செவ்வாய், 11 மே, 2021

வேதங்கள் - பேதங்கள் (3)


சு.அறிவுக்கரசு

சூரியைக்கும் ஸோமனுக்கும் விவாஹம் நடந்ததும் முடிகிறது. சூரியை, சூரியனின் (ஸவிதாவின்) மகள். ஸோமன் நட்சத்திரங்களின் நடுவே இருக்கிறான். ஸோமன் என்பது பிராந்தியோ, விஸ்கியோ? திருமண நாளில் யாரும் ஸோமனைக் குடிப்பது இல்லையாம். அஸ்வினிகள் மாப்பிள்ளைத் தோழர்களாம். தெய்வத் திருமணத்திற்கு எல்லாத்தேவர்களும் வாழ்த்திக் கொண்டே வருகிறார்கள். “தஸாஸ்யம் புத்ரா நாதேஹி பதிம் ஏகாதசம் க்ருதி” என்று வாழ்த்துகிறார்கள். இந்திரனே, மணமகளுக்கும் பத்துப் பிள்ளைகளை அளித்திடு. அவளின் கணவனை அவள் பதினொன்றாம் மகனாக ஆக்கிக் கொள்வான் என வாழ்த்துகிறார்கள். பத்தும் புதல்வர்களாம். புதல்வியே வேண்டாமாம். என்ன புத்தி! ஆண் ஆதிக்க ஆரியச் சமுதாயப் புத்தி!

10552 பாடல்களிலும் ஒரே விதமான செய்திகள்தான். சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டு... பாடியவனுக்குச் சலிப்பு தட்டவில்லை. படிக்கும் நமக்குத்தான்...

ரிக் வேதத்திற்கான உபநிஷத், அய்தரேய உபநிஷத் என்பதாம். உலகப் படைப்பு பற்றி இந்த உபநிஷத் பேசுகிறதாம். உலகம் படைக்கப்பட்டதா? உருவானதா? மதவாதிகளும், மதநூல்களும் மட்டுமே படைப்பு என்கின்றன. அறிவியலோ, பரிணாமம் என்கிறது. எண்பித்திருக்கிறது. இந்த உபநிஷத் ஒரேயடியாக நான்கு லோகங்கள் படைக்கப்பட்டதாகப் புளுகுகிறது. 1) அம்பலோகம் - சொர்க்கத்திற்கு மேலே உள்ளதாம். 2) மரீசிலோகம் - ஒளி நிறைந்த இடைவெளியாம். மரீசிகா என்றால் கானல் நீர். 3) மர அல்லது மர்த்ய லோகம் - பூமியைக் குறிப்பது 4) ஆபலோகம் - பூமிக்குக் கீழே உள்ளதாம்.

கடவுள் பிரம்மதேவனைப் பற்றி நினைத்ததாம். பிரம்மதேவனின் வாய் முட்டை பிளப்பது போலப் பிளந்ததாம். வாயிலிருந்து பேச்சு வந்ததாம். அதிலிருந்து நெருப்பு வந்ததாம். மூக்கு தோன்றியதாம் மூக்குத் துவாரங்களிலிருந்து மூச்சு வந்ததாம். மூச்சிலிருந்து காற்று தோன்றியதாம். கண்கள் தோன்றின. பார்வையிலிருந்து சூரியன் தோன்றினானாம். காதுகள் தோன்றின. திசைகள் தோன்றின. தோல் உண்டாகியது. தோல் பிளந்து, மயிர்கள் தோன்றின. மயிரிலிருந்து செடி, கொடிகளும் மரங்களும் இதயத்தில் துவாரங்களும் உண்டாயின. இதயத்திலிருந்து மனம் என்ற தனியான பகுதி உருவாகியதாம். (மனம் என்பதற்கும் இதயத்திற்கும் தொடர்பில்லை. மூளையின் செயல்பாடுகளே மனம் என்கிறது அறிவியல்) மனத்திலிருந்து சந்திரன் தோன்றியதாம். தொப்புள் தோன்றியதாம். அதிலிருந்து அபானன், அபானனிலிருந்து மரணம் தோன்றியதாம். குறி தோன்றியதாம். பிளந்த குறியிலிருந்து விந்துவும் விந்துவிலிருந்து தண்ணீரும் உண்டாயிற்றாம். உபநிஷத்தின் உடற்கூறு வினோதமாக உள்ளதே! மருத்துவ அறிவியலுக்கும் விரோதமாக உள்ளதே!

மனித உடம்பு 11 வாசல்களை உடையதாம். கண்கள் 2, காதுகள் 2, நாசித்துளைகள் 2, வாய், தொப்புள், குறி, குதம, பிரம்மரந்திரம் என்பவையாம். இதயத்தின் நாடிகள் 101. அவற்றுள் ஒன்று உச்சந்தலையைப் பிளந்து செல்கிறதாம். அதன் வழியே ஆவியை விடுபவன், மரணமற்ற நிலையை அடைகிறானாம். வேறு வழிகளில் இறப்பவன் மறுபிறவியை அடைகிறானாம். ஆசையற்ற யோகியால் மட்டுமே பிரம்மரந்திரம் வழியே உயிரை வெளியேற்ற முடியுமாம்.

கருவில் இருக்கும் குழந்தைக்கு இறையுணர்வு அதிகமாம். கருப்பையிலிருந்து வெளியே வந்து க்வ, க்வ, க்வ என்று அழுகிறது. சமஸ்கிருதத்தில் க்வ என்றால் எங்கே என்று பொருளாம். பூமிக்கு வந்ததும் குழந்தை கடவுளை எங்கே என்று தேடுகிறதாம். முட்டாள் தனமான உளறல், அல்லவா?

இதுதான் ரிக் வேதம்.

யஜூர் வேதம்

ஒன்றாக இருந்தாதாம். பின் இரண்டாகப் பிரிக்கப்பட்டதாம். க்ருஷ்ண யஜூர், சுக்ல யஜூர் என இரண்டாக உள்ளது. யஜூர் வேதம் 101 கிளைகளை உடையதாம். இப்போது 56 மட்டுமே உள்ளன. மீதி அழிந்து விட்டனவாம். அழிவது எப்படி வேதம் ஆகும்? 56 சாகை (கிளை)கள் அக்னிவேசம் தொடங்கி வைதேயம் முடிய 15 சாகைகள் சுக்ல (வெள்ளை) யஜூரிலும் உள்ளன. க்ருஷ்ண யஜூருக்கு 32 உபநிஷத்களாம். சக்ல யஜூருக்கு 17 மட்டுமே. கிருஷ்ண யஜூர் தென்னாட்டில் பிரபலம் - வட நாட்டில் சுக்ல யஜூர் வேதத்திற்கே மவுசு.

க்ருஷ்ண யஜூர் மந்த்ரங்களுக்கு தைத்திரீய சம்ஹிதை எனவும் பெயராம். ஸம்ஹிதை என்றால் மந்திரங்களின் கூட்டங்களாம். யஜூர் வேதத்தில் அக்னி, இந்திரன், சூரியன், விஷ்ணு, சோமன், மருத்துக்கள், புவி, ஜலம், உஷை, வருணன், சந்திரன், சூத்திரன், ஸரஸ்வதி முதலியவை முதன்மை தேவர்களாம்.

யாகம் போலவே மானுட வாழ்க்கையாம். முதல் வருஷம் காலை யாகமாம். அடுத்த 44 யாகங்கள் பகல் யாகங்களாம். மீதி 48 வருஷங்கள் மாலை யாகங்களாம். 93 வருஷங்கள் மட்டுமே மனித ஆயுள் எனப் பொருளா? விளக்கம் இல்லை வேதத்தில் சோமயாகம் என்றால் சோம அமுதத்தை நாடுவதாம். சோமபானம் தயாரித்துக் குடித்தலா? செல்வத்தை நாடிச் செய்யப்படுவது வாஜபேயம் என்பதாம். இதைச் செய்பவன் வாஜபேயி எனப்படுவான். 

ஆட்சி அதிகாரம் பெற்றிடச் செய்வது ராஜசூயம். படைப்பின் அற்புதங்களை அறிய விரும்பிச் செய்யப்படுவது புருஷமேதம். அனைத்தையும் அறிய விரும்புவது சர்வமேதம். தோற்றவன் மீண்டும் வெற்றி பெற்றிடச் செய்வது சவுத்திரமணி.

பலவாறாக ஆவதற்குச் செய்பவை பிரவர்க்கியம் எனப்படுமாம். அஸ்வமேதம் என்பது அகண்ட ஞானத்தைச் சுட்டும். வேத வாழ்க்கையின் ரகஸ்யத்தைச் சொல்லும். காயத்ரி மந்த்ரம் என்பது ஒளிக்கடவுளாம். இதனால் சாதிக்க முடியாதது என்று எதுவுமே இல்லையாம். இதனை அய்ந்து பகுதிகளாக, இடையில் நான்கு முறை நிறுத்தி ஜெபிக்க வேண்டுமாம்.

ஓம் பூர் புவஸ்ஸூவ

தத் ஸவிதுர் வரேணியம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோ ந பிரசோதயாத்

என்று ஜெபிக்க வேண்டுமாம். சூரிய உதயத்திற்கு முன்பும், உச்சி சூரியன் உள்ள நடுப்பகலிலும், சூரியன் மறையும் மாலையிலும் ஜெபிப்பது நல்லது. தினமும் 108 முறையாவது ஜெபிக்க வேண்டுமாம்.

புருஷன் என்றால் கடவுள். புருஷசூக்தம் என்றால், கடவுளின் மகிமையைப் பாடுதலாம். கோயில், வீட்டில், தினசரி வழிபாட்டில், தினசரி பாராயணத்தில், வைதீகச் சடங்குகளில், தினசரி கர்மங்களில் எல்லாம் புருஷ சூக்தம் சொல்லப்படுகிறது. பொருள் இதுதான். கடவுளுக்கு ஆயிரக்கணக்கான தலைகள். ஆயிரக்கணக்கான கண்கள். ஆயிரக்கணக்கான பாதங்கள். அது பூமியெங்கும் வியாபித்துப் பத்து அங்குல அளவில் நிற்கிறதாம். அதன் முக்கால் பங்கு மேலே விளங்குகிறதாம். கால் பங்கு மட்டுமே இப்பிரபஞ்சமாம். யாகத்தில் பலியிடப்பட்ட பிரம்மாவின் முகம் பார்ப்பனனாக ஆயிற்றாம். கைகள் சத்திரியனாகவும் தொடைகள் வைசியர்களாகவும் ஆயினவாம். பாதங்களிலிருந்து மற்றவர்கள் தோன்றினராம். ரிக்வேத புருஷ சூக்தம் போலவே மஜூர் வேத சூக்தமும் உள்ளது.

வேதங்களிலும் புராணங்களிலும் காணப்படும் மகாலட்சுமியின் துதிகளின் தொகுப்பையே சிறீஸக்தம் என்கிறார்கள். வடநாட்டில் இதற்கு மரியாதை கிடையாது. தெற்கே மட்டும் தானாம். ஏன் இந்தப் பாகுபாடு? விளக்கம் இல்லை.

தொடரும்.... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக