புதன், 18 ஏப்ரல், 2018

முகத்திலும், தோளிலும், தொடையிலும், காலிலும் பிள்ளைகள் பிறக்குமா?


 - சிகரம்

 


 மைத்ரேயரே! அனாதி கர்ம வாசனையினால் கட்டுண்டவர்களும் நானாவித கர்ம பயன்களை அனுபவிப்பவர்களான சேதனர்கள் பூர்வ வாசன வசத்தினால்; சங்காரகாலத்தில்; சங்கரிக்கப்பட்டு படைப்புக் காலங்களில் தேவ மனிஷ்யத் திரியிக்கு தாவர ஜன்மங்களாகப் பிறப்பார்கள். சிருஷ்டித் தொழிலிலுள்ள பிதாமகனுடைய இச்சையினால்; அம்பஸ் என்ற பெயரால் வழங்கப்படும் தேவாசுர பிதுர் மனுஷ்ய ஜாதிகள் நான்கும் உண்டாயின. அதன் விவரங்களையும் கூறுகிறேன். கமலாசனன் படைப்புத்தொழில் விஷயமாக ஒரு தேகத்தோடு சிந்தித்திருக்கும்போது; தமோகுண உத்திரேகத்தினால்; அவருடைய இடையின் கீழ்ப்புறத்திலிருந்து அரசர்கள் தோன்றினார்கள் பிறகு அந்த விரிஞ்சன்; தமோகுணத்துமகமான அந்தத் தேகத்தை ஒழித்துவிட; அது இருள் மிகுந்த இரவாயிற்று. பிறகு; அவர் திரும்பவும் பிரஜா சிருஷ்டி செய்ய நினைத்து வேறொரு தேகந்தரித்து; சந்துஷ்ட சிந்தனாக இருக்க; அந்தத்தேவனின் முகத்திலிருந்து சத்துவகுணாதிக்கமுள்ள தேவர் தேவதைகள் ஜனித்தார்கள். பிறகு, அந்தப்பிதாமகன்; அந்த உடலையும் விட்டுவிட்டார். அது சத்துவ குணமயமான பகலாயிற்று. பிறகு அவன் ரஜோகுணாதிசகமான மனிதர்களை படைத்து அந்தத் தேகத்தையும் விட்டுவிட; அது பிரகாசமான பிராதக்கால சந்ததியாயிற்று. அதனால் மனிதர்கள் பிராதச்சந்தியிலேயும் பிதுர்க்கள் சாயஞ்சந்திலேயும் பலவான்களாக இருப்பார்கள்.

பிறகு, தியான பாராயணனாய், விரிஞ்சன் தனது அங்கங்களினின்றும் அந்தக் கணத்திலேயே கந்தருவர்களை உற்பத்தி செய்தார். அவர்கள் சமத்காரமாய்ப் பாடிக் கொண்டிருந்ததால் கந்தர்வர்கள் என்று வழங்கப்பட்டனர். இவ்விதமாகச் சதுர்முகனால் சிருஷ்டிக்கப்பட்ட வஸ்துக்கள் சக்திகளினால் ஏவப்பட்டு, அதனதன் கர்மானுகுணமாய் வெகுவிதமான பூதங்களைப் படைத்து மீண்டும் சுயேச்சையான வயதைக் கண்டு, பாரிசங்களினால் பறவைகளையும், மார்பினால் ஆடுகளையும், முகத்தினால் வெள்ளாடு களையும், உதரத்தினால் பசுக்களையும், பாதத்தினால் குதிரைகளையும், யானைகளையும், கழுதைகளையும், ஒட்டகங்களையும், கடம்பு மான்களையும் மற்றுமுள்ள மிருகஜாதிகளையும் படைத்தார். மீண்டும் ரோம தபங்களினாலே பலவித உபயோகமுள்ள ஔஷதா திகளையும் தானியங்களையும் உண்டாக்கினார். இவ்விதமாய்ப் பிதாமகன் கல்பாதியான கிருதயுகத்தில் ஓஷதாதிகளையும், பசுக்களையும், பறவைகளையும், மாடுகளும், ஆடுகளும், குதிரைகளும், ஒட்டகங்களும், வெள்ளாடுகளும், கோவேறு கழுதைகளும் கிராமியங்களால் பசுஜாதிகள் என்று அறிவீராக. சிங்கம், புலி முதலிய துஷ்ட மிருகங்களும், இரு குளம்புள்ள மிருக வகைகளும், யானைகளும், குரங்குகளும், பறவைகளும், சலசரங்களான மச்ச கூர்மாதிகளும் சர்ப்பங்களும் ஆகிய ஏழு ஜாதிகளும் ஆரணிய பசு விசேஷங்கள் என்று அறிவீராக. அதன் பிறகு பிதாமகன் காயத்திரி சந்தமும் இருக்கு வேதமும் திரிவிருத் என்ற ஸ்தோமமும் ரதந்தர சாமமும் அக்கினிஷ்டோமமும் தனது கிழக்கு முகத்தினால் உண்டாக்கினர். யஜுர்வேதமும் திருஷ்டுபு, சந்தமும், பஞ்சதஸ்தோமமும் பிருதச்சாமமும், உத்தியம் என்கிற யாக விசேஷமும், தக்ஷிண முகத்தினால் உண்டாகச் செய்தார். சாம வேதமும் செகதீச்சந்தமும், வைரூப்பியம் என்கின்ற சாம விசேஷமும் அதிராத்திரியாகமும் பச்சிம முகத்தினால் உண்டாக்கினார். அதர்வண வேதமும், ஏகவிம்சஸ்தோமமும், அனுஷடுப் சந்தமும் வைராசம் என்கின்ற சாம விசேஷமும் அப்தோர்யாமம் என்கின்ற யக்கியமும் உத்தரமுகத்தினாலே உண்டாக்கினார். நானாவிதமான உயிரினங்களைப் பலவித அவயங்களினாலே நான்முகப் பிரமன் உண்டாக்கினார். இவ்விதமாகப் பிதாமகன், தேவ அசுர, பிதுர் மனுஷியாதி பூதசாதிகளைச் சிருஷ்டித்துத் திரும்பியும் பிரஜா சிருஷ்டி செய்ய வேண்டும் என்று உற்சாகத்தோடு சங்கல்பித்து, கின்னரர், கந்தர்வர், அப்சரஸுகள், யக்ஷர்கள், ராக்ஷதர், பைசாசர் முதலியவர்களையும் பசு, பட்சி, சர்ப்ப மிருகங்களையும் தாவர சங்கமங்களையும் உண்டாக்கினார்.



இப்படி ஆதிகர்த்தாவும் லோகேசுவரனுமான சதுர்முகப்பிரமன் பலவித பூதஜாதிகளை உண்டாக்கினார். அவை சில குரூர சுபாவங்களும் சில மென்மையான சுபாவங்களும் சில இம்சை செய்பவைகளும், சில இம்சை செய்யாதவைகளும், சில தர்ம சொரூபங்களும், சில அதர்ம சொரூபங்களும், சில சத்திய மயங்களும் சில அசத்திய மயங்களுமாகப் பூர்வப் படைப்பில் எப்படிப்பட்ட கர்மங்களை அடைந்தனவோ அப்படிப்பட்ட கர்மங்களையே இந்தப் படைப்பிலும் அடைந்தன. பிறகு தேக, இந்திரிய மனபுத்திச் சிறப்புகளுக்கும் சப்த ஸ்பரிசாதி, யோக்கிய வஸ்துக்களுக்கும் வேத வசனங்களைக் கொண்டே தேவ, ரிஷி, பிதுர், மனுஷ்ய பட்சி, மிருகாதிகளுக்கு பெயர்களையும், ரூபங்களையும் அறிந்து பெயர்களையும் உருவங்களையும் பிருமன் உண்டாக்கினார் என்கிறது இந்து மதம். இப்படித்தான் உலகம் படைக்கப்பட்டதா? உலகமும் உயிரினங்களும் உண்டாயினவா? கிறித்தவ மதம் ஆறு நாள்களில் கடவுள் உலகைப் படைத்தார் என்று கூறுகையில், இதற்கு முரணானச் செய்திகளை, வேறு விதமான செய்திகளைக் கூறுகிறது. இந்த இரண்டில் எது உண்மை? இரண்டுமே பொய் என்பதுதானே உண்மை.

இப்படித்தான் உலகம் உருவாயிற்று என்று அறிவியல் கூறுகிறதா? அறிவியல் கூறும் செய்திகள் இதற்கு மாறாக அல்லவா உள்ளன. அப்படியிருக்க இந்து மதம் அறிவியலுக்கு அடிப்படை என்பது அசல் பிதற்றல் அல்லவா? 

பூர்வத்தில் பிரமன் மனிதர்களைப் படைக்க வேண்டும் என்று சிந்தித்தபோது, அவரது முகத்திலிருந்து சத்வகுணமுடையவர்களான பிராமணர்கள் தோன்றினார்கள். அவரது மார்பிலிருந்து ராஜசகுணமுடைய க்ஷத்திரியர்கள் தோன்றினார்கள். தொடைகளிலிருந்து ராஜசகுணமும் தாமஸகுணமும் கலந்தவைசியர்கள் தோன்றினார்கள். பாதங்களிலிருந்து தமோ குணமுடைய சூத்திரர்கள் தோன்றினார்கள். இவ்விதம் பிரமதேவனின் முகம், மார்பு, தொடைகள், பாதங்கள் என்னும் அவயங்களிலிருந்து பிறந்த பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களை யாகங்களுக்குரிய செயல்களைச் செய்யும்படி அவர் நியமித்தார். மைத்ரேயரே!

மனிதன் தாயின் வயிற்றிலிருந்து பிறப்புறுப்பு வழியாகப் பிறக்கிறான் என்று பாமர மனிதன்கூடச் சொல்வான். ஆனால், முகத்திலும், தோளிலும், தொடையிலும், காலிலும் பிறந்தான் என்பது அசல் மூடத்தனம், முட்டாள்தனம் அல்லவா? சாதி உயர்வைக் காட்ட ஆரியர்கள் செய்த பித்தலாட்டம் அல்லவா இது? இப்படிப்பட்ட முட்டாள்தனமான கருத்துகளையே முழுமையாகக் கொண்டுள்ள இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

அம்பு விட்டால் கடல் வற்றிவிடுமா?

“ராமர், ராவணனுடன் போர் புரியத் தீர்மானித்து, ராமேஸ்வரத்தை அடைந்து, சேதுக்கரை வந்தவுடன் சுற்றியுள்ள சமுத்திரத்தைக் கண்டு திகைக்கிறார். ராமேஸ்வரத்திலிருந்து இலங்கையை அடைய, சமுத்திரத்தில் ஒரு வழி ஏற்படுத்தித் தரும்படி சமுத்திரராஜனுக்கு செய்தி அனுப்புகிறார். ஆனால், சமுத்திரராஜன் எந்தப் பதிலும் தரவில்லை.

சமுத்திரராஜன் அனுமதி தர காலதாமதம் செய்வதால், ராமர், சேதுக்கரையிலேயே காத்திருக்கிறார். அயர்ச்சியில் தர்ப்பைப் புல்லால் படுக்கை அமைத்து, அதன் மீது படுத்து உறங்குகிறார்.’’ மூன்று நாட்களுக்குப் பின்பும் சமுத்திரராஜன் எந்தப் பதிலும் சொல்லாமல் இருக்க, மனைவியைப் பிரிந்த துயரில் இருக்கும் ராமரிடம், ‘இதற்கு மேலும் காத்திருக்க வேண்டாம்’ என்று சொல்லும் லட்சுமணன், சமுத்திரத்தை இராமனின் அம்பைக் கொண்டு வற்றிப் போகும்படி செய்யச் சொல்கிறான். ராமர், தனது அம்பை எடுத்து வில்லில் வைத்து, நாணையேற்றும் நேரத்தில், சமுத்திரத்திலிருந்து வெளிவரும் சமுத்திரராஜனும், சமுத்திரராணியும் ஸ்ரீராமரின் காலில் விழுகிறார்கள்.

சமுத்திரராஜன், ‘சமுத்திரத்தில் வழி அமைத்தால் அதனால் நீர்வாழ் உயிரினங்களுக்கு பிரச்சினை ஏற்படும் என்றும், ‘எனது அரசவை உறுப்பினர்கள் எவரும் இதற்கு சம்மதம் தராததாலேயே என்னால் அனுமதி தரமுடியவில்லை’ என்று சொல்லிக் கலங்குகிறான் என்கிறது இந்து மதம். கடலில் அம்புவிட்டால் கடல்நீர் முழுவதும் வற்றிவிடும் என்பது அறிவியலுக்கு ஏற்ற கருத்தா? கடல் இராஜா, அவருக்கு ஒரு இராணி, அவர்களுக்கு ஓர் அரசவை உண்டா? இவையெல்லாம் அறிவியலா? அடிமுட்டாள்கூட சொல்லாக் கருத்துகளைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

(சொடுக்குவோம்)

- உண்மை இதழ், 16-31.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக