ஞாயிறு, 17 டிசம்பர், 2017
சுயமரியாதைத் திருமணம் - ஏன்?
- தந்தை பெரியார்
(திருமணத்திலும், சிரார்த்தத்திலும் சொல்லப்படும் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திரங்கள் - தமிழில் அவற்றின் பொருள்களும் மற்றும் தந்தை பெரியார் அவர்களின் வாழ்வியல் கருத்துகளும் அடங்கிய அறிவுப் பேழையே இந்நூல்)
திருமண மந்திரம்
ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித:/ த்ருத்யோ அக் நிஷ்டே பதி: துரீயஸ்த மனுஷ்யஜா:
பொருள்: ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன்தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.
விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத்தான் இப்பொழுது கலியாணம் செய்துகொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டுவிட்ட பின்புதான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான். இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத்தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும்பொழுது சொல்கிறான்.
மந்திரம்: உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஹேத்வா /அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ!
பொருள்: விசுவாவசு என்னும் கந்தர்வனே, இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத்தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.
மந்திரம்: உதீர்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வா வஸீந் நமஸ கீர்ப்பிரீடடே / அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி
பொருள்: இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கித் துதித்துக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக.
விளக்கம்: கலியாணம் நடந்து நான்கு நாள்கள் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால், அந்த சமயத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளக்கூடாது. நான்கு நாள் கழிந்த பிறகு மேற்கண்ட மந்திரங்களைச் சொல்லவேண்டும்.
அதாவது கலியாணமான அந்த மணப்பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்துகொண்ட இந்த மணமகன், தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான் என்பதாகும்.
ஆதாரம்: விவாஹ மந்த்ரார்த்த போதினி
ஆக்கியோன்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல்.,
பக்கங்கள்: முறையே 22,59.
நேரம் டிசம்பர் 17, 2017
- பெரியாரியம் வளைப்பூ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக