திங்கள், 17 மே, 2021

வேதங்கள் - பேதங்கள் (4)


சு.அறிவுக்கரசு

சுக்ல யஜூர் வேதம்

இது வாஜசனேய ஸம்ஹிதை என்றும் கூறப்படும். முதல் இரண்டு அத்யாயங்களில் கடவுள் பெருமை, துதிப்பாடல், அரச நிர்வாகம் போன்றவை உள்ளனவாம். அக்னிஹோத்ர ரகஸ்யம், பெற்றோர், பிள்ளைகளின் கடமைகள் முதலியன 3, 4, 5 அத்யாயங்களில் உள்ளனவாம். அத்யாயம் 6இல் மீண்டும் ராஜ்யபரிபாலனம், சபா, சமிதி உறவு, கடமை போன்றவை. ஏழாம் அத்யாயத்தில் ஆத்மா, மனம், யுத்தலட்சணம் போன்றவை கூறப்படுகின்றன.

8 மதல் 39 வரையுள்ள அத்யாயங்களில் கிருஹ் தர்மம், ராஜதர்மம், மனித தர்மம், ஸ்த்ரீபுருஷ பரஸ்பர உறவு, பார்ப்பனர், சத்திரியர் கடமைகள், மறுஜென்மம், நித்ய கடமை போன்றவை சொல்லப்படுகின்றன. அத்யாயம் 40இல் ஈசோபநிஷத் உள்ளது. இதில் வழக்கமான வேத உளறல்கள் உள்ளன. பூமியில் இரண்டு கடல்களாம். ஒன்று கல்விக்கடல் மற்றது தண்ணீர்க்கடல். திரவியம் தேடுவதற்காக அதனைக் கடக்கலாமாம். நம் விரோதிகளைப் பூண்டுடன் அழிக்க வேண்டுமாம்.

இந்த வேதத்திற்கான உபநிஷத் ‘பிருஹ தாரணீய மஹா உபநிஷத்’ என்பது. கொஞ்சம் பெரிய உபநிஷத். யஜூர் வேதச் சாரம் என்கிறார்கள். “அஸதோ மா ஸத் கமய, தமஸோ மா ஜ்யோதிர் சமய, ம்ருத்யோ மா அமிர்தம் கமய” என்பது முதல் பாடல். இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல். மரணத்திலிருந்து சாகாமைக்கு இட்டுச்செல் என்பது இதன் பொருள்.

இரண்டு மனைவிகளுடன் இல்லறத்தில் வாழ்ந்து, அடுத்த கட்டமான வானப்ரஸ்த நிலைக்கு போக விரும்பியே யாக்ஞவல்கியர் எனும் முனிவன் பெருமை பேசும் கதைகள் உள்ளன. தன் மனைவி கேட்டதற்குப் பதில் கூறிய ரிஷி “குலத்தில் பற்றும் ஜாதியில் வெறியும் பரமாத்மிகப் பக்திப் பயிற்சியே ஆகும்“ என்கிறான். கணவனும் மனைவியும் காதலிப்பதே பரமாத்மாவைக் காதலிப்பதற்கானப் பயிற்சிதான் என்கிறான். நெருப்பினால் வெளிவரும் புகை, அக்னியாகாது. அதுபோல ஸ்ருதி, ஸ்ருதிகளைப் படித்ததால் பரமாத்மாவை அறிவதல்ல. உஷ்ணம் ஏறிப் பிறகு பற்றி எரியும் அக்னியைக் காண்பதுபோல வைராக்கியம் முதிர்ந்து ஞானம் உதிக்கும்போது பரமாத்மாவைக் காணலாம் என்கிறான்.

கடவுளை (பரமாத்மாவை)ப் பார்க்கும் வழியைக் கூறுகிறான். பலரும் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் கூறும் யாக்ஞவல்கியன் கார்க்கி எனும் பெண் ஒருத்தியின் கேள்வியைச் சந்திக்கிறான். “எது வானத்திற்கு மேலும் பூமிக்குக் கீழும், வானத்திற்கும் பூமிக்கும் இடையிலும் உள்ளதெனவும், எது இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உள்ளது எனவும் கூறப்படுகிறதோ, எது அதில் குறுக்கும் நெடுக்குமாகக் கோக்கப்பட்டுள்ளதோ, அது எது?” என்று அவள் கேட்டாளாம்.

“அது உருவம் உடையதல்ல. நுட்பமாகவும் இல்லை. குட்டையுமல்ல, நெட்டையுமல்ல. நெருப்பு போலச்சிவப்பல்ல. நீரைப்போல ஈரமாக இல்லை. அதற்கு நிழல் இல்லை. அளவும் இல்லை. அதற்கு உள்ளும் இல்லை. புறமும் இல்லை. அது எதையும் உண்பதும் இல்லை. எது வொன்றாலும் உண்ணப்படுவதுமில்லை”.

எந்தப் பிரம்மம் தனக்குத்தானே நேரில் காணக்கூடியதாயும் வேறு எதையும் வேண்டாததாகவும் உள்ளதோ அது பராகதி. அதுவே பரப்பிரம்மம்“ என்று பதில் கூறினானாம் யாக்ஞவல்கியன். அவனை யாரும் வெல்ல முடியாது எனத் தீர்ப்பு கூறிவிட்டானாம் கார்க்கி.

கேள்வியைப் போலவே பதிலும் குழப்பமே. விளங்காததே. அதுதான் வேதம். வேதாந்தம்.

பல பத்தகங்களைப் படிப்பதால் ஒருவன் பகவானிடம் பிரியம் உள்ளவனாக ஆக முடியாது. ஆழம் இல்லாத குளத்தில் நீர் குடிக்க வேண்டுமானால் அதை கலக்காமல், மெதுவாகக் குடிக்க வேண்டும். கலக்கி விட்டால் அடியில் இருக்கும் சேறு நீரில் கலந்துவிடும். ‘சாஸ்திரங்களைப் பற்றிய விவதாங்களினால் மூளைதான் மேலும் கலங்கும். தெளிவு ஏற்படாது’ என்கிறது உபநிஷத். அப்படியே நம்பு, ஏற்றுக் கொள் எனக் கற்பிக்கிறது.

செய்யலாமா?

தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் ஆகிய மூவரும் கடவுளிடம் உபதேசம் கோரினார்களாம். அது “த” எனும் ஓர் எழுத்தை மட்டுமே கூறியதாம். இந்திரிய அடக்கம் அற்ற தேவர்கள், “தாம்யத” என்று உபதேசித்ததாகக் கருதிக் கொண்டனர். அடக்கமாக இருங்கள் என்று சொன்னதாக நினைத்துக் கொண்டனர். “தத்த” என்று சொல்லி, தானம் செய்யுமாறு சொன்னதாக மனிதர் எண்ணிக் கொண்டனராம்.

அசுரர்களோ “தயத்வம்“ என்று கூறியதாக நினைத்துக் கொண்டு தயை உடையவர்களாக எனக்கருதிக் கொண்டனராம். ஆகவே “த” என்ற ஒரு சொல்லின் மூலம் அடக்கம், தானம், தயை ஆகிய மூன்றையும் உபதேசித்ததாம் என்கிறது. ஸூக்ல யஜூர் வேதத்தை யாக்ஞவல்கியன் இன்றும் வாழுமாறு செய்தார் என்கிறது உபநிஷத்.

“ஈஸாவஸ்யம் இதம் ஸர்வம்“ எனத் தொடங்கும் இந்த உபநிஷத் 18 மந்த்ரங்களை மட்டுமே கொண்ட சிறிய உபநிஷத். ஈஸாவாஸ்ய உபநிஷத் எனப்படுவது. தத்யங் அதர்வணன் என்பவன் தன் மகனுக்குச் சொன்னதாம். இதன் மய்யக்கருத்து “ஈசவித்யை” என்பதாம் “கடவுள் முழுமையானது.

இந்த உலகமும் முழுமையானது. முழுமையான கடவுள் தோற்றுவித்ததே உலகம். ஒரு முழுமையிலிருந்து முழுமையை (உலகம்) எடுத்த பிறகும் எஞ்சி நிற்பதும் முழுமையே”. என்பதுதான் இதன் பொருள். ஒரு விளக்கிலிருந்து கணக்கில் அடங்காத விளக்குகள் ஏற்றப்பட்ட பின்பும் முதல் விளக்கு இருக்கிறதல்லவா? அது போல...

இந்த உலகம் மாறிக்கொண்டேயிருக்கும். மாறுகின்ற உலகத்தை இறைவன்தான் நிரப்ப வேண்டும். இருக்கும் செல்வம் உன்னுடையது அல்ல. அதற்காக ஆசைப்படாதே. எப்போதும் தியாக சிந்தையுடன் இரு. எல்லாவற்றிலும் கடவுளைக்காண். மனைவியிடமும் பிள்ளைகளிடமும் கடவுளைக் காண வேண்டும். வாழ்விலும் சாவிலும், இன்பத்திலும், துன்பத்திலும் இறைவன் சமமாக இருக்கிறான்.

உலகம் பற்றிய நம் கற்பனை பொய். மாயை. உறவுகளும் மாயை. எதுவும் நம்முடையது அல்ல. எல்லாவற்றிலும் பற்றுடனும் பற்றில்லாமலும் வாழ்ந்தால் அக வளர்ச்சிக்கான அடித்தளம் அமைகிறதாம். உடம்பு, மனம், பிராணன், புத்தி, ஆத்மா என்ற அய்ந்தும் கலந்ததே “நாம்”. ஆத்மாவை அறிவதுதான் முதல்படி. மனம் அகம் நோக்கி, ஆத்மாவுடன் ஒன்றாக்கிக் கொண்டு அதனை அறிபவர்களுக்கு மட்டுமே மறுபிறவி இல்லை உன்கிறது உபநிஷத்..

தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக