செவ்வாய், 25 மே, 2021

வேதங்கள் - பேதங்கள்- (5)


 சு.அறிவுக்கரசு

ஹிந்து மத வேதங்களில் மட்டுமே ஆத்மா, மறுபிறவி ஆகியவை உண்டு. உலக மக்கள் தொகையில் ஹிந்து மதத்தினர் 90 கோடிப்பேர். உலகத்தின் மொத்த மக்கள் தொகை 750 கோடி. ஆத்மா, மறுபிறவி நம்பிக்கை உள்ளோர் மிகச் சிறுபான்மையர். 200 கோடிக்கு மேல் கிறித்துவர்கள், பவுத்தர்கள், இஸ்லாமியர் போன்ற பல்வேறு மதத்தவர்களுக்கு இந்த நம்பிக்கை கிடையாது. இல்லாத ஒன்றைப் பொய்யாகச் சொல்லி, அதன் மேல் கட்டப்பட்ட சீட்டுக்கட்டடம் போன்றதே ஹிந்து மதம். நம் கண்களால் காணும் ஸ்தூலமான உலகத்தை மாயை என்பது ஹிந்துமதம். வேறு எந்த மக்களுக்கும் இப்படிப்பட்ட மாயாவாதக் கொள்கை கிடையாது. இல்லாத ஒன்றை (ஆத்மாவை) அறிந்தவன் தான் இறைவனை அடைகிறானாம். ஆகாயத்தில் அஸ்திவாரமே இல்லாமல் கட்டப்பட்ட “கோட்டை” என்றே கூறவேண்டும் ஹிந்து மதத்தை!

18 நிமிஷங்கள் ஒரு காஷ்டை

18 காஷ்டைகள் ஒரு கலை

30 கலைகள் ஒரு க்ஷணம்

12 க்ஷணம் ஒரு முஹூர்த்தம்

30 முஹூர்த்தம் இரவு பகல் கொண்ட ஒரு நாள்

15 நாள் ஒரு பக்ஷம்

2 பக்ஷம் ஒரு மாதம்

2 மாதம ஒரு ருது

6 ருது ஒரு வருஷம்

ஹிந்து மத காலக்கணக்கு இதுவாம்! யார் கடைப்பிடிக்கிறார்கள்?

அது போலவே சிந்துநதியின் உபநதிகளான அய்ந்துக்கும் உபநிஷத்களில் வேறு பெயர்கள்.

சுதுத்ரி - ஸட்லெஜ்

பருஷ்ணி - ராயி

அஸிக்னி - சீறம்

விதஸ்தா - ஜீலம்

ஸீஷோமா - ஸோஹன்

ஆரியர்கள் கங்கை நதியை அறியாதவர்கள். சிந்து நதிக்கரையில் மாடு மேய்த்தவர்கள். சிந்து நதி பாரசீக மொழியில் ஹிந்து என்றே எழுதப்படும். காரணம், அம்மொழியில் ஸ எனும் எழுத்து இல்லை. மாற்றாக, ஹ என்று உச்சரித்தனர். நதியின் கரையில் இருந்தவர்களை அந்தப் பெயரால் அழைத்ததால் மக்களின் பெயராகவும் மண்ணின் (நாடு) பெயராகவும் அமைந்தது. வெள்ளைக்காரர்கள் மதத்திற்கும் அதே பெயரை வைத்துவிட்டனர். எனவே எல்லாமே இரவல். சமஸ்கிருதத்தில் பெயரே இல்லை. பாரசீகப் பெயர்தான். மிகப் பழமையானது என்னும் மதத்திற்கு அவர்களின் மொழியில் பெயரில் வை. விசித்திரம் தான். மக்களும் மதமும் மொழியும்.

வைசம்பாயனர் ஒரு ரிஷி, யாக்ஞவல்கியர் அவரிடம் சீடன். சீடன் செயலால் கோவப்பட்ட குரு, தான் கற்றுக் கொடுத்ததைக் கக்கிவிடும்படி சீடனிடம் கூறினார். முடியுமா? சாப்பிட்ட சோற்றை கக்கிவிடலாம். கல்வியை முடியாதே. என்றாலும் யாக்ஞவல்கியன் கக்கிவிட்டான். அவன் கக்கியதை மற்ற சீடர்கள் சிட்டுக்குருவி போல தின்று விட்டனர். ஆகவே இதன் பெயர் தைத்ரிய சாகை. க்ருஷ்ண யஜூர் வேதம் என்றும் சொல்கிறார்கள். முதல் அத்யாயம் கல்வி (சிக்ஷா)யின் பெருமை பேசும். குருகுலப் படிப்பின்போது, உப வேதங்களும் வேதாங்கங்களும் கற்பிக்கப்படுகின்றன. உபவேதங்கள் நான்கு. 1) ஆயுர் வேதம், 2) தனுர் வேதம், 3) கந்தர்வ வேதம், 4) அர்த்த சாஸ்திரம் என்பவை. மருத்துவம், வில்வித்தை, நுண்கலைகள் (இசை), ஆட்சிக்கலை போன்றவை. வேதாங்கங்கள் ஆறு. 1) சிக்ஷை (உபசரிப்பு), 2) வியாகரணம் (இலக்கணம்), 3) சந்தஸ் (செய்யுள் அமைப்பு), 4) நிருக்தம் (அகராதி அறிதல்), 5) ஜோதிஷம், 6) கல்பம் (சடங்குகள்) என்பவை.

தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் ஒன்றை அர்ப்பணம் செய்யும்போது, ஸ்வாஹா எனச் சொல்ல வேண்டுமாம். இதன் மூலம் நாம் அடைவதைத் திருப்பித் தரவேண்டும் என்பது போதனையாம்.

“லோகா ஸமஸ்தா சகிநோ பவந்து” என்பது வேதமந்த்ரமாம். உலகில் உள்ள அத்தனை பேரும் சுகமாக இருக்கட்டும் என்பது பொருளாம்.

உலகில் நான்கு பெரிய மொழிகளாம். அவை காயத்ரியில் கனிந்த மொழிகளாம். பூ, புவ, சுவ, மக எனும் நான்காம். பூ என்றால் இவ்வுலகமாம். புவ என்றால் அவ்வுலகம். சுவ என்றாலும் அவ்வுலகம் மகத் என்றால், சூரியன், சந்திரன், பிரமன், உணவாகும். பூ, புவ, சுவ மூன்றும் ஜோதியாகி, ஒளியாகி, வேதமாகிய பிரம்மமாம். மொழிகள் என்றால் என்ன? மனிதன் தன் கருத்தைப் பிறர்க்குச் சொல்லப் பயன்படுத்தும் கருவி. பேச்சு ஒலியின் மூலமோ, எழுதிய எழுத்தன் வரிவடிவம் மூலமோ தன் கருத்தை வெளிப்படுத்தப் பயன்படும் சாதனம். அதற்கு இந்த வேதம் தரும் சொற்களும் விளக்கமும் குழப்பத்தைத் தருகின்றன அல்லவா?

கடோபநிஷத் என்பது இரண்டு அத்யாயங்களாக உள்ளது. மூன்று கொடிகளாக ஒவ்வொரு அத்யாயமும் உள்ளது. மொத்தம் ஆறு வல்லிகள் (கொடிகள்) நசிகேதன் என்பவன் யமனிடம் கேட்டவைகளும் மரணத்தை வெல்லும் வழிகளும் அடங்கியவையாம்.

வாஜசிரவஸ் எனும் மன்னன் உலகத்தையே ஆளவேண்டும் என்கிற ஆசையால், விஸ்வஜித் என்ற யாகத்தைச் செய்தான். வாழ்க்கையைக் கொடுத்து வாழ்க்கையைப் பெறுவது யாகத்தின் நோக்கம். அன்று மாடுகள் தான் செல்வம். வாஜசிரவஸ்தானம் கொடுத்த மாடுகள் எல்லாம், அடி மாடுகள். பால் வற்றிப்போன கிழட்டுப் பசுக்கள். தானத்தின் நோக்கமே அடிபட்டுப் போனது. இதைக் கவனித்த வாஜசிரவஸின் மகன் நசிகேதன், தந்தையிடம் “என்னை யாருக்குத் தானம் தரப் போகிறீர்கள்?” எனக்கேட்டான். பதில் இல்லை. மறுபடியும் கேட்டான். இம்முறையும் பதில் இல்லை. மூன்றாம் முறையாகவும் மகன் கேட்டான்.

“உன்னை யமனுக்குத் தானமாகத் தரப்போகிறேன்” என்று தந்தை பதில் சொன்னார். நசிகேதனும் யமனிடம் போனான். யமன் தனது மாளிகையில் இல்லை. மூன்று நாள்கள் காத்திருந்தான். மூன்று நாள்களுக்கும் அவனுக்கு யாரும் உணவு தரவில்லை. பட்டினியாகவே கிடந்தான். அதனால் அவனைப் பார்த்து யமன், மூன்று நாள் பட்டினிக்காக மூன்று வரம் கேள் என்று சொன்னான். நசிகேதன் வரம் கேட்டானாம். திரும்பிச் சென்றால் தன் தந்தை அவனிடம் கோவமடையாமல் பாசமாக இருக்க வேண்டும் என்று கேட்டானாம். யமனும் முதல் வரத்தைக் கொடுத்தானாம்.

சொர்க்கத்திற்குப் போனால் சுகமாக இருக்கலாமாம், சொர்க்கம் போவது எப்படி என்று இரண்டாவது வரத்தைக் கேட்டான். சொர்க்கத்திற்கு போகும் வழி, இதயக் குகையில் இருக்கிறது என்றானாம் யமன். “நிஹிதம் குஹாயம்“ என்பது அவன் சொன்னதாம். அத்தகைய யாகத்தை எப்படிச் செய்வது எனும் விளக்கத்தை யமன் நசிகேதனுக்குச் சொன்னானாம். இஷ்டகா கற்கள் 360 வைத்து யாக குண்டம் அமைக்கப்பட வேண்டுமாம். யாகத்தில் விஷ்ணுவே “ப்ரதீகமாக”ப் போற்றப்பட வேண்டுமாம். யமன் சொன்னதைக் கவனமுடன் கேட்டு உள்வாங்கிக் கொண்ட நசிகேதனைப் பாராட்டிய யமன், இரத்தின மாலையைப் பரிசாக அளிக்கிறான். அத்துடன் அந்த யாகத்திற்கு அவன் பெயரைச் சூட்டி, நசிதேகயாகம் என்கிறான். ஒரு முறை சொன்னாலே கவனமுடன் கிரஹித்துக் கொண்ட “ஏகசந்த கிராஹி”யான நசிகேதன் பெற்ற சிறப்புகள் இவை. நசிகேத யாகத்தை மூன்று தடவைச் செய்தவன், பிறப்பு, இறப்பு எல்லாம் கடந்து அளவு கடந்த சாந்தியை அடைகிறான்.

 தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக