மின்சாரம்-
திருவாளர் சோ.ராமசாமியின் மறைவுக் குப் பிறகு - ‘துக்ளக்கை’ அபகரித்துக் கொண் டுள்ள - கோயங்கா வீட்டு கணக்குப்பிள்ளை என்று அறிமுகமான சங்பரிவார் வட்டாரத் தின் ஒரு கூர்முனையான சுவதேசி ஜாகரான் மஞ்ச் என்ற அமைப்பின் முக்கிய பொறுப்பாளரான குருமூர்த்தி அய்யர்வாள் தனது கோணல் பூணூல் புத்தியை மையாக்கி எழுதிக் கொண்டு வருகிறார்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை பிரச்சினையை மய்யப்படுத்தி இந்த சீரழிவுகளுக்கு காரணம் பெரியார் தானாம். தமிழ்நாட்டில் பெரியாரும் அவரது சீடர்களும் - கண்ணீர் துளிகள் என்று பரிகசித்து பெரியார், யாரை ஒதுக்கினாரோ, அவர்கள் உட்பட கலாச்சார சீரழிவை, சமுதாய சீர்திருத்த அரசியல் இயக்கமாக மாற்றினார்கள். அது சாருவாக முனி துவங்கிய விவாதமாக மட்டுமல்லாமல் மக்களின் ஒழுக்கத்தை குலைக்கும் ஒரு கருவியாகவும் மாறி, தமிழக அரசியல், ஆன்மீகம், கல்வி, சமூக நல்லிணக்கம் ஆகிய எல்லாவற்றையுமே பாதிக்கிறது என்று குருமூர்த்தி என்னும் நவீன மனு சிலாகித்துள்ளார்(துக்ளக் 2-5-2018).
தந்தை பெரியார் மீது கை வைத்து நிர்வாண ஆட்டம் போட்டதன் பலாபலன் களை பார்ப்பனர்கள் கூட்டு வட்டியும் முதலு மாக சேர்த்து அனுபவித்து வருகிறார்கள்.
அரசியல், ஆன்மீகம், ஜாதி, மதம், நாத்திகம், ஆத்திகம் ஆண், பெண் என்ற வேறுபாடுகளையெல்லாம் வேரோடு ‘தூக்கி எறிந்து’ தமிழ்நாடே சுனாமியாக எழுந்து நின்று, ‘எங்கள் தந்தையின் மீதா, எங்கள் ஒப்பற்ற இனப் பாதுகாவலர் மீதா, ஒப்பாரும், மிக்காரும் இல்லாத உயர் எண்ணங்கள் மலரும் சோலையின் மீதா, மண்டைச் சுரப்பை உலகு தொழும் தலைவர் மீதா, பெண்ணடிமையை பெயர்த்தெறிந்த பெம்மானாம் எங்கள் தலைவர் மீதா, கை வைத்தீர்- கைபர் கணவாய் கூட்டமே!’ என்று அனல் கக்கி ஆயிரங்கால் சிங்கமாக சிலிர்த்தெழுந்து அண்டங் குலுங்க குரல் கொடுத்தனரே!
பட்டை போட்டவரும், நாமம் தீட்டியவர் களும் கூட வீதிக்கு வந்து வெண்தாடி வேந்தர் பக்கம் நின்று வீறு கொண்டு குரல் கொடுத்தனரே! புலிவாலை மிதித்து விட்டோமே - அதன் விளைவாக புரட்டி எடுக்கப்படுகிறோமே என்று புலம்பும் நிலைக்கு ஆளான ஆரிய பார்ப்பனக்கூட்டம் - தங்களின் அடக்க முடியாத ஆத்திரத்தை இப்போது வேறு வகையில் வெட்கம் கெட்ட தன்மையில் காட்ட ஆரம்பித்து விட்டது.
தந்தை பெரியார் மீது சேற்றை வாரி இறைக்கத் தொடங்கி விட்டனர். வாங்கிக் கட்டியது போதாது போலிருக்கிறது - இந்த புத்திக் கெட்ட புரோகிதக் கும்பலுக்கு இல்லாததும் பொல்லாததுமான பொய்யுரைக் குப்பைகளை கொச்சைத்தனமாக வாரி இறைக்க தொடங்கி விட்டனர்.
யாரைப் பார்த்து கை நீட்டுகிறது இந்த குடுமி?
பக்தி தனி சொத்து - ஒழுக்கம் பொதுச் சொத்து என்று சொன்னவர் மட்டுமல்ல வாழ்ந்தும் காட்டியவர் தந்தை பெரியார். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் (24.11.1964) பேராசிரியர், மாணவர்கள் மத்தியில் இந்த உன்னதக் கருத்தை உதிர்த்தவர் தந்தை பெரியார்.
இயக்கத் தோழர்களுக்கு அவர் எடுத்து ரைத்தது என்ன தெரியுமா?
“நாம் எதிர்பார்த்த லட்சியத்தில் எதிலும் தோற்று விடவும் இல்லை. பெரிதும் வெற்றி பெற்றுக் கொண்டு மற்றவர்களும் ஏற்கும்படிதான் வளர்ந்து வருகின்றோம்.
இந்த நிலைமை மாறாமல் இருக்க வேண்டும், இப்படியே இருந்து வரும் நிலையிலேயே நான் சாக வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
நமது தோழர்களும் நாணயமாகவும், கட்டுப்பாடாகவுமே இருக்கிறார்கள்.
நமது கொள்கையில் ஓட்டை விழுந்தால் கூட பரவாயில்லை. ஆனால் நாணயத்தில், ஒழுக்கத்தில் தவறு இருக்கக்கூடாது அதுதான் ஒரு கழகத்திற்கு முக்கியமான பலம்.
பணம், காசு பற்றி அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. நான் கழகத்திற்கு வரும் போது கழகத்தில் பணம் இல்லை. சொந்த காசுதான் செலவு செய்தேன்.” (விடுதலை, 11.10.1964, பக்கம் -3)
மன்னார்குடியில் கழகத் தோழர்கள் கலந்துரையாடலில் தந்தை பெரியார் இவ்வாறு கூறினார். ஒழுக்கத்திலும், நாண யத்திலும் உயர் மதிப்பும், உயிருக்கும் மேலான பற்றும் வைத்த ஒரு தலைவரைப் பற்றி ஊத்தை வார்த்தைகளை கொட்டலாமா?
ஒழுக்கத்திற்கு உயரமான இடத்தை கொடுக்கிறார் நாத்திக தலைவர் பெரியார் என்றால் பார்ப்பனர்களின் ஜகத்குருவான சூப்பர் சீனியர் சங்கராச்சாரியாரான சந்திர சேகரேந்திர சரஸ்வதி என்ன கூறுகிறார்?
“நல்ல ஒழுக்கம் இருந்தால் போது மென்றும், கடவுள் அவசியம் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். இது தவறான கருத்து. கடவுள் அருள் இல்லையானால், தனி நபருக்கோ நாட்டுக்கோ விமோசனம் ஏற்பட முடியாது”. (கல்கி, 8.4.1958) இதுதான் ஜகத் குருவின் அருள்வாக்கு.
உண்மைகள் இவ்வாறு இருக்க, குருமூர்த்திகள் குடுமி தனத்தோடு ஒரு மாபெரும் தலைவரை விமர்சிக்கலாமா?
குருமூர்த்திகளும் அவர்களின் லோக குருவான சங்கராச்சாரிகளும் உச்சத்தில் வைத்துக் கூத்தாடும் பக்தியின் யோக்கியதை தான் என்ன? பதினெட்டுப் புராணங்களை எடுத்து அலசலாமா? இதிகாசங்களைக் கொண்டு வந்து நிறுத்தலாமா? சுருதிகளையும், ஸ்மிருதி களையும் தோலுரித்துக் காட்டலமா?
அவற்றையெல்லாம் அம்பலத்துக்கு கொண்டு வந்தால் புழுத்த நாய்கூட குறுக்கே போகாதே - ஏடுகளும் தாங்காதே - எடுத் துரைக்க நேரமும், காலமும் கூட போதவே போதாதே!
திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்த படலம் ஒன்று போதாதா?
அன்னையைப் புணர்ந்து தாதை
குரவனாம் அந்த ணாளன்
தன்னையும் கொன்ற பாவம்
தணித்து வீடளித்தத் தென்றால்
பின்னை நீ விழிநோய் குட்டம்
பெருவயிறீளை வெப்பென்று
இன்னநோய் தீர்க்கும் தீர்த்தம்
என்பதோ இதற்கு மேன்மை
- இதுதான் பரஞ்சோதி முனிவரால் எழுதப்பெற்ற திருவிளையாடல் புராணப் பாடல்.
‘தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந் தவனை இந்தக் கோயில் குளம் - தீர்த்தம் மோட்சம் அளித்தது என்றால் குஷ்டம், பெருவயிறு போன்ற கொடிய நோய்களை தீர்த்தது என்பதா இந்தத் தீர்த்தத்தின் மகிமை?’
இதுபோன்ற புராணங்களைப் பூணூலாக தரித்துக் கொண்டிருக்கும் கூட்டமா பெரியாரால் ஒழுக்க நிலை உருக்குலைந்தது? - கலாச்சாரம் சீரழிந்து விட்டது என்று சிலாகிப்பது?
இதோ ‘வேதாரண்யம் தல வரலாறு’. இதனை வெளியிட்டது, ஸ்ரீவேதாரண் யேஸ்வரசுவாமி தேவஸ்தானம். இதன் 45, 46 ஆம் பக்கத்தைக் கொஞ்சம் பார்க்கலாம்.
“வேதாரண்யத்திற்கு அண்மையிலுள்ள - ராமச்சந்திர புரத்திலே ஒரு பிராமணன் வாழ்ந்துவந்தான். தன் மகன் பிறந்த ஜாதகத்தைப் பார்த்தான். மகன் பதினாறாவது வயதில் தாயைப் புணர்தல், பசுக்கொலை, கள் குடித்தல் முதலிய பாவங்களைச் செய்வான் என்றிருந்தது. இதே கவலையாக இருந்து பிராமணன் இறந்தான். மகன் கண்ணில் தந்தை எழுதி வைத்திருந்த சாதகக் குறிப்பு அகப்பட்டது. அதனைப் படித்துப் பார்த்த மகன் அஞ்சியழுது, தேறி, இவ்வளவு பாவங்களையும் நான் இங்கிருந்தாலல்லவா செய்யக் கூடும்; எங்காவது தேசாந்தரம் போய் விடுவோம் எனப் புறப்பட்டுக் கங்கை வரை சென்று பல ஆண்டுகளைக் கழித்தான். தனக்கு பதினாறு வயது கழிந்திருக்கும் என்று எண்ணிக்கொண்டு ஊருக்குத் திரும்பினான். இரவு நேரம் வழக்கம்போல ஊரில் பிச்சை எடுத்து அதனை உண்பதற்காக ஒரு வீட்டுத் திண்ணையை அடைந்தான். அங்கே ஓரிளம் விதவை வேலைக்காரியாக இருந்தாள். இவனைக் கண்டதும் இவன் இளமையிலும் அழகிலும் மயங்கி அவன் விருப்பப்படி இடமும், பிறவும் அளித்து உபசரித்தாள். எப்படியாவது இவனைக் கூடவேண்டும் என்று துடித்தாள். அவன் குடிப்பதற்காக நீர் கேட்டான். அவளோ, இவன் தன் வலையில் சிக்கமாட்டான் என்பதையறிந்து மதுவையே நீரென்று கொடுத்தாள்.
அவனும் மதுவை இதுவரையறியாத வனாகையாலே உண்டான். மதி மயங்கினான். பக்கத்திலிருந்த பசுவையும் கொன்றான்; காமம் தலைக்கேறி, அவ்விதவையைப் புணர்ந்தான். பொழுதும் விடிந்தது. மது மயக்கமும் தெளிந்தது. தான் செய்த தவறுகளை நினைத்து வருந்தி, அவ் விதவையைப் பார்த்து -நீ யார் உன் வரலாறு என்ன? என்று கேட்டான். அவள் நடந்ததைச் சொன்னாள். (அவள் வேறுயாரும் அல்ல. அவனது தாய்தான்) அவன் விதிவலி கொடிது வெல்லுதற்கரியது என வருந்தினான். இப்பழி தொலையும் வழியாது என அலைந்தான். ஒன்றும் புலப்படவில்லை, வாளினால் கழுத்தை யரிந்து கொண்டாவது இறப்போம் எனத் துணிந்து வாளால் கழுத்தையறுத்துக் கொண்டான். அப்போது வேதாரண்யேசர் அவன் திருமுன் சென்று அவன் கையைப் பிடித்துத் தடுத்து, ஏ அந்தணா! இதற்குத் தான் தற் கொலையும் செய்து கொண்டு அப்பாவத் தையும் சுமக்க எண்ணுகிறாயா? திருமறைக் காட்டில் மணிகர்ணிகையில் மூழ்கி வேதவ னேசரை வழிபட்டால் எல்லாப் பாவங்களும் நீங்கும், அப்படியே செய்’ என்றருளினார்.
“பிரம்மச்சாரியும் அப்படியே மூழ்கி உய்ந்தான்; அவன் தாய் வழிபாட்டுச் சத்தி பதம் பெற்றாள்.’’
சிவபதம் யாருக்குக்கெல்லாம் கிட்டியிருக்கிறது பார்த்தீர்களா? தாயைக் கெடுத்த தனயனுக்கும் கிடைத்தது, சோரம் போன தாய்க்கும் கிடைத்திருக்கிறது - இதுதான் குருமூர்த்திகளின் அர்த்தமுள்ள இந்து மதத்தின் கிரீடை. நாட்டில் ஒழுக்கக் கேடும் சீர்கேடும் பெருகி வழிவதற்கு காரணம் இந்த பக்தியும் மார்க்கமும் குருதியில் தோய்ந்தது தானே முதன்மையான காரணம். இதை மறைத்து உயர் ஒழுக்கம் ஓம்பிய ஒப்பிலாத் தலைவர் மீது மடைமாற்றம் செய்திருக்கிறது. இந்த மட்டரகமான மறையர் கூட்டம்.
பார்வதி அம்மையாரின் முலைப்பாலாம் ஞானப்பால் உண்டவன் என்று உரைப்பாயிரம் செய்கிறார்களே - அந்தத் திருஞான சம்பந்தன் மதுரையில் குடி கொண்டதாக கூறப்படும் சிவனிடம் போடும் மனு என்ன தெரியுமா?
மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத் திரு ஆலவா யருள்
பெண்ணகத் தெழில் பேயமண் சாக்கிய
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே
- இதுதானே தெய்வத்தின் முலைப்பால் குடித்த பிஞ்சிலே பழுத்த சிறுவன் திருஞானசம்பந்தன் பாடிய பாட்டு.
திருவாலவாய் என்னும் மதுரையம் பதியில் வீற்றிருக்கும் சிவனே! பவுத்த சமணர் களின் வீட்டு அழகிய பெண்களை கற்பழிக்க அருள் புரிவாயாக என்று பாடினானே!
இந்தக் கேடுகெட்ட மரபுதானே பெண் களை கண்டாலே வேறு மாதிரி சிந்திக்கும் சீழ்ச் சிந்தனையை ஊட்டுகிறது!
(இதில் இருக்கும் பித்தலாட்டம் என்ன? இப்பாடல் பெரிய புராணம் இரண்டாம் காண்டம் வம்பறா வரி வண்டு சருக்கம் - திருஞானசம்பந்த சுவாமிகள் வரலாறு” எனும் திருவண்ணாமலை ஆதீனம் திரு ஆறுமுகதம்பிரான் 1885இல் வெளியிட்ட நூலில் பெண்ணர் என்று இருக்க, திருப்பனந்தாள் மடம் பிறகு 1956இல் வெளியிட்ட திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரத் தில் தெண்ணர் என்று அவமானம் கருதித் திருத்தி வெளியிட்டனரே!)
இந்த யோக்கிய சிகாமணிகள் தான் பெரியாரின் திராவிட இயக்கம் ஏற்படுத்திய கலாச்சார சீர்கேட்டினால் தான் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக என்று நரியாக நர்த்தனம் ஆடுகின்றனர்.
பார்ப்பனர்கள் கூறும் பக்தி மார்க்கத்தின் யோக்கியதை என்ன? நாம் சொல்ல வேண் டாம். பார்ப்பனர்களின் லோகக்குரு மறைந்த ஜெயேந்திர சரஸ்வதி பட்டைத் தீட்டி பகரும் “பலாச்சுளைகளை” பார்க்கலாமா?.
“பத்துப் பதினைந்து வருடங்களைக் காட்டிலும் இப்பொழுது பக்தி மக்களிடையே நிறைய தென்படுகிறது. ஆனாலும் ஜனங்களுக்குக் கஷ்டங்களும், வியாதிகளும், நிறைய இருக்கின்றன. இவைகள் நிறைய வரவர பக்தியும் மேன்மேலும் வளருகிறது.
இவ்விதம் பக்தி நம்மிடையே வளர்ந்தும் கூட துக்கங்களும் வியாதிகளும் அதிகமாக வளருவதற்கு காரணங்கள் என்ன? ஓரள வுக்கு நமக்கு கடவுள் பக்தி இருந்த போதும் பேராசையும், ஒழுக்கமின்மையும் கூட வெகு அதிகமாக நம்முடைய வாழ்க்கையை பிடித்துக் கொண்டு விட்டன.”
கூறியிருப்பவர் யார்? அவாளின் குமரகுரு சங்கராச்சாரியார் - அதுவும் எங்கே கூறியிருக்கிறார்? காஞ்சிபுரத்திலேய நடை பெற்ற கோயில் கும்பாபிஷேகத்திலே, இதை வெளியிட்ட ஏடு எது தெரியுமா?தினமணி. (7.9.1976)
இந்த வெட்கங் கெட்டதுகள் தான் தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் அப்பழுக்கற்ற பண்பாட்டின் தனிச் சிகரமாக தகத்தகாய பகலவனாக ஒளி வீசிக் கொண்டி ருக்கும் உத்தமத்தந்தை பெரியாரைக் குறித்து நிதானமில்லாமலும், நேர்மை யின்றியும், நீசத் தன்மையில் சேற்றை வாரி இறைக்கின்றன என்பதை புரிந்து கொள்க!
குறிப்பு: இத்துடன் இவர்களை விட்டு விட முடியுமா நாளையும் இருக்கிறது.
- தொடரும்.
- விடுதலை நாளேடு, 25.4.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக