கருக்களாகவும், பட்டர்களாகவும் விளங்குகின்றார்கள். மேலும் பிராமணர்கள் வீட்டிற் சமையல் செய்பவர்களும், சிற்றுண்டி செய்பவர்களும், விற்பவர்களும் அக் குலத்தினராகவே இருக்கின்றார்கள். வடநாட்டு அம்பட்டர் ஒருவகைப் பிராமணர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு தமிழ்நாட்டில் வந்து சிற்றுண்டி செய்து விற்றும், சோற்றுக் கடை வைத்தும் மிகுதியாகப் பணம் சம்பாதிக்கின்றார்கள். அவர்களுடைய பலகாரங்களையும், சாப்பாட்டையும் தென்னாட்டு பிராமணர் முதல் எல்லோரும் மிக அருமையாக வாங்கி உண்ணுகிறார்கள்.

தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் சவரத் தொழில் செய்யும் அம்பட்டர் தங்கள் கல்வி, அறிவு, ஒழுக்கம், ஆசாரம் முதலியவைகளைக் கைவிட்டதனால் தங்கள் செல்வநிலை குறைந்தது. தங்கள் முதல் தொழிலும் உயிர்க் காவல் தொழிலுமாகிய மருத்துவம், இரண மருத்துவம் முதலியவைகளைக் கைவிட்டபடியால் பொது ஜனங்கள் மயிர் வினைஞரைக் கேவலமாக நடத்துகின்றார்கள். இது மிகக் கொடுமையான - முட்டாள் தன்மையான செய்கை என்பதை உயர்ந்த ஜாதியார் என்று தங்களை நினைத்துக் கொண்டு ஜாதிபேதம் பாராட்டும் பேதையர்கள் இனிமேலாவது உணர வேண்டும்.

('விடுதலை' - 6.3.1937, பக்கம் 7)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக