வியாழன், 26 ஏப்ரல், 2018

பார்ப்பனீயம்&மனுதர்மமும்அதனால்பாதிக்கப்பட்டபெண்களும்

*பார்ப்பனீயம்&மனுதர்மமும்அதனால்பாதிக்கப்பட்டபெண்களும்*

இந்து எனும் எமது பெண்களுக்கு; இந்த பார்ப்பனீய இந்துமதம் எவ்வாறு அவர்களைபற்றி கூறுகிறது என்று தெரிய வேண்டாமா? அதற்காகவே இந்த பதிவு.

மனுநீதி பெண்களைப்பற்றி என்ன கூறுகிறது என்பதை பார்ப்பதற்குமுன் சில வரலாற்று தகவல்களை தருகிறேன்.

உயர்சாதிப் பார்ப்பனர்கள் கீழ்சாதிப் பெண்களை அனுபவிக்கும் உரிமையை மலபார் பகுதியில் கொண்டிருந்தனர்.

''தேவர்கள் என்றும் மண்ணின் கடவுள்கள் என்றும் தம்மை கூறிக்கொள்ளும் பார்ப்பனர்களும், ஆளும் வர்க்கமான சத்திரியர்களும் தங்களுக்குக் கீழ்ப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களுடன் முதல் முதலில் உறவு கொள்ளும் உரிமையைக் கொண்டிருந்தனர்.

கி.பி. 1502 இல், இந்தியாவுக்கு வந்திருந்த லூடோவிக்கோல்டி வர்த்தமா கள்ளிக் கோட்டை பார்ப்பனர்கள் பற்றி கூறியது.

''அரசன் திருமணம் செய்யும் போது மிகவும் மதிப்பும் மரியாதையும் உள்ள இந்தப் பார்ப்பனர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, தன் மனைவியுடன் முதலிரவைக் கழிக்க அவரை அனுப்பிவிடுவர்."

இது போல் ஹாமில்டன் என்ற எழுத்தாளர் எழுதியதில் ''சமோரின் (ஒரு சமூகப் பிரிவு) திருமணம் செய்யும்போது நம்பூதிரியோ அல்லது முதன்மை மதக்குருவோ மணப்பெண்ணை அனுபவிக்கும் வரை இவனால் (மணமகனால்) அனுபவிக்க முடியாது. இவர் (மதக்குரு) விரும்பினால் மூன்று இரவுகள் கூட அப்பெண்ணுடன் கழிக்கலாம். ஏனெனின் அப்பெண்ணின் திருமண இரவில் முதல் கனிகள் அவள் வணங்கும் கடவுளுக்கு நைவேத்தியம் செய்யப்படவேண்டும்."

''அரசக் குடும்பங்களிலும் பிரபு குடும்பங்களிலும் பெண்கள் பார்ப்பனர்கள் மூலம் கருவுறுவதைப் புண்ணியமாகக் கருதினர். பார்ப்பனர்களுக்கு உடல், மன, காம வேட்கைகளில் சுகமளிப்பது சொர்க்கத்தை அடைவதற்கான வழியென பெண்கள் நம்பினர். பார்ப்பனர்கள் விருந்தினனாக வீட்டிற்கு வந்தால், அவன் முதியவனாக இருந்தபோதும், கன்னிகைகளான இளம் பெண்களை அவனுடைய படுக்கையறைக்கு அனுப்ப குடும்பத் தலைவர்கள் ஆர்வம் காட்டினர்.
கன்னிப் பெண்கள் இல்லையென்றால், அந்த வீட்டிலுள்ள மிகவும் வயது குறைந்த பெண், பார்ப்பனனின் பணிவிடைக்காக நியமிக்கப்பட்டாள். அந்தப் பெண்ணுக்குக் கணவன் இருந்தால், அவன் இந்தச் சமயம் அறைக்கு வெளியே படுப்பது வழக்கம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய ஒரு சமுதாய முறை இருந்தது..." பார்ப்பனிய மதம் மற்றைய மதங்கள் மீதான வெற்றிகளின் மீது பக்தியின் பின்னால்  அரங்கேறிய வடிவமிது.

இவை எவ்வாறு சாத்தியமாகியது?

ஏனெனில்; பார்ப்பான் வகுத்த மனு சட்டத்தை கடவுளின் சட்டம் என்று அப்பாவிகள் நம்பவைக்கப்பட்டு இருந்தார்கள். இப்போது மனுநீதியில் பெண்களைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ள சில வசனங்களை தரலாம் என்று எண்ணுகிறேன்.

மனு 2.213 இல், ''இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள்"

மனு 2.214 இல், ''இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்லவர்கள் பெண்கள்"

மனு 2.215 இல், ''தாய், மகள், சகோதரி எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை, அறிவாளியையும் வெற்றி கொள்ளும்"

மனு 9.14 இல், ''பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆணாக இருந்தால்போதும், அழகாக இருப்பினும், அசிங்கமாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்"

மனு 9.15 இல், ''ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலனப் புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்"

மனு 9.16 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு அமைத்துள்ள இயல்பை அறிந்து ஒவ்வொரு மனிதனும் பெருமுயற்சி செய்து பெண்களைக் காத்துவரல் வேண்டும்"

மனு 9.17 இல், ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு ஒதுக்கியுள்ள குணங்கள் படுக்கை மோகம், பதவி தாகம், ஆபரண ஆசை, கேடான ஆசைகள், கோபம், நேர்மையின்மை, வஞ்சகம், தீயநடத்தை ஆகியவை"

மனு 9.2 இல், ''இரவும் பகலும் பெண்களை அவர்தம் குடும்பத்து ஆடவர் தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருத்தல் வேண்டும்;. உடலுறவை நாடும் பெண்களை ஒருவர் கட்டுக்குள் வைத்தல் வேண்டும்."

மனு 9.3 இல், ''குழந்தைப் பருவத்தில் தந்தையின் பாதுகாப்பிலும், இளமையில் கணவன் பாதுகாப்பிலும், முதுமையில் மகன்களின் பாதுகாப்பிலும் பெண்கள் இருத்தல் வேண்டும். பெண் எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதியற்றவள்."

மனு 4.147 இல், ''சிறுமியாயினும், இளம் பெண்ணாயினும், ஏன் முதியவளாயினும் தம்வீட்டில் கூடச் சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல் கூடாது"

மனு 11.45 இல், ''கணவனும் மனைவியும் ஒன்றெனக் கூறப்படுவதன் பொருள் திருமணத்திற்குப் பின் மணமுறிவு, பிரிவு என்பதே கிடையாது."

மனு 9.46 இல், ''விற்றுவிட்டாலும், கைவிட்டாலும், கணவனின் பந்தத்திலிருந்து மனைவி விடுபட முடியாது."

மனு 5.149 இல், ''தந்தையிடமிருந்தோ, கணவனிடமிருந்தோ, மகன்களிடமிருந்தோ ஒரு பெண் பிரிந்தால் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பழியை ஏற்படுத்துவாள். விவாகரத்து உரிமை கிடையாது"

மனு 8.415 இல், ''மனைவி, மகள், அடிமை, இம்மூவரும் சொத்துரிமைக்கு அருகதையற்றவர்; அவர்கள் ஈட்டும் செல்வம், அவர்களை உடையவருக்கே போய்ச்சேரும்"

மனு 8.299 இல், ''மனைவி, மகன், அடிமை, மாணவன், இளைய சகோதரன் ஆகியோர் தவறு செய்யின் கயிறு அல்லது மூங்கில் கழியால் அடிக்கலாம்"

பெண்ணை விற்க, அனுபவிக்க, தூக்கி வீச, அடிக்க என எல்லாம் இந்து மதம் ஆணுக்கு அனுமதித்துள்ளது. பெண் இதில் எதையும் ஆணுக்குச் செய்ய முடியாது.

மனு 2.66 இல், ''பெண்.. வேதமந்திரங்களை ஓதக் கூடாது,......."

மனு 9.36 இல், ''வேதங்களில் சொல்லப்பட்ட தினசரி வேள்வி நியமங்களைப் பெண் ஆற்றுதல் கூடாது...."

மனு 9.36 இல், ''அவள் அவ்வாறு செய்தால், நரகத்திற்குப் போவாள்...."

மனு 4.205 இல் ''ஒரு பெண் ஆற்றிடும் வேள்வியில், பிராமணன் உண்ணக்கூடாது."

மனு 4.206 இல்,''பெண்கள் இயற்றும் வேள்விகள் அமங்கலமானவை. தெய்வச் சங்கல்பமற்றவை. அவற்றைப் பிராமணர்கள் தவிர்த்தல் வேண்டும்"

மனு 5.151 இல், ''தன் தந்தை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அல்லது தந்தை இசைவுடன் சகோதரன் தன்னை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அக்கணவனுக்கு வாழ்நாள்வரை அவள் கீழ்ப்படிதல் வேண்டும். இறந்த பிறகும் கணவன் நினைவைப் பழித்தலாகாது"

மனு 5.154 இல், ''அறநெறி பிறழ்ந்தவனாயினும், வேறொருத்தியிடம் இன்பம் கொள்பவனாயினும், நல்ல குணங்கள் இல்லாதவனாயினும் விசுவாசமுள்ள மனைவி கணவனை எந்நேரமும் தெய்வமாக வழிபடுதல் வேண்டும்;"

இதனுடன் சில புராண இதிகாசங்களையும் ஆரிய இந்துமத சடங்குகளையும் பார்ப்போம்.

அர்த்த சாஸ்திரம் (3,8) இல், ''சூத்திரப் பெண் உயர்சாதி ஆண்கள் இன்பம் அனுபவிப்பதற்கு உரியவள்"
''உயர் சாதிக்காரன் ஒரு சூத்திரப் பெண்ணோடு சேர்ந்து உடல் இன்பம் பெறுவானேயானால் அதனை ஒரு குற்றமாகக் கருதக்கூடாது."

கேரளத்தில் இரு நூற்றாண்டுகளிற்கு முன்பு கூட ஈழவர் சாதிப் பெண்கள் தலைவரி கட்டியதுடன், முலைவரியும் கட்ட ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை கோரியது. இந்த அவமானத்தை தாங்க முடியாது ''சேர்த்தலை" என்ற இடத்தைச் சேர்ந்த ஓர் ஈழவர் பெண் தன் இரு முலைகளையும் அறுத்து வாழை இலையில் வைத்து அதிகாரிகளிடம் கொடுத்தாள். (அந்த இடம் இன்றும் முலைச்சிப் பறம்பு என்று அழைக்கப்படுகின்றது)... கிறிஸ்தவச் சாணார் பெண்கள் முலை மறைத்து உடை அணிந்ததால் ஆடை களைந்து அவர்களது முலைகள் அறுக்கப்பட்டன..."

தேவதாசி பிரதா என்ற சடங்கின் மூலம் கடவுளுக்குப் பெண்களைத் திருமணம் செய்து வைப்பதன் மூலம்;, கோயில் விபச்சாரிகளை உருவாக்கியது.

சதிபிராரா என்ற சடங்கின் மூலம் கணவனின் சிதையில் பெண் ஏற வைக்கப்பட்டாள். பெண் மறுத்தபோது பலாத்காரமாகத் தள்ளி எரியூட்டினர்.

கங்கா பிரவர் என்ற சடங்கின் மூலம் குழந்தை இல்லாத பெண்கள் கங்கையில் நீராடியதுடன், முதல் குழந்தையைக் கங்கை நீருக்குப் பலிகொடுத்தனர்.

நரவதா என்ற சடங்கின் மூலம் ஒரு குழந்தையின் நலனுக்காக, ஏழைக் குழந்தைகள் அல்லது அநாதைக் குழந்தைகளைப் பிடித்து வந்து தேவதைக்குப் பலி கொடுத்தனர்.

கன்யவதா என்ற சடங்கில் இராஜபுத்திரர்கள் தமது பெண் குழந்தைக்குத் திருமணம் செய்யும் போது, உறவினர்க்கு முன் மண்டியிட்டு வணங்கவேண்டும் என்பதால், இராஜபுத்திரர்கள் தமது பெண் குழந்தைகளைக் கொன்றனர்.

இது போன்று காலத்தால் அழிந்தும், அழியாததுமான பல நூறு காட்டுமிராண்டிச் சடங்குகள், 2000 விரதங்கள், அது சார்ந்த தானங்கள் பரிகாரங்கள் சுரண்டல்கள் என நீண்டு, இந்துமதம் இன்றும் மூடநம்பிக்கைகளின் ஊற்றாகவே உள்ளது.

போர் வீரர்களின் வெற்றியைப் பறைசாற்ற ரிக்வேதத்தில் 8.48.88 இல், ''ஸ்திரீகள் அலங்காரம் செய்யப்பட்டு வெற்றி வீரர்கள் தங்கியிருக்கும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்"

மகாபாரதம் அனுஷானம் 28,12,25,29 இல், ''பெண்ணாய்ப் பிறப்பதை விட கெட்டபிறப்பு வேறு எதுவுமில்லை. - எல்லா கேடுகளுக்கும் வேர் பெண்களே! -

எவ்வளவு விறகினாலும் நெருப்பு திருப்தி அடைவதில்லை. ஆறுகள் கொண்டுவரும் எந்த அளவு நீரினாலும் கடலுக்கு ஆசை தீருவதில்லை. எவ்வளவு பிராணிகளைக் கொன்றாலும் கொலைகாரன் சமாதானம் அடைவதில்லை. இதுபோல் பெண்கள் எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடைந்து விடமாட்டார்கள்.

- நாச காலன், ஊழிக்காற்று, பாதாளக் கடவுளாகிய எமன், இடைவிடாமல் நெருப்பைக் கக்குகின்ற அக்கினி, ஊற்றுவாய், சவரக்கத்தியின் கூர்மை, கொடிய விஷம், பாம்புகள், நெருப்பு ஆகியவைகள் ஒன்று சேர்ந்தால் எத்தனை கேட்டை விளைவிக்கக் கூடியதாகுமோ அத்தன்மை உடையவர்கள் பெண்கள்" என்று மகாபாரதம் பெண்கள் பற்றிக் கூறுகின்றது.

49.22 இல், ''பெண்ணை விட பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகின்ற நெருப்பு போன்றவள். பெண் மாய்கை, வஞ்சகக் குணமுள்ளவள். சவரக் கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன.

43.23 இல், பெண்கள் பயங்கரமானவர்கள். கொடிய சக்திகளை உடையவர்கள்;. தங்களுக்குப் போக இன்பத்தை அளிக்கிறவர்களிடத்தில் தவிர வேறு யாரையும் அவர்கள் நேசிக்க மாட்டார்கள், விரும்ப மாட்டார்கள்.

43.24 இல், உயிரைக் கொல்லும் அதர்வன மந்திரங்களை ஒத்தவர்கள் பெண்கள். ஒருவனுடன் கூடி வாழ ஒத்துக்கொண்டாலும் பின்னர் மற்றவர்களுடன் கூடிக்கொண்டு, முன்னவனை விட்டுப் பிரியவும் தயாராகவுமிருப்பார்கள்.

43.24 இல், அவர்கள் ஒரு ஆணைக் கொண்டு எப்போதும் திருப்தியடையமாட்டார்கள்.

43.24 இல், ''ஆண்கள் அவர்களை நேசமாகக் கொள்ளக்கூடாது. அவர்களிடம் பொறாமைப்படக் கூடிய நல்ல தன்மை ஒன்றுமில்லை. அவர்களுடன் தொடர்பு இல்லாமலே, உண்மை அன்பு வைக்காமல் போகத்துக்காக மாத்திரம் ஆண்கள் பெண்களின் சம்பந்தத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அந்தப்படிக்கு இல்லாமல் வேறுவிதமாக ஒருவன் பெண்ணிடம் நம்பிக்கை வைத்துக் கொண்டால் அவன் நிச்சயமாக அழிந்து போவான்."

இராமாயணம் ஆரண்ய காண்டம் 13.5.6 இல், ''உலகம் தோன்றுவது முதல் பெண்கள் நிலைமை சூது நிறைந்தது. பெண்கள் தாமரை இலையில் தண்ணீர்போல் சலனப் புத்தியுடையவர்கள். வாள்போல் கூர்மையான கொடுமைத் தன்மையுடையவர்கள்." பெண் உறுதியற்ற சலனத்தன்மை கொண்டவள். ஒன்றுக்குள் நிலை நிறுத்த முடியாதவள், எனவே, அடக்குங்கள் என்ற இராமனின் புகழ் பாடும் இராமாயணம் சமூகத்துக்குக் கற்றுக் கொடுத்தது.

பாகவத ஸ்கந்தம் 4-14,42.8-4-36 இல், ''ஒரு பெண்ணால் உண்மையாக நேசிக்கப்படுகிறவராக யாருமிருக்க முடியாது. ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்கமாட்டாள்."

சுக்ரா 3.163 இல், ''பெண் இனத்திற்கே கீழ்க்கண்ட 8 கணங்களும் உரிமையானவைகள். 1.பொய், 2.நிலையில்லாமை, 3.வஞ்சகம், 4.மூடத்தனம், 5.பேராசை, 6.மாசு, 7.கொடுமை, 8.துடுக்குத்தனம்"

அர்த்த சாத்திரம் 3-3-59 இல், ''பெண்கள் தவறு செய்தால் மூங்கில் பட்டையினாலோ, கயிற்றினாலோ, கையினாலோ, பெண்களின் வாயின் உதட்டில் மீது அடிகள் கொடுக்கலாம்;."

பார்ப்பனிய முட்டாள்த்தனம், மூடநம்பிக்கை, அடிமைப்படுத்துதல், அவதூறுகள், வன்முறை ஆகியவை மீது கேள்வி எழுப்பிய பெண்கள் கொல்லப்பட்டனர்.

அதர்வண வேதத்தில் 6-2-3 இல், ''குடும்பத்தில் பெண் பிறந்தால் mஅச்சம்பவம் மகிழ்ச்சிக்குரியதல்ல, வருந்துவதற்குரியது, வியாகூலப்பட வேண்டியது. ஆண் மகவை விரும்புகிறதேயல்லாது, பெண் மகவை விரும்புகிறதில்லை. பெண் மகவு வேறு எங்காவது பிறக்கட்டும்; இங்கே ஆண் மகவு பிறக்கட்டும். புக்கா கடவுளை வணங்குவதில் ஆண் மகவே பிறக்கட்டும், பெண் மகவு பிறக்க வேண்டாம்."

அரிச்சந்திர மயானகாண்டம் எந்தக் கட்டத்திலும் சந்திரமதியை விற்றதைக் கண்டிக்கவில்லை.

இந்த இந்துப் புராணங்கள் இன்று மீண்டும் முன்னணிக்குக் கொண்டுவரப்படும் நிலையில், இராமனின் ஆணாதிக்கக் கற்பு நோக்கு சீதையை இழிவுபடுத்திய வக்கிரத்தைப் பார்ப்போம்.

யாரோ ஒருவன் சந்தேகப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு இறை அவதாரமாகக் கருதப்படும் இந்து நாயகன் இராமன், தனது மனைவி சீதையை, ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த போதும் காட்டுக்குத் துரத்திவிட்டான்.

இறை அவதாரம் பெற்ற இராமனாகப் புராணங்கள் புளுகிய போதும், இராவணன் இடம் இருந்து சீதையை மீட்டபோது, சீதை தனது கற்பை நிலை நாட்ட தீ மிதித்து  ஒழுக்கத்தை நிறுவ வேண்டி ஏற்பட்டது.

இயற்பகை நாயனாரிடம் ஒரு பக்தன் பெயரில் சிவபெருமான் அவரின் மனைவியைப் பிச்சையாகக் கேட்டாராம். உடனே மனைவியை அவர் கொடுத்தார். பெண்ணின் பெற்றோர்கள் இதைத் தட்டிக் கேட்க, தனது உறவினர்களையே வெட்டிச் சாய்த்தார். உடனே பரமசிவன் கேட்ட உடனே கூட்டிக் கொடுத்ததுக்கும், மனைவி மறுபேச்சு இன்றி விபச்சாரம் செய்ததற்கும் அங்கீகாரம் வழங்கி, அவரை முதல்தரப் பக்தன் ஆக்கி மோட்சத்துக்கு அழைத்துப் போனாராம் சிவன்.

எவ்வளவு கேவலமான வகையில் பெண்களைப் பக்தியின் பின்னால் படுக்கைக்குப் பயன்படுத்தியுள்ளனர். இன்றும் கேடிகள், சாமியார்கள் இப்படித்தான் பெண்ணைப் பயன்படுத்துகின்றனர்.

மேலே குறிப்பிட்ட விடையங்கள் எல்லாமே எத்தனை பெண்களுக்கு தெரியும்?

மேலே இருப்பது பேராசிரியர் பி.இரயாகரன் அவர்களின் "ஆணாதிக்கமும் பெண்ணியமும்"
என்ற நூலிலிருந்து சில சுருக்கங்கள்.
-செங்கை பூபதி கட்செவி குழு பதிவு
26.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக