ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

நூல்: மானம் மானுடம் பெரியார்!

நூல்:    மானம் மானுடம் பெரியார்!
ஆசிரியர்: சு.அறிவுக்கரசு
வெளியீடு: நாம் தமிழர் பதிப்பகம்,
ஜி-4, சாந்தி அடுக்ககம், 3, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு,
    ராயப்பேட்டை, சென்னை - 14
பக்கம்: 440            விலை: ரூ.300/-
ஆரியப் பார்ப்பனர்கள் வேதம் கற்றனர்,  வேள்விகள் செய்தனர்; வேள்விகளால் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்றெல்லாம் கதையளந்தனர். கல்வியறிவில்லாதத் தமிழ் மன்னர்கள் நம்பினர். பார்ப்பனரைப் பணிந்தனர். வேதங்கள் என்றால் என்ன? வேள்விகள் என்றால் என்ன? வேள்வி எனும் சொல் தமிழாக இருந்தாலும் மூலம் சமஸ்கிருதத்தில் யாகம் (யக்ஞம்) என்பதாகும்.
நான்கு மறை என்பார்கள். பார்ப்பனர் தவிர மற்றையோர் தெரிந்துகொள்ளலாகாது என்று மறைத்து வைக்கப்பட்டமையால் மறை எனப்பட்டது. எழுத்து வடிவில் இல்லாததால் மறைப்பதும் வசதியாக இருந்துவிட்டது. 10,522 பாடல்கள் கொண்டது ரிக் வேதம். 1984 பாடல்கள் கொண்டது யஜுர் வேதம். 1875 பாடல்கள் கொண்டது சாமவேதம். அதர்வ வேதத்தில் 5977 பாடல்கள் உள.
ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஆரியப் பார்ப்பனர்கள் சிந்து சமவெளிக்கு வந்து சேர்ந்தபோது சிந்து நதியைக் கண்டு வாயைப் பிளந்து பாடிய பாடல்கள் (ரிக்) கொண்டது ரிக் வேதம். அங்கு வாழ்ந்த திராவிடர்கள் கட்டியிருந்த கோட்டைகளையும் பெரிய வீடுகளையும் கண்டு நாடோடி வாழ்க்கை முறையைக் கொண்டிருந்த ஆரியர்கள் ஆச்சரியத்தில் சொன்னவை ரிக் வேதத்தில் நிறைய. திராவிடர்களை எதிர்க்கவும் முடியாமல், மேலே செல்லவும் முடியாமல் இருந்தவர்கள் இந்திரக் கடவுளை உதவிக்குக் கூப்பிட்ட பாடல்கள் ரிக் வேதம். கையாலாகாதவனுக்குத் துணை கடவுள்தானே!
வேள்வி எனப்படும் யாகச் சடங்குகளின்போது முணுமுணுக்கும் பாடல்களே யஜுர் வேதம். இது வெள்ளை யஜுர் (சுக்ல யஜுர்) என்றும் க்ருஷ்ண யஜுர் (கருப்பு யஜுர்) எனவும் இரண்டு பாகம். சாம வேதம் என்பது பூர்வாச்சிக, உத்தரார்ச்சிக என்று இரு பிரிவுகளாக உள்ளது. இவையும் வேள்விகள் செய்யும்போது சொல்லப்பட வேண்டியவை. மந்திர, தந்திரங்களுக்குப் பயன்படும் பாடல்கள் கொண்டது அதர்வ வேதம். அச்சமும், அறியாமையும் கொண்ட மனிதன் கற்பித்துக் கொண்டவை கடவுள், பேய், பூதம், பாவம், புண்ணியம் போன்றவை. இவற்றைக் கட்டுப்படுத்தும் சக்தி இந்த மந்திரங்களுக்கு உண்டு என்று ஏமாற்றினர் ஆரியர்கள்.
பொது ஆண்டு (கி.பி) 1400இல்தான் சாயனாச்சாரி என்பார் எழுத்து வடிவில் ரிக் வேதத்தை எழுதினார். இதற்கு விளக்கமும் எழுதினார். கேட்பதிலும் மனனம் செய்வதிலும் பொழுதைக் கழித்த ஆரியப் பார்ப்பனர்கள், தம்மையல் லாதவர்கள் வேதத்தைக் கேட்பதையும் மனனம் செய்திட முயற்சிப்பதையும் தடுத்து விட்டனர். வேதம் படிப்பவர் பக்கத்தில் உட்கார்ந்தால் உட்காரும் பகுதியை அறுத்தல், வேதம் படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றிக் கெடுத்தல் போன்ற கொடுந் தண்டனைகள் உண்டென்று கூறி நடைமுறைப்படுத்தினர். இந்த வேதங்களின் கதைப்படி அண்டத்தில் (யுனிவர்ஸ்) சொர்க்கம், மத்திய ஆகாயம், பூமி எனும் மூன்று மட்டுமே கொண்டதாம். ஒவ்வொன்றுக்கும் பதினொன்று எனும் வீதத்தில் மொத்தம் முப்பத்து மூன்று கடவுள்களாம். பின்னாளில்இது எப்படி 33 கோடியாக வளர்ந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை. இந்த 33 கடவுள்களில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பக்தர்கள். பக்தர்களுக்குள் ஏற்பட்ட போட்டி, பொறாமை, குழுச் சண்டைகள். இவற்றின் பாதிப்புகள் கடவுள்களின் மீதும் பிரதிபலித்த நிலை. இவையெல்லாம் ரிக்வேதப் பாடல்களில் காணக்கிடக்கின்றன.
எந்தக் கடவுளாக இருந்தாலும் அவை மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவையாம். அந்த மந்திரங்கள் பார்ப்பனர்களுக்குக் கட்டுப்பட்டவையாம். ரிக் வேதக் கடவுள்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது சோமதேவன். இதை வாழ்த்திப் பாடும் பாடல்கள் 120க்கும் மேல் இருக்கின்றன. அதிகமாகப் பாடப்பெற்ற தேவன்களில் இந்திரன், வருணனுக்கடுத்து சோமன் மூன்றாவது. சோமதேவன் என்பது சோமபானம்.
சோமக் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைச் சாராயமே, சோமபானம்! இது அழியாத் தன்மையைத் தருமென்றும் இதைக் குடித்தால் ஒளியை நோக்கிக் கொண்டு செல்லும் என்றும் பாடல்கள் கூறுகின்றன. “சோம பானம் குடித்தோம், ஒளியில் நுழைந்தோம், தேவர்களைக் கண்டோம்’’ என்றே ரிக் வேத மண்டலம் 3 சூக்தம் 48இல் எழுதிவைத்துப் படிப்போரைக் குடிக்கத் தூண்டுகிறது. சோமன் பசுவைத் தருகிறான், குதிரையைத் தருகிறான், புத்திரனைக் கொடுக்கிறான். அவனே போரில் வெற்றியைத் தேடித் தருவான் என்றெல்லாம் சாராயத்தின் சக்தியை ரிக் வேதம் பாடுகிறது. (ரிக் வேத முதல் மண்டலம் சூக்தம் 91)
சோமபானம் தயாரிப்பதை ரிக்வேதம் விவரித்துக் கூறுகிறது. ‘ஸ்ஷ்ப’ எனப்படும் செடியைப் பறித்து இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில், கழுவிச் சுத்தப்படுத்த வேண்டும். இதை ஆஸ்வினம் என்கிறது வேதம். இரண்டாம் நாள் இரவிலும் நீரில் ஊற வைத்து மறுநாள் மதியம் எடுத்துக் கழுவ வேண்டும். இது ஸாஸ்வதம் என்கிறது வேதம். மூன்றாம் இரவிலும் ஊறவைத்து காலையில் எடுத்துச் சுத்தம் செய்ய வேண்டும். இது அய்ந்தரம் என்கிறது வேதம். (சோமச் செடியை முதல்நாள் ஒரு பசுவின் பாலைக் கொண்டும், இரண்டாம் நாள் இரு பசுக்களின் பாலைக் கொண்டும், மூன்றாம் நாள் மூன்று பசுக்களின் பாலைக் கொண்டும் சுத்தம் செய்ய வேண்டுமாம். தற்காலத்தில் ஹஷீஸ், கஞ்சா தயாரிப்பைப் போலப் போதைக்காக சோமச் செடியைப் பயன்படுத்தியுள்ளனர் ஆரியர்கள். அவர்கள் தான் தற்காலத்தில் ஒழுக்கசீலர்களாகக் காட்டிக் கொள்கின்றனர்.
அடுத்து ஆரியர்களின் போதைக்கு உதவியது சுராபானம். சுராபானம் தவிர வேறு எதையும் குடிக்கக் கூடாது எனப் பார்ப்பனர்களுக்குத் தடையே உண்டு. தானியங்களைப் பொடித்துக் கலக்கிப் புளிக்கவைத்துத் தயாரிக்கப்படும் மதுவே சுரா. அரிசியைப் புளிக்கவைத்து மது தயாரிக்கும் பழக்கம் இந்தியப் பழங்குடிகளிடம் இன்றளவும் உண்டு. அரிசியைப் புளிக்கவைத்து விஸ்கி போன்ற உயர்வகை மது தயாரிப்பது ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ளது.
இத்தகைய சுரா பானத்தை அருந்தியோர் சுரர் எனப்பட்டனர். இந்தப் பானத்தை அருந்த மறுத்தோரும் பார்ப்பனர் அருந்துவதைத் தடுத்தோரும்தான் “அசுரர்’’ என்றழைக்கப்பட்டனர். திராவிடர்களை அசுரர் என்றே பார்ப்பன இதிகாசங்கள் கூறும்.
சோம, சுரா போதைகளைப் போதித்த வேதம் யாகங்களைப் பற்றிக் கூறுவதைப் பார்த்தால் மிகவும் கீழ்த்தரமான, காட்டு விலங்காண்டிகளாகவே ஆரியப் பார்ப்பனர் இருந்துள்ளனர். அரசரின் அதிகாரப் பரவலுக்கும் ஆட்சிப் பிரதேசத்தை விரிவுபடுத்துவதற்கும் போருக்கு மாற்றாக வைத்த யாகம் அஸ்வமேதம். சுக்ல யஜுர் வேதம் இதனை விரிவாகக் கூறுகிறது. கறுப்பு நிறக் குதிரையை அவிழ்த்து விடுவார்கள். அது சுதந்தரமாகச் சஞ்சரிக்கும். மேயும், போர்வீரர்கள் நடந்தும், குதிரையிலும் கறுப்புக் குதிரையைப் பின் தொடர்வார்கள். யாராவது அதைப் பிடித்துக் கட்டிவிட்டால், சண்டை மூளும் அல்லது இரு நபர்களுக்கிடையே பலப்பரிட்சை நடக்கும். முடிவில் கறுப்புக் குதிரை கொண்டு வரப்படும்.
அழகான ஒரு வயதுக் குதிரையான அதனை அத்வர்யு, பிரம்மா, உத்காதா, ஹோத்ரு போன்ற புரோகிதர்கள் பின்தொடர்ந்து வருவர். மன்னனும் நானூறுக்கும் மேற்பட்ட இளம் பெண்களும் உடன் வருவர். யாகம் நடக்கும் இடத்திற்கான கிழக்கு வாசல் வழியாக மன்னனின் மனைவி வருவாள். வெட்டிக் கொல்லப்பட்ட கறுப்புக் குதிரையின் மீது தன் மனைவியைக் கணவனான மன்னனே படுக்க வைப்பான். இறந்த குதிரையுடன் அரசி உடலுறவு கொள்வாள். குதிரையின் குறியைத் தன் குறிக்குள் செலுத்திக் கிடப்பாள். மன்னன் பாடல்களைச் சொல்லிக் கொண்டு இருப்பான். பின்னர் புரோகிதர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே அரசியைப் பார்த்து ஆபாசமாகப் பாடுவார்கள். நானூறு பெண்களில் நூறு சத்திரியப் பெண்கள் இதற்குப் பதிலளித்துப் பாடுவார்கள். மற்றொரு புரோகிதனின் பாட்டுக்கு மற்றொரு குழு சூத்திரப் பெண்கள் நூறு பேர் பதில் பாட்டு பாடுவார்கள். இன்னொரு புரோகிதனுக்கு சத்திரியர்களின் ஆசை நாயகிகளாகிய நூறு பெண்களும் பதில் கூறுவார்கள். ஒரு புரோகிதனின் கிண்டல் பாட்டுக்கு நூறு இளவரசிகள் பதிலளித்துப் பாடுவார்கள். புரோகிதன் பாட்டும் சரி, பதில் பாடல்களும் சரி எல்லாமே ஆபாசத்தின் உச்சம். எழுதக் கூசும் சொற்கள். இதுதான் புனித வேதம்.
அசுவமேத யாகத்தைப் பொது ஆண்டு 300இல் சீலவர்மன் என்பான் நடத்தியதற்கு ஆதாரமான பொருள்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. 1958இல் இந்தியத் தொல்பொருள் அலுவலக இணை இயக்குநராக இருந்த டி.என்.ராமச்சந்திரன் கண்டுபிடித்துள்ளார். யாக மேடையைக் கட்டிய செங்கற்களில் சீலவர்மன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதை இவர் தெரியப்படுத்தியுள்ளார்.
யாகத்தின் அடுத்த கட்டமாக பொன், வெள்ளி, வெண்கலத்தினால் செய்யப்பட்ட மூன்று கத்திகளால் அரசி குதிரையைத் துண்டு துண்டாக வெட்டுகிறாள். ரத்தம், கொழுப்பு முதலியவற்றைப் பிரித்தெடுத்துத் தேவதைகளுக்கு அர்ப்பணிக்கின்ற சடங்கைப் புரோகிதர்கள் செய்கின்றனர். பிறகு மன்னன் தலையில் பொன், காளை மாட்டுத் தோலை வைத்து சடங்குகளைச் செய்கின்றனர். மூன்று நாள்கள் சடங்கு செய்த பிறகுதான் மன்னன் குளிக்கிறான். இந்த யாகத்தை தசரதன் மகன் ராமன் செய்தான் என்கிறது ராமாயணம். இவனது யாகக் குதிரையைப் பிடித்துக் கட்டிய இரு சிறுவர்கள்தான் லவ, குசன்! சீதையின் மகன்கள். ராமனின் துரோகக் கதையை அம்பலப்படுத்தியவர்கள் என்பது வால்மீகி ராமாயணம். நம் காலத்தில் அசுவமேதம் செய்தவன் ஜெயசிம்மன் எனும் ராஜபுதன மன்னன். ஆம், ஜெய்ப்பூர் நகரைக் கட்டிய அதே ஜெயசிம்மன் (பொது ஆண்டு 1734_35)தான்.
பெண்ணையும், ஆணையும் அம்மண கோலத்தில் பந்தலின் மேல் உடலுறவு கொள்ள வைத்து, சம்போகத்தின் போது வழியும் சுக்கில சுரோகிதச் சொட்டுகள் நேராக யாக குண்டத்தில் விழுவதுபோல் அமைத்துப் புரோகிதன் கீழே அமர்வது புண்டரீக யாகம் எனப்படும். அய்காஹி மகாப்ரதம் எனும் இந்த யாகம் சென்ற நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் பார்ப்பனர்கள் நடத்தச் செய்தனர்.
பசுவைக் கொன்று பசுவின் நெய்யை முன்னோர்க்கு அவிஸ் ஆக அளிப்பது கோமேதகம் எனப்படும் யாகம். யாகம் முடிந்த பின் பசு மாட்டிறைச்சியை பங்கு பெற்றவர்கள் அனைவரும் உண்பர்.
புருஷமேதம் என்பது மனிதர்களைக் கொன்று நடத்தப்பட்ட யாகம். இந்த வகைகளை சதபத பிராமணம் விவரிக்கிறது. சுக்லயஜுர் வேத சம்ஹிதை, க்ருஷ்ண யஜுர் வேதத்தின் தைத்ரிய பிராமணம், ரிக்வேத அய்த்ரேய பிராமணம் போன்றவற்றில் புருஷமேத யாகம் பற்றிய விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இந்த யாகத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் ஆசைப்பட்டதை யெல்லாம் அனுபவிப்பான். யாக நாளன்று ராஜபத்தினி அசுவமேதத்தில் எவ்வாறு குதிரையோடு உறவு கொண்டாளோ அதே மாதிரி இம்மனிதனுடன் உறவு கொள்வாள்.
பிறகு அவன் கழுத்தை அறுத்துக் கொன்றுவிடுவர். இது ஏதோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை இருந்த காட்டுவிலங்காண்டித்தனம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. பொது ஆண்டு 1841இல் வங்காளத்திலும் தமிழ்நாட்டிலும் 240 மனிதர்களை புருஷமேதத்தில் கொன்று தள்ளியிருக்கின்றனர் என்பதை கேம்பிரிட்ஜ் ஷார்ட் ஹிஸ்டரி _ பாகம் 3 _ பக்கம் 564இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசித்திரமான யாகம் ஒன்றும் உண்டு. தன்னைத்தானே பலியாக்கிச் செய்யும் யாகம் ஸர்வமேதம் என ரிக்வேதம் கூறுகிறது. சொர்க்கத்தில் இடம் பிடிப்பதற்காகத் தன்னையே பலியாக்கிக் கொள்வதாம். சொர்க்கம் என்பதே மதங்களின் பித்தலாட்டக் கற்பனை. இதனை நம்பிச் சாகிறார்கள் என்றால்... மதம் என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்! ரிக் வேதம் மண்டலம் 10 சூக்தம் 31இல் யாகம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
ஆடுகளுடன் உடல் உறவு கொள்வதையும், காளை மாட்டுடன் உடல் உறவு கொள்வதையும் ரிக் வேதம் பரிந்துரைப்பதாக  ‘பழமையான பாரதம்’ எனும் நூலில் மலையாள அறிஞர் ஏ.அய்யப்பன் குறித்துள்ளார்.
இப்பழக்கம் இருந்ததால்தான் பிரிட்டிஷார் எழுதித் தந்து இன்றளவும் இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் இந்தியன் பீனல்கோடு எனும் சட்டத்தில் விலங்குப் புணர்ச்சிக்கு என்ன தண்டனை என்று குறிக்கப்பட்டுள்ளது. உடன் பிறந்த அண்ணன் தங்கைக்குள்ளோ, அக்கா தம்பிக்குள்ளோ உடல் உறவு கொள்ளும் ஒழுங்கீனத்தை ரிக் வேதம் பரிந்துரைக்கிறது. எடுத்துக்காட்டாக, எமனின் சகோதரி எமனைத் தன்னுடன் உடலுறவு கொள்ள அழைக்கும் உரையாடல் “இந்தியாவின் ஆத்மா’’ எனும் நூலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. தந்தை தன் மகளைக் கர்ப்பம் அடையச் செய்த கேடு அதர்வ வேதம் கூறுகிறது. குடும்பம், சமூகம், உறவுகள் போன்றவை நாகரிகமடையாத கால வேதங்களை இன்றைக்கும் கட்டி அழலாமா? வேதகாலப் பெருமைகளைப் பேசும் பேர்வழிகளை மனிதர் எனக் கொள்ளலாமா? மனிதகுல எண்ணிக்கையில் சரி பாதி அளவுக்கு இருக்கும் பெண்களுக்கு வேதகாலத்தில் மரியாதையே இல்லாத நிலை, சாதாரண அசையும் பொருட்கள் போலக் கருதப்பட்ட நிலை. பிள்ளை பெற்றுத் தரும் கருவியாக மட்டுமே கருதப்பட்ட நிலை. பெண்கள் அறிவில் குறையுள்ளவர்கள். ஆதலால் அவர்களைப் படிக்க வைக்கக் கூடாது என்றே ரிக்வேதம் மண்டலம் 8 சூக்தம் 33 அறிவிக்கிறது. வேதகால அறிவு இப்பிரபஞ்சம் சொர்க்கம், மத்திய ஆகாயம், பூமி எனும் மூன்றடுக்கு கொண்டது என்கிறது.
இந்திய விடுதலைக்காக வெள்ளையர் மீது வெடிகுண்டு வீசிய வீரர் வங்காளத்து அரவிந்தகோஷ். பிரிட்டிஷாரின் காவல்துறை இவரைக் கைது செய்யத் தேடியதும் பயந்துபோய் பதுங்கிப் புதுச்சேரியில் தங்கித் தப்பித்த மகாவீரர் இவர்! புதுச்சேரியில் இந்துமதச் சாமியார் வேடம் போட்டு வேதப் பெருமைகளைப் பேசிய ஆள். சாதாரண மக்கள் புரிந்துகொள்ள முடியாத அர்த்தங்கள் வேதங்களில் மறை பொருளாக வைக்கப்பட்டுள்ளன என்கிற அபார கருத்தை வெளியிட்ட மேதாவி இவர். அக்கருத்துகளை இவர் புரிந்துகொண்டார் என்பதற்கும் ஆதாரமில்லை. பின் எப்படி கூறினார்? சும்மா பேசுவதுதானே சாமியார்களின் வேலை!
“வேதமென்றும் வேள்வியென்றும்
    விளம்புகின்ற கூட்டந்தனை
விறகொடித்து வருவதுபோல்
    விலாஎலும்பு ஒடித்து வருக’’
என கவிஞர்_கலைஞர் கருணாநிதி 1945இல் எழுதியது போன்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்!
மாறாக, வேதங்கள் பழம்பெரும் இலக்கியங்கள் எனக் கருதிக் கொண்ட பிரிட்டிஷார் பார்ப்பனரைப் பக்கத்தில் இருத்திக் கொண்டனர். பதவிகளில் அமர்த்திப் பயன்படுத்திக் கொண்டனர். ஆயிரம் ஆண்டுக்காலம் படிக்காமல் இருந்துவிட்ட தமிழர் தூர நின்றனர். வந்தேறிய ஆரிய இனத்தவர் வேளாண்மையும் தெரியாததால் உழைத்துப் பிழைக்க வழியில்லாது கையில் தர்ப்பைப் புல்லைப் பிடித்துக் கொண்டு யாகம் என ஏமாற்றி யோகம் பெற்றனர். பார்ப்பனர் அல்லாதார் பெருமூச்சு விட்டனர். யஜனம், யாஜனம் எனும் இரண்டுதான் பார்ப்பனரின் தொழில்கள். யாகம் செய்வது, யாகம் செய்விப்பது என இரண்டே தொழில்கள்தான். அவற்றைப் பொழுது போக்குக்காகச் செய்து கொண்டே, அரசுப் பதவிகளில் அமர்ந்துகொண்டு விட்டனர்.
-உண்மை இதழ், 16-31.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக