மனுதர்ம சாஸ்திரமும் யாகமும்
மனுதர்ம சாஸ்திரம் என்கிற நூல் பார்ப்பனர் உயர்வுக்காகவும் மற்றவர் அதாவது திராவிடர் தாழ்வுக்காகவும் ஒரு சில பார்ப்பனர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டதாகும். பொதுவாக எந்தவொரு நூலும் மக்களுக்கு நல்லொழுக்கம் போதிப்பதற்காக எழுதப்பட்டதைக் காணலாம். உதாரணமாக திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்களாகும். குறிப்பாக திருக்குறளில் உள்ள கருத்துகள் எல்லா நாட்டினர், எல்லா மதத்தினருக்கும் எல்லாக் காலத்திற்கும் பொருந்துவதாகும்.
ஆனால், மனுதர்ம சாஸ்திரம் பார்ப்பனர் உயர்வுக்காக மட்டும் எழுதப்பட்டது என்பதை அதன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உள்ள ஒவ்வொரு சுலோகத்தின் மூலமும் அறியலாம். பொதுவாக எல்லா நாட்டினரும் எல்லா மதத்தினரும் நல்லொழுக்கம், பொய் சொல்லாமை, களவு/திருட்டு செய்யாமை/ போன்ற சமூக தீய செயல் செய்யாமையை வற்புறுத்துவர். (ஆனால் நடைமுறை வேறு).
திருட்டு என்பது பிறர் பொருளை உடையவருக்குத் தெரியாமல் எடுப்பதாகும். ஆனால், கொள்ளை என்பது பிறர் பொருளை உடையவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ பலாத்காரமாக கவருவதாகும். மனுதர்ம சாஸ்திரத்தில் பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக பிற வர்ணத்தாரிடம் திருட்டு, கொள்ளை போன்றவை செய்யலாம் என்று பார்ப்பனர்களுக்கு மட்டும் உரிமை (Licence) வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் சில:
மனுதர்ம சாஸ்திரம்: 11 ஆவது அத்தியாயம் சுலோகம் 12 அதிக பசு முதலியவற்றால் செல்வமுடையவனாயும் யாகம் செய்யாதவனாயும் சோமபானம் பண்ணாதவனாயும் இருக்கிற வைசியன் வீட்டிலிருந்து கேட்டுக் கொடாவிடில் வலிமை செய்தாவது, களவு செய்தாவது அந்த யாகத்திற்கு வேண்டிய திரவியத்தை யாகம் செய்வோன் கொண்டு வரலாம். (இதில் யாகம் செய்யாதவன் என்றால் சுயமரியாதைக்காரன். சோமபானம் பண்ணாதவன் என்றால் மது அருந்தாதவன். அதாவது எவ்விதத் தீயொழுக்கம் இல்லாத வைசியன் வீட்டில் பார்ப்பனன் கொள்ளை அடிக்கலாம் என்பதாகும்.)
சுலோகம் 13: அவ்வித வைசியனில்லாவிடில் யாகத்திற்கு இரண்டு மூன்று அல்லது அதிக அங்கங்குறைந்தாலும் செல்வமுள்ள சூத்திரன் வீட்டிலிருந்து யதேஷ்டமாக யோசனையின்றி கேளாமலும் வலிமையினால் கொண்டு வரலாம். ஏனென்றால், அவனுக்கு ஒரு யாகத்திலும் சம்பந்தமில்லை அல்லவா. (அதாவது யாகத்திற்கும் சூத்திரனுக்கும் /திராவிடனுக்கும் சம்பந்தமில்லை என்று ஒப்புக் கொண்டபோதும் பார்ப்பனன் யாகம் செய்வதற்காக உடல் ஊனமுற்றவனாக சூத்திரன் இருந்தாலும் அவனைக் கேட்காமல் அவன் வீட்டில் கொள்ளை அடிக்கலாம்.)
சுலோகம் 15: மேற்சொல்லிய யாகத்திற்காக வேண்டிய பொருளைக் கேட்டும் கொடாவிடில் வலிமை செய்தாவது களவு செய்தாவது அவன் வீட்டிலிருந்து கொண்டு வரலாம். இப்படிச் செய்தால் தருமம் வளரும்.
சுலோகம் 16: தான தருமம் செய்யாதவனிடத்தினின்றும் ஒரு தினத்திற்கு போதுமான பொருளைக் களவு செய்தாவது கொண்டு வரலாம்.
சுலோகம் 17: யாகம் செய்யாதவன் தானியம், களம், கழனி, வீடு இவற்றுள் எவ்விடத்தில் அகப்படுகிறதோ, அவ்விடத்தினின்றும் எடுத்துக் கொள்ளலாம். உடையவன் ஏன் திருடினாய் என்று கேட்டால் தான் செய்யும் யாகாதி தருமகாரியத்தை அவனுக்குச் சொல்ல வேண்டும்.
சுலோகம் 18: சத்திரியனுக்கு இவ்வித ஆபத்து நேரிட்டாலும் அவன் ஒருபோதும் பிராமணன் பொருளை அபகரிக்கக்கூடாது. (ஆக சத்திரியன் யாகம் செய்ய பிராமணன் தவிர்த்து மற்ற வர்ணத்தாரிடம் கொள்ளையடிக்கலாம்).
சுலோகம் 19: தான் யாகம் செய்யாமலிருந்தாலும் அவன் யாக முதலிய தருமஞ் செய்யாத அசத்தனிடத்திலிருந்த பொருளை வாங்கியாவது அபகரித்தாவது யாகம் செய்கிற சத்புருஷாளுக்கு பொருள்காரனையும் யாகம் செய்கிறவனையும் கரையேற்றி வைக்கிறான். (அதாவது பார்ப்பன புரோகிதன் பயன் அடைகிறான்.)
யாகம் என்பது பார்ப்பனரின் சுயநலத்திற்காகவும் உயர்வுக்காகவும் மட்டும் நடத்தப்படுகிறது என்பது தெரிந்தோ தெரியாமலோ அடுத்த இரண்டு சுலோகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
சுலோகம் 21: தரும சிந்தையுள்ள அரசன் இவ்விதமாக திருடி வந்து யாக காரியஞ் செய்கிற பிராமணனைத் தண்டிக்கக்கூடாது. அரசன் மூடத்தன்மையால் பிராமணன் பசியினால் துன்பத்தை அடைகிறான்.
சுலோகம் 22: ஆதலால் அரசன் அந்தப் பிராமணன் குடும்பத்தையும் தரும நடையையும் அவன் ஓதின வேதத்தையும் ஒழுக்கத்தையும் பார்த்து தன் அரண்மனையிலிருந்து அவனுக்குப் போதுமான ஜீவனவிருத்தியை ஏற்படுத்த வேண்டும்.
இதிலிருந்து அறியப்படுவது 1) யாகம் என்பது புரட்டு. அது மக்களின் நன்மைக்காகச் செய்யப்படுவதல்ல.
2) யாகம் என்பது பார்ப்பனரின் சுயநலத்திற்காகச் செய்யப்படுவதாகும்.
3) யாகத்தின் பேரால் பார்ப்பனர் பிறவர்ணத்தார் பொருள்களையும் சொத்துகளையும் திருடவோ கொள்ளையடிக்கவோ செய்யலாம்.
4) அரசன் (தற்பொழுது ஆட்சியாளர்) பார்ப்பனர் யாகத்தின் பேரால் செய்யும் திருட்டு, கொள்ளை போன்றவற்றைக் கண்டு கொள்ளக்கூடாது பார்ப்பானைத் தண்டிக்கக்கூடாது.
5) அரசன் (ஆட்சியாளர்) மூடத்தனத்தினால் பார்ப்பனர் பசியினால் துன்பத்தையடைகிறான். எனவே, பார்ப்பனன் பசியைப் போக்க அவன் யாகம் செய்கிறான்.
சமீப காலங்களில் அவ்வப்பொழுது பார்ப்பனர் மழை வேண்டியும், உலக ஷேமத்திற்காகவும் அதாவது உலக நன்மைக்காகவும் யாகம் செய்வதாகவும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அதன் உண்மை நம்மவர்களுக்கு இப்பொழுது புரியும் என்று நம்புகிறேன்.
- ஆர்.டி. மூர்த்தி, புத்தூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக